Tuesday, 18 August 2009

சீனாவின் குரலாக சரத் பொன்சேகா ஒலிக்கிறாரா?


இலங்கை மீது சீனாவின் கண் மிக நீண்டகாலத் திட்டமுடையது. நீண்டகாலத் திட்ட அடிப்படையில் செயற்படுவதில் சீன கம்யூனிஸ்ட்டுகள் திறமையானவர்கள். கருமமே கண்ணாக காத்திருந்து செயற்படுவர். சிங்களவர்களைப் பொறுத்தவரை சீனா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன். இலங்கையில் வலது சாரிக் கொள்கையுடையதும் அமெரிக்க சார்பானதுமான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சீனா தனது இலங்கைக்கான உதவிகளையோ இலங்கையுடனான உறவுகளிலோ தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். ஜேவிபி என்கிற கம்யூனிசப் போர்வை போர்த்திய பேரினவாதக் கட்சியும் பௌத்த அடிப்படை வாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தீவிர சீன ஆதரவுக் கட்சிகள். அத்துடன் தீவிர இந்திய எதிர்ப்பாளர்கள். இந்தியா என்னதான் சிங்களவர்களுக்கு உதவி செய்தாலும் இவர்கள் இந்தியாவை விரோதியாகவே கருதுகின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் பல உண்டு. இந்திய ஆதரவு அமைப்புக்கள் எதுவுமில்லை.

இதுவரை காலமும் இலங்கை இராணுவம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போர் சிங்களவர்களுக்கு சாதகமாக இந்தியாவின் பேருதவியுடன் நடந்து கொண்டிருந்த வேளை இலங்கை இராணுவம் இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கருத்தைத் தெளிவாகக் கூறிவிட்டதாம்: நாம் பலசிரமங்களுக்கு மத்தியில் சிங்களவர்களின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை முழுததும் நிலை நிறுத்துகிறோம். இதில் இனி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க முடியாது. அப்படி ஒரு அதிகாரப் பகிர்வு தமிழர்களுடன் ஏற்படும் இடத்து நாம் ஆட்சியைக் கைப் பற்றுவோம்.

இலங்கையில் இராணுவ ஆட்சியை சிங்கள மக்கள் விரும்புவதில்லை. இதை இராணுவம் நன்கறியும். அப்படி இருந்தும் இராணுவம் இப்படி கூறியதில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பலமான நாடு இருந்திருக்க வேண்டும். அது சீனாவைத் தவிர வேறில்லை. இந்த இராணுவக் கருத்து இப்போது பகிரங்கமாக சரத் பொன்சேகாவால் முன் வைக்கப் பட்டுள்ளது.

சரத் பொன்சேகா கூறியது:
போர் வெற்றியையும், படையினரின் தியாகங்களையும் முன்னிலைப்படுத்தி, அரசியல்வாதிகள் இவை அனைத்தையும் கருத்திற்கொள்ளாமல் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முற்பட்டிருப்பதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது எனத் தெரிவித்தே தனது அரசியல் பிரச்சாரத்தை சரத் பொன்சேகா தொடங்கியிருக்கின்றார்.

தாயக மண்ணைப் பாதுகாக்க எந்தத் தியாகத்தைச் செய்யவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் சரத் பொன்சேகா மக்களின் ஆதரவையும் இதற்காகக் கோரியுள்ளார்.

"13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள், மற்றும் சிறிலங்காவில் உள்ள அனைத்து இனங்களின் எதிர்பார்ப்புக்கு முரணாகவே இதனை எம்மீது திணிப்பதற்குத் திட்டமிடப்படுகின்றது" எனத் தெரிவித்திருக்கும் சரத் பொன்சேகா, "இது முறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்குவதாக அமைந்துவிடும்"எனக் குறிப்பிட்டுள்ளார்

13வது அரசியல் திருத்தம் ஒரு உப்புச் சப்பில்லாத அதிகாரப் பரவலாக்கம். அதிகாரப் பகிர்வு அல்ல. மாகாண சபைகளுக்கு வழங்கப் பட்ட அதிகாரம் பொதுவாக குடியாட்சி முறை வளர்ச்சியடந்த நாடுகளில் மாநகர சபைகளுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களை ஒத்தது. இதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. இது இலங்கையின் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.
இருந்தும் இதன் மூலம் இலங்கை பிரிந்து விடும் என்று சரத் பொன்சேகா கூறுவது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல இராணுவத்திற்கும் உண்டு என்பதை நிலைநிறுத்த அவர் ஒரு வழிதேடுகிறார் என்பதைக் காட்டுகிறது. இலங்கையை மியன்மார்(பர்மா) போல இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தி தனது பிடிக்குள் கொண்டுவர சீனா முயல்கிறதா? அதற்கு சரத் பொன்சேகாவை சீனா பயன் படுத்தப் போகிறதா?

6 comments:

Anonymous said...

கொஞ்சம் கொஞ்சமாக மகிந்த பாடம் படிக்கும் காலம் வரும். நீதி என்றும் தோற்றதில்லை. நின்று கொல்லும் அநீதியுடையாரை!

Anonymous said...

இந்தியா என்ன செய்யப் போகிறது...

Anonymous said...

இந்தியா இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாது. அதன் முக்கிய பிரச்சனை அடுத்ததாக அடுத்த வாரிசை எப்படி ஆட்சியில் அமர்த்துவது என்பதுதான்...

Anonymous said...

இலங்கையில் ஒரு பன்னாட்டு ஆதிக்கப் புயல் மையம் கொண்டுள்ளது..

Anonymous said...

இந்தியா இலங்கையை சீனாவுடன் பங்குபோடத் தயாராகி விட்டது...

thamilini said...

அமெரிக்காவின் பங்கு எங்கே?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...