Tuesday, 24 October 2017

ஈரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் உறுதிப்படுத்த மறுத்ததன் விளைவுகள்

ஈரானுடன் 2015-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் ஜேர்மனியும் இணைந்து ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்திருந்தன. ஈரானுடன் ஒப்பந்தம் செய்த அந்த ஆறு நாடுகளும் P-5+1 என அழைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தை 90 நாட்களுக்கு ஒரு தடவை அமெரிக்க அதிபர் மீளாய்வு செய்து உறுதிப்படுத்தும் கையொப்பம் இட வேண்டும். 2017-ம் ஆண்டு ஒக்டோபரில் அதை உறுதிப் படுத்தும் கையொப்பமிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.

P-5+1 நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் செய்த பின்னர் 2015-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் அணு மீளாய்வுச் சட்டம் (Iran Nuclear Agreement Review Act) ஒன்றை பல இழுபறிகளுக்குப் பின்னர் நிறைவேற்றியது. ஆரம்பத்தில் அச்சட்டம் ஈரானால் ஏற்றுக் கொள்ளாத வகையில் இருந்தது. அதனால் அதை தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து இரத்து செய்வேன் என அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா பாராளமன்றத்தை மிரட்டினார். அதனால் அச் சட்டத்தில் பல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனால் 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையில் 98 உறுப்பினர்களின் ஆதரவுடனும் 435 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 400 உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமையால் அதை அதிபர் இரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் இரண்டு தடவைகள் ஈரானுடனான ஒப்பந்தத்தை தனது கையொப்பத்தை இட்டு உறுதி செய்துள்ளார். 2017 ஒக்டோபர் 15-ம் திகதி அதை அவர் உறுதி செய்யவில்லை.

ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் 2010-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் நிறைவேற்றப்படிருந்தன. 2010-ம் ஆண்டு ஐநா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1929இல் சொல்லப்பட்ட வாசகங்களில் ஒன்று “Iran shall not undertake any activity” எனவும்; 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-2231இல் உள்ள வாசகம் “Iran is called upon not to undertake any activity related to ballistic missiles” எனவும் இருக்கின்றன. இவற்றில் shall not என்பது உத்தரவு எனவும், called upon  என்பது அறிவுரை எனவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் ஈரான் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அது தீர்மானத்தை மீறியதாகும். 2010-ம் ஆண்டு செய்த தீர்மானத்தை 2015-ம் ஆண்டு செய்த தீர்மானம் பிரதியீடு செய்ததால் அது இப்போது நடைமுறையில் இல்லாததாகக் கருதப்படுகின்றது.

ஈரான் 2017 ஜனவரியில் செய்த எவுகணைப் பரிசோதனை ஐநா பாதுகாப்புச் சபையின் 2015 தீர்மானம்-2231 மீறவில்லை. காரணம் அது ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையைத் தடை செய்யவில்லை. செய்ய வேண்டாம் என அறிவுரை மட்டும் சொல்கின்றது. 2010-ம் ஆண்டின் தீர்மானத்தில் இருந்த ஏவுகணைப் பரிசோதனையைத் தடைசெய்யும் வாசகம் 2015-ம் ஆண்டுத் தீர்மானத்திலும் இருப்பதை அமெரிக்கா வலியுறுத்தியது ஆனால் தீர்மானம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திய இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பராக் ஒபாமா அமெரிக்காவில் உள்ள கடும் போக்குடைய வலதுசாரிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை ஐநா தீர்மானத்தின் ஆன்மாவை அழித்து விட்டது என்பது டொனால்ட் டிரம்ப்பினதும் மற்றும் பல அமெரிக்கக் கடும் போக்காளர்களினதும் நிலைப்பாடாகும். ஈரான் தான் பரிசோதித்த ஏவுகணைகள் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவில்லை என்கின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளைப் பரிசோதிக்கின்றது என்கின்றது டிரம்பின் நிர்வாகம்..

ஈரான் இலேசுப்பட்ட நாடல்ல
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில் 2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின் மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள். ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். ஈரானில் தீவிரவாதிகளின் கை ஓங்குவதைத் தடுக்கவே ஈரானுக்குச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து 2015-ம் ஆண்டு P-5+1 நாடுகள் ஒப்பந்தம் செய்தன.

ஈரானை அமெரிக்கா எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்:
1. இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்ற ஈரானின் கொள்கை.
2. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவது.
3. ஈரான் தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் இருப்பது.
4. சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தையும் அதன் ஆட்சி முறைமையும் ஈரான் எதிர்க்கின்றது.
5. அமெரிக்கா இறக்கட்டும் என்ற வாசகத்தை ஈரான் அடிக்கடி சொல்வது.

ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்வதைத் தொடர்ந்து நடத்தினால் அதனால் தொலைதூரம் அதிக எடைகளைத் தாங்கிக் கொண்டு செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்க முடியும். ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிலை உருவானால் அது இஸ்ரேலின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும். காசா நிலப்பரப்பில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மூலமாகவும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மூலமாகவும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை பெருமளவு ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினால் அவற்றில் சில இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறமைகளையும் தாண்டிச் சென்று இஸ்ரேலைத் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்த முடியும்.

ஈரானை ஒட்டியுள்ள ஹோமஸ் நீரிணையிலும் மத்திய தரைக்கடலிலும் அமெரிக்கா பலது படை நிலைகளை நிறுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்தால் அமெரிக்கப் படை நிலகள் பல ஆபத்துக்கு உள்ளாகும்.

இஸ்ரேலும் சவுதி அரேபியா உட்பட அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகள் கூட ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் கடுமையற்றது எனச் சொல்லி பலத்த எதிர்ப்பைக் காட்டியிருந்தன.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது
சிரியாவில் அதிபர் பஷார் அல அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் அமெரிக்கா தோல்வி கண்டு விட்டது. ஈராக்கில் ஈராக்கிய அரசும் குர்திஷ் பிராந்திய அரசும் மோதலைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வேண்டு கோள் விடுத்திருந்தது. ஆனால் குர்திஷ் போராளிகள் வசமிருந்து எரிபொருள் வளம் மிக்க கேர்க்குக் பிராந்தியத்தை குர்திஷ் போராளிகளிடமிருந்து ஈராக் கைப்பற்றியது. அந்தத் தாக்குதைல் ஈரானின் சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர்கள் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகின்றது. ஈரானின் இது போன்ற செயறாடுகள் அமெரிக்காவை விரக்தியடைய செய்கின்றது. அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் ஈரானுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இரத்து எனவும் சொல்ல முடியும்.

மோதாமல் மோதும் ஈரானும் அமெரிக்காவும்
1979-ம் ஆண்டில் இருந்தே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு மோசமான உறவு நிலவி வருகின்றது. 1979-ம் ஆண்டு ஈரானில் மதவாதப் புரட்சியால் மதவாதிகள் அரசைக் கைப்பற்றியவுடன் 60 அமெரிக்கர்களை 444 நாட்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். மதப் புரட்சிவாதிகள் கைது செய்ய முயன்ற மன்னர் ஷாவிற்கு அமெரிக்கா புகலிடம் கொடுத்துக் காப்பாற்றியது. பணயக் கைதிகளை விடுவிக்க ஈரான் மீது செய்த முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக மோதவில்லை. ஆனால் ஈரானுடன் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா போராளிகள் 1983இலும் 1984இலும் அமெரிக்கப் படையினர் மீது லெபனானில் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டு பல அமெரிக்கப் படையினரைக் கொன்றனர். ஈரானுக்கு எதிராக ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் போர் தொடுத்த போது அமெரிக்கா மறை முகமாக ஈராக்கிற்கு பெரும் உதவிகளைச் செய்தது. சவுதி அரேபியா, தன்சானியா, கென்யா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கருதுகின்றது. ஈரானில் உள்ள குர்திஷ் மக்களையும் கிளர்ச்சி செய்ய திரைமறைவு ஆதரவு வழங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பல இணையவெளித் தாக்குதல்களை ஈரானுக்கு எதிராக நடத்தின. ஈரானில் உல்ல பலுச் இனக்குழுமத்தினரின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள பலுச் போராளிக் குழுக்களூடாக அமெரிக்கா உதவிகள் பல செய்தது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை எதிர்பார்த்த அளவிற்கு ஈரானைப் பணிய வைக்கவில்லை. ஈரானுக்கு எதிராக ஈராக் இருந்த போதே ஈரானை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தான் சம்பந்தப்பட விரும்பவில்லை என ஈராக் அறிவித்துள்ள நிலையில் ஈரானை அமெரிக்காவால் அடக்க முடியாது. 

ஒன்றின் மீது ஒன்று குரோதம் கொண்ட ஈரானினதும் அமெரிக்காவினதும் படைகள் தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் ஒன்றுடன் ஒன்று மோதக் கூடிய வகையில் நிலை கொண்டுள்ளன. ஈரானுடனான P-5+1 நாடுகள் செய்த ஒப்பந்தத்தை டிரம் உறுதி செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் உறுதி செய்ய மறுத்தாலும் அது உடனடியாக ஒப்பந்தத்தைப் பெருமளவில் பாதிக்காது. அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை கொண்டு வரும் போது தான் பிரச்சனை உருவாகும். அதன் பின்னர் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தலைத் தீவிரமாகத் தொடர்ந்தால் முதலாவதாக இஸ்ரேல் இரகசியமாக ஈரானிய அணு உற்பத்தி நிலைகளைத் தாக்கி அழிக்க முயலலாம். இரண்டாவதாக ஈரானிய அணுக்குண்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க சவுதி அரேபிய பாக்கிஸ்த்தானின் உதவியை நாடலாம். ஒன்றில் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் சவதி அரேபிய அணுக்குண்டு தயாரிக்கலாம் அல்லது பாக்கிஸ்த்தானிடமிருந்து அணுக்குண்டுகளைக் கொள்வனவு செய்யலாம். இவை யாவும் மேற்காசியப் பிராந்தியத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கும்.


Wednesday, 18 October 2017

சிரியப் போர் இனி லெபனானில் மையம் கொள்ளுமா

மேற்கு கரையில் இயங்கும் ஃபட்டா அமைப்பு, காசா நிலப்பரப்பில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகிய மூன்றுமே இஸ்ரேலிற்கு எதிராக உடனடித் தாக்குதல் செய்யக் கூடிய எதிரிகளாகும். இதில் ஃபட்டா அமைப்பு இஸ்ரேலுடன் தற்போது சமாதான நிலையில் உள்ளது. ஈரான் தன்னுடன் ஈராக்கையும் சிரியாவையும் இணைக்கும் திட்டம் சியாப் பிறைத் (Shia Crescent) திட்டம் என அழைக்கப்படுகின்றது. இதை இஸ்ரேல் மிகவும் கரிசனையுடன் பார்க்கின்றது. இந்தப் பிறைத் திட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் செயற்பாடுகளுக்கு லெபனானிய ஹிஸ்புல்லா முக்கிய கருவியாகும்.

ஹமாஸும் ஃபட்டாவும்
நீண்ட காலமாக இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் காசாவில் செயற்படும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்புகளுக்கும் மேற்குக் கரையில் செயற்படும் அமைப்புக்களுக்கும் இடையில் ஒற்றுமை ஒருபோதும் வராது எனக் கருதுகின்றனர். இருதரப்பினருக்கும் இடையில் ஒற்றுமை வந்தால் அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதும் அவர்களது நிலைப்பாடு. ஹமாஸின் இறுதி இலக்கு முழுப் பலஸ்த்தீனியர்களுக்கும் தாமே தலைமை தாங்க வேண்டும் என்பதே. மேற்குக் கரையின் தலைநகரான ரமல்லாவில் இருந்து பலஸ்த்தீனியத் தூதுக்குழு ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காசா நிலப்பரப்பிற்குப் பயணத்தை மேற் கொண்டது. இது அரபு உலக ஊடகங்களால் பாராட்டப்பட்டது. காசா நிலப்பரப்பில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தற்போது ஹமாஸ் அமைப்பு காசா பிரதேசத்தின் முகாமையை ஃபட்டா அமைப்பிடம் கையளிக்க முன்வந்துள்ளது. இதை இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் ஆரம்பமாகக் கூடப் பார்க்க முடியுமா?

நித்திய கண்டமாக இருந்த அசாத்திற்கு தீர்க்க ஆயுள்
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி அசைக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. அவரது ஆட்சியை தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானில் இருந்து செயற்படும் சியா முசுலிம் அமைப்பான ஹிஸ்புல்லாவாகும். சிரியாவில் அவர்கள் சிறந்த கள அனுபவத்தையும் பலவிதப் படைக்கலன்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளனர். அவர்கள் லெபனானை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலவார்கள். லெபனானுடன் கேந்திரோபாய எல்லையைக் கொண்டுள்ள இஸ்ரேல் அதையிட்ட தனது கரிசனையைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

லெபனானின் முக்கியத்துவம்
மத்திய கிழக்கிலே கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடாக லெபனான் திட்டமிட்டு முதலாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்டது.   பிரான்சின் குடியேற்ற ஆட்சி நாடாக இருந்த லெபனான்1942-ம் ஆண்டு நவம்பர் 22-ம் திகதி சுதந்திர நாடாகியது. பின்னர் கிரிஸ்த்தவர்களும் இசுலாமியர்களும் தேசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி குடியரசுத் தலைவர் ஒரு மரோனைற் கிருத்தவராகவும் தலைமை அமைச்சர் ஒரு சுனி முசுலிமாகவும் பாராளமன்ற அவைத் தலைவர் சியா முசுலிமாகவும் இருப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. பாராளமன்ற உறுப்பினர்களாக கிருத்தவர்களுக்கு ஆறு முசுலிம்களுக்கு ஐந்து என்ற விகிதாசாரப்படி இருக்க வேண்டும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மத மோதல்கள் நிறைந்த லெபனான்
1943-ம் ஆண்டிலிருந்து 1956-ம் ஆண்டு வரை மக்களாட்சிப்படி லெபனான் ஆளப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு லெபனானில் வலதுசாரிக் கிரிஸ்த்தவர்கள் தொடர்ந்து ஆட்சி புரியக் கூடிய வகையில் லெபனானிய அரசமைப்பை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ இரகசியமாகத் தலையிட்டு மாற்றியது. அரசமைப்பை மாற்றுவதற்க்கு தேவையான பெரும்பான்மையை 1957 மே-ஜூன் மாதங்களில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெறச் செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டன. இதனால் அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிருத்தவ வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.  அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பொதுவுடமைவாதிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) என சி.ஐ.அமெரிக்க அதிபரிடமே பொய் சொன்னது. இந்த முறைகேடான தேர்தலைத் தொடந்து லெபனானில் பெரும்  உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மரோனைற் கிருத்தவர்களும் இசுலாமியர்களும் மோதிக் கொண்டனர். 1956-ம் ஆண்டு எகிப்து சூயஸ் கால்வாய்காக மேற்கு நாடுகள் முரண்பட்ட போது லெபனானிய கிருத்தவர்கள் எகிப்திய ஆட்சியாளர் கமால் நாசர் பக்கம் நிற்காமல் மேற்கு நாடுகளுக்கு சார்பாக நின்றது எகிப்த்திற்கும் லெபனானிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது. எகிப்த்தியர்களும் சிரியர்களும் தமது நாடுகளை இணைத்து 1958-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசை உருவாக்கினார்கள். லெபனானில் இருக்கும் இசுலாமியர்கள் லெபனானும் இந்த அரசில் இணைய வேண்டும் எனவும் கிருத்தவர்கள் லெபனான் தொடர்ந்து தனிநாடாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினர். புதிய ஐக்கிய அரபுக் குடியரசு லெபனானிய இசுலாமியர்களுக்கு உதவியது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. லெபனானில் அமெரிக்கா தலையிட்டால் தான் அணுக் குண்டைப் பாவிப்பேன் என சோவியத் அதிபர் குருசேவ் மிரட்டினார். 1958-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா 14000 படையினரைக் கொண்டு நீல வௌவால் என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை லெபனானில் மேற் கொண்டது.

வலிமை மிக்க ஹிஸ்புல்லா
2006-ம் ஆண்டு கடைசித் தடவையாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மோதிக்கொண்டன. இஸ்ரேலின் கவலை ஹிஸ்புல்லாவிலும் பார்க்க இரசியா இனி லெபனானில் என்ன செய்யப் போகின்றது என்பதே. சிரியாவில் இஸ்ரேல் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமையவில்லை. 9/11 தாக்குதலுகு முன்னர் அமெரிகவிற்கு பேரிழப்பைக் கொடுத்த தாக்குதல் ஹிஸ்புல்லாவின் தாக்குதலாகும். சிரியாவில் போர் நடக்கும் போது அவ்வப் போது ஹிஸ்புல்லா லெபனானிற்குள் பெருமளவில் படைக்கலன்களை நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவினுள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தின. ஆனால் இரசியாவுடன் எந்த வித மோதல்களோ முறுகல்களோ நடக்கவில்லை. மாறாக இஸ்ரேலும் இரசியாவும் தமது தொடர்பாடல்களை அதிகப்படுத்திக் கொண்டன. சிரியாவில் செயற்படும் இரசியப் போர் விமானங்கள் இஸ்ரேலுக்குள் தவறுதலாக பறப்பதை இஸ்ரேல் அனுமதித்திருந்தது. ஆனால் சிரியப் போர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் இரசியாவின் மேற்காசியா தொடர்பான கேந்திரோபாய நிலைப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இரசியாவின் ஓர் அவசியமான சொத்தாக உருவெடுத்துள்ளது. ஈரானின் அடுத்த இலக்கு லெபனானை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அது இஸ்ரேலைப் பொறுத்தவரை அனுமதிக்க முடியாததும் ஆபத்தானதுமாகும். ஈரான் இரசியாவிற்கு தற்போது அவசியம் தேவைப்படும் ஒரு நட்பு நாடாகும். அதேவேளை மேற்காசியாவில் ஈரானின் விரிவாக்கத்தை இரசியாவால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சிரியப் போர் முடியும் ஆனால் முடியாது!
சிரியாவில் போர் முடிவிற்கு வருமா இல்லையா என்பதைப் பற்றி உறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கின்றது. சிரியாவில் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு அங்கு மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது. இரசியா அசாத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் எனவும் அசாத்தின் அரச படைகள் தவிர மற்ற எல்லா படைக்குழுக்களும் அழிக்கவேண்டும் எனவும்  கருதுகின்றது. இதனால் எப்போது சிரியாவில் நடக்கும் போர் லெபனானை நோக்கி நகரும் என்பதும் சொல்ல முடியாமல் இருக்கின்றது. சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் இத்தனை மோதல்களின் பின்னர் எப்படி சியா முஸ்லிமான அசாத்தால் பதவியில் நீடிக்க முடியும்? சுனி முஸ்லிம்களின் படைப்பிரிவில் ஐஎஸ், அல் கெய்தா, சுதந்திர சிரியப் படை ஆகியவை முக்கியமான படைக்குழுக்களாகும். இவற்றில் ஐஎஸ் படையணியையும் அல் கெய்தா படையணியையும் இரசியாவும் அமெரிக்காவும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் ஒத்துப் போகின்றன. அமெரிக்க ஆதரவு பெற்ற சுதந்திர சிரியப் படைப் போராளிகள் சிறந்த போராளிகள் அல்லர். சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா ஐஎஸ் அமைப்பு போராளிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதில் குர்திஷ் போராளிகளே முக்கிய பங்கு வகித்தனர். ஈராக்கைப் போலவே சிரியாவிலும் குர்திஷ் போராளிகள் தமக்கென ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றி அங்கு ஒரு உண்மைசார் அரசு ஒன்றை நிறுவியுள்ளனர். ஆனால் துருக்கி ஈராக்கிலுள்ள குர்திஷ் போராளிகளுலும் பார்க்க சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளை கடுமையாக வெறுக்கின்றது. ஐஎஸ் அமைப்பினர் முற்றாக சிரியாவில் அழிக்கப்பட்ட பின்னரும் சிரியாவில் சியா, சுனி, குர்திஷ் ஆகிய தரப்பினரிடையே மோதல்களைத் தொடர்ப்பண்ணுவதால் தற்காலிகமாக லெபனானை நோக்கி போர் நகர்வதைத் தடுக்க முடியும். அதற்கு அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் ஒத்துழைக்கலாம்.

அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அந்தோனியோ குத்தரஸிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மஹ்மூட் அப்பாஸிலும் பார்க்க இஸ்ரேலிய அதிபர் பென்ஞமின் நெத்தன்யாஹூ பேச்சு வார்த்தை நடத்தக் கடினமானவராக இருக்கின்றார் எனச் சொல்லியுள்ளார். பலஸ்த்தீனிய விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒத்துப் போவதில்லை என வெளியில் காட்டிக் கொண்டாலும். இஸ்ரேலின் இருப்புக்கு ஆதரவு கொடுப்பது அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கையின் முதன்மை அம்சமாகும்.


ஹிஸ்புல்லாவின் நிதி மூலம்
ஹிஸ்புல்லா அமைப்பின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டொலர்கள் என அமெரிக்க உளவுத் துறை மதிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா தென் அமெரிக்க போதைப் பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. சிறந்த பணச்சலவை செய்யக் கூடிய பன்னாட்டுக் கட்டமைப்பையும் வைத்திருக்கின்றது, உலகின் எப்பாப் பாகங்களிலும் அது வியாபித்துள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் இருந்து நிதி திரட்டுகின்றார்கள். ஹிஸ்புல்லாவின் நிதி மூலத்தை அழிக்க அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் பாடுபடுகின்றது. 2015-ம் ஆண்டு ஹிஸ்புல்லா நிதித் தடைச் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியிருந்தது. லெபனானின் நடுவண் வங்கி ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பல நூற்றுக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் தொடர்பு உண்டு என்பதை முழுமையாக நம்ப முடியாது. ஹிஸ்புல்லாவின் வருமானத்தில் எழுபது முதல் எண்பது விழுக்காடு ஈரானில் இருந்து கிடைக்கின்றது. அவை வங்கிகளினூடாகப் போவதில்லை அமெரிக்கா தடுப்பதற்கு. அவை பணப் பெட்டிகளில் போகின்றன. அவை நேரடியாகவோ அல்லது சிரியாவினூடாகவோ விமானத்தில் அனுப்பப்படும். ஈரானை அடக்காமல் ஹிஸ்புல்லாவை அடக்க அமெரிக்காவால் முடியாது.

முன்கூட்டிய தாக்குதலுக்கு பின்னிற்காது இஸ்ரேல்

2017 செப்டம்பரில் இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளில் செய்திராத பெரும் போர் ஒத்திகை ஒன்றை தனது முப்படைகளையும் உளவுத் துறையையும் இணையவெளிப் படைப் பிரிவையும் கொண்டு செய்திருந்தது. பத்து நாட்கள் தொடர்ந்த இந்த ஒத்திகை லெபனான் எல்லையிலேயே நடந்தது. இதற்கான காரணம் ஹிஸ்புல்லா முற்றாக லெபனானைக் கைப்பற்றும் என இஸ்ரேல் கரிசனை கொண்டுள்ளமையே. அப்படிக் கைப்பற்றும் போது இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்து பல ஹிஸ்புல்லாப் போராளிகளைக் கொல்ல முயற்ச்சிக்கலாம். அதற்கு எதிராக சிரியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் உதவிகள் ஹிஸ்புல்லாவிற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் கிடைக்கலாம். அதைத் தடுக்க சிரியப் போர் தொடர்வது இஸ்ரேலின் விருப்பமாக இருக்கும். அதற்காக திரைமறைவில் சிரியப் போர் தொடர இஸ்ரேல் எல்லாச் சதிகளையும் செய்து கொண்டிருக்கும். முன் கூட்டிய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் என்றும் பின்னிற்பதில்லை. 

Monday, 9 October 2017

உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்தும் இலுமினாட்டிகள்

“காசு என்ன மரத்திலையா காய்க்குது?” என்ற கேள்வி எம்முடைய காதுகளில் விழுவதுண்டு. ஆனால் நீர் பாய்ச்சாமல் உரம் போடாமல் காசு காய்க்கும் மரங்கள் உண்டு. அவை தான் மத்திய வங்கிகள். உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் இலுமினாட்டிகளின் கட்டுப்பாடில் உள்ளன. இலுமின்னாட்டிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத நடுவண் வங்கிகளாக இருந்தவை சதாம் ஹுசேய்னின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக், மும்மர் கடாஃபியின் ஆட்சியின் கீழ் இருந்த லிபியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் இலுமின்னாட்டிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தன. ஆனால் அங்கு போர் மூலம் ஆட்சி மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது அவற்றின் மத்திய வங்கிகள் இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இலுமினாட்டிகள் என்பது வெறும் சதிக்கோட்பாடு மட்டுமே அவர்கள் பற்றிச் சொல்லப்படுபவை நம்ப முடியாதவை என வாதிடுவொரும் உண்டு. இலுமினாட்டிகள் இஸ்ரேலிய சொலமன் மன்னரின் அரண்மனையில் இருந்து  பெறப்பட்ட அற்புத சக்திகளைக் கொண்டுள்ளார்கள் என்பது சதிக் கோட்பாடாக இருக்கலாம். ஆனால் 13 செல்வந்தக் குடும்பங்கள் உலகை ஆட்டிப்படைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவை:
  1. அஸ்டர் குடும்பம் (The Astor Bloodline ) 2. பண்டி குடும்பம் (The Bundy Bloodline) 3. கொலின் குடும்பம் (The Collins Bloodline) 4. டியூபொண்ட் குடும்பம் (The DuPont Bloodline) 5. ஃபீரிமன் குடும்பம் (The Freeman Bloodline) 6. கெனடி குடும்பம் (The Kennedy Bloodline) 7. லீ குடும்பம் (The Li Bloodline) 8. ஒனாஸிஸ் குடும்பம் (The Onassis Bloodline) 9. ரொக்ஃபெல்லர் குடும்பம் (The Rockefeller Bloodline) 10. ரஸல் குடும்பம் (The Russell Bloodline) 11. வான் டுயான் (The Van Duyn Bloodline) 12. மெரொவிஜியன் குடும்பம் (The Merovingian Bloodline) 13. ரொத்சைல்ட் குடும்பம் (The Rothschild Bloodline)
இலுமினாட்டிகளில் ரொத்ஸ்சைல்ட் குடும்பமே உலகெங்கும் உள்ள மைய வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றது. தற்போது உலகெங்கும் 150இற்கு மேற்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளை அது கட்டுப்படுத்துகின்றது. அவற்றில் இரசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும் அடக்கம்.

கடன் கொடுத்துக் கலங்கடிக்கும் இலுமினாட்டிகள்
நாடுகளுக்கு நிதி தேவைப்படும் போது இலுமினாட்டிகளுக்கு சொந்தமான வங்கிகள் அவற்றிற்கு கடன் வழங்கி அதன் மூலம் அவற்றின் மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றன. உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் அமெரிக்க அரசின் மூலமாக இலுமினாட்டிகளின் கருவிகளாகச் செயற்படுகின்றன. ஒரு நாட்டிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது அந்த நாட்டின் திறைசேரி கடன் முறிகளை (bonds) விற்பனைசெய்யும் அந்த கடன் முறிகளை தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாங்கும். வாங்கிய அந்த கடன் முறிகள் அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும். மத்திய வங்கி அந்த வங்கிகளின் பெயரிலும் நிதி நிறுவனங்களின் பெயரிலும் விற்ற தொகைக்கு கணக்கு வைக்கப்படும்.   அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுத்தல் முதலான பல நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதற்கான நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சடித்து நாட்டில் புழக்கத்திற்கு விடும். இப்படித் தொடர்ச்சியாக ஒரு நாடு கடன் முறிகளை விற்பனை செய்யும் போது அவற்றை தொடர்ந்து வாங்கிக் குவிக்கும் வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அந்தக் கடன் முறிகளின் விலைகளைத் தீர்மானிக்கும். ஒரு நாட்டின் பெரும்பகுதியான கடன் முறிகளை ஓரிரு வங்கிகள் வாங்கும் நிலை ஏற்படும் போது அந்த ஓரிரு வங்கிகள் கடன் முறிகள் முழுவதையும் விற்பனை செய்வேன் என மிரட்ட முடியும். அப்படி விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமது பெருமளவில் வீழ்ச்சியடையும். அதனால் அந்த நாட்டின் மத்திய வங்கியை கடன் கொடுத்த வங்கிகளால் கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும்.

மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்த போர்கள் நடந்தன
2000-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா, கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை. இவற்றில் ஆப்கனிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உருவாக்கப்பட்டு அமெரிக்கப்படைகள் தாக்குதல்கள் செய்து அவற்றின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2017-ம் ஆண்டு ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மத்திய வங்கிகளைக் கொண்ட நாடுகளாக கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில் சிரியாவில் ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கின்றது. வட கொரியாவிற்கும் எதிராக விரைவிலும் ஈரானுக்கு எதிராக காலக்கிரமத்திலும் தாக்குதல்கள் செய்யப்பட்டு அங்கு ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.கியூபாவை ஓர் அமெரிக்க சார்பு நாடாக்கும் முயற்ச்சியை ஏற்கனவே பராக் ஒபாமா ஆரம்பித்து வைத்துவிட்டார். கியூபாவில் துரித மாற்றங்கள் ஏற்படாத படியால் அதன் மீது டொனால்ட் டிரம்ப் விசனமடைந்துள்ளார்.

ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வங்கிகள் பற்றிய விபரத்தை இந்த இணைப்பில் காணலாம்:

http://humansarefree.com/2013/11/complete-list-of-banks-ownedcontrolled.html

வங்கிகளைத் தமதாக்கிய வரலாறு
உலக நிதிச் சந்தை, பங்குச் சந்தை, நாணயச் சந்தை ஆகியவற்றை ரொத்ஸ்சைல்ட், ஜெபி மோஹன், ரொக்ஃபேல்லர் ஆகியோரின் குடும்பங்களே கட்டுபடுத்துகின்றன. இவற்றில் திட்டமிட்டு விலை ஏற்றங்களையும் இறக்கங்களையும் அவர்கள் செய்து அதற்கு ஏற்ப பங்குகளையும் கடன் முறிகளையும் நாணயங்களையும் அவர்கள் வாங்கியும் விற்றும் பெரும் செல்வம் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.  2007-ம் ஆண்டில் உருவான பொருளாதார நெருக்கடியில் இவர்களின் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படவில்லை, மாறாக அவற்றின் இலாபங்கள் அதிகரித்தன. இவர்களால் திட்ட மிடப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார விழ்ச்சி என வாதிடுவோரும் உண்டு.
ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தில் நிதி வரலாறுதான் வங்கியலின் வரலாறு எனச் சொல்லலாம். ஜேர்மனியில் மற்றவர்களிடம் தங்கத்தை வாங்கிக் கொண்டு அதற்கு பற்றுச் சீட்டுக் கொடுப்பதில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தவர் 1744-ம் ஆண்டு பிறந்த யூதரான மேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட். அவரிடம் இருந்து தங்கத்துக்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டோர் அவற்றைக் கொடுத்து தமக்கு வேண்டிய பொருட்களைக் கொள்வனவு செய்வர். தேவையான நேரத்தில் அப்பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்து ரொத்ஸ்சைல்டிடமிருந்து தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படித் தங்கத்தைப் பெறுவது குறைந்து சென்றது. அந்த அளவிற்கு பற்றுச் சீட்டுக்கள் தற்போதைய நாணயத் தாள்கள் போல் புழங்கப்பட தொடங்கின. இதனால் தங்கத்தைப் பெறாமலே ரொத்ஸ்சைல்ட் வட்டி பெற்றுக்கொண்டு தனது பற்றுச் சீட்டுக்களைக் கொடுக்கத் தொடங்கினார். இதுதான் வங்கிகள் இன்று தங்கம் இல்லாமல் நாணயத் தாள்களை அச்சடித்து அரசுகளின் திறைசேரிகளுக்கு பணம் கொடுக்கும் முறையின் உருவாக்கம். தங்கம் இல்லாமல் வட்டிக்குப் பற்றுச் சீட்டுக் கொடுக்கும் முறைமையால் ரொத்ஸ்சைல்ட் பெரும் பணம் சேர்த்தார். அவரது காலத்தில் யூதர்கள் சொத்துக்களை வாங்குவதை கிறிஸ்த்தவர்கள் ஆட்சி செய்த ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன. அதனால் யூதர்கள் தமது பணததை வட்டிக்கு கொடுக்க வேண்டிய நிலை உருவானது. அத்துடன் நாணயச் சுழற்ச்சி அவற்றின் பெறுமதி தொடர்பாக அவர்கள் சிறந்த அறிவைப் பெற்றனர்.
மேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட் தனது நான்கு மகன்களையும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான இலண்டன், பரிஸ், அம்ஸ்ரடம், ரோம் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி அங்கு நிதித்துறை வர்த்தகங்களை ஆரம்பிக்க வைத்தார். 19-ம் ஆண்டின் ஆரம்பத்தில்நெப்போலியனுக்கு எதிராக பிரித்தானியா போர் செய்த போது பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England பெருமளவு கடன் முறிகளை விற்பனை செய்தது. அதில் பெரும்பகுதியை ரொத்சைல்ட் குடும்பத்தினரே வாங்கினர். அதாவது பிரித்தானியாவிற்கு ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடன் வழங்கினர். இதைப் போலவே பிரான்சுக்கும் கடன் வழங்கினர். பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த ரொத்சைல்ட் குடும்பத்தினருக்கு போரின் இறுதிக் கட்டத்தின் போது பிரித்தானியா போரில் வெல்லும் என அறிந்திருந்தனர். பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England கடன் முறிகளை வாங்கியிருந்த மற்றச் செல்வந்தர்கள் போர் எப்படி முடிவையும் என்பதைப் பற்றி அறியாதிருந்தனர். போரில் பிரித்தானியா தோல்வியடைந்தால் அவர்கள் வாங்கிய கடன் முறிகளின் விலை குறைவடைந்து அவர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படலாம் என அவர்கள் அஞ்சியிருந்தனர். அதனால் அவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதை உணர்ந்து கொண்ட ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடமாகச் செயற்பட்டு தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்பனை செய்தனர். இதனால் பிரித்தானியா போரில் தோல்வியடையப் போகிறது என ரொத்சைல்ட் எதிர்பார்க்கின்றார் அதனால் அவர் கடன் முறிகளை விற்கின்றார் என நம்பி தாமும் தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்றனர். பலரும் விற்பனை செய்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை பெரும் வீழ்ச்சியைக் கண்டது. உடனே ரொத்சைல்ட் குடும்பத்தினர் எல்லாப் பிரித்தானியக் கடன் முறிகளையும் வாங்கினர். அவர்கள் அறிந்து வைத்திருந்தது போல் போரில் பிரித்தானியா வெற்றியடைந்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை அதிகரிக்க ரொத்சைல்ட்களின் செல்வம் பெருகியது. இதனால் Bank of Englandஐ நடத்தக் கூடிய வகையில் ரொத்சைல்ட் குடுபத்தைச் சேர்ந்தவர் ஆளுநர் சபையில் இடம்பெற்றார்.

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு
பிரித்தானியாவிலும் மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் செல்வம் திரட்டிய ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினர் அமெரிக்காவில் தமது கவனத்தைச் செலுத்தினர். உலக வங்கி வரலாற்றிலும் உலகப் பாராளமன்ற வரலாற்றிலும் மிக மோசமான சதியாகக் கருதப்பட வேண்டியது அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசேர்வின் உருவாக்கமாகும். அமெரிக்காவிற்கு ஒரு மத்திய வங்கி உருவாக்க வேண்டும் என்ற கருத்து முனவைக்கப்பட்ட போது ரொத்ஸ்சைல்ட், ரொக்ஃபெல்லர், ஜெபி மோகன் குடும்பத்தினர் அவற்றைத் தமக்குச் சொந்தமாக்கச் சதி செய்தனர். Fed என சுருக்கமாக அழைக்கப்படும் Federal Reserve என்னும் அமெரிக்காவின் Central Bankஐ ஒரு தனியார் அமைப்பாக அமெரிக்காவில் அமைக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினரே. அதற்காக அவர்கள் Jacob Henry Schiff  என்னும் யூதரைக் களமிறக்கினர்.

வரலாற்று காணாத சதி
1913- மார்ச் மாதம் அமெரிக்க அதிபராக வுட்றோ வில்சன் பதவி ஏற்றார். அவரை வெற்றி பெறச் செய்தவர்கள் முன்னணி வங்கிகளின் உரிமையாளர்கள். அதில் முதன்மையானவர் ரொத்சைல்ட். அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. . அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு -நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913 என்னும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா?  ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேற் சொல்லப்பட்ட 13 குடும்பங்களும் உலகில் தமது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றன. அவற்றின் இறுதி நோக்கம் முழு உலகையும் முதலில் தமது கைப்பொம்மைகளின் ஆட்சியின் கீழும் பின்னர் தமது ஆட்சியின் கீழும் கொண்டு வருவதே என்பது சதிக்கோட்பாடா இல்லையா என்பது இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் தெரிந்துவிடும். உலக வரலாற்றில் பத்து ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலமாகும்.

Tuesday, 3 October 2017

மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?

முதலாம் உலகப் போரில் தரைப்படைகளின் நகர்வுகள் முக்கிய பங்கு வகித்தன. அதற்குத் துணையாகத்தான் மற்றப் படை நடவடிக்கைகள் அமைந்தன. போர்விமானங்கள் ஆரம்ப நிலையில் இருந்தன. இரண்டாம் உலகப் போரில் தாங்கிகளும் ஆட்டிலறிகளும் முக்கிய பங்கு வகித்தன. இரண்டாம் உலகப் போரின் போதே நீர்மூழ்கிக் கப்பல்களும் களங்களில் இறக்கப்பட்டன. 1950முதல் 1953வரை நடந்த கொரியப் போரில் முதல் முறையாக வானில் விமானங்கள் போரிட்டுக் கொண்டன. 2003-ம் ஆண்டு நடந்த ஈராக் போரில் வான் படையும் தொலைதூர ஏவுகணைகளுமே முக்கிய பங்குகள் வகித்தன. மூன்றாம் உலகப் போரில் முதல் களத்தில் இறங்கவிருப்பது இணையவெளிப் படைப்பிரிவாகும். செயற்கை விவேகம் மூன்றாம் உலகப் போரில் பயன்படுத்தப்படும்.

கணினிகளின் போர்
மூன்றாம் உலகப் போரில் இணையவெளிப் படைப்பிரிவுகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படும். எதிரிநாட்டின் கணினித் தொகுதிகளை ஊடுருவி அழிக்கும் செயல் பரவலான சேதங்களை ஏற்படுத்தும். மருத்துவமனைகள், போக்குவரத்து, மின்வழங்கல், எரிபொருள் வழங்கல், உணவு விநியோகம் எனப் பலதரப்பட்ட குடிசார் சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும். போர்விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்படும். தகவல் பரிமாற்றம் மற்றும் ஊடகங்கள் செயலிழக்கச் செய்யப்படும். மூன்றாம் உலகப் போரில் லேசர் படைக்கலன்களும் மைக்குறோவேவ் படைக்கலன்களும் பாவிக்கப்படும். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் பெரும் அழிவுகளை இந்தப் படைக்கலன்கள் ஏற்படுத்தும். முப்பரிமாண அச்சுக் கலையால் படைக்கலன்கள் குறைந்த செலவிலும் குறுகிய நேரத்திலும் உருவாக்கப்படும். செயற்கை மனிதர்கள் களமிறக்கப்படுவர்.

எப்போது ஆரம்பமாகும்?
உடனடியாக மூன்றாம் உலகப் போர் ஆரம்பவாதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவானவையே. அப்படி உடனடியான மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால் அது வட கொரியாவில் ஆரம்பமாகலாம் எனப் பலர் கருதுகின்றனர். அதில் சீனாவும் இரசியாவும் இணைந்து செயற்படலாம் எனவும் சொல்கின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பெரும்பாலும் இரசியா 2020-ம் ஆண்டின் முன்னர் ஒரு பெரும் போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. இரசியா ஒரு போரை ஆரம்பிப்பதாயின் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக் கூடியவகையில் நேட்டோவில் இரசியாவின் எல்லையில் உள்ள நாடுகள் இணைக்கப்பட்டால் இரசியா அதைத் தடுப்பதற்காகச் செய்யும் படை நடவடிக்கைகளால் போர் மூண்டு அது நேட்டோப் படைகளுக்கும் இரசியாவிற்கும் இடையில் பெரும் போராக மாறலாம்.                                                                       
எங்கு போர் நடக்கும்?
இரசியாவின் கிழக்கு எல்லை, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், வட கொரியா ஆகியவை மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகக் கூடிய ஆபத்தான இடங்களாக இருக்கின்றன. மூன்றாம் உலகப் போர் 1. அமெரிக்கா உலகெங்கும் தன் பிடியைத் தளர்த்தாவிடில் ஏற்படும். 2. இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை முன்னள் சோவியத் ஒன்றிய நாடுகளில் மீண்டும் ஏற்படுத்த முயன்றால் ஏற்படும். 3. சீனாவின் விரிவாக்கம் இந்தியா, கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், மத்திய ஆசியா ஆகியவற்றின் கடல் மற்றும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க முயன்றால் ஏற்படலாம். வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணைப் பரிசோதனை ஒரு உலகப் போராக வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் வட கொரியாவுடனான ஒரு போர் மோசமான மனித உயிரழப்புக்களை ஏற்படுத்தும். வட கொரியா அணுக்குண்டை வைத்துக் கொண்டு ஒரு மரபு வழிப் போரை மட்டும் நடத்தாது. அதன் மரபுவழிப் படைக்கலன்கள் மிகவும் பழமையானவை.

இரசியா மற்ற நாடுகளை ஆக்கிரமித்து தன்னை பெரிய நாடாக்கியுள்ளது என்ற குற்றச் சாட்டு உண்டு. 1900-ம் ஆண்டின் முன்னர் இரசியா நாள் ஒன்றிற்கு சராசரியாக ஐம்பது சதுர மைல் நிலபரப்பை ஆக்கிரமித்தது. பொதுவுடமைப் புரட்சிக்குப் பின்னரும் அது தொடர்ந்தது. சோவியத் ஒன்றியம் என்னும் பெயரில் அது நடந்தது.

இரசியாவின் கிழக்கு கறுக்கின்றது.
2017 செப்டம்பரில் இரசியாவும் பெலரஸும் இணைந்து Zapad-2017 என்னும் பெயரில் ஒரு  போர்ப்பயிற்ச்சியை நடத்தியது. அதே வேளை நேட்டோவில் இல்லாத சுவீடனும் பின்லாந்தும் ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரொரா-17 என்னும் பெயரில் ஒரு போர்ப்பயிற்ச்சியை நடத்தின. இது இரசியாவிற்குக் கிழக்குப் புறமாக ஓர் ஆதிகக்ப் போட்டி கடுமையாக வளர்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. அதிலும் போல்ரிக் கடலின் நடுவில் உள்ள சுவீடனுக்குச் சொந்தமான கொட்லண்ட் தீவை இரசியா ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் சுவீடனுக்கு உண்டு. மூன்றாம் உலகப் போர் இரசியாவின் கிழக்குப் புறமான விரிவாக்கத்தால் உருவாகலாம். இரசியாவின் கிழக்காக உள்ள நாடுகள் நேட்டோவில் இணைந்தமையை தற்போது இரசியா கடும் விசனத்துடன் பார்க்கின்றது.

இக்கட்டான நிலை இரசியாவிற்கு வேண்டாம்
இரசியாவின் பாதுகாப்பு அரண்களில் முதன்மையானது அதன் மிகப் பெரிய நிலப்பரப்பாகும் அந்தப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கக் கூடிய படை எந்த நாட்டிடமும் இல்லை. அதன் இரண்டாவது பாதுகாப்பரண் இரசியாவில் நிலவும் கால நிலை. நெப்போலியனையும் ஹிட்லரையும் இரசியா தோற்கடிக்க உதவியது இரசியாவின் கால நிலையாகும். இரசியாவின் கிழக்கு எல்லையில் பின்லாந்து, எஸ்த்தோனியா, லித்துவேனிய, லத்வியா, பெலரஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. அவற்றில் மேற்குலக நாடான பின்லாந்து நேட்டோ கூட்டமைப்பில் இல்லை. சுவீடன் நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகின்றது. 2018-ம் ஆண்டு சுவீடனில் நடக்கவிருக்கும் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெற்றால் சுவீடன் நேட்டோவில் இணைவது நிச்சயம். அது நேட்டோவில் இணைந்தால் பின்லாந்தும் அதைத் தொடரலாம். இது வட துருவத்தில் இரசியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என விளடிமீர் புட்டீன் கருதலாம். எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. பெலரஸை தனது வட்டத்துக்குள் தொடர்ந்து வைத்திருக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. அங்கு நடக்கும் சர்வாதிகார ஆட்சி இரசியாவிற்கு வாய்ப்பாக இருக்கின்றது.

கவசம் வேண்டும்
இரசியாவிற்கான கவசப் பிரதேசம் தேவை என்பதில் விளடிமீர் புட்டீன் உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு கலினின்கிராட் துறைமுகத்துக்கான தரைவழிப் பாதை தேவை. அதற்கு அது லித்துவேனியாவை நேட்டோவில் இருந்து விலகச் செய்ய வேண்டும் அல்லது அதை ஆக்கிரமிக்க வேண்டும். அந்த ஆக்கிரமிப்பு நேட்டோவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான போரைக் கொண்டுவரும் என நேட்டோ நாடுகள் பல தடவைகள் தெரிவித்து விட்டன. கலினின்கிராட் நகரமும் துறை முகமும் இரசியாவசம் இருப்பதற்கு போலந்து குறைந்தது ஒரு நடுநிலை நாடாக இருக்க வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான போலாந்து இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கும் ஒரு நாடாகும். லித்துவேனியாவின் நெமுனாஸ் நதியூடாக (Nemunas  or Neman river) இரசியா போல்ரிக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டலாம். கலினின்கிராட்டையும் பாதுகாக்கலாம். ஒரு போர் மூலமே இரசியாவால் போலந்தையும் லித்துவேனியாவையும் தனது வலயத்தினுள் கொண்டு வர முடியும். இரசியர்கள் தாம் எப்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக நம்புகின்றார்கள். அதனால் நேட்டோப் படைகளிற்கும் இரசியாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு எனச் சொல்ல முடியாது.

சில நாடுகளில் இரத்தக் களரி ஏற்படலாம்
மூன்றாம் உலகப் போரில் இரசியப் படைகளை ஐதாக்கவும் அவர்களை அகலக் கால்வைக்க விடுவதும் நேட்டோப்படையினரின் தந்திரோபாயமாக இருக்கும். இரசியா நோர்வே, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளைக் கூடக் கைப்பற்ற முதலில் அனுமதிக்கப்படலாம். ஜேர்மனியின் கிழக்குப் பகுதியையும் இரசியா ஆக்கிரமிக்கலாம். பின்னர் நேட்டோப் படையினர் தமது ஏவுகணைகள் மூலம் இரசியப் படைகள் மீதும் இரசியாவின் கேந்திர முக்கியத்துவ நிலைகள் மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டு முறியடிப்பார்கள். இரசியா இந்த நாடுகளைக் கைப்பற்ற எடுக்கும் காலத்தில் அமெரிக்க தனது முழுமையான படை நகர்வையும் வழங்கல் வசதிகளையும் அட்லாந்திக் மாக்கடலைத் தாண்டிக் கொண்டு வந்து சேர்த்துவிடும். பிரித்தானியா ஏற்கனவே ஆங்கிலக் கால்வாய்க்குக் கீழாகச் செல்லும் பாதையூடாக தனது போர்த் தாங்கிகளையும் தளபாடங்களையும் கொண்டு செல்லும் பயிற்ச்சியைச் செய்து முடித்துள்ளது. பிரித்தானியாவும் இரசியப் படைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் தனது படைகளை நகர்த்தி பிரெஞ்சும் படைகளுடன் இணைந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாக்கத் தயாராகிவிடும்.

உதவிகளும் தொழில்நுட்பங்களும்
உலகின் மற்ற நாடுகளுக்கு உதவி செய்யும் பட்டியலில் அமெரிக்கா முதலாம் இடத்திலும் பிரித்தானியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்த உதவிகள் மூலம் அவர்கள் தமக்கு வேண்டியவர்களைப் பல நாடுகளில் ஆட்சியின் வைத்திருக்கின்றனர். உலக அரங்கில் மேற்கு நாடுகளின் செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருப்பதும் பல நாடுகளை அவர்கள் சுரண்டுவதற்கு வசதியாக இருப்பதும் இந்த உதவிகளே. ஒரு போர் என்று வரும் போது இரசியாவின் பின்னால் நிற்கும் நாடுகள் மிகக் குறைவே. உலகின் பத்து உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்பது அமெரிக்க நிறுவனங்களாகும். அதனால் ஒரு போர் என்று வரும் போது உயர் தொழில்நுட்பங்களைப் பாவிக்கக் கூடிய திறன் அமெரிக்காவிடமே இருக்கின்றது.

சீனாவிற்கு காசு முக்கியம்
2020-ம் ஆண்டிற்கும் 2025-ம் ஆண்டிற்கும் இடையில் மூன்றாம் உலகப் போர் நடந்தால் அதில் சீனா பங்கு பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. சீனா தன்னை பொருளாதார அடிப்படையிலும் படைத்துறையிலும் உலகின் முன்னணி நாடாக 2030-ம் ஆண்டு மாற்றும் திட்டத்துடன் செயற்படுகின்றது. தற்போதைய சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த நிலையும் அதன் உள்ளகக் கடன் பிரச்சனைகளும் அது ஒரு போரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அடித்துச் சொல்லலாம். சீனா அமைதியான எழுச்சி என்ற பதத்தை பல பத்து ஆண்டுகளாகப் பாவித்து வந்தது. தற்போது அதை மாற்றி அமைதியான வளர்ச்சி எனப் பெயரிட்டுள்ளது. சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் பார்க்க அமெரிக்கர்களின் தனிநபர் வருமான எட்டு மடங்காகும். இந்த இடைவெளியைக் குறைக்காமல் சீனா ஒரு போரில் ஈடுபட மாட்டாது. சீனா படைத்துறைக்குச் செய்யும் செலவிலும் பார்க்க அமெரிக்கா நான்கு மடங்கு செலவு செய்கின்றது. இந்த இடைவெளியை நிரப்ப சீனா தனது பொருளாதாரத்தில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் கவனம் செலுத்த வேண்டும். 


2030-ம் ஆண்டின் பின்னர் சீனா போரில் இறங்கலாம்
2030-ம் ஆண்டின் பின்னர் சீனாவின் விரிவாக்கம் தீவிரமடையும். அதற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைமையில் சில நாடுகள் சீனாவின் விரிவாக்கத்தைத் தடுக்க முற்படும் போது ஒரு போர் உருவாகலாம். அந்தப் போரில் இரசியா சீனாவுடன் இணைந்தால் அது ஒரு போராக உருவெடுக்க வாய்ப்புண்டு. அதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இணையும் போது  அது உலகப் போராகும். சீனா தனது ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளையும் வலிமை மிக்க நீர்மூழ்கிக் கப்பல்களையும் பாவிக்கும் 2030-ம் ஆண்டு சீனாவிடம் ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் இருக்கும். சீனாவின் செய்மதிகளில் இருந்து எதிரி நாட்டு செய்மதிகளை நோக்கி ஏவுகணைகள் வீசி அழிக்கும் முயற்ச்சி மேற்கொள்ளப்படலாம். சீனாவின் விமானப்படை 2030இல் அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடியதாக அமையலாம். லேசர் படைக்கலன்கள் பரவலாகப் பாவிக்கப்படலாம். 

இந்தியா விலகி இருந்தால் கோடிகள் குவியும்
மூன்றாம் உலகப் போரில் இந்தியா இரசியாவுடனும் சீனாவுடனும் கூட்டுச் சேரலாம் அல்லது நேட்டோப் படையுடன் இணைந்து செயற்படலாம். எந்த ஒரு அணியிலும் இணையாமல் தனித்திருந்து தனது படைக்கலன்களையும் உதிரிப்பாகங்களையும் போர்புரியும் நாடுகளுக்கு வழங்கலாம். இதனால் பெரும் வருமான அதிகரிப்பைப் பெற்று போர் முடிவில் இந்தியா ஒரு செல்வந்த நாடாக மாறலாம்.. சீனாவுடனான எல்லைத் தகராற்றை இந்தியா சுமூகமாகத் தீர்த்தால் மட்டுமே இவை சாத்தியம். சீனாவின் வட கிழக்கு மாநிலங்களை சீனா அபகரிக்கும் எண்ணத்தை கைவிடுமா?


இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்
ஐரோப்பாவில் மிகக் கொடுமையான இன அழிப்பு யூதர்களுக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் நடந்தது போல் ஐரோப்பாவின் உள்ள இஸ்லாமியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விரட்டப்பட்டுவார்கள். 2065-ம் ஆண்டளவில் உலகில் இஸ்லாமியர்கள் தொகை கிரிஸ்த்தவர்களின் தொகையிலும் பார்க்க அதிகரித்துவிடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் அவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அச்சம் ஒன்று ஏற்கனவே உருவாகிவிட்டது. அது அடுத்த பத்து ஆண்டுகளில் இன்னும் மோசமாகலாம். அதனால் பல ஐரோப்பிய இனவாதிகள் இதற்கென்றே ஒரு போரை உருவாக்கி ஐரோப்பாவில் உள்ள ஆபிரிக்கர்களையும் ஆசியர்களையும் விரட்ட வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்ற கொள்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி நடக்கும் இனக்கொலையின் பின்னர் இஸ்லாமியர்கள் தங்களுக்கு இடையிலான ஒற்றுமை பற்றிச் சிந்திப்பார்கள். 22-ம் நூற்றாண்டில் அவர்களும் வல்லரசுகளாக உருவெடுப்பார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...