Tuesday, 5 May 2020

கொரோனா தடுப்பு மருந்துக்கான போட்டி


மனித உடல் தன்னை நோயில் இருந்து பாதுகாக்கும் முறைமையைக் கொண்டுள்ளது. நமது காயங்களில் இருந்து வரும் சீழ் அல்லது சிதல் எமக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் வித்துடல்களாகும். இரத்தத்தின் வெண்ணணுக்கள், புரதம், எலும்பு மச்சை போன்ற பலவற்றைக் கொண்டது மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமை புதிதாக தாக்க வரும் நோய்க்கிருமியை இனம் கண்டு அழிப்பதற்கு மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறைமைக்கு பயிற்ச்சி கொடுப்பதே தடுப்பு மருந்தின் நோக்கம். மனித உடலுக்குள் செலுத்தப்படும் தடுப்பு மருந்து அம்மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமைக்கு புதிய கிருமியின் மூலக்கூறுகளை முதலில் அறிமுகம் செய்யும். பின்பு அதை தாக்கி அழிக்கும் பயிற்ச்சியையும் அது கொடுக்கும். நோய் எதிர்ப்பு முறைமை நோய்க்கிருமையை இனம் காணுதல் மற்றும் அழித்தல் பற்றிய தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு உண்மையான நோய்க்கிருமி தாக்க வரும் போது அதற்கான “சிறப்புப் படையணியை” நோய் எதிர்ப்பு முறைமை உருவாக்கி ஆக்கிரமிக்கும் கிருமியுடன் போர் புரிந்து அழிக்கும். உலகெங்கும் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோய்க்குக் காரணமான கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து மிகவும் இலாபகரமான ஒன்று என்பதால் அந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதற்கான போட்டி 2020 ஜனவரியில் ஆரம்பித்து விட்டது.

பல படி முறைகள்
புதிய ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்குவது பல படிமுறைகளைக் கொண்டது:
1. நோய்க்கிருமியை இனம் காணுதல்
2. அதன் ஆக்கக்கூறுகளை ஆய்வு செய்தல்
3. அதை அழிப்பதற்கான மருந்தைத் திட்டமிடல்
4. மருந்தை உருவாக்குதல்
5. விலங்குகளிற்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்
6. சிறிய எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்
7. உலகெங்கும் உள்ள பல எண்ணிக்கையிலான மனிதர்களில் ஆய்வு செய்தல்
8. மருந்தைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெறுதல்

அவசரமாகச் செய்ய வேண்டும்
மேலுள்ள படிமுறைகளைச் செய்து முடிக்க பல ஆண்டுகள் எடுப்பதுண்டு. ஆனால் 185 நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி எடுத்துக் கொண்டிருக்கும் கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அவசரமாக தேவைப்படுகின்றது. நோய்ப்பரம்பலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் ஐக்கிய அமெரிக்காவிற்கு மட்டும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடும் 26மில்லியன் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மூன்று வாரத்தில் எட்டு இலட்சம் கோடி ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி உலகப் பொருளாதாரம் கொரொனா நச்சுக் கிருமியின் தாக்கத்தால் 2020இலும் 2021இலும் மொத்தம் ஒன்பது ரில்லியன் டொலர் இழப்பீட்டைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளது. உலக வரலாற்றில் ஒரு நிதியமைச்சர் தொற்றுநோயால் ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சியை நினைத்து மன முடைந்து தற்கொலை செய்தது ஜேர்மனியில் நடந்தது. இரசியாவில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்ததம் காரணமாக 3 மருத்துவமனை ஊழியர்கள் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்தனர். இதனால் உலகப் பொருளாதாரச் சரிவை நிறுத்த அவசரமாக தடுப்பு மருந்தை கண்டு பிடித்து அதை உலகெங்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

முந்தித் தாவிய ஒக்ஸ்போர்ட்
ஒஸ்ரேலியாவின் மேரிலாண்ட்டில் உள்ள நோவாவக்ஸ் என்ற நிறுவனம், இன்னொரு ஒஸ்ரேலிய நிறுவனமான மெசொபிலாஸ்ற், அமெரிக்காவின் மசாச்சுசெற் மாநிலத்தில் உள்ள மொடேனா நிறுவனம், அமெரிக்க பிஸ்பேர்க் பல்கலைக்கழகம், பேலர் மருத்துவக் கல்லூரி என 115இற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச அமைப்புக்கள் கொரோனா நச்சுக்கிருமிக்கு எதிரான மருந்தைக் கண்டு பிடித்து அறிமுகம் செய்யும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிலையம் ஓராண்டுக்கு முன்னரே கொவிட்-19 நோய்க்கான கொரோன நச்சுக் கிருமியின் முதற் தலைமுறைக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. மனிதர்களுக்கு அதைக் கொடுத்து ஆய்வு செய்தும் இருந்தது. அதனால் 2020 மே மாதம் ஆறாயிரம் பேருக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மனிதனின் நெருங்கிய உறவினரில் ஆய்வு
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரசுகள் அனுமதித்தால் 2020 செப்டம்பர் மாதம் சில மில்லியன் பேர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கலாம் எனச் சொல்கின்றார்கள். இந்த நிலைக்கு மற்ற மருந்து கண்டு பிடிப்பு போட்டியாளர்கள் வர பல மாதங்கள் எடுக்கும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் ரொக்கி மலை ஆய்வுகூடத்தில் உடல் அமைப்பில் மனிதர்களை ஒத்துள்ள ஆறு rhesus macaque குரங்குகளுக்கு கொடுத்து பின்னர் அவற்றின் உடம்பில் பெருமளவு கொரொனா நச்சுக் கிருமிகள் அந்த ஆறு குரங்குகளுக்கும் வேறு குரங்குகளுக்கும் செலுத்தப்பட்டன. 28 நாட்கள் கழித்து அந்த ஆறு குரங்குகளும் நலமுடனிருக்க தடுப்பு மருந்து கொடுக்காத குரங்குகள் கொவிட்-19 நோக்கு உள்ளாகின. 2020 மே மாதம் முதல் வாரத்தில் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் தங்கள் மருந்தை வேறு பல விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து அவர்களின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளனர்.

நோய் தொடர்ந்தால்தான் மருந்தை ஆய்வு செய்யலாம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவர் கொவிட்-19 நோய் தொடர்ந்து பரவுவதை விரும்பவர்களாக நாம் இருக்கின்றோம் என நகைப்பாகக் கூறினார். நோய் வரமுன் ஒருவருக்கு தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும் பின்னர் அவருக்கு நோய் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவருக்கு செயற்கையாக கொரோனா நச்சுக் கிருமிகளை ஆறு குரங்குகளுக்கு கொடுத்தது போல் கொடுப்பதை மருத்துவ ஒழுக்க நெறி அனுமதிக்காது. அதனால் நோய் வேகமாகப் பரவிவரும் பகுதியில் வாழும் மக்களிடையேதான் மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடியும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை உலகின் மிகப் பெரிய ஆய்வு நிறுவனமாகவும் இலாப நோக்கற்றதாகவும் கட்டி எழுப்பியவர் பேராசிரியர் ஹில் என்பவர் ஆகும். சீனாவில் ஒரு புதிய நச்ச்சுக்கிருமி தாக்கத் தொடங்கி விட்டது என்றவுடன் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் மற்ற நச்சுக்கிருமிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு முழுமையாக புதிய கொரொனா நச்சுக் கிருமிக்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். சீனாவின் கான்சீனா என்ற நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மருந்தை சீனாவில் பெருமளவில் ஆய்வு செய்ய முடியாத அளவிற்கு கொவிட்-19 தொற்று நோய் அங்கு குறையத் தொடங்கிவிட்டது.

அமெரிக்கா என்றால் இலாபம், இலாபம்
ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள மருந்தாங்கல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவில்லை. பெரும்பாலான அமெரிக்க மருந்தாக்கல் நிறுவனங்கள் தாம் ஆய்வில் பங்கேற்பதாயில் முழு உலகிற்குமான விநியோக உரிமை தமக்கு வேண்டும் என அடம் பிடிப்பார்கள். அதன் மூலம் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும். கொவிட்-19 நோய் வருமுன்னர் அதைத் தடுக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் உலக நிறுவனங்கள், அரசுகள், பல்கலைக்கழகங்கள் காட்டும் அக்கறை நோயால் பீடிக்கப்பட்ட நோயாளியைக் காப்பதற்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் காட்டவில்லை. கொவிட்-19 நோயாளிகள் என்பது 4 மில்லியன் மக்களைக் கொண்ட சந்தை ஆனால் தடுப்பு மருந்து உலக மக்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது. உலக மக்கள் தொகை ஏழரை பில்லியன் ஆக தற்போது இருக்கின்றது. அது மிகவும் இலாபம் தரக்கூடிய சந்தை.

இந்தியா என்றால் இலகு
உலகில் இந்தியா குறைந்த செலவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நோய் தடுப்பு மருந்தாக்கல் நிறுவனமான சேரம் நிறுவனத்துடன் (Serum Institute of India) இணைந்து தடுப்பு மருந்த உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரில் ஒருவரான அதர் பூர்ணவாலா ஒக்ஸ்போர்ட் கண்டு பிடித்த மருந்தை உடனடியாகவே உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டார். பொதுவாக ஒரு புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான அரச அனுமதிகள் பெற்ற பின்னரே பெருமளவில் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும். இதற்காக அவர் முப்பது மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளார். அரச அனுமதி கிடைக்காவிடில் அவ்வளவு பணத்தையும் இழக்க வேண்டி வரும் எனதையும் பொருட்படுத்தாமல் அவர் உற்பத்தி செய்துள்ளார். சேரம் நிறுவனம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் சொந்தமான நிறுவனமாகும். அதனால் அங்கு முடிவுகளை எடுப்பது இலகுவானதாக இருந்தது. இந்தியாவில் இன்னும் பரவல் நிலை அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு ஆய்வுகளும் இலகுவாக இருக்கும். மருந்து கொடுத்தவர்களுக்கு ஏதாவது பக்க விளைவு வந்தால் அதற்கு கொடுக்கும் இழப்பீடும் மலிவானதாக இருக்கும்.

இணையவெளித் திருட்டு முயற்ச்சி

பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வுகளை இணையவெளியூடாக திருடும் முயற்ச்சிகள் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. குற்றம் சாட்டு விரல்கள் இரசியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை நோக்கி நீள்கின்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரித்தானிய உளவுத்துறையுடன் இணைந்து இணையவெளித் திருட்டு முயற்ச்சிகளை முறியடிக்கின்றது. 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹில் அவர்கள் தனது ஜேன்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து உலகெல்லாம் துரிதமாக உற்பத்தி செய்து பாவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்.  ஆனாலும் ஆகக் குறைந்தது 2020 செப்டம்பர் வரை உலகம் காத்திருக்க வேண்டும்.

Monday, 27 April 2020

சீனா தலைமை தாங்குமா தனிமைப்படுத்தப்படுமா?

சீனா 1979இல்அரச முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர் அதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்பம் மற்றும் படைத்துறையில் அது மற்ற வல்லரசு நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து கொண்டிருப்பதும் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளைச் சிந்திக்க வைத்தன. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க பல வகைகளில் முயல்கின்றது. ஜேர்மனி, இத்தாலி, கிரேக்கம் உட்பட பல மேற்கு நாடுகள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகம் செய்வதை பெரிதும் விரும்பின.

கொவிட்-19 நோயின் பின்னர்
கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் சீனா உலக அரங்கில் தனது நிலையை உயர்த்த முயற்ச்சி எடுக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை கொவிட்-19 நோயை வைத்து சீனாவை உலக அரங்கில் இருந்து ஓரம் கட்ட முயல்கின்றன. இத்தாலி உட்படப் பல நாடுகளுக்கு சீனா தனது  மருத்துவர்களை அனுப்பி கொவிட்-19 நோயில் இருந்து அந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க உதவியது. பல நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்தது.

தற்பெருமை காப்பாற்றல்
கொவிட்-19 தொற்றுநோய் சீனாவில் இருந்து உலகெங்கும் பரவியது என்ற  செய்தி உலகெங்கும் அடிபடுவது சீனாவிற்கும் அதன் ஆட்சியாளரக்ளுக்கும் ஓரு இழுக்காக அமையாமல் இருக்க சீனா பல முயற்ச்சிகளை எடுத்தது. சீனாவின் வெளிப்படைத் தன்மையற்ற ஆட்சி முறைமையால் தான் கொவிட்-19 தொற்றுநோய் மோசமாகப் பரவியது என்ற குற்றச் சாட்டையும் சீனா முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. 2019-ம் ஆண்டி சீன அதிபர் ஜீ ஜிங்பிங் தமது நாட்டு ஆட்சி முறைமையால் தான் 2008-ம் ஆண்டில் உலகெங்கும் ஏற்பட்ட நிதி நெருக்கடி சீனாவைப் பாதிக்காமல் சீனா தொடர்ச்சியாகப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருகின்றது என்றார். இது சீனா தனது ஆட்சி முறைமையை உலகின் மற்ற நாடுகளுக்கு பரப்ப முயல்கின்றதா என்ற கேள்வியை உலக தாராண்மைவாதிகளிடம் எழுப்பியது. சீனா தமது நாட்டிற்கு அமெரிக்காவால் திட்டமிட்டு கொரொனா நச்சுக்கிருமிகள் பரவவிடப்பட்டது எனக் குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க அதிபர் கொரொனா நச்சுக்கிருமிக்கு சீன நச்சுக்கிருமி என்ற பெயரையும் சூட்டினா. இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு வார்த்தைப் போரை உருவாக்கியது. அது உலகெங்கும் தெற்று நோய் பரவிக் கொண்டிருக்கையில் ஆரோக்கியமான ஒன்றல்ல என்பதால் அந்தப் போரை இரு நாடுகளும் நிறுத்திக் கொண்டன. பின்னர் சீன ஊடகங்கள் மேற்கு நாடுகள் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன என்ற செய்தியை பரப்பின. குறிப்பாக பிரான்ஸின் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் இருப்பர்களை பசியாலும் நோயாலும் இறக்கவிட்டு அங்கு பணிபுரியும் தாதியர்கள் இரவு நேரத்தில் வெளியேறி விடுகின்றனர் என்ற குற்றச் சாட்டு இரு நாட்டுக்கும் இடையிலான உறவை பாதித்தது. சீன அரச தனது நாட்டு மக்களிடம் தாம் தொற்றுநோயை மேற்கு நாடுகளிலும் பார்க்க சிறப்பாகக் கையாண்டது என காட்ட முயல்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்
சீன அரசின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பதிவில் இத்தாலியர்கள் தங்கள் வீடுகளின் முன்னின்று சீனாவிற்கு நன்றி தெரிவிக்க சீனத் தேசிய கீதத்தை பாடுவதாக ஒரு போலித் தகவலை வெளியிட்டார். ஆனால் ஆறு சீன மருத்துவ நிபுணர்கள் உபகரணங்களுடன் பெல்கிரேட்டில் கொவிடி-19 நோய்த் தடுப்பிற்காக வந்து இறங்கிய போது சேர்பிய அதிபர் சீனாத் தேசியக் கொடியை முத்தமிட்டு தன் நன்றியைத் தெரிவித்ததுடன் ஐரோப்பிய நாடுகளைத தாக்கி கருத்தும் வெளியிட்டார் என்பது உண்மை.  யூரோ நாணயத்தைப் பொது நாணயமாகப் பாவிக்கும் நாடுகள் 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமது நாடுகளில் சீனாவின் முதலீட்டைப் பெரிதும் விரும்பின. ஆனால் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தையிட்ட கரிசனையால் 2019 ஐரோப்பிய ஒன்றியம் சீனாவ ஒரு போட்டியாளராக அறிவித்தது. ஜேர்மன் அதிபர் அஞ்சேலா மேர்க்கலின் கருத்துப்படி ஒரு போட்டி நாட்டுடன் வர்த்தகம் செய்யலாம் ஆனால் அந்த போட்டி நாடு சில விதிகளைக் கையாள வேண்டும் என்றார். சீன அரசு தனது நிறுவனங்கள் உலக அரங்கில் போட்டியிடும் திறனை அதிகரிக்க உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி நிதி உதவி செய்வதையே அவர் சுட்டிக் காட்டினார். சீனாவின் ஹுவாவே கைப்பேசி நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்பத்தை ஜேர்மனியும் பிரான்சும் தடை செய்தால் பதிலடி நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என அந்த நாடுகளுக்கான சீனத் தூதுவர் “மிரட்டியதை” ஐரோப்பியர்கள் வெறுத்தனர். இரசியப் பாணியில் சீனாவும் ஐரோப்பா தொடர்பாக போலிச் செய்திகளைப் பரப்புவதையும் ஐரோப்பியர்கள் கடுமையாக வெறுக்கின்றனர். சீனாவில் கொவிட்-19 நோய் பரவத் தொடங்கிய போத் ஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியதை பிரபலப்படுத்த வேண்டாம் என்று சீனா கேட்டுக்கொண்டது. ஆனால் சீனா இத்தாலிக்கு உபகரணங்கள் வழங்கியதை உலக அரங்கில் பெரிதாகப் பரப்புரை செய்தது.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்குபின் உபாயங்கள் மாற்றம்
உலகம் எங்கும் கொவிட்-19 தொற்று நோய்பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் சீனா தனது போர்விமானங்களையும் போர்க்கப்பல்களையும் தைவான் எல்லைக்குள் அதை மிரட்டும் வகையில் அனுப்பியது. அதற்குப் பதிலடியாக அமெரிக்க்கா தனது பி-52 போர் விமானங்களை அனுப்பியது. சீனாவின் ஹையாங் டிஜி-8 என்னும் ஆய்வுக் கப்பல் சீன கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்புடன் வியட்னாம் மற்றும் மலேசியாவிற்கு சொந்தமான தென் சீனக் கடற்பகுதிகளில் எரிபொருள் ஆய்வை மேற்கொண்டதாக இரு நாடுகளும் 2020 ஏப்ரல் 17-ம் திகதி குற்றம் சாட்டின. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் அமெரிக்கா என்ற கடற்படைக் கப்பல் சீனக் கப்பல்களை இடை மறித்தன. அதில் அமெரிக்காவின் புதிய எஃப்-35 புலப்படா போர்விமாங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான தியோடோ ரூஸ்வெல்ற்றில் பணிபுரியும் ஐயாயிரம் பேரில் ஆயிரம் பேருக்கு கொவிட்-19 நோய் தொற்றுயுள்ளதை சாதகமாக்கி சீன இந்த நகர்வை மேற்கொண்டதாகக் கருதப் படுகின்றது. ஆனலும் ஒஸ்ரேலியா பல கப்பல்களைக் கொண்ட ஒரு படையணியை தென் சீனக் கடலுக்கு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு துணையாக அனுப்பியது.

துருப்பிடிக்கும் சீனாவின் செயற்கைத் தீவுகள்.
சீன விரிவாக்கத்தினதும் அதன் உலக ஆதிக்கத்தினதும் முதற்படியாக கருதப்படவெண்டியது தென் சீனக் கடலில் அதன் எட்டுப் புள்ளிக் கோட்டுக்குள் உள்ள கடற் பிரதேசத்தை முழுமையாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான். அதன் ஆரம்பப் புள்ளியாக சீனா தென் சீனக் கடலில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பன்னாட்டு நியமங்களுக்கு மத்தியிலும் செயற்கைத் தீவுகளை உருவாக்கியது. சீனா மணல் வாரி இறைத்து உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் படைக்கலன்களை மறைத்து வைத்திருப்பது கடினமான ஒன்றாகும் நிலத்தைத் துளைத்துக் கொண்டு போகக்கூடிய ஏவுகணைகளால் தென் சீனக் கடலில் உள்ள தீவுகளின் படை நிலைகளை இலகுவாக அழிக்க முடியும். அமெரிக்காவின் புலப்படாப் போர்விமானங்களில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் வீசப்படும் ஏவுகணைகள் தென் சீனக் கடற் தீவுகளில் உள்ள படை நிலைகளைத் துவம்சம் செய்ய முடியும். சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து செயற்கைத் தீவுகளுக்கான வழங்கல்களை அமெரிக்காவின் கடற்படையால் துண்டிக்க முடியுமானால் அது அத் தீவுகளின் அழிவிற்கு வழிவகுக்கும். தென் சீனக் கடலில் சீனா நிறுத்தியுள்ள பல படைக்கலன்களும் ரடார்களும் வழங்கல் குழாய்களும் துருப்பிடித்து விட்டன. அவற்றில் பல செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

கொவிட்டால் சீனா ஆபிரிக்காவைக் கோட்டைவிட்டது
பட்டி-பாதை முன்னெடுப்பு என்ற பெயரிலான சீனாவின் புதிய பட்டுப்பாதை ஆபிரிக்காவை சீனா ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கும் உலகிற்கு சீனா தலைமை தாங்கும் முயற்ச்சிக்கும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் போது சீனாவில் வசித்த பல ஆபிரிக்கர்களை சீனர்கள் கேவலமாக நடத்தியமை பல ஆபிரிக்க நாடுகளில் பெரும் சீன எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. சீனாவின் குவான்சோ மாகாணத்தில் ஐந்து நைஜீரியர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்ள எல்லா ஆபிரிக்கர்கள் மீது கடுமையான கெடு பிடிகள் ஆரம்பமாகின. வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் ஆபிரிக்கர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆபிரிக்கர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்ற போது விரட்டப்பட்டனர். நோயால் பாதிக்கப்படாத ஆபிரிக்கர்களும் தனிமைப் படுத்தப் பட்டனர். சிறு பிள்ளைகளைக் கொண்ட ஆபிரிக்கக் குடும்பங்கள் கூட தெருவில் உறங்க வேண்டிய நிலை உள்ளானது. சீனக் காவற்றுறையினர் ஆபிரிக்கரகளுடன் கடுமையாக நடந்து கொண்டனர். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபிரிக்கரக்ள் தெருக்களில் நின்ற போது அவர்கள் காவற்றுறையினரால் விரட்டப்பட்டனர். பல ஆபிரிக்கர்களின் கடவுட் சீட்டுக்கள் பறிக்கப்பட்டன. இவற்றால் ஆத்திர மடைந்த பல ஆபிரிக்க அரசுகளும் ஆபிரிக்க ஒன்றியமும் தமக்கான சீனத்தூதுவரை அழைத்து தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தன.

சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி
சீனாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக வர்த்கப் பழிவாங்கல் செய்வோம் என அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டல் விடுக்கும் முயற்ச்சியை 2015-ம் ஆண்டு கனடாவுடனும் மெக்சிக்கோவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யும் போதே ஆரம்பித்து விட்டது. பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் இயக்குனர் Changyong Rheeஇன் கருத்துப் படி பன்னாட்டு வர்த்தக முறைமையில் இருந்து சீனாவைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜெர்மனியப் பத்திரிகை ஒன்று ஜேர்மனிக்கு சீனா பரப்பிய கொரோனா கிருமியால் தமது நாட்டுக்கு 149 பில்லியன் யூரோ இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான விலைச்சிட்டை ஜெர்மனிய அரசு சீனாவிற்கு அனுப்பியதாகவும் ஒரு போலிச் செய்தியை வெளியிட்டது. இது ஜெர்மனியில் சீனாவிற்கு வெறுப்பை வளர்க்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். அமெரிக்காவின் மிசோரி மாநில அரசு கொவிட்-19 தாக்கத்திற்கான இழப்பீட்டை கோரி சீனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வேறு பல தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் சீனாமீது வழக்குத் தொடர்ந்துள்ளன.

எரிபொருள் உற்பத்தி நாட்டு மக்களும் தொழிலாளர்களும்
கொவிட்-19 தொற்று நோய்த் தாக்கத்தின் பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை படு வீழ்ச்சியடைந்து எதிர்மறையான நிலையைக் கூட அடைந்தது. இதற்கான காரணம் சீனாதான் என பல எரிபொருள் உற்பத்தி நாட்டு மக்களும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களும் எண்ணி சீனா மிது வெறுப்புக் கொள்ளும் நிலையையும் தோன்றியுள்ளது.

உற்பத்திகள் சீனாவில் இருந்து வெளியேறுமா?
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல தென் கொரிய நிறுவனங்கள் தமது உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. ஏற்கனவே அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற குரலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்புகள் பல பறிபோயுள்ள நிலையில் 2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க டிரம்ப் சீன விரோதக் கொள்கையை தூக்கிப் பிடித்து சீனாவில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் படி தூண்டலாம். தற்போது உலக தயாரிப்பில் (global manufacturing) 28% சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றது.. இவற்றை வேறு நாடுகளில் செய்யும் தொழிற்சாலைகளை ஓரிரு ஆண்டுகளில் உருவாக்கிவிட முடியாது.

மேலாண்மை மேன்மையைக் கொண்டு வருமா?
உலக நாடுகளில் கொவிட்-19 தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பட்டியலைப் பார்க்கும் போது சீனா கொவிட்-19 நெருக்கடியை சிறப்பாகக் கையாண்டுள்ளது எனவே தோன்றுகின்றது. நெருக்கடி மேலாண்மையில் சீனா உலகின் முதலாம் இடத்தைப் பிடித்து விட்டது. ஆனால் 30 நாடுகளைக் கொண்ட மென்வல்லரசுப் பட்டியிலைல் சீனா இதுவரை இடம்பெறவில்லை. கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அது ஒரு மெல்வல்லரசாகவும் உருவெடுக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டான 2021-இல் சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டின் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (HARMONIOUS) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவுகளாகும். சீனா செழுமையும் வலிமையும் அடைய 2050ஐயும் தாண்டிச் செல்ல வேண்டும். 

Monday, 20 April 2020

போர்மீது போர் தொடுக்கும் கொரொனா


கொரொனா நச்சுக் கிருமியின் தாக்கம் பொருளாதாரத்தில், ஆட்சி முறைமையில் மட்டுமல்ல படைத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முகாம்களில் இருக்கும் உலகின் பல்வேறு நாடுகளின் படையினர் தொற்று நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு முகாமில் ஒருவருக்கு தொற்று நோய் வந்தாலே அது அந்த முகாமையே முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு போருக்கு உகந்த நிலையில் உலகம் இப்போது இல்லை என எண்ணும அளவிற்கு கொரொனா நச்சுக் கிருமியால் உருவாகும் கொவிட்-19 தொற்று நோய் பரவி உள்ளது.

விநியோகச் சங்கிலி
ஒரு போர் நடக்கும் போது படையினருக்கு தேவையான உணவு, சுடுகலன்கள், பின்புல ஆதரவு போன்றவற்றிற்கு என பெரிய ஆளணி தேவை. ஒரு பாரிய விநியோகச் சங்கிலி போரின்போது செயற்பட வேண்டும். இணையவெளிப் படையினர் ஒரு சிறிய அறைக்குள் ஒன்றாக இருந்து தமது படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். படையினரும் அவர்களுப் பின்புல ஆதரவு வழங்குவோரும் சமுதாய விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. கொடிய தொற்று நோய் பரவுகின்ற வேளையில் பலர் நோய் வாய்ப்பட்டு போர்முனையை விட்டு வில்க வேண்டி வரும். கொவிட்-19இற்கான மருந்தும் தடுப்பு மருந்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பாவனைக்கு வரும் வரை ஒரு போரை நடத்துவது இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.

உதிரிப்பாகங்கள்
எண்ணெய் இறைப்பான்கள், நீர்ம அழுத்திகள் (hydraulic) போன்ற பல உதிரிப்பாகங்களை அமெரிக்கப் விமானப் படைத்துறைக்கு வழங்கும் Eaton Aerospace என்ற நிறுவனம் தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது. ஊழியர்கள் எவரும் அங்கு வேலைக்குப் போக முடியாத நிலை. ஈற்றனின் விநியோகம் இன்றி அமெரிக்காவின் முதன்மைப் போர் விமானமான F-35 பறப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாது. அமெரிக்க வான் படையின் பாரிய விமானமான KC-46 tanker படையினரையும் தளபாடங்களையும் போர் முனைக்கு எடுத்துச் செல்ல முடியாது. இது போல பல உலக நாடுகளின் படைத்துறைக்கு வழங்கல் சேவை செய்து வரும் பல நிறுவனங்கள் தற்போது செயற்பட முடியாத நிலையில் உள்ளன. ஒரு போர் நடந்தால் அவசியமான பல உதிரிப் பாகங்கள் போர் முனைக்கு எடுத்துச் செல்ல முடியாது.

அமெரிக்கக் கடற்படை

அமெரிக்கக் கடற்படை ஆளணி கொரோனா நச்சுக்கிருமியால் பல சிக்கலான பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கக் கடற்படையின் உச்ச பதவியான் செயலாளர் பதவியில் இருந்தவர் தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார். அவரது இடத்திற்கு இன்னொருவரை அதிபர் நியமிக்க அதை அமெரிக்கப் பாராளமன்றம் அனுமதிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நோய்பரவலால் பாராளமன்றம் கூட முடியாத நிலையில் புதியவரை நியமித்தல் சிக்கலாக இருக்கின்றது. அமெரிக்கக் கடற்சார் படையினரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஐரோப்பியப் படையினர்
பல ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தால் படையினரின் உதவியைப் பெற வேண்டி இருக்கும். ஐரோப்பிய நாடுகள் பல  தமது எல்லைகளை மூடி இருப்பதை உறுதி செய்யவும் படையினர் தேவைப்படுகின்றனர்.  பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல்கள் தமது நடமாட்டத்தை பெருமளவு குறைத்துள்ளன. பிரெஞ்சுப் படையினரைல் அறுநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 நோய் தொற்றியுள்ளது. இத்தாலியின் படைத் துறைத் தளபதியையும் அந்த நோய் விட்டுவைக்கவில்லை. அத்துடன் ஒரு துணைத்தளபதி நோயால் கொல்லப்பட்டார். ஸ்பெயினில் 230 படையினருக்கு கொவிட்-19 தொற்று நோய் பிடித்துள்ளமையால் முவாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பிரித்தானியப் படையினரில் 20,000 பேர் கொவிட்-19 சேவைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளனர். படையினரின் உலங்கு வானூர்திகள் சுகாதார சேவையினரின் வழங்கல்கள் பலவற்றை மேற்கொள்கின்றன.

சீனா மூன்றாம் உலகப் போரை வென்றதா?
கொரோனா நச்சுக் கிருமியைப் பரப்பியதன் மூலம் ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட வெடிக்காமல் சீனா மூன்றாம் உலகப் போரை வென்று விட்டது என இணையவெளிகளில் விரைவாக ஒரு செய்தி 2020 மார்ச் மாதம் பரவி இருந்தது. கொரொனா நச்சுக் கிருமி பரவிய பின்னர் சீனா எந்த ஒரு நாட்டினதும் ஒரு சதுர் அங்குல நிலத்தைக் கூடக் கைப்பற்றவில்லை. அதன் உலக ஆதிக்கம் அதிகரிக்கவில்லை. சில நாடுகளுக்கு முக மூடிகளை வழங்கி சீன முகமூடி அரசுறவியல் (Mask Diplomacy) செயற்பாட்டை மேற் கொண்டது. பல நாடுகள் சீனாவிடமிருந்து வாங்கிய பல தொற்று நோய் ஆய்வுக் கருவிகளும் பல சுவாசப் பெட்டிகளும் செயற்படாதவைய இருந்தன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டன. சீனப் பொருட்கள் தரமற்றவை என்ற விம்பம் அதனால் ஒளிர்வு பெற்றது.

சீனாவின் செயற்கைத் தீவுகள் பின்னடைவைச் சந்திக்குமா?
சீனா தனது கட்டுமானத் திறனைப் பயன் படுத்தி தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கியதுடன் அங்கு பெரும் படைக்கலன்களையும் நிறுத்தியது. ஆனால் சீனா அவசரமாகக் கட்டிடங்களும் படைக்கலன்களும் துரிதமாக துருப்பிடிக்கத் தொடங்கின. பல ஏவுகணைச் செலுத்திகள் மூன்று மாதங்களில் பயன் படுத்த முடியாத அளவிற்கு துருப் பிடித்துப் போயின. செயற்கைத் தீவுகளில் உள்ள ரடார்கள், துறைமுகச் சுவர்கள் நீர் வழங்கு குழாய்கள் போன்றவையும் துருபிடிக்கின்றன. இதனால் துருப்பிடிக்காத மூலப் பொருட்களையும் பூச்சுக்களையும் கண்டு பிடிக்கும் ஆய்வில் சீனா தீவிரமாக இறங்கிய வேளையில் சீனாவை கொரொனா நச்சுக் கிருமிகள் தாக்கத் தொடங்கின.

தைவான் மீதான் மிரட்டலை அதிகரித்த சீனா
உலகமெல்லாம் கொவிட்-19 தொற்று நோய் பற்றி கவலையடைந்து இச்ருக்கையில் 2020 பெப்ரவரி 10-ம் திகதி சீனக் குண்டு விமானங்கள் சீன-தைவான் கடல் எல்லை தாண்டிப் பறந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் பி-52 குண்டு வீச்சு விமானங்கள் தைவானின் கிழக்குக் கடற்கரைப் பிராந்தியத்தில் பறந்தன. 2020 மார்ச் 16-ம் திகதி சீனா தைவானை ஆக்கிரமிக்கும் போர்ப்பயிற்ச்சியை சீனா மேற்கொண்டது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தைவானுக்கு விற்பனை செய்யத் தயங்கிய எஃப்-16 போர்விமானங்களில் அறுபத்தாறை டொனாட் டிரம்ப் ஆட்சி தைவானுக்கு எட்டு பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் முதுகெலும்பு எனக் கருதக் கூடிய தியொடோர் ரூஸ்வெல்ற் விமானம் தாங்கிக் கப்பல் கொவிட்-19 தொற்று நோய் அதில் பணிபுரிபவர்கள் இடையே பரவிய படியால் அது குவாம் தீவில் முடக்கபட்டுள்ளது. அதில் உள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட படையினரையும் தொற்று நோய் ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்கா முடிவு செய்தது. 2020 மார்ச்சில் அமெரிக்கப் படையினர் தமது நட்பு நாடுகளுடன் செய்த போர்ப்பயிற்ச்சிகளை தொற்று நோய் அச்சம் காரணமாக நிறுத்தியிருந்த வேளையில் சீனா கம்போடியாவுடன் இணைந்து தனது போர்ப்பயிற்ச்சியை மேற்கொண்டது.

போருக்கு உகந்ததாக பொருளாதாரம் இல்லை
பன்னாட்டு நாணய நிதியம் 2020இல் உலகப் பொருளாதாரம் 3விழுக்காட்டால் தேய்வடையும் என எதிர்வு கூறியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 5.6விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டிய இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதாரஙக்ள் 2020இல் சொற்ப அளவிலேயே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின் பொருளாதாரம் 1.2விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து

மேற்காசியாவில் சிரிய மக்களின் பரிதாப நிலை
சிரியப் போரால் பாதிக்கப் பட்டு சிரியா, துருக்கி, ஜோர்தான் போன்ற நாடுகளில் சுகாதார வசதிகள் குறைந்த முகாமகளில் தங்கியிருக்கும் சிரியர்கள் நடுவே கொரோனா நச்சுக் கிருமி பெரும் அழிவை ஏற்படுத்தலாம் என அஞ்சப் படுகின்றது. அத்துடன் இந்த சூழலை தமக்கு சாதகமாகப் பயன்ப்டுத்தி மீனும் ஐ எஸ் போன்ற போராளிக் குழுக்கள் தலை தூக்க்லாம். ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படையினரும் கொவிட்-19 நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் மீது ஈரானின் ஆதரவுப் படைக்குழுக்கள் தாக்குதல் செய்யலாம் என்ற கரிசனையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது அமெரிக்கப் படை கடுமையான தாக்குதலை மேற்கொள்ளலாம் என அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். யேமனில் போராளிகள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளனர்.

கிழக்கு ஐரோப்பா
இரசியா உட்பட பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் கொவிட்-19இன் தாக்கம் குறைந்த அளவே உள்ளது. சோவியத் ஒன்றிய காலத்தில் பல மத்திய ஆசிய நாடுகளில் அவ்வப் போது எலிகளால் பரவு பிளேக் நோய் தொற்றுவதுண்டு. அவற்றை சமாளிக்கும் பொறி முறை சோவியத் ஒன்றிய நாடுகளில் உருவாக்கப் பட்டது. அவை இப்போதும் செயற்படு நிலையில் உள்ளது. அந்த நாடுகள் இறுக்கமனா எல்லை மூடல்களைக் கடைப்பிடிப்பதாலும் அரசின் சமுக விலகல் உத்தரவு சரியாகப் பின்பற்றப் படுவதாலும் கொவிட்-19 தொற்று நோய் பரவல் தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இரசியா இப்போது போர் ஒன்றைத் தொடுக்கும் அளவிற்கு அதன் பொருளாதார நிலை இல்லை.
கொவிட்-19 தொற்று நோயும் அதனால் உருவான பொருளாதார பிரச்சனையும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது ஒரு புதிய போர் முனை திறக்கப்படும் வாய்ப்பை பெருமளவு குறைத்துள்ளது.

Thursday, 16 April 2020

உலகப்பொருளாதாரத்தையும் தொற்றிய நோய்


நூற்றிற்கு மேற்பட்ட நாடுகள் கொவிட்-19 நோயால் தமது நாட்டுக்கில் வெளிநாட்டவர் வராமல் பயணத்தடை விதித்துள்ளன. அந்த நோயின் பரவலைத் தடுக்க அரசுகள் பிறப்பித்த மூடிப்பூட்டல் உத்தரவால உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கி உலகப் பொருளாதார உற்பத்தி கொவிட்-19 ஆல் 5% வீழ்ச்சியடையும் என்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் அதை மூன்று விழுக்காடு என மதிப்பிட்டுள்ளது. பநா நிதியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக மொத்த உற்பத்தியில் ஒன்பது ரில்லியன் டொலர் பெறுமதியான குறைப்பை கொவிட்-19 தொற்று நோய் ஏற்படுத்தும் என்கின்றது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கை
பன்னாட்டு நாணய நிதியத்தின் அரையாண்டு அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் 5.9 விழுக்காட்டாலும், யூரோ வலய நாடுகள் 7.5விழுக்காட்டலும், ஜப்பான் 5.2விழுக்காட்டாலும் பிரித்தானியா 6.5 விழுக்காட்டாலும் பொருளாதார தேய்வை 2020இல் சந்திக்கும். ஆண்டுக்கு குறைந்தது  எட்டு விழுக்காடு வளர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்கள் 2020இல் சொற்ப அளவே வளரும். சீனாவின் பொருளாதாரம் 1.2 விழுக்காட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 1.9 விழுக்காட்டாலும் வளர்ச்சியடையும் எனவும் அந்த நிதியம் எதிர்வுகூறியுள்ளது. 2020இல் ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகிய நாடுகள் பெரும் பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அறுபது வளர்முக நாடுகள் கடன் கேட்டு பன்னாட்டு நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றன. கொரொனா நச்சுக் கிருமியின் கொவிட்-19 நோயால் பாதிக்கப் பட்ட வளரு முக நாடுகளுக்கு உதவும் வகையில் பன்னாட்டு நாணயத்தின் சிறப்பு பணமெடுப்பு உரிமையை (Special Drawing Rights) ஒரு ரில்லியன் டொலர்களாள் அதிகரிக்கும் படி பல ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாட்டு தலைவர்களும் முன்னாள் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்கா அதற்கு தயக்கம் காட்டுகின்றது. 


பாரிய தாக்கம்
பன்னாட்டு தொழில் அமைப்பின் தகவலின் படி கொவிட்-19 தொற்றுநோய் 3.3 பில்லியன் உலக உழைப்பாளர்களில் 40 விழுக்காட்டினரை வேலை செய்யாமல் பண்ணியுள்ளது. 1.25பில்லியன் மனிதர்களின் உழைப்பு இழப்பு உலகப் பொருளாதாரத்தை உலுப்பியதுடன் பல ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பல முன்னணிப் பொருளாதார நாடுகளில் தொற்றுநோய் பரவும் வேகம் குறையாத படியால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இறுதியில் 25 மில்லியன் உழைப்பாளர்கள் நிரந்தரமாக வேலையிழக்கும் நிலை வரலாம். இது 2008-ம் ஆண்டு உருவான உலக நிதி நெருக்கடியின் போது ஏற்பட்ட பாதிப்புலும் அதிகமானது. அதனால் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் பல அரசுகள் முன்வைத்துள்ள கடன் நிவாரணத் திட்டம் போதுமானதாக இருக்காது எனச் சொல்லியுள்ளன.
கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்க ஹங்கேரி மக்களாட்சியில் இருந்து தனியொருவர் ஆட்சிக்கு மாறிவிட்டது எனச் சொல்லக் கூடிய அளவிற்கு அதன் பாராளமன்றம் தலைமை அமைச்சர் விக்டர் ஓபனுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க சீன விரோதம்.                
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளும் சீனாவிற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. டிரம்ப் கொரோனாவை சீன நச்சுக் கிருமி என அழைத்தமையை மக்களாட்சிக் கட்சியினர் விரும்பாத போதிலும் அந்தக் கிருமி பரவுவதற்கு சீனாவே காரணம் என்கின்றனர். கொவிட்-19 தாக்கதிற்கு பின்னர் சீன அமெரிக்க உறவு முன்பை விட மோசமாகும் என்பதில் ஐயமில்லை. 90% குடியரசுக் கட்சியினரும் 67% மக்களாட்சிக் கட்சியினரும் சீனாவே கொரோனா நச்சுக் கிருமியின் பரவலுக்கு பொறுப்பு என நம்புகின்றனர். மற்ற நாடுகளின் இழப்பீட்டிற்கு சீனா ஈடு செய்ய வேண்டும் என்ற கருத்தும் அமெரிக்காவில் வலுப்பெறுகின்றது. இந்தக் கருத்தை அமெரிக்க ஊடகங்கள் உலகெங்கும் பரவச் செய்தால் சீனாவிற்கு உலக அரங்கில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பல நாடுகளில் சீனர்கள் மீது தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது.

சீனா சிதறுமா சீறுமா
2020 ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி 17.5% வீழ்ச்சியடைந்தது. 2020 ஜனவரியில் 50% ஆக இருந்த சீனாவின் தொழிற்றுறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டி 2020 பெப்ரவரியில் 37.5% ஆக வீழ்ச்சியடைந்தது. பின்பு மார்ச் மாதம் அது 52% ஆக உயர்ந்தது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி துரிதமாக சீரடைந்தமை ஒரு நல்ல செய்தி. ஆரம்பத்தில் தவறுகள் செய்தாலும் தான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தொற்றுநோய் நெருக்கடியை சீனா சிறந்த முறையில் கையாண்டுள்ளது. சீனாவின் உற்பத்தித் துறை வழமைக்குத் திரும்பியுள்ளமையும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தமையும் சீனாவின் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் உதவப் போகின்றது? சீனப் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியில் தங்கியுள்ளது. அது ஏற்றுமதி செய்யும் நாடுகள் பல கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீள இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கும். அதனால் சீனாவின் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களுக்கு பல சவால்களை எதிர் நோக்கும். கொவிட்-19 தாக்குதலுக்கு முன்னரே சீனாவின் தொழில்நுட்பத்துறையில் செய்யப்படும் முதலீடு பாதிப்படையத் தொடங்கியது. 2020 முதலாம் காலாண்டில் அது 31% வீழ்ச்சியடைந்தது. 2020 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடு செய்ய அதிக உற்பத்தியை இரண்டாம் காலாண்டில் சீனா செய்யும் போது இரண்டாம் காலாண்டில் அதிக உற்பத்தியை செய்யலாம். ஆனால் சீனாவில் உற்பத்தி செய்யும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தியை தமது நாட்டுக்கு நகர்த்த முயன்றால் அது சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். பறகலங்களின் (Drones) உலக விற்பனையில் 70% சீன நிறுவனமான DJIஇற்கு உரியது. இவை பறந்து கொண்டிருக்கையில் எதிர்கொள்பனவனற்றை தாமாகவே உணர்ந்து அவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தபால்துறை பொதி விநியோகத்துறை போன்றவற்றில் மட்டுமல்ல படைத்துறையிலும் இந்த பறகலங்கள் பெரிதும் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இது போல பல புதிய தொழில்நுட்ப உற்பத்திகள் சீனாவிற்கு கைகொடுக்கலாம்.

மீண்டும் தன்னிறைவுக் கொள்கை
கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் பல நாடுகள் தமக்குத் தேவையானவற்றை தமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தன்னிறைவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பல நாடுகள் எடுக்கலாம். உலகெங்கும் பல கிராமங்கள் அக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை அவற்றின் மக்கள் எடுத்துள்ளனர். இது பல் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்
எந்த ஒரு மோசமான பொருளாதா நெருக்கடியும் சில நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். கொவிட்-19 நோய்த்தாக்கம் பேஸ்புக், கூகிள், அமேசன், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது. இந்த நோய்த்தாக்கம் பலரை தமது வீடுகளில் இருந்து கணினிகள் மூலம் இணையவெளித் தொடர்புகளைப் பயன் படுத்தி பணிபுரியும் தேவையை அதிகரித்துள்ளது. அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. இத்துறைக்கு புதிதாக வந்துள்ள Slack & Zoom நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. நோயாளர்களின் தகவல்களைத் திரட்டி செயற்கை விவேகத்தின் மூலம் மிகத் துரிதமாக நிரைப்படுத்தலுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. 2020 ஜவரியில் இருந்து உலகெங்கும் பங்குச் சுட்டிகள் வீழ்ச்சியடைந்த நிலையில் கூகிள், அமேசன், அப்பிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்திய வங்கித்துறையும் பொருளாதாரமும்
இந்திய வங்கித்துறைக்கான பங்குகளின் சுட்டி 2020 மார்ச் மாதத்தில் 41 விழுக்காடு வீச்சியடைந்தது. கொவிட்-19இன் தாக்கத்திற்கு முன்னரே இந்திய வங்கித்துறை அறவிட முடியாக்கடன் (வாராக்கடன்) பிரச்சனையில் மூழ்கியிருந்தது. கொவிட்-19 பரவுவதைத் தடுக்க நான்கு மணித்தியால அவகாசம் மட்டும் கொடுத்து மூன்று வார ஊரடங்கு உத்தரவை நரேந்திர மோடி பிறப்பித்தார். Fitch Ratings என்ற தரப்படுத்தும் நிறுவனத்தின் கணிப்பின் படி இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை இரண்டு விழுக்காடாக மட்டுமே இருக்கும். இது சுதந்திர இந்தியாவின் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். ஆண்டு தோறும் படித்து முடித்து வேலை தேடி வரும் இந்திய இளைஞர்களுக்கு வேலை கொடுக்க இந்தியா ஆகக் குறைந்தது எட்டு விழுக்காடு வளர்ச்சியடைய வேண்டும். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் தமது மொத்த தேசிய உற்பத்தியின் பத்து விழுக்காட்டை தங்களுடைய பொருளாதார நிலைத் தரம் தாழ்த்தப் படாமல் மக்கள் நலனுக்காக செலவிட முடியும். இந்தியா பெருமளவு தொகையை மக்கள் நலனுக்காக செலவளித்தால் அதன் பொருளாதாரத் தரம் குறைக்கப்படும். அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவடையும். வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது கடினமாகும். பணவீக்கம் அதிகரிக்கும், இந்திய நிதித் துறை முன்னாள் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க்கின் கருத்துப்படி இந்தியாவின் மூன்று வார பூட்டி மூடல் இந்தியப் பொருளாதாரத்திற்கு எட்டு இலடசம் கோடி இழப்பு ஏற்படும். அதை ஈடு செய்ய இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 2.5 சதவிகிதம் பெறுமதியான கடன் வாங்க வேண்டும் அதாவது 4 முதல் 5 லட்சம் கோடி ரூபா வரை கடன் வாங்க வேண்டும்.

அமெரிக்காவில் இரண்டு ரில்லியன் திட்டம்
கொவிட்-19 ஆல் பாதிக்கப் பட்ட பொருளாதாரத்தை மீட்க இரண்டு ரில்லியன் டொலர்களை பொருளாதாரத்தினுள் செலுத்தும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக $99000இலும் குறைந்த வருமானமுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட அமெரிக்கர்களுக்கும் 1200 டொலர்களையும் தம்பதிகளுக்கு 2400 டொலர்களையும் பிள்ளைகளுக்கு 500 டொலர்களையும் அமெரிக்க அரசு வழங்குகின்றது. அமெரிக்கர்களின் கொள்வனவு குறைந்தால் அமெரிக்க முதலாளிகளின் வருமானம் குறையும் என்பதால் நாட்டில் கொள்வனவை அதிகரிக்க அமெரிக்கா இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் 810பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து-வாங்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதனால் வங்கிகளிற்கு குறைந்த வட்டியில அதிக நிதி கிடைக்கும். அதை அவ்வங்கிகள் பொருளாதார மேம்பாட்டிற்கான கடனாக நிறுவனங்களிற்கும் பொதுமக்களுக்கும் வழங்கலாம். 2020 ஏப்ரல் 7-8 திகதிகளில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவை எடுக்கவில்லை. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்.

எரியும் எரிபொருள் உற்பத்திக்குள் நெய் ஊறிய கொரோனா
சவுதி அரேபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் உருவான போட்டியால் மசகு எண்ணெயின் விலை முப்பது டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்த நிலையில் உலக உற்பத்தியும் போக்கு வரத்தும் கொரோனா நச்சுக் கிருமியால் பாதிப்படைந்தது. இந்திய சீனா போன்ற நாடுகள் மலிந்த விலையில் தமது எரிபொருள் கையிருப்பை பெருமளவு அதிகரித்தன. பின்னர் மசகு எண்ணெய் விலை 20டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலையீட்டினாலும் அமெரிக்கா சவுதி அரேபியா மீது கடுமையான மிரட்டல்களைப் பிரயோகித்ததாலும் இரசியாவும் சவுதியும் எரிபொருள் உற்பத்திக் குறைப்பிற்கு ஒத்துக் கொண்டன. ஆனாலும் பன்னாட்டு எரிபொருள் முகவரகம் எரிபொருள் கொள்வனவு கொவிட்-19 நோய் தாக்கத்தால் இந்த ஆண்டு பெரிதும் குறையும் என எதிர்வு கூறியத அடுத்து 2020 ஏப்ரல் 15-ம் திகதி மசகு எண்ணெய் விலை இருபது டொலரிலும் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அந்த நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் வருமானத்தை இழப்பதுடன் அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் குறையும். இந்திய இந்தியா, பாக்கிஸ்த்தான், இலங்கை ஆகியவற்றுடன் பல கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலை வாய்ப்பு குறையும்
அமெரிக்க கோர்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகருமான  கலாநிதி கௌசிக் பாசு செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளிய கொவிட்-19இன் தாக்கம் அதிகரிக்கும் என்கின்றார்.  கொவிட்-19இன் பின்னர் பெரிய உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பாவித்து தமது உற்பத்திகளை மேலும் கணினி மயமாக்கும். அதனால் வேலை வாய்ப்புக்கள் குறையும். மேலும் அவர் வீட்டில் இருந்து வேலை செய்வது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்கின்றார்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க 2007இல் உருவான உலக நிதி நெருக்கடியிலும் பார்க்க கொவிட்-16இன் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் பெரிய பாதிப்பைச் சந்திக்கவிருக்கின்றது. இன்னும் தொற்று நோய் பரவிக் கொண்டிருப்பதாலும் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என சொல்ல முடியாத நிலை இருப்பதாலும் உலகப் பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்படும் என இப்போது அளவிட முடியாது.

Monday, 6 April 2020

கொவிட்-19: இறங்காத ஈரானும் இரங்காத அமெரிக்காவும்


கொரோனாநச்சுக்கிருமியால் உருவான கொவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. பல செல்வந்த நாடுகளே கொவிட்-19இன் தாக்குதலால் திணறும் போது ஏற்கனவே அமெரிகாவின் இறுக்கமான பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் பன்னாட்டு நாணய நிதியத்திடம் ஐம்பது பில்லியன் டொலர் கடனாக கேட்டிருந்தது. மத்திய கிழக்கைச் சேர்ந்த அவதானிகள் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் பார்க்க ஈரான் கொவிட்-19 தொற்று நோயை சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவிக்கின்றனர். ஈரானில் 2020 மார்ச் வரை கொவிட்-19 நோயால் 48,000 பேர் பாதிக்கப்பட்டதுடன் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

மார்தட்டிய ஈரான்
ஈரானில் கொரொனாநச்சுக்கிருமி பரவத்தொடங்கியவுடன் போக்குவரத்துத் தடை, தனிமைப்படுத்தல், மக்கள் வழிபாட்டிற்காக கூடுதலைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்யவில்லை. 2020 மார்ச் 20-ம் திகதி ஈரானில் புத்தாண்டு நாளானதால் பலர் உள்ளூர்பயணங்களை மேற்கொண்டனர். தங்களால் கோவிட்-19 தொற்றுநோய் பரவுதலை இலகுவாகத் தடை செய்ய முடியும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். ஈரானில் தொற்றுநோய்த் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஆட்சியாளர்கள் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

பொருளாதாரத்தடையால் விழுந்த ஈரானை கொரோனா ஏறி மிதித்து
தகொவிட்-19 தொற்றுநோய் ஈரானில் தீவிரமடைடந்ததைத் தொடர்ந்து ஈராக், துருக்கி, பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஈரானுடனான தமது எல்லையை மூடிவிட்டன. கட்டார் விமானச் சேவை மட்டும் ஈரானுக்கான பறப்புக்களை மேற்கொள்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்தடை இரண்டு ஆண்டுகளாக ஈரானுக்கு ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்க அதிக பாதிப்பை கொவிட்-19 தொற்று நோய் ஒரு சில வாரங்களில் ஏற்படுத்தியுள்ளது என ஓர் ஈரானிய பொருளியலாளர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு நாணய நிதியத்தின் கணிப்பின் படி 2019இல் ஈரானியப் பொருளாதாரம் 9.5% சுருங்கியிருந்தது. அத்துடன் பணவீக்கம் 40%ஆகவும் உயர்ந்தது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளன. 2018 மே மாதம் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடை விதித்த பின்னர் ஈரான் தனது எரிபொருள் தவிர்ந்த மற்றப் பொருள்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியது. அதிக உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருந்தது. 2019 செப்டபர் முதல் டிசம்பர் வரையில் ஈரானின் விவசாய உற்பத்தி 7.8% ஆலும் தொழிற்றுறை உற்பத்தி 7% ஆலும் சுரங்கமிடல் 1.2%ஆலும் வளர்ச்சியடைந்தது. வெளிநாட்டு நிறுவன்ங்கள் வெளியேறியதால் அவற்றின் உற்பத்தியை ஈரானிய அரசுசார் நிறுவன்ங்கள் செய்யத் தொடங்கின. பிரெஞ்சு மகிழுந்து உற்பத்தி நிறிவனங்கள் வெளியேறிய போது அவற்றின் உற்பத்தியை ஈரானிய் நிறுவனம் ஈடு செய்தது. ஈரானுக்கு பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்கும் 40 ஆண்டு கால அனுபவம் உண்டு.

மருந்தும் மருத்துவ உபகரணங்களும்
ஈரானுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை இல்லை. ஆனால் கொவிட்-19இன் தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான மருந்துகளையும் உபகரணங்களையும் வாங்குவதற்கான அந்நியச் செலவாணிக் கையிருப்பு ஈரானிடம் இல்லை. அமெரிக்காவின் மருத்துவ உதவிகளை ஏற்க ஈரான் மறுத்திருந்தது. அமெரிக்கா அனுப்பும் மருந்திலும் நோய்பரப்பும் நச்சுக்கிருமிகள் இருக்கும் என்றது ஈரான். அமெரிக்காவே ஈரானில் கொவிட்-19 நோயைப் பரப்பியது என ஈரானிய ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்வதுடன் அதை மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றனர். அமெரிக்க ஊடகங்கள் ஈரான் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க அமெரிக்கா மீது குற்றம் சுமத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றது எனக் குற்றம் சாட்டுகின்றன. பராக் ஒபாமா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் ஈரானுக்கு கிடைத்த வருமானத்தை ஈரான் சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவே பெரிதும் பயன்படுத்தியது. தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்பயன்படுத்தவில்லை என வாஷிங்டனில் உள்ள ஈரானிய எதிர்ப்பாளர்களும் இஸ்ரேலிய ஆதரவாளரக்ளும் கருதுகின்றனர். மேலும் அவர்கள் ஈரானிய மதவாத தன்னதிகார ஆட்சியாளர்கள் மக்கள் நலனிலும் பார்க்க ஆட்சிமீதான தமது பிடியின் மீதே அதிக கரிசனை கொண்டுள்ளனர் எனவும் கூறுகின்றனர். ஈரானுக்கு மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்ட நிதி சிரியா இரசியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு திசை திருப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டும் 2019இல் முன்வைக்கப்பட்டது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடைகளில் உள்ள நெழிவு சுழிவுகளைப் பாவித்து ஈரானுக்கு மருந்துகளையும் உபகரணங்களையும் அனுப்பின. உலகெங்கும் பரவும் தொற்றுநோய்க்கு உலகின் எல்லா முலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் என்பதால் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இடை நிறுத்தும் படி அந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவிற்கு வேண்டுகோளும் விடுத்திருந்தன. ஜெனிவாவில் செயற்படும் ஐநா மனித உரிமைக்கழகமும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அதே வேளை ஈரானின் புரட்சிப் பாதுகவல் படையின் இளைஞரணியினர் அமெரிக்காவில் சுவாசக்கவச முகமூடிகளின்றித் தவிக்கும் மக்களுக்கு தாம் அவற்றை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால் ஈரானில் உள்ள தீவிரப் போக்கு உடையவர்கள் ஈரானுக்கு அதிக மருத்துவ உபகரணங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இது அங்கு ஒரு உள்ளக முரண்பாட்ட்டை உருவாக்கியுள்ளது.

தொடரும் குற்றச் சாட்டுக்கள்
2019இன் இலையுதிர்காலத்தில் அமைதியான ஆர்ப்பாட்டம் செய்த 1500 பொதுமக்களை ஈரானிய ஆட்சியாளர்கள் கொன்றதாகவும் வாஷிங்டனில் இருந்து குற்றம் சுமத்தப்படுகின்றது. பல மேற்கு நாட்டவர்களை உளவாளிகள் எனக் குற்றம் சாட்டி ஈரான் சிறையில் அடைத்து வைத்துள்ளமையையும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Transparency International என்ற வெளிப்படைக்கான அமைப்பு ஈரான் ஊழலுக்கான உலக நாடுகளின் பட்டியலில் ஈரான் 146வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. அந்த நிறுவனம் ஈரானுக்கு பராபட்சமாக நடக்கும் என்பதை மறுக்க முடியாத போதிலும் ஈரானில் நடக்கும் ஊழல்களையும் மறைக்க முடியாது. ராயட்டர் செய்தி நிறுவனம் தாம் ஆறுமாதங்களாகத் திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்து ஈரானிய உச்சத்தலைவர் கொமெய்னிக்கும் அவரது மகனுக்கும் 95பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை வைத்திருக்கின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்டது. பிரித்தானிய ஊடகம் ஒன்று ஈரானிய அரசு அறிவிப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு பேர் கொவிட்-19 நோயால் இறந்துள்ளார்கள். மேலும் அந்த ஊடகம் ஈரானில் காலாவதியான மருந்துகள் கொடுக்கப்பட்டு நோயாளிகள் இறக்கின்றனர் என்றது. பினான்:சியல் ரைம்ஸ் பத்திரிகை ஈரானில் கொவிட்-19 தொற்றுநோய் அதிகம் பரவினால் அங்கிருந்து அதன் அயல்நாடுகளுக்குப் பரவலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப் படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அந்த தொண்ணூறு நாட்கள்
அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த பலர் ஈரானுக்கான தடைவிலக்கல் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆகக் குறைந்தது 90 நாட்களாவது பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தினர் ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தல், ஏவுகணைத் திட்டம், யுரேனியப் பதப்படுத்தல் போன்றவற்றை நிறுத்தினால் மட்டுமே பொருளாதாரத் தடை விலக்கப் படும் என்கின்றனர். இரசியா, சீனா போன்றவற்றுடன் ஈரான் செய்யும் சில வர்த்தகங்களுக்கு அமெரிக்கா விதிவிலக்கு அளித்திருந்தது. அந்த விதிவிலக்கை மேலும் மூன்று மாதங்கள் நீடிக்க டொனால்ட் டிரம்ப் ஒத்துக் கொண்டமை ஈரானுக்கு எதிரானவர்களை ஆத்திரப்படுத்தியது. ஈரான் தொற்றுநோய் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக ஈரானுக்கு மென்பொருட்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.

மற்ற இஸ்லாமியர்களை ஆத்திரப்படுத்தும்
தற்போது எரிபொருள் மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பது அமெரிக்க எரிபொருள் உற்பத்தித் துறையைப் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஈரானை சுதந்திரமாக எரிபொருள் விற்பனை செய்ய அனுமதித்தால் எரிபொருள் விலை மேலும் குறையலாம் என்பதையும் அமெரிக்கா கருத்தில் கொள்ளும். ஈரானியர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இரக்கமற்ற நிலைப்பாடு ஈராக்கில் உள்ள சியா இஸ்லாமியர்களை அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்யும். ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மத்தியிலும் கொவிட்-19 தொற்றுநோய் பரவியுள்ளது. அவரகள் தற்போது படை நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஈரானியர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டால் பல சுனி இஸ்லாமியர்களும் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம்.

தாக்குதல் நடக்குமா?
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் கொவிட்-19 நோய் பரவலை இட்டு கரிசனை கொண்டுள்ளனர். அந்த நிலையை தமக்குச் சாதகமாக பயனடுத்தி அமெரிக்கப் படைகள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போன்ற போராளி அமைப்புக்கள் தாக்குதல் நடத்தலாம். அப்படி ஒரு தாக்குதலை ஈரான் தூண்டினால் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் என ஏப்ரல் முதலாம் திகதி டொனால்ட் டிரம் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சனையையும் தொற்றுநோய்ப் பிரச்சனையையும் எதிர் கொள்ளும் ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை. இஸ்ரேல் அழியட்டும் அமெரிக்கா ஒழியட்டும் என்ற அவர்களது நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. ஈரானியர்கள் விரக்தியடையும் போது ஹோமஸ் நீரிணையூடாகச் செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம். அதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் என்பதால் அது இரசியாவிற்கு தேவையான ஒன்றாகவும் உள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...