Wednesday 6 July 2011

போர் முனைகளில் பெருகி வரும் ஆளில்லாப் போர் விமானங்கள் .

சீன ஆளில்லா விமானங்கள்
அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
லிபியாவில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
US Predator ஆளில்லா விமானங்கள்

உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.

கடாஃபிக்கு எதிராக ஆளில்லாப் போர் விமானங்கள்
ஆளில்லாப் போர் விமானங்கள் பல லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிரான போரிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஏப்ரில் 22-ம் திகதி Predator எனப்படும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் லிபியாவில் தமது முதலாவது தாக்குதல்களைத் தொடுத்தன.  Predator எனப்படும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள்  தாழப்பறந்து இலக்குகளை துல்லியமாக அறிந்து தாக்கவல்லன. ஜூன் மாத இறுதியில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் சோமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற் கொண்டன. யேமன், ஈராக் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா ஆளில்லாப் போர் விமானங்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியது.


இஸ்ரேலின் நயவஞ்சகம்
கதுவி எதிர்ப்பு ஆளில்லா தாக்குதல் போர் விமானங்களை(anti-radar attack drone) இஸ்ரேல் சீனாவிற்கு விற்றமை அதன் தோழனான அமெரிக்காவை ஆத்திர மூட்டியது இதனால் அமெரிக்கா தனது F-35 Joint Strike Fighter programஇல் இருந்து இஸ்ரேலை விலக்கியது. இஸ்ரேல் இரசியா ஜோர்ஜியா போன்ற நாடுகளுக்கு ஆளில்லாப் போர் விமானங்களை விற்றுள்ளது.


முன்னணியில் சீனா?
2010இல் சீனாவில் நடந்த விமானக் கண்காட்சியில் சீனா தனது சீறும் யாளி என்னும் பெயர் கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களைக் காட்சிப்படுத்தியது. சீனா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் எப்படி தாய்வான் கரைகளில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை இனம் கண்டு தாக்கும் நிலையங்களுக்கு தகவல்களை அனுப்புவதை தெளிவு படுத்தியது. ஆளில்லாப் போர் விமானங்கள் பாவனையில் அமெரிக்கப் படைத்துறை கண்ட வெற்றியை உணர்ந்த சீனா தான் அந்தத் துறையில் மற்றைய நாடுகளை விட முந்திச் செயற்படுகிறது. ஆளில்லாப் போர் விமான உற்பத்தித் துறையில் சீனாவின் பல ஆய்வுகள் அறிய முடியாதனவாய் இருக்கின்றன. அமெரிக்கா ஆளில்லாப் போர் விமானங்களை உலக ஆயுதச் சந்தையில் விற்பனை செய்யாமையால் அதைச் சீனா தானே செய்ய முனைகிறது. பாக்கிஸ்த்தானும் ஈரானும் சீனாவிடமிருந்து ஆளில்லாப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளன. அமெரிக்காவின் உயர் தர உணரிகள், செய்மதித் தொடர்பாடல் வசதிகள், திறன் மிக்க ஆயுதங்கள் போன்றவற்றை கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களுக்கு சீன ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடாக மாட்டா. இத் துறையில் அமெரிக்கத் தொழில் நுட்ப வளர்ச்சி இலகுவாக முந்தக் கூடியதாக இல்லை. சீன ஆளில்லாப் போர் விமானங்கள் ஏற்றுமதியைத் தடுக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஆளில்லாப் போர் விமானங்கள் விற்பனை செய்யவுள்ளது.

சீனாவிற்கு சவாலாக அமெரிக்கா.
இதுவரை நிலத்தில் பாவிக்கும் ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்து வந்த அமெரிக்கா இப்போது விமானம் தாங்கிக் கப்பல்களில் பாவிக்கக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்கிறது. இவை முக்கியமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு சவாலாக உலவும் அமெரிக்க விமானம் தாங்கிக் போர்க்கப்பல்களில் பாவிக்கப்படவிருக்கின்றன.



50இற்கு மேற்பட்ட நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளன இலங்கை உட்படப் பல நாடுகள் இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. விமான உற்பத்தித் துறை இனி ஆளில்லா விமானங்களின் திசையில்தான் இனி பயணிக்க விருக்கின்றது. படைத் துறையினர் ஆளில்லாப் போர் விமானங்கள் மலிவானதும் செயற்படுதிறனும் மிக்க கண்காணிப்புக் கருவி என்று கருதுகின்றனர். அமெரிக்காவின் மிகச்சிறந்த Predator Bஐத் தாயாரிக்க 10.5மில்லியன் டொலர்கள் செலவாகும் F-22 போர் விமானங்களைத் தாயாரிக்க 150மில்லியன் டொடர்கள் செலவாகும். இந்த ஆண்டு உலக ஆளில்லாப் போர் விமானங்கள் உற்பத்திக்கான செலவீனம் 100பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டலாம். ஆனால் சமாதனம் விரும்பும் பொது அமைப்புக்கள் ஆளில்லாப் போர் விமான உற்பத்தி அதிகரிப்பு robotic warfareஐ அதிகரிக்கும் என்றும் பல நாடுகளைப் போருக்குத் தூண்டும் என்றும் தமது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

ஆளில்லாப் போர் விமானங்கள் கொல்லும் ரோபோக்கள்!
ஆளில்லாப் போர் விமானங்கள் என்பவை கொல்லும் ரோபோக்கள். அவற்றின் பாவனை தடை செய்யப்பட வேண்டியவை என்று கருத்துரைப்போரும் உண்டு. இக்கருத்துக்கள் ஆப்-பாக் எல்லையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் தாக்குதல்களுக்குப் பயன்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பல தொலைவில் இருந்து ஆட்களால் இயக்கப்படுபவையே.

ஆளில்லாப் போர் விமானங்கள் போரை கணனி விளையாட்டுப் போல் ஆக்குமா?
நவீன போர் முறைகள் தொலைவில் இருந்தே மேற் கொள்ளப்படுகின்றன. போர் என்று ஒன்று என்று தொடங்கியதோ அன்றில் இருந்தே தொலைவில் இருந்து எதிரியைக் கொல்லும் முறைபற்றித்தான் ஆய்வுகள் யாவும் மேற் கொள்ளப்படுகின்றன. நவீன போர் முறைகள் போரை ஒரு கணனி விளையாட்டுப் போல் ஆக்கி வருகின்றன.

ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதல்கள் அதிக அப்பாவி உயிர்களைப் பலி கொள்ளுமா?
ஆப்-பாக் எல்லையில் ஆளில்லாப் போர் விமானங்களால் நிகழ்ந்த அப்பாவிகள் உயிரிழப்புக்களை ஆதாரமாக வைத்து ஆளில்லாப் போர் விமானங்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சிலர். ஆனால் சிலர் பாக்கிஸ்தான் கூறும் அப்பாவிகள் உயிரிழப்புக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்கின்றன்ர். பாக் கொல்லப்பட்டவர்களில் 88% அப்பாவிகள் என்கின்றது. இதை மறுப்போர் அப்பாவிகளின் உயிரிழப்பு 20% என்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...