Friday, 17 July 2009

தமிழர் அவலம்: சர்வதேச சமூகத்திற்கு கடைசி சந்தர்ப்பம்



சர்வ தேச சமூகம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் இலங்கைத்தமிழர்களின் அவலத்திற்கு காரணமாக இருந்தார்கள். ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களைக் கொன்றொழிப்பதற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் ஆதரவளித்தார்கள்.

சிறீலங்கா காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.கண்டியில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் அருட்தந்தை நந்தன மனதுங்கவை ஆதாரம்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறீலங்கா காவல்துறையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக உண்மையை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர்.

சிறீலங்கா காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவுபெற்ற போரில் ஒரு இலட்சம் விரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அருட்தந்தை நந்தன மனதுங்க கூறியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அடிக்கடி இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற போதிலும், சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அருட்தந்தை நந்தன மனதுங்க ஒரு சிங்களவர் அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதையெல்லாம் இந்த சர்வ தேச சமூகம் ஏன் வேடிக்கை பார்க்கிறது?

சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி
சர்வதே நாணய நிதியத்தின் கடன் என்பது பொருளாதர வளர்ச்சியடைந்த நாடுகள் தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான சூழல் வளர்ச்சியடையாத நாடுகளில் ஏற்படுத்த கொடுக்கும் கடனுதவியாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு தனது இன அழிப்புப் போரில் காலி செய்த அந்நியச் செலவாணியை ஈடு செய்வதற்கு தனக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகத் தரும்படி கேட்டிருந்தது. இந்தக் கடன் கொடுக்கக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து பல வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டிருந்தது. இந்தக் கடனை உலகெங்கும் வாழ் தமிழ் இன உணர்வாளர்கள் சர்வதேச சமூகம் தனது இலங்கை தொடர்பான நியாபூர்வ நிலைப் பாட்டை தெளிவு படுத்த கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம் என்றே கருதுகின்றனர்.

பிரித்தானியாவின் நிலைப்பாடு.
பிரித்தானிய ஊடகங்கள் தொடர்ந்து இலங்கை அரசின் அசிங்கங்களை அம்பல்ப் படுத்திவந்ததின் விளைவாகவும் பிரித்தானியாவில் வாழ் தமிழர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாகவும் பிரித்தானிய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி வழங்குவதற்கு ஏதுவான சூழ் நிலை இலங்கையில் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது. அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு.
அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி தொடர்பாக ஒரு நழுவல் நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் கடந்த 13ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பாக வெளிவந்த முன் பக்க செய்தியும் அதே பத்திரிகையில் மறுநாள் வெளிவந்த ஆசிரியத் தலையங்கமும் அமெரிக்க நிலைப்பாடு இலங்கைக்கு எதிராகத் திரும்பும் சாத்தியத்தை உருவாக்கியது. இப்போது அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்க அரசின் சார்பில் அதன் செயலர் ஹிலரி கிளிங்டன் அவர்கள் வன்னி முகாம்களில் தமிழர்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய நடாத்தப் படுகிறார்கள் என்ற உறுதி மொழி வழங்கினால் மட்டுமே அமெரிக்க திறைசேரி இலங்கைக்கு சர்வதேச நாணயம் இலங்கைக்கு வழங்கும் கடனுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற சட்டத்தை நிறைவேற்றவுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு கடனுதவி கிடைக்காது. இலங்கை அரசு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றியதும் இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தாது.

இந்தியாவும் சீனவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு பணத்தை இறைக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி இலங்கைக்கு கிடைக்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இலங்கைக்கு ஏற்படாது. இந்தியாவும் சீனவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு பணத்தை இறைத்து உதவும். இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னரே இந்தியா 500 கோடிரூபாவிற்கு மேல் கடனாக வழங்குவதாக இந்தியா உறுதிமொழி வழங்கி விட்டதாம்.

கனிமொழியின் இலங்கைப் பயணம்.
இந்தியாவின் கடன் வழங்கலிற்கு முன்னோடியாகவே இலங்கைக்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பயணம் அமையவிருக்கிறது. கனிமொழி இலங்கை வந்து வன்னியில் தமிழர்கள் அடைத்து வைத்திருக்கப் பட்டிருக்கும் முகாம்களைப் பார்த்துவிட்டு அவற்றிலுள்ள குறைபாடுகளி அவர் அறிக்கையாக வெளியிடுவார். அதை நிவர்த்தி செய்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் இந்தியா பல கோடி பணத்தை இலங்கைக்கு வழங்கும். இலங்கை அரசு அப்பணத்தை என்ன செய்யும் என்பதை நாம் அறிவோம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...