Monday, 1 May 2017

ஈரானின் நிலையும் தலைமை மாற்றங்களும்

சிரியாவில் இரசியாவுடன் இணைந்து உலக வல்லரசான அமெரிக்க எதிர்ப்பையும் பிராந்திய வல்லரசுகளான சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தனது ஆதரவாளரனா பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஈரான் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அதன் தலைமையில் பெரும் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி ஈரான் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அது வழமையாக நடைபெறுவது. ஆனால் ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமெய்னி கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்று நோய் எனவும் செய்திகள் வெளிவருகின்றன. அவருக்கு தற்போது வயது 77. இவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு உள்ளதாக 2016-ம் ஆண்டு பிரெஞ்சு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு எதிரான நிலை அதிகாரம் தரும்
தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெய்னி 1989-ம் ஆண்டில் இருந்து பதவியில் இருக்கின்றார். உச்சத்தலைவராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கால வரையறை இன்றிப் பதவியில் தொடரலாம். அமெரிக்காவிற்கு அழிவு வரட்டும் என்பதே ஈரானின் ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லும் வாசகமாகும். இஸ்ரேல் என ஒரு நாடு இருக்கக் கூடாது என பகிரங்கமாகவும் உறுதியாகவும் சொல்லுபவர்கள் ஈரானிய ஆட்சியாளர்கள் மட்டுமே. அமெரிக்கக் கடற்படைக்கலன்களுக்கு பாரசீக வளைகுடாவிலும் ஏடன் வளைகுடாவிலும் அடிக்கடி ஈரானியப் போர்க்கப்பல்கள் ட் தொந்தரவு கொடுப்பதாக அமெரிக்கக் கடற்படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் திகதி திங்கட்கிழமை அமெரிக்க நாசகாரிக் கப்பலான யூ.எஸ்.எஸ் மஹானுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் அதை ஈரானியக் கடற்படைப் படகுகள் அண்மித்தன. மஹான் கொடுத்த சமிக்ஞைகளையும் பொருட்படுத்தாமல் ஈரானியக் கப்பல்கள் முன்னேறியபோது மஹான் எச்சரிக்கை வேட்டையும் வெடிக்கச் செய்தது. அதையும் மீறி ஈரானியக் கப்பல் நகர்ந்த போது மஹான் தனது பாதையை மாற்றிக் கொண்டது. இந்த மாதிரியான சம்பவங்கள் 2016-ம் ஆண்டு மட்டும் 35 தடவைகள் நடந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மூன்று தூண்கள்
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில் 2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின் மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள். ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். 

ஈரானில் உள்ள முக்கிய அதிகார மையங்கள்:
1.
அதிபர்: இவர் மக்களால் நேரடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்.
2.
பாராளமன்றம்: 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தெடுக்கப்படும். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.
3.
அறிஞர்கள் சபை: இது மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும். இதில் 88 உறுப்பினர்கள் உள்ளனர்.
4.
உச்சத் தலைவர்: இவர் அறிஞர் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவிக்கு கால எல்லை இல்லை.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபை: இது உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்டது. அறிஞர் சபை, அதிபர் தெரிவிலும் பாராளமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலில் அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அனுமதியைப் பெறவேண்டும்.
6. ஈரானியப் படைத்துறை


இவற்றில் உச்சத் தலைவர் பதவியே அதிக அதிகாரம் கொண்டதாகும். ஈரானியப் படைத்துறையின் தளபதி உச்சத் தலைவரே. அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.


ஈரானிய அதிபர் தேர்தல்
ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேவையான தகமைகள்:
1. ஈரானில் பிறந்த ஈரானியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2. ஈரானிய அரச மதமான இஸ்லாம் மீது இறைவன் மீதும் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.
3. ஈரானிய அரசியல்யாப்பிற்கு விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும்.
4. 21 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
5. அரசமைப்புப் பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

2017 மே மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட 36பேர் விண்ணப்பித்திருந்தனர். 2017 ஏப்ரல் 20-ம் திகதி அரசமைப்புப் பாதுகாவலர் சபை அதிபர் தேர்தலுக்கான ஆறு வேட்பாளர்களை அங்கிகரித்தது:
1. ஹசன் ரௌஹானி(தற்போதைய அதிபர்)
2. எஷாக் ஜஹங்கிரி (தற்போதைய துணை அதிபர்),
3. எப்ராஹிம் ரைசி - Raisi (ஈரானிய முக்கிய வழிபாட்டிட நிர்வாகத் தலைவர்)
4. மொஹமட் பகர் கலிபாஃபா - Qalibaf (தெஹ்ரான் நகரபிதா),
5. மஹ்முட் அஹமடினெஜட்(முன்னாள் அதிபர்),
6. ஹமிட் பக்கை (முன்னாள் துணை அதிபர்)
மக்களின் நேரடியான வாக்களிப்பின் மூலம் அதிபர் தெரிவு செய்யப்படுவர். இவர்களது பரப்புரை விவாதம் போன்றவற்றை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்யும்.

தீவிரப் போக்காளர்களை விரும்பும் உச்சத் தலைவர்
வேட்பாளர்களை தீவிரப்போக்குக் கொண்டவர்கள், பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என வகைப்படுத்துவது வழமையாகும். தீவிரப் போக்குக் கொண்டவர்கள் சார்பில் மூவர் நிறுத்தப்பட்டமையும் அவர்களுல் ஒருவராக  பிரபலமில்லாத எப்ராஹிம் ரைசி இருப்பதும் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையின் வெளிப்பாடு என சில நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைமை வழக்குத் தொடுநனரான இவர் உச்சத் தலைவர் அலி கமெய்னிக்கு விருப்பமான வேட்பாளராவார். உச்சத் தலைவரின் முன்னாள் மாணாக்கருமாவார். எப்ராஹிம் ரைசியை உச்சத் தலைவர் கமெய்னி ஈரானிய முக்கிய வழிபாட்டிடத்தின் தலைமை நிர்வாகி ஆக்கி அவரை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். ஆனால் ரைசிக்கு அரசியல் அனுபவம் இல்லை. சீர்திருத்தத்தை பெரிதும் விரும்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வாக்குகளை இவர் பெறுவதற்குப் பெரிதும் உழைக்க வேண்டும். சில மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தல் முறை கேடுகள் மூலம் ரைசியை வெற்றி பெற வைக்கலாம் என எதிர்வு கூறுகின்றன. தற்போதைய உச்சத் தலைவர் சீர்திருத்தத்தை விரும்பாத பழமைவாதியாகும். ஆனால் கடந்த அதிபர் தேர்தலின் போதும் ஹசன் ரௌஹானி வெற்றி பெறுவதை உச்சத் தலைவர் விரும்பவில்லை. இருந்தும் ரௌஹானி வெற்றி பெற்றார். இம்முறை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும் சீர்திருத்தவாதியான ரௌஹானி, திவிரவாதப் போக்குடையவர்களான எப்ராஹிம் ரைசி, மொஹமட் கலிபாஃப் ஆகிய மூவரில் ஒருவர் வரவே வாய்ப்புக்கள் உண்டு. உச்சத்தலைவர் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சயீட் ஜலீல் என்ற வேட்பாளர் வெற்றி பெறுவதை விரும்பியதாக மேற்குலக ஊடகங்கள் பரப்புரை செய்தன. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. உச்சத் தலைவர் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்கின்றது மேற்காசியாவின் பிரபல ஊடகமான அல் மொனிட்டர்.


சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானி
சீர்திருத்தவாதியான தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மீண்டும் போட்டியிடுகின்றார். 1979-ம் ஆண்டுப் புரட்சியின் பின்னர் பதவியில் இருக்கும் அதிபர் மீண்டும் போட்டியிடும் போது தோல்வியடைவதில்லை. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாக மேற்கு நாடுகள் ஈரான் மீது விதித்த தடையை தொடர் பேச்சு வார்த்தைகள் மூலம் நிறுத்தி வெறுமையாக இருந்த  ஈரானியத் திறைச் சேரியில் மீண்டும் நிதியால் நிரப்பியவர் ரௌஹானி. ரௌஹானியை ஈரானில் செல்வாக்கு மிக்கவராக்குவதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈரானுடனான யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாட்டில் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்ட போது எரிபொருள் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.


அடுத்த உச்சத் தலைவர்
முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா கொமெய்னி 1989இல் காலமான போது அவரது மகன் அவரது இடத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப் பட்டது. மாறாக சிறந்த இஸ்லாமிய மார்க்கக் கல்விமானாகிய தற்போதைய கமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் உள்நாட்டு அரசியல் பல சிக்கல் மிகுந்த விட்டுக் கொடுப்புகளும் உடன்பாடுகளும் நிறைந்தவை. 1979இல் செய்த மதவாதப் புரட்சி அழிந்து போகாமல் இருப்பதில் மதகுருமார் அதிக கவனத்துடன் இருக்கின்றனர். மக்கள் விரோதச் செயற்பாடுகளை அவர்கள் எப்போதும் தடுக்கின்றனர். ஈரானில் அயத்துல்லா என்பது ஒரு பட்டமாகும். அதன் பொருள் இறைவரின் அடையாளம் என்பதாகும். இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருவரே ஈரானின் உச்சத்தலைவராக முடியும். இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் குரான் பற்றியும் உயர் அறிவுள்ளவர்கள் அவர்கள். தற்போது அறிஞர் சபையின் உறுப்பினரான சாதிக் அர்தெர்ஷிர் லரிஜானியும் (Sadeq Ardeshir Larijani) அதே சபையின் முதன்மைத் துணைத் தலைவருமான மஹ்மூக் ஹஷெமி ஷஹ்ரௌத்தியும் (Mahmoud Hashemi Shahroudi) அடுத்த உச்சத் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகின்றது. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியும் அடுத்த உச்சத் தலைவராக வரலாம் எனவும் சொல்லப்படுகின்றது. லரிஜானி தற்போது தீர்ப்பாயச் சபையின் தலைவராகவும் செயற்படுகின்றார். ஷஹ்ரௌத்தி இறைவனால் அனுப்பப்பட்டவர் என பல மதகுருமார் நம்புகின்றனர்.

அமெரிக்காவுடன் போர் நடக்குமா?
ஈரானைப் பற்றியும் அதனுடன் செய்த யூரேனியப் பதப்படுத்தல் உடன்பாடு பற்றியும் தனது தேர்தல் பரப்புரையின் போது கடுமையாக விமர்ச்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போரையோ அல்லது தாக்குதலையோ தொடுக்க மாட்டார். அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களுக்கு ஈரான் கொடுக்கும் தொந்தரவுகளை ஒபாமா காலத்தில் பெரிது படுத்தாதது போல் டிரம்பும் செய்வார் என எதிர்பார்க்கலாம். ஈரானுடனான போர் ஒரு எரிபொருள் விலையை அதிகரிக்கும் அது உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதுடன் இரசியாவிற்கும் புட்டீனுக்கும் வலுவூட்டுவதாக அமையும். ஈரான் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை மீறாதவரை அதன் மீது யாரும் தாக்குதல் தொடுக்க மாட்டார்கள்.


ஈரானில் உள்ள மதகுருமார்களின் நாட்டுப்பற்றும் மதப் பற்றும் மிகவும் உறுதியானது. ஈரானிய மக்கள் சிறந்த விவேகிகள். வரலாற்றுப் பெருமை மிக்க இனத்தவர்கள். உன்னத கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். அவர்கள். பல ஆயிரம் ஆண்டுகள் தமது நாட்டை பல சவால்களுக்கு நடுவில் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நாட்டை யாராலும் அசைக்க முடியாது. 

Wednesday, 26 April 2017

வட கொரியாவில் வகுக்கப்பட்டுள்ள வியூகங்கள்



அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் லெப்டினண்ட் கேணலும் படைத்துறைச் சரித்திர வல்லுனரும் படைத்துறை ஆய்வாளருமான ஒலிவர் நோர்த் வட கொரியா மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் செய்வார் என எதிர்வு கூறியுள்ளார். வட கொரியா அடுத்த அணுக்குண்டு பரிசோதனை செய்யும் போது அல்லது ஏவுகணைப் பரிசோதனை செய்யும் போது அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் செய்யலாம் என்பதை சிரியா மீது அமெரிக்கா செய்த தாக்குதல் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாராளமன்றத் தெரிவுக் குழுவிற்கு சமர்பித்த  அறிக்கை ஒன்றின் படி ஓர் ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் மின்சாரம் இல்லாத நிலையை வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதலால் செய்ய முடியும். அதனால் அமெரிக்காவில் பத்தில் ஒன்பது பேர் பட்டினியால் இறக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு வட கொரியாவால் அமெரிக்கா அச்சுறுத்தலை எதிர் கொள்கின்றது. வட கொரியா ஆறுவாரங்களில் ஓர் அணுக்குண்டைத் தாயாரிக்கக் கூடிய வகையில் முன்னேறியுள்ளது என்கின்றது நியூயோர்க் ரைம்ஸ்.

துணை அதிபர் மைக் பென்ஸ்
அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரியா தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த கேந்திரோபாயப் பொறுமைக் காலம் முடிவடைந்து விட்டது “the era of strategic patience is over” எனறார் மைக் பென்ஸ். மேலும் அவர் கடந்த இரண்டு வாரங்களாக சிரியாவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் எமது புதிய அமெரிக்க அதிபர் எந்த அளவு உலகப் பிரச்சனைகள் தொடர்பாக திடமான கொள்கையுடன் இருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்றார். ஆனால் சிரியாவிலும் ஆப்கானிஸ்த்தானிலும் செய்த தாக்குதல்கள் தவித்துப் போய் இருக்கின்ற முயலை அடித்தது போன்றது. இரு நாடுகளும் உள்நாட்டுப் போரால் சின்னா பின்னமடைந்துள்ளன. அமெரிக்காவைத் திருப்பித் தாக்கும் நிலையில் சிரியா இல்லை. ஆப்கானிஸ்த்தானில் உள்ள தீவிரவாதிகளால் உடனடியான பதிலடியைக் கொடுக்க முடியாது. ஆனால் அமெரிக்காவிலோ அல்லது அதன் நட்பு நாடுகளின் மீதோ வட கொரியாவால் பேரழிவு விளைவிக்கக் கூடிய தாக்குதல்களைச் செய்ய முடியும். வட கொரியா மீது தாக்குதல் நடத்துவதாயின் அதன் படைவலுவை முற்றாக சிதைக்கக் கூடிய மிகப்பெரும் தாக்குதல்களைச் செய்ய வேண்டும்.

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள்
உலகின் மூன்று முன்னணிப் படைக்கலன் தாங்கிகளான  U.S.S. Carl Vinson, U.S.S. Ronald Reagan, U.S.S. Nimitz ஆகிய முன்றையும் அவற்றின் பரிவாரங்களுடன் வட கொரியாவிற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இவை ஒவ்வொன்றும் மூன்று கால்பாந்தாட்ட மைதானங்களின் நீளம் கொண்டவை. ஒரு இலட்சம் தொன் எடை கொண்டவை.  தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல் விமானங்களைக் கொண்டவை. Arleigh Burke வகை வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல்களால் பாதுகாக்கப் படுவை. கார்ல் வில்சன் விமானம் தாங்கிக் கப்பலின் பரிவாரத்தில் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்கள் தொடர்பான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது இரண்டு AWACS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Airborne Warning and Control System கொண்ட விமானங்களும் கார்ல் வின்சனில் உண்டு. அத்துடன் லொக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் Aegis air defence system என்ற பாதுகாப்பு முறைமையும் அதில் உண்டு. கார்ல் வில்சனில் 400மீட்டர் ஆழத்தில் 40 கடல் மைல் வேகத்தில் பாயக் கூடிய நீரடிஏவுகணைகளும் உள்ளன.

அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்கள்
Arleigh Burke உலகின் மிகச் சிறந்த நாசகாரிக்கப்பலாகக் கருதப் படுகின்றது. கார்ல் வில்சனில் F-18 ஹோர்நெட் மற்றும் F-18 சுப்பர் ஹோர்நெட் போர் விமானங்களைக் கொண்டது. இதில் அமெரிக்காவின் மிகவும் புதிய தர F-35 போர் விமானங்களையும் இதில் இணைக்கலாம். இவை வேதியியல் மற்றும் உயிரியல் படைக்கலன்களை எதிரி பாவிக்கும் போது அவற்றால் மாசுபடுத்தப் பட்ட காற்றை உறிஞ்சி தூய்மைப் படுத்தக் கூடியவை. எதிரிக்குப் புலப்படாத் தன்மையையும் கொண்டவை. எதிரியின் வான் படைகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் கொண்டவை. எதிரியின் தரை, கடல், வான் இலக்குகளை நோக்கி வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை.


வட கொரிய விமானப் படை
வட கொரிய விமானங்களால் இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு அண்மையாகப் போவது பற்றி நினைக்கவே முடியாது. வட கொரியவின் விமானப் படை 110,000 படையினரையும் 940 விமானங்களையும் கொண்டது. அப் போர் விமானங்கள் இரசியாவிடமும் சீனாவிடமிருந்தும் பெறப்பட்டவையும் அவற்றின் பிரதிகளுமாகும். அமெரிக்கா சீனாவைச் சுற்றி பல் வேறு படைத்தளங்களில் நிறுத்தியுள்ள போர் விமானங்கள் சீனாவை அடக்குவதற்கு நிறுத்தப்பட்டவையாகும். அவற்றிற்கு வட கொரிய விமானப்படை ஒரு சுண்டங்காயாகும். வட கொரியாவிடம் இருக்கும் சிறந்த விமானம் இரசியத் தயாரிப்பான மிக்-29 ஆகும். கார்ல் வின்சனில் உள்ள F-22 போர் விமானங்களுக்கு மிக்-29 இணையானவை எனச் சொல்ல முடியாது. மேலும் போர்முனை அனுபவம் வட கொரிய விமானிகளுக்கு இல்லை. மிக்-29 செலுத்து திறன் மிக்கது என்றாலும் வான் ஆதிக்கத்தில் F-22 மேன்மையானது. F-22 போர் விமானங்களுக்கு மிக்-29 இணையானவை இல்லை என்ற படியால்தான் இரசியா Su-27 போர் விமானங்களை உருவாக்கியது.

ஒஹையோ வகை நீர்மூழ்கிக் கப்பல்
அமெரிக்காவின் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக்கூடிய ஒஹையோ வகை நீர்மூழ்கிக்கப்பலான மிச்சிகனும் வட கொரியாவை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 154 டொமொஹோக் ஏவுகணைகள் Tomahawk cruise missiles உள்ளன. இது 560 அடி நீளமானது. இதில் சிறப்புப் படையணியைச் சேர்ந்த 66 போர்வீரர்கள் இருக்கின்றனர். அத்துடன் இதில் ஈரமற்ற இறங்குதளமும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் படைவீரர்கள் இரகசியமாக இறக்கப்பட்டு எங்காவது அதிரடித் தாக்குதல்களை மேற் கொள்ளும் திட்டம் இருக்கின்றது.

இணையவெளிப் போர்முறைமை
வட கொரியா தனது மரபு வழிப் போருக்கான வலிமை இன்மையைச் சீர் செய்ய மேற் கொண்ட ஒரு வழியே அதன் அணுக்குண்டுத் தயாரிப்பு. இணையவெளித் தாக்குதல் மூலம் அமெரிக்கப் படையினரின் அது தனவு வலிமையின்மையைச் சீர் செய்ய மேற்கொண்ட அடுத்த நடவடிக்கை தனது இணையவெளிப் போர்த் திறனை அதிகரித்தமையும் ஒன்றாகும். தொடர்பாடல்கள் முடக்கப்பட்டால் மாற்றுவழித் தொடர்பாடல் முறைமைகளையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இலத்திரனியல் அதிர்வலைகள் மூலம் அமெரிக்காவின் தொடர்பாடல் முறைமைகளை நிர்மூலம் செய்யக் கூடிய திறன் வட கொரியாவிடம் உண்டு. மட்டுப்படுத்தப் பட்ட அளவில் அணுக்குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் அந்த இலத்திரனியல் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்கா இதுவரை எந்த போர் முனையிலும் தனது இணைய வெளித் தாக்குதல் முறைமையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதற்கான முதல் இலக்கு வட கொரியாவாக இருக்கலாம். வட கொரியாவின் கட்டளை-கட்டுப்பாட்டு பணியகத்தை அமெரிக்காவால் சிதைக்க முடியும்.

சீல் படைப் பிரிவு
அணமையில் அமெரிக்கப் படைகளும் கொரியப் படைகளும் இணைந்து மேற்கொண்ட போர் ஒத்திகையில் அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படையணியான சீல் படைப்பிரிவும் கலந்து கொண்டது. பில் லாடனைக் கொலை செய்த இந்தப் பிரிவு வட கொரிய அதிபரைக் கொல்லும் ஒத்திகையை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவால் கொல்லபடலாம் என்ற அச்சத்தில் முன்னாள் வட கொரிய அதிபர் தலைமறைவாக இருந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள்
அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பானும் தென் கொரியாவும் பகிரங்க சவால்களை வட கொரியாவிற்கு விடுக்கவில்லை. மூன்று இலட்சம் தென் கொரியத் துருப்புக்களும் முப்பதினாயினரம் அமெரிக்கப் படையினரும் வட கொரியாவுக்கு எதிராகப் போர் புரியத் தயார் நிலையில் உள்ளனர். தனது நாட்டை வட கொரியாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கை என்னும் பெயரில் ஜப்பானும் வட கொரியாவிற்கு எதிராகக் களமிறங்கலாம். ஜப்பான் அண்மையில் தனது உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை தென் சீனக் கடல்வரை அனுப்பி தனது வலிமையைப் பறை சாற்றியிருந்தது.

வட கொரிய அரசை சீனா செயலிழக்கச் செய்யாது.
சீனா தனது படைகளைப் பெருமளவில் வட கொரிய எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. கொரியத் தீபகற்பம் தனது எதிரிகளின் கைக்குப் போகக் கூடாது என்பதற்காக மூன்று இலட்சம் உயிர்களை பறி கொடுத்த சீனா அதை இலேசில் விட்டுக் கொடுக்க மாட்டாது என்பதை அமெரிக்கா நன்கு அறியும். வட கொரிய அரசைச் செயலிழக்கச் செய்யும் நிலையில் சீனா இல்லை. இறுதித் தீர்வாக வட கொரியாவின் பொதுவுடமைக் கட்சியின் இருப்பை உறுதி செய்த பின்னர் ஏற்கனவே உள்ள நிர்வாக மற்றும் கட்டமைப்புகள் மாற்றப்படாமல் வேறு ஆட்சியாளரை ஆட்சியில் அமர்த்துவதற்கு சீனா சம்மதிக்கலாம். சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பைச் சந்தித்த போது டிரம்ப் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்திருந்தார். சீனாவின் நாணய மதிப்புக் கொள்கையை திருகுதாளம் என விமர்சித்து வந்த டிரம்ப் அதைப்பற்றி ஜின்ப்ங்குடன் பேசவில்லை. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 45 விழுக்காடு வரி விதிப்புச் செய்வேன் எனச் சூழுரைத்து வந்த டிரம்ப் அதை இப்போது ஒத்திப் போட்டுள்ளார். தைவான் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கையை மாற்றுவேன் எனச் சொன்ன அதிபர் அதையும் கைவிட்டுள்ளார். இவை யாவற்றிற்கும் கைமாறாக வட கொரியாவின் அணுக்குண்டுப் பரிசோதனையை நிறுத்த சீனா உதவ வேண்டும் என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. ஆனால் தனக்குப் பாதகமில்லாத ஒரு சீரான ஆட்சிமாற்றத்திற்கு சீனா ஒத்துழைக்கும் ஓர் ஆட்சி உடைவிற்கு (regime collapse) ஒத்துழைக்காது. வட கொரியாவின் வர்த்தகத்தில் 90 விழுக்காடு சீனாவுடன் நடக்கின்றது. சீனாவின் உதவியின்றி வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை வெற்றியளிக்காது. ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று வட கொரியா தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு சாதகமளிக்கக் கூடிய வகையில் திரும்பியுள்ளது எனத் தகவல் வெளியிட்டுள்ளது.  இரசியாவும் வட கொரியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது.

தயார் நிலையில் இல்லாத டிரம்ப் நிர்வாகம்.
டிரம்ப்பினுடைய அமைச்சரவை அனுபவமில்லாத ஓர் அமைச்சரவையாகும். பல முக்கிய பதவிகள் உட்பட அரச நிர்வாகப் பொறிமுறையின் அவசியமான ஐநூறுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு இன்னும் உரியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ஒரு போருக்குத் தயார் நிலையில் இல்லாத நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் இருக்கின்றது. இந்த வலுவற்ற தன்மை சீன அதிபருடனான பேச்சு வார்த்தையின் போது வெளிப்பட்டதாகச் சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் கார்ல் வில்சன் நிலை கொண்டுள்ள இடம் தொடர்பாக டிரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பிழையான தகவல்களை வெளிய்ட்டார் என வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது.

வட கொரிய அணுக்குண்டு வீச்சு
அமெரிக்கா வட கொரியாவை நோக்கி நகர்த்தியுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களையும்வற்றின் பரிவாரங்களையும் ஓர் அணுக்குண்டின் மூலம் வட கொரியாவால் அழிக்க முடியும். வட கொரியா தொடர்ச்சியாக அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டிக் கொண்டே இருக்கின்றது. இருந்தும் அமெரிக்கா தன் படைகளை ஏன் நகர்த்துகின்றது என்ற கேள்விகளுக்கு பல விடைகள் இருக்கின்றன.
1. வட கொரிய அணுக்குண்டு வீச்சுக்கு பதிலடியாக அணுக்குண்டை வீசி வட கொரியாவை அழிக்கலாம். ஆனால் இதை தென் கொரியா, ஜப்பான், சீனா, இரசியா ஆகிய வடகொரியாவின் நட்பு நாடுகள் கூட விரும்பாது. அவை கதிர்வீச்சால் பாதிக்கப்படலாம்.
2. அமெரிக்கா தென் கொரியாவில் நிறுத்தியிருக்கும் தாட் எனப்படும் ஏவுகணை முறைமை வட கொரியாவில் இருந்து கிளம்பும் எல்லாக் குண்டுகளையும் இடைமறித்து அழிக்கலாம். எதிரியின் பிரதேசத்தில் இருந்து கிளம்ப்பும் எல்லாக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் அவை கிளம்பிய உடனேயே எதிரியின் நிலத்தில் வைத்தே அழிக்கக் கூடிய எதிர்ப்பு முறைமையை அமெரிக்கா உருவாக்கிவிட்டிருக்கலாம்.
3. போர் என ஒன்று தொடங்கிய கணமே அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய முன்றும் இணைந்து வட கொரியாமீது பெரும் தொகையான குண்டுகளை வீசி அதன் எல்லாப் படைக்கலன்களையும் அழிக்கலாம்.
4. வட கொரியாவில் உளவு நடவடிக்கைகள் மூலம் படைத்துறை உயர் அதிகாரிகளை அரசுக்கு எதிராகத் திருப்பி வட கொரியாவின் அணுக்குண்டுகளை முதலில் கைப்பற்றலாம்.


எப்போது போர்?
வட கொரியப் பிரச்சனையை மையமாக வைத்து அதிக அளவு அமெரிக்கப் படைகளின் நட மாட்டம் சீனாவிற்கு அண்மையாக உருவாகியுள்ளது சீனாவிற்கும் ஓர் அச்சுறுத்தலே. சீனா மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடையை வட கொரியாவிற்கு எதிராக விதிப்பதே சீனாவின் சிறந்த தெரிவு. ஆனால் எந்த அளவிலான தடை வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை மனம் மாறவைக்கும் என்பதை யாராலும் எதிர்வு கூற முடியாது. வட கொரியாவின் அடுத்த ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்துவது அமெரிக்காவின் இலட்சியமாகும். ஆனால் வட கொரியா செய்யும் அடுத்த அணுகுண்டுப் பரிசோதனை போரை நிச்சயமாக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...