Wednesday, 4 May 2011

பின் லாடனின் இருப்பிடம் அறிந்த விபரமும் தாக்குதல் விபரமும்


தாக்குதலுக்குப் பவித்த ஹெலிக்கொப்டர்கள்.

அமெரிக்க ஆட்சியாளர்களை அதிர வைத்த2001இல் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து பின் லாடனைத் தேடுவது அதி தீவிரப்படுத்தப்பட்டது. 2002இல் உலகெங்கும் பல அல் கெய்டா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு கியூபாத் தீவின் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள குவாண்டமானோக் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். 2001-09-11இற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பின் லாடனைப் பற்றியும் அவரது உலகெங்கும் உள்ள ஆதரவாளர்கள் பற்றியும் தகவல்களைத் திரட்டத் தொடங்கிவிட்டது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா பின் லாடனைப் பிடிக்க பல மில்லியன்கள் செலவில் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் செய்து பல கருவிகளையும் உருவாக்கியது. பின் லாடன் அவற்றில் இருந்து தப்புவதற்காக தன் இருப்பிடத்தில் எந்த வித இலத்திரன் கருவிகளோ உபகரணங்களோ வைத்திருப்பதில்லை. அவரிடம் கைக் கடிகாரம் கூட இருப்பதில்லை. ஆப்கானிஸ்தானில் அல்லது பாக்கிஸ்தானில் என்கோ ஒரு காட்டுக்குள் ஒரு குகைக்குள் அவர் ஒளிந்திருப்பதாகவே நம்பப்பட்டது.

குவாண்டமானோ ஏமாற்றம்.
குவாண்டமானோக் கைதிகளிடம் இருந்து பின் லாடனின் இருப்பிடத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் பெற முடியாமல் போனது அமெரிக்காவிற்குப் பெரும் ஏமாற்றம். அவர்கள் எவரும் உண்மையில் பின் லாடனின் இருப்பிடம் அறிந்திருக்கவில்லை.


மர்ம தகவல் பரிமாற்றக்காரர்.
அமெரிக்கா பல அல் கெய்தா ஆதரவாளர்களை கிழக்கு ஐரோப்பாவில் சிறைவைத்துள்ளது. அங்குள்ள கைதிகளிடம் இருந்து அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பெற்றுக் கொண்ட ஒரே ஒரு பெறுமதி மிக்க தகவல் பின் லாடனுக்கு ஒரு நம்பிக்கை வாய்ந்த தகவல் பரிமாற்றக்காரர் இருக்கிறார் என்பதே. பின் லாடன் தனது இரட்ண்டால் நிலை சகாக்களுடன் இந்த தகவல் பரிமாற்றக்காரர் ஊடாகத்தான் தொடர்புகளை வைத்திருந்தார். அவரின் உண்மையான பெயரைக் கூட அவர்களால் பெறமுடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கா குவாண்டமானோ சிறைச்சாலையிலும் மற்றும் கிழ்க்கு ஐரோப்பியச் சிறைச் சாலைகளிலும் கைக்கொள்ளும் சித்திரவதை விசாரணை முறை பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. அங்கு பாவிக்கப்படும் நீரடிக்கும்பலகைச் சித்திரவதை முறையும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. இவை எல்லாம் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு பலத்த ஏமாற்றத்தையே அழித்தது. கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள கைதிகளில் முக்கியமானவர்கள் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலித் ஷேக் முகமதுவும் அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியும். அவர்கள் தங்களுக்கு தகவல் பரிமாற்றக்காரர் பற்றி ஏதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. 2005இல் பின் லாடன் இருப்பிடம் அறிவது என்பது ஒரு முடியாத காரியம் என்று ஆகிவிட்டது. விளைவு "ஆப்பரேஷன் கனன்போல்" இதில் பல சிஐஏ தலைகள் உருண்டன. பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு முகவரகம்.
தேசிய பாதுகாப்பு முகவரகம் என்பது உருவாக்கப் பட்டு அது நவீன கருவிகளைக் கொண்டு பல தொலபேசிதொடர்புகளையும் மின்னஞ்சன்களையும் களவாகப் பதிவு செய்தது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது. இது நடந்தது 2007இல். பின்னர் அதிக உளவாளிகள் பாக்கிஸ்த்தானிலும் ஆப்க்கானிஸ்த்தானிலும் களமிறக்கப்பட்டனர்.ஆனால் அவரது இருப்பிடம் பற்றிய தகவல் கிடைக்கப்படவில்லை. அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும் அறியப்பட்டது. அவரது இருப்பிடமும் அறிய முடியவில்லை. அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியை மரபு வழிச் சித்திரவதை விசாரணை செய்ததன் மூலம் மர்ம தகவல்பரிமாற்றக் காரரின் பெயர் பெறப்பட்டது. அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் பாக்கிஸ்தான் இருந்தபோது அந்த நகரில் ஜேம்ஸ் அபத் என்பவர் அங்கு ஒரு கூர்க்காப் படைத் தளத்தை அமைத்தார். அவர் பெயாரால் அந்த நகர் அழைக்கப்பட்டது.


ஒவ்வொரு மாடியிலும் உயர்ந்த சுவர்கள். 6அடி 5 அங்குல பின் லாடனை மறைக்க.

காட்டிக் கொடுத்த ஏழடிச் சுவர்.
அபத்தாபாத்தில் மர்ம தகவல் பரிமாற்றக் காரரின் சகோதரரின் வீட்டை நோட்டம் விட்ட அமெரிக்க உளவுப் பிரிவினர் அங்கு வீட்டைச் சுற்றி 12 அடி உயரச் சுவரும் மாடிகளில் ஏழடிச் சுவரும் இருப்பதைக் கண்டனர். பின் லாடனின் உயரம் ஆறு அடி ஐந்து அங்குலம். அங்கு பின் லாடன் இருப்பார் என அமெரிக்க உளவுத் துறை நம்பவில்லை. அங்கு ஒரு முக்கியமானவர் இருக்கிறார் என்றுதான் உளவுப்படையினர் நினைத்தனர். அது ஒரு மூன்று மாடி மாளிகை.மீண்டும் ஏமாறிய தேசிய பாதுகாப்பு முகவரகம்
மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் மீண்டும் ஏமாறியது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர்.

வாலைத் தேடியவர்களுக்கு தலை கிடைத்தது.
பின் லாடன் எங்கோ ஒரு குகைக்குள் இருப்பதாகத்தான் சிஐஏ நினைத்தது. இந்த மூன்று மாடி மாளிகையில் பின் லாடன் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் வீடாக அது இருக்கலாம் என்று மேற்கொண்ட உளவு நடவடிக்கைகளில் அங்கு பின் லாடன் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். வாலைத் தேடியவர்களுக்கு தலை அகப்பட்டது. இப்போது 2011 பெப்ரவரி.


பெண்டகனும் சிஐஏயும் கலந்துரையாடின
சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா பெண்டகனின் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான வில்லியம் மக் ரவனை சிஐஏ பணிமனைக்கு பெப்ரவரி மாதம் அழைத்து அந்த மாளிகைமீது தாக்குதல் நடந்தும் திட்டங்களை வகுத்தார். அவர்கள் மூன்று மாற்றுத் திட்டங்களை வகுத்தனர். 1. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் குண்டு வீசி மாளிகையைத் தாக்குவது. 2. ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்குவது. 3. பாக்கிஸ்தானின் உளவுத் துறையுடன் இணைந்து தாக்குவது.

ஒசாமாவைக் கொல்ல ஒபாமாவின் ஒப்புதல்
மார்ச் 14-ம் திகதி சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா மூன்று மாற்றுத் திட்டங்களுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேர்ட்ஸ் இரண்டாம் திட்டமான ஹெலிக்கொப்டர் தாக்குதலை விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றார் அவர். விமானமூலம் தாக்குதல் நடத்துவதாயின் இரண்டாயிரம் இறாத்தல் எடையுள்ள 32 குண்டுகள் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விளைவு மாளிகை இருந்த இடத்தில் பாரிய கிடங்கு. ஆனால் பின் லாடன் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாது. பாக்கிஸ்த்தானுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது நம்பகரமானது அல்ல என்றும் கூறப்பட்டது. பல வாதப் பிரதி வாதங்களின் பின்னர் பராக் ஒபாமா தனக்கு சில மணித்தியாலங்கள் தருப்படி கேட்டார். 16 மணித்தியாலச் சிந்தனைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் உயர் அதிகாரிகளை அழைத்த ஒபமா ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அவருக்கு அத்திட்டம் பற்றி விளக்க முற்பட ஒபாமா அவர்களை இடைமறித்து போய் செய்து முடியுங்கள் என்றார். ஏற்கனவே அமெரிக்கப் படையினர் அபதாபாத் மாளிகை போல் ஒன்றை அமெரிக்காவில் உருவாக்கி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாக்கிஸ்தானுக்கு அறிவிப்பு
பாக்கிஸ்தானுக்கு அறிவிக்கும் நேரத்தை அமெரிக்கர்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டனர். முன் கூட்டி அறிவிக்காவிடில் பறக்கும் ஹெலிக்கொப்டர்கள் மீது பாக்கிஸ்தானியப்படைகள் தாக்குதல் நடத்தலாம். பாக்கிஸ்த்தானுக்கு வழங்கிய தகவல் அல் கெய்டாவிற்கு கசியப் போதிய கால அவகாசம் இல்லாதவகையில் தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த உண்மை வெளிவந்தால் பாக்கிஸ்த்தானில் தீவிரவாதிகள் கிளர்ந்து எழலாம் என்பதற்காக இரு நாடுகளும் இதை மறுக்கின்றன.

சுவரைத் தகர்த்துக் கொண்டு உள்நுழைந்தனர்.

பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள்.

தாக்குதல் விபரம்
பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.

பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து கணனிகள் மற்றும் பதிவேடுகளை அமெரிக்கத் தாக்குதல் அணியினர் எடுத்துச் சென்றுள்ளனர். அவை அமெரிக்காவிற்கு அல் கெய்தாவிற்கு எதிரான நடவடிக்கைகளிற்குப் பெரிதும் உதவும். பின் லாடனின் நிதி மூலங்கள் ஆயுதக் கிடங்குகள் ஆயுதம் வழங்குபவர்கள் போன்றவை பற்றிய தகவல்கள் அவற்றில் இருக்கலாம்.

பின்லாடன் துப்பாக்கிச் சண்டை புரிந்ததாக முதலில் சொன்ன அமெரிக்கா பின்னர் அதைத் திருத்திக் கொண்டது.

பின்லாடனின் உடலை ஹெலிக்கொபடரில் எடுத்துச் சென்று அரபுக் கடலில் இசுலாமிய முறைப்படி கிரியை செய்துவிட்டுவீசினராம்.

பின்லாடனின் உடல் கொண்டு செல்லப்பட்ட பாதை.

முரண்படும் செய்திகள்

கொல்லப்பட்டவர் பின் லாடன் தானா? அவரது படம் ஏன் வெளிவிடப்படவில்லை? பின் லாடனைக் கொல்லவில்லை கைது செய்து கொண்டு போயினரா? மர்மங்கள் தொடர்கின்றன.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...