Monday, 28 May 2012

இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகமும் தமிழ்த் தலைமையும்

இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதமும் இலங்கை அரசின் எல்லை மீறிய பயங்கரவாதமும் இணைந்து ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தமிழர்களிடை அதிக செல்வாக்குப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயற்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் அழிவின் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கி இணைந்து செயற்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தாக்கி அதன் தலைவர் இரா சம்பந்தன் அறிக்கை விடத் தொடங்கினார். அப்போது அவர்கள் ராஜபக்ச சகோதரர்களின் கைப்பிள்ளையாக்கப்பட்டனர். பின்னர் அவர்களது இருப்புக் கேள்விக் குறியானபோது இந்தியாவின் கைப்பிள்ளையாகவும் ஆக்கப்பட்டனர். இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்து விட்டது அதை இந்தியா வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் கைப்பிள்ளையாகவும் ஆக்கப்பட்டது. கைப்பிள்ளையின் சொல்லும் செயலும் கட்டத்துரைக்கு இசைவாகவே இருக்க வேண்டும். அல்லாவிடில் உடம்பு ரணகளமாகிவிடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கமான தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இப்போது மட்டக்களப்பில் நடந்து கொண்டிருக்கிறது.
27-05-2012இலன்று தொடங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் திரு இரா சம்பந்தன் கூறியது:
  • இந்தியாவின் தலையீடு என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக எமது போராட்டத்தில் இடம்பெற்றது. எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒர் அரசியல் தீர்வையும் இலங்கைத் தீவில் நாம் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந்தது. எனினும் இந்தியத் தலையீடு என்ற அம்சத்தையே சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவின் துணையுடனும் ஆசீர்வாதத்துடனும் எமது இனம் மதிப்புடன் வாழக்கூடிய ஒரு தீர்வினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பெறக் கூடிய ஒரு வாய்ப்பினை நாம் பற்றி நின்றோம். எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் காலம் இட்ட ஒரு கட்டாயக் கோலமாக இந்தியத் தலையீடு அமைந்தது.
 இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீடு அல்லது அள்ளிவைப்பு இன்று நேற்றோ அல்லது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபின்னர் ஆரம்பமானதல்ல. ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்தே ஆரம்பமானது. மலையகத் தமிழர்களையும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களையும் ஒன்றாக இணைக்க திரு ஜீ ஜீ பொன்னம்பலம் முனைந்த போது அதைச் செய்யவிடாமல் நீ பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று திரு எஸ் தொண்டமானைத் தடுத்தவர் ஜவகர்லால் நேரு என்ற பேரினவாதி. அவர் பின்னர் மலையகத் தமிழர்களின் வாக்குரைமை பறிக்கப் பட்ட போது தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தொண்டமானைக் கைகழுவி விட்டவர். பேரினவாதி நேரு அத்துடன் நிற்கவில்லை மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும் அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ஜோன் கொத்தலாவலையுடன் தனது நாட்டு நலனை மட்டும் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் செய்தவர். இது இந்தியப் பேரினவாதம் தனது அசிங்க முகத்தை இலங்கைத் தமிழர்களுக்கு இப்படித்தான் காட்டியது. அதை அன்று தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை.

தணியாத இந்தியத் துரோகம்
நேரு மட்டுமா தமிழர்களுக்கு அள்ளி வைத்தார். அவருக்குப் பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்த்திரி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் செய்து 150,000 தமிழர்களை பன்னாட்டு நியமங்களுக்கு மாறாக நாடற்றவர்களாக்கினார்.இந்தியத் துரோகம் சாஸ்த்திரியுடனும் நிற்கவில்லை. இந்திரா காந்தி இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டைத் தவிர்க்க தமிழர்களை படைக் கலன்களை வழங்கியும் தமிழர்களிடை ஒன்றுடன் ஒன்ரு முரண்பட்ட படைக்கலனகள் ஏந்திய பல குழுக்களை உருவாக்கியும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பெரும் மோதலை உருவாக்கினார். பின்னர் வந்த ராஜீவ் காந்தி தமிழ்ப் போராட்டக் குழுக்களை அவர்களது படைக்கலன்களை சிங்களவர்களிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்தினார். தமிழர்களின் பாதுகாப்பிற்கு தான் உறுதி வழங்குவதாயும் பொய் கூறினார். அதன் பின்னர் இலங்கையில் 300,000இற்கு மேற்பட்ட அப்பவித் தமிழர்களைக் கொல்ல இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது. செய்து கொண்டும் இருக்கிறது. இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகத்தை இன்றும் பல தமிழர்கள் உணரவில்லை.

மீண்டும் அடுத்துக் கெடுக்கும் இந்தியா
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதும் அதனால் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்து விடக்கூடும் என்பதை தடுக்க இந்தியா முயல்கிறது. அதற்கு அது அடுத்துக் கெடுக்கும் தந்திரத்திரத்தை மீண்டும் கையாள்கிறது. 2012 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை முதலில் எதிர்க்க இந்தியா தீர்மானித்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அரச பிரதானிகளிடை கடுமையாக உழைத்ததால் அத்தீர்மானம் தான் எதிர்த்தாலும் நிறைவேறும் என்பதை உணர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்தின் கடும் போக்கை இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இது இந்தியப் பேரினவாதம் ஒரு பவுடர் பூசித் தன் அசிங்க முகத்தை தமிழரக்ளுக்குக் காட்டியது. சில தமிழர்களுக்கு இது அழகாகத் தெரிந்தது. இப்போது ஐநா மரித உரிமைக்கழகத்தினர் இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்பும் போது அதை மறுக்கும் நிலையில் இலங்கை இருக்கிறது. அந்த அளவிற்கு தீர்மானம் இந்தியாவால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. Building strong but basement week. இந்தியா எத்தனை வாட்டி உதைச்சாலும் தாங்கும் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் தமிழர்களா?
ஒரு நாய்க்கு இருக்கும் அறிவு கூட சில தமிழர்களுக்கு இல்லை.


தமிழர்களை உய்ய விடாது இந்தியா
இப்போது இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளும். இலங்கை அரசியல் அமைபிற்கான 13வது திருத்தத்தை 25 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் இந்தியா இருக்கவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை இந்தியா விரும்பவில்லை. உதட்டளவின் 13வது திருத்தத்தின் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா சொல்லிக் கொண்டு இருந்தாலும் அது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் போல் சிங்களவர்களுக்கு அடங்கி வாழவேண்டும் என்ற கொள்கையையே இந்தியா கடைப்பிடிக்கிறது.


இந்தியாவின் தேசிய நலனிலும் சாதிய நலன் பெரிது
"""எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்த ஒர் அரசியல் தீர்வையும் இலங்கைத் தீவில் நாம் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந் தது."" என்று திரு இரா சம்பந்தன் கூறுயதில் முக்கிய தவறு இருக்கிறது. இந்தியாவின் தேசிய நலன்களுக்கு தமிழர்கள் அதிக உரிமை பெறுவதோ அல்லது தனிநாடு பெறுவதோ அமையாது. ஆனால் இந்தியாவின் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களின் சாதிய நலன்களுக்கு தமிழர்கள் அதிக உரிமை பெறுவது அமையும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். சோ இராமசாமி, இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து செயற்படுவதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நஞ்சு கக்குவதும் அதற்காகவே.

இந்திய அரச அதிகாரியான நிருபாமா ராவின் வீட்டுத் திருமணத்திற்கு கோத்தாபாய ராஜபக்ச அழைக்கப்படும் அளவிற்கு இந்திய அதிகாரிகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் நல்லுறவு எப்படி ஏற்பட்டது? இலங்கைப் போரில் சிங்களவர்கள் வெல்ல வேண்டும் என தமிழ்நாட்டுக் கோவில்களிலும் திருப்பதியிலும் யாகங்கள் செய்யப்பட்டது ஏன்?  இவற்றைத் தமிழ்த் தலைமை உணர்ந்து கொண்டு தமது நம்பிக்கையை இந்தியாமேல் வைக்க வேண்டும். வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு அங்கு தமிழர்கள் சிறுபானமையினர் ஆக்கப் படும் வரை இலங்கை பிரச்சனை தொடர்பான தீர்வை இழுத்தடிக்க இந்தியா சிங்களவர்களுக்கு உதவும். அந்த மறை முக நோக்கத்துடனேயே அமெரிக்காவுடன் இந்தியா இப்பொது  இணைந்து செயற்படுகிறது என்பதை தமிழ்த் தலைமை உணர வேண்டும்.

கட்டத்துரையின் உண்மையான நோக்கம் அறியாமல் கைப்பிள்ளையால் எதையும் சாதிக்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் பேரினமான சிங்களவர்களுக்கு அடங்கியே வாழவேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டையும் அதற்குக் காரணமான சாதி வெறியையும் உணராத எடுப்பார் கைப்பிள்ளை திரு இரா சம்பந்தனால் தமிழர்களுக்கு எதையும் சாதிக்க முடியாது.சம்பந்தன ஐயா உங்க ஜட்ஜ்மென்ர் ரெம்பத் தப்பு. தமிழர்கள் இன்னும் ஒரு முறை ரவுண்டு கட்டித் தாக்கப்படக் கூடிய நிலையில் இல்லை.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...