Monday, 13 March 2017

இந்தியாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களும்



ஐக்கிய அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35 ஐ மூன்று வடிவங்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அதனது B-21 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் உற்பத்தி இறுதி நிலையில் இருக்கின்றது. B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எப்பகுதியிலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பக் கூடிய அளவிற்கு தொலைதூரப் பறப்பை நாற்பதினாயிரம் இறாத்தல் எடையுள்ள குண்டுகளுடன் செய்யக் கூடியது. சீனா தனது J-20 போர் விமானங்கள் ஐந்தாம் தலைமுறையைச் சார்ந்தது என்று சொல்கின்றது. அவற்றை வாங்க பாக்கிஸ்த்தான் பெரு முயற்ச்சி செய்கின்றது. இதனால் இந்தியாவிற்கு ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப் படுகின்றது.

இரசிய இந்திய ஒத்துழைப்பு
இந்திய இரசிய கூட்டுத் தயாரிப்பான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் 2010-ம் ஆண்டில் இருந்து ஓர் இழுபறி நிலையில் இருந்தது. இரசியா உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குவதாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு அபிவிருத்தி அடைந்து செல்வதும் அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதை உலகின் முதற்தர ஏவுகணையாக உருவாக்கியது இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை உற்பத்தியின் அவசியத்தை இருதரப்பினருக்கும் உணர்த்தியுள்ளது.

பலதரப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
அமெரிக்க ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35 C ஓர் உலங்கு வானூர்தி போல் ஓடுபாதை இன்றி செங்குத்தாகக் கிளம்பிப் பறக்கவும் தரையிறங்கவும் முடியுமானதாகும். அமெரிக்காவின் F-35, B-21 ஆகியவை ஈடு இணையற்ற போர்விமானங்களாகும். சீனாவின் அடுத்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான FC-31 Gyrfalcon தனது பரீட்சார்த்தப் பறப்பை 2016-ம் ஆண்டின் இறுதியில் செய்திருந்தது.  2017-ம் ஆண்டு சூழ்நிலையில் இந்தியா பிரான்ஸிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கும் ரஃபேல் போர் விமானங்களால் சீனாவிடமிருக்கும் இரசியத் தயாரிப்பு Su-27, Su-35,  உள்நாட்டுத் தயாரிப்புக்களான J-11 and J-15 ஆகிய போர் விமானங்களைச் சமாளிக்க முடியும். ஆனால் J-20ஐயும் FC-31 Gyrfalcon ஐயும் சமாளிக்க இந்தியா துரிதமாகச் செயற்பட வேண்டும்.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை
2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை
3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)
4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)
5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

புலப்படாத்தன்மையை சமாளித்தல்
ரடார்களில் இருந்து வானொலி அலைகளை வீசி அது பட்டுத் தெறித்து வரும் வானொலி அலைகளைக் கொண்டு எதிரியின் இலக்குகளை அறிவதே கதுவி அல்லது ரடார் தொழில்நுட்பம். இதை இரண்டு வகையில் சமாளித்து புலப்படாத்தன்மை அமெரிக்காவால் முதலில் உருவாக்கப்பட்டது. முதலாவது வானொலி அலைகளை உறிஞ்சக் கூடிய பூச்சை விமானத்திற்கு பூசுதல். இரண்டாவது விமானத்தின் வடிவமும் மேற்பரப்பும் அதில் படும் வானொலி அலைகளை தெறிக்கச் செய்யாமல் திசைதிருப்பக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து வரும் வெப்ப அலைகளை உணர்ந்து  அவற்றை இனம் காணுதல். அமெரிக்காவின் Northrop Grumman நிறுவனம் வெப்ப அலைகளை அதிக அளவில் வெளிவிடாத விமான இயந்திரங்களை உருவாக்கியது. முதலில் புலப்படாத்தன்மை கொண்ட F-117 விமானத்தை லொக்கீட் மார்டின் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இருந்தும் அமெரிக்காவின் B-21 விமான உற்பத்தியை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெப்ப அலை முகாமைத்துவத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய Northrop Grumman நிறுவனத்திடம் கையளித்தது. ஏற்கனவே B-52, B-2 ஆகிய போர்விமானங்கள் மூலம் பெயர்பெற்ற Northrop Grumman நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான B-21 லொக்கீட் மார்ட்டீனின் F-35இலும் பார்க்க பல வகைகளில் சிறந்ததாக அமையும். அது பல வல்லரசு நாடுகளின் வான் பாதுக்காப்பை நிர்மூலமாக்கும்.


இரசியாவின் இயந்திரப் பிரச்சனைகள்
இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடான ஜப்பானுக்கே F-22 போர் விமானங்களை விற்பனை செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் தடுத்தது. இரசியாவின் தயக்கம் ஆரம்பத்தில் இரசியா தனது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரத் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் நிலையில் இல்லையா என்ற ஐயத்தை உருவாக்கியது. ஆனால் ஒரு முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரத்தை உருவாக்கும் தொழில்நுட்பமும் நிதியும் இரசியாவிடம் தட்டுப்பாடாக இருந்தது.

உடன்பாடுகளில் முரண்பாடுகள்
இரசியாவும் இந்தியாவும் எத்தனை விமானங்களை வாங்குவது, யார் எந்தப் பணியைச் செய்வது, விமானத்தின் புலப்படாத் தன்மை, இயந்திரத் தொழில்நுட்பம் தொடர்பாக இரசியாவும் இந்தியாவும் ஓர் உடன்பாட்டிற்கு வருவது கடினமாக இருந்தது. இரசியாவின் திட்டத்தில் இந்தியா 43 மாற்றங்களைச் செய்தது. இரசியாவின் எஸ்யூ-35 போர் விமானங்கள் வெற்றிகரமாக உற்பத்தி செய்து முடித்த பின்னர் இரசியா தான் வாங்க இருந்த இந்தக் கூட்டுத் தயாரிப்பு விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இரசியா 250 விமானங்களும் இந்தியா 144 விமானங்களும் வாங்குவதாக முதலில் ஒத்துக் கொள்ளப்பட்டது.  உற்பத்தி செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தால் விமானம் ஒன்றின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதால் தான் திட்டத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. 2015 டிசம்பரில் இரசியாவில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்த போது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் தொடர்பான ஒரு சரியான உடன்பாட்டை எட்ட முடியாமல் போனது. பின்னர் இரசியா சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தது.
2016 செப்டம்பரில் இரசியாவும் இந்தியாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்குவது தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தன.

சீனாவின் ஐந்தாம் ( தறு)தலைமுறை
சீனா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான J-31 திட்டத்தை மீண்டும் மேம்படுத்தியுள்ளது புதிய விமானத்திற்கு FC-31 Gyrfalcon என சீனா பெயர் சூட்டியுள்ளது. அதன் பரீட்சார்த்தப் பறப்பு 2016 டிசம்பர் இறுதியில் நடந்தது. இரட்டை இயந்திரங்கள், ரடார்களுக்கு புலப்படாத்தன்மை ஆகிய இரண்டும் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். அது எட்டு தொன் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக் கூடியது. ஒரு FC-31 Gyrfalconஇன் உற்பத்திச் செலவு 70மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் விமான இயந்திர உற்பத்தித் திறன் சிறப்பானது அல்ல. இதுவரை காலமும் அது விமான இயந்திரங்களை இரசியாவிடமிருந்தே வாங்கி வந்தது. சீனா அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனங்களின் கணினித் தொகுதிகளை ஊடுருவி திருடிய தொழில்நுட்பத்தகவல்களை வைத்தே தனது J-20 விமானத்தை உருவாக்கியதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீனாவின் J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் அல்லவென வாதிடுவோரும் உண்டு. சீனாவின் J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் என்றால் அது ஏன் இரசியாவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான எஸ்யூ-35 போர்விமானங்களை பெருமளவில் வாங்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சீனா J-20ஐக் காட்சிப் படுத்திய போது

இரசியாவின் T-50 (PAK FA)
இரசியா தான் தனித்து தயாரிக்கும் T-50 (PAK FA) போர் விமானங்கள் 2018-ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018-ம் ஆண்டு 250 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்து முடிக்கவிருக்கின்றது.  இவை பற்பணி, ஒற்றை இருக்கை, இரட்டை இயந்திர வான் ஆதிக்கம் செலுத்தக் கூடியதும், ஆழ்வான் உதவிவழங்கக் கூடியதுமான போர் விமானம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016-ம் ஆண்டு பல பரீட்சார்த்த பறப்புக்கள் மேற்கொண்ட போதிலும் இயந்திரம் இப்போதும் பிரச்சனைக்கு உரியதாகவே இருக்கின்றது. இதே வேளை இரசியா ஐக்கிய அமீரகத்துடன் இணைந்து தனது மிக்-29 போர்விமானங்களை அடிப்படையாக வைத்து ஓர் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கவிருக்கின்றது.

இந்தியா தனியாக 5-ம் தலைமுறைப்போர்விமானத்தை உருவாக்குமா?
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போர்விமானத்தின் வெற்றியை தொடர்ந்து தாம் தனியாக ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கலாம் என இந்திய நிபுணர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. அதேவேளை இரசியாவுடன் இணைந்து தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களிலும் பார்க்க சிறந்தவையாக அமையும். விமான உற்பத்தித் துறையில் சீனாவிலும் பார்க்க இரசியா பலவழிகளில் முன்னணியில் திகழ்கின்றது. இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் அமெரிக்காவின் F-35ஐப் போல் தொடர்பாடலிலும் புலப்படாத்தன்மையிலும் சிறந்து விளங்குமா? F-35ஐப் போல் வேவுபார்த்தல், காண்காணிப்பு, எதிரிநிலைகள் தொடர்பாக தகவல் திரட்டல், எதிரியின் தொடர்பாடல்களைக் குழப்புதல் போன்ற பற்பணிகளைச் செய்யக் கூடியதா? F-35ஐப் போல் எதிரியின் விமானம் தன்னை அடையாளம் காண முன்னர் எதிரியின் விமானங்களை இனம் கண்டு அழிக்குமா? F-35-C ஐப் போல் செங்குத்தாக எழும்புமா? அமெரிக்காவின் B-21ஐப் போல் உலகின் எப்பகுதிக்கும் சென்று குண்டுகளை வீசிவிட்டுத் தளம் திரும்புமா? இரசிய இந்தியக் கூட்டுத் தயாரிப்பு களத்தில் செயற்படத் தொடங்கும் போது அமெரிக்காவின் நெடிப் பொழுதில் லேசர் கதிர் மற்றும் மைக்குறோவேவ் கதிர் படைக்கலன்களைக் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் களத்திற்கு வந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை செல்லாக்காசு ஆக்கி விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு இரசிய இந்திய கூட்டுத் தொழில்நுட்பம் பதில் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையிட்டு சீனாவிலும் பார்க்க பாக்கிஸ்த்தானே அதிக கரிசனை கொண்டுள்ளது. சீனாவிற்குப் போட்டியாக இந்தியா உருவாக்கும் படைக்கலன்களுக்குப் போட்டியாக பாக்கிஸ்த்தான் படைக்கலன்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளது. அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை சமநிலை பாக்கிஸ்த்தானுக்குச் சாதகமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. இழுபட்டுக் கொண்டு போன இரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் தொடர்பான ஒப்பந்தம் 2017 பெப்ரவரி மாதத்தில் உடன்பாடு இறுதியாக எட்டப்பட்டுள்ளது. சீனா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான J-31ஐ உருவாக்க முன்னர் இந்தியா தன்வசம் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை வைத்திருக்குமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போமாக.


Monday, 6 March 2017

மீண்டும் ஒரு கொரியப் போர் நடக்குமா?

வட கொரிய சீனாவின் எல்லைக்கு அண்மையாக உள்ள தனது டொங்சாங்-ரி பிராந்தியத்தில் இருந்து 06/03/2017 திங்கள் உள்நாட்டு நேரம் காலை 7-.36 அளவில் நான்கு ஏவுகணைகளை ஜப்பானியக் கடலை நோக்கி வீசிப் பரீட்சித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கப் படைகளும் தென் கொரியப் படைகளும் செய்யும் போர் ஒத்திகைக்குப் பதிலடியாகவே இந்தப் பரிசோதனையைச் செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தளங்களை நிர்மூலமாக்குவதற்கான ஒத்திகை எனவும் வடகொரியா தெரிவித்தது. ஒரேயடியாகப் பல ஏவுகணைகளை வீசும் போது அவற்றை ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடை மறித்துத் தாக்கி அழிப்பது சிரமம்.

அமெரிக்கப்படை நகர்வு
2017 பெப்ரவரி 27-ம் திகதி வெள்ளை மாளிகையில் சீனப் பிரதிந்தி யாங் ஜீச்சியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியா தொடர்பாக சீனா செயற்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் இரு நிகழ்வுகள் நடந்தன. ஒன்று வட கொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை சீனா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை செய்ய முடிவெடுத்திருந்தது. மற்றது அமெரிக்கா தனது மூன்றாவது கடற்படைப் பிரிவை வட கொரியாவை நோக்கி நகர்த்தியதுடன் எதற்கும் தயாராக இருக்கும் படி அந்தப் படைப்பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிரம்ப் சீனப் பிரதிநிதியைச் சந்தித்த மறுநாள் அமெரிக்காவுக்கு மிகவும் பெரிய ஆபத்து தற்போது வட கொரியாவே என டிரம்ப் நம்புவதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. பராக் ஒபாமாவும் தனது பதவியின் இறுதி நாட்களில் வட கொரியாவால் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தல் என்ற கருத்தை டிரம்பிடம் தெரிவித்திருந்ததாகவும் சி.என்.என் தகவல் வெளியிட்டது.

சிறு குண்டுகளும் பெரும் குண்டுகளும்
2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது புத்தாண்டுச் செய்தியில் அமெரிக்காவை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை தாம் உற்பத்தி செய்வோம் என சூளுரைத்தார். அதற்கு டுவிட்டரில் டிரம்ப்பின் பதில் அப்படி எதுவும் நடக்காது. ஜோர்ஜ் எச் டபிளியூ புஷ் காலத்தில் இருந்தே ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் வட கொரியாவை அணுக்குண்டு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என சூளுரைப்பது வழக்கம். வட கொரியா ஏவுகணைகளால் தாங்கிச் செல்லக் கூடிய அளவு சிறிதாக்கப் பட்ட அணுக்குண்டுகளை இதுவரை தயாரிக்கவில்லை என சில தகவல்கள் தெரிவித்த போதிலும் வட கொரியா ஐம்பது கிலோ எடையுள்ள அணுக்குண்டுகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறுமையைச் சோதித்த பரிசோதனை
2017 பெப்ரவரி 12-ம் திகதி வட கொரியா செய்த ஏவுகணைப் பரிசோதனை புதிய அமெரிக்க அதிபர் டிரம்பின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் அமைந்திருந்தது. டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போது வட கொரியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்ததுடன் தேவை ஏற்படின் தான் வட கொரிய அதிபர் ;கிம் ஜொங் உன்னைச் சந்திக்கத் தயார் என்றும் சொல்லியிருந்தார். 2006-ம் ஆண்டில் வட கொரியா அணுக்குண்டு பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் செய்யக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்தது. அதையும் மீறிப் பல பரிசோதனைகளை வட கொரியா செய்து கொண்டிருக்கின்றது. கிம் ஜொங் உன் தாம் பரிசோதித்த ஏவுகணை அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடியது என மார்தட்டியிருந்தார். அந்த ஏவுகணை பரிசோதனையின் போது 600கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஜப்பானியக் கடலில் விழுந்து வெடித்திருந்தது.

பரிசோதிக்க முன்னர் நிர்மூலம்
வட கொரியா இனிச் செய்யவிருக்கும் கண்டம் தாவும் ஏவுகணைப் பரிசோதனையை தரையில் வைத்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்ற கருத்து 2017 ஜனவரியில் அமெரிக்காவில் பரவலாக முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவில் பல படைத்துறை நிபுணர்கள் வட கொரியா அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கவில்லை என நம்புகின்றனர். வட கொரியாவின் ஏவுகணைகள் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளே வெளிவருகின்றன. வட கொரியாவின் ரப்போ டொங் – 3 ஏவுகணைகள் முழு அமெரிக்காவை தனது பாய்ச்சல் எல்லைக்குள் கொண்டுள்ளது எனவும் சில செய்திகள் சொல்கின்றன. 1970களின் பிற்பகுதியில் இருந்தே ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் வட கொரியாவிடம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தரப்பட்ட ஏவுகணைகள் இருப்பது உண்மை. ஆயிரம் கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் பாயக்கூடியவையை குறுந்தூர ஏவுகணைகள் என்றும் ஆயிரம் முதல் மூவாயிரம் கிலோ மீட்டர் பாயக் கூடியவை நடுத்தர ஏவுகணைகள் என்றும் மூவாயிரம் முதல் ஐயாயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை இடைத்தர ஏவுகணைகள் என்றும் ஐயாயிரத்து ஐநூறு கிலோ மீடர்களுக்கு மேல் பாயக் கூடியவை கண்டம் தாவும் ஏவுகணைகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வட கொரியாவின் நொடோங் – 1300கிமீ, ரபொடொங்-1 12,000கிமீ, முசுடங் 4,000கிமீ, ரபொடொங்-2 8,000கிமீ தூரம் பாயக் கூடியவை. வட கொரியாவின் அடுத்த இலக்கு இருபதினாயிரம் கிலோமீட்டர் வரை பாயக்கூடிய ரபொடொங்-3 ஏவுகணைகளாகும். இந்த வகை ஏவுகணைகளே அமெரிக்காவை ஆபத்துக்கு உள்ளாக்கக் கூடியவை. பராக் ஒபாமா பதவியில் இருக்கும் போது வட கொரியாவின் அணுக்குண்டு உருவாக்கத்திற்கு எதிராக பல இணைய வெளித் தாக்குதல்கள் நடந்தன. அது டிரம்ப்பின் ஆட்சியிலும் தொடர்கின்றது.

அச்சமூட்டும் ஏவுகணைகள்
வட கொரியா தனது நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளில் பாவிக்கும் திண்ம எரிபொருள் ஆபத்தானதும் இடை நடுவில் வெடித்துச் சிதறக் கூடியதுமாகும். வட கொரியா தனது மொசுடன் ஏவுகணைகளைப் பரிசோதித்த போது அது ஐந்து தடவைகள் வெடித்துச் சிதறியது என தென் கொரிய உளவுத் துறை தெரிவித்திருந்தது. புக்கக்சோங்-2 ஏவுகணைகள் இடம்விட்டு இடம் நகரக்கூடிய பார் ஊர்திகளில் இருந்து செலுத்தக் கூடியவை. அவற்றை தரையில் வைத்து இனக் காணுதல் கடினம். அதனால் அவை ஏவப்பட முன்னர் தரையில் வைத்தே அழிக்க முடியாதவை. இந்த இரண்டும் வட கொரியாவின் எதிரிகளைப் பெரிதும் கரிசனை கொள்ள வைத்துள்ளது. 

போர் என்றால் இருதரப்பு அழிவு நிச்சயம்
1950இல் இருந்து 1953 வரை கொரியப் போர் நடந்தது. அப்போதில் இருந்தே வட கொரியாவைப் பொறுத்தவரை சட்ட ரீதியாக தென் கொரியாவுடன் அது ஒரு போர் நிலையில்தான் இருக்கின்றது. 63 ஆண்டுகளாக இரு கொரியாக்களுக்கும் இடயில் போர் நடக்காமல் இருப்பது ஓர் அதிசயமே. தென் கொரியத் தலை நகர் சியோல் வட கொரியாவுடனான எல்லைக்கு அண்மையில் இருக்கின்றது. போர் நடந்தால் தென் கொரியா பெரும் பொருளாதார அழிவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

2016-ம் ஆண்டு வட கொரியா இருபதிற்கும் மேற்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்தது. 2006 ஒக்டோபரில், 2009 மே, 2013 பெப்ரவரியில், 2016 ஜனவரியில், 2016 செப்டம்பரில் என ஐந்து அணுக் குண்டுப் பரிசோதனைகளையும் வட கொரியா செய்துள்ளது. ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உற்பத்தி செய்வதில் வட கொரியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் வேகமாக நடக்கின்றது.

சூளுரைத்த அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலர்  ஜேம்ஸ் மத்திஸ் முதல் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்குமே. இரு நாடுகளுடனும் புதிய அமெரிக்க அதிபர் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்வார் என்பதை உறுதி செய்யவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. வட கொரியா அணுக் குண்டைப் பாவித்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பதிலடியை அமெரிக்கா கொடுக்கும் என தென் கொரியாவில் வைத்து ஜேம்ஸ் மத்திஸ் சூளுரைத்திருந்தார்.

அமெரிக்காவின் தாட் தென் கொரியாவில்
2017-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையான Terminal High-Altitude Area Defense (THAAD) தென் கொரியாவில் சீனாவின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு இடையில் நிறுவப்படவிருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் தற்போதைய தென் கொரிய அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம். யார் புதிய அதிபர் பதவிக்கு வருவார் அவர் எப்படி முடிவு எடுப்பார் என்பது பெரும் கேள்விக் குறியே. ஏற்கனவே தென் கொரியாவில் அமெரிக்கா அணுக்குண்டுகளை வைத்துள்ளது எனச் சில உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தென் கொரியாவில் தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தினால் சீனா இரண்டு பதிலடி நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்று தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளை நிறுத்துவது. இரண்டு சீனா வாங்கி வைத்திருக்கும் தென் கொரிய அரச முறிகளை விற்பனை செய்வது. இது பாரிய பொருளாதாரப் பிரச்சனைகளை தென் கொரியாவில் உருவாக்கும். கொரியாவை சம்சங் குடியரசு எனவும் கேலியாக அழைப்பர். சம்சங் நிறுவனம் அந்த அளவிற்கு கொரியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டமை கொரியப் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பாகும்.

அமெரிக்காவும் ஜப்பானும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் சந்தித்த அரசுத்தலைவர்களுள் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபே முக்கியமானவர். பிரித்தானிய அதிபர் தெரெசா மேயுடன் நடந்த சந்திப்பிலும் பார்க்க அபேயுடன் நடந்த சந்திப்பு அதிக அளவு சுமூகமாக நடந்தது. இதை அபே கூட எதிர்பார்த்திருக்கவில்லை. இவர்களது சந்திப்பில் வட கொரியாவிலும் பார்க்க சீனாவைப் பற்றிய கரிசனையே அதிகம் இருந்திருக்கும். வட கொரியாவால் ஜப்பானும் ஆபத்தை எதிர்கொள்கின்றது. ஜப்பான் கொரியத் தீபகற்பத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த போது செய்த மோசமான போர்க் குற்றங்கள் இன்றும் கொரியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருக்கின்றது.

ஈரானும் வட கொரியாவும்
ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் இடையில் பல துறைகளில் ஒத்துழைப்பு நடக்கின்றன. ஈரான் யூரேனியம் பதப்படுத்தல் பீப்பாய்களை வட கொரியாவிடமிருந்து வாங்கியதாகவும் நம்பப்படுகின்றது. ஈரான் இதுவரை அணுக்குண்டுகளை உருவாக்கவில்லை. வட கொரியா உருவாக்கி விட்டது. அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகளில் வீசக் கூடிய ஏவுகணைகள் உருவாக்க வட கொரியா பெருமுயற்ச்சி எடுத்தாலும் அதில் இதுவரை வெற்றி காணவில்லை என நம்பப்படுகின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கிவிட்டதாக நம்பப்படுகின்றது. இரு நாடுகளும் பண்டமாற்றுச் செய்தால் அது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பெரும் ஆபத்தாகும்.


வடகொரிய நிலை மாற்றத்தை சீனா விரும்பவில்லை.
வட கொரியாவில் தற்போதுள்ள ஆட்சியாளாரை மாற்ற சீனா விரும்பவில்லை. அங்கு நடக்கும் ஆட்சி மாற்றத்தின் இரு விளைவுகளுக்கு சீனா அஞ்சுகின்றது. 1. ஆட்சி மாற்றம் தனக்கு எதிரான ஆட்சியாளர்களை வட கொரியாவில் உருவாகுவதை சீனா விரும்பவில்லை. 2. ஆட்சி மாற்றத்தால் இரு கொரியாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஐக்கிய கொரியா அமெரிக்க சார்பான நாடாக மாறினால் அது சீனாவிற்கு ஆபத்தானதாகும். சீனாவின் இந்த நிலைப்பாட்டால் ஈரானை அணுக்குண்டு தயாரிக்காமல் தடுப்பதில் அமெரிக்கா அடைந்த வெற்றியை வட கொரியாவில் அடைய முடியவில்லை.

கண்டம் தாவும் ஏவுகணைகள்
கண்டம் தாவுக் ஏவுகணைகள் குறைந்தது 5,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. வட கொரியா பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாயக் கூடிய கண்டம்தாவு ஏவுகணைகளை உருவாக்கினால் அது முழு வட அமெரிக்காவையும் ஆபத்திற்கு உள்ளாக்கும். வட கொரியாவின் ஏவுகணை நிலைகளையும் உற்பத்தி நிலைகளையும் அழிக்க வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் முன் வைக்கப்பட்டது. ஆனால் வட கொரியா ஒரு நீண்ட காலம் இழுபடக் கூடிய போரை ஆரம்பிக்கலாம் என்ற கரிசனை அதைத் தடுத்தது.

தடையான களைகள் களையப் படுகின்றனவா?
வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது ஆட்சிக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதை நன்கு உணர்ந்துள்ளார். அதனால் தனக்கு ஆபத்து உள்ளவர்களை அவர் ஒழித்துக் கட்டுகின்றார் எனப் பல அமெரிக்க ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. கிம் ஜொங் உன் தனது சித்தப்பாவை நாய்களை கடிக்க வைத்துக் கொன்றார் என்றும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வட கொரிய அதிபர் கிம் ஜென் உன்னின் தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் மலேசிய விமான நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் கிம் ஜென் உங் இருப்பதாகவும் வந்ததிகள் உலாவத் தொடங்கிவிட்டன. அண்மையில் வட கொரியப் படைத்தளபதி கிம் வொன் கொங் பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2017 பெப்ரவரி மாத இறுதியில் துணை அமைச்சர்கள் ஐந்து பேர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தென் கொரியாவில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.


காலப் போக்கில் வட கொரியா பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். அரசுக்கு எதிரான கிளர்ச்சி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. போரின் மூலம் வட கொரிய ஆட்சியைக் கலைப்பதிலும் பார்க்க அரசுக்கு எதிரான உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுத்தி அதை கவிழச் செய்வது காலம் எடுக்கும் என்றாலும் இலகுவானது. அது நடப்பதற்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியம். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதார நெருக்கடியை சீனா கொடுக்கச் செய்வதற்கான நகர்வுகள் பல ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளன. 

Wednesday, 1 March 2017

ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடுகள்


ஒரு நாடு ஆக்கிரமிக்க இலகுவானதா இல்லையா என்பது அதன் படைவலுவில் மட்டும் தங்கியில்லை. அதன் பூகோள அமைப்பு, நிலப்பரப்பு, காலநிலை, அதன் நட்பு நாடுகள் போன்றவையும் முக்கியமானதாகும். நேட்டோவில் புதிதாக இணைந்துள்ள லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய மூன்று நாடுகளையும் இரசியாவால் அறுபது மணித்தியாலங்களுக்குள் ஆக்கிரமிக்க முடியும். ஆனால் மற்ற நேட்டோ நாடுகள் அந்த ஆக்கிரமிப்பின் பின்னர் இரசியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அரசுறவியல் மற்றும் பொருளாதார் நடவடிக்கைகள் இரசியாவைத் தடுத்துள்ளன.

சுவிற்சலாந்து – பல வழிகளில் பாதுகாப்பு
சுவிற்சலாந்து தனது இயற்கை அமைப்புடன் பல செயற்கைக் கட்டமைப்புக்களைச் செய்தது மட்டுமல்லாமல் நெடுங்காலமாக நடுநிலை நாடாக இருந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட முடியாத நிலையில் இருக்கின்றது. பல மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள சுவிஸ் அந்த மலைகளுக்குள் பெரும் படையணி தங்கி இருந்து தாக்குதல் செய்யக் கூடிய குகைகளை அமைத்துள்ளது. அந்த மலைகளின் நுழைவாசல்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வரும் போது வெடித்துச் சிதறக் கூடிய இரகசிய ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. பாலங்களும் பெரும் தெருக்களும் வெடித்துச் சிதறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மூவாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக்குடியவையாக உள்ளன என சுவிஸ் அரசு சொன்னாலும் உண்மையில் ஆறாயிரம் இடங்கள் வெடித்துச் சிதறக் கூடியவை என நம்பப்படுகின்றது. உலகிலேயே முதலில் எல்லோருக்கும் படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி அவர்கள் தேவை ஏற்படும் போது கட்டாயமாக படைச் சேவைக்கு அழைக்கும் சட்டம் சுவிஸில் உண்டு. இதனால் ஒன்றரை இலட்சம் நிரந்தரப் படையினரைக் கொண்ட சுவிஸில் தேவை ஏற்படும் போது நாற்பது இலட்சம் படையினர் போர் முனையில் செயற்படுவர். சுவிஸ் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்படும் நாடாகும். உலகிலேயே அதிகாரப் பரவலாக்கம் உச்ச நிலையில் உள்ள நாடு சுவிஸ். அதன் நடுநிலைத் தன்மையால் பல உலக அமைப்புக்கள் சுவிஸ்ஸில் நிலை கொண்டுள்ளன. அது சுவிஸ் ஒரு சமாதான நாடாக இருக்க மேலும் உதவுகின்றது.

ஐஸ்லாந்து
மலைகள் எரிமலைக்குழம்பு, பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஐஸ்லாந்தும் ஆக்கிரமிக்கப்பட முடியாத ஒரு நாடாகும். அத்துடன் அங்கு பெரிய துறைமுகங்கள் ஏதும் இல்லை. அதனால் எதிரி நாட்டுப் படைகள் போய் தரையிறங்க முடியாது. உலகிலேயே அமைதியான நாடாகாக் கருதப்படும் ஐஸ்லாந்து தனது கரையோரப் பகுதியை கடுமையான கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் பேணிவருகின்றது.

நியூசிலாந்து
நியூசிலாந்தின் பூகோள அமைப்பு அதன் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கின்றது. அதன் அண்மை நாடான ஒஸ்ரேலியாவே ஆயிரம் மைல் தொலைவில் இருக்கின்றது. நியூசிலாந்தை ஆக்கிரமிக்கும் படைகள் கடினமான மலைகளைக் கடக்க வேண்டும். அந்த மலைகளிலும் காடுகளிலும் இருந்து நியூசிலாந்துப் படையினர் கரந்தடித் தாக்குதலை மேற்கொண்டு எதிரிகளை அழித்தொழிக்கலாம்.

ஒஸ்ரேலியா
பெரு நிலப்பரப்பும் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலையும் ஒஸ்ரேலியாவின் பாதுகாப்பு அரண்களாகும். இவற்றால் இரண்டாம் உலகப் போரின் போது ஒஸ்ரேலியாவை ஜப்பான் ஆக்கிரமிக்காமல் விட்டது. தற்போது சீனாவால் உருவாகியுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒஸ்ரேலியா அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பைப் பேணுவதுடன் அமெரிக்கப் படைகளையும் அங்கு நிலை கொள்ள அனுமதித்துள்ளது. ஒஸ்ரேலியாவிடமும் வலுமிக்க கடற்படை உண்டு. பல பன்னாட்டு படை நடவடிக்கைகளில் நேட்டோப் படையினருடன் இணைந்து செயற்பட்டு தனது படையினரின் போர் முனை அனுபவத்தை பேணிவருகின்றது.


ஜப்பான் – ஆக்கிரமிப்பதே அதன் வரலாறு
மேற்கு நாடுகளைப் போரில் கலங்கடித்த பெருமை ஜப்பானுக்கு உண்டு. இரசியாவைப் போரில் வென்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. தென் கொரியா சீனா ஆகிய நாடுகளை மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் படைகளை மலேயா, பர்மா போன்ற பல தூர கிழக்கு நாடுகளில் இருந்து விரட்டி அடித்தது ஜப்பான். உலகிலேயே அணுக் குண்டால் தாக்கப்பட்ட நாடு ஒரே நாடு ஜப்பான். அதன் போராடும் திறனை வேறு வழிகளால் அழிக்க முடியாததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா ஜப்பானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி அது ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது என அதன் அரசியலமைப்பு யாப்பில் இருந்தாலும் பாதுகாப்புக்கு மட்டுமான படை என்னும் பெயரில் உலகில் படைவலுவில் முன்னணி நாடாக இருக்கும் ஜப்பான் தீவை ஆக்கிரமிக்க முடியாது. அதன் விமானப் படை உலகின் ஐந்தாவது பெரியதாக இருக்கின்றது.

ஈரான் – தீவிரவாத அமைப்புக்கள் பெரும் துணை
மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த அரசக் கட்டமைப்பு தேசப்பற்றும் கல்வியறிவும் மிக்க மக்கள் அர்பணிப்புடன் போர் புரியக் கூடிய படையினர் ஆகியவை ஈரானின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஈராக்கில் ஆக்கிரமிப்புக் எதிராக நீண்ட நாள் சளைக்காமல் போராடி வெற்றி கண்டவர்கள் ஈரானியர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தாடைக்கு எதிராக நின்று பிடித்தவர்கள் ஈரானியர். மத்திய கிழக்கில் பெரிய படை ஈரானினுடையது. பல மலைத் தொடர்களைக் கொண்ட ஈரானின் பூகோள அமைப்பும் அதன் பாதுகாப்பிற்கு வலுவூட்டுகின்றது. பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்களுக்கு உதவி செய்வதால் அந்த விடுதலை அமைப்புக்களின் ஆதரவு ஈரானின் வலிமையாகின்றது. ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய விடுதலை அமைப்புக்கள் தீவிரவாதத் தாக்குதல்களை தொடுக்கும் என்ற அச்சம் ஐக்கிய அமெரிக்காவையே கரிசனை கொள்ள வைத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தினால் நாம் அமெரிக்காவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு 2015-ம் ஆண்டு தெரிவித்திருந்தது.

கனடா
உலகப் பெரு வல்லரசான அமெரிக்காவை அயல் நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் கொண்டிருக்கும் கனடா வடக்கே வடதுருவத்தையும் தெற்கே ஐக்கிய அமெரிக்காவையும் மற்ற இரு புறங்களிலும் பசுபிக் மாக் கடலையும் அத்லாந்திக் மாக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய நிலப்பரப்பையும் நேட்டோ உறுப்புரிமையையும் கொண்ட கனடாவை ஆக்கிமிக்க முடியாது.

ஐக்கிய இராச்சியம்
உலகப் பெரு வல்லரசாக இருந்த ஐக்கிய இராச்சியம் இன்றும் பொருளாதாரத்திலும் படைவலுவிலும் உலகில் முன்னணி நாடாக இருக்கின்றது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஐக்கிய இராச்சியம் சிறந்த படைத்துறையைக் கொண்ட ஒரு வல்லரசாகும். இதனால் அது இன்றும் ஒரு ஆக்கிரமிக்கப்பட முடியாதநாடாகும். உலகின் முதற்தரப் பயிற்ச்சி மட்டுமல்ல அனுபவம் மிக்க படையணி அர்ப்பணிப்புடன் போர் புரியக் கூடியது. உலகிலேயே சிறந்த சிறப்புப் படையணியைக் கொண்டது ஐக்கிய இராச்சியம். கடற்போக்குவத்திலும் கடற்போரிலும் பல நூற்றாண்டு அனுபவத்தைக் கொண்டது.

இரசியா
உலகிலேயே பெரிய அளவு நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவை முழுமையாக ஆக்கிரமிப்பது முடியாத ஒன்று என்பது சரித்திரத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதன் கால நிலையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதுவானது அல்ல என்பதையும் நெப்போலியனும் ஹிட்லரும் செய்த ஆக்கிரமிப்பு சுட்டி நிற்கின்றது. இரசியாவின் முழு வட எல்லை பனிப்பாறைகளாலான வடதுருவமாகும். தென் புறமுள்ள பல நாடுகள் வலுவற்ற சிறிய நாடுகளாகும். இரசியாவின் பெரு நிலப்பரப்பில் அநேக மலைகளும் ஆறுகளும் உள்ளன. அப்படிப்பட்ட பெரு நிலப்பரப்பை ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய படை வலிமை எந்த நாட்டுக்கும் இல்லை. படைத்துறை வலு என்று பார்க்கும் போதும் இரசியா உலகில் முன்னணியில் நிற்கின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையான அணுக்குண்டுகளை வைத்திருக்கும் நாடு இரசியாவாகும்.

ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவும் சாதகமான பூகோள அமைப்பைக் கொண்டது. மொத்த உலகப் படைத்துறைச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவினுடையது. அதன் படைத்துறைத் தொழில்நுட்பம் தன்னிகரில்லாதது. அதன் படைகள் உலகின் எங்காவது ஒரு மூலையில் படைநடவடிக்கை செய்து கொண்டே இருக்கின்றன. உலகில் நடக்கும் பத்து படை மோதல்களில் ஒன்பதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கும். உலகெங்கும் பல நூற்றுக் கணக்கான படைத்தளங்களை வைத்திருக்கும் அமெரிக்கா தாக்குதலே சிறந்த பாதுகாப்பு என்னும் கொள்கையைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள நாடு அமெரிக்காவாகும். அமெரிக்காவில் சராசரியாக நூற பேருக்கு 112 துப்பாக்கிகள் என்ற அளவில் துப்பாக்கிப் பாவனை அங்கு உண்டு. இரசியாவில் நூறு பேருக்கு எட்டு என்ற அளவிலேயே துப்பாக்கிப் பாவனையில் உண்டு. அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிக அளவு துப்பாக்கி பாவனையில் உள்ள யேமனில் நூற்றுக்கு 54 என்ற அளவிலேயே துப்பாக்கி பாவனையில் உண்டு. இதனால் அமெரிக்காவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால் ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கியுடன் களத்தில் இறங்கலாம்.

பிரான்ஸ்????
பிரான்ஸ் ஒரு வல்லரசாக இருந்தாலும் அதை ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடு என எந்த ஒரு படைத்துறை நிபுணர்களும் அதை வகைப்படுத்தவில்லை. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் முன்னணியில் இருந்தாலும் அதன் படைகட்டமைப்பும் படை முகாமைத்துவமும் இரண்டாம் போரின் போது சரியானதாக இருக்கவில்லை.

இந்தியாவையும் சீனாவையும் ஆக்கிரமிக்கலாம்!!!!
இந்தியாவும் சீனாவும் ஆக்கிரமிக்கப் பட முடியாத நாடுகளாக வகைப்படுத்தப்படவில்லை. இந்தியா மொகாலயர். பிரித்தானியா சீனா போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. கார்கில் போரில் வெல்ல இந்தியாவிற்கு இஸ்ரேலின் உதவி தேவைப்பட்டது. இந்தியாவின் எல்லைகளில் சீனப்படைகள் ஊடுருவி படை நிலைகளை நிறுவுவது பல தடவைகள் நடந்துள்ளன. இந்தியாவில் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை அல்லது பிரிவினைவாத அமைப்புக்களைத்  தூண்டி இந்தியாவை சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். வரலாற்று ரீதியாகப் பாருக்கும் போது சீனா 470 தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. ஆக்கிரமிப்பாளர்களால் அது பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இரசியா விலகி இருந்தால் அல்லது நடு நிலை வகித்தால் சீனாவை இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கிரமிக்க முடியும். சீனாவிடம் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே பெரிய படை இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியிலும் போர் முனை அனுபவ ரீதியிலும் அது பின் தங்கியுள்ளது. ஒரு சீனப் படை வீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 1500 அமெரிக்க டொலர்களாகவும் ஓர் அமெரிக்கப் படைவீரனிடம் இருக்கும் கருவிகளின் பெறுமதி 17,000 டொலர்களுக்கு அதிகமானதாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப வித்தியாசத்தைக் காட்டுகின்றது. 2030-ம் ஆண்டளவில் சீனாவும் இந்தியாவும் ஆக்கிரமிக்கப்பட முடியாத நாடுகளாக உருவெடுக்கும்.

எதிர் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவரவிருக்கும் செயற்கை விவேகம் படைத்துறையில் கணனிகளால் இயக்கப்படும் இயந்திர மனிதர்களை போர் முனையில் ஈடுபடுத்தும். அந்த தொழில்நுட்பம் பெருவளர்ச்சியடைய முன்னர் மக்கள் தொகையும் அதன் கட்டமைப்பும் போர் புரியும் திறனில் கணிசமான பங்கை வகிக்கும். அதிக இளையோரைக் கொண்ட இந்தியா அந்த வகையில் உலக அரங்கில் மற்ற நாடுகள் பார்த்து கரிசனை கொள்ளக் கூடிய நிலையை இன்னும் பத்து ஆண்டுகளில் அடையும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...