Monday, 6 March 2017

மீண்டும் ஒரு கொரியப் போர் நடக்குமா?

வட கொரிய சீனாவின் எல்லைக்கு அண்மையாக உள்ள தனது டொங்சாங்-ரி பிராந்தியத்தில் இருந்து 06/03/2017 திங்கள் உள்நாட்டு நேரம் காலை 7-.36 அளவில் நான்கு ஏவுகணைகளை ஜப்பானியக் கடலை நோக்கி வீசிப் பரீட்சித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கப் படைகளும் தென் கொரியப் படைகளும் செய்யும் போர் ஒத்திகைக்குப் பதிலடியாகவே இந்தப் பரிசோதனையைச் செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தளங்களை நிர்மூலமாக்குவதற்கான ஒத்திகை எனவும் வடகொரியா தெரிவித்தது. ஒரேயடியாகப் பல ஏவுகணைகளை வீசும் போது அவற்றை ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடை மறித்துத் தாக்கி அழிப்பது சிரமம்.

அமெரிக்கப்படை நகர்வு
2017 பெப்ரவரி 27-ம் திகதி வெள்ளை மாளிகையில் சீனப் பிரதிந்தி யாங் ஜீச்சியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியா தொடர்பாக சீனா செயற்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் இரு நிகழ்வுகள் நடந்தன. ஒன்று வட கொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை சீனா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடை செய்ய முடிவெடுத்திருந்தது. மற்றது அமெரிக்கா தனது மூன்றாவது கடற்படைப் பிரிவை வட கொரியாவை நோக்கி நகர்த்தியதுடன் எதற்கும் தயாராக இருக்கும் படி அந்தப் படைப்பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிரம்ப் சீனப் பிரதிநிதியைச் சந்தித்த மறுநாள் அமெரிக்காவுக்கு மிகவும் பெரிய ஆபத்து தற்போது வட கொரியாவே என டிரம்ப் நம்புவதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. பராக் ஒபாமாவும் தனது பதவியின் இறுதி நாட்களில் வட கொரியாவால் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தல் என்ற கருத்தை டிரம்பிடம் தெரிவித்திருந்ததாகவும் சி.என்.என் தகவல் வெளியிட்டது.

சிறு குண்டுகளும் பெரும் குண்டுகளும்
2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது புத்தாண்டுச் செய்தியில் அமெரிக்காவை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை தாம் உற்பத்தி செய்வோம் என சூளுரைத்தார். அதற்கு டுவிட்டரில் டிரம்ப்பின் பதில் அப்படி எதுவும் நடக்காது. ஜோர்ஜ் எச் டபிளியூ புஷ் காலத்தில் இருந்தே ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் வட கொரியாவை அணுக்குண்டு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என சூளுரைப்பது வழக்கம். வட கொரியா ஏவுகணைகளால் தாங்கிச் செல்லக் கூடிய அளவு சிறிதாக்கப் பட்ட அணுக்குண்டுகளை இதுவரை தயாரிக்கவில்லை என சில தகவல்கள் தெரிவித்த போதிலும் வட கொரியா ஐம்பது கிலோ எடையுள்ள அணுக்குண்டுகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறுமையைச் சோதித்த பரிசோதனை
2017 பெப்ரவரி 12-ம் திகதி வட கொரியா செய்த ஏவுகணைப் பரிசோதனை புதிய அமெரிக்க அதிபர் டிரம்பின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் அமைந்திருந்தது. டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போது வட கொரியாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்ததுடன் தேவை ஏற்படின் தான் வட கொரிய அதிபர் ;கிம் ஜொங் உன்னைச் சந்திக்கத் தயார் என்றும் சொல்லியிருந்தார். 2006-ம் ஆண்டில் வட கொரியா அணுக்குண்டு பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் செய்யக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்தது. அதையும் மீறிப் பல பரிசோதனைகளை வட கொரியா செய்து கொண்டிருக்கின்றது. கிம் ஜொங் உன் தாம் பரிசோதித்த ஏவுகணை அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடியது என மார்தட்டியிருந்தார். அந்த ஏவுகணை பரிசோதனையின் போது 600கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஜப்பானியக் கடலில் விழுந்து வெடித்திருந்தது.

பரிசோதிக்க முன்னர் நிர்மூலம்
வட கொரியா இனிச் செய்யவிருக்கும் கண்டம் தாவும் ஏவுகணைப் பரிசோதனையை தரையில் வைத்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்ற கருத்து 2017 ஜனவரியில் அமெரிக்காவில் பரவலாக முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவில் பல படைத்துறை நிபுணர்கள் வட கொரியா அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கவில்லை என நம்புகின்றனர். வட கொரியாவின் ஏவுகணைகள் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளே வெளிவருகின்றன. வட கொரியாவின் ரப்போ டொங் – 3 ஏவுகணைகள் முழு அமெரிக்காவை தனது பாய்ச்சல் எல்லைக்குள் கொண்டுள்ளது எனவும் சில செய்திகள் சொல்கின்றன. 1970களின் பிற்பகுதியில் இருந்தே ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் வட கொரியாவிடம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு தரப்பட்ட ஏவுகணைகள் இருப்பது உண்மை. ஆயிரம் கிலோ மீட்டருக்குக் குறைவான தூரம் பாயக்கூடியவையை குறுந்தூர ஏவுகணைகள் என்றும் ஆயிரம் முதல் மூவாயிரம் கிலோ மீட்டர் பாயக் கூடியவை நடுத்தர ஏவுகணைகள் என்றும் மூவாயிரம் முதல் ஐயாயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் பாயக் கூடியவை இடைத்தர ஏவுகணைகள் என்றும் ஐயாயிரத்து ஐநூறு கிலோ மீடர்களுக்கு மேல் பாயக் கூடியவை கண்டம் தாவும் ஏவுகணைகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வட கொரியாவின் நொடோங் – 1300கிமீ, ரபொடொங்-1 12,000கிமீ, முசுடங் 4,000கிமீ, ரபொடொங்-2 8,000கிமீ தூரம் பாயக் கூடியவை. வட கொரியாவின் அடுத்த இலக்கு இருபதினாயிரம் கிலோமீட்டர் வரை பாயக்கூடிய ரபொடொங்-3 ஏவுகணைகளாகும். இந்த வகை ஏவுகணைகளே அமெரிக்காவை ஆபத்துக்கு உள்ளாக்கக் கூடியவை. பராக் ஒபாமா பதவியில் இருக்கும் போது வட கொரியாவின் அணுக்குண்டு உருவாக்கத்திற்கு எதிராக பல இணைய வெளித் தாக்குதல்கள் நடந்தன. அது டிரம்ப்பின் ஆட்சியிலும் தொடர்கின்றது.

அச்சமூட்டும் ஏவுகணைகள்
வட கொரியா தனது நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளில் பாவிக்கும் திண்ம எரிபொருள் ஆபத்தானதும் இடை நடுவில் வெடித்துச் சிதறக் கூடியதுமாகும். வட கொரியா தனது மொசுடன் ஏவுகணைகளைப் பரிசோதித்த போது அது ஐந்து தடவைகள் வெடித்துச் சிதறியது என தென் கொரிய உளவுத் துறை தெரிவித்திருந்தது. புக்கக்சோங்-2 ஏவுகணைகள் இடம்விட்டு இடம் நகரக்கூடிய பார் ஊர்திகளில் இருந்து செலுத்தக் கூடியவை. அவற்றை தரையில் வைத்து இனக் காணுதல் கடினம். அதனால் அவை ஏவப்பட முன்னர் தரையில் வைத்தே அழிக்க முடியாதவை. இந்த இரண்டும் வட கொரியாவின் எதிரிகளைப் பெரிதும் கரிசனை கொள்ள வைத்துள்ளது. 

போர் என்றால் இருதரப்பு அழிவு நிச்சயம்
1950இல் இருந்து 1953 வரை கொரியப் போர் நடந்தது. அப்போதில் இருந்தே வட கொரியாவைப் பொறுத்தவரை சட்ட ரீதியாக தென் கொரியாவுடன் அது ஒரு போர் நிலையில்தான் இருக்கின்றது. 63 ஆண்டுகளாக இரு கொரியாக்களுக்கும் இடயில் போர் நடக்காமல் இருப்பது ஓர் அதிசயமே. தென் கொரியத் தலை நகர் சியோல் வட கொரியாவுடனான எல்லைக்கு அண்மையில் இருக்கின்றது. போர் நடந்தால் தென் கொரியா பெரும் பொருளாதார அழிவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

2016-ம் ஆண்டு வட கொரியா இருபதிற்கும் மேற்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்தது. 2006 ஒக்டோபரில், 2009 மே, 2013 பெப்ரவரியில், 2016 ஜனவரியில், 2016 செப்டம்பரில் என ஐந்து அணுக் குண்டுப் பரிசோதனைகளையும் வட கொரியா செய்துள்ளது. ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உற்பத்தி செய்வதில் வட கொரியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் வேகமாக நடக்கின்றது.

சூளுரைத்த அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலர்  ஜேம்ஸ் மத்திஸ் முதல் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்குமே. இரு நாடுகளுடனும் புதிய அமெரிக்க அதிபர் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்வார் என்பதை உறுதி செய்யவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. வட கொரியா அணுக் குண்டைப் பாவித்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பதிலடியை அமெரிக்கா கொடுக்கும் என தென் கொரியாவில் வைத்து ஜேம்ஸ் மத்திஸ் சூளுரைத்திருந்தார்.

அமெரிக்காவின் தாட் தென் கொரியாவில்
2017-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையான Terminal High-Altitude Area Defense (THAAD) தென் கொரியாவில் சீனாவின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு இடையில் நிறுவப்படவிருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் தற்போதைய தென் கொரிய அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம். யார் புதிய அதிபர் பதவிக்கு வருவார் அவர் எப்படி முடிவு எடுப்பார் என்பது பெரும் கேள்விக் குறியே. ஏற்கனவே தென் கொரியாவில் அமெரிக்கா அணுக்குண்டுகளை வைத்துள்ளது எனச் சில உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தென் கொரியாவில் தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை நிறுத்தினால் சீனா இரண்டு பதிலடி நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்று தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளை நிறுத்துவது. இரண்டு சீனா வாங்கி வைத்திருக்கும் தென் கொரிய அரச முறிகளை விற்பனை செய்வது. இது பாரிய பொருளாதாரப் பிரச்சனைகளை தென் கொரியாவில் உருவாக்கும். கொரியாவை சம்சங் குடியரசு எனவும் கேலியாக அழைப்பர். சம்சங் நிறுவனம் அந்த அளவிற்கு கொரியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டமை கொரியப் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பாகும்.

அமெரிக்காவும் ஜப்பானும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் சந்தித்த அரசுத்தலைவர்களுள் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபே முக்கியமானவர். பிரித்தானிய அதிபர் தெரெசா மேயுடன் நடந்த சந்திப்பிலும் பார்க்க அபேயுடன் நடந்த சந்திப்பு அதிக அளவு சுமூகமாக நடந்தது. இதை அபே கூட எதிர்பார்த்திருக்கவில்லை. இவர்களது சந்திப்பில் வட கொரியாவிலும் பார்க்க சீனாவைப் பற்றிய கரிசனையே அதிகம் இருந்திருக்கும். வட கொரியாவால் ஜப்பானும் ஆபத்தை எதிர்கொள்கின்றது. ஜப்பான் கொரியத் தீபகற்பத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த போது செய்த மோசமான போர்க் குற்றங்கள் இன்றும் கொரியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருக்கின்றது.

ஈரானும் வட கொரியாவும்
ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் இடையில் பல துறைகளில் ஒத்துழைப்பு நடக்கின்றன. ஈரான் யூரேனியம் பதப்படுத்தல் பீப்பாய்களை வட கொரியாவிடமிருந்து வாங்கியதாகவும் நம்பப்படுகின்றது. ஈரான் இதுவரை அணுக்குண்டுகளை உருவாக்கவில்லை. வட கொரியா உருவாக்கி விட்டது. அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று எதிரி இலக்குகளில் வீசக் கூடிய ஏவுகணைகள் உருவாக்க வட கொரியா பெருமுயற்ச்சி எடுத்தாலும் அதில் இதுவரை வெற்றி காணவில்லை என நம்பப்படுகின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கிவிட்டதாக நம்பப்படுகின்றது. இரு நாடுகளும் பண்டமாற்றுச் செய்தால் அது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பெரும் ஆபத்தாகும்.


வடகொரிய நிலை மாற்றத்தை சீனா விரும்பவில்லை.
வட கொரியாவில் தற்போதுள்ள ஆட்சியாளாரை மாற்ற சீனா விரும்பவில்லை. அங்கு நடக்கும் ஆட்சி மாற்றத்தின் இரு விளைவுகளுக்கு சீனா அஞ்சுகின்றது. 1. ஆட்சி மாற்றம் தனக்கு எதிரான ஆட்சியாளர்களை வட கொரியாவில் உருவாகுவதை சீனா விரும்பவில்லை. 2. ஆட்சி மாற்றத்தால் இரு கொரியாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஐக்கிய கொரியா அமெரிக்க சார்பான நாடாக மாறினால் அது சீனாவிற்கு ஆபத்தானதாகும். சீனாவின் இந்த நிலைப்பாட்டால் ஈரானை அணுக்குண்டு தயாரிக்காமல் தடுப்பதில் அமெரிக்கா அடைந்த வெற்றியை வட கொரியாவில் அடைய முடியவில்லை.

கண்டம் தாவும் ஏவுகணைகள்
கண்டம் தாவுக் ஏவுகணைகள் குறைந்தது 5,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. வட கொரியா பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாயக் கூடிய கண்டம்தாவு ஏவுகணைகளை உருவாக்கினால் அது முழு வட அமெரிக்காவையும் ஆபத்திற்கு உள்ளாக்கும். வட கொரியாவின் ஏவுகணை நிலைகளையும் உற்பத்தி நிலைகளையும் அழிக்க வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் முன் வைக்கப்பட்டது. ஆனால் வட கொரியா ஒரு நீண்ட காலம் இழுபடக் கூடிய போரை ஆரம்பிக்கலாம் என்ற கரிசனை அதைத் தடுத்தது.

தடையான களைகள் களையப் படுகின்றனவா?
வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் தனது ஆட்சிக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதை நன்கு உணர்ந்துள்ளார். அதனால் தனக்கு ஆபத்து உள்ளவர்களை அவர் ஒழித்துக் கட்டுகின்றார் எனப் பல அமெரிக்க ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. கிம் ஜொங் உன் தனது சித்தப்பாவை நாய்களை கடிக்க வைத்துக் கொன்றார் என்றும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வட கொரிய அதிபர் கிம் ஜென் உன்னின் தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் மலேசிய விமான நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் கிம் ஜென் உங் இருப்பதாகவும் வந்ததிகள் உலாவத் தொடங்கிவிட்டன. அண்மையில் வட கொரியப் படைத்தளபதி கிம் வொன் கொங் பதவி நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2017 பெப்ரவரி மாத இறுதியில் துணை அமைச்சர்கள் ஐந்து பேர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தென் கொரியாவில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.


காலப் போக்கில் வட கொரியா பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். அரசுக்கு எதிரான கிளர்ச்சி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. போரின் மூலம் வட கொரிய ஆட்சியைக் கலைப்பதிலும் பார்க்க அரசுக்கு எதிரான உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுத்தி அதை கவிழச் செய்வது காலம் எடுக்கும் என்றாலும் இலகுவானது. அது நடப்பதற்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியம். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதார நெருக்கடியை சீனா கொடுக்கச் செய்வதற்கான நகர்வுகள் பல ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளன. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...