Wednesday, 6 September 2017

ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் ஆண்டுகள் பதினாறு

பராக் ஒபாமா பதவிக்கு வரும் போது ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறும் என்ற வாக்குறுதியுடன் வந்தார். ஆனால் வெளியேறவில்லை. ஆப்கானில் 8,400 அமெரிக்கப்படைகள் மட்டும் இருக்கின்றது என்றார் ஆனால் உண்மையில் 12,000 இற்கும் மேற்பட்ட படையினரை ஒபாமா அங்கு விட்டுச்சென்றார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்க சார்பு அரசு உருவாக்கப்பட்ட பின்னர் அமெரிக்கப் படைகளுக்கு அரசுறவியல் கவசம் (diplomatic immunity) வழங்கப்பட்டது. டொனால்ட் டிரம்பும் தேர்தல் பரப்புரையின் போது ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கப்படும் என்றார். ஆனால் பல மாதங்களாக வெள்ளை மாளிகையில் இரகசியமாக நடந்த விவாதத்தின் பின்னரும் காம்ப் டேவிட்டில் அமெரிக்க “போர் அமைச்சரவை” நடத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னரும் ஆப்கானிஸ்த்தானிற்கு அதிக அமெரிக்கப் படையினர் அனுப்பப்படுவர் என டிரம்ப் ஓகஸ்ட் மாதம் 21-ம் திகதி அறிவித்தார்.

என்ன வளம் இல்லை அந்தத் திருநாட்டில்
ஆப்கானிஸ்த்தானில் ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் இருப்பதாக 2010-ம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவிற்கு 600 ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வழங்கள் ஆப்கானிஸ்த்தானில் உள்ளது எனவும் மதிப்பிடப்பட்டது. சிலர் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும் சொல்கின்ரனர். சிலர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானின் கனிம வள இருப்பு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். அண்மைக் காலங்களாக டிரம்பும் ஆப்கானிஸ்த்தான் அதிபர் அஸ்ரப் கானியுடன் அமெரிக்க கனிம வள அகழ்வு நிறுவனங்களை ஆப்கானிஸ்த்தானில் அனுமதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையை இரகசியமாக நடத்தினார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்களில் முக்கியமானவை இரும்பும் செப்பும் ஆகும்இரும்பின் பெறுமதி 420பில்லியன் டொலர்கள், செப்பின் பெறுமதி 240பில்லியன்கள் என்றும் கருதப்படுகின்றது. 2010-ம் ஆண்டு உலகச் சந்தையில் இருந்த விலையிலும் பார்க்க இப்போது அவற்றின் விலைகள் உலகப் பொருளாதார மந்த நிலையினால் 30 விழுக்காடு குறைந்திருக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆப்கானிஸ்த்தானின் rare-earth minerals அதன் ஹெல்மண்ட் மாகாணத்திலேயே இருக்கின்றன. அந்த மாகாணம் தலிபான் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

ஐ எஸ் அமைப்பின் புகலிடமாகலாம்.
ஈராக்கிலும் சிரியாவிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஐ எஸ் அமைப்பினர் இனி ஆப்காலிஸ்த்தானை நோக்கி நகரலாம். அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறினால் தலிபான் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாகலாம் என்ற கரிசனையும் அமெரிக்காவிற்கு உண்டு.

ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற ஆப்கான்
கிறிஸ்த்துவிற்கு 330 ஆண்டுகளுக்கு முன்னர் மகா அலெக்சாண்டர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தார். அது நடந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னர் மொங்கோல் அரசர் ஜென்கிஸ் ஆப்கானை ஆக்கிரமித்தார். 1839இல் தொடங்கி பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்து பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தது அப்போர்கள் நடந்த காலம் 80 ஆண்டுகளாகும். இறுதியில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த இந்தியாவை நோக்கி ஆப்கானிஸ்த்தான் படை எடுத்தது. அதை முறியடிக்க முதன்முதலாக வான் படைத் தாக்குதல் ஆசியாவில் நடைபெற்றது. இறுதியில் பிரித்தானியா  தனது ஆப்கானை ஆக்கிரமிக்கும் கொள்கையைக் கைவிட்டது. ஆப்கான் ஆக்கிரமிக்கவும் கைப்பற்றி வைத்திருக்கவும் கடினமான நாடு என்ற எண்ணம் உலகெங்கும் பரவியது.

போனது சோவியத் வந்தது நேட்டோ
சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானைக் கைப்பற்றினர். அங்கு அல் கெய்தாவும் நிலைகொண்டிருந்தது. ஆப்கானிஸ்த்தானில் உள்ள கனிம வளமும் அதை ஈரன் தன் வசமாக்கலாம் என்ற கரிசனையும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானை 2001 ஒக்டோபரில் ஆக்கிரமிக்க வைத்தன. இப்படி ஓர் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கவே இரட்டைக் கோபுரத் தாக்குதல் செய்யப்பட்டது என சில சதிக்கோட்பாட்டாளர்கள் சொல்கின்றார்கள்

மேற்கு நாடுகளு பாதகமான உலக நிலைமை
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளுக்கு சாதகமாக உலக நிலை இருக்கவில்லை. ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரபு வசந்தந்தை மேற்கு நாடுகளுக்கு ஏற்றபடி மாற்ற முடியவில்லை, கிறிமியாவை இரசியா மீளவும் தன்னுடன் இணைத்தமையைத் தடுக்க முடியவில்லை, ஈரானில் ஆட்சி மாற்றம் எற்படுத்த முடியவில்லை, வட கொரியாவைச் சமாளிக்க முடியவில்லை, தென் சீனக் கடலில் சீனாவின் செயற்கைத் நிர்மாணத்தையும் அதை படைத்துறை மயமாக்குவதையும் தடுக்க முடியவில்லை. இவை போதாது என்று பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து பாத்து ஆண்டுகளாக விடுபட முடியவில்லை. அமெரிக்காவைப் பொறுத்த வரை அது 2001-ம் ஆண்டு ஆக்கிரமித்த ஆப்கானிஸ்த்தான் பிரச்சனை 16 ஆண்டுகளாக இழுபடுகின்றது.

கௌரவ வெளியேற்றம்
கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கா ஆப்கானில் இருந்து ஒரு கௌரவமான வெளியேற்றத்துக்கான சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருந்தது. 2011-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானில் ஒரு இலட்சம் படையினர் இருந்தனர். அப்போது கூட அமெரிக்காவால் ஒரு கௌரவமான முடிவை எட்டி அங்கிருந்து கௌரவமாக வெளியேற முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானை யார் தலையிலாவது கட்டி விட வேண்டும் என்ற நோக்கம் கூட நிறைவேறவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இந்தியாவின் அதிகரித்த ஈட்டுபாட்டை அமெரிக்க்கா விரும்பியது. ஆனால் அது பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவை அதிகரித்தது. சீனா ஆப்கானிஸ்த்தானைப் பொருளாதார ரீதியாக மட்டும் சுரண்ட முயல்கின்றது. தற்போது அமெரிக்காவின் ஆப்கானிஸ்த்தான் நிலைப்பாட்டுக்கு சரியான உதாரணம் புலிவால் பிடித்த கதைதான். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறினால் தற்போது அதை முழுமையான தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் காத்திருக்கின்ரது. ஈரானின் ஆப்கானிஸ்த்தான் பக்கமான விரிவாக்கத்திலும் பார்க்க அரபு நாடுகள் பக்கமான விரிவாக்கத்தில்தான் சவுதி அரேபியா அதிக கரிசனை காட்டுகின்றது. ஈரானை விட்டால் இரசியாவும் மீண்டும் ஆப்கானிஸ்த்தானில் தனது கால் வைக்க தயங்க மாட்டாது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதையில் ஆப்கானிஸ்த்தானும் அவசியமான ஒரு பிரதேசமாகும்.

மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றம்.
அமெரிக்கப் படைத்துறை ஆப்கானிஸ்த்தானில் தமது எண்ணப்படி செயற்படும் அதிகாரத்தை முன்பு பராக் ஒபாமாவிடம் கோரியிருந்தது. அதை ஒபாமா மறுத்திருந்தார். ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை டிர்ம்ப் வழங்கியுள்ளார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் நலன்கள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு தரப்பினருக் கலந்து ஆலோசித்துள்ளனர். அந்த நலன்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட உபாயம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் மற்றப் படைத் தளபதிகளிலும் பார்க்க அதிக காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஜெனரல் ஜோன் நிக்கொல்சனைப் (Gen. John W. Nicholson Jr) பதவி நீக்கம் செய்வது பற்றியும் அமெரிக்க அதிபர் டிர்ம்ப் கருதியிருந்தார். தற்போது அவரின் நீண்ட நாள் வேண்டுகோளை டிரம்ப் நிறைவேற்றியுள்ளார். ஜெனரல் ஜோன் நிக்கொல்சன் மற்றத் தளபதிகளிலும் பார்க்க வித்தியாசமாகச் செயற்படுகின்றார். எல்லைகளற்ற மருத்துவர்களின் மருத்துவ மனையில் அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சால் இறந்தவர்களின் குடும்பத்தினரை தனது மனைவியுடன் சென்று சந்தித்து மன்னிப்புக் கோரி ஆறுதல் கூறினார். ஆப்கானிஸ்த்தானில் தலிபான்களை ஒழிப்பது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என அவர்களை நம்பவும் வைத்தார். தனது உணர்ச்சிகளைக் கொட்டிக் குவித்து அந்தச் சந்திப்பை மிகவும் உணர்வுபூர்வமானதாகவும் நடக்க வைத்தார். கொல்லப்பட்ட ஒருவருக்கு ஆறாயிரம் டொலர்களும் காயப்பட்ட ஒருவருக்கு மூவாயிரம் டொலர்களும் அமெரிக்காவால் கொடுக்கப்பட்டு ஒரு மோசமான போர்க்குற்றம் மூடி மறைக்கப்பட்டது.

பாக்கிஸ்த்தான் இரட்டை வேடம்
பாக்கிஸ்த்தான் இரட்டை வேடம் என நம்பும் டிரம்ப்
ஆப்கானிஸ்த்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உதவிகள் செய்து கொண்டே ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் பாக்கிஸ்த்தான் உதவி வருகின்றது என டிரம்ப் உறுதியாக நம்புகின்றார். பாக்கிஸ்த்தான் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துகின்றார். பாக்கிஸ்த்தானின் நிலைப்பாடு என்று சொல்லும் போது பாக்கிஸ்த்தானில் பல தரப்புக்கள் உண்டு. பாக்கிஸ்தானில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பாக்கிஸ்த்தான் படைத்துறை, பாக்கிஸ்த்தானிய உளவுத்துறைம் ஆகியவை மட்டுமல்ல பாக்கிஸ்த்தானில் தமக்கென நிலப்பரப்புக்களை வைத்திருக்கும் பல்வேறுபட்ட தீவிரவாத அமைப்புக்கள் ஆகியவையே அவையாகும். 2017-08-30-ம் திகதி பாக்கிஸ்த்தானுக்கு 255மில்லியன் டொலர்கள் படைத்துறை உதவியை வழங்க முன்வந்த அமெரிக்கா அதற்கான நிபந்தனைகளையையும் முன்வைத்தது. ஆப்கானிஸ்த்தானுக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே முக்கியமான நிபந்தனையாகும். 2002-ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு 33பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. பாக்கிஸ்த்தான் தலிபானுக்கும் ஹக்கானிக்கும் வழங்கும் உதவிகள் அண்மைக்காலங்களாக அமெரிக்காவை கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் 2017 ஓகஸ்ட் மாத இறுதியில் பாக்கிஸ்த்தான் தீவிரவாத அமைப்புக்களுக்குச் செய்யும் உதவிகள் அமெரிக்காவை அதன் பொறுமையின் எல்லைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர். ஆனால் அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு உதவி வழங்குவதும் எச்சரிக்கை விடுப்பதும் ஒரு தொடர்கதையாக இருக்கின்றது. 2011-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானுக்குப் பயணம் செய்த அப்போதைய வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் உங்கள் பின்வளவில் பாம்பை வைத்துக் கொண்டு அது உங்கள் அயலவரைக் கடிக்காது என எதிர்பார்க்காதீர்கள் என்றார்.

ஆப்கான் மக்களுடன் ஒத்துழைப்பு
ஆப்கானிஸ்த்தானின் அரசியலமைப்பில் 14 இனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி ஓர் அரசை உருவாக்குவது மிகவும் சிரமமான ஒன்று என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனமாக பஷ்த்துனியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 42 விழுக்காட்டிலும் அதிகமாகும். ஆப்கானிஸ்த்தானில் இருந்து இந்தியாவிற்கு சென்று குடியேறிய பஸ்த்துனியர்களே இந்தி திரைப்படவுலகில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.

தலை சாயாத தலிபான்
16 ஆண்டுகளாக நோட்டோப் படையினர் உலகின் தலைசிறந்த விமானங்கள் மூலம் பல விதமான குண்டுகளை வீசியும் தரைவழிப் படைநகர்வுகளை தலைசிறந்த கவச வண்டிகள் துணையுடன் மேற்கொண்டும் தலிபான் அழிக்கப்படாமல் இருக்கின்றது. 2001-ம் ஆண்டு ஒக்டோபரில் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் தலிபானினதும் அல் கெய்தாவினதும் பல நிலைகளை தாக்கி அழித்து அவற்றைத் தலைநகர் காபூலில் இருந்து விரட்டின. மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய அரசு பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. ஒசாமா பின்லாடனைப் பிடிப்பது முக்கிய பணியாகியது. அதற்காக அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 2001 டிசம்பரில் 2500 ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் அது 9700 ஆக உயர்ந்தது. 2004-ம் ஆண்டு தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலிபானால் பாடசாலை செல்லத் தடை செய்யப்பட்ட பெண்கள் பல இலட்சம் பேர் பாடசாலைக்குத் திரும்பினர். பல தலிபான்கள் பாக்கிஸ்த்தானில் புகலிடம் தேடிக்கொண்டனர். அங்கிருந்து தமது தாக்குதலகளை நேட்டோப் படையினர் மீது தொடுத்தனர். அமெரிக்கப் படையினரி எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்தது. ஆப்கானிஸ்த்தானின் முழுப்பாதுகாப்பையும் நேட்டோப்படையினர் 2006-ம் ஆண்டு பொறுப்பேற்றனர். அமெரிக்கப்படை 30,000 ஆக உயர்ந்தது. 2008-ம் ஆண்டு நேட்டோவின் கூட்டுப் படைத்தளபதி அட்மிரல் மைக் முலன் நாங்கள் வெற்றி பெறவில்லை என அறிவித்தார். போராளிக் குழுக்களைப் பொறுத்தவரை தோற்கடிக்கப்படாமல் இருப்பது பெரு வெற்றி என்ற ஹென்றி கிஸ்ஸிங்கரின் கருத்தை இங்கு குறிப்பிட வேண்டும். 2009-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பராக் ஒபாமா தனது கொள்கை தலிபான்களைத் தோற்கடிப்பதல்ல ஆப்கான் மக்களைப் பாதுகாப்பதே என்றார். அவர் மேலும் படைகளை அங்கு அனுப்பினார். 2010-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாகியது. 2011 மார்ச் மாதம் பின் லாடன் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொல்லப்பட்டார். தலிபான்கள் நேட்டோப் படைகளை விட்டு ஆப்கான் அரச படைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஒபாமா தனது படைகளை விலக்கும் போது தாம் ஆப்கானைக் கைப்பற்றும் நோக்குடனேயே அவர்கள் அதை மேற்கொண்டனர். இதனால் ஒபாமா முழுமையாக படைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தில் இருந்து 8400 ஆகக் குறைக்கப்பட்டது. 2017 ஜனவரி ஆட்சிக்கு வந்த டிரம்ப் ஆப்கான் அரச படையினருக்கு பயிற்ச்சி கொடுக்கவும் பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்களைச் செய்யவும் என மேலதிகமாக 4000 படையினரை அனுப்பவிருப்பதாக 2017 ஓகஸ்ட்டில் முடிவெடுத்தார். படைகளை விலக்காமல் மேலும் படையினரை அனுப்புவது அமெரிக்காவின் தோல்வியை ஒத்தி வைப்பதாகும் என சில படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் நாங்கள் வெல்ல முடியாது அதே வேளை தலிபானை வெல்ல விடமாட்டோம் என்றார்.

ஆப்கானும் சிரியா போலாகுமா?
இரசியாவும் ஈரானும் சிரியாவிலும் ஈராக்கிலும் தலையிட்டது போல் ஆப்கானிஸ்த்தானில் தலையிட வாய்ப்புக்கள் உண்டு. அது அந்த இரு நாடுகளில் செய்தது போல வெளிப்படையான தலையீடாக இல்லாமல் மறைமுகத் தலையீடாக இருக்கும். ஏற்கனவே இரசியா இரகசியமாக தலிபான்களுக்கு படைக்கலன்கள் வழங்குகின்றது என நம்பப்படுகின்றது. தனது நவீன படைக்கலன்களை சிரியாவில் பரீட்சித்துப் பார்த்த இரசியாவிற்கு இன்னும் ஒரு வித்தியாசமான பரீட்சார்த்தக் களமாக ஆப்கான் இருக்கின்றது. தனது படையினருக்கு தொடர்ச்சியான களமுனைப் பயிற்ச்சி வழங்கிக் கொண்டிருக்க அமெரிக்கா விரும்புகின்றது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஆப்கான் மக்களுக்கு இப்போது விமோசனம் இல்லை.


Friday, 1 September 2017

அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா?

அமெரிக்காவில் ஆட்சிமுறை (administration) எனப்படுவது பதவியில் உள்ள அதிபர் நாட்டை நடத்த தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் முறையாகும். அமெரிக்க அரசு என்பது அதன் அதிபர், அதன் பாரளமன்றம், அதன் நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டது. ஆனால் அமெரிக்காவின் பல உளவுத் துறைகள் ஆட்சியில் மறைமுகமாகப் பெரும் பங்கு வகிக்கின்றது. அமெரிக்காவின் அமைச்சரவை என்பது அதிபர், துணை அதிபர், 14 செயலர்கள் (secretaries), சட்டமா அதிபர் ஆகியோரைக் கொண்டது. அமெரிக்காவில் அமைச்சர்கள் செயலர்கள் என்றே அழைக்கப்படுவர். 2015-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்த போது அவருக்கு அமெரிக்க ஆட்சி முறை பற்றித் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியவர்கள் இப்போது அவருக்கு தெரியாது என்கின்றனர்.

மீண்டும் 19-ம் நூற்றாண்டு
அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிபர் தலைமைக் கொள்கை வகுப்பாளராகச் செயல்படுவது வழக்கமாக இருந்தது. அவரது கொள்கைக்கு ஏற்ப பாராளமன்றம் சட்டங்களை உருவாக்கும். அமைச்சர்கள் அவரது கொள்கைக்கு ஏற்ப நாட்டை நடத்துவார்கள். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கப் பாராளமன்றமே கொள்கை வகுக்கும் வேலைகளைச் செய்ய அதிபர் தன் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து அக் கொள்கைகளுக்கு ஏற்ப வழிநடத்தினார். டிரம்ப் அமெரிக்க ஆட்சிமுறையை 19-ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்றார்.

அரசுறவியல் அனுபமில்லாத டிரம்ப்
அமெரிக்க அதிபரின் வதிவிடமும் பணிமனையுமான வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரும் அவரது இருபதிற்கும் மேற்பட்ட ஆலோகர்களுமே அமெரிக்க ஆட்சிமுறையின் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபரின் ஆலோசகர்கள் அடிக்கடி பதவி விலகப்படுவதும் தாமாகப் பதவி விலகுவதும் ஆட்சிமுறையைப் பெரிதும் பாதிக்கின்றது. கட்சி அரசியலில் முன் அனுபவமும் பங்களிப்பும் இல்லாத டொனால்ட் டிரம்ப் தனது ஆலோகர் நியமனத்திலும் அவர்களை நடத்துவதிலும் பல இமாலயத் தவறுகளை விட்டு வருகின்றார். அவரது அரசுறவியல் அனுபவமின்மை வேர்ஜீனியா மாநிலத்தில் வெள்ளை மேலாதிக்கவாதிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட ஓர் உயிரைப் பறிகொண்ட கலவரம் தொடர்பாக அவர் விட்ட அறிக்கைகளில் வெளிப்பட்டது. அவர் தனது கண்டனத்தை மூன்றாவது தடவை வெளிவிட்ட அறிக்கையின் போதுதான் சரியாகத் தெரிவித்தார். இதற்கிடையில் வெள்ளை மேலாதிக்கவாதிகள் தொடர்பான டிரம்பின் நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்த வர்த்தக ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பலர் தமது பதவிகளைத் துறந்தனர்.  
முன்பு டிரம்ப் ஏதாவது நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர் அந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர்கள் அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அவரது உரை மோசமானதாக இருக்கும். தற்போது வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில் இருப்போரும் அதையே செய்கின்றனர்.

வெளுத்து வாங்கும் வாஷிங்டன் போஸ்ற்
வெற்றீகரமான வியாபாரிகள் முன்பு அமெரிக்க அதிபர்களாகத் தேர்தெடுக்கப்பட்ட போது அவர்கள் தங்களது முகாமைத் திறைமையை வெள்ளை மாளிகைக்குள்ளும் காட்டினர். அதனால் சிறந்த ஆட்சிமுறைமை நடந்தது. ஆனால் வெற்றீகரமான வியாபாரியான டிரம்பைப் பொறுத்தவரை அது நடக்கவில்லையா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. டிரம்பைக் கடுமையாக விமசித்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை வெள்ளை மாளிகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுகின்றது. அது உதாரணத்திற்கு வெள்ளை மாளிகையில் ஒரு வாரம் மட்டும் நிலைத்த தொடர்பாடல் இயக்குனர் ஸ்கரமூச்சியை காட்டுகின்றது. வெள்ளை மாளிகையில் இருந்து முக்கிய இரகசியங்கள் எல்லாம் கசிகின்றன என்பதால் அதைத் தடுக்க டிரம்ப் ஸ்கரமூச்சியை நியமித்தார். அவர் தனது நண்பரான நியூயோர்க்கர் சஞ்சிகையின் நிரூபருக்கு பேட்டியளிக்கும் போது வெள்ளை மாளிகையில் உள்ள மற்ற அதிகாரிகளைப் பற்றிக் கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். அவர் தனது நண்பரான நிரூபருக்கு எதை எதைப் பிரசுரிக்க வேண்டும் எதை எதைப் பிரசுரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நியூயோர்கர் சஞ்சிகை எல்லாவற்றையும் பிரசுரித்து விட்டது. குழப்பத்தை தீர்க்க நியமித்தவரால் பெரும் குழப்பம் உருவானது.

தேர்தல் வாக்குறுதிகள்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை அமெரிக்க மக்களுக்கான தற்போதுள்ள மருத்துவக் காப்புறுதி திட்டத்தை இரத்து செய்து புதிய திட்டத்தைச் செயற்படுத்தல், அமெரிக்காவின் உடகட்டுமானத்தில் பெருமளவு மூதலீடு செய்தல், அமெரிக்காவின் வருமான வரி முறைமையை மாற்றியமைத்து மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைத்தல், குடிவரவைக் குறைத்தலும் அதற்காக மெக்சிக்கோவுடனான எல்லையில் மெக்சிக்கோவின் பணத்தில் சுவர் எழுப்புதல் ஆகியவையாகும். இதில் சுவர் எழுப்புதல் ஒரு நடவாத காரியம் என்பதை அமெரிக்க மக்கள் நன்கு உணர்ந்து இருந்தனர். டிரம்ப் பதவிக்கு வந்ததும் அவர் முதல் செய்த வேலை மருத்துவக் காப்புறுதி தொடர்பான அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயன்றமையாகும். இதற்கு அவரது கட்சிக்குள் இருந்தும் எதிர்க்கட்சிக்குள் இருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால் அதை பாராளமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றுவதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. மாறாக டிரம்ப் வருவான வரிச் சீர்திருத்தத்தை முதலாவதாக கையில் எடுத்திருந்தால் அவருக்கு அவரது கட்சிக்குள் பெரும் ஆதரவு கிடைத்திருக்கும். உட்கட்டுமானங்களில் முதலீடு செய்யும் தேர்தல் வாக்குறுதியை முதலில் செயற்படுத்தத் தொடங்கியிருந்தால் அதற்கு இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும். மருத்துவக் காப்புறுதியில் டிரம்ப் முதற்கவனம் செலுத்தியமை அவரது கேந்திரோபாயத் தவறாகும். மருத்ஹ்டுவக் காப்புறுதியில் ஏற்பட்ட இழுபறி டிரம்பின் ஆட்சிமுறையில் கடும் அதிருப்தியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது.

மாறு மனமே மாறு
அமெரிக்காவரை அணுக்குண்டுகளுடன் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சிக்கும் வட கொரியா, அமெரிக்க அரசுறவியலாளர்களை வெளியேற்றும் இரசியா, தென் சீனக் கடலில் அடங்க மறுக்கும் சீனா, தென் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தலான வெனிசுவேலா, ஈராக்கிலும் ஈரானிலும் அகலக் கால் பதிக்கும் ஈரான் என அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு பல அச்சுறுத்தல்கள் பல முனைகளில் உருவாகும் போது அமெரிக்காவிற்கு ஒரு ஆளுமை மிக்க அதிபர் தேவை என அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கருதுகின்றனர். அதற்கு அமெரிக்க அதிபர் பணிமனையில் உறுதிமிக்க முகாமைக் கட்டமைப்புத் தேவை. ஆனால் டிரம்ப் பதவிக்கு வந்து ஏழு மாதங்களில் இரண்டு தலமை அதிகாரிகள் (chiefs of staff) வெள்ளை மாளிகையில் மாற்றப்பட்டுவிட்டார்கள். அது மட்டுமல்ல இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், இரண்டு தொடர்பாடல் இயக்குனர்கள் என பதவி மாற்றங்கள் அடிக்கடி வெள்ளை மாளிகையில் நடக்கின்றது. டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்து எட்டாம் நாள் அவர் இரசிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய படத்தைப் போட்டு அதில் அவருடன் இருந்த ஐந்து பேரில் துணை அதிபர் மைக்கேல் பென்ஸைத் தவிர மற்ற நாலவரும் பதவியில் இருந்து விலகிவிட்டனர் என சி.என்.என் செய்தி நிறுவனம் டிரம்பைக் கிண்டலடித்துள்ளது. பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் மூன்று தலமை அதிகாரிகள் (chiefs of staff) மாற்றப்பட்டதனால் ஒபாமாவின் நிகழ்ச்சிநிரல்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது என 2012-ம் ஆண்டு டிரம்ப் ஒபாமாவைத் தாக்கி எழுதி இருந்தார். வெள்ளை மாளிகையின் தலைமை கேந்திரோபாயர் ஸ்டீவ் பனன் பதவி விலகிய போது டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் ஒஹியோ மாநிலத்தின் ஆளுநருமான ஜோன் கஸிக் வெள்ளை மாளிகையில் நிலவும் குழப்பத்தை டிரம்ப் சீர் செய்ய வேண்டும் எனப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனுபவம் புதுமை
டொனால்ட் டிரம்ப் அதிபராக வருவதற்கு முன்னர் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. எந்த ஓர் அரச முகாமையிலும் முன் அனுபவம் இல்லாதவர். டொனால்ட் டிரம்ப் பெரிய கட்டிட வியாபார்த்தில் பெரும் பணம் ஈட்டியவர். அது அவரது பரம்பரைத் தொழில். அத்துடன் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி புகழ் பெற்றவர். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பாவிக்கும் வாசகம் “நீ பதவி நீக்கம் செய்யப்பட்டாய்” என்பதாகும். அந்த நிகழ்ச்சியில் பதவிக்கு ஆட்சேர்க்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டிருக்கவில்லை. பணி செய்யும் திறனைப் பொறுத்து பதவி நீக்குவதை மட்டுமே செய்தவர். அதே கதை இப்போது வெள்ளை மாளிகையிலும் நடக்கின்றது.

இரசியாவை விட்டு வைக்கும் டிரம்ப்
2017-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி இரசியத் தலைமை அமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் தனது டுவிட்டர் பதிவில் டிரம்பின் ஆட்சிமுறையின் வலிமையின்மையைச் சுட்டிக்காட்டினார். இரசியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கப் பாராளமன்றம் சட்டமாக நிறைவேற்றி டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டிப் போட்டுவிட்டது என்றார் மெட்வெடேவ்.  இரசியா தொடர்பாக டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அவரது தேர்தல் வெற்றிக்கு இரசியா செய்த உதவியை மனதில் கொண்டு எடுக்கப்படும் என அமெரிக்காவில் பல தரப்பினரும் கருதுகின்றனர். டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து அவர் இரசிய அதிபர் புட்டீனைத் தாக்கி ஒரு வார்த்தை கூடச் சொல்லவுமில்லை. அடிக்கடி டுவிட்டர் பதிவிடும் டிரம்ப் இரசியாவை அதன் ஆட்சியாளர்களையோ தாக்கி பதிவு ஏதும் விடவில்லை. இரசியாவிற்கான அமெரிக்க அரசுறவியலாளர்களின் எண்ணிக்கையை இரசியா அதிரடியாகக் குறைத்த போது டிரம்ப் இரசியாவிற்கு நன்றி கூறிப் பதிவிட்டார். தான் ஆட்குறைப்புச் செய்து செலவைச் சேமிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அதை இரசியா இலகுவாக்கி விட்டதாகவும் டிரம்ப் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டர்.

திறமைகள் தயங்குகின்றன.
வெள்ளை மாளிகையில் பதவி விலக்கப்படுவதும் விலகுவதும் தொடர்வதால் பல முன்னணி முகாமைத்திறன் மிக்கவர்கள் அந்து பதவி ஏற்கத் தயங்குகின்றார்கள். இது மூளை வளம் மிக்க ஒரு வல்லரசு நாட்டுக்கு உகந்த சூழ் நிலையல்ல. அமெரிக்கா போன்ற பெரு வல்லரசு நாட்டின் ஆட்சிமுறையை முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது தெரிவுகள் தாராளமாக இருக்க வேண்டும். தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவைகளாக இருக்கும் போது ஆட்சிமுறைக்கான திறமைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். அது நாட்டுக்குப் பல பின்னடைவுகளைக் கொண்டு வரும்.

அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தல்
2018 நவம்பரில் முழு மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்றில் ஒரு முதவைத் தொகுதிகளுக்கும்  தேர்தல் நடக்கவிருக்கின்றது. டொனால்ட் டிரம்பிற்கு பராக் ஒபாமாவிற்குக் கிடைத்திருக்காத ஒன்று கிடைத்திருக்கின்றது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் பெரும்பான்மை வலு இருக்கின்றது. டிரம்பின் கொள்கைகளும் அவரது செயற்பாடுகளும் அவரது குடியரசுக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு ஒவ்வொரு மாநிலங்களிலும் இருந்து இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைகான தேர்தல் ஒரேயடியாக நடை பெறுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். 2016 நவம்பரில் 34 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. 2018 நவம்பரில் 33 தொகுதிகளுக்கு நடை பெறும். 2020 நவம்பரில் 33 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கும். ஒரு மூதவை உறுப்பினர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு டிரம்பை மக்கள் வெறுப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் டிரம்பின் செய்கைகளுக்கு ஆதரவு வழங்கினால் அது 2018இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என குடியரசுக் கட்சியினர் கருத வாய்ப்புண்டு. அதனால் டிரம்பின் பல நடவடிக்கைகளை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்க வாய்ப்புண்டு.

டிரம்ப் திட்டமிட்ட செயலா?

குடியரசுக் கட்சியின் உறுப்பினரில்லாமல் இருந்த டிரம்ப் தன்னிடமுள்ள செல்வத்தைப் பயன் படுத்தி அக்கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி பல எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கி அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்ற ஓர் அமெரிக்க அதிபர் தனது கட்சிக்குள் இருந்தே முக்கிய பொறுப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் செய்யப்படும். டிரம்ப் தனது அமைச்சரவைக்கும் வெள்ளை மாளிகைக்கும் வர்த்தகத் துறையில் இருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்தார். தனது மகளையும் மருமகனையும் பதவிகளில் அமர்த்தினார். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தன் காலை வாரிவிடலாம் என்ற அச்சத்தில் ஒருவருக்கு ஒருவர் முரண்படக் கூடியவர்கள் பலரை பதவியில் அமர்த்தினார். இவர்களுக்கு இடையிலான போட்டியால் அவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்பதே அவரின் உபாயமாகும். ஆனால் அந்த உள்ளக முரண்பாடு டிரம்பின் ஆட்சிமுறைக்குப் பெரும் முட்டுக் கட்டையாக இருக்கின்றது.

Monday, 14 August 2017

இலுமினாட்டிகள் உலகத்தை ஆள்கின்றார்களா?

உலகம் என்பதே இலுமினாட்டி என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக வரலாறுபற்றிய தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும்; இலுமினாட்டிகள் தம்மை மறைவாகவே வைத்திருக்கின்றனர்; இவை இலுமினாட்டிகளைப் பற்றி எழுதுபவர்கள் சொல்வதாகும். இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை அது வெறும் சதிக் கோட்பாடு மட்டுமே என வாதிடுவோரும் உண்டு. இலுமினாட்டிகளின் தோற்றம் இருப்பு செயற்பாடு போன்றவற்றைப் பற்றிய காத்திரமான சாட்சியங்கள் இல்லை எனவும் சிலர் சொல்கின்றார்கள். இலுமினாட்டிகள் எனப்படுபவர்கள் உலகமயமாக்கப்பட்ட நாஜிகள் எனச் சொல்வோரும் உண்டு. அமெரிக்காவில் பல நூற்றுக் கணக்கான இரகசிய அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் வலிமை மிக்கது இலுமினாட்டியே. இலுமினாட்டி என்பது ஒளியூட்டப்பட்டவர் என்பதாகும்.

வல்லமை மிக்க இலுமினாட்டிகள்
நாம் என்ன உடுக்க வேண்டும், என்ன சாப்பிடவேண்டும், எமக்கு என்ன நோய்கள் வரவேண்டும், என்ன மருந்து சாப்பிட வேண்டும், எதைப்பார்க்க வேண்டும் எதை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு சிறு குழுவான இலுமினாட்டிகள்தான்  தீர்மானிக்கின்றனர் என்பது அச்சமூட்டுவதாகவும் ஆச்சரியமூட்டுவதாக  இருப்பினும் இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் அந்தக் கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலுமினாட்டிகளிடம் இரகசியாமான அல்லது மாயமான வலிமைகள் உண்டு எனவும் நம்பப்படுகின்றது. அவை அவர்களுக்கு யூத மன்னரான அறிவாளி சொலமனது இரகசியங்கள் சிக்கின எனவும் கருதப்படுகின்றது.

சொலமன் என்னும் அறிவாளியான் யூத அரசர்
யூத மன்னர் சொலமன் கிரேக்கர்கள், பபிலோனியர்கள், எகிப்தியர்கள் போன்றவர்களது இரகசியக் கலைகளையும் நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தார். கோலியாத்தைக் கொன்ற டேவிட்டின் போர்க்கலையை அவர் அறிந்திருந்தார். டேவிட்டின் ஆறு முனை நடசத்திரத்தை அவர் தனது சின்னமாக்கினார். இன்றும் இஸ்ரேலியர்களின் தேசியக் கொடியில் அது உண்டு. பபிலோனிய மன்னர் நிம்ரொட் ஒரு மேசன் அவர் ஒரு பெரு நகரத்தையே நிர்மாணித்தவர். அவரின் இரகசியங்களை சொலமன் அறிந்து வைத்திருந்தார். கலைகளின் ஆரம்பம் லமெக் (Lameck) என்பவரின் பிள்ளைகளாகும். அவரின் ஒரு பிள்ளை கேத்திரகணிதம், ஒரு பிள்ளை இசை, ஒரு பிள்ளை உலோகக்கலை, ஒரு பிள்ளை நெசவு ஆகிய கலைகளை உருவாக்கினார்கள். லமெக்கின் வழித்தோன்றலான நோவா தான் கப்பல் மூலம் பெரு வெள்ளத்தின் போது எல்லோரையும் காப்பாற்றியவர். அந்த இரகசியங்களை எல்லாம் சொலமன் அறிந்து தனது அரண்மனையில் பாதுகாத்து வைத்திருந்தார்.



ஃபிரீமேசன் அமைப்பும் இலுமினாட்டிகளும்
1118-ம் ஆண்டு ஐரோப்பாவில் மதகுருக்கள் ஜெருசேலத்தை மீட்பதற்காக படை ஒன்றை உருவாக்கினர்.. இவர்களின் படையில் தேவாலயங்கள் கட்டுவதற்கு மேசன் தொழில் செய்பவர்கள் இணைக்கப்பட்டனர். அப்போது இருவகையான மேசன்கள் இருந்தனர். ஒருவர் சாதரண கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை Rough Masons என அழைப்பர். மற்றவர்கள் சிறப்பு வடிவமான கற்களைச் செதுக்குபவர்கள் இவர்களை freestone Masons என அழைப்பர். இவர்கள் ஓர் உக்கிரமான போர் மூலம் ஜெருசேலம் நகரை இஸ்லாமியர்களிடமிருந்து கைப்பற்றினர். அந்தப் போர் இரத்தக் களரி மிருந்ததாக இருந்தது. குதிரைகளின் கணுக்கால் வரை இரத்தம் வெள்ளமாக நின்றது முதலாம் சிலுவைப் போர் என அழைக்கபடும அந்தப் போரில். இவர்கள் ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியபோது அங்கிருந்த temple of soloman எனப்படும் யூத அரசன் சொலமனது அரண்மனையைக் கைப்பற்றினர். ஜெருசேலத்தைக் கைப்பற்றிய Freestone Masonsகளுக்கு Knights of Temple of King Soloman என்னும் பட்டம் சூட்டப்பட்டது. . சுருக்கமாக Templars எனவும் என அழைக்கப்பட்டனர். அவர்கள் கைப்பற்றிய சொலமனது அரண்மனையில் அவர்கள் பல இரகசியங்களைக் கைப்பற்றினர். . யூதர்களின் பழமை மிக்க மாயக் கலையால கபாலா இவர்கள் சொலமனின் அரண்மனையில் இருந்து கைப்பற்றியதால் இவர்களால் பெரும் செல்வம் திரட்ட முடிந்தது. இவர்களை பிரேஞ்சு அரசு கிறித்தவத்திற்கு விரோதமானவர்கள் எனத் தண்டித்தது. இதனால் பலர் ஸ்கொட்லாந்திற்கு தப்பி ஓடி அங்கு ஃபிரீமேசன் அமைப்பை ஆரம்பித்தனர். 1730-ம் ஆண்டு ஃபிரீமேசன்கள் அமெரிக்காவிற்குச் சென்றனர். இது ஆரம்பத்தில் கல்வியில் தேர்ந்த மேல் நடுத்தர வர்க்கத்தினரின் (upper-middle class) மக்களின் அமைப்பாக இருந்தது. இது கடவுளைத் தந்தையாகக் கொண்டு எல்லா மக்களும் சகோதரர்கள் போல் வாழவேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டது. அதில் எந்த மதத்தினரும் இணையலாம். ஐக்கிய அமெரிக்காவை ஆரம்பித்தவர்களில் பெரும்பாலனாவர்கள் ஃபிரீமேசன்களாக இருந்தார்கள். 1789 அமெரிக்காவின் முதல் அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் ஃபிரீ மேசன் சடங்குகளுடன் பதவி ஏற்றார். அவரது ஜெனரல்களில் பெரும்பாலானோர் ஃபிரீ மேசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது அதிபரும் ஒரு ஃபிரீமேசன். பிரான்சைச் சேர்ந்த ஃபிரீமேசன் அமைப்பினரே அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை வழங்கினர் எனவும் சொல்லப்படுகின்றது. ஃபிரீமேசன் அமைப்பினரின் இலச்சினைகளாகக் கருதப்படும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளின் இலச்சினையாக இருப்பதால் ஃபிரீமேசன் அமைப்பினரே இலுமினாட்டிகள் என வாதிடுகின்றனர். ஃபிரீமேசன் அமைப்பினரில் தம்மை பன்னாட்டுவாதிகள் (INTERNATIONALISTS) என நிருபிப்பவர்கள் மட்டுமே முதலில் இலுமினாட்டி அமைப்பில் அனுமதிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஃபிரீமேசன்கள் தாம் ஜெருசேலத்தில் கைப்பற்றிய இரகசியங்களுக்கு ஏற்பவே நிர்மாணித்தனர். பெண்டகன் கட்ட்டிடமும் ஃபிரீமேசன்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

ஆரம்பம் 18-ம் நூற்றாண்டில்.
Adam Weishaupt என்பவர்தான் இலுமினாட்டியை 01-05-1776இல் ஆரம்பித்தவர். ஒரு யூதரான இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டார். பின்னர் இலுமினாட்டிகளில் ஒருவராகக் கருதப்படுக் ரொத்சைல்ச் குடும்பத்தின் பணியாளரானார். ஆரம்பத்தில் அவர் இலுமினாட்டி அமைப்பிற்கு "Brother Spartacus" என்னும் பெயரைச் சூட்டினார். Spartacus அடிமைத்தனத்திற்கு எதிராகக் கிரேக்கத்தில் புரட்சி செய்த வீரனாகும்.

காசேதான் கடவுளடா யேசு இல்லையடா
இந்த உலகத்தை விரும்பாமல் பரலோகத்தில் வாழும் எம் தந்தையை விரும்புங்கள். இந்த உலகத்தையோ அதில் உள்ளவற்றையோ விரும்புபவர்கள் எம் தந்தையை விரும்ப முடியாது என்பதுதான் ஜேசுவின் போதனையாக இருந்தது. இது இந்த உலகில் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கும் பெரும் செல்வந்தர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவர்கள் வேறு போதனைகளை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் அதனால் உருவானவர்கள்தான் இலுமினாட்டிகள் என்கின்றார்கள் பல கிறிஸ்த்தவர்கள். ஆனால் வத்திக்கானும் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றது என்ற கருத்தை முன் வைப்பவர்களும் உண்டு. வேறு சிலர் இலுமினாட்டிகள் திருச்சபைக்குத் தெரியாமல் அங்கு ஊடுருவியுள்ளார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களும் உண்டு. 1738-ம் ஆண்டிற்கும் 1890-ம் ஆண்டிற்கும் இடையில் ஃபிரிமேசன் அமைப்பு கத்தோலிக்கத்திற்கு எதிரானது என வத்திக்கான் பல தடை உத்தரவுகளை விடுத்தது. அதனல் பல நாடுகளின் அது தடை செய்யப்பட்டது. இலுமினாட்டிகள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் தலைமறைவாகச் செயற்பட்டு தம்மை மேலும் வலுவாக்கிக் கொண்டு பல அமைப்புக்களில் ஊடுருவத் தொடங்கினர்.


13 இலுமினாட்டிக் குடும்பங்கள்
1. அஸ்டர் குடும்பம் (The Astor Bloodline ) 2. பண்டி குடும்பம் (The Bundy Bloodline)  3. கொலின் குடும்பம் (The Collins Bloodline) 4. டியூபொண்ட் குடும்பம் (The DuPont Bloodline) 5. ஃபீரிமன் குடும்பம் (The Freeman Bloodline)  6. கெனடி குடும்பம் (The Kennedy Bloodline) 7. லீ குடும்பம் (The Li Bloodline) 8. ஒனாஸிஸ் குடும்பம் (The Onassis Bloodline) 9. ரொக்ஃபெல்லர் குடும்பம் (The Rockefeller Bloodline) 10. ரஸல் குடும்பம் (The Russell Bloodline) 11. வான் டுயான் (The Van Duyn Bloodline) 12. மெரொவிஜியன் குடும்பம் (The Merovingian Bloodline) 13. ரொத்சைல்ட் குடும்பம் (The Rothschild Bloodline) இந்தக் குடும்பங்கள் உலகின் செல்வத்தில் 90 விழுக்காட்டை தம் வசம் வைத்திருந்து அரசுகள், ஊடகங்கள், வங்கிகள், பல உற்பத்துறைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கத் தேசியக் கொடியில் சிவப்பிலும் வெள்ளையிலும் 13 கோடுகள் இருப்பது இந்தப் பதின்மூன்று குடும்பகளைக் குறிக்கிறதாம். தேசியக் கொடியில் உள்ள கழுகின் கையில் 13 அம்புகள் இருக்கின்றன. கழுகின் வாலில் 13 சிறகுகள், கழுகின் கவசத்தில் 13 வரிகள். கையில் 13 அம்புகள், ஒலிவ் இலையில் 13 இலைகள், 13 ஒலிவ் காய்கள். கிறிஸ்த்தவர்கள் வெறுக்கும் 13 எண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாணயமான டொலரில் மேசன்களின் சின்னமான பிரமிட்டும் அதன் உச்சியில் ஒற்றைக் கண்ணும் எப்படி வந்தது? பிரிமிட்டின் மேலே 13 எழுத்துக்கள் கொண்ட வாசகம் Annuit coeptis பொருள் favor our undertakings.

எங்கும் நிறை இலுமினாட்டிகள்
உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு நாணய நிதியம், நேட்டோ ஆகியவற்றை நடத்துபவர்கள் இலுமினாட்டிகளே எனச் சொல்கின்றனர் சதிக்கோட்பாட்டாளர்கள். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை 1921-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வெளியுறவுத் துறைச் சபை (The Council on Foreign Relations) தான் தீர்மானிக்கின்றது. இதை ஆரம்பித்து வைத்தவர்கள் இலுமினாட்டிகளே. அதில் முக்கியமானவர் டேவிட் ரொக்ஃபெல்லர். வெளியுறவுத் துறைச் சபை உறுப்பினர்களாக அமெரிக்க அதிபர், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்காவின் வெளிநாட்டுக்கான தூதுவர்கள் மட்டுமல்ல அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியைச் சேர்ந்தவர்கள், வால் ஸ்றீட் முதலிட்டாளர்களும் அடங்குவர். இந்தச் சபைதான் ஐக்கிய நாடுகள் சபையையும் கட்டுப்படுத்துகின்றது.

நடுவண் வங்கியான Federal Reserveவும் இலுமினாட்டிகளும்
அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த வுட்றோ வில்சன் அரசதான் ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்றிருந்தார். கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913ஐ பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா?  ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் ஐநா சபையும்
அமெரிக்காவில் Council on Foreign Relation என்ற சபையை இலுமினாட்டிகளே ஆரம்பித்தனர். இலுமினாட்டிகளில் ஒருவரான ரொக்ஃபெல்லர் குடும்பத்தினரே இதை முன்னின்று ஆரம்பித்தனர். இதில் அமெரிக்க அரசில் இருந்தும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இந்த சபைக்கு நியமிக்கப்பட்டனர். அமெரிக்க வெளியுறவுக் கொளைகையை இலுமினாட்டிகளுக்கு ஏற்ப வகுப்பதே இதன் நோக்கம். அதன் மூலம் உலக ஆதிக்கத்தை செய்யவதே அடிப்படையாகும். உலகத்தை ஒரு சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை இலுமினாட்டிகள் உருவாக்கினர். ஐக்கிய நாடுகள் சபைக்குத் தேவையான நிலத்தை ரொக்ஃபெல்லர் குடும்பமே நன்கொடையாக வழங்கியது.
ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்காவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட 74 பெரும் இந்த வெளியுறவுத் துறைச் சபையின் உறுப்பினர்களாகும். ரொக்ஃபெல்லர் கொடுத்த காணியில் ஐநா கட்டிடம் உருவாக்கப்பட்டது. உலகெங்கும் பலர் இலுமினாட்டிகளின் கையாட்களாக இருந்து உலகத்தை ஆள்கின்றார்கள்.


இசைத்துறையிலும் இலுமினாட்டிகள்
உலகில் பெரு வருமானமீட்டும் துறைகளில் இசைத்துறையும் ஒன்றாகும். பாடல்களுக்கான காப்புரிமை மூலம் இலுமினாட்டிகள் பெரும் வருமான ஈட்டுகின்றனர். இவர்களின் தயவின்றி இசைத்துறையில் யாரும் உலகப் புகழ் பெற முடியாது. தற்போது பிரபலமாக உள்ள Ketty Perry, Rihana, Mily Cyrus, Lady Gaga, Jay Z, Justin Bieber, Kim Kadashian, Kanye West, Britney Spears, Beyonce ஆகிய பிரபல பொப்பிசைப் பாடகர்கள் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களது பாடல் காணொலிகளில் இலுமினாட்டிகளின் இலச்சினைகளான பிரமிட், ஒற்றைக் கண் அடிக்கடி காண்பிக்கப்படும். இவர்கள் நடனமாடும் போது இலுமினாட்டிகளின் இலச்சினைகளை முத்திரையாகப் பிடித்துக் கட்டுவர். மைக்கேல் ஜக்சன் மூலம் இலுமினாட்டிகள் பல பில்லியன் டொலர்களைச் சம்பாதித்தார்கள். இலுமினாட்டிகளின் இம்சைகளுக்கு மைக்கேல் ஜக்சன் உள்ளானார். ஒரு கட்டத்தில் தனது பாடல்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒருவரை மைக்கேல் ஜக்சன சாத்தான் என விபரித்தார். அதில் இருந்து அவரது அழிவு தொடங்கியது. அவரது பழைய வாழ்க்கையை கிளறி அவர் சிறுவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதை அம்பலப்படுத்தி அவரை நோய்வாய்ப்பட வைத்தனர். அவரது மருந்தின் மூலமே அவரைக் கொன்றனர். அவர் இறந்த பின்னர் அவரது பாடல்கள் மிக அதிகமாக விற்பனையானது. அதன் மூலம அவர்கள் பில்லியன் கணக்கில் சம்பாதித்தனர்.

Rothschild குடும்பம்
ஜேர்மனியில் தமது வட்டி வியாபாரத்தை ஆரம்பித்த Rothschild குடும்பம் உலகெங்கும் செயற்படக் கூடிய வங்கியை உருவாக்கியது. ஐந்து சகோதரர்கள் இலண்டன், பரிஸ், பிராங்பேர்ட், வியன்னா, நப்பிள்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நகரங்களில் தமது வங்கிகளை நிர்வகித்தனர். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் உலகின் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பம் ஆகினர். அந்த நிலையையே இன்றுவரை பேணிவருகின்றனர். 19-ம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தின் 90விழுக்காடு பிரித்தானியக் கப்பல்களால் செய்யப்பட்டது. அவர்களின் நிதியை ரொத்சைல்ட் குடும்பத்து வங்கிகள் நிர்வகித்தன. நேத்தன் ரொத்சைல்ட் “எந்தப் பொம்மை வேண்டுமானாலும் பிரித்தானிய அரியணையில் அமரட்டும். சூரியன் மறையாத பேரரசை ஆளட்டும். ஆனால் அதன் நிதியை எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நான் பிரித்தானியப் பேரரசை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றேன்” என்றார். ஆனால் இதை ரொத்சைல்ட் குடும்பத்தினர் மறுக்கின்றனர். 1850-ம் ஆண்டு அவர்களின் செல்வம் 10பில்லியன் டொலர்களாக இருந்தது. இப்போது அவர்களின் செல்வம் 500ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். இரண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் தங்க விலையை தமக்கு ஏற்ப மாற்றி தமது செல்வத்தைப் பெருக்கி வருகின்றார்கள் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க நாணயமும் இலுமினாட்டிகளும்
அமெரிக்க டொலரின் பின்புறத்தில் இருக்கும் பிரமிட்டும் ஒற்றைக் கண்ணும் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டவை எனச் சொல்லப்படுகின்றது. அவர்கள் உலக நிதியை தம்வசம் ஆக்கும் நோக்கத்துடன் அதைச் செய்தார்களாம். அமெரிக்காவின் நடுவண் வங்கி இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அதை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜோன் எஃப் கெனடி(அவரும் ஒரு இலுமினாட்டி) முயன்றபோது அவரை மற்ற இலுமினாட்டிகள் கொலை செய்தனர் என ஒரு சதிக் கோட்பாடும் ஒன்று.

உலகும் இலுமினாட்டிகளும்
இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் உலகத்தில் நடப்பவற்றில் இலுமினாட்டிகளின் வகிபாகம் பற்றிய வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. இந்தியாவும் சீனாவும் பூட்டானில் ஒரு போருக்குத் தயாராவதை என்னால் இலுமினாட்டிகளுடன் சம்பந்தப்படுத்த முடியும். அந்தக் கற்பனை இப்படிப் போகும்: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் சீனாவிலும் பல செல்வந்தர்கள் உருவாகி வருகின்றார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் அந்த நாட்டு அரசுகளின் பின்னால் இருக்கும் பெரும் செல்வந்தர்களும் இலுமினாட்டிகளுக்கு சவாலாக அமைவதைத் தடுக்க இரு நாடுகளும் போர் செய்து அழிந்து போக வேண்டும் என இலுமினாட்டிகள் சதி செய்கின்றார்கள். இரு நாடுகளும் போர் செய்யும் போது அவற்றிற்கு இலுமினாட்டிகள் படைக்கலன்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். இது எனது கற்பனை மட்டுமே! அது உண்மையாக இருக்கலாம். இலுமினாட்டிகள் பல தொற்று நோய்களை வேண்டுமென்றே உருவாக்கி அவற்றிற்கான மருந்துகளை விற்பனை செய்வதில் பெரும் செல்வம் ஈட்டுகின்றார்களாம்.

இலுமினாட்டிகளின் தலைமைச் செயலகம்.
அமெரிக்காவில் உள்ள டென்வர் விமான நிலையத்தில் நிலத்தின் கீழ் உள்ள ஆறுமாடிக் கட்டிடத்தில் இலுமினாட்டிகளின் தலைமைச் செயலகம் இருக்கின்றது என இலுமினாட்டிகளின் இருப்பை நம்புபவர்கள் சொல்கின்றனர். அந்த விமான நிலையம் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது. தீடீரென அது புனரமைக்கப்பட்டது. திட்டமிட்டதிலும் பார்க்க மூன்று பில்லியன்கள் அதிகமாகச் செலவழிக்கப்பட்டு எதிர்பார்த்ததிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் தாமதித்து அந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டது.

இலுமினாட்டிகளின் புதிய உலக ஒழுங்கு
மேற்கு நாட்டு அரசியல்வாதிகளும் தலைவர்களும் கடந்த நூறு ஆண்டுகளாக அடிக்கடி புதிய உலக ஒழுங்கு என்ற பதத்தைச் சொல்கின்றார்கள். அதன் பின்னால் இலுமினாட்டிகளே இருக்கின்றார்கள் என்ற விவாதம் முன்வைக்கப்படுகின்றது. இலுமினாட்டிகள் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபையும் அதற்காகவே செயற்படுகின்றது. என்ன இந்தப் புதிய ஒழுங்கு என சரியான விளக்கத்தை முன்வைக்கின்றார்கள் இல்லை. உலகம் எங்கு மக்களாட்சி, உலகெங்கும் தங்கு தடையற்ற வர்த்தகம் என்பது தான் அதன் முன்னணி இலக்குகளாக இருக்கின்றன. அதாவது இலுமினாட்டிகள் உலகத்தை சுரண்ட வழிசமைப்பதே புதிய உலக ஒழுங்கு.


நான் முன்வைக்கும் சதிக் கோட்பாட்டின் சதிக்கோட்பாடு
.உலகம் பெரும்பாலும் முதலாளித்துவப் பொருதார முறையைச் சார்ந்து இயங்குகின்றது. அந்த இயக்கம் ஒரு சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் முழு உலகத்தையும் கொண்டு வந்து விட்டது அல்லது கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. அதைத்தால் லெனின் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் ஏகாதிபத்தியம் என்றார். தற்போது உலகின் 90விழுக்காடு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைக்கு இந்த முதலாளித்துவப் பொருளாதரம்தான் காரணமாகும். அந்த உண்மையை உணர்ந்தால் உலக மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராக கிளர்ந்து எழுவதைத் தடுக்க எல்லாப்பிரச்சனைக்கும் இந்த 13 குடும்பங்கள்தான் காரணம் இந்த முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு அல்ல எனத் திசைத் திருப்பவே இந்த இலுமினாட்டிச் சதிக்கோட்பாடு முயல்கின்றது.


இலுமினாட்டிகளின் செயற்பாடுகள் பற்றி பல சதிக் கோட்பாடுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் மிகவும் அச்சமூட்டும் கோட்பாடு உலக மக்கள் தொகையை அவர்கள் பெருமளவில் குறைக்க விரும்புகின்றனர் என்பதாகும். அது என்ன பேரழிவைக் கொண்டு வருமோ?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...