Thursday 22 September 2011

தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு தாரை வார்க்குமா?

தாய்வான் பாராளமன்றம்
ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. 1971இல் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து விலக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. 1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று அழைக்கப்படுகிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஒரு வல்லரசு. அத்துடன் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பொருளாதார உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. சீனா எப்போதும் தாய்வானைத் தனது ஒரு மாகாணம் என்றே கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

 சீனப் பெருநாட்டிற்கு எதிராக தாய்வானின் இருப்பிற்கு அமெரிக்கா பேருதவி செய்து வருகிறது. அமெரிக்கா தாய்வானுக்குச் செய்து வரும் ஆயுத விற்பனைகளை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனாலும் அறுபது ஆண்டுகளாக சீனா தாயவானைத் தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா தடுத்து வருகிறது. 1995இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பைத் தடுப்பதற்கு அமெரிக்காவின் இரு பெரும் கடற்படைப் பிரிவுகளை தாய்வானுக்கு அனுப்பினார். ஆனால் இன்று சீனா படைத்துறையில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2006இல் அமெரிக்கா ஆறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை தாய்வானிற்கு விற்றதால் ஆத்திரமடைந்த சீனா அமெரிக்காவுடனா தனது படைத்துறைத் தொடர்புகளைத் துண்டித்தது. தாய்வானில் அமெரிக்கா இரகசியமாகப் பல நவீன சக்தி மிக்க ஏவுகணைகளை வைத்திருக்கிறது என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தாய்வானின் முக்கியத்துவம்.
சீனாவின் மூன்று புறம் அதன் எல்லைகள் பல நாடுகளுடனான தரைப் பகுதியே. அதன் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஆழமில்லாத கடலால் ஆனது. சீனா தனது நீர் முழ்கி கப்பல் படைகளை விருத்தி செய்ய ஆழ்கடல்களைச் சூழக் கொண்ட தாய்வான் அவசியம் தேவை. ஜப்பானின் கடல் வழிப்பாதைகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு சுதந்திரமான தாய்வான் உதவியாக இருக்கிறது. தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சீனாவால் ஜப்பானின் இலகுவான கடற்பாதைக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும். இலங்கையிலும் ஆழ்கடல் கரையைக் கொண்ட அம்பாந்தோட்டையை தனது தளமாகச் சீனா தெரிந்து எடுத்தது தன் எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களைக் கருத்தில் கொண்டே. அண்மையில் சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வந்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள கடற்பகுதியின் ஆழ பரிமாணங்களை மதிப்பீடு செய்தமை அப்பகுதிக்கு ஏற்ப தனது நீர் மூழ்கிக் கப்பல்களை வடிவமைப்பதற்காக இருக்கலாம். ஆபிரிக்க நாடுகளின் கனிம வளங்களும் மத்திய கிழக்கின் எரிபொருள்களும் சீனாவிற்கு தங்கு தடையின்றி கிடைக்க சீனாவிற்கு ஒரு பலமிக்க கடற்படை அவசியம். தாய்வானில் சீனா ஒரு கடற்படைத் தளம் இருந்தால் அது பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும்.

எத்தைனை காலம் அமெரிக்காவால் தாய்வானைக் காப்பாற்ற முடியும்.
நலிவடையும் அமெரிக்கப் பொருளாதாரமும் வலிவடையும் சீனப் பொருளாதாரமும் சீனாவின் கடன் இன்றி அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அண்மைக் காலமாக தாய்வானில் படைத்துறைச் சமநிலை சீனாவிற்குச் சாதகமாகி வருகிறது. இதை ஈடு செய்ய தாய்வான் அமெரிக்காவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்க முற்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமெரிக்கா புதிய போர் விமாங்களை விற்காமல் ஏற்கனவே தாய்வானிடம் இருக்கும் அமெரிக்கத் தயாரிப்புப் போர் விமானங்களை தரமுயர்த்த ஒப்புக் கொண்டது. அதுவும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனால் இந்த விமானப் படைத் தரமுயர்த்தல் சீனாவிற்கு சாதகமாகச் சரிந்து கொண்டிருக்கும் படைத்துறைச் சமநிலை சீர் செய்யப் போதாது என்று படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனா தனது படைத்துறை வலிமையை உள்ளுர்ப் பார்வையாளர்களுக்கும் உலக அரங்கிற்கும் காட்ட வேண்டிய ஒரு நீர்ப்பந்தம் உள்ளது. சீனா தொடர்ந்து தாய்வானை தன்னுடன் இணைப்பதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் சீனாவிற்கு அமெரிக்க சீனாவிற்கு விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...