Tuesday, 17 May 2022

சுவீடன் +பின்லாந்து: நேட்டோ விரிவாக்கத்தை துருக்கி தடுக்குமா?

 

“ஐரோப்பிய பாதுகாவலர்” மற்றும் “உடனடி பதிலடி” என்னும் இரு 2022 மே மாதம் 13-ம் திகதி போலாந்து உட்பட 14 நாடுகளிலும் “Exercise Hedgehog” என்னும் போர்ப்பயிற்ச்சியை இரசியாவின் எல்லையில் உள்ள நேட்டோ உறுப்பு நாடாகிய எஸ்தோனியாவிலும் இன்னும் ஓர் எல்லை நாடாகிய லித்துவேனியாவில் “இரும்பு ஓநாய்” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் ஜெர்மனியில் “Wettiner Heide” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் இருபது நாடுகள் இணைந்து செய்துள்ளன. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த மிக பெரிய அளவிலும் மிகப் பரந்த நிலப்பரப்பிலும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்துள்ளது. இது உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கு முன்ன்ரே திட்டமிடப்பட்டிருந்தது. இப்போர்ப்பயிற்ச்சிகளில் பின்லாந்தும் சுவீடனும் கலந்து கொண்டுள்ளன.

நேட்டோவிலும் வீட்டோ உண்டு

நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு நாடு புதிதாக இணைவதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஒரு நாடு எதிர்த்தாலும் இணைய முடியாது. இதுவும் ஒரு வகை இரத்து (வீட்டோ) அதிகாரம் போன்றது. நேட்டோவில் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து உருவாகிய நாடாகிய மசிடோனியா இணைய முற்பட்ட போது கிரேக்கம் அதை தடுத்திருந்தது. கிரேக்கத்தில் மசிடோனியா என்ற பெயரில் ஒரு மாகாணம் உள்ளது அதே பெயருடன் இன்னும் ஒரு நாடு இருப்பதை கிரேக்கம் விரும்பவில்லை. அதனால் அந்த நாட்டின் வட மசிடோனியா என மாற்ற வேண்டும் என கிரேக்கம் வற்புறுத்தியது ஆனால் மசிடோனியா அதற்கு இணங்கவில்லை. மசிடோனியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது கிரேக்கம் தடுத்த படியால் வேறு வழியின்றி மசிடோனியா 2018இல் தன் பெயரை வட மசிடோனியா என மாற்றி நேட்டோவில் இணைந்து கொண்டது. வட மசிடோனியா முதற்தடவையாக 2022 மே 13-ம் திகதி ஆரம்பித்த நேட்டோ போர்ப்பயிற்ச்சியில் இணைந்து கொண்டது.

துள்ளும் துருக்கி

பெரிய போர்ப்பயிற்ச்சியை நேட்டோப் படைகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க மறு புறம் பல ஆண்டுகளாக இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான முறுகலில் நடு நிலை வகித்துக் கொண்டிருந்த சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளன. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முறைசாரா மாநாடு (informal meeting) 2022 மே 15-ம் திகதி நடைபெற்றது. அங்கு உரையாற்றிய நேட்டோவின் ஒரே ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு பின்லாந்தும் சுவீடனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் துருக்கியின் ஏற்றுமதிக்கு அவர்கள் விடுத்துள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தான் எந்த நெம்பு கோலையும் பாவிக்கவில்லை எனவும் யாரையும் பயமுறுத்தவில்லை எனவும் கூறியதுடன் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கு பின்லாந்தும் சுவீடனும் வழங்கும் ஆதரவை பகிரங்கப் படுத்துவதாகவும் வெளிப்படுத்தினார். சுவீடனில் பெருமளவு குர்திஷ் மக்கள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். இந்தியா தமிழர்கள் எங்கு விடுதலை பற்றி பேசும்போது அவர்களுக்கு எதிராக இரகசியமாகச் செயற்படுவது போல் அல்லாமல் துருக்கி உலகின் எப்பகுதியிலும் குர்திஷ் மக்கள் தமது விடுதலைச் செயற்பாட்டை முன்னெடுத்தால் துருக்கி அங்கு பகிரங்கமாகத் தலையிடுவது வழக்கம். ஈராக்கில் உள்ள அரபுக்கள் அங்குள்ள குர்திஷ் மக்களின் விடுதலைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையிலும் பார்க்க அதிக நடவடிக்கையை துருக்கி எடுப்பதுண்டு. சிரியாவிலும் இதே நிலைமை தான். உக்ரேனுக்கு இரசியாவிற்கு எதிரான போரில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை துருக்கி வழங்கி வருகின்றது. உக்ரேனின் கடற்பகுதிகளை இரசியா கைப்பற்றினால் கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கம் ஓங்குவது துருக்கிக்கும் அச்சுறுத்தல் என்பதை துருக்கி நன்கு உணரும். ஆனால் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதை துருக்கி கடுமையாக எதிர்க்கின்றது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதைத் தடுத்து தனது வேண்டுகோளை கிரேக்கம் நிறைவேற்றியது போல் துருக்கியும் தனது காய்களை நகர்த்த முயல்கின்றது. ஆனால் துருக்கியி தனது கோரிக்கையில் உறுதியாக நிற்க மாட்டாது என நம்பப்படுகின்றது.

 

கங்கணம் கட்டுமா ஹங்கேரி?

1999-ம் ஆண்டு போலாந்து செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஹங்கேரியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. ஹங்கேரி இரசியாவில் இருந்து மலிவு விலையில் எரிவாயு வாங்க விரும்புகின்றது. அதற்கான விதிவிலக்கு தனக்கு வழங்கப் பட்டால் மட்டுமே சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் இணைய அனுமதிப்பேன் என ஹங்கேரி தன் காய்களை நகர்த்துகின்றது. நேட்டோ நாடுகளில் இரசியாவுடன் நல்ல உறவை ஹங்கேரி பேணி வந்தது. ஆனாலும் உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பது ஹங்கேரிக்கும் ஆபத்தானது.

உக்ரேன் போரின் பின்னர் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன என மேற்கு ஊடகங்கள் மார் தட்டிக் கொண்டிருக்கையில் துருக்கியும் ஹங்கேரியும் அந்த ஒருமைப் பாட்டை கலைக்குமா என 2022 மே மாதம் 21-ம் திகதிக்கு முன்னர் தெரிய வரும்.

Tuesday, 10 May 2022

இரசிய நாணயம் ரூபிளின் பெறுமதி உயர்ந்தது எப்படி?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகளை விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பியதால் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதனால் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி நாற்பது விழுக்காட்டால வீழ்ச்சியடைந்து 2022 மார்ச் 7-ம் திகதி ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபிள் என ஆனது. பின்னர் ரூபிளின் பெறுமதி முன்பு இருந்த நிலைக்கு மீளவும் உயர்ந்து 2022 மார்ச் மாதம் உலகில் சிறந்த பெறுமதி வளர்ச்சி அடைந்த நாணயமாக அடையாளமிடப்பட்டது.

இறந்த பூனையா பதுங்கிய புலியா

நிதிச் சந்தையில் ஒரு நாணயத்தின் அல்லது பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மீளவும் சற்று உயர்ந்து அதைத் தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதுண்டு. அந்த இடைக்கால மீள் உயர்ச்சியை இறந்த பூனையில் விழிப்பு என்பர். ஆனால் இரசிய ரூபிள் புலி போலச் சற்று பதுங்கிப் பாய்ந்துள்ளது. 2022 மே மாதம் 9-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாளில் உரையாற்றுகையில் ரூபிளின் பெறுமதி எழுச்சியடைந்தது. அமெரிகாவின் Wall Street Journal 2022 மார்ச்சில் இந்த ஆண்டு ரூபிளின் பெறுமதி தாழ்ந்த நிலையில் இருக்கும் என எதிர்வு கூறியிருந்தது. இரசியப் பொருளாதார நிபுணர்கள் பிரித்தானிய Economist சஞ்சிகையின் BigMac Index முறைமையை ஆதரமாக வைத்து ஒரு அமெரிக்க டொலர் 23 இரசிய டொலருக்கு ஈடானது என்கின்றார். 2022 மே மாதம் 68 ரூபிளாக இருக்கின்றது. அதன் படி ரூபிளின் பெறுமது உண்மையான பெறுமதியிலும் பார்க்க குறைந்த மதிப்பில் உள்ளது. ரூபிளின் பெறுமதி தாக்குப் பிடிப்பதால் வட்டி விழுக்காடு 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இரசிய எரிவாயுவிற்கு உடனடி மாற்றீடு இல்லை

இரசியா மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளில் பெரும்பான்மையானவை இரசியா டொலர், யூரோ போன்ற நாணயங்கள் பெற்முடியாமல் இருக்கவே செய்யப்பட்டிருந்தன. இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகின் முன்னணி எரிபொருள் கொள்வனவு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இரசியாவில் இருந்து தமது எரிபொருள் கொள்வனவை அதிகரித்தன. இந்த இரண்டு காரணிகளாலும் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதன் மூலம் இரசியாவிற்கு தேவையான வெளிநாட்டுச் செலவாணி தங்கு தடையின்றிக் கிடைத்தது. பல ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் இருந்து எரிவாயுவை தொடர்ந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க வழமையிலும் பார்க்க அதிக எரிபொருளை வாங்கின.

ரூபிளில் மட்டும் எரிவாயு வங்கலாம்

ரூபிளின் பெறுமதியை தக்க வைக்க இரசியா எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் முக்கியமானது. இரசியாவில் இருந்து வாங்கும் எரிபொருளுக்கு இரசிய ரூபிளில் கொடுப்பனவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டமையே. அதற்கு முன்னர் பெரும்பாலும் அக்கொடுப்பனவுகள் யூரோவிலும் டொலரிலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் எரிபொருள் இறக்குமதியாளர்கள் டொலர், யூரோ போன்றவற்றை விற்று ரூபிள் வாங்க வேண்டிய நிலை உருவானது. ரூபிளை பலர் பெருமளவில் வாங்கியதால் அதன் பெறுமதி அதிகரித்தது. 2018-ம் ஆண்டு அப்போதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மனி தன் எரிபொருள் தேவைக்கு இரசியாவில் பெருமளவு தங்கியிருப்பது அதன் பாதுகாப்பிற்கு பாதகமானது எனச் சொன்ன போது ஜெர்மனியர் சிரித்தார்கள்.

வட்டி அதிகரிப்பு

எந்த ஒரு நாடும் தன் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடியாமல் இருக்க அதன் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். அதை இரசியா தாராளமாகச் செய்தது. இரசிய வட்டி விழுக்காடு 20ஆக அதிகரிக்கப்பட்டது. அது ரூபிளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அதை விற்பனை செய்யாமல் தடுத்தது. அதனால் ரூபிளின் பெறுமதி மீள் எழுச்சியடைந்தது.

அதிரடியான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் இரசியர்கள் தங்கள் வருவாயில் எண்பது விழுக்காட்டை ரூபிளுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவு இரசியாவில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகம் புரியும் இரசிய நிறுவனங்கள் தங்கள் டொலர் மற்றும் யூரோ போன்ற நாணயங்களை விற்று ரூபிளை வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதனால் ரூபிளின் பெறுமதி அதிரித்தது.

தடுக்கப்பட்ட விற்பனை

பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இரசியாவின் அரச கடன் முறிகளிலும் இரசியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்திருந்தனர். அவர்களின் கடன்முறிகளையும் பங்குகளையும் விற்பனை செய்வதை இரசியா தடை செய்தது. இதனால் அவர்கள் ரூபிளில் இருக்கும் சொத்துக்களை விற்று டொலை வாங்குவது தடுக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் முதலீட்டை விற்பனை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காமல் தடுத்தமை ரூபிளின் வீழ்ச்சியைத் தடுத்தது.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

என்ற வள்ளுவன் வக்கு மகளிருக்கு மட்டுமல்ல நாணயத்திற்கும் பொருந்தும். இரசியாவின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பாதுகாக்கப்படும் போதே து நிறைவானதும் நிரந்தரமானதுமான பெறுமதியாக இருக்கும். இரசிய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் செயற்கையாக ரூபிளிற்கு உலகச் சந்தையில் வாங்கப்படுவதை அதிகரித்தும் விற்கப்படுவதை குறைப்பதாகவும் உள்ளன. உக்ரேன் போருக்கு முடிவு கொண்டு வந்து இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்பட்டால் இரசிய நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து நிலைத்து நிற்கும். பொருளாதாரத் தடை தொடர்ந்தால் இரசியா ஒரு நாளுக்கு $900மில்லியன்களைத் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருந்தால் இரசியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற்ற்றுக் கொள்ளும். உலகெங்கும் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் மாற்று எரிபொருள்களும் உருவாக்கப்படும். அதனால் ரூபிளின் பெறுமதியை செயற்கையாக உயர்ந்த நிலையில் பேண முடியாமல் போவதுடன் ஒரு கட்டத்தில் ரூபிளின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்து இரசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். 14% வட்டியும் வெளி நாட்டு முதலீட்டு தடையும் உள்நாட்டில் முதலீட்டைக் குறைக்கும். 14% வட்டி தொடர்ந்து பேண முடியாது.ச் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இரசியாவில் இளையோர் தொகை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதுடன் பல இளையோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அது இரசியப் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இரசியா தனது பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும். 

Thursday, 5 May 2022

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது புட்டினிற்கு பாதகமாகும்.

 


நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசமான ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த நோர்டிக் நாடுகளும் அமெரிக்காவும் கனடாவும் இரசியாவுடன் போட்டியிடுகின்றன. எரிபொருள் வளம், கனிம வளம் கடலுணவு ஆகியவை நிறைந்த ஆர்க்டிக் கண்டத்தில் புவி வெப்பமாவதால் பனி உருகி கடற்போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும் அது உருவாகி வருகின்றது.

பின்லாந்தும் இரசியாவும்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அதற்கு முன்னரும். பின்லாந்தை அடிக்கடி இரசியா ஆக்கிரமித்ததுண்டு. இரசியாவின் ஆட்சியின் கீழ் பின்லாந்து இருந்ததும் உண்டு. 2022இன் ஆரம்பத்தில் இரசியாவின் எல்லையைக் கொண்டுள்ள எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய மூன்று போல்ரிக் நாடுகள் மட்டுமே நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இரசியா எஸ்த்தோனியாவுடன் 294கிலோ மீட்டர் எல்லையையும், லத்வியாவுடன் 214கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டுள்ளது. இரசியாவின் வெளிநில மாநிலமான கலினின்கிராட்டுடன் லித்துவேனியா 275கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளது. இம் மூன்று நாடுகளின் மொத்த எல்லை 783கிமீ நீளமானது. இவற்றிலும் பார்க்க நீண்ட எல்லையை இரசியா பின்லாந்துடன் கொண்டுள்ளது. பின்லாந்தும் இரசியாவும் 1340கிலோ மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் வரை நேட்டோப்படைகள் மேற்படி மூன்று நாடுகளில் நிலை கொண்டிருக்கவில்லை. அம்மூன்று சிறிய நாடுகளையும் இரசியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் அவை தமது நாடுகளில் நேட்டோப் படையினர் இருக்க வேண்டும் என வேண்டின. அந்த நாடுகளில் நேட்டோ படையினரை பெருமளவில் நிலை கொள்ள வைத்தால் அது இரசியாவைக் கரிசனை கொள்ள வைக்கும் என்பதால் ஆயிரம் படையினர் மட்டுமே ஒவ்வொரு நாடுகளிலும் நிறுத்தப்பட்டன. அதே வேளை அங்கு பெரிய படைக்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டன.

பின்லாந்திற்கு சுதந்திரம் கொடுத்த புரட்சி

பின்லாந்தை இரசியப் பேரரசு ஆக்கிரமித்திருந்த வேளையில் நடந்த 1917 ஒக்டோபர் பொதுவுடமைப் புரட்சியின் போது பின்லாந்து இரசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் சோவியத் ஒன்றியத்திடமிருந்து பல நெருக்குவாரங்கள் பின்லாந்தின் மீது செய்யப்பட்டது. 1939இல் பின்லாந்தின் ஹங்கோ குடாநாட்டை தனது கடற்படைக்கு தளம் அமைக்க குத்தகைக்கு தரும்படி சோவியத் ஒன்றியம் வற்புறுத்தியதை பின்லாந்து மறுத்திருந்தது. அதனால் 1939-குளிர்காலப் போர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. வலிமை மிக்க சோவியத் படையினருக்கு எதிராக பின்லாந்து மக்கள் தீரமாக போராடினர். உலக நாடுகள் அமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. 1940-ம் ஆண்டு இரு நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஹங்கோ குடாநாடு முப்பது ஆண்டுகள் இரசியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பதிலா இரசியா தனது எல்லையை 25கிலோ மீட்டர் பின் நகர்த்தியதுடன். கரெலியா பிரதேசத்தின் ஒரு பகுதியையும் பின்லாந்திற்கு விட்டுக் கொடுத்தது. 1941முதல் 1944வரை இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து ஜேர்மனியுடன் இணைந்து போர் செய்து ஹங்கோ குடாநாட்டை மீளக் கைப்பற்றிக் கொண்டது.

நடுநிலை எடுத்த சுவீடன் மாறுகின்றது

சுவீடனின் 170 ஆண்டுகால வரலாற்றில் சுவீடனின் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடையேயான மோதலில் நடுநிலை வகிப்பவர்களாக இருந்தனர். ஆனாலும் இரசியா மீதான நெப்போலியனின் படையெடுப்பை அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். சுவீடனும் பின்லாந்தைப் போலவே இரசியாவுடன் பல போர்களில் ஈடுபட்டது. 1790-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர் சுவீடனின் எல்லையை இரசியா மதிப்பதாக ஒத்துள் கொள்ளப்பட்டது. ஜெர்மன் இரசியாமீது தொடுத்த போர் பின்லாந்தை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. அதற்கு முன்னர் நெப்போலியன் இரசியாவிற்கு எதிராக செய்த போர் சுவீடனை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. உலகின் 13வது பெரிய படைக்கல ஏற்றுமதி நாடாக சுவீடன் இருக்கின்றது.  சுவீடனின் Jas 39 Gripen விமானம் உலகின் முன்னணி போர்விமானங்களில் ஒன்றாகும். அதன் போர்விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்து விளங்குபவை. நேட்டோவில் சுவீடன் இணைவது இரசியாவிற்கு எதிரான நேட்டோவின் படைவலுவை அதிகரிக்கச் செய்யும்.

பனிப்போரில் நடுநிலை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உருவான பனிப்போரில் சுவீடனும் நேட்டோ பின்லாந்தும் நடுநிலை வகித்து கொண்டன. இருந்தும் சோவியத் ஒன்றியம் தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற கரிசனையும் தமது நாடுகளிற்கும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” வரலாம் என்ற அச்சத்துடனும் இருந்தனர். அதனால் அவர்கள் தற்போது மூன்று வல்லரசுகள் உட்பட முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்புடன் அதிகம் ஒத்துழைத்தனர். 1990களில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பினுடன் கூட்டுப் போர்ப்பயிற்ச்சி உட்பட பலச் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

மனம் மாறிய ஜெர்மனி

உக்ரேன் மீது 2022 பெப்ரவரியில் செய்த படையெடுப்பில் இரசியாவிற்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளில் ஒன்று இரசியாவிற்கு எதிராக ஜெர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும். நேட்டோ விரிவாக்கத்திற்கு ஜெர்மனி ஆதரவு கொடுத்தால் அது இரசியாவிலிருந்து ஜெர்மனி பெறும் எரிவாயு, இரசியாவிற்கான ஜெர்மனியில் மகிழூர்ந்து ஏற்றுமதி போன்றவற்றை பாதிக்கும் என கரிசனை கொண்டிருந்த ஜெர்மனி தனது படைத்துறைச் செலவை அதிகரித்தது. உக்ரேனுக்கு அனுப்ப மறுத்திருந்த படைக்கலன்களை அனுப்பியது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை ஜெர்மனி ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது. 2022 மார்ச் 3-ம் திகதி ஜெர்மன் அதிபர் Olaf Scholz பின்லாந்தினதும் சுவீடனினதும் தலைமை அமைச்சர்களான Sanna Marin மற்றும் Magadalena Anderson ஆகியோர்  அருகிருக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

பின்லாந்து திசைமாறும் முடிவெடுக்கலாம்

பின்லாந்தின் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னர் பின்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் இணைவது தொடர்பாக 2022 மே மாதம் 13-ம் திகதி முடிவெடுப்பார்கள். அதே போல் 2022 மே மாதம் 12-ம் திகதி சுவீடனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். இரண்டு நாடுகளினதும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் அவர்களது நாடுகள் இணைவதை விரும்புகின்றார்கள். பின்லாந்தின் மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பும் பெரும்பான்மையானவர்கள் நேட்டோவில் இணைவதை விரும்புகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றன. இரசியாவுடன் 830 மைல் எல்லையைக் கொண்ட பின்லாந்தால் நேட்டோவிற்கு பயன் தரக் கூடிய வகையில் பல உளவுத் தகவல்களை இரசியாவில் இருந்து திரட்ட முடியும். இதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதிலும் பார்க்க பின்லாந்து நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கு சாதகமாகவும் இரசியாவிற்கு பாதகமாகவும் அமையும். ஒன்பது இலட்சம் படையினரைக் கொண்ட பின்லாந்திடம் ஜெர்மனியிடம் இருப்பதலும் பார்க்க அதிக எண்ணிக்கையிலான போர்த்தாங்கிகள் உள்ளன. 

அணுக்குண்டுகள் குவியும் போல்ரிக் கடல் பிராந்தியம்

சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது அவர்களது சொந்த முடிவு என இரசிய தரப்பில் இருந்து தொடர்ச்சியாக சொல்லி வந்தாலும் அந்த இணைவு போல்ரிக் பிராந்தியத்தில் படைச்சமநிலையை பெருமளவில் மாற்றும் என இரசியா தெரிவிக்கின்றது. அதைச் சமாளிக்க போல்ரிக் பிராந்தியத்தில் இரசியா அணுக்குண்டுகளை நிறுத்தும் என இரசிய முன்னாள் அதிபர் Dmitry Medvedev தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே போல்ரிக் கடற் பிராந்திய்த்தில் இரசியாவிற்கு சொந்தமான கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா பெருமளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கின்றது என்கின்றால் பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர். 

பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான படைவலு நிலைமையை இரசியாவிற்கு பாதகமாக்கும். இரசியா மீதான நேட்டோவின் தாக்கும் திறனை பெருமளவில் அதிகரிக்கும். இரசியாவின் எல்லையில் உள்ள நாடு ஒன்று நேட்டோவில் இணைவது இரசியாவிற்கு அச்சுறுத்தலை அதிகரிக்கும். அதே வேளை அந்த புதிய நேட்டோ உறுப்பு நாட்டில் நேட்டோ படையினர் தளம் அமைப்பது இரசியாவிற்கான அச்சுறுத்தலை பன்மடங்காக்கும். சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தாலும் அந்த இரு நாட்டிலும் நேட்டோ படைகள் தளம் அமைக்க மாட்டாது எனச் சொல்லலாம். நேட்டோவின் ஆரம்பகால உறுப்பு நாடான நோர்வே இரசியாவின் சினத்திற்கு உள்ளாகாமல் இருக்க தனது நாட்டில் நேட்டோ படைத்தளம் அமைக்கப்படுவதை தவிர்த்து வருகின்றது.

Sunday, 1 May 2022

இம்ரான் கான் இரண்டாம் ஆட்டத்தில் வெல்வாரா?

  

2022 ஜனவரியில் இம்ரான் கானை பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை பாக்கிஸ்தானின் படையினரும் எதிர்க்கட்சியினரும் முடுக்கி விட்ட போது. தான் ஆட்சியில் இருக்கும் போது அவரது எதிரிகளுக்கு உள்ள ஆபத்திலும் பார்க்க ஆட்சியில் அகற்றப் பட்ட பின்னர் வரப்போகும் ஆபத்து அதிகமானதாகவே இருக்கும் என முழங்கினார். மேலும் அவர் தான் தனது ஆதரவாளர்களுடன் தெருவில் இறங்கினால் தன் எதிரிகளுக்கு ஓடி ஒளிக்க இடமிருக்காது என்றார். அவர் சூளுரைத்த படியே அவருக்கு ஆட்சியில் இருக்கும் போது உள்ள ஆதரவிலும் பார்க்க அதிக அளவு ஆதரவு பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் பெருகுவதுடன் பாக்கிஸ்தான் படைத்துறையின் மீது மக்கள் அதிக வெறுப்பு காட்டுகின்றனர்.

இம்ரான் கானின் ஆதரவு அதிகரித்துள்ளது

இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அமெரிக்காவும் பாக்கிஸ்தான் படைத்தளபதி கமார் ஜாவிட் பஜ்வாவும் இணைந்து சதி செய்தே அகற்றினர் என இம்ரான் சொல்லுவதை பல பாக்கிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். அமெரிக்கா இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு பாக்கிஸ்தானியர் விதி விலக்கல்ல. தலைமை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இம்ரான் கான் பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்களில் எல்லாம் பல பேரணிகளை நடத்தியுள்ளார். அவற்றில் திரண்ட மக்கள் தொகை இம்ரான் கானின் ஆதரவுத் தளம் மேலும் வலிமையடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இம்ரான் கான் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்துள்ளதும் இம்ரான் கானுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்ரான் கான் மக்கள் முன் உரையாற்றும் போதெல்லாம் இரண்டாவது விடுதலைப் போர் ஆரம்பம் என்கின்றார். பாக்கிஸ்தானை அமெரிக்கப் பிடியில் இருந்து விடுவிக்கும் விடுதலைப் போரை ஆரம்பிப்போமாக என அவர் முழங்குகின்றார். சிஐஏ பாக்கிஸ்தானில் படைத்தளம் அமைக்க தான் மறுத்த படியால் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றியது அமெரிக்காவே என இம்ரான் கான் குற்றம் சாட்டுகின்றார்.

உறுதியற்ற ஆட்சி

இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்த ஷபாஸ் ஷெர்ஃப்பால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அதனால் பாக்கிஸ்தானுக்கு ஒரு உறுதியான அரசு தேவைப்படும் நிலையில் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெர்ஃப்பால் உறுதியான ஆட்சி அமைக்க முடியவில்லை. அவரை ஆட்சியில் அமர்த்திய கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்தும்படி அவர நச்சரிக்கின்றனர்.

இம்ரானின் குற்றச் சாட்டை உறுதிசெய்த Fox News

அமெரிக்க தொலைக்காட்சி சேவையான Fox Newsஇல் தோன்றிய அதன் அரசியல் ஆய்வாளரான Rebecca Grant பாக்கிஸ்தான் உக்ரேனுக்கு ஆதரவளிக்க வேண்டும், பாக்கிஸ்தான் இரசியாவுடன் உடன்பாடுகள் செய்வதை நிறுத்த வேண்டும், சீனாவுடனான தனது ஈடுபாடுகளை மட்டுப்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை கைவிட வேண்டும் ஆகியவை இம்ரான் கான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டமைக்கான காரணமாக அமைந்தது என்றார். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியமைக்கு அமெரிக்காதான் காரணம் என்பதை Rebecca Grant உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.வ் 

இம்ரானிற்கு பின் மோசமான பொருளாதாரம்

2022 மார்ச்சில் பாக்கிஸ்தானில் பணவீக்கம் 12.6% ஆக இருந்தது. அத்துடன் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க அதிகமாகவும் அரச செலவு வரவிலும் அதிகமாகவும் உள்ளது. பாக்கிஸ்தானின் வெளிநாட்டுச் செல்வாணைக் கையிருப்பு $11 பில்லியன் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் மிகக் குறைவான கையிருப்பாகும். இது இரண்டு மாத இறக்குமதிக்கு மட்டும் போதுமான கையிருப்பாகும். பொதுவாக எந்த ஒரு நாடும் மூன்று மாதத்திற்கு தேவையான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். பாக்கிஸ்தானிற்கு இது போன்ற நிதி நெருக்கடி புதிதல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதின் மூன்று தடவை அது நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 2021 ஜூலையில் இருந்து 2022 மார்ச் வரையிலான ஒன்பது மாதப் பகுதியில் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க $13.7 பில்லியன் அதிகமாக இருந்தது 2020/2021 அதே ஒன்பது மாத காலப்பகுதியில் அது $275 மில்லியனாக மட்டுமே இருந்தது. இதனால் பாக்கிஸ்தான நாணயத்தின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தத்தில் 2021-ம் ஆண்டு இலங்கை இருந்த நிலையில் பாக்கிஸ்தான் 2022 ஏப்ரல் மாதத்தில் இருக்கின்றது. பாக்கிஸ்தானியர் தமது நாட்டை எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தியா பாக்கிஸ்த்தானைப் போல் அடிக்கடி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கப் போவதில்லை என்பதை இட்டு அவர்கள் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் பாக்கிஸ்த்தானின் பொருளாதாரச் சுட்டிகள் பல பங்களாதேசத்தின் சுட்டிகளிலும் பார்க்க மோசமாக இருப்பதையிட்டு அவர்கள் வெட்கப்படுகின்றன.

அடுத்த தேர்தலில் இம்ரானின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பவை:

1. பதவியில் இருந்து விலக்கப்பட்ட உடனேயே இமரான் கான் தன் பரப்புரைக் கூட்டங்களை ஆரம்பித்தமை

2. இம்ரான் கானுக்கு பின்னால் அவரே எதிர்பார்த்திராத அளவு மக்கள் கூடுகின்றனர்.

3. உலகப் பொருளாதாரம் உக்ரேன் போரால் பாதிப்படைந்திருப்பது பாக்கிஸ்தானையும் பெரிதும் பாதித்துள்ளமை புதிய தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு எதிர்பாராத தலையிடியைக் கொடுத்துள்ளது.

4. இம்ரான் பாக்கிஸ்தானில் பயங்கரவாதத்தை தணித்திருந்தார்.

5. இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது மக்களிற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கியிருந்தார்.

6. இம்ரான் கான் பாக்கிஸ்தானின் கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைச் செய்திருந்தார்.

7. ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆட்சி என பாக்கிஸ்தான் மக்களை இம்ரான் நம்ப வைக்கின்றார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி “இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சி” என்ற கொத்துக்குறியில் (hasgtag) நான்கு மில்லியனக்ளுக்கும் அதிகமான பதிவுகள் இடப்பட்டுள்ளன.

8. அறுபது கோடி கைப்பேசி பாவனை உள்ள பாக்கிஸ்தானில் மற்றக் கட்சியினரிலும் பார்க்க இம்ரான் கான் சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளுகின்றார்.

9. பல முன்னாள் படைத்தளபதிகள் இம்ரான் கானைப் பராட்டுகின்றனர்.

அமெரிக்கா தனது பிராந்திய நலன்களிற்காக பாக்கிஸ்தானில் ஊழல் செய்யும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்துவதை வழமையாகக் கொண்டுள்ளது என்பதை பாக்கிஸ்த்தானிய மக்கள் எல்லோரும் உணர வேண்டும். அமெரிக்காவின் இந்த அணுகு முறையால் பாக்கிஸ்தான் தரமான முறையில் ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு நன்மையளிக்க கூடிய வகையில் பொருளாதார முகாமையை செய்வதற்கும் கடினமான ஒரு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பங்களாதேசையும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு  இலங்கையையும் பாக்கிஸ்த்தான் உதாரணமாக பார்க்க வேண்டும்.

Monday, 25 April 2022

உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

  


உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும். அவை குறுகிய தூரம்வரை பாயக் கூடியவையாக இருக்கும். போர்த்தாங்கிகள், கப்பல்கள், விமானங்கள் போன்ற சிறிய இலக்குகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவையாக இருக்கும். கேந்திரோபாய படைக்கலன்கள் எதிரியின் படைவலிமை, பொருளாதாரம், அரசியல் வலிமை போன்றவற்றை தகர்கக் கூடியவையாக இருக்கும். அவற்றால் படைத்தளங்கள் படைக்கல உற்பத்தி நிலையங்கள், நகரங்கள், உட்கட்டுமானங்கள், தொடர்பாடல் கட்டமைப்பு போன்றவற்றை அழிக்கலாம். இரசியாவிற்கு எதிராகப் போராட உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கியவை எல்லாம் உத்திசார் படைக்கலன்களே. இரசியாவிற்கு எதிராக கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கினால் இரசியாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகளான ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கு அவற்றை வழங்கலாம் என்ற கரிசனையால் அவற்றை வழங்கவில்லை. வலிமை மிக்க படைக்கலன்களைக் கொண்ட எதிரியுடன் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொண்ட மக்கள் போராடும் போது அவர்கள் பலத்த இழப்பைச் சந்திப்பார்கள்.

நோக்கத்தை மாற்றிய புட்டீன்

உக்ரேன் மீதான இரசியாவின் போர் உக்ரேனை நாஜிவாதிகளிடமிருந்து மீட்பதையும் உக்ரேனை படையற்ற பிரதேசமாக்குவதையும் நோக்கங்களாக கொண்டது என இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூறிக்கொண்டு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார். அவரது இந்த இரண்டாவது ஆக்கிரமிப்புப் போரின் உண்மையான நோக்கங்கள் 1. கிறிமியா மீதான இரசியப் பிடியை உறுதி செய்வது, 2. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவது. 3. உக்ரேனின் கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் இரசியக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. 4. இரசியப் படைகள் நிலை கொண்டுள்ள மொல்டோவாவின் Transnistria பிரதேசத்துடன் இரசியாவிற்கு ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவது, 5. கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கத்தை மேம்படுத்துவது. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்த முடியாது என்பதை உணர்ந்த நிலையில் புட்டீன் தனது படையினரை 2022 ஏப்ரல் 6-ம் திகதி உக்ரேன் தலைநகரை சுற்றி வளைத்த தனது படையினரை அங்கிருந்து முழுமையாக விலக்கிக் கொண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் அங்கு தன் படையினரை அதிகரித்தார். டொன்பாஸ் போருக்கு பொறுப்பாக சிரியாவின் கசாப்புக் கடைக்காரர் என மேற்கு நாடுகள் விபரிக்கும் ஜெனரல் அலெக்சாண்டர் வோர்ணிக்கோவை புட்டீன் நியமித்தார். இரசிய கட்டளைத் தளபதி ருஸ்டாம் மின்னெகயேவ் இரசியா அயல்நாடுகளின் நிலங்களை வென்றெடுக்க உள்ளது என்றார்.

உதவிகளை அதிகரித்த அமெரிக்கா

உக்ரேனின் கிழக்குப் பிராந்த்யத்தில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில் போர் உக்கிரமடையவிருக்கும் நிலையில் அமெரிக்கா 2022 ஏப்ரில் 21-ம் திகதி உக்ரேனியர்களுக்கு எண்ணூறு மில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை உதவியாக வழங்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் Howitzers ஆட்டிலெறிகள் தொண்ணூறை 184,000 குண்டுகளுடன் உக்ரேனுக்கு அவசரமாக வழங்குதல் அதன் முதல் கட்டமாக அமைகின்றது. அவற்றை இயக்குவதற்கான துரிதப் பயிற்ச்சியையும் அமெரிக்கப் படையினர் பெயர் குறிப்பிடாத ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்து உக்க்ரேனியர்களுக்கு வழங்குகின்றனர். உக்ரேனுக்கு நிண்ட தூர ஆட்டிலெறிகள் 300 தேவைப்படுகின்றது. அமெரிக்கா 72ஐ மட்டும் கொடுத்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவ்வைப் போல் அல்லாமல் டொன்பாஸ் பிரதேசம் சமதரைப் பிரதேசமாகும். அங்கு ஆட்டிலெறிகள் பவிப்பது அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவும் இரசியாவும் நம்புகின்றன. உக்ரேன் போரில் துருக்கியின் TB-2 ஆளிலி வானூர்திகள் சிறப்பாகச் செயற்பட்ட படியால் அமெரிக்கா Ghost Phoenix எனப்படும் ஆளிலி வானூர்திகளை மிக அவசரமாக வடிவமைத்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இவை எதிரியின் இலக்கு மீது மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்கும் தன்மை கொண்டவை. இவை tube launched loitering munition என்னும் வகையைச் சேர்ந்தவை. அமெரிக்காவின் Switchblade என்னும் ஆளிலிவானூர்திகளைப் போன்றவை. ஏற்கனவே அமெரிக்கா அறுநூற்றுக்கும் மேற்பட்ட Switchbladeகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. Ghost Phoenix ஆளிலிகள் தொடர்ந்து பத்து மணித்தியாலங்கள் பறக்கக் கூடியன பத்து கிலோ மீட்டர் தொலவில் உள்ள ஆட்டிலெறிகளையும் தாங்கிகளையும் அழிக்கக் கூடியவை. அமெரிக்கா தனது தனியார் படைத்துறை உற்பத்தியாளர்களுக்கு அவசரமாக உக்ரேன் களமுனைக்கு ஏற்ப படைக்கலன்களை உருவாக்கும் வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

இரசியாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடையலாம்

சுலோவாக்கியா தன்னிடமுள்ள பதினான்ங்கு மிக்-29 போர் விமானங்களையும் உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. உக்ரேனிடம் உதிரிப்பாகங்கள் இன்றி செயற்படாமல் இருந்த போர் விமானங்கள் தற்போது செயற்படக் கூடிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனாலும் உக்ரேனிடம் வலிமை மிக்க வான் படை இல்லை என்பதுதான உண்மை. இரசியாவின் முதன்மை கப்பலான Moskovaவை உக்ரேன் தனது சொந்த தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் மூழ்கடித்தது. அதனை இடமறிதலில் துருக்கியின் TB-2ஆளிலிகள் முக்கிய பங்கு வகித்தன. இனிவரும் காலங்களில் அந்த ஏவுகணைகள் இரசியாவிற்குள் சென்று தாக்கலாம். ஏற்கனவே உக்ரேனின் உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி அங்குள்ள எரிபொருள் குதங்களை அழித்துள்ளன. 2022 ஏப்ரல் 25-ம் திகதி இரசிய உக்ரேன் எல்லையில் இருந்து 154கிமீ தொலைவில் இரசியாவிற்குள் உள்ள எரிபொருள் குதம் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது. இவை போன்ற பல நிகழ்வுகள் இனி இரசிய நிலப்பரப்பில் நடக்கலாம். இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை தேர்வுக்கு உட்படுத்தப்படலாம்.

இரசியாவின் எதியோப்பியாவிற்கான தூதுவரகத்தில் இரசியாவின் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு விடுத்ததும் அங்கு நீண்ட வரிசையில் இளையோர் திரண்டனர் எனவும் செய்திகள் வந்திருந்தன. ஜோர்ஜியா, இரசியாவின் தூரகிழக்கு பிரதேசம் ஆகியவற்றில் இருந்து பல இரசியப் படையினர் உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். டொன்பாஸ் போரின் ஆரம்பத்தில் Kharkhiv நகரம் உட்பட 42 கிராமங்களை இரசியா இலகுவாக கைப்பற்றியது. ஏற்கனவே இரசியா Mariupol, Kherson ஆகிய இரு மூக்கிய நகரங்களை இரசியா கைப்ப்ற்றியுள்ளது.

அமெரிக்காவின் செய்மதிகளின் உளவு, வேவு, கண்காணிப்பு உக்ரேனுக்கு நல்ல பயன்களைக் கொடுக்கின்றன. ஆனால் கேந்திரோபாயப் படைக்கலன்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்காமல் இரசியாவை உக்ரேனால் வெற்றி கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா அறியும். உக்ரேனை வெற்றி கொள்ள வைப்பதிலும் பார்க்க ஒரு நீண்ட போரையே அமெரிக்கா விரும்புகின்றது.

2022 மே மாதம் உக்ரேன் போரின் திசையை முடிவு செய்யும் மாதமாக இருக்கும்.

Thursday, 21 April 2022

பாக்கிஸ்தானின் வெளியுறவு அதைப் பிளவு படுத்துமா?


இரசியாவுடன் இம்ரான் கான் உறவை வளர்க்க முயன்றதால் அவர் பதவியில் இருந்து அமெரிக்காவால் அகற்றப்பட்டார் என அவரே பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். சீனா-இரசிய உறவில் பாக்கிஸ்தானும் இணைந்து கொண்டால் அது அமெரிக்காவிற்கு மிகவும் பாதகமான நிலையை நடுவண் ஆசியாவில் ஏற்படுத்தும். இவற்றுடன் ஈரானும் இணைந்து கொண்டால் மேற்காசியாவின் நிலைமை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தைப் பெரிதும் பாதிக்கும்.

2021 டிசம்பரில் அமெரிக்கா கூட்டிய மக்களாட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்ற பக்கிஸ்தான் மறுத்திருந்தது. அந்த மாநாடு இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கூட்டப்பட்ட மாநாடு எனக் கருதப்பட்டது. சீனாவில் 2022 பெப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளை நேட்டோ நாடுகளின் அரசுறவியலாளரக்ள் புறக்கணித்தனர். ஆனால் அப்போதைய பாக் தலைமை அமைச்சர் இம்ரான் கான் பங்கேற்றார்.

2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசிய - உக்ரேன் போர் ஆரம்பித்தவுடன் இரசியாவைக் கண்டிக்கும் படி அப்போது தலைமை அமைச்சராக இருந்த இம்ரான் கான் மீது பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஐநா சபையில் இரசியாவிற்கு எதிராக பாக் வாக்களிக்க வேண்டும் என 22 நாடுகளின் தூதர்கள் பாக் அரசுக்கு ஒரு பகிரங்க கடிதத்தையும் எழுதியிருந்தனர். அதை மறுத்த இம்ரான் கான் பாக்கிஸ்தான் யாருக்கும் அடிமையில்லை என முழங்கினார். அத்துடன் இந்தியாவிற்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதினீர்களா எனக் கேள்வியும் எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் இரசியாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் பாக்கிஸ்தான் நடு நிலை வகித்தமை நேட்டோ நாடுகளை அதிருப்த்திக்கு உள்ளாக்கியது.

பாக்கிஸ்தான் இரசிய உறவு

14/08/1947 இல் சுதந்திரமடைந்த பாக்கிஸ்தானை 1948 மே மாதம் சோவியத் ஒன்றியம் (இரசியா) அங்கீகரித்தது. பாக்கிஸ்தானில் மக்களாட்சி நடக்கும் போது இரசிய பாக் உறவு நல்ல நிலையில் இருக்கும். படையினரின் ஆட்சி நடக்கும் போது அது மோசமடையும். பாக்கிஸ்தானில் படையினரின் ஆட்சிகள் உருவாகுவதின் பின்னணியை அறிந்து கொள்ளலாம். 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாக் போரின் போது சோவியத் ஒன்றியம் தலையிட்டு போரை நிறுத்தியதுடன் இந்தியா கைப்பற்றிய நிலப்பரப்பில் இருந்து இந்தியாவை சோவியத் ஒன்றியம் வற்புறுத்தி விலகச் செய்தது. அந்த வற்புறுத்தலின் பின்னணிய அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்த்திரியின் இறப்பில் முடிந்தது. 1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் உறுதியாக இணைந்திருந்தது. 1979-1989 வரை நடந்த சோவியத் ஆப்கானிஸ்தான் போரின் போது சோவியத்-பாக் உறவு மோசமடைந்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை இந்தியா வாங்கத் தொடங்கியதில் இருந்து இரசிய பாக் உறவு நெருக்கமடைந்தது. சீனாவுடன் பாக்கிஸ்த்தானின் நட்பு ஏற்கனவே வளர்ந்திருந்த படியால் சீன இரசிய உறவு வளரும் போது பாக் – இரசிய உறவும் வளர்ந்தது. Pakistan Stream Gas Pipeline Project (PSGP) என்னும் பாக்கிஸ்தானில் 1,100கிலோ மீட்டர் நீளமான எரிவாயுக் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இரு நாடுகளின் உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட லாஹூரையும் கராச்சியையும் எரிவாயு விநியோகத்தில் இணைக்கும் $2.5பில்லியன் பெறுமதியான இத்திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆர்மினியா அஜர்பைஜான் போரில் இரசியாவின் நிலைப்பாடு, கஜக்ஸ்த்தானில் இரசியா தலையிட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்கியமை பாக்கிஸ்த்தானின் முன்னாள் தலைமை அமைச்சரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது ஆட்சியையும் இரசியா பாதுகாக்கும் என நம்பினார். ஆனால் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை இரசியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

டொனால்ட் டிரம்ப் பாக்கிஸ்தானை வெறுத்தார்

1998-ம் ஆண்டு பராக் ஒபாமா பாக்கிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை அதிகம் தேவைப்பட்டது. அமெரிக்கா தொடர்ச்சியாக பாக்கிஸ்த்தானுக்கு பல உதவிகளை செய்வதாகவும் ஆனால் அதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுவதாகவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். பாக்கிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா வழங்கி வந்த பயிற்ச்சிகளையும் நிறுத்தினார். அதனால் 2018-ம் ஆண்டு பாக் படைத்தளபதிகள் தொடர்ச்சியாக இரசியா சென்று பாக் படையினருக்கு இரசியா பயிற்ச்சி வழங்கும் ஒப்பந்தங்களையும் செய்தனர். 2018 செப்டம்பரில் அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு வழங்கவிருந்த முன்னூறு மில்லியன் நிதி உதவியையும் டிரம்ப் இரத்துச் செய்தார்.

அமெரிக்கா-இந்தியா-பாக்கிஸ்தான்

அமெரிக்க-பாக் உறவும் அமெரிக்க-இந்திய உறவும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பட்டதாகவே இருக்கின்றது. பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவை இரசிய நட்பில் இருந்து பிரித்து நேட்டோ நாடுகளின் பக்கம் இழுப்பதற்காக 2022 ஏப்ரில் 20-ம் திகதி இந்தியா பயணமானார். இந்தியாவையும் இரசியாவிடமிருந்து பிர்க்க வேண்டும் பாக்கிஸ்தானையும் இரசியாவுடன் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் பாக்கிஸ்த்தானை எப்படிக் கையாளப் போகின்றன என்ற கேள்விக்கான சாத்தியமான பதில்கள்:

1. பாக்கிஸ்தானில் இரசியாவிற்கு பாதகமான அமெரிக்காவிற்கு சாதகமான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்துவது. 2022 ஏப்ரல் மாதம் புதிய பாக் தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷரிஃப் அமெரிக்காவுடன் உறவை விரும்புகின்ற ஒருவர். ஆனால் அவரது பதவிக் காலம் இரண்டு கூட நீடிக்க முடியாது. 2023 ஒக்டோபருக்கு முன்னர் தேர்தல் நடக்க வேண்டும். அவரது கூட்டணிக் கட்சிகள் சீக்கிரம் தேர்தல் வேண்டும் என கதறுகின்றனர.

2. பாக்கிஸ்தானைப் பிரிப்பது. பாக்கிஸ்தானின் சிந்து, பலவரிஸ்தான், பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பிரிவினைவாதம் தலை தூக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலுச்சிஸ்த்தான் மாகாணம் இருக்கின்றது. அங்குள்ள குவாடர் துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. அத்துறைமுகம் சீனாவின் முத்துமாலைத் திட்டத்திலும் சீனாவின் பட்டி-பாதை முன்னெடுப்பு என்னும் பொருளாதாரத் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏற்கனவே பலுச் இன மக்கள் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களால் கடும் சினம் அடைந்துள்ளனர். சீனர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களும் அங்கு நடந்துள்ளன. பலுச்சிஸ்த்தான் பிரிவினை ஈரானில் வாழும் பலுச் இன மக்களையும் பிரிவினைவாதத்தை வளர்க்கும். அதனால் பலுச் மக்கள் பாக்கிஸ்தானிற்கு ஈரானுக்கும் எதிராக அமெரிக்கவால் பாவிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்களின் மனதில் இருப்பவற்றை அவ்வப்போது சுப்பிரமணிய சுவாமி போட்டு உடைப்பது வழமை. பாக்கிஸ்தானை நாம் நான்கு நாடுகளாகப் பிளவு படுத்துவோம் என அவர் சொன்னதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். பிரித்தானிய இந்தியா இந்தியா பாக்கிஸ்தான் எனப் பிரியும் போது பலுச் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். நேரு அதை ஏற்க மறுத்தார். பலுச் இன மக்கள் அடிப்படையில் ஈரானியர்கள் ஆகும்.

பாக்கிஸ்த்தான் இரசிய சீன கூட்டில் இணைவது அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.

Sunday, 17 April 2022

இரசியாவின் முதன்மைக் கப்பலை மூழ்கடித்த உக்ரேனின் ஏவுகணைகள்

 

2022 ஏப்ரல் 14-ம் திகதி இரசியாவின் பத்தாயிரம் தொன் எடையுள்ள Moskva என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் உக்ரேனின் Odessa மாகாணத்திலிந்து 65 கடல் மைல் தொலைவில் கருங்கடலில் பயணிக்கையில் உக்ரேனியப் படையினர் வீசிய இரு R-360 Neptune ஏவுகணைகள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. அதன் தளபதி உட்பட அதில் பயணித்த 510 பேரும் கொல்லப்பட்டதாக உக்ரேன் சொல்வதை இரசியா மறுத்துள்ளது. இரசியாவின் தலைநகரின் பெயர் சூட்டப்பட்ட Moskva கப்பல் அதன் கடற்படையின் பெருமை மிகு கப்பலாகும்.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரேனிய உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி இரசியப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் குதம் ஒன்றையும் அழித்தனர். 2022 மார்ச் மாதம் 29-ம் திகதி இன்னும் ஒரு எரிபொருள் குதம் அழிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கருங்கடல் மற்றும் அஜோவ் கடல் பகுதியில் உக்ரேன் எல்லைக்கு அண்மையாக செயற்பட்டு வந்த இரசியக் கடற்படைக்கலன்கள் யாவும் அங்கிருந்து விலகி தூரத்தில் செயற்படுவதாக போரை அவதானிப்பவர்கள் சொல்கின்றனர்.

இரு கேந்திர முக்கியத்துவ இழப்பு

உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தை இரசியாவின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இரசியாவின் கடல் வலிமையும் Belgorod நகரில் இருந்து வழங்கப்படும் விநியோகங்களும் அவசியமாகும். முதலில் இரசியா Moskvaவில் தீப்பிடித்ததாக பொய்யுரைத்தது. பின்னர் இரசியா பழுதடைந்த Moskvaவை வேறு கப்பல் மூலம் கட்டி இழுத்துச் செல்கையில் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது. நெப்டியூன் ஏவுகணைகளின் தாக்கத்தால் Moskvaவில் உள்ள ஏவுகணைகள் வெடித்து அது நீரில் மூழிகியுள்ளது. செய்மதிகள் மூலமான அவதானிப்புக்கள் மூலம் Moskvaவின் மூழ்கடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியில் தலைமைக் கப்பலாக Moskva இருந்தது.

இரசியாவின் Moskva ஏவுகணை தாங்கி

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா இழந்த மிகப் பெரிய கப்பல் Moskva ஆகும். இரசியாவின் P-1000 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் செலுத்திகள் பதினாறு, இரசியாவின் பிரபல விமான எதிப்பு ஏவுகணை முறைமையான S-300இன் 64 செங்குத்து குழாய்கள், Osa என்னும் வான் தற்பாதுகாப்பு ஏவுகணைகளின் செலுத்திகள் நாற்பது, நீரடிஏவுகணைகள் (Torpedo) செலுத்திகள், உலங்கு வானூர்தி தளங்கள் ஆகியவற்றுடன் Moskva வழிகாட்டி கப்பல் இரசியாவின் கருங்கடல் பிராந்தியத்தின் மீதான் ஆதிக்கத்தின் கோட்டையாக இருந்தது. 12,500 தொன் எடையுள்ள Moskva 1979இல் செயற்பாட்டிற்கு விடப்பட்டது. அன்றிலிருந்து அதற்கு பல தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்ட்ன. அதில் 440மைல்கள் பாயக் கூடிய கப்பல்களை அழிக்கும் பதினாறு ஏவுகணைகள் உள்ளன. இரண்டு வகையான முப்பரிமாண ரடார்கள், கப்பலோட்டும் ரடார்கள், மூன்று வகையான தீயணைக்கும் ரடார்கள் எனப் பலதரப்பட்ட ரடாரகளும் அதில் உள்ளன. Moskvaவை இழந்தமையால் எதிரியின் விமானங்கள், ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், ஆளிலிகள் போன்றவை இரசியாவின் கடற்கலனிகள் மீது தாக்குதல் செய்வதை தடுக்கும் திறன் குறைந்துள்ளது.

உக்ரேனின் உன்னத தயாரிப்பு நெப்டியூன்

உக்ரேன் முதன் முதலாக தனது நெப்டியூன் ஏவுகணையை போரில் பயன்படுத்தியுள்ளது. நெப்டியூன் துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய வழிகாட்டல் ஏவுகணையாகும். நெப்டியூன் ஏவுகணைகள் சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட KH-25 என்ற ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டு உக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த போது உக்ரேனியர் தம் கடற்படைக்கலன்களில் எண்பது விழுக்காட்டை இழந்த பின்னர் உக்ரேனியரக்ள் நெப்டியூன் ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கினர். KH-25 ஏவுகணைகள் கடலிலும் வானிலும் இருந்து வீசப்படும் ஏவுகணைகளாகும். ஆனால் உக்ரேனியர்கள் அதில் பல மாற்றங்களைச் செய்து தரையில் பார ஊர்திகளிலும் இருந்து ஏவக் கூடிய வகையில் மாற்றியுள்ளனர். அதனால் அவை மும்முனைகளில் இருந்தும் வீசக் கூடையவை. நெப்டியூன் ஏவுகணைகள் இருநூறுமைல்கள் வரை பாயக் கூடியவை. அவற்றின் முக்கிய இலக்குகள் கடற்கலன்களாகும். உக்ரேனின் மேற்கு கரையில் உள்ள அஜோவ் கடலிலும் தெற்குப் பகுதியில் உள்ள கருங்கடலிலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்டன. உக்ரேனின் LUCH Design Bureau நெப்டியூனை உருவாக்கியது. உக்ரேனின் நெப்டியூன் ஏவுகணைகள் கருங்கடலின் எப்பாகத்திலும் தாக்கும் திறனை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. R-360 நெப்டியூன் ஏவுகணையால் ஐயாயிரம் தொன் எடையுள்ள கடற்கலனை அழிக்க முடியும் Moskva வழிகாட்டி கப்பல் பத்தாயிரம் தொன் எடையுள்ளது என்றபடியால் அதன் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டன. நெப்டியூனின் முதலாவது பரிசோதனை 2016 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. எதிரியின் இடைமறிப்பு ஏவுகணைகளால் தடுக்கப்படுவதை தடுக்க நெப்டியூன் கடல் மேற்பரப்பில் இருந்து பத்து முதல் பதினைந்து மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் இறுதியாக இலக்கைத் தாக்க முன்னர் அது மூன்று முதல் பத்து மீட்டர் உயரத்தில் பறக்கும். அந்த சிறப்புத் தன்மையால் S-300 உட்பட பல ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளைக் கொண்ட Moskva வழிகாட்டி கப்பலை அழித்தது. ஐந்து மீட்டர் நீளமான நெப்டியூன் ஏவுகணை 320 இறாத்தல் எடையுள்ள உயர் திறன் வெடிபொருள் கொண்ட குண்டுகளைத் தாங்கிச் செல்லும். அது தனது வழிகாட்டல் முறைமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இரசியாவின் கண்காணிப்பு, வேவு, உளவு தோல்வி

பெருவல்லரசாக கருதப்படும் இரசியா தன் எதிரியின் நகருவுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேவு பார்க்க வேண்டும். போதிய உளவாளிகளை எதிரிகளிடையே நிறுத்தியிருக்க வேண்டும். நெப்டியூன் ஏவுகணையை செலுத்துவதற்கு பெரிய பார ஊர்தி தேவை. அதன் உயர்ந்த செலுத்தியை தூக்கி நிறுத்த வேண்டும். இவற்றை செய்மதியில் இருந்தே அவதானிக்க முடியும். உக்ரேனின் ஏவுகணைச் செலுத்திகளையும் அதன் ஏவுகணை இருப்பு களஞ்சியங்களையும் அழிக்க இரசியா தவறியமை அதன் வலுவற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

2022 பெப்ரவரி 24-ம் திகதி பல நேட்டோ நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட வலுவுள்ள படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்குகின்றன. முதல் தடவையாக வலிமை மிக்க படைக்கலன் ஒன்றை இரசியாவிற்கு எதிராக பாவித்து இரசியாவிற்கு பேரிழப்பை உக்ரேன் ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக இருந்த போது மிகச் சிறந்த படைத்துறை உற்பத்தி நாடாக இருந்த உக்ரேன் மீண்டும் தன் படைக்கல உற்பத்தியை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் நெப்டியூன் அதன் படைக்கல உற்பத்தியின் மீள் எழுச்சியை உறுதி செய்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நெப்டியூன் ஏவுகணைகள் உக்ரேனிடம் உள்ளன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...