Monday, 7 November 2016

அதிகாரமிக்க தலைமை சீனாவை உலகின் முதன்மை நாடாக்குமா?

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் மையத்திண்மைத் தலைவராக்கப்(Core Leader) பட்டுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு தலைவருக்கும் வழங்கப்படாத பதவி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மாவோ சே துங் அவர்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு ஒப்பான அதிகாரம் உள்ளவராக்கப் பட்டுள்ளார். மாவோ சே துங் தனது பதவிக் காலத்தின் இறுதி ஆண்டுகளில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பதால் அவருக்குப் பின்னர் சீனப் பொதுவுடைமைக் கட்சி ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரசியலவையின் நிலையியற் குழு (Politburo Standing Committee) சீனாவின் அதிகார மையமாக்கப்பட்டது. திண்மைத் தலைவரின் விருப்பம் தான் நாட்டின் சட்டம் என்னும் அளவிற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. ஒருவரிடம் அதிக அதிகாரம் இருப்பது ஊடக சுதந்திரம் இல்லாத சீனா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு ஆபத்தானது என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் ஜின்பிங்கிடம் அதிக அதிகாரமிருப்பது சீனாவில் ஊழலை ஒழித்துக் கட்டவும் பொருளாதாரத்தைத் திறன்மிக்கதாக்கவும் உதவும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

மையத் திண்மைத் தலைமை
சீனப் பொதுவுடமைக் கட்சியின் யாப்பில் மையத்திண்மைத் தலைவர் என்ற பதத்திற்கான வரைவிலக்கணம் இல்லை. 1989-ம் ஆண்டு டெங் ஜியொபிங் முதலில் மையத்திண்மைத் தலைமை என்ற பதத்தை அறிமுகம் செய்தார். அப்போது நடந்த தினமன் சதுக்க கிளர்ச்சியின் பின்னர் ஜியான் ஜெமின்னிற்கு மாவோ சே துங்கிடம் இருந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன.  ஜி ஜின்பிங்கிற்கு மைய்த்திண்மைத் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் சீனப் பொதுவுடமைக் கட்சியில் அவரை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் அவருக்கு அடிபணிந்துள்ளார்கள் எனக் கருதப்படுகின்றது. மாவோ மையத்திண்மைத் தலைவராக கருதப்படக்கூடிய அளவிற்கு அவருக்கு கட்சியில் மதிப்பு இருந்தது. சீனாவின் பொருளாதாரம் நெருக்கடி நிலையில் இருந்தபோது அதைச் சீர்திருத்தம் தேவைப்பட்டதால் டெங் ஜியொபிங் மையத்திண்மைத்தலைவரானார்.  ஜியான் ஜெமின் காலத்தில் இருந்த சூழ்நிலையில் ஒரு மையத்திண்மைத் தலைவர் தேவைப் பட்டதால் அது அவர் மேல் திணிக்கப்பட்டது. ஜி ஜின்பிங் தனக்குத் தானே அந்தப் பட்டத்தை சூட்டிக் கொண்டுள்ளார்.

ஆண்டு இறுதி மாநாடு 
சீனப் பொதுவுடமைக் கட்சியின் 18வது நடுவண் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆண்டு இறுதி மாநாடு 2016 ஒக்டோபர் மாதக் கடைசியில் நான்கு நாட்கள் நடை பெற்றது. இதில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 350 முதல் 400 பேர்வரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிலேயே ஜின்பிங்கிற்கு மையத்திண்மைத் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. சீனாவை எந்தத் திசையில் இட்டுச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தன்மை இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒட்டியே அமையவிருக்கின்றது. 2002-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டின் ஆரம்பம் வரை சீன அதிபராக இருந்த ஹு ஜின்ரௌவின் ஆட்சியில் சீனாவின் பொதுவுடமைக் கட்சியில் ஊழல் தாண்டவமாடியது. அவர் ஓர் ஆளுமையில்லாத அதிபராகவும் பொது இடங்களில் சிறப்பாகப் பேசம் அளவிற்கு நாவன்மை அற்றவருமாகும். அவரது ஆட்சிக்காலத்தில் கட்சியையும் படைத்துறையையும் சேர்ந்த பலர் ஊழலின் மூலம் பெரும் செல்வந்தர்களாகினர். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜி ஜின்பிங் தலைமைத்துவம் மிக்கவராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருக்கின்றார். அவர் ஊழலை ஒழித்துக் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார். ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவராக இருக்கும் வங் கிஷான் நடுவண் குழு உறுப்பினர்கள் உட்பட 150 பேரை தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கின்றார். சீனப் பொதுவுடைமைக் கட்சியில் ஜின்பிங்கிற்கு பரவலான ஆதரவு இருக்கின்றது. அவரும் சீனப் பொதுவுடமைக் கட்சி, சீனா ஆட்சி, சீனப் படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களையும் தனது இறுக்கமான பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றார். அதில் வெற்றி பெற்றும் வருகின்றார். அரசியலவையின் நிலையியற் குழுவிற்கு (Politburo Standing Committee) அநேகமாக எல்லோரும் புதிதாக நியமிக்கும் உறுப்பினர்களாகும். ஜின்பிங்கிற்கு சவால் விடக்கூடியவர் தலைமை அமைச்சர் லி கெக்கியாங் மட்டுமே. அவரை ஜின்பிங்க் விரைவில் வேறு பதவிக்கு மாற்றி ஓரம் கட்டி விடுவதற்கான அல்லது அடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதனால் ஜின்பிங்கிற்கு கட்சியில் சவால் விடக்கூடியவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.

வாரிசை அறிவிக்காத ஜி ஜின்பிங்
சீனப் பொதுவுடமைக் கட்சியின் வழமைப்படி 2017-ம் ஆண்டு ஜி ஜின்பிங்கிற்குப் பின்னர் யார் நாட்டின் அதிபர் மற்றும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரவிருக்கின்றார்கள் என்பது பற்றி 2016 ஒக்டோபர் நடந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் அறிவித்திருக்க வேண்டும். சீன அதிபர் பதவியை ஒருவர் இரண்டு ஐந்தாண்டுக்காலம் வகிக்கலாம். ஆனால் ஜின்பிங் தான் மூன்றாம் தடவையும் பதவி வகிக்க விரும்புகின்றாரா என்ற ஐயம் எழுந்துள்ளது. 2017-ம் ஆண்டின் இறுதியில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேரவை மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில் ஜின்பிங் தனது முத்திரையைக் குத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனாவை முதன்மை நாடாக்க ஜி ஜின்பிங்கின் பணிகள்:
1. ஒரு பட்டி, ஒரு பாதை முன்னெடுப்பு (one road, one belt initiative) மூலம் சீனாவின் பொருளாதாரத்திற்கு தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதியும் சீனாவின் ஏற்றுமதியும் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்தல்.
2. 2021-ம் ஆண்டு சீனாவைச் செழிப்பான நாடாக மாற்றுதல்.
3. ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதரத்தை மேலும் சீர்திருத்தம் செய்து உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்தல்
4. சீனாவை உலகின் முதற்தரப் பொருளாதார நாடாக்குதல்.
5. சீனப் படைத்துறையை உலகில் ஈடு இணையற்றதாக்குதல்
6. ஹொங் கொங் தீவில் சீனாவின் பிடி தளராமல் தடுத்தல்
7. தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் ஆகியவற்றை அபகரித்தல்
8. தாய்வனை சீனாவுடன் இணைத்தல்
சீனாவை ஒரு சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் அதேவேளையில் பொருளாதாரத்தில் அரசுடமை காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் என சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்திருந்தது. சந்தைப் பொருளாதாரமும் அரசுடமையும் ஒன்றிற்கு ஒன்று முரணானவை என்பதை அப்போது அரசியல் மற்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள். உண்மையில் பொதுவுடமைக் கட்சி என்னும் போர்வையில் நாட்டை தம் பிடிக்குள் வைத்திருப்பவர்கள் தமது பிடியில் இருந்து நாடு விலகுவதை விரும்பாதபடியால்தான் இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கை வகுக்கப்பட்டது. சீனாவின் வளங்கள் திறன் மிக்க வகையில் ஒதுக்கீடு செய்யப் படாமைக்கு சீனாவின் அரசுடமைக் கொள்கையும் ஒரு காரணமாகும்.

சீனாவின் உட்கட்டுமான அரசுறவியல்(infrastructure diplomacy)
 சீனா உலகப்பெரு வல்லரசாக மாறுவதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அதற்கு சீனாவின் அரசுறவியலும் உளவுத் துறையும் உலகத் தரம் வாய்ததாக இருக்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக சீனா தனது உட்கட்டுமானங்களில் பெருமளவு முதலீடு செய்தது. அந்த உட்கட்டுமானத்திற்கான பல இயந்திரங்களும் மனிதவளங்களும் தற்போது பயன்படுத்தாமல் இருக்கின்றன. அவற்றை வெளிநாடுகளில் சீனா பயன்படுத்துகின்றது. ஒரு நாட்டில் பாரிய விமான நிலையத்தை சீனா கட்டி எழுப்பும். அதற்கான கடன் அந்த நாட்டுக்கு சீன வங்கியால் அதிக வட்டிக்கு வழங்கப்படும். அந்த உட்கட்டுமானத்திற்கான பணிகளில் அந்த நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பெரும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் மூலம் அந்த நாடும் ஆட்சியாளர்களும் சீனாவிற்கு சார்பாக நடந்து கொள்வார்கள். ஆனால் அந்த விமான நிலையம் பெரும் பொருளாதார இழப்பீட்டை அந்த நாட்டிற்கு ஏற்படுத்தும். உலக அரங்கில் சீனா செய்யும் இந்த நடவடிக்கைகளை உட்கட்டுமான அரசுறவியல் என அழைக்கலாம். சீனாவின் இந்த வகையான அரசுறவியல் மூலமாக சீனாவின் உறவு வளையத்தினும் கொண்டு வரப்படும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்களும் மனித உரிமை மீறல்களும் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சீனாவிற்கு ஒவ்வாதவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவது இலகுவானதாக இருக்கின்றது. சீனாவின் நட்புறவு நாடுகளின் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சீனா அக்கறை காட்டாமல் இருப்பதை அது தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பிலிப்பைன்ஸை அமெரிக்காவில் இருந்து பிரித்து சீனாவுடன் நட்பை நெருக்கமாக்குவதாக அறிவித்தார். அவர் அப்படித் தெரிவித்தவுடன் முன்னாள் அதிபரும் அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தவருமான ஃபிடல் ரமோஸ் டுடெர்டோவின் அணியில் இருந்து விலகினார். சீனாவிற்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். பிலிப்பைன்ஸில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி அதிக மக்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பதிலும் பார்க்க அமெரிக்காவுடன் உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் திடீரென நெருக்கமாக்கப் பட்ட உறவு இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் மீதான சீனாவின் பிடியைத் தளர்த்தவில்லை. ஆனால் அத்தீவுக் கூட்டங்களை ஒட்டி பிலிப்பைன்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்வதை சீனக் கரையோரக் காவற்படையினர் தற்போது “அனுமதி” வழங்கியுள்ளனர்.

பெருவல்லரசு (Super Power)
சீனாவின் உலகப் பெருவல்லரசுக் கனவின் முதற்படி தாய்வானைத் தன்னுடன் இணைப்பதாகும். ஆனால் சீனாவில் இருந்து தாய்வான் விலகிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய சீன ஆட்சியாளர்களும் இணைப்பைத் தள்ளிப் போட்டுள்ளனர். வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் தொலைதூர ஏவுகணைப் பெருக்கத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு தென் கொரியாவில் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் படையினரும் படைக்கலன்களும் வியட்னாமும் அமெரிக்காவும் பல துறைகளிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதும் சீனாவின் பெருவல்லரசுக் கனவுக்குப் பெரும் சவாலாகும். அமெரிக்காவின் இந்தியாவிற்கான தூதுவர் 2016-ம் ஆண்டு ஒக்டோபர் 22-ம் திகதி அருணாசலப் பிரதேசத்திற்கு அதன் முதலமைச்சரின் அழைப்பின் பேரில் சென்றமைக்கு சீனா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது தென் திபெத் எனச் சொல்லி அது தனது நாட்டின் ஒரு பகுதி என அடிக்கடி சொல்லி வருகின்றது. அருணாச்சலப் பிரதேசம், கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல் ஆகிய நில மற்றும் கடற்பரப்புக்களை சீனா தனது என அடம் பிடிப்பது அதன் அயலவர்களை அமெரிக்காவுடன் படைத்துறை ரீதியில் ஒத்துழைக்க நிர்ப்பந்திக்கின்றது. சீனா தனது அயல் நாடுகளுடன் உருவாக்கும் முறுகல்கள் சீனாவை உலகின் முதற்தர நாடாக மாற்ற உகந்ததல்ல.

உலக நாணயம்
சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு சீனாவின் மூலதனச் சந்தையை மற்ற நாடுகளுக்கு திறந்துவிட வேண்டும். இது சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசுடமையைத் தொடர்ந்து பேணும் கொள்கைக்கு பெரும் சவாலாக அமையும். சீனாவில் தற்போது நிலவும் பொருளாதார சூழ் நிலையும் சீன நாணயத்தின் பெறுமதியைத் தேவைக்கு ஏற்ப மாறும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ் நிலையில் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளது.

சீனா உலகின் முதற் தர நாடாக இருப்பதற்கு பெரும் தடையாக உள்ளது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பாகும். சீனாவின் மக்கள் தொகையில் இளையோர் குறைவாவும் முதியோர் தொகை அதிகமாகவும் இருக்கின்றது இதனால் சீனாவில் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல படைத்துறைப் பிரச்சனையையும் சீன ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இளையோர் தொகை அதிகமாகவுள்ள இந்தியா தனது படைத்துறை ஆளணியை அதிகரித்தால் அது சீனாவிற்கு பெரும் சவாலாக அமையலாம

Monday, 31 October 2016

உலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்

சிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள், தொழில்நுட்பங்கள், போன்றவற்றைப் பாவித்து தனித்துவமானதும் மிக இரகசியமானதுமான தாக்குதல்களை செய்ய சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையணியாகும். இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய முன்னணி நாடுகள் எல்லாம் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கும் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கும் என சிறப்புப் படையணிகளை அமைத்தன. தற்போது பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் அமைப்புக்களுக்கு எதிராகத் தாக்குதல் செய்வதற்கும் அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும் என சிறப்புப் படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட சிறப்பு படையணிகளை வைத்துள்ளன. அவை வெவ்வேறு நோக்கங்களுக்கா உருவாக்கப் பட்டுள்ளன.

கடினமான பயிற்ச்சி
சிறப்புப் படையணிகள் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எப்படிப் பட்ட கால நிலையிலும் எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் தாக்குதல் செய்யக் கூடிய வகையில் பயிற்றுவிக்கப் படுவார்கள். அவர்களுக்கு என சிறப்பான கருவிகளும் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். நிலம், நீர், வானம் ஆகிய மூன்று முனைகளிலும் செயற்படும் பயிற்ச்சி சிறப்புப் படையணிகளுக்கு வழங்கப்படும். அகப்படும் உணவை உண்டு எந்த மோசமான உறைவிடத்திலும் தொடர்ந்து இருக்கக் கூடிய வகையிலும் சிறப்புப் படையணிக்குப் பயிற்ச்சி வழங்கப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் திவிரவாதிகளைக் கைது செய்வது தொடர்பாகவும் சிறப்புப் படையணிகளுக்குப் பயிற்ச்சிக வழங்கப்படும். சிறப்புப் படையணிகளின் தாக்குதலுக்கு உளவுத் தகவல் முக்கியமானதாகும். 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிறப்புப் படையணிகள் உருவாக்கப் பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் முன்னணி நிலைகளுக்குப் பின்னால் சென்று அதிரடித் தாக்குதல்களைச் செய்து எதிரியை திணறடிக்கக் கூடிய சிறப்புப் படையணிகள் உருவாக்கப் பட்டன. சிறப்புப் படையணிகளின் தரவரிசை:

10-இடம்: MARCOS - இந்தியாவின் சிறப்புப் படையணி
சுருக்கமாக MARCOS  என அழைக்கப் படும் Marine Commando Force என்னும்  இந்தியாவின் சிறப்புப் படையணி இந்தியக் கடற்படையின் பிரிவாகும். நீரிலும் நிலத்திலும் செயற்படக் கூடிய இந்தச் சிறப்புப் படையணி பயங்கரவாத எதிர்ப்பு, நேரடித் தாக்குதல், உளவுபார்த்தல்,  அணுக்குண்டுப் பரவலாக்கத் தடுப்பு, மரபுசாராப் போர், பணயக் கைதிகளை விடுவித்தல்போன்றவற்றில் MARCOS சிறப்புப் படையணிக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடல்சார் நிலைகளில் செயற்படக் கூடிய வகையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட MARCOS இல் இணைவது இந்தியப் படையினருக்கு இலகுவான ஒன்றல்ல. இணைந்த பின்னர் மூன்று ஆண்டுகள் பயிற்ச்சி வழங்கப்படும். அவர்களுடைய இலக்குவாசகம் ( motto ) அச்சமில்லாச் சிலர் என்னும் பொருளுடைய The Few The Fearless என்பதாகும். மும்பாயில் உள்ள ஐ.என்.எஸ் அபிமன்யூ பயிற்ச்சி நிலையத்தின் அவர்களது பயிற்ச்சி ஆரம்பித்து அருணாசலப் பிரதேசத்தில் High Altitude Commando Course இல் பயிற்ச்சியளிக்கப்பட்டு பின்னர் ராஜஸ்த்தானில் பாலைவனப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்படும். அவற்றைத் தொடர்ந்து மிஸோரமில் வனப்பகுதியில் போர் செய்வது பற்றிப் பயிற்ச்சி வழங்கப்படும். பின்னர் அமெரிக்கா சென்று அமெரிக்காவின் US Navy SEAL சிறப்புப் படையணியுடன் பயிற்ச்சி பெறுவர்.

9-ம் இடம்: இத்தாலியின் Gruppo di Intervento Speciale
இத்தாலியின் GIS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Gruppo di Intervento Speciale படையணி 1977-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இது குறிதவறாமல் சுடுவதில் திறன் பெற்றது. ஒவ்வொன்றும் நால்வரைக் கொண்ட பல குழுக்களை இது கொண்டது. குறுகிய அவகாச காலத்தில் இது செயற்படத் தயாராகக் கூடியது. இவை மற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளின் சிறப்புப் படையணிகளுடன் இணைந்து செயற்படக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவை.

8-ம் இடம்: ஒஸ்றியாவின் EKO Cobra
1978-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் படையணி பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்படக் கையாண்டு உலகப் புகழ் பெற்றவை. ஒரு விமானக் கடத்தலை வானத்திலேயே வைத்து முறியடித்த பெருமை இதற்கு உண்டு. 1996-ம் ஆண்டு ஒரு விமானம் நடுவானில் வைத்து கடத்தப்பட்டது அதில் நான்கு EKO Cobra படையினர் பயணம் செய்வதை விமானக் கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த நால்வரும் விமானக் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர். 

7-ம் இடம்: பிரான்சின் GIGN படையணி
GIGN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் National Gendarmerie Intervention Group என்னும் பிரான்சின் படையணி உலகின் எந்தப்பாகத்திலும் செயற்படக்கூடிய வகையில் பயிற்ச்சி வழங்கப்பட்டவை. அதிக எண்ணிக்கை கொண்ட படையணியை துரிதமாக நகர்த்தக் கூடிய வகையில் இவை பயிற்றுவிக்கப்பட்டவை.

6-ம் இடம்: பாக்கிஸ்த்தானின் Special Services Group படையணி
உலகிலேயே மிகவும் துணிச்சல் மிக்க படையணியாக பாக்கிஸ்த்தானின் படையணி கருதப்படுகின்றது. 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படையணி அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் சிறப்புப் படையணிகளுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. பாக்கிஸ்த்தானின் படையணி போன்ற ஒரு துணிச்சலான படையணி எம்மிடம் இருந்தால் எம்மால் உலகத்தை வெல்ல முடியும் என ஒரு இரசிய அதிபர் கூறியிருந்தார்.

5-ம் இடம்: அமெரிக்காவின் Delta Force படையணி

அமெரிக்காவின் டெல்டா படையணி உலகப்புகழ் பெற்றது. களம்பல கண்டது. அமெரிக்காவின் சிறப்புப் படையணிகளில் இயற்திறன் (aptitude) மிக்கவர்களை தெரிந்தெடுத்து இப்படையணியில் இணைத்துள்ளனர். ஈரானில் மாணவர்கள் அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாக 1979-,ம் ஆண்டு வைத்திருந்தபோது அவர்களை மீட்க முயன்ற படை நடவடிக்கை உலங்கு வானூர்திகள் பழுதடைந்ததால் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் கிரெனடாவிலும் சோமாலியாவிலும் டெல்டா படையணியின் முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. தொழில்நுட்பமும் பயிற்ச்சியும் டெல்டா படையணியை உலகின் முன்னணிப் படையணியாகத் திகழ வைக்கின்றது.

4-ம் இடம்: இஸ்ரேலின் Shayetet 13  படையணி

இஸ்ரேலின் கடற்படையின் ஒரு பிரிவான Shayetet 13  படையணி நீருக்குகீழ் போர் புரிவதிலும் சிறப்புப் பயிற்ச்சி வழங்கப்பட்ட படையணியாகும். 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்ற பலஸ்த்தீனியர்களை வேட்டையாடியதில் இது உலகப் புகழ் பெற்றது. நாசவேலைகள் செய்வதில் இது உலகின் முன்னணிப் படையணியாகும். காசா நிலப்பரப்பில் செயற்படும் காமாஸ் போராளிகளுக்கு இரகசியமாக படைக்கலன்களை எடுத்துச் செல்லும் கப்பல்களை இடை மறித்துத் தாக்குவதில் பல தடவைகள் வெற்றிகளைக் இது கண்டது. இஸ்ரேலிய உளவுத் துறையின் சிறந்த செயற்பாடு இந்தப் படையணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தது.

மூன்றாம் இடம்: இரசியாவின் Alpha Group படையணி

பயிற்ச்சி தொழில்நுட்பம் தெரிவு ஆகியவற்றால் இரசியாவின் Alpha Group படையணி சிறந்த படையணியாகக் கருதப் படுகின்றது. சோவியத் ஒன்றியம் 1970களில் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த போது அதிபர் மாளிகைக்குள் இந்தப் படையணி நுழைந்து அங்கு இருந்த எல்லோரையும் கொன்று குவித்தது.

இரண்டாம் இடம்: அமெரிக்காவின் Navy SEALs படையணி

பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து பின் லாடனைக் கொன்றதன் மூலம் உலகப் புகழ் பெற்றது அமெரிக்கக் கடற்படையின் சீல் படையணி. இது 2013-ம் ஆண்டு சோமாலிய அல் ஷபாப் அமைப்பினருக்கு எதிராக கடல் வழியாகப் போய் இறங்கி தரைவழி நகர்ந்து அதிகாலையில் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. சிறுநீர் கழிக்க தமது முகாமில் இருந்து வெளியே வந்த ஒரு அல் ஷபாப் போராளி இவர்களின் நகர்வுகளை அவதானித்துக் கலவரப் படாமல் உட் சென்று தனது நண்பர்களை துயிலெழுப்புத் திருப்பித் தாக்கியதால் சீல் படையினர் தலை தெறிக்கப் பின்வாங்கி ஓடினர்.

முதலாம் இடம்: பிரித்தானிய SAS படையணி

அமெரிக்காவின் படையணியிலும் பார்க்க பிரித்தானியப்படையணி சிறந்ததா என்ற கேள்வி எழுவது நியாயம். ஆனால் பல படைத்துறை நிபுணர்கள் SAS படையணியை முதல் தரப் படையணியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரித்தானிய வான் படையில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களால் நிரப்பப்படுவது இப்படையணி. 1941-ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் படையணிக்குப் பின்புறம் சென்று பல தாக்குதல்களை வெற்றிகரமாகச் செய்தது. பாரமிக்க படைக்கலன்களைச் சுமந்தபடி தொடர்ந்து இருபது மணித்தியாலத்தில் நாற்பது மைலைக் கடத்தல் இதன் முதற் பயிற்ச்சியாகும். பாரத்தைத் தாங்கியபடி ஒரு மணித்தியாலத்தில் இரண்டு மைல்கள் நீந்திச் செல்ல வேண்டும். பின்னர் விமானம் மூலம் காட்டுக்குள் இறக்கப்பட்டு திசையறிதல் கடினமான சூழலில் இயங்குதல் போன்றவற்றில் பயிற்ச்சியளிக்கப்படும். இறுதியாக மன வலிமை பற்றி அறிய 36 மணித்தியாலம் தொடர் நேர்முகப் பரிட்சை நடத்தப் படும். பின்னரே தொடர் பயிற்ச்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்ச்சியை வழங்குவதில் பிரித்தானிய உளவுத்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். 1980-ம் ஆண்டு இலண்டனில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தைக் கைப்பற்றிய தீவிரவாதிகளிடமிருந்து பயணக் கைதிகளை மிகத் துரிதமாகச் செயற்பட்டு தீவிரவாதிகளைக் கொன்றது இதன் மிகப்பெரிய வெற்றியாகும். ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையில் இருந்த பிரித்தானியர்களை 2000-ம் ஆண்டு சீரா லியோனில் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்தனர். அவர்களின் முகாமிற்குள் துணிகரமாக உலங்கு வானூர்திகளில் இருந்து கயிறு மூலம் இறங்கிய SAS படையினர் ஒரு உயிரிழப்புடன் பணயக் கைதிகளை மீட்டனர். ஆர்ஜெண்டீனாவிற்கு எதிரான போக்லண்ட் போரின் போது SAS படையினர் ஆர்ஜெண்டீனாவின் போர் விமானத் தளத்தில் இருந்து ஐந்து மைல் தொலவில் தரையிறங்கி ஆர்ஜெண்டீனிய விமானங்களை கைக்குண்டுகளாலும் துப்ப்பாக்கிளாலும் அழித்தனர். இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே போல சதாம் ஹுசேய்னின் ஸ்கட் ஏவுகணைகளையும் அழித்தொழித்தனர்.


ஒரு கருத்துக் கணிப்பெடுப்பும் SAS படையணியை உலகின் தலை சிறந்த படையணி எனத் தெரிவிக்கின்றது. SAS படையணியும் அமெரிக்காவின் சீல் படையணியும் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்படுவதுண்டு. இரு படையணிகளும் அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் கத்திச் சண்டை நிபுணர்களிடமிருந்து கத்திச் சண்டை பயிற்ச்சி பெற்றுள்ளன. Sayoc Kali என்னும் பிலிப்பைன்ஸ் தற்பாதுகாப்புச் சண்டை, இஸ்ரேலியப் படையினர் ஜூடோ, மற்போர், குத்துச் சண்டை ஆகியவற்றில் உள்ள நுடபங்களை இணைத்து உருவாக்கிய Krav Maga சண்டை, புரூஸ் லீ மூலம் பிரபலமான சீனத் தற்பாதுகாப்பான Jeet Kune Do ஆகியவற்றில் பயிற்ச்சி பெற்றிருக்கின்றார்கள்.
காலணிக் கத்தி, இருட்டிலும் பார்க்கக் கூடிய கண்ணாடிகள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்பெறும் கருவிகள், மிகவும் சிரமமான இடங்களில் ஏறவும் இறங்கவும் கூடிய கயிறுகள், தொடர்பாடல் கருவிகள் GPS என்னும் வழிகாட்டிக் கருவிகள் சிறப்புப்படையணிகளிடம் அவசியம் இருக்க வேண்டியவையாகும். தேவை ஏற்படின் சாதாரண ஆட்களைப் போல் மாறக்கூடிய உடைகளும் அவர்கள் வைத்திருப்பர். அமெரிக்காவின் Green Berets என்னும் சிறப்புப் படையணி கலாச்சாரம், மொழி, மனோதத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது. பிரித்தானியாவின் Special Boat Service என்ற சிறப்புப் படையணி பிரித்தானியக் கடற்படையின் ஒரு பிரிவாகும். இதுவும் SAS படையணிக்கு ஈடான சிறப்புப்படையணியாகும். சிறப்புப் படையணை தொடர்பாகவும் பல் வேறுபட்ட படைத்துறை நிபுணர்கள் பல் வேறு தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். சீனாவின் படையணிகள் ஏதும் இடம்பெறாமை ஆச்சரியப்பட வைக்கின்றது. சீனா நீண்ட காலமாகப் போர் முனைகளில் செயற்படாமையும் அதன் இரகசியம் பேணலும் காரணமாக இருக்கலாம். போலாந்தின் JW GROM படையணியும் ஒரு சிறந்த படையணியாகக் கருதப்படுகின்றது. அது இதுவரை உயிழப்பு எதையும் சந்திக்காதது பெருமைக்கு உரியதாகும். அதனால் ஒரு நிபுணர் அதை ஐந்தாவது சிறந்த படையணி என்கின்றார். போலாந்தின் சிறப்பு படையணியினர் ஒவ்வொருவரும் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை பேசக் கூடியவர்களாகப் பயிற்ச்சியளிக்கப் பட்டுள்ளனர். பல ஐரோப்பிய நாடுகள் 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பலஸ்த்தீனியப் போராளிகள் கொன்ற பின்னர் தமது சிறப்புப் படையணிகளை பயங்கரவாத எதிர்ப்புப் படையணியாக உருவாக்கின. ஆனால் பிரித்தானியா தனது படையணியை இரண்டாம் உலகப் போரின் போது மரபுவழிப் படையணிகளுக்கு எதிராகச் செயற்பட உருவாக்கியது. எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான படையினரை கொண்ட படையணிகளுக்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்டது. அமெரிக்கப் படை தனது சிறப்புப் படையணியை இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கினாலும் பல படை நடவடிக்கைகள் வியட்னாம் போரின் போதே செய்யப்பட்டன். சிறப்புப் படையணிகளின் வரலாற்றில் மிக மோசமான தோல்வி அமெரிக்கா 1993-ம் ஆண்டு சோமாலியாவில் சந்தித்த தோல்வியாகும் முதல் இறங்கிய படையணி எதிர்பாராத எதிர்ப்பைச் சந்தித்து மாட்டிக் கொண்டது. அதை இறக்கிய உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. முதற் சென்ற படையணியை மீட்கச் சென்ற படையணியையும் மீட்க வேண்டிய நிலை உருவானது. இரண்டாவது உலங்கு வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர்களை இறுதியில் மீட்டது ஐக்கிய நாடுகளின் சமாதானப் பணிக்கு சோமாலிய சென்றிருந்த பாக்கிஸ்த்தானின் படையினரே. அமெரிக்காவின் சிறப்புப் படையணிக்கு மிகவும் உறு துணையாக அதன் ஆளில்லாப் போர் விமானங்களும் செய்மதித் தொடர்பாடல் GPS என்னும் இடம் அறியும் முறைமை பக்க வலுவாகும். அமெரிக்கப் படையின் துரித தொழில் நுட்ப வளர்ச்சி அதன் படையணிகளின் தரத்தை எதிர்காலத்தில் மேலும் உயர்த்தும்.


பயங்கரவாத எதிர்ப்புக்கு என்று உருவாக்கப் பட்ட பல சிறப்புப் படையணிகள் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. 

Thursday, 27 October 2016

அமெரிக்காவின் புதிய AC-130J Ghostrider விமானம்

உலக வரலாற்றில் அதிக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் AC-130J Ghostrider என்னும் புதிய போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விமானம் அமெரிக்கப் படைகளுக்கு நெருக்கமாக நின்று செயற்படக்கூடியது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் இதை ஒரு a badass plane என விமர்சிக்கின்றனர்.  badass என்பது a tough, uncompromising, or intimidating person எனப் பொருள்படும். இந்த விமானம் வலிமை மிக்கதும் விட்டுக்கொடுக்காததும் பயமூட்டுவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பாலும் 2017இன் இறுதியில் இந்த வகை விமானங்கள் பாவனைக்கு ் வரவிருக்கின்றன.


சுமை தாங்கி


AC-130J Ghostrider விமானத்தை குண்டு வீச்சு விமானமாக வகைப்படுத்தலாம். அதில் இவை gunships என அழைக்கப்படுகின்றன.  30மில்லி மீட்டர் மற்றும் 105 மில்லி மீட்டர் பீராங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் AGM-176A Griffin missiles என்னும் ஏவுகணைகள்,  Hellfire ஏவுகணைகள், GBU-39 Small Diameter குண்டுகள் போன்றவற்றைக் காவிச் செல்லக் கூடியவை. இவை மட்டுமல்ல அமெரிக்கா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் லேசர் படைக்கலன்களையும் இவற்றில் 2020-ம் ஆண்டு பொருத்தப்படவிருக்கின்றன. இதன் six-bladed propellers பெரும் பாரத்தைத் தூக்கிச் செல்லும் வலுவை இதற்குக் கொடுக்கின்றன. கணனிகள் மூலம் இயக்கக் கூடிய smart weaponsகளும் இதில் இருந்து வீச மூடியும் வகையில் புதுமைப்படுத்தப்பட்டுள்ளது.


குண்டு மழை

லொக்கீட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AC-130 விமானங்களுக்கு என ஒரு நீண்ட வரலாறு உண்டு.  எதிரியின் மீது குண்டு மழை பொழிவதற்கு என இவை உருவாக்கப் பட்டன. எதிரியின் இலக்கைச் சுற்றி இவை பறந்து கொண்டு இவற்றின் பக்கவாட்டில் இருக்கும் பீராங்கியில் இருந்து இலக்கின் மீது குண்டு மழை பொழிந்து அதை நிர்மூலமாக்கும். 2007-ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கிகளைத் தாங்கிச் செல்லக் கூடியவையாக மிள் வடிவமைக்கப்பட்டன. 2010-ம் ஆண்டு துல்லியமாகத் தாக்கக் கூடிய குண்டுகள் இவற்றில் பாவிக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு AC-130W Stinger II விமானங்கள் உருவாக்கப்பட்டன.


 ரடார்களும் AC-130J Ghostriderஉம்


இந்த வகை விமானங்களின் பின்னடைவாக இவற்றின் high signatures and low airspeed  கருதப்படுகின்றன. அதாவது எதிரியின் ரடார்களால் இலகுவில் இனம் கண்டுகொள்ளும் தன்மையும் குறைவான வேகத்தில் பறப்பதும் இவற்றின் குறைபாடுகளாகும். குறைவான வேகத்தில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது இலகுவானதாகும். இனி வரும் காலங்களில் ஸ்ரெல்த் தொழில் நுட்பம் இவற்றில் அறிமுகப்படுத்தப் படவுள்ளன. தற்போது ஆப்கானிஸ்த்தான், ஈராக் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியடையா படைகளுக்கு எதிராக AC-130 விமானங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆப்கான் போர் முடிந்தவுடன் AC-130 விமான உற்பத்தி நிறுத்துவதாக திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் இரசியா. சீனா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த படையினருக்கு எதிராகவும் பாவிக்கக் கூடிய வகையில் புதிய AC-130J Ghostrider விமானங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

Monday, 24 October 2016

ஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா?

சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தற்போது  பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.  2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.  ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் அவர்கள் இஸ்லாமிய அரசையும் நிறுவினர்.

குர்திஷ் தலைநகரில் அஸ்டன் கார்ட்டர்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமை ஈராக்கில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் தலைநகராகக் கருதப்படும் எர்பிலில் ஒரு கூட்டம் நடத்தினார். 

மொசுல் முற்றுகை
தற்போது அமெரிக்கா ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினரின் கடைசிப் புகலிடமாகக் கருதப்படும் மொசுல் நகரை கைப்பற்ற தனது வியூகத்தை வகுத்துள்ளது. முப்பதினாயிரம் ஈராக்கிய அரச படைகள் நான்காயிரம் குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா போராளிகள் அமெரிக்கப் போர்விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஆதரவுடன் ஈராக்கின் மொசுல் பிராந்தியத்தின் ஐ எஸ் அமைப்பினரின் வசமிருக்கும் பகுதிகளை மீட்கப் போர் தொடுத்துள்ளனர். இவர்களுடன் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினரும் ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்புப் படையணியும் இணைந்து கொள்வார்கள். மொசுலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போராளிகள் உட்பட எண்ணாயிரம் ஐ எஸ் போராளிகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. மொசுலில் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம் சுற்றிவளைக்கப் படும் என அறிந்த ஐ எஸ் அமைப்பினர் நிலத்தின் கீழ் சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் காசா நிலப்பரப்பில் நிலத்தின் கீழ் அமைத்துள்ள சுரங்கப் பாதைகள் அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்கின்றது. அவர்களுக்கான சுரங்கத் தொழில்நுட்பம் வட கொரியாவில் இருந்து ஈரானால் பெற்றுக் கொடுக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. நிலக்கீழ் சுரங்கப் பாதைக்குள் போர் புரிவதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கத் தொடங்கிவிட்டன. அது எந்த அளவில் தற்போது இருக்கின்றது என்பது பெரிதளவில் வெளிவரவில்லை. மொசுல் நகர் கைப்பற்றப் படும் போது கிடைக்கும் உளவுத் தகவல்களை ஆய்வு செய்ய அமெரிக்கா தனது உளவுத் துறை நிபுணர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. 

மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தற்போது உள்ள கொதிநிலைக்கான காரணங்கள்:
1. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பிற்கு அமெரிக்கா செய்யும் சதிகள்.
2. எரிபொருளின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள்
3. இஸ்லாமியப் “பயங்கரவாதத்திற்கு” எதிரான் போர் எனச் சொல்லிக்கொண்டு அமெரிக்கா செய்யும் படை நடவடிக்கைகள்.
4. சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டி.
5. சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதல்கள்.
6. குர்திஷ் மக்களுக்கு எதிராகப் பல்வேறுதரப்பினர் செய்யும் இனக்கொலை.
ஈராக்கின் வட பகுதியையும் சிரியாவின் வட பகுதியையும் தன்னுடன் இணைக்க துருக்கி விரும்புகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சவுதி சுனி முஸ்லிம்கள் ஆட்சி நடத்த வேண்டும் எனக் கருதுகின்றது. ஈரான் அங்கு சியா முஸ்லிம்களின் ஆட்சி நடப்பதை விரும்புகின்றது. இவற்றால் சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களிடையே ஒரு பிராந்திய ஆதிக்கப் போட்டி நிலவுகின்றது. ஈரானைப் போல் ஒரு அரபு நாடு அல்லாத துருக்கி அரபுப் பிரதேசத்தின் வடக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகின்றது. அமெரிக்கா மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது கேந்திரோபாயத் தரகர்களாக சவுதி, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இருக்க வேண்டும் என விரும்புகின்றது.

ஏமாற என்றும் தயாரான குர்திஷ் மக்கள்
ஈராக்கில் செயற்படும் சியா இஸ்லாமியத் போராளிக் குழுக்களுக்கு மொசுல் நகரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் மொசுல் நகரின் மேற்குப் புறமாக ஐ எஸ் போராளிகள் தப்பிச் செல்லாமல் தடுக்கும் பணி வழங்கப்பட்டது. சியா இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டால் மொசுல் நகரில் இருக்கும் சுனி இஸ்லாமியர்கள் ஆத்திரப்படுவார்கள் என்பதாலும் பல சியா போராளிக் குழுக்கள் ஈரானிற்கு ஆதரவானவர்கள் என்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால் ஈரானியப் படைகள் தமது படைப்பிரிவில் சியா விடுதலைப் படை என ஒன்றை புதிதாக அமைத்துள்ளனர். ஆனால் குர்திஷ் மக்கள் ஐக்கிய அமெரிக்காவால் பல தடவைகள் ஏமாற்றப்பட்டும் ஐ எஸ்ஸிற்கு எதிரான அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் ஈராக்கிய குர்திஷ் போராளிகளான பெஸ்மேர்கா முக்கிய இடம் வகிக்கின்றது. மொசுல் சுற்றி வளைக்கப்பட்டவுடன் ஐ எஸ் அமைப்பினர் பழிவாங்கல் தாக்குதலுக்கு தெரிவு செய்த இடம் ஈரானிய இலக்கு அல்ல, சியா இலாக்கு அல்ல, அமெரிக்க இலக்கு அல்ல. அவர்கள் தெரிவு செய்தது. குர்திஷ் மக்கள் வாழும் கேர்க்குத் நகர் தான். பல தடவைகள் அமெரிக்காவால் கால் வாரப்பட்ட குர்திஷ் மக்கள் மேலும் அமெரிக்காவால் ஏமாற்றப் படப் போகின்றார்கள். 

ஈராக் துருக்கி முறுகல்.
மொசுல் முற்றுகையில் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமையில் இருந்து துருக்கி திடீரென தனது படையினரையும் அனுப்பியுள்ளது. குர்திஷ் போராளிகள் கைப்பற்றும் நிலப்பரப்பை மட்டுப்படுத்தவே அது இணைந்திருக்கலாம். ஐ எஸ் அமைப்பிருக்கு எதிராத் தீமாகப் போராடும் ஒரே ஒரு அமைப்பாகுர்திஷ் பெஷ்மேர்கா அமைப்பு ஒக்டோபர் 23-ம் திதி ஞாயிறு மொசுல் ரையும் ஷிக்கா ரையும் ணைக்கும் பிதாதெருவைக் கைப்பற்றினர். துருக்கியப் படையினர் தமது நாட்டுக்குள் நுழைவதையிட்டு ஈராகிய அரசு அதிருப்தியடைந்துள்ளது. துருக்கியப் படையினர் மொசுல் நகருக்குள் வருவது அவர்களுக்கு சுற்றுலாவாக அமையாது என ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆனால் இந்தப் பிராந்தித்தில் தமக்கு ஒரு வரலாற்றுக் கடமை உண்டு என துருக்கிய அதிபர் எர்டொகன் தெரிவித்திருந்தார். துருக்கி ஈராக்கின் வட பகுதியை தன்னுடன் இணைக்கும் கனவுடன் நீண்ட நாட்கள் இருக்கின்றது. துருக்கி சிரியாவில் செயற்படும் குர்திஷ் போராளிகள் மீது காட்டும் வன்மம் ஈராக்கில் செயற்படும் குர்திஷ் பெஷ்மேர்கா போராளிகள் மீது காட்டுவதில்லை. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும்  சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்  YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் சிரியப் போராளி அமைப்புகளிலும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது. ஈரக்கில் பஷீக்கா நகரில் துருக்கி ஒரு படைப்பிரிவை வைத்துள்ளது. அது தொடர்பாகவும் ஈராக் துருக்கி மீது ஆத்திரமடைந்துள்ளது. துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையில் போர் நடக்கலாம் என அமெரிக்க முன்னாள் அரசுறவியல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அன்று நடந்ததற்கு இன்று பழிவாங்கல்
சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட PMF  எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Popular Mobilisation Forces என்ற போராளிக்குழுவும் ஈரானின் நேரடி ஆதரவுடன் இயங்கும் அசைப் ஆல் அல் ஹக் என்ற போராளிக் குழுவும் முகம்மது நபியின் பேரனான ஹுசேய்ன் பின் அலி கர்பாலாப் போரில் 1400 ஆண்டுகளுக்கு  முன்னர் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாக மொசுல் நகரைக் கைப்பற்றுதலும் அங்குள்ள சுனி அமைப்பான ஐ எஸ்ஸை அழிப்பதும் அமையும் எனப் பிரகடனப் படுத்தியுள்ளன. ஹுசேய்ன் பின் அலி சுனி முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக சியா முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். தற்போது துருக்கிய அதிபராக இருக்கும் ரிசெப் எர்டோகனும் ஈராக்கிய குர்திஷ்களின் தலைவரான மஸ்ஸோட் பர்ஜானியும் ஹுசேய்ன் பின் அலியின் கொலையாளின் வாரிசுகள் என சியா இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள். ஈராக்கிய அரச படையினரும் Popular Mobilisation Forces என்ற  சியா போராளிக்குழுவும் இணைந்து திக்ரித் பிராந்தியத்தில் பல அட்டூழியங்களை ஏற்கனவே சுனி இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்ததாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இரு தரப்பினரும் சுனி இஸ்லாமியர்களைச் சிரச்சேதம் செய்யும் காணொளிப் பதிவுகள் வெளிவராமல் தடுக்கப்பட்டுவிட்டன. அதே போல ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து பல்லுஜா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களிடம் அகப்பட்ட சுனி இஸ்லாமியர்களை அவர்களது இரத்தத்தைக் குடிக்கும்படி சித்திரவதை செய்யப்பட்டனர்.

சிரியாவால் சவுதிக்கும் எகிப்த்திற்கும் இடையில் முறுகல்
ஐக்கிய நாடுகள் சபையில் இரசியாவின் தீர்மானத்திற்கு எகிப்த்து ஆதரவு வழங்கியமையும் சவுதியின் பின்புல ஆதரவுடன் பிரான்ஸ் சமர்ப்பித்த நகல் தீர்மானத்தை எகிப்த்து ஆதரிக்காமையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால் எகிப்த்திற்கான சவுதியின் தூதுவர் அவசரமாக சவுதி திரும்பினார். எகிப்தின் படைத்துறை ஆட்சியாளர்களுக்கு சவுதி அரேபியா பில்லியன் டொலர்களை நிதி உதவியாகும் எகிப்த்தில் முதலீடாகவும் செய்து வருகின்றது. பதிலாக உலக அரங்கில் சவுதிக்கு எகிப்து அரசுறவியல் ஆதரவுகளை வழங்க வேண்டும் என சவுதி எதிர்பார்த்தது. எகிப்த்தின் செய்கையால் அதிருப்தியடைந்த சவுதி எகிப்த்தில் தனது முதலீடுகளை உடனடியாக நிறுத்தியுள்ளது. அத்துடன் எகிப்த்திற்கான எரிபொருள் விற்பனையையும் சவுதி நிறுத்தியுள்ளது. தொடர்ந்து எகிப்த்திற்கான நிதி உதவிகளையும் சவுதி குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே யேமனில் ஹூதி மற்றும் சலேஹ் போராளிக் குழுக்களுக்கு எதிராக சவுதி செய்யும் தாக்குதலுக்கு எகிப்த்து போதிய உதவிகளை வழங்கவில்லை என சவுதி அரேபியா கடும் அதிருப்தியடைந்திருந்தது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என சவுதி உறுதியுடன் இருக்கின்றது. ஆனால் எகிப்து அசாத்தைப் பதவியில் வைத்துக் கொண்டு ஓர் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. குவைத்தின் முன்னாள் தகவற்துறை அமைச்சர் சாத் அல் அஜ்மி எகிப்த்திற்கு எதிராக உலக அரங்கில் கடும் நடக்வடிக்கைகள் எடுக்கப் படவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். எகிப்த்திற்கு நாம் கொடுக்கும் உதவிகளின் ஒரு விழுக்காடு உதவியை மட்டும் நாம் செனகல் நாட்டிற்குக் கொடுக்கின்றோம் ஆனால் செனகல் எமக்காக வாக்களித்தது எனச் சொல்கின்றார் சாத் அல் அஜ்மி. இவரது கருத்து பல வளைகுடா நாடுகளில் எகிப்த்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சிரியாவால் ஈரானும் எகிப்த்தும் இணையுமா?
எகிப்த்தியப் படைத்துறை ஆட்சியாளர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு. எகிப்த்தில் தடைசெய்யப் பட்ட அந்த அமைப்பின் சிரியக் கிளை அசாத்திற்கு எதிராகப் போராடும் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது எகிப்த்திய ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுகின்றது. தற்போதைய சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் தந்தை ஹஃபீஸ் அல் அசாத் காலத்தில் இருந்தே எகிப்த்திற்கும் சிரியாவிற்கும் இடையில் நல்லுறவு நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்குச் சென்ற ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சரும் எகிப்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து சிரியா தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தனர். சிரியாவில் அசாத் ஆட்சியில் இரு நாடுகளும் விரும்புகின்றன. இச் சந்திப்பைக் கேள்விப்பட்டவுடன் சவுதியில் இருந்து எகிப்திய அதிபர் அப்துல் அல் சிசியிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு உதவி நிறுத்தல் மிரட்டல் விடுக்கப் பட்டதாக இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது. சிரியப் படைத்துறைக்குப் பொறுப்பான அலி மம்லுக் ஐந்து ஆண்டுகளில் முதற்தடவையாக ஒரு வெளிநாட்டுப் பயணமாக எகிப்த்திற்கு 2016 ஒக்டோபர் 17-ம் திகதி சென்றார். இரு நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயற்படுவதாக அவரின் பயணத்தின் போது ஒத்துக் கொள்ளப்பட்டது. சில தகவல்களின் படி அலி மம்லுக் இதற்கு முன்னரும் பல தடவைகள் இரகசியமாக எகிப்த்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா எகிப்த்திற்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால் ஈரானிடம் இருந்து எகிப்த்து எரிபொருள் இறக்குமதி செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. அரபு நாட்டின் அதிக மக்கள் தொகையைக் கொண்டதும் சிறந்த படைத்துறையைக் கொண்டதுமான எகிப்த்து சவுதி அரேபியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது பஷார் அல் அசாத்திற்கு ஒரு அரசுறவியல் வெற்றியாகும்.

வெற்றிகரமான பின் வாங்குதல்
ஜிஹாதி எனப்படும் புனிதப் போராளிகளிடம் அல் ஹிஜ்ரா என்ற உத்தி உள்ளது. அதை வெற்றிகரமான பின் இடப்பெயர்வு எனவும் கூறலாம். முஹம்மது நபி மக்காவில் இருந்து மதீனாவிற்குப்  தப்பியதையே அல் ஹிஜ்ரா என அழைப்பர். மொசுலில் இருந்து ஐ எஸ் அமைப்பினர் தமக்கு அவமானம் ஏற்படாத வகையில் அதைச் செய்யலாம். ஐ எஸ் அமைப்பினர் தமது ஐ எஸ் ஐ எஸ் என்றிருந்த பெயரை ஐ எஸ் என மாற்றியதே தமது இஸ்லாமிய அரசு உலகளாவியது என்பதைக் காட்டவே. ஐ எஸ் ஐ எஸ் என்பது ஈராக்கிற்கும் சிரியாவிற்குமான இஸ்லாமிய அரசு எனப் பொருள் படும். ஐ எஸ் அமைப்பின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு சதுர அங்குல நிலம் கூட இல்லாத நிலையிலும் அவர்களால் உலகெங்கும் மறைந்திருந்து செயற்பட முடியும். ஆனால் சொல்லொணாக் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பலஸ்த்தீனியர்களின் விடுதலைக்காகப் போராட போகாதவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஆயிரக்கணக்கில் போய்ச் சேர்கின்றார்கள் என்பது ஐயத்துடன் பார்க்கப்பட வேண்டியதே. முஸ்லிம்கள் தங்களுக்குள் போராடி அழிந்து கொள்ள ஐ எஸ் அமைப்பு வழிவகுப்பது ஐயத்துக் குரியதே. ஐ எஸ் அமைப்பின் தலைமை மோசாட்டினதும் சி ஐ ஏயினதும் கைப்பொம்மை என்பது சரியாதா?

பல் முனை முறுகல் மோசமடையலாம்
மொசுல் கைப்பற்றப் பட்டு ஐ எஸ் ஈராக்கில் இருந்து ஒழித்துக் கட்டப்பட்டாலும் ஈராக்கில் அமைதி திரும்பும் என்பது நிச்சயமல்ல. அதன் பின்னரும் ஈரானுக்கும் சவுதிக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டியின் கொதிநிலை மோசமடையும். குர்திஷ் மக்கள் தமக்கு என ஓர் அரசைப் பிரகடனப் படுத்தி கொண்டு நடத்துவதற்கு அவர்களிடம் போதிய நிதி வசதிகள் இல்லை அவர்கள் அமெரிக்கா அல்லது சவுதி அரேபியா சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். அவர்கள் ஒரு சமஷ்டி என்ற இணைப்பாட்சி அரசை அமைக்க அவர்கள் விரும்புகின்றார்கள். ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுப்பெறுவது தனது நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்களுக்கு உந்துதலாகவும் உதவியாக அமையும் எனக் கருதும் துருக்கி எந்நேரமும் குர்திஷ்ப் போராளிகள் மீதுதாக்குதல் செய்யலாம். தமது நாட்டைக் கைப்பற்றிய சியா இஸ்லாமியர்கள் சிறுபான்மையினரான சுனி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம். ஈராக்கில் வடபகுதியில் இருக்கு துருக்கி இனத்தவர்கள் மீதும் சுனி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அது ஈராக்கிற்கும் துருக்கிக்கும் இடையில் போரை உருவாக்கும். ஈராக்கில் வாழும் யதீஷியர்கள், கிருஸ்த்தவர்கள், துருக்கியர்கள் தமக்கு என தன்னாட்சியுள்ள அதிகார அமைப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடையிலான எல்லைப் பங்கீடு, நிதிப்பங்கீடு, நிலவளப் பங்கீடு தொடர்பாக மோதல் உருவாகும். ஈராக்கியப் போரால் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக யதீஷியர்களே இருக்கின்றார்கள். தமது கௌரவம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்கள் இனக்கொலை, கற்பழிப்பு, அடிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப் பட்ட போது எந்த ஓர் இனக்குழுமத்தினரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. ஈராக்கியக் கிறிஸ்த்தவர்கள் சதாம் ஹுசேய்ன் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர் பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏர்பில் பிராந்தியத்தில் வாழும் கிறிஸ்த்தவர்கள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் பாக்தாத்தில் ஆட்சியில் இருக்கும் சியா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என குர்திஷ் மக்கள் கருதுகின்றனர். 
ஈராக்கிய ஆட்சியாளர்களை தனது பக்கம் திருப்ப ஈரான் முயற்ச்சி ஒரு புறம் செய்ய மறுபுறம் அமெரிக்கா அதற்கு எதிரான நடவடிக்கைகள எடுக்கும். இரசியா மட்டும் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாது. அதுவும் புதிய ஈராக்கில் தனது பிடியை இறுக்க முயற்ச்சி செய்ய ஈராக்கில் இரத்தக் களரி தொடரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...