Monday, 23 May 2016

வல்லரசுகள் இடையிலான வான் மேலாதிக்கப் போட்டி

வான் மேலாதிக்கம் போர்களை வெல்லும் என்பதை எல்லாப் படைத்துறை நிபுணர்களும் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அது போர் தோல்வியைத் தடுக்கும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு போரையும் வான் மேலாதிக்கம் இன்றி வெற்றி கொள்ளவில்லை. அரை நூற்றாண்டு காலமாக ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் வான் மேலாத்திக்கப் போட்டியில் ஈடுபட்டிருனது. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா கால் நூற்றாண்டு காலம் வான் மேலாதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது அந்த மேலாதிக்கம் குறைந்து வருகின்றது. இந்தக் குறைவு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழப்பதில் போய் முடியுமா?

வான் மேலாதிக்க வரலாறு
1911-ம் ஆண்டு இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் நடந்த போரில் விமானத்தில் சென்று குண்டு வீசுவது ஆரம்பித்தது. 1939-ம் ஆண்டு போலந்தின் விமானப் படையை அழித்த பின்னர் ஜேர்மனிய விமானப் படையினர் போலந்தின் தரைப்படையினர் மீது தாக்குதல் தொடுத்து ஜேர்மனியத் தரைப் படையினர் இலகுவாக போலாந்தை ஆக்கிரமிக்க முடிந்தது. இதே வழியில் ஜேர்மனி பிரான்சையும் கைப்பற்றியது. இரசியாவை விமான மேலாண்மையால் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கைப்பற்றிய ஜேர்மனியப் படைகள் மீது பனி பொழியும் காலத்தில் இரசியப் படைகள் தாக்குதல் செய்யும் போது ஜேர்மனியத் தரைப் படைகளுக்கு உதவியாக விமானப் படையினர் செல்ல காலநிலை உகந்ததாக இருக்கவில்லை. 1950இல் கொரியப் போரில் முதற்தடவையாக வானில் இருந்து போர் விமானங்கள் மோதிக் கொண்டன. 1967இல் சிரியாவிடமிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் முதலில் அழித்தது. பின்னர்ம்எகிப்தினதும் சிரியாவினதும் விமானப் படைகளை இஸ்ரேல் துவம்சம் செய்து அரபு-இஸ்ரேலியப் போரில் பெரு வெற்றி ஈட்டியதுடன் பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டது. அரபு இஸ்ரேலியப் போரில் அமெரிக்கா, பிரான்ஸ், இரசியா ஆகிய நாடுகளின் போர்விமானங்கள் பரீட்சிக்கப் பட்டன. பங்களா தேசப் போரின் போது இந்தியா பாக்கிஸ்த்தானிய விமானப் படையை செயலிழக்க வைத்தது.
போர் விமான வகைகள்
வானில் வைத்து எதிரி விமானங்களுடன் சண்டை செய்யும் விமானங்கள் சண்டை விமானங்கள் .
எதிரி இலக்குகள் மீது குண்டு வீசுபவை குண்டு வீச்சு விமானங்கள்.
எதிரிகளின் படையினர் மீது தாக்குதல் செய்பவை தாக்குதல் விமானங்கள்.
 எதிரியை உளவு பார்ப்பவை வேவு விமானங்கள்
எதிரியின் நடமாட்டங்களை பார்த்துத் தகவல் வழங்குபவை கண்காணிப்பு விமானங்கள்.
எதிரியின் கணனிகளை ஊடுருவிச் செல்லும் கணனிகளைக் கொண்டவை இலத்திரனியல் போர்விமானங்கள் .
மேற்கூறிய செயற்பாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களைச் செய்யக் கூடியவை பற்பணி விமானங்கள்.
ஆளில்லாப் போர் விமாங்களைப் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பரவலாக் ஆளில்லாப் போர் விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்கா இத்துறையில் பெரும் அனுபவத்தைப் பெற்றுள்ளது.

இரசியாவிற்கான நட்பின் பரிசு
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானியா இரசியாவிற்கு போரில் இணைந்து செயற்பட்ட நாடு என்ற வகையில் இரசியாவிற்கு Rolls-Royce Nene centrifugal-flow jet engine என்னும் விமான இயந்திரங்களை வழங்கியது. இதில் இருந்து தரமான விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை இரசியா வளர்த்துக் கொண்டது. 1979இல் ஈரானின் மன்னர் ஷாவின் வீழ்ச்சிப் பின்னர் ஈரானிடமிருந்த அமெரிக்கப் போர்விமானங்களில் உள்ள தொழில் நுட்பங்களை இரசியா பெற்றுக் கொண்டது. கொரியப் போரில் அமெரிக்காவின் F-86 போர் விமானம் வட கொரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்டு அதன் தொழில்நுட்பம் இரசியாவால் பெற்றுக் கொள்ளப்பட்டது.  வியட்னாம் போரின் போது  ஐக்கிய  அமெரிக்காவின் 250இற்கு மேற்பட்டா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய இரசியாவின் S-75A Dvina என்னும் சாம் ஏவுகணைகளை இரசியா இப்போது மிகவும் மேம்படுத்தியுள்ளது. அத்துடன் சீனாவிற்கும் அவற்றை விற்றுள்ளது.

ரடார்களும் ரடார்களுக்கு புலப்படாத் தன்மையும்
வான் மேலாதிக்கப் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது விமானங்களை இனம் காணும் ரடார்களும் அவற்றிற்குப் புலப்படாமல் இருக்கும் Stealth தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டியே.  1970களில் எண்மியப் படுத்தப்பட்ட(Digital) ரடார்களை இரசியா உருவாக்கியது. இதனால் 1970களில் இரசிய விமான எதிர்ப்பு முறைமைகளுக்கும் ரடார்களுக்கும் புலப்படாத விமானம் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது. அது தொலைதூரம் பறக்கக் கூடியதாகவும் அதிக அளவு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு போர் விமானத்தை உருவாக்கும் ஒப்பந்தம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரால் தெரிந்தெடுக்கப்பட்ட சில விமான உற்பத்தியாளர்களுக்கு மிகவும் இரகசியமாக வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட விமானத்தை முதலில் உருவாக்குவதில் முதலில் வெற்றி கண்டது Northdrop நிறுவனம். 1988-ம் ஆண்டு B-2 போர்விமானம் உருவாக்கப் பட்டது. 172 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது B-2 போர்விமானம். இதன் 80 விழுக்காடு அல்மினியத்திலும் பாரம் குறைந்ததாகவும் உருக்கிலும் பார்க்க உறுதியானதுமான கரி இழைகளால் உருவாக்கப்பட்டது. ஆறாயிரம் மைல்கள் எரிபொருள் மீள் நிரப்புச் செய்யாமல் தொடர்ந்து பறக்கக் கூடியதாகவும் 40,000 இறாத்தல் எடையுள்ள அணுக்குண்டு உட்படப் பலதரப்பட்ட படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக் கூடியதாகவும் B-2 போர்விமானம் உருவாக்கப்பட்டது. எதிரியின் ரடார்களில் இருந்து வரும் ஒலி அலைகளை உறிஞ்சக் கூடிய radar-absorbent material (RAM) பூச்சு இதன் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும். மிகவும் அழுத்தமானதாகும் அழகிய வளைவுகளைக் கொண்டதாகவும் இதன் மேற்பரப்பு வடிவமைக்கப் பட்டது. அத்துடன் எதிரியின் ரடாரில் இருந்து வரும் அலைகளைக் குழப்பும் இலத்திரனியல் கருவிகளும் B-2இல் உள்ளடக்கப் பட்டிருந்தன. ஒரு B-2 இன் உற்பத்திச் செலவு இரண்டு பில்லியன்களாகும். 1990களில் B-2 பாவனைக்கு வந்த போது சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தது. இதனால் B-2 விமான உற்பத்தி குறைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புத்துறை 16 ஆண்டுகளாக 396பில்லியன் டொலர்கள் செலவு செய்து F-25 போர் விமானங்களை உருவாக்கியது. இது நன்கு பாதுகாக்கப்பட்ட வான்பரப்பினூடாக எந்த ரடார்களுக்கும் புலப்படாத வகையில் பறந்து செல்லக் கூடியதாக அமைந்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் புலப்படாத் தொழில் நுட்பம் (stealth technology) அவர்களது வான் மேலாதிக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமானாங்களை புலப்படாமற் பண்ணும் தொழில்நுட்பங்களிற்கும் அத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களை எப்படிக் கண்டு பிடிப்பது என்ற தொழில்நுட்பங்களிற்கும் இடையில் மிக உக்கிரமான போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. 1980களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியாவும் புலப்படாத் தொழில் நுட்பத்தை (stealth technology) உருவாக்கி விட்டது. 1999-ம் ஆண்டு கோசோவா போரின் போது அமெரிக்காவின் F-117 விமானம் செக் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விழுந்த விமானத்தின் விமானியை நேட்டோப் படையினரின் உலங்கு வானூர்திகள் மீட்ட போதிலும் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை சீனாவும் இரசியாவும் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.  அதிலிருந்து சீனா புலப்படாத் தொழில் நுட்பத்தை உருவாக்கியது.
சிறந்த 10 போர் விமானங்கள்
இலத்திரனியல்
1960களில் விமானங்களை அவற்றின் வெப்பத்தில் இருந்து இனம் காண்பதற்கு  infrared உணரிகள் உருவாக்கப்பட்டன. ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் ஒன்றான் சிவப்பின் அலைவரிசையிலும் அதிகமானதாகவும் microwavesஇன் அலைவரிசைகளிலும் குறைவானதாகவும் உள்ள அலைவரிசையை infrared அலைவரிசை என்பர். விமானங்களின் வெப்பத்தில் இருந்து வரும் கதிர்வீச்சின் infrared அலைவரிசையைக் கொண்டு  விமானத்தை இனம் காணும் முறைமையை  infra-red search and track (IRST)  என அழைப்பர். இவை மேம்படுத்தப் பட்டு 1980களில் வெப்பத் தேடிச்செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. விமானத்தில் இருந்து வெளிவரும் அதிலும் முக்கியமாக விமானத்தில் உள்ள கணனித் தொகுதிகளில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளை வைத்து விமானத்தை இனம்காண Electro Magnetic Snooper உருவாக்கப்பட்டன.
தானியங்கி விமான எதிர்ப்பு முறைமை
அமெரிக்காவின் போர் விமானங்களை இனம் கண்டு அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அவற்றை அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு விற்பனை செய்வது இரசியாவின் புவிசார் அரசியலுக்கு அவசியமான ஒன்றாகியது. இரசியா தான் உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை சீனாவிற்கு விற்பனை செய்கின்றது. இரசியா சீனாவிற்கு விற்பனை செய்த S-300PMU-2 என்னும் நடமாடும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரேயடியாக நூறு இலக்குகளை இனம் காணக் கூடியது. . F-35ஐ உற்பத்தி செய்த லொக்கீட் மார்ட்டின் நிறுவனம் F-35ஐ இனம் காணவரும் எல்லாவற்றையும் அது குழப்பிவிடும் என மார்தட்டியது. ஆனால் இரசியாவின் எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை அதை உலுப்பி விட்டது. அமெரிக்கா உருவாக்கும் F-35 Lightning I விமானங்களில் அது காவிச் செல்லும் படைக்கலன்களை வெளியில் பொருத்தாமல் விமானத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரடார்களைத் தவிர்க்கும் ஒரு உத்தியாகும். ஆனால் இதற்கு முந்திய விமானங்களிலும் பார்க்க இந்த விமானத்தை இலகுவில் இனம் காண முடியும் என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். ஆனால் F-35இல் பொருத்தப் பட்டிருக்கும் Active Electronically Scanned Array (AESA) என்னும் ரடார் எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இலகுவில் இனம் காணக் கூடியது.
அமெரிக்காவின் அதிரடியான B-21
அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த B-21 போர்விமான உற்பத்தி 2015-ம் ஆண்டு Northrop Grumman நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் வலுவை உலகமயப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஐம்பது ஆண்டுக்கான கேந்திரோபாய முதலீடாகவும் B-21 நீள் தூரத் தாக்குதல் குண்டுவீச்சு விமானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர்.  B-21இன் பின்புறம் W வடிவத்திலும் இறக்கைகள் 33 பாகைகள் சரிவானதாகவும் இருக்கும். Northrop Grumman நிறுவனத்தின் சிறந்த வெப்ப முகாமைத் (Thermal management) தொழில் நுட்பம் அதனிடம் B-21 விமான உற்பத்தி ஒப்படைக்கப் பட்டமைக்கான முக்கிய காரண்மாகக் கருதப்படுகின்றது. சிறந்த வெப்ப முகாமையால் எதிரிகளின் வெப்பம்-தேடி ஏவுகணைகளால் தாக்கப்பட முடியாத தன்மையை B-21 பெறுகின்றது. Northrop நிறுவனத்தின் ஆறாம் தலைமுறைத் தாக்குதல் விமானத் தொழில் நுட்பங்களில் சிறந்த stealth எனப்படும் ரடாருக்குப் புலப்படாத்ட்தன்மை, , சிறந்தswept-wing fighter பொறிமுறை, பல் வேறுபட்ட இலக்குகளை தாக்கும் வலிமை மிக்க லேசர் படைக்கலன்கள் போன்றவை  உள்ளன. இணைய வெளி ஊடுருவல்கள் மூலம் எதிரி நாடுகள் B-21  இன் இரகசியங்களைத் திருடாமல் இருக்க பெரு முயற்ச்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.
விமானத் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம் ஒரு விமானம் எவ்வளவு தொலைவில் வைத்து எதிரி விமானங்களை இனம் காணும் என்பதாகும். எதிரி விமானம் தன்னை இனம் காணமுன்னர் எதிரிவிமானத்தை இனம் காண்டு கொண்டால் எதிரியை முந்திக் கொண்டே அதை நோக்கித் தாக்குதலைத் தொடுக்கலாம். அமெரிக்காவிடம் இந்த துரித இனம்காணும் தொழில்நுட்பம் இரசியாவிலும் பார்க்கவும் சீனாவிலும் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கின்றது. இரசியாவின் SU-35 விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களை இனம் காணுவதற்கு நூறு மைல்களுக்கு முன்னதாகவே F-35 விமானங்கள் அவற்றை இனம் கண்டுவிடும்.
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன. 

குமையி
வான் மேலாதிக்கத்தின் முக்கிய அம்சமாக ஜாமிங் எனப்படும் குமையியை அமெரிக்காஅ உருவாக்குகின்றது. அமெரிக்க வான் படையினரும் Raytheon என்னும் தொழில் நுட்ப நிறுவனமும் இணைந்து இலத்திரனியல் போர் முறையின் முக்கிய அம்சமாக அடுத்த தலைமுறை  குமையியை (next generation jammer) உருவாக்குவதற்கான முதற்படி வடிவமைப்பு வேலைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன. இது ஒரு  வான்வழி இலத்திரனியம் தாக்குதல் முறைமையாகும் ( airborne electronic attack system). இரு வகையான குமையிகள் உள்ளன. முதலாவது பொறிமுறைக் குமையிகள்(mehcanical jammers) இரண்டாவது இலத்திரனியல் குமையிகள் (elctronic jammers). பொறிமுறைக் குமையிகள் எதிரியின் ரடார்களைப் பிழையான வகையில் செயற்படச் செய்யும். இலத்திரனியற் குமையிகள் எதிரியின் ராடர்களுக்குச் செறிவான வலுமிக்க சமிக்ஞைகளை அனுப்பி அவற்றைச் செயலிழக்கச் செய்யும். அடுத்த தலைமுறை இலத்திரனிய்ற் குமையிகள் எதிரி விமானங்களுக்கு ஒரு போலியான விமானத்தை உணரவைக்கும்.

சீனா
கடந்த 30 ஆண்டுகளாக சீனா போர் விமானங்களைத் தயாரித்து வருகின்ற போதிலும் விமான இயந்திரத் தொழில்நுட்பத்தில் மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா பின் தங்கியே இருக்கின்றது. சீனாவின் J-22 மற்றும் J-31ஆகிய போர் விமானங்களின் பறப்பு வேகம் அமெரிக்காவின் F-22, F-35 ஆகியவற்றின் பறப்பு வேகத்திலும் பார்க்கக் குறைந்ததே.  சூ பின் என்ற சீனர் அமெரிக்காவின் போர்விமான உற்பத்தி இரகசியங்களை இணையவெளியூடாகத் திருடிய குற்றத்தை 2016 மார்ச் மாதம் ஒத்துக் கொண்டது சீனா தனது படைத்துறை இரகசியங்களைத் திருடுவதாக அமெரிக்கா தொடர்ந்து வைத்த குற்றச் சாட்டை உறுதி செய்தது. சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட புலப்படாத் தொழில்நுட்பத்துடன் கூடிய J-20 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-22 ரப்டர் விமானங்களையும் சீனாவின் இரட்டை இயந்திரங்களைக் கொண்ட பல பணிகள் செய்யக் கூடிய  J-31 போர் விமானங்கள் அமெரிக்காவின் F-35 விமானங்களையும் ஒத்தனவாக இருப்பதற்குக் காரணம் சீனா இணையவெளி மூலம் ஊடுருவி அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லொக்கீட் மார்ட்டினின் போர் விமானங்களின் தொழில்நுட்பத்தைத் திடுடியமையே எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.  சீனாவின் J-20 விமானங்களுக்கான எஞ்சின் சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் உருவாக்கப் பட்ட மிக்-29 போர் விமானங்களின் எஞ்சின்களே. சீனா இரசியாவின் SU-35 என்னும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இருபத்தி நான்கை வாங்கும் ஒப்பந்தத்தை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திட்டது. இது சீன விமானப் படைக்கும் அமெரிக்க விமானப் படைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. ஆனால் சீனா விமான உருவாக்கற் தொழில்நுட்பத்தை அதிலும் எஞ்சின்கள் உருவாக்கும் வல்லமையை எப்படியாவது வளர்த்திட வேண்டும் என்பதில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது. இரசியாவிடமிருந்து சீனா வாங்கிய SU-27 விமானங்களில் உள்ள தொழில்நுட்பத்தை reverse engineering முறையில் பிரதி பண்ணி சீனா தனது J-11-D போர் விமானங்களை உருவாக்கியதாக் இரசிய ஊடகமான ஸ்புட்நிக் குற்றம் சாட்டியிருந்தது. இரசியாவின் SU-35ஐ சீனா வாங்க முற்பட்ட போது இரசியா மறுத்துவிட்டது.

வான் மேலாதிக்கப் போட்டி முடிவின்றித் தொடரும்
அமெரிக்காவிற்கும் மற்ற வல்லரசு நாடுகளிற்கும் இடையிலான போர்விமானத் தொழில்நுட்ப இடைவெளி குறைந்து வருவதை அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்க விமானங்களில் லேசர் தொழில்நுட்பவும் மைக்குரோவேவ் தொழில் நுடபமும் இணைக்கப்படும் போது அவற்றின் வான் ஆதிக்கம் மிகவும் வலுவடையும். இரசியா தனது எஸ்-400 விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை மேம்படுத்தி எஸ்-500ஐ உருவாக்கி வருகின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது ஆறாவது தலைமுறைப் போர் விமானங்களை உருவாக்கி வருகின்றது. இரசியா தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளித்தால் அது அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்திற்கு தொடர்ந்து சவால் விடுவது மட்டுமல்ல இணையாகவும் உருவெடுக்க முடியும். 2014-ம் ஆண்டு இரசியா தனது 6-ம் தலைமுறைப் போர்விமான உருவாக்கத்தை அறிவித்தது.  விமானத்தின் உடல் எடையில் இரசியா அதிக கவனம் செலுத்துகின்றது. குறைந்த எடையில் நீண்டகாலம் பாவிக்கக் கூடிய வகையில் உலோகக் கலவையை அது உருவாக்குகின்றது. காற்றில்லாத வானவெளியிலும் பறக்கக்கூடியதாக இரசியாவின் 6-ம் தலைமுறைப் போர் விமானங்கள் அமையவிருக்கின்றன. இவையும் சிறப்பான இலத்திரனியல் தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும். முழுமையான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து இணைய வெளியின் ஊடாக ஊடுருவி தகவல்களைப் பெறுவதை அமெரிக்காவால் தற்போது தடுக்கமுடியாமல் இருக்கின்றது. சீனாவிற்கு அமெரிக்காவின் வான் மேலாதிக்கத்தைச் சமாளிக்க இரசியாவின் தொழில் நுட்பம் தற்போது தேவைப்பட்டாலும் அதனால் நீண்டகால அடிப்படையில் முன்னணி வகிக்க முடியும். பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தமது வான் மேலாதிக்கத்தை தக்கவைக்க முடியும். அடுத்த 25 ஆண்டுகளும் வல்லரசு நாடுகள் வான் மேலாதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தும்.

Monday, 16 May 2016

வட போச்சே நிலையில் வட கொரியா


சீனப் பொதுவுடமைக் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை (கொங்கிரஸ்)  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது நடத்துவது போல் வட கொரியாவின் ஒரே ஒரு கட்சியான தொழிலாளர்களின் கட்சி தனது பேரவைக் கூட்டத்தை நடத்துவது இல்லை. வட கொரியாவின் பொதுவுடமைக் கட்சி 1946-ம் ஆண்டில் இருந்து சோவியத் ஒன்றியப் பொதுவுடமைக் கட்சியின் ஒரு கிளை போல இருந்தது. 1966-ம் ஆண்டு மிகவும் இரகசியமாக நடந்த் கூட்டம் ஒன்றில் கொரியப் பொதுவுடமைக் கட்சி தனித்து இயங்கும் முடிவு எடுக்கப்பட்டது.  அத்துடன் அப்போதைய கொரியத் தலைவர் கிம் உல் சுங் தன்னை அதிகம் முன்னிலைப்படுத்தி காரியங்களை ஆற்றத் தொடங்கினார். வட கொரியாவில் பொதுவுடமைக் கட்சியான கொரியத் தொழிலாளர்கள் கட்சியும் படைத்துறையுமே இரு பெரும் அதிகார மையங்களாகும்.
 
கொரியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நேரடியாக மோதிக் கொண்டது 1950-ம் ஆண்டில் இருந்து 1953-ம் ஆண்டுவரை நடந்த கொரியப் போரிலாகும்.  முதன் முறையாக நாய்ச் சண்டை எனப்படும் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைகள்  கொரியப் போரில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தன. கொரியப் போரில் சீனாவும் பங்கு கொண்டிருந்தது. ஜப்பானும் கொரியப் போரில் அதிக அக்கறை காட்டியது. கொரியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றபடியால் இரண்டாம் உலகப் போரால் களைத்துப் போயிருந்த நாடுகள் கூட கொரியப் போரில் அதிக அக்கறை காட்டின.  வட கொரியா தென் கொரியப் போர் கொரியாவை ஆக்கிரமித்து முழுமையாக கைப்பற்ற  இருந்த நிலையில் உருவானது. மூன்று ஆண்டுகள் கழித்து    வட கொரியா தென் கொரியாவை விட்டு வெளியேறியது. கொரியப் போர் முடிந்த பின்னரும் வட கொரியா தென் கொரியாவை தன்னுடன் மீண்டும் இணைக்கும் ஆர்வத்துடன் இருக்கின்றது.
 
மூன்று தலைமுறை
கொரியாவை மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஆண்டு வருகின்றது எனச் சொல்லும் அளவிற்கு கிம் உல் சூங் முதலிலும் பின்னர் அவரது மகன் கிம் ஜொங் இல்லும் அவரைத் தொடர்ந்து அவர மகன் கிம் உல் ஜொங்கும் வடகொரியாவில் அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். முதலாமவரான கிம் உல் சூங் கட்சியில் அதிக கவனம் செலுத்தினார். சிறந்த பேச்சாளரான இவர் மக்கள் முன் தோன்றி சிறப்பாக உரையாற்றக் கூடியவர். ஆனால் இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த மகன் கிம் ஜொங் படைத்துறையில் அதிக கவனம் செலுத்தினார். வட கொரியாவில் ஒரு அணுக் குண்டு உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதனால் வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டு வெடிப்புச் சோதனையில் 2006-ம் ஆண்டு வெற்றி கண்டது.  இரண்டாம் கிம் ஜொங் இல் பொது இடங்களில் உரையாற்றுவது குறைவு. ஆனால் மூன்றாம் கிம் உல் ஜொங் தனது தந்தையைப் போல் அல்லாமல் பேரனைப் போல் பொதுத் தொடர்பில் அதிக அக்கறை காட்டியதுடன் வட கொரியாவின் படை வலுவை முன்னேற்றுவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றார்.
 
வட - தென் கொரிய முறுகலின் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர். 1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில்( மற்றது ஜப்பான்) ஒன்றாகத் திகழ்கிறது. இரு கொரியாக்களும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக  வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு வெடிப்புப் பரிசோதனைகளையும் நடுத்தூர மற்றும் தொலை தூர ஏவுகணைகளைப் பரிசோதனை செய்வதும் உலகை உலுக்கியுள்ளது. வட கொரியாவின் அணுக்குண்டு தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென் கொரியாவும் பொருளாதாரத் தடையை விதித்தன. இது வட கொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
 
 
வட கொரிய அணுக்குண்டு வரலாறு
1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில் நுட்பத்தை தொடக்கியது. 1961இல் அணுமின் உலையை வட கொரியா உருவாக்கியது. 1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. வட கொரியாவின் அணுத் தொழில் நுட்பத்தை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி இரு மென்னீர் அணு உலைகளை அமைத்துக் கொடுத்தன. பின்னர் 1991இல் வட கொரியா பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி A Q கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது. 2002இல் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.  2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2006 வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து அறுவர் குழுப் பேச்சுவார்த்தை எனப்படும்  அமெரிக்கா, சீனா, தென் கொரியா, இரசியா யப்பான் ஆகிய நாடுகளுடன் வட கொரியா ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. 2007வரை தொடர்ந்த இந்தப் பேச்சு வார்த்தை இறுதியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் மீளிணைவதாகவும் அறிவித்தது. பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை மூடியது. 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா அறுவர் குழுப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. 2009 ஜூனில் வட கொரியா தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து 2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது. 2012 டிசம்பரில் வட கொரியா தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்றது. அது இரண்டு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு எதிரான புதிய தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிறைவேற்றப்பட்டது. வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது.  அமெரிக்கா தனது படை நகர்த்தல்கள் எதையும் இரகசியமாகச் செய்யவில்லை. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில் சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் என யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல் இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது. அமெரிக்காவின் நவீனரக விமானங்கள் தனகு கிழக்குக் கொல்லைப் புறத்தில் நடமாடுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.
 
கட்சியில் தனது பிடியை இறுக்கிய கிம் உல் ஜொங்
பொதுவுடமை நாடுகளில் பாராளமன்றத்திலும் பார்க்க கட்சியின் பேரவை அதிக அதிகாரங்களைக் கொண்டது. ஆனால் வட கொரியாவில் அதன் அதிபர் கிம் உல் ஜொங் உச்ச அதிகாரங்களைக் கொண்டவராகத் திகழ்கின்றார். கடந்த 36 ஆண்டுகளாக நடக்காத கொரியத் தொழிலாளர்கள் கட்சியின் பேரவைக் கூட்டம் 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ம் திகதி தொடங்கி நடந்தது.  பொதுவாக பொதுவுடமை ஆட்சி நாடுகளில் பேரவைக் கூட்டத்தில் புரட்சிகர மாற்றங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் 2016 மே மாதம் தொடங்கிய வட கொரிய தொழிலாளர்களின் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் பாரிய முடிவுகள் எடுக்கப் படும் என எதிர்பார்க்கப் பட்டது. உலகிலேயே அதிக அளவு அரசுத் தலையீடு உள்ள பொருளாதாரமானமாக வட கெரியா இருக்கின்றது. வியட்னாமிலும் சீனாவிலும் நடந்தது போன்ற பொருளாதாரச் சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்படும் என பெரிதும் நம்பப்பட்டது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிவித்த சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் அதிபர் கோர்பச்சோவிற்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி கிம் உல் ஜொங் நன்கறிவார். ஏற்கனவே படைத் துறையில் தனது பிடியை இறுக்கிக் கொண்ட கிம் உல் ஜொங் கட்சியிலும் தனதி பிடியை வலுப்படுத்த பேரவைக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.  அத்துடன் வட கொரியா படைத்துறையில் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பறைசாற்ற பேரவைக் கூட்டம் பயன் படுத்தப்பட்டது.  ஆனால் கூட்டத்தின் முக்கிய அம்சமாக ஒரு ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப் பட்டது. அதன்படி வட கொரியாவின் பொருளாதாரத்தையும் படைத்துறையையும் ஒன்றாக அபிவிருத்தி செய்வதாக முடிவு செய்யப்பட்டது
 
சீனாவின் கவசம்
.கொரியத் தீபகற்பம் வட கொரியாவையும் தென் கொரியாவையும் கொண்டது. வட கொரியா சீனாவுடன் எல்லையைக் கொண்டது. இந்த எல்லை கொரியத் தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதியாகும். கொரியத் தீபகற்பத்தின் வடக்கில் ஜப்பானியக் கடலும். தெற்கில் மஞ்சள் கடலும் தென் கிழக்கில் கொரிய நீரிணையும் இருக்கின்றன. ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா இரசியா ஆகியவற்றிடமிருந்து தனித்தனியாகவும் கூட்டாகவும் சீனாவிற்கு வரக் கூடிய அச்சுறுத்தல்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக வட கொரியா இருக்கின்றது. இந்தக் கவசத்தை இழக்க சீனா தயாராக இல்லை. இதனால் சீனா வட கொரியா ஒரு பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்க உதவிக் கொண்டே இருக்கின்றது.
 
ஒலிபெருக்கிகளூடான பரப்புரை
வட கொரியாவும் தென் கொரியாவும் எல்லைகளில் ஒலி பெருக்கிகள் மூலம் ஒன்றிற்கு எதிராக மற்றது பரப்புரை செய்வதுண்டு. இப்படிப்பட்ட பரப்புரைகள் செய்து ஒன்றை ஒன்று ஆத்திரப்படுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு உடன்பாட்டுக்கு வந்தன. ஆனால் 2015ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப் படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.  தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக் கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.
 
தென் கொரியாவின் ஆத்திரம்
வட கொரியாவை ஒரு அணுப் படைக்கலன் கொண்ட ஒரு நாடாக நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை என்கின்றது தென் கொரியா. இரண்டு நாடுகளினதும் பொருளாதார நிலைமை மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் போல் இருக்கின்றது. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டும் தான் வளர்ச்சியடைந்த நாடுகள். வட கொரியாவின் அணுப்படைக்கலன்கள் உற்பத்தியாலும் ஏவுகணை உற்பத்தியாலும்  தென் கொரியாவிலும் பார்க்க அதிக கரிசனை கொண்ட நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1910-ம் ஆண்டில் இருந்து 1945-ம் ஆண்டுவரை ஜப்பான் கொரியாவை ஆண்ட போது செய்த கொடுமைகளை கொரியர்கள் மறக்கவில்லை. வட கொரியா தன்னைப் பழிவாங்குமா என்ற் அச்சம் ஜப்பானிடம் இருக்கின்றது. 2016- மார்ச் மாதம் வட கொரியாவின் அணுக்குண்டுப் பரிசோதனையை அடுத்து ஐநாவினால் கொண்டு வரப்பட்ட வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை சமாளிக்கக் கூடிய உத்திகள் எதுவும் வட கொரியாவின் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் இருக்கவில்லை. பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளைச் சமாளிக்க மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்ப்டுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் ஊட்டச் சத்து இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 32விழுக்காட்டால் அதிகரித்துள்ளது.
 
போச்சே போச்சு
அணுக்குண்டுகள் செய்த வட கொரியாவால் அவற்றைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை இதுவரை உருவாக்க முடியவில்லை. ஆனால் பல ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து அது எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றது. 2016 ஏப்ரல் மாதம் 27-ம் 28-ம் திகதிகளில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதித்தது. இரண்டும் புஸ்வாணமாகிப் போனது. முஸ்டான் என்னும் நடுத்தரத் தூர ஏவுகணைகளைளே வட கொரியா பரிசோதிக்கப்பட்டுப் பிழையாகிப் போனது  என தென் கொரியா சொல்ல அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.  இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் வெற்றியடைந்திருந்தால் அது 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ம் திகதி ஆரம்பமான பேரவைக் கூட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். உலக அரங்கிலும் பெரும் அதிர்வலைகள் உருவாகியிருக்கும். வட போச்சே!!!
 

Monday, 9 May 2016

அடுத்த ஐநா பொது செயலர் தேர்வும் குழறுபடிகளும்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய செய்திகள் பெரிதாக அடிபடுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் யார் என்ற செய்தி மறைக்கப்பட்டு விட்டது. இரு பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களும் 2017--ம் ஆண்டு ஜனவரி மாதம்  பதவி ஏற்பார்கள். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2016 நவம்பர் மாதம் ஐநா பொதுச் செயலர் பதவிக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். ஐநா உலக மக்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்படவில்லை ஆனால் உலக மக்கள் நரக வேதனை அனுபவிக்காமல் இருக்க உருவாக்கபட்டது என்றார் ஐநாவின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்தவர்.

பொதுச் செயலர் தெரிவும் பேரம் பேசலும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் 97-ம் பந்தியின் படி அதன் பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபை பொதுச் செயலரைத் தெரிவு செய்யும். ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற ஒருவரே பொதுச் செயலராக வர முடியும். பாதுகாப்புச் சபை பொதுச் செயலரைப் பரிந்துரை செய்யும் போது எந்த ஒரு வல்லரசு நாடாவது தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தனக்கு வேண்டாதவர் பொதுச் செயலராக வருவதைத் தடுக்க முடியும். ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு  பெறுவதி சிரமம் மிக்கதாகும். இதனால் வெவேறு உலக அமைப்புக்களின் முக்கிய பதவிகளை இந்த ஐந்து நாடுகளும் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டைச் சேர்ந்த பான் கீ மூன் ஐநா பொது செயலர் பதவிக்கு அனுமதித்தமைக்குப் பதிலாக சீனாவைச் சேர்ந்தவருக்கு உலக வங்கி அதிபர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் படைத்துறையில் பணிபுரிந்த சித்தார்த் சட்டர்ஜி பான் கீ மூனின் மகளைத் திருமணம் செய்தவர். இதனால் இந்தியாவின் ஆதரவும் பான் கீ மூனுக்கு இருந்தது. ஐநாவில் இரசியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒத்துழைப்பதால் இரசியா பான் கீ மூனைத் தெரிவு செய்வதில் ஆட்சேபனை செய்யவில்லை. பான் கீ மூன் இரண்டாம் பதவிக் காலத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உச்சப் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது.
பிராந்திய அடிப்படையிலான தேர்வு
ஐநா சபையின் பதவிகளுக்கு தேர்வு நடக்கும் போது பிராந்தியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுழற்ச்சி முறையில் வேறு வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவு வழங்கப்படும். பான் கீ மூன் ஆசியப் பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போது ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வி நவநீதம் பிள்ளைக்கு மனித உரிமைக் கழக ஆணையாளர் பதவி கொடுக்கப்பட்டது. பான் கீ மூனிற்கு முன்னர் பொதுச் செயலர் பதவியில் இருந்த கோபி அனன் நடுவண் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னர் இருந்த பௌட்ரஸ் காலி ஆபிரிக்கப் பிராந்திய நாடான எகிப்தைச் சேர்ந்தவர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எவரும் இதுவரை ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்கு வந்ததில்லை. ஐநாவின் வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் பொதுச் செயலராகாக் கடமையாற்றியதில்லை. இதனால் அடுத்த பொதுச் செயலர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக நிலவுகின்றது.
கோட்டை விடப்படும் திறமை
ஐநா பொதுச் செயலர் தேர்வில் பிராந்திய அடிப்படையிலும் வல்லரசு நாடுகளிடையிலான பேரம் பேசுதலும் அதிக முக்கியத்துவம் பெறும் போது திறமையும் நேர்மையும் ஓரம் கட்டப்படப்படுகின்றது என்பதற்கு பான் கீ மூனின் தேர்வு நல்ல உதாரணமாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலராக பான் கீ மூன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்னும் சஞ்சிகையில் "பான் கீ மூன் ஏன் உலகின் மிக ஆபத்தான கொரியர்" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் பான் கீ மூன் பல அவல நிலைகளின் போது மௌனமாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இலங்கை உள் நாட்டுப் போரில் போது தமிழ் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குச் செல்லாமல் போர் முடிந்த பின்னர் போனதையும் அந்தச் சஞ்சிகை சுட்டிக் காட்டி இருந்தது. திறமை மிக்க கோபி அனன் அமெரிக்காவின் சொற்படி நடக்க மறுத்த படியால் ஒரு திறமை அற்றவர் பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியது எனவும் அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது.

கிழிபட்ட பான் கீ மூன்
திறமையும் நேர்மையும் அற்ற பான் கீ மூன் இரு ஐந்து ஆண்டுகாலப் பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். பான் கீ முனிற்கு முன்னர் செயலராக இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போதும் திரு திருவென விழித்தபடி காட்சியளிப்பார்; புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் 2012-ம் ஆண்டு சூடு பிடித்திருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக "கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. அவரும் பொது இடங்களில் தோற்றமளிப்பதை தவிர்த்துப்க் கொண்டார்.
2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். பான் கீ மூனின் மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. இந்த சித்தார் சட்டர்ஜி இந்திய அமைதிப் படை தமிழர் தாயகத்தில் செய்த முதற் படை நடவடிக்கையான புலிகளின் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மூலமாக்குதலின் போது தலைமை தாங்கிச் சென்றவர். அத் தாக்குதலில் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வார்த்தைகளின் படி இந்தியப் படையினர் இலையான்கள் போல் அடித்துக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் சித்தார்த் சட்டர்ஜீ ஒரு தமிழின விரோதியாக மாறினார் எனக் கருதப்படுகின்றது.
பான் கீ மூனின் தலைமை ஆலோசகரான விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியா அப்போது மிரட்டியும் இருந்தது. சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன என ஐயப்படப்படுகின்றது.

மோசமான செயலர்
ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள், இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிட்டார்.  அவர் கண்ணுக்குப் புலப்படாதவராக இருக்கின்றார் என்றார் அந்த நூலாசிரியர். இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழவும் செய்தனர்  ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.
சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்
பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதினார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களிலும் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.
அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?
இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்கததால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்தது. பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

வெழுத்து வாங்கிய சுவீடன் பெண்
பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக ஒரு செய்திக் கசிவு 2012-ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த ஐநா உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் பின்னர் அமெரிக்கத் தினசரியான வாஷிங்டன் போஸ்ற்றில் வெளிவந்தது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். ஐநா வரலாற்றில் இங்கா பிரித் ஆலெனியஸ் போல் வேறு எவரும் அந்த அளவு மோசமாக விமர்சித்ததில்லை. இங்கா பிரித் ஆலெனியஸ் ஐநாவின் ஊழல்கள் தொடர்பாக செய்த விசாரணைக்கு பான் கீ மூன் முட்டுக் கட்டை போட்டார் என்பதால் அவர் ஆத்திரமடைந்திருந்தார்.
இஸ்ரேலின் போர்க்குற்றத்தை பான் கீ மூன் மறைத்தாரா?
2014-ம் ஆண்டு காசா நிலப்பரப்பில் ஹாமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் செய்யும் போது ஐநாவின் கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய விமானன் படையினர் செய்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் போர்குற்றமாகும் என ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஓர் அறிக்கையை ஐநா சபைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதில் அப்பாவி மக்கள் அகதிகளாகத் தங்கியிருந்த ஏழு கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன. அதை பான் கீ மூடி மறைத்து ஓர் அறிக்கையை வெளிய்ட்டார். அந்த அறிக்கை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டால் தயாரிக்கப் பட்டதாக குற்றச் சாட்டுக்கள் வெளிவந்திருந்தன. விக்கிலீக்சும் இது பற்றி தகவல் வெளியிட்டிருந்தது.  இந்த மூடி மறைப்பு தொடர்பாக அப்போதைய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சூசன் றைஸ் நான்கு தடவைகள் தொலைபேசியில் உரையாடி இருந்தார். 
வல்லாதிக்கத் தேர்தல்
ஐநா பொதுச் செயலர் தேர்தல் என்று சொன்னாலும் அதற்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்கும் வெகு தூரம். இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் செய்யப் படும் உடன்பாட்டில்தான் இந்தத் தேர்தல் பெரிதும் தங்கியுள்ளது. வழமையாக பொதுச் செயலர் தேர்வு பாதுகாப்புச் சபையில் மூடிய அறைக்குள் நடை பெறும் ஆனால் இந்த முறை பகிரங்கமாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகிரங்கமாக நடந்தாலும் பல திரை மறைவுப் பேரம் பேசல்கள் நிச்சயம் நடக்கும். 193 உறுப்பு நாடுகளையும், முப்பது நிறுவனங்களையும், நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களையும் கொண்ட ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட முனைபவர் தனது விபரங்களையும் இரண்டாயிரம் சொற்களைக் கொண்ட உலகம் தொடர்பான தனது பார்வைக் கூற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏழு பில்லியன்களுக்கு ஒன்று என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐநாவில் பல சீர்திருத்தங்களை முன்வைக்கின்றது. அதில் ஒன்று ஐநா பாதுகாப்புச் சபை ஒருவரைத் தெரிவு செய்து பொதுச் சபையின் அனுமதிக்கு அனுப்புவதை விடுத்து இருவரை பரிந்துரை செய்து அவர்களில் ஒருவரை பொதுச்சபை தெரிந்து எடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இது நடக்காத காரியமாகும்.
இந்த முறை தேர்தலில் மனுத் தக்குதல் செய்துள்ளவர்கள்:
1. ஐரீனா பொக்கோவா என்னும் 63 வயதான பல்கேரிய நாட்டுப் பெண்மணி. இவர் யுனெஸ்க்கோவின் ஆளுநர் நாயகமாக இருக்கின்றார்.
2. ஹெலென் கிளார்க் என்னும் 66 வயதான நியூசிலாந்து நாட்டுப் பெண்மணி. இவர் தற்போது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
3. நட்டலியா ஜேர்மன் என்னும் 47 வயதான பெண்மணி. இவர் மொல்டோவா நாட்டின் முன்னாள் துணைத் தலைமை அமைச்சர்.
4. வெஸ்னா புசிக் என்னும் 62 வயதான பெண். இவர் குரோசியா நாட்டின் துணைத் தலைமை அமைச்சர்,
5. அண்டோனியோ குடெரெஸ் என்னும் 66 வயதான ஆண். இவர் போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமை அமைச்சர்.
6. ஸர்ஜன் கெரிம் என்னும் 67 வயதான ஆண். இவர் மெசடோனியாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர். ஐநாவின் பொதுச் சபையில் தலைமைப் பதவி வகித்தவர்.
7. டனிலோ டேர்க் என்னும் 64 வயது ஆண். இவர் ஸ்லொவெனியாவின் ஐநாவிற்கான தூதுவராகவும் ஐநாவின் துணைப் பொதுச் செயலராகவும் கடமையாற்றியவர்.
8. ஐகர் லுக்சிக் என்னும் 39 வயதான ஆண் மொண்டிநிகரோவின் முன்னாள் தலைமை அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டமைச்சரும் ஆவார்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண் என்ற நிபந்தனையை பல்கேரிய ஐரீனா பொக்கோவா, மொல்டோவாவின் நட்டலியா ஜேர்மன், குரோசியாவின் வெஸ்னா புசிக் ஆகிய மூவரும் திருப்தி செய்கின்றனர். ஆனால் இவர் யுனெஸ்க்கோவின் தலைமைப் பதவியில் இருக்கையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அதில் பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமை வழங்கப்பட்டதால் அவர் அமெரிக்காவைத் திருப்தி செய்ய மாட்டார். இந்த முறை வேட்பாளர்கள் தமது நிலை தொடர்பாக பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் எட்டு வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே பரப்புரைக் களத்தில் இதுவரை இறங்கியுள்ளனர். மற்றவர்கள் சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
எப்படித்தான் தேர்தல் நடந்தாலும் எவர் வென்றாலும் ஐநா சபை என்பது உலகிலேயே திறனற்ற ஒரு அமைப்பு, ஊழல் நிறைந்த அமைப்பு என்ற நிலையை மாற்றப்பட மாட்டாது.

Monday, 2 May 2016

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க இரசிய முறுகல்

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக்கலன்கள் இரசியாவின் எல்லைக்கு அண்மையாக வந்து அச்சுறுத்துவதற்கு எதிராக இரசியா தேவையான எல்லா வழிவகையிலும் செயற்படும் என அதிபர் விள்டிமீர் புட்டீன் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் ஒன்றிற்கும் வேவு பார்க்கும் விமானம் ஒன்றிற்கும்  ரோந்து விமானம் ஒன்றிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் இரசியப் போர் விமானங்கள் பறந்தன என்ற குற்றச் சாட்டை அமெரிக்கா முன் வைத்தமைக்குப் பதிலாகவே இரசிய அதிபர் இப்படிக் கருத்து வெளியிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பாவில் இரசியப் படைகளுக்கும் நேட்டோப் படைகளுக்கும் இடையிலான முறுகல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கு புதிதாக நியமித்துள்ள படைத் தளபதி Curtis Scaparrottiமீது கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நிலைமை தொடர்பாக அமெரிக்க மூதவையின் படைத்துறைச் சேவைக்கான குழுவினர் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

இரசியப் பூச்சாண்டி
நேட்டோப் படையினர் தமது எல்லையில் இருந்து 75 மைல் தொலைவில் வந்து விட்டனர் என இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்து அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியதன் பின்னர் இரசிய விரிவாக்கம் என்ற அச்சம் கிழக்கு ஐரோப்பாவில் அதிலும் முக்கியமாக போல்ரிக் நாடுகளில் உருவாகியுள்ளது. அந்த நாடுகள் தம்மை மீண்டும் இரசியா தன்னுடன் இணைப்பதைத் தடுக்க நேட்டோப் படைகளை தமது மண்ணிற்கு வரவழைக்கின்றன. போல்ரிக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளை போல்ரிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த போல்ரிக் நாடுகளிலும் போலந்திலும் இரசியாவிற்கும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. போல்ரிக் கடலின் கிழக்குப் புறத்தில் லித்துவேனியாவிற்கும் போலாந்திற்கும் இடையில் உள்ள கலினிங்கிராட் (Kaliningrad) என்னும் துறை முகப் பிராந்தியம் இரசியாவின் கட்டுப்பாட்டில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து இருக்கின்றது. அங்கு இரசியா தனது படவலுவை வியப்பூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.  சுவீடன், பின்லாந்து, இரசியா, எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலாந்து, ஜேர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகள் போல்ரிக் கடலைச் சுற்றவர உள்ளன.

கப்பல் இடைமறிப்பு
அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல் (guided missile destroyer) போல்ரிக் கடலிற்குள் 2016 ஏப்ரல் மாதம் 10-ம் திகதி பிரவேசித்தது. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானங்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதற்குத் தொல்லைகள் கொடுத்தன. ஒரு கட்டத்தில் 30 அடி அண்மையாகவும் பறப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானம் ஒலியிலும் வேகமாகப் பறக்கக் கூடியதும் எல்லாவிதமான கால நிலைகளிலும் செயற்படக் கூடியதுமாகும்.  USS Donald Cook நாசகாரிக் கப்பலில் போலந்தின் உலங்கு வானூர்தி  இந்த நெருங்கிப் பறத்தல் தொடர்பாகவே அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் படைத்துறைக்கான தெரிவுக் குழுவினர் அதிக கரிசனை கொண்டுள்ளனர். USS Donald Cook ஒரு நான்காம் தலைமுறை வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலாகும். இதன் நீளம் 154மீட்டர். விமான எதிர்ப்புப் போர் (anti-air warfare ), நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (anti-submarine warfare), கடற்பரப்பு எதிர்புப் போர் (anti-surface warfare ) ஆகிய மூன்றையும் இது செய்யக் கூடியது.இதில் உள்ள டொமாஹோக் ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. அத்துடன் அணுக்குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இதில் சாதாரண நிலையில் 56 டொமாஹோக் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். போர்ச்சூழலில் 96 ஏவுகணளைகளாக இது அதிகரிக்கப்படலாம். கப்பல்களுக்கு நெருங்கிப் பறத்தல் மட்டுமல்ல அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இரசிய நீர்மூழ்கிக் கப்பல்களால் நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப் படுகின்றன.



இரசியாவைச் சீண்டுதல்
போல்ரிக் கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்த கடற்படைத் தளமான கலின்கிராட்டிற்கு அண்மையாக USS Donald Cook பயணித்தமை இரசியாவை சீண்டும் ஒரு செயலாகும். ருமேனியாவில் அமெரிக்கா தனது அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை நிறுத்தியிருப்பது  நடுத்தர தூர அணுப்படைக்கல உடன்படிக்கைகளை மீறும் செயலாகும் என இரசியா கருத்து வெளியிட்டிருந்தது.  2015-ம் ஆண்டு டிசம்பரில்Brian McKeon, the US Principal Deputy Under Secretary of Defense for Policy வெளிவிட்ட கருத்து இப்படி இருந்தது:
  • We are investing in the technologies that are most relevant to Russia's provocations, developing new unmanned systems, a new long-range bomber, a new long-range stand-off cruise missile and a number of innovative technologies. இரசியாஅவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்களுக்கு ஏற்ப எமதூ தொழிநுட்பங்களில் முதலீடு செய்கின்றோம். ஆளில்லா (போர் விமான) முறைமை, ஒரு  புதிய தொலைதூரத் தாக்குதல் குண்டு வீச்சு விமானங்கள், ஒரு புதிய தொலைதூர இடை நிலை நிறுத்து வழிகாட்டு ஏவுகணைகள் உட்படப் பல புதுப்புனைவு தொழிநுட்பங்கள் இதில் அடங்கும். 

சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகள்
2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பு கிழக்கு ஐரோப்பாவில் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்துவதாகவும் தொடர் பயிற்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் முடிவு செய்திருந்தது.  நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற தனது தொடர் வேண்டு கோள்களுக்கு மாறாக இப்பட்டி முடிவு எடுக்கப் பட்டுள்ளது என இரசியா அப்போது கருத்து வெளியிட்டிருந்தது.  இந்த நேட்டோக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவின் HMS Iron Duke என்னும் Type 23 வகையைச் சேர்ந்த Frigate கப்பல்,  Type-45 வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பல், மூன்று கடற்கண்ணி வாரிஅள்ளும் கப்பல்கள் ஆகியவை 530 கடற்படையினருடன் அனுப்பப்பட்டன. பிரித்தானியாவின் இந்த நகர்வை பனிப்போர்க் காலத்திலும் பார்க்க அதிக வலுவுடைய முன்னோக்கிய நகர்வு என நேட்டோவிற்கான பிரித்தானியப் பிரதிநிதி அடம் தொம்சன் தெரிவித்திருந்தார். பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலன் அதிகரித்த நேட்டோப் படைப் பரவலமர்த்தல் எமது எதிரிக்கு ஒரு கடுமையான செய்தியைத் தெரிவிப்பதுடன் எமது நட்பு நாடுகள் அச்சுறுத்தப்படும் போது நாம் பதில் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்பதையும் உணர்த்துகின்றத்து என்றார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு போல்ரிக் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.

வேவு விமான இடைமறிப்பு

2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் திகதி போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்க வேவு விமானமான ஆர் சி-135ஐ பாதுகாப்பற்ற முறையிலும் தொழில்சார்பற்ற வகையிலும் எஸ் யூ-27 இரசியப் போர் விமானம் இடை மறித்ததாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க வேவு விமானமான ஆர்சி-135 எதிரியின் இலத்திரனியல் பொறிமுறை தொடர்பான தகவல்களைத் திரட்ட வல்லது. ஆனால் இரசிய அதிகாரிகள் தமது எல்லையை நோக்கி ஓர் இனம் காணமுடியாத பொருள் மிக வேகமாக வந்ததாகவும் அதற்கு தமது விமானங்கள் விடைகொடுக்கும்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்ததுடன் தமது விமானி பன்னாட்டு விமானப் பறப்பு விதிகளுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறினார்கள். தமது விமானம் அமெரிக்க விமானத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் செய்யவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் போல்ரிக் பிராந்தியத்தில் நெருக்கடியை அதிகரிப்பதாக அமைந்தது. அத்துடன் போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்காவினது அதிகரித்த படை நகர்வுகளுக்கு இரசியாவும் தனது பதில் நகர்வுகளைத் தீவிரப்படுத்துவதாகவும் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்க வேவு விமானத்திற்கு 50 அடி வரை நெருங்கி வந்த இரசியப் போர் விமானம் உருளைச் சுற்றல் (Barrel Roll) என்னும் அச்சுறுத்தல் பறப்பையும் செய்தது. எதிரி விமானத்தின் பதைக்கோட்டை சுற்றிச் சுற்றி பறந்து சென்று அதைக் கடந்து சுற்றியபடியே செல்லும் நகர்வை உருளைச் சுற்றல் (Barrel Roll)  என்பர்.  இதன் போது எதிரி விமானம் தனது திசையை மாற்ற முடியாமற் செய்யப்படும். போல்ரிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படையினரின் நடமாட்டத்தை தனது கொல்லைப் புறத்திற்கு எதிரி வந்துவிட்டது போன்ற உணர்வை இரசியப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றது. இரசியப் படையினர் அமெரிக்கப் படையினருடன் ஒரு முழுமையான நேரடி மோதலை தவிர்க்க விரும்பும் அதேவேளை அமெரிக்காவின் படை நகர்வுகளைப் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாரில்லை என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்த விரும்புகின்றனர்.

ரோந்து விமான இடைமறிப்பு
2016 ஏப்ரில் 29-ம் திகதி வெள்ளி காலை அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர் சீ - 35 போல்ரிக் கடற் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருக்கையில் இரசியாவின் எஸ்.யூ-27 போர் விமானம் அதற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் உருளைச் சுற்றல் (Barrel Roll) பறப்பைச் செய்தது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க வேவு விமானத்திற்கு 25 அடிகள் வரை அண்மையாக இரசியப் போர் விமானம் பறந்து சென்றது. அமெரிக்காவின் ரோந்து விமானமான ஆர்.சீ-35 பன்னாட்டு விமானப் பரப்பில் பறந்து கொண்டிருக்கையிலேயே இந்தச் சம்பவம் நடந்ததாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்தது.



அலைவரிசைக் குழப்பி பரீட்சிக்கப் பட்டதா?

அமெரிக்காவின் USS Donald Cook என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலுக்கு நெருக்கமாகாப் பறந்த இரசிய எஸ்.யூ-24 போர் விமானம் எந்த ஒரு படைக்கலன்களையும் தாங்கிச் செல்லவில்லை. ஆனால் அது இரசியா உருவாக்கிய புதிய Khibiny என்னும் பெயர் கொண்ட எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமையைக் (electronic jamming system) கொண்டிருந்ததாகவும் அவை அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலின் ரடார்களை குருடாக்கி விட்டதாகவும்  தொடர்பாடல் கருவிகளை செயலிழக்கச் செய்ததாகவும் இரசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அமெரிக்காவின் USS Donald Cook நாசகாரக் கப்பல் மிக நவீன ஏஜிஸ் தாக்குதல் முறைமையைக் (Aegis Combat System) கொண்டுள்ளது. இது கணனிப் பொறித் தொகுதிகளையும்  நான்கு ரடார்களையும் கொண்டு எதிரி இலக்குகளை இனம் கண்டு துரிதமாகத் தாக்கவல்லது. இதில் 50இற்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உண்டு. இரசியாவின் புதிய எலத்திரனியல் அலைவரிசைக் குழப்பி முறைமை 350மைல்கள் விட்டம் கொண்ட ஒரு வட்டப்பரப்ப்பில் எந்த எதிரி ரடார்களையும் குழப்பக் கூடியவை எனச் சொல்லப்படுகின்றது. இதனால் USS Donald Cook இல் இருந்த அமெரிக்கக் கடற்படையினரின் மனோ நிலை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சொல்லப் படுகின்றது. 27 பேர் பதவி விலகும் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவை இது தொடர்பாகக் கரிசனை காட்டியதற்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து அமெரிக்க நாசகாரிக் கப்பல் ஹங்கேரித் துறைமுகத்திற்குச் சென்று விட்டது.

கிழக்கே போன அமெரிக்காவின் F-22 போர் விமானங்கள்
இரசியாவின் நெருங்கிப் பறத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து போல்ரிக் நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவிற்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே 2015-ம் ஆண்டு எஸ்தோனியாவிற்கும் போலாந்திற்கும் F-22 விமானங்கள் அனுப்பி வைக்கப் பட்டிருந்தன. போல்ரிக் பிராந்தியத்தில் மட்டுமல்ல கருங்கடல் பிராந்தியத்திலும் அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமடைகின்றது. இந்த நிலைமையைச் சமாளிக்க இரசியாவின் முன்னாள் நெருங்கிய நட்பு நாடும் முன்னாள் பொதுவுடமை நாடும் தற்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பாராடும் நாடும் நேட்டோவின் உறுப்பு நாடுமான ஹங்கேரிக்கு அமெரிக்காவின் F-22 விமானங்கள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. உலகில் முதலில் செயற்படத் தொடங்கிய ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமாக F-22 விமானம் இருக்கின்றது.  F-22 மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் மிகத் தொலவில் வைத்தே எதிரி விமானங்களையும் இலக்குகளையும் இனங்காணும் திறன் மிக்கது.

நேட்டோப் படையினரின் பெரும் போர்ப் பயிற்ச்சி
2016 ஜூன் மாதம் ஐக்கிய அமெரிக்காவின் 13,000படையினரும் இருபத்தி நான்கு மற்ற நேட்டோ நாடுகளின் 12,000 படையினரும் இணைந்து ஒரு பெரும் போர்ப்பயிற்ச்சியை போலந்தில் செய்யவிருக்கின்றனர். பதினொரு நாட்கள் நட்டக்கும் இப் போர் பயிற்ச்சியில் நேரடியாக சுடுகலன்கள் பாவித்தல், விமானத் தாக்குதல் நகர்வுகள், வான் போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள், போர்த் தாங்கித் தாக்குதல் ஒத்திகைகள் ஆகியவை நடக்கும். Anaconda-2016 என்னும் குறியீட்டுப் பெயர் இந்தப் போர் ஒத்திகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இதில் உக்ரேன் நாடும் கலந்து கொள்ள வேண்டும் எனப் போலாந்து தெரிவித்துள்ளது. இதற்கு ஜேர்மனி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சுழற்ச்சி முறைப் படை நகர்வின் நோக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்ல் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) நேட்டோப் படையினர் ஈடுபடுத்துவது மோசமான ஒரு மூலோபாயத்தை கொண்டது. பெருமளவு படையினரை ஒரேயடியாகக் கொண்டு போய்க் குவிப்பது செலவு மிக்கது. அத்துடன் இரசிய மக்களைக் கலவரமடையச் செய்து அவர்களை விளடிமீர் புட்டீனின் பின்னால் அணி திரளச் செய்யும். சில நூறு அல்லது ஆயிரக் கணக்கில் சுழற்ச்சி முறையில் படையினரை அங்க்கு அனுப்பி பயிற்ச்சியில் ஈடுபடுத்துவதால் பிராந்திய நிலைமைக்கு ஏற்ப போரிடும் திறனை அவர்கள் பெறுகின்றார்கள். இப்படி தொடர்ந்து சுழற்ச்சி முறையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயிற்றுவிப்பது ஒரு புறம் நடக்கும். மறு புறத்தில் இரசியாவின் எல்லைப் புற நாடுகளில் பெருமளவு படைக்கலன்களை களஞ்சியப் படுத்தி வைக்கப்படும். ஒரு போர் உருவாகும் நிலை ஏற்படும் போது பல்லாயிரம் படையினரைக் கொண்டு போய் ஒரு குறுகிய கால அவகாசத்தில் இறக்கும் வசதி நேட்டோப் படையினரிடம் உண்டு. இது இரசியப் படைகளுக்குப் பெரும் சவாலாக அமையும்.

Monday, 11 April 2016

பனாமா பத்திரக் கசிவும் உலக அரசியலும்

விக்கிலீக்ஸினதும் எட்வேர்ட் ஸ்நோடனினதும் இரகசிய அம்பலமாக்குதல்க்ளை விஞ்சும் அளவிற்கு அளவிற்கு இரகசியத் தகவல்களை பனாமாவில் செயற்படும் மொஸ்ஸாக் பொன்சேக்கா நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. பனாமா நாடு உட்படப் பல வருமானவரிப் புகலிடங்களில் இரகசியமாக தமது நிதிகளை மறைத்து வைத்திருப்பவர்கள் பற்றிய தகவலகளை அது அம்பலப் படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையினர், சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் எனப் பலதரப் பட்டவர்கள் சிக்கலில் சிக்க வைக்கப் பட்டுள்ளனர். 78 நாடுகளைச் சேர்ந்த அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists) இந்த இரகசியங்களை வெளிக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தது.  7.6 ரில்லியன் அல்லது 7.6 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் வருமான வரிப்புகலிடங்களில் ஒளித்து வைக்கப் பட்டுள்ளன. சில தகவல்களின்படி 24 முதல் 36 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் வருமானவரிப் புகலிடங்களில் ஒளித்து வைக்கப் பட்டுள்ளன.

பெயரால் அதிருப்த்தி
பனாமாப் பத்திரக் கசிவு என்னும் பெயரால் பனாமா அரசு  அதிருப்தியடைந்துள்ளது. இது பனாமாவின் கதை அல்ல; பனாமா இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே என்றார் பனாமாவின் துணை நிதியமைச்சர். பனாமா அரசு தனது நாட்டில் செயற்படும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என பல நாட்டு அரசுகள் ஏற்கனவே தமது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் பனாமாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைக் கொண்டுவரப்படும் எனவும் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தது. பனாமாவில் ஒரு நிறுவனத்தைப் (company or corporation) பதிவு செய்வது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலிவானதாகும். பனாமாவில் இருக்கும் மொஸ்ஸா பொன்சேக்கா போன்ற சட்டவாளர் அமைப்புக்கள் பனாமாவில் நிறுவனங்களைப் (company or corporation) பதிவு செய்து அதற்கு முகவரி, தபாற்பெட்டி இலக்கம், பெயரளவு இயக்குனர்கள், ஆகியவற்றை வழங்குவதுடன் சொத்துக்களையும் வாங்கிக் கொடுக்கும்.

ஜேர்மனிய ஊடகம்

பனாமாப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட ஜேர்மனி ஊடகம் அப்பத்திரங்கள் எந்த நாட்டு அரச வருமானவரித் துறைக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் எல்லாப் பத்திரங்களும் பகிரங்கப் படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. ஐநூற்றுக்கு மேற்பட்ட பெரு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வருமானவரிப் புகலிடங்களில் முதலீடு செய்வதற்கு ஆலோசனையும் உதவியும் வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா உலகில் வேகமாக வளர்ந்து வரும் வருமானவரிப் புகலிடமாகும். எந்த வித மோசமான பொருளாதாரச் சூழலிலும் இலண்டனில் வீடுகளின் விலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு இந்த வருமானவரிப் புகலிட முதலீடுகளே காரணம்.

வருமானவரிப் புகலிடம்
பனாமா என்றால் புகையிலையும் கால்வாயும் தான் எம் நினைவிற்கு வரும். அது வருமானவரிப் புகலிடமாக இருப்பது பலருக்குத் தெரியாது. பலருக்கு வருமானவரிப் புகலிடம் என்றால் என்னவென்று கூடப் பலருக்குத் தெரியாது. ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies ) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனை வரி போன்றவை அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர் கொடுக்கத் தேவையில்லை, தங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை.  பனாமாவின் வாங்கிகள் தகவல்களை வெளியிட்டால் அது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தண்டப் பணத்தை பனாமிய அரசுக்குச் செலுத்த வேண்டும். பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்ப முயற்ச்சிப்பவர்களும் ஊழல் மூலம் பெரும் நிதி பெற்றவர்களும் வரி ஏய்ப்புச் செய்பவர்களும் விவாக இரத்துக் கோரும் மனைவியிடமிருந்து சொத்தை மறைப்பவர்களும், சட்ட விரோத நிதியை (அதில் பெரும்பாலானவை போதைப் பொருள் விற்பனையால் பெற்றவையாக இருக்கும்) மாற்றீடு செய்ய அல்லது முதலீடு செய்ய முயல்பவர்களும் வருமானவரிப் புகலிடத்தைப் பெரிதும் விரும்புகின்றார்கள். பனாமா உலகின் மிகப் பழமையான வருமானவரிப் புகலிடமாகும். 1927-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் Wall Street வங்கிகள் பனாமாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வரி தவிர்ப்பிற்காக தம்மைப் பதிவு செய்யும் முறைமையையும் சட்டங்களயையும் உருவாக்குவதற்க்கு உதவி செய்தன. 1970-ம் ஆண்டு பனாமா அரசு மிகவும் இறுக்கமான இரகசியக் காப்புச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனால் உலகில் நிதி தொடர்பான இரகசியம் பேணும் நாடுகளின் பட்டியலில் பனாமா 11-ம் இடத்தில் இருக்கின்றது. இப்பட்டியலில் சுவிஸ் முதலாம், இடம், லக்சம்பேர்க் முதலாம் இடம், ஹொங் கொங் மூன்றாம் இடம், கயம் தீவுகள் நான்காம் இடம், சிங்கப்பூர் ஐந்தாம் இடம், ஐக்கிய அமெரிக்காஆறவது இடமும், லெபனான் ஏழாவது இடமும் ஜேர்மனி எட்டாம் இடமும் ஜேர்சி ஒன்பதாம் இடமும், ஜப்பான் பத்தாவது இடமும் பெற்றுள்ளன.  சர்வாதிகாரி மானுவேல் நொரியேகாவின் ஆட்சியில் உலகின் பெரும் மோசடிக்காரர்களின் சொர்க்கமாக பனாமா உருவானது.

பனாமாவும் கப்பல்களும்
1919-ம் ஆண்டில் இருந்தே பனாமாவில் பல நிறுவனங்களும் தனி நபர்களும் தமது கப்பல்களைப் பதிவு செய்யும் முறை உருவாக்கப்பட்டது. பனாமாக் கொடியுடன் உலகக் கடலெங்கும் வலம் வரும் கப்பல்களால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பிற்கு வழிவகுக்கப் பட்டது. பனாமாவில் பதிவு செய்யப் பட்ட கப்பல்களின் தொகையான 8600 ஐக்கிய அமெரிக்காவிலும் (3400கப்பல்கள்) சீனாவிலும் (3700 கப்பல்கள்)பதிவு செய்யப்பட்ட மொத்தக் கப்பல்களின் தொகைக்களிலும் அதிகமாகும்.  ஆரம்பத்தில் அமெரிக்கக் கப்பல்களின் பயணம் செய்பவர்களுக்கு மது விற்ப்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. இத் தடையில் இருந்து தப்ப பனாமாவில் அமெரிக்கக் கப்பல் முதலாளிகள் தமது கப்பல்களைப் பதிவு செய்ய 1922-ம் ஆண்டு ஆரம்பித்தனர். 30 இலட்சம் மக்களைக் கொண்ட பனாமாவிற்கு இந்தக் கப்பல் பதிவுகள் மூலம் ஆண்டு ஒன்றிற்கு அரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கின்றது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கு பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் குறைவு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் பனாமாவில் பதிவு செய்யப் பட்ட கப்பல்கள் அதிக அளவு விபத்துக்கு உள்ளாகின்றன. பனாமாவில் ஒரு நாளில் ஒரு கப்பலைப் பதிவு செய்ய முடியும்.

வருமானவரிப் புகலிடங்களின் செயற்பாடு
மிகவும் சட்ட பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஒரு நாடோ அல்லது ஒரு நாட்டின் ஒரு புகுதியோ வருமானவரிப் புகலிடமாக இருக்க முடியும். இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு கிரேப்ஸ் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் கைப்பேசிகளை நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தையில் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் நூறு டொலர் இலாபத்திற்கு அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும். மாறாக அந்த கைப்பேசிகளை வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்துள்ள கிரேப்ஸ் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கு 101டொலர்களுக்கு விற்று இலாபமாகக் கிடைக்கும் ஒரு டொலருக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். பின்னர் வருமான வரிப் புகலிட நாட்டில் இருந்து உலகெங்கும் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்து கிடைக்கும் 99 டொலர் இலாபத்திற்கு வருமானவரி கட்டாமலோ அல்லது அமெரிக்காவிலும் பார்க்க மிகக் குறைந்த வருமான வரியையோ கட்டலாம். இவை சட்டபூர்வமான வர்த்தகமாகும். ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு வருமானவரிப் புகலிட நாடு இருப்பதை விரும்பாது. அது அமெரிக்காவின் வருமான வரி மூலம் திரட்டும் நிதியைக் குறைக்கின்றது. ஆனால் நடைமுறையில் ஊழல் செய்வோர்க்கும் சட்ட விரோதமாகப் பணம் சேர்ப்போர்க்கும் தஞ்சமடையும் இடமாகப் பல வருமானவரிப் புகலிடங்கள் செயற்படுகின்றன. வெளி நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்யும் நிறுவனத்தை shell company என அழைப்பர். இது வர்த்தக நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாமல் நிதிப் பரிமாற்றங்கள் செய்வதற்கும் அல்லது எதிர்கால திருகுதாள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வைத்திருக்கப்படும். வருமானவரிப் புகலிடங்களிற்குப் போகும் நிதி பின்னர் உலகின் முன்னணி நிதிச் சந்தைகளான New York, London, Zurich, Geneva, Frankfurt, and,  Singapore, Hong Kong, and Dubai ஆகியவற்றைப் போய்ச் சேரும். பல வருமானவரிப் புகலிடங்களை உருவாக்கிய சிற்பிகள் HSBC, UBS, Credit Suisse, Citigroup, Bank of America, RBS, Barclays, Lloyds, Standard Chartered, JPMorgan Chase, Wells Fargo, Santander, Credit Agricole, ING, Deutsche Bank, BNP Paribas, Morgan Stanley, and Goldman Sachs ஆகிய முன்னணி வங்கிகள் ஆகும். 1970களில் இருந்து இந்த முன்னணி வங்கிகள் தமது பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களின் வருமானங்களிற்கான வரிகளில் இருந்து தப்ப உதவி செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளன. வெறும் நாணயங்களை மட்டுமல்ல தங்கம் போன்ற உலோகங்கள், ஓவியங்கள், பழைய வாகனங்கள், புகைப்படங்கள், உல்லாசப் படகுகள், எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றின் வர்த்தக மூலம் வருமானங்கள்  மறைக்கப்படுவதும் உண்டு.

சீனாவும் இந்தியாவும்
சீனாவில் இருந்து ஒருவர் ஐம்பதாயிரம் டொலர்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து இரண்டரை இலட்சம் டொலர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பெருந்தொகைப் பணம் வருமானவரிப் புகலிடங்களிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் கறுப்புப் பணம் பெரும் பங்கு வகிக்கின்றது.

அமெரிக்கத் தேர்தலில் தாக்கம்
பனாமா பத்திரக் கசிவு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்க முதலாளித்துவமும் உலகமயமாதலும் அமெரிக்க மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டுமே நன்மை பயக்கின்றது என்பது இப்போது உறுதி செய்யப்படுகின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிவாய்பையும் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பைக் குறைத்து அவரை எதிர்த்துப் போட்டியிடும் Bernard  Sanders இன் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. Trump, ஆகிய இருவரும் அமெரிக்காவின் முதலாளித்துவத்தை வேறு வேறு விதமாகக் கடுமையாக விமர்சிப்பவர்கள்.

பினாமிகள்
வருமானவரிப் புகலிடத்தில் அரசியல்வாதிகள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது உறவினர் தேவை. அதாவது பினாமி தேவை. ஒரு அரசியல்வாதி தன் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை தனது பினாமியின் பெயரில் ஒரு இரகசியம் பேணும் வருமானவரிப் புகலிட நாட்டில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால் அந்தப் பினாமி நிறுவனம் பெரும் நிதியைத் திரட்டும். பின்னர் இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்னும் முகமூடியுடன் இந்தியாவிற்கு வரும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு நெருக்கமான ரமி மக்லவ் என்பவரது நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதை அமெரிக்கா தடை செய்திருந்தது. ஆனால் ரமி மக்ல வருமானவரிப் புகலிட நாடுகளில் தனது பெயரில் நிறுவனங்களைப் பதிவு செய்து தனது வர்த்தகத்தைத் தொடர்வது பனாமா பத்திரக் கசிவால் அம்பலமாகியுள்ளது.

பணச் சலவையும் வருமானவரிப் புகலிடமும்.
உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாக உலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமா ஊடகவியலாளர் ஒருவர் பணச் சலவை என்று வரும் போது எமது நாட்டில் நன்றாக நனைத்து துவைத்துக் காய வைத்துக் கொடுப்போம் என்றார். சிறந்த வருமானவரிப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் மொஸ்ஸாக் பொன்சேக்காவினுடையது.  அதுதான் இப்போது பெருமளவு இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.  11.5 மில்லியன் பத்திரங்கள், 200,000இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான தகவல்கள் மொஸ்ஸாக் பொன்சேக்காவினால் வெளியிடப்பட்டுள்ளன. 1977-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டின் இறுதிவரை இத்தகவல்கள் செல்கின்றன. இதில் இடைத் தரகர்களாகச் செயற்பட்டா 14,000  சட்டவாளர்கள் நிறுவனங்களினதும் கணக்காளர்களின் நிறுவனங்களினதும் பெயர்களும் அம்பலமாகியுள்ளன. பணச்சலவைக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பான நிதி நடவடிக்கைப் பணிப் படை { Financial Action Task Force (FATF)} பனாமா நாட்டை தனது சாம்பல் நிறப்பட்டியலில் சேர்த்துள்ளது. இலகுவாக வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல், நடவடிக்கைப் பதிவேடுகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் இன்மை போன்றவை பனாமாவை இந்தப் பட்டியலில் வைத்திருக்கின்றது. அனாமதேய சமூக அமைப்பு (anonymous society) என வகைப்படுத்தி பனாமாவில் பெயர்கள் வெளிவிடாமல் நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், சொத்துக்கள் பற்றிய விபரம் யாருக்கும் வெளிவிடப்படமாட்டாது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் (Corporations) தமது கணக்குகளை சட்டப்படி ஆய்வு செய்யத் தேவையில்லை. வாருமானவரித் துறைக்கு தமது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைக்களுக்கு பனாமாவில் வரி கட்டத் தேவையில்லை.

அம்பலத்திற்கு வந்தோர்
பனாமாவின் மொஸ்ஸோ பொன்சேக்காவின் பத்திரக் கசிவினால் இதுவரை அம்பலத்துக்கு வந்த பெயர்கள் ஐஸ்லாந்தில் பதவியில் இருந்து விலகிய தலைமை அமைச்சர் சிக்மண்டுர் டேவிட் குன்லக்சன், (Sigmundur Gunnlaugsson )உலக காற்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் ஜியன்னி இன்பன்ரினோ,  உக்ரேனின் சொக்லட் அரசர் பெற்றோ பொரசெங்கோ, பிரித்தானியத் தலைமை அமைச்சரின் (காலம் சென்ற) தந்தை இயன் கமரூன்,பாக்கிஸ்த்தானியத் தலைமை அமைச்சர் Nawaz Sharif எச் எஸ் பி சி உட்படப் பல முன்னணி வங்கிகள், அமெரிக்காவின் தடையையும் மீறி சிரிய அதிபர் அசத்திற்கு எரிபொருள் வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள், சீன அதிபரின் மனைவியின் உடன்பிறப்பு உட்படப் பல முன்னணித் தலைகள், காற்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி, இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தியத் தலைமை அமைச்சருக்கு நெருக்கமான செல்வந்தக் குடும்பமான அதானி குடும்பத்தில் ஒருவர், ஹொங் கொங் நடிகர் ஜக்கி சான். மேலும் கிளறப்படும் போது இலங்கை, இந்தியா உட்படப் பல நாடுகளின் அரசியல்வாதிகளின்  பெயர்களும் வெளிவரும். இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மொஸ்ஸோ பொன்சேக்காவின் அம்பலப் படுத்தல் தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் விசாரணை என்ற சொல்லுக்கு இழுத்தடித்தல் என்ற பொருள் உண்டு.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தினது பெயரும் உண்டு. உலகின் முன்னணி செல்வந்தரான இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் பெயர் இல்லை. ஆனால் அவரது நெருங்கிய நண்பரும் அவருக்கு அவரது முன்னாள் மனைவியை அறிமுகச் செய்து வைத்தவரும் அவரது மகனின் ஞானத் தந்தையுமான ஒரு பெரும் செல்வந்தரின் பெயர் வெளிவந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் கறுப்புப் பட்டியலில் இடப்பட்ட 33 நிறுவனங்கள் தொடர்பான தகவல்களும் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த 33 நிறுவனங்களும் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான், வட கொரியா, சிரியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் புரிந்த நிறுவனங்களாகும்.

சினமடைந்த சீனா
ஊழல் ஒழிப்பிற்கு எதிராகப் பெரும் குரல் கொடுத்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மைத்துனரின் பெயரும் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன  வெளியுறவுத் துறை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என அதை விபரித்தது. ஜி ஜின்பிங் பதவிக்கு வர முன்னர் சீனப் பொதுவுடமைக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தாம் ஊழல் மூலம் சம்பாதித்த நிதியை பெருமளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்தனர். சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சரின் சொத்து விபரங்களை வெளிவிட்ட அமெரிக்க ஊடகமான நியூயோர்க் ரைம்ஸ்ஸின் இணையத்தளம் இணைய வெளி ஊடுருவிகளால் முடக்கப்பட்டடது. அது சீனாவின் பழிவாங்கல் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இப்போது பனாமா பத்திரங்களின் அம்பலப் படுத்தல் தொடர்பான  எல்லாத் தகவல்களும் சீன இணைய வெளியில் தடைசெய்யப் பட்டுள்ளன. சீனத் தேடு பொறிகள் பனாமா என்ற சொல்லுடைய எல்லாத் தகவல்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது. சீனப் "பொதுவுடமைக்" கட்சியின் உயர்மட்டக் குழுவில்லும் ஆட்சியிலும் உள்ள எட்டுப் பேரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அக்காவினதும் மைத்துனரினதும் பெயரில் பிரித்தானிய வேர்ஜின் தீவில் மூன்று நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளான. அவற்றின் பெறுமதி பல மில்லியன் டொலர்களாகும். பொதுவாக சீனாவின் "பொதுவுடமைக்" கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் மிகவும் வெற்றீகரமான வியாபாரிகளாகும். "பொதுவுடமைக்" கட்சி அதன் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வதைத் தடை செய்துள்ளது.

தன்னார்வத் தொண்டு?
அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists) என்னும் அமைப்பு மெஸ்ஸோ பொன்சேக்காவிடமிருந்து திரட்டிய தகவல்களை ஜேர்மனிய ஊடகம் ஒன்றிற்குப் பகுதி பகுதியாக அனுப்பியது. ஆனால் அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியத்தை உருவாக்கி அதன் பின்னால் நின்று செயற்படுவது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பொதுத்துறை நேர்மைக்கான நிலையம் என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்கா,  தன்னார்வத் தொண்டு அமைப்பு ஆகிய இரண்டு பதங்களையும் சேர்த்துப் பார்த்தால் வருவது அமெரிக்காவின் உளவுச் சதி என்பதாகும். இதனால் பனாமாப் பத்திரப் பகிரங்கத்தின் பின்னால் அமெரிக்க உலக ஆதிக்கச் சதி இருக்கின்றதா என்ற ஐயம் எழுவது இயல்பே. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார்  நெருக்கடியின் பின்னர் பல மேற்கு நாட்டு அரசுகள் வரி ஏய்ப்புச் செய்வோரால் தமது வரி வருமானங்களை இழந்து கொண்டிருக்கின்றன. மேலும் அண்மைக்காலங்களாக உலக அரங்கில் அமெரிக்காவிற்குத் தலை குனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோருக்கு வைத்த பொறியில் பலரும் மாட்டிக் கொண்டனரா?

Monday, 4 April 2016

யேமனில் அமெரிக்காவின் கள ஆய்வும் சவுதியின் களப்பலியும் - வேல் தர்மா

2900கிலோ எடையுள்ள மார்க்-84 குண்டுகளை ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்கின்றது. இக்குண்டு ஒன்று வீசப் படும் இடத்தில் 15மீட்டர் அகலமும் 11 மீட்டர் ஆழமும் கொண்ட பெரிய குழியை உருவாக்க வல்லது. அத்துடன் 381மில்லி மீட்டர் உலோகத்தை அல்லது மூன்றரை மீட்டர் கொங்கிறீட்டைத் துளைத்துக் கொண்டு சென்று வெடிக்கவும் வல்லது. இக்குண்டுகளை சவுதி அரேபியா யேமனில் வீசுகின்றது. அதனால் குழந்தைகள் உட்படப் பல அப்பாவிகள் கொல்லப் படுகின்றார்கள். யேமன் மக்கள் தொகையில் 83 விழுக்காட்டினர் வெளியாரின் உதவிகளால் தமது வயிற்றை நிரப்ப வேண்டிய பரிதாபகர நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இந்த அவலத்துக்குக் காரணம் என்ன?

ஹாதி ஹூதி இனக்குழும மோதலா?
2011-ம் ஆண்டு யேமனிலும் அரபு வசந்தம் எனப்படும் மக்கள் எழுச்சி உருவானது. அதுவும் சிரியாவைப் போலவே ஒரு பெரும் உள்நாட்டுப் போராக மாறியது. அதை ஹூதி இனத்தவர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களுக்கு ஈரானும் லெபனானில் இருந்து செயற்படும் சியா அமைப்பான ஹிஸ்புல்லாவும் ஆதரவு வழங்கின. தலைநகர் சனாவை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூதி போராளிகள் கைப்பற்றி அப்தரப்பு மன்சூர் ஹாதியைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் தானே உண்மையான யேமன் ஆட்சியாளர் என்கின்றார் அவர். ஆனால் முன்னாள் யேமன் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் யேமனின் ஹாதி இனக்குழுமத்தினரதும் ஹூதி இனக்குழுமத்தினரதும் ஆதரவைப் பெற்றிருந்தார். ஆனால் யேமன் பிரச்சனை வெறும் ஹாதி - ஹூதி இனக் குழுமங்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல.

சவுதி ஈரான் மோதலா?
ஈரானும் ஹிஸ்புல்லாவும் ஹூதிகளின் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்ற போதிலும் தாம் படைத்துறையாக யேமனில் எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. பூகோள ரீதியில் யேமன் ஈரான் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் இருப்பது சவுதி அரேபியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். செங்கடலுக்கும் ஏடன் வளை குடாவிற்கும் இடையிலான குறுகிய மண்டெப் நீரிணை (Mandeb Strait) யேமனை ஒட்டியே இருக்கின்றது. அதன் ஒரு புறத்தில் யேமனும் மறு புறத்தில் சோமாலியாவும் எதியோப்பியாவும் இருக்கின்றன. இந்த சிக்கலான நிலையில் யேமனில் சவுதியின் எதிரிகள் ஆட்சியில் அமர்வது ஆபத்தானதாகும். இதனால் 2015 மார்ச் மாதம் 26-ம் திகதி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் யேமனில் ஹூதி இனத்தினர் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். எகிப்து, மொரொக்கோ, சூடான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், காட்டார், பாஹ்ரேன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியா தலைமையில் முதலில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். சோமாலியா இந்தக் கூட்டுப் படையினர் தனது நிலம், வானம், கடல் ஆகியவற்றைப் பாவிக்க இந்தக் கூட்டுப் படியினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாக்கிஸ்த்தானும் யேமனில் தாக்குதல் நடத்தும் நாடுகள் கூட்டமைப்பில் சேரவேண்டுமென சவுதி அரேபியா வற்புறுத்தியது ஆனால் பாக்கிஸ்த்தானியப் பாராளமன்றம் மறுத்து விட்டது. அரபு நாட்டிலேயே மிக வலுவுடைய படையினரைக் கொண்ட எகிப்து 800 படையினரை 2015-09-09-ம் திகதி அனுப்பியது. அத்துடன் குவைத்  யேமனுக்குப் படை அனுப்பாமல் சவுதி அரேபியாவிற்கு அதன் எல்லைகளைப் பாதுக்காக்க தனது படையினரை அனுப்பியது. ஓமான் படையினரை அனுப்பவில்லை. சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மட்டுமே யேமனின் அதிக அக்கறை காட்டுகின்றன.

சுனி சியா மோதலா?
ஈரானும் சவுதி அரேபியாவும் நேரடியாக மோதாமல் மறைமுகமாக மோதுகின்றன. இந்த மோதல்களுக்கு சுனி சியா மோதல் என வெளியில் காட்டப் படுகின்றன, செய்திகளில் அடிபடுகின்றன. ஆனால் உண்மையான மோதல் சவுதி அரேபியாவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல் சவுத் அரச குடும்பத்தினருக்கும் ஈரானைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மதவாதிகளுக்கும் இடடயில் உள்ள மோதலே உண்மையான காரணம், சிரியாவில் ஈரானின் பிடியைத் தொடராமல் தடுக்க சவுதி அரேபியா எடுக்கும் முயற்ச்சி அங்கு பெரும் இரத்தக் களரியை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அங்கு நடப்பவை உலக அரங்கில் பெரும் செய்தியாக அடிபடுவது போல் சவுதி அரேபியா யேமனில் செய்யும் அட்டூழியங்கள் பெரிதாக வெளிவருவதில்லை. யேமனில் நடக்கும் மோதலை ஹாதிகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையிலான மோதலாகக் காட்டப் படுகின்றது.  அதில் ஹாதிகள் சுனி இஸ்லாமியர்கள், ஹூதிகள் சியா முஸ்லிம்கள். ஹூதி இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் மலிக் அல் ஹூதி என்பவரின் தலைமையில் அன்சரல்லா என்னும் அமைப்பில் இணைந்து போராடுகின்றார்கள்.

ஐ எஸ் அமைப்பு - அல் கெய்தா அமைப்பு மோதலா

யேமனில் அல் கெய்தாவின் செல்வாக்கை இஸ்லாமிய அரசு அமைப்பால் அசைக்க முடியவில்லை. இஸ்லாமிய அரசு அமைப்பு தனது யேமன் கிளையை 2014-ம் ஆண்டு உருவாக்கியது. அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா அமைப்பில் ஆயிரக் கணக்கானா உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இஸ்லாமிய அரசு அமைப்பில் நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே இருக்கின்றனர். இஸ்லாமிய அரசு அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பலர் சவுதி அரேபியர்களாக இருப்பதால் யேமனியர்கள் மத்தியில் அவர்களால் செல்வாக்குப் பெற முடியவில்லை. சவுதி அரேபியாடன் எல்லையைக் கொண்ட யேமனின் கிழக்குப் பிரதேசத்தில் அல் கெய்தா வலுவுடன் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் யேமனில் அல் கெய்தா உறுப்பினர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்திக் கொல்வதால் அவர்களால் முழுமையாகச் செயற்பட முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு அமைப்பு அடிக்கடி சியா இஸ்லாமியர்களான ஹூதிகள் வாழும் பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் செய்கின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை சியா பள்ளிவாசல்களே. இப் பள்ளிவாசல் தாக்குதல்களை அல் கெய்தா கண்டனம் தெரிவிப்பதுண்டு. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகள் யேமனில் செய்யும் தாக்குதல்களைச் சாதகமாகப் பயன்படுத்தி யேமனின் தென் பகுதியில் உள்ள நகரான அல் முக்கல்லாவையும் துறைமுக நகரான ஏடனையும் தன் வசப்படுத்திக் கொண்டது.

சவுதியின் சமாதான முன்னெடுப்பு
2012-ம் ஆண்டு சவுதி அரேபியா யேமனில் ஒரு சமாதான முன்னெடுப்பைச் செய்தது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த சமாதான முன்னெடுப்புக்கு ஆதரவு வழங்கின. அதன் படி யேமனின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சலேஹா விலக்கப் பட்டு துணை அதிபர் Abed Rabbo Mansour Hadi அதிபராக்கப் பட்டார். இந்த சமாதான முன்னெடுப்பை பல ஹாதி இளையோர்களும் ஹூதிகளும் நிராகரித்தனர். இவர்களுடன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட சலேஹாவின் ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய அமெரிக்காவின் அயலாக்கம் (outsourcing)
யேமனில் தனது நாட்டுப் படையினர் காலடி எடுத்து வைப்பதில்லை என்பதில் சவுதி அரேபியா உறுதியாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் சவுதி அரேபியப் படையினர் யேமன் சென்றனர். உங்களுக்கான போரை நாம் செய்ய முடியாது. உங்களுக்கான போரை நீங்களே செய்து கொள்ளுங்கள் என மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள நட்பு நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா தெரிவித்து விட்டது. இதனால் அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தையும் அயலாக்கம் செய்துவிட்டது. இதனால் தனது படையினருக்கான ஆளணி இழப்பைத் தவிர்க்க முடியும். போர் புரியும் நாடுகளுக்கான படைக்கலன் விற்பனை மூலம் அமெரிக்கா பெரும் இலாபம் ஈட்ட முடியும். அப்பாவிகளைக் கொன்ற பழியில் இருந்தும் அமெரிக்காவால் தப்ப முடியும். சவுதி அரேபியா ஒரு போர் முனையைத் திறந்ததன் மூலம் தனது படையினருக்கு போர் முனை அனுபவத்தையும் சவுதி அரேபியா வழங்குகின்றது. ஒரு பிராந்தியத்தில் புவிசார் நிலைமைகள் அமெரிக்காவிற்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ பாதகமாக அமையும் போது அங்கு தன் படைகளை அனுப்பாமல் அப்பிராந்திய நாடுகளின் படைகளைக் கொண்டே நிலைமையை தனக்கு சாதகமாக மாற்றும் அமெரிக்காவின் கள ஆய்வு சவுதி யேமனியில் நடக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா தனது செய்மதிகள் மூலமும் ஆளில்லாப் போர் விமானங்கள் மூலமும் உளவுத் தகவல்களைத் திரட்டி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்புப் படைகளுக்கு வழங்குகின்றன.



சவுதி அரேபியா தலைமையிலான கூட்ட்டுப்படையினர் யேமனின் 80 விழுக்காடு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் தலைநகர் சனாவும் இப், தாஜ் ஆகிய நகரங்களும்  ஹூதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. தென் பகுதியும் தென் கிழக்குப் பகுதியும் அல் கெய்தா மற்றும் இஸ்லாமிய அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. யேமனில் 25 இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டுள்ளனர். பாடசாலைகள் மக்களுக்குத் தேவையான உள் கட்டுமானங்கள் பல குண்டு வீச்சுக்களால் அழிக்கப்படுகின்றன. ஆனால் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாம் தாக்குதல் செய்வதாக சவுதி அரேபியா கூறுகின்றது. பன்னாட்டு மன்னிப்புச் சபையும் மற்றும் பல அமைப்புக்களும் யேமனில் எல்லாத் தரப்பினரும் போர்க்குற்றம் புரிவதற்கான காத்திரமான ஆதாரங்களை முன்வைக்கின்றன. ஆனால் இந்த ஆதாரங்கள் எதுவும் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளுக்கு படைக்கலன்களை விற்பனை செய்வதை நிறுத்தவில்லை. 2013-ம் ஆண்டில் இருந்து சவுதி அரேபியாவிற்கு ஐக்கிய அமெரிக்கா 35.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 18,440 குண்டுகளும் 1500 ஏவுகணைகளும் அடக்கம். பிரித்தானியா டேவிட் கமரூனின் ஆட்சியில் சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்த படைக்கலன்களின் பெறுமதி 9பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும். இத்தனைக்கும் மத்தியில் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக்கழகத்தின் ஆலோசனைத் தலைவராக சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்!

கள ஆய்வு வேறு இடங்களில் பயன்படுத்தப்படுமா?

யேமனில் தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் படைகளின் கட்டளை-கட்டுப்பாட்டுப் பணியகம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை நிபுணர்களால் நிரம்பி வழிகின்றது. வெவ்வேறு நாடுகளின் படைகளை மேற்கு நாட்டுப் படைகள் சொகுசுக் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு கணniத் திரைகள் மூலம் போர் முனையில் நெறிப்படுத்துவது பற்றிய கள ஆய்வு வெற்றியளித்தால் அது தென் சீனக் கடல் கிழக்கு ஐரோப்பியா போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம்.

Tuesday, 29 March 2016

இலத்தின் அமெரிக்காவிற்கான கதவை ஒபாமா திறப்பாரா?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2016 மார்ச் 20-ம் திகதி செய்த கியூபப் பயணம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒபாமா தனது குடும்பத்தினருடனும் 40 அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களுடனும் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். அமெரிக்கா தனது ஆசியச் சுழற்ச்சி மையத்தை ஆசியா நாடுகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கையில் சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தகத்தையும் கேந்திரோபாய ஒத்துழைப்பையும் மேம்படுத்திக் கொண்டிருக்கையில் ஒபாமாவின் கியூபாவிற்கும் ஆர்ஜெண்டீனாவிற்குமான பயணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.

கியூபாவில் 5 விழுக்காட்டிற்கும் குறைவான மக்களே இணைய இணைப்பைப் பெற்றுள்ளனர். ஒன்பது விழுக்காட்டிலும் குறைவான தொகை மக்களே சொந்தமாக வீடு வைத்திருக்கின்றார்கள். கியூபாவின் பொருளாதாரத்திற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் வெனிசுவேலா ஆதரவு கொடுத்துக் கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் இருந்து நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை கியூபா குறைந்த விலையில் பெற்றுக் கொண்டிருந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த உதவியும் நிறுத்தப் பட்டது. கியூபப் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து தவிப்பதற்கு அமெரிக்காவுடனான உறவை சீராக்குதல் உதவும் என கியூப ஆட்சியாளர்கள் கருதினர். அமெரிக்கா கியூபாமீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்கினால் அது கியூபாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்துவதை கைவிடுவதாகச் சொல்லிக் கீழ் இறங்கி வந்தது.  கியூப அமெரிக்க உறவை சீராக்குவதில் வத்திக்கான் திருச்சபை அதிக பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகின்றது. அதனால் 2014-ம் ஆண்டின் இறுதியில் நீன்ட காலமாக எதிரிகளாக இருந்த ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் மீண்டும் இரசதந்திர உறவுகளை ஏற்படுத்தி கைதிகள் பரிமாற்றத்தையும் செய்துள்ளன. அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை கியூபாவின் புவிசார் நிலை முக்கியமான ஒன்றாகும். 1492-ம் ஆண்டு இந்தியாவை மேற்கு நோக்கித் தேடிச் சென்ற  நிக்கொலஸ் கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தின் கியூபாத் தீவிலேயே போய் இறங்கினார். கடந்த நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான மிக மோசமான போர் மூளக் கூடிய பேராபத்து கியூபாத் தீவை ஒட்டியே உருவாகி இருந்தது.

அமெரிக்கா வாழ் கியூபர்கள்
அமெரிக்காவில் வாழும் கியூபர்களில் 68 விழுக்காட்டினர் கியூப அமெரிக்க உறவு சீரடைவதை விரும்புகின்றனர். அமெரிக்கக் குடியரசுத் தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக புளோரிடா இருக்கின்றது. புளோரிடாவில் கியூபர்கள் 12 இலட்சம் பேர் வரை வாழ்கின்றார்கள். அமெரிக்காவில் வாழும் கியூபர்கள் நீண்ட காலமாக குடியரசுக் கட்சியை ஆதரித்து வருகின்றனர். அண்மைக் காலங்களாக புளோரிடாவில் வாழும் கியூபர்கள் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியை ஆதரிப்பது அதிகரித்து வருகின்றது. இந்த நகர்வை மேலும் தூண்டச் செய்ய பராக் ஒபாமா கியூபாவுடனான உறவை ஏற்படுத்திக் கொண்டார் எனச் சொல்லப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முனைப்புக்காட்டும் ரெட் குரூஸ் ஒரு கியூபத் தந்தைக்குப் பிறந்தவராவார். ஊழல் மிக்கதும் பல அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருப்பதும் சர்வாதிகாரத்துவம் உடையதுமான கீயூப ஆட்சியாளார்களுக்கு ஒபாமாவின் அமெரிக்கப் பயணம் அங்கீகாரம் வழங்குவது போல் ஆகின்றது என்றார். கியூபாவில் ஒபாமா உரையாற்றும் போது கியூபாவில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வல்லமையோ அல்லது விருப்பமோ அமெரிக்காவிடம் இல்லை என்றார்.

கேந்திரோபாய கியூபா
கியூபாத் தீவில் இருக்கும் பகைமை மிக்க கடற்படையோ அல்லது விமானப் படையோ அமெரிக்காவிற்கு கேந்திரோபாயம் மிக்க மெக்சிக்கோ குடாவை ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கலாம். மெக்சிக்கோ குடாவில் இருந்து அல்டாந்திக் மாகடலுக்கான தொடர்புக்கு பெரும் சவாலாக அமையக்கூடியவகையில் கியூபாவின் பூகோள நிலை இருக்கின்றது. கியூபாவுடன் நல்ல உறவு ஐக்கிய அமெரிக்காவிற்கு இல்லாமையால் அமெரிக்க வணிக மற்றும் கடற்படடக் கப்பல்களும் விமானங்களும் மெக்சிக்கோ குடாவில் இருந்து நேரடியாக அட்லாண்டிக் மாக்கடலுக்குச் செல்லாமல் சுற்றி ஒரு நீண்ட பாதையால் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கியூபாத் தீவின் வட கரை அறு நூறு மைல்கள் நீளமானது இது பஹாமாஸ் கரைக்கு சமாந்திரமாகச் செல்கின்றது. லத்தின் அமெரிக்க நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா தனது உறவை மீள் சீரமைப்பதற்கு கியூபா ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கும் என அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். ஆனால் கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ தனது மக்களுக்கு அதிபர் ஒபாவைத் தாக்கி எழுதிய நீண்ட கடிதம் அவர்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகின்றதா? அல்லது பிடல் காஸ்ரோ தனது மீசையில் மண் படவில்லை என எடுத்துக் காட்டுகின்றாரா என்பதை அறிய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும்.

ஐக்கிய அமெரிக்காவும் லத்தின் அமெரிக்காவும்
அமெரிக்கா என்றால் வெறும் ஐக்கிய அமெரிக்கா மட்டுமல்ல அது வட துருவத்தில் இருந்து தென் துருவம்  வரை செல்லும் ஒரு பெரிய கண்டமாகும். ஐக்கிய அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா எல்லாம் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் 23 நாடுகளும் தென் அமெரிக்காவில் 12 நாடுகளும் இருக்கின்றன. அமெரிக்கக் கண்டத்தில் இப்படிப் பல நாடுகள் இருந்த போதும் அமெரிக்கா என ஐக்கிய அமெரிக்காவைத்தான் பலரும் குறிப்பிடுகின்றார்கள். தென் அமெரிக்காவில் ஸ்பானிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட நாடுகளை லத்தின் அமெரிக்கா என அழைப்பர். ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கொஸ்ர ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எக்குவேடர், எல் சல்வடோர்,  பிரெஞ் கயானா, குவாடலோப், குவாட்டமாலா, ஹெய்ட்டி, ஹொண்டரூஸ், மார்டினெக்ஸ், மெக்சிக்கோ, நிக்காரகுவா, பனாமா, பரகுவே, பெரு, பியூட்டொ ரிக்கோ, உருகுவே, வெனிசுவேலா போன்ற நாடுகள் லத்தின் அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படும்.

என்ன வேறுபாடு?

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்த பின்னர் ஐரோப்பியர்கள் பெருமளவில் குடியேறினர். வட அமெரிக்காவில் குடியேறியவர்கள், அதிலும் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சென்றவர்கள், தங்கள் குடும்பத்துடன் சென்று குடியேறி அங்குள்ள மக்களை இனைக்கொலை செய்தனர். தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் குடியேறச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் மட்டுமே. அவர்கள் உள்ளூரில் உள்ள ஆண்களைக் கொன்று பெண்களைத் தமதாக்கிக் கொண்டனர். இவர்களது அடுத்த தலைமுறையினர் ஓர் கலப்பு இனத்தவர்களாகவே அமைந்தனர். இதனால் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் மக்களும் எனைய அமெரிக்க மக்களும் உருவத்தால் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர்.

லத்தின் அமெரிக்காவில் சீனா
2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளில் தனது அதிக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது உறவை விரிவு படுத்தியது. இதனால் பல லத்தின் அமெரிக்க நாடுகள் இடதுசாரிகளின் பக்கம் திரும்பியது. வலதுசாரிகளைக் கொண்ட நாடுகளுடன் இரசியா உறவை வளர்க்க சீனா பல லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தகத்தை விரிவாக்கியது. அவற்றிற்கு தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தல், படைக்கலன்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றிடமிருந்து மலிவு விலைக்கு மூலப் பொருட்களை வாங்குதல் அவற்றில் முதலீடு செய்தல் ஆகியவற்றை சீனா பெருக்கியது. வெனிசுவேலா, பிரேசில், ஆர்ஜெண்டீனா, எக்குவேடர் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளையும் சீனா ஏற்படுத்திக் கொண்டது. 2014-ம் ஆண்டு லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன் 22பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 1994-ம் ஆண்டு ஆர்ஜெண்டீனாவின் இறக்குமதியில் 3.4விழுக்காடு சீனாவில் இருந்து வந்தது. இது 2014இல் 16.5விழுக்காடாக உயர்ந்தது.

பொதுவுடமை கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும்
1959-ம் ஆண்டு பிடல் காஸ்ரோ தலைமையில் நடந்த புரட்சியால் கியூபா பொதுவுடமை ஆட்சியின் கீழ் வந்தது. அமெரிக்கர்களுக்குச் சொந்தமான பல கியூபச் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் பகைமை உருவானது. 1938-ம் ஆண்டு கியூபாவின் குவாண்டானாமோ குடாவை அமெரிக்கா குத்தகைக்குப் பெற்று அங்கு ஒரு படைத்தளத்தை நிறுவியது. இன்றுவரை ஒரு சிறு தொகையை அமெரிக்கா குத்தகைப் பணமாகச் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க உளவுத்துறை  கியூபா மீது வெளிநாடுவாழ் கியூபர்களைக் கொண்டு ஒரு ஆக்கிரமிப்பையும் செய்தது. அது தோல்வியில் முடிவடைய பிடல் காஸ்ரோவைக் கொல்லப் பல சதிகளையும் செய்தது. கியூபாவில் காஸ்ரோவின் வேண்டுதலுக்கு இணங்க சோவியத் ஒன்றியம் அங்கு அணுக்குண்டுகளைத் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தியது. இதனால் இரு வல்லரசுகளுக்கும் இடையில் ஒரு போர் மூளூம் அபாயமும் ஏற்பட்டது. பின்னர் ஏவுகணைகள் அகற்றப்பட்டு கியூபாவை அமெரிக்கா ஆக்கிரமிக்காது என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கியூபாவிற்கு வெனிசுவேலா நிதி உதவி செய்து வந்தது. ஆனால் வெனிசுவேலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த உதவியும் கியூபாவிற்குக் கிடைக்காமல் போக கியூபா ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை விருத்தி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கியூபாமீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒத்துக் கொண்டது. இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பின்னர் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிரப்ப நீண்ட காலம் எடுக்கும் என்பது தெளிவாகியது. கியூபாவின் மனித உரிமைகளைப் பற்றி ஒபாமா குற்றசாட்டை முன்வைக்க அமெரிக்காவில் கியூபாவில் உள்ளது போல்ல எல்லாருக்கும் மருத்துவ வசதி இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார் கியூப அதிபர் ரௌல் காஸ்ரோ.

ஆர்ஜெண்டீனாவும் அமெரிக்காவும்.

பிரேசிலுக்கு அடுத்த படியாக தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஆர்ஜெண்டீனா இருக்கின்றது. 1983-ம் ஆண்டில் இருந்து அங்கு மக்களாட்சி நிலவுகின்றது. மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாடாகவும் அது கருதப்படுகின்றது. ஆர்ஜெண்டீனாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 17.1பில்லியன் டொலர்களாகவும் அங்கிருந்து செய்யப்படும் இறக்குமதி 6.3பில்லியன் டொலர்களாகும். 1823-ம் ஆண்டு ஆர்ஜெண்டீனா உருவான போது அதை முதலில் அங்கீகரித்த நாடுகளின் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்றாகும். தெற்கில் தமக்கு ஒரு பங்காளி கிடைக்கும் என அப்போது ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்காவிற்கும் ஆர்ஜெண்டீனாவிற்கும் இடையிலான அரசுறவியல்(இராசதந்திர) உறவு கடந்த 200 ஆண்டுகளில் பெரும்பாலும் மோசமானதாகவே இருந்தது. முதலாம் உலகப் போரின் போது ஆர்ஜெண்டீனாவில் இருந்த கணிசமான ஜேர்மன் மக்களைக் கருத்தில் கொண்டு ஆர்ஜெண்டினா நடுநிலை வகித்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஆர்ஜெண்டீனா இரகசியமாக ஜேர்மனி தலைமையிலான அச்சு நாடுகளுக்கு ஆதரவுகாட்டியது. போரின் பின்னர் பல நாஜிப் படையினர் ஆர்ஜெண்டீனாவில் தலைமறைவாகினர். அவர்களில் ஹிட்லரும் அடங்குவார் என்று கூட ஒரு சதிக்கோட்பாடு தெரிவிக்கின்றது. பனிப்போர்க் காலத்தில் ஆர்ஜெண்டீனா சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தையும் உறவையும் விருத்தி செய்தது. 1979-ம் ஆண்டு சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த போது சோவியத்திற்கு உணவு ஏற்றுமதி செய்வதை ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் இருந்த அமெரிக்கா தடைசெய்தது. அப்போது சோவியத்துக்குத் தேவையான உணவை ஆர்ஜெண்டீனா ஏற்றுமதி செய்தது. பின்னர் ரொனால்ட் ரீகனின் நிர்வாகத்தில் லத்தின் அமெரிக்காவில் சோவியத்தின் அனுசரணையுடன் பொதுவுடமை வாதம் பரவாமல் இருக்க அமெரிக்க உளவுத் துறையினர் பல அசிங்கமான திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது லத்தின் அமெரிக்கர்களிடையே ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான கருத்து வலுப்பெற்றது.

திசை மாறும் ஐக்கிய அமெரிக்க லத்தின் அமெரிக்க உறவு.
தற்போது ஐக்கிய அமெரிக்காவிற்கு சட்டரீதியாகவும் கள்ளத்தனமாகவும் அதிக மக்கள் குடியேறுவது லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்துதான். அண்மைக்காலங்களாக ஐக்கிய அமெரிக்காவை நம்பாவிடினும் அதனுடன் உறவை வர்த்தகத்தையும் பேணுவது தமக்கு வாய்ப்பாக அமையும் என பல லத்தின் அமெரிக்க மக்களும் ஆட்சியாளர்களும் கருதுகின்றனர். பல நாடுகள் மக்களாட்சி முறைமைக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மாறியுள்ளன. கியூபாவில் செய்யப் படும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை சமூகவுடமைத் தத்துவங்களை நிகழ்நிலைப் படுத்துவதாக (updating socialism) கியூப ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்றது சொன்னால் அற்றது பொருந்துமா?

கியூபாவைத் தொடர்ந்து ஆர்ஜெண்டீனாவிற்கு இரு நாட் பயணத்தை ஒபாமா மேற்கொண்டார். ஆர்ஜெண்டீனாவில் அதிபர் மௌரிசியோ மக்ரியுடன் (Mauricio Macri) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் பராக் ஒபாமா உரையாற்றினார். 1970களில் லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்த தனியாண்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க உளவுத்துறையினர் செய்த சதி நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளைப் பெரிதும் பாதித்திருந்தது என அங்கு ஒப்புக் கொண்ட பராக் ஒபாமா தனது நாட்டு உளவுத் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளிவிடப்படும் என்றார். மௌரிசியோ மக்ரிக்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் அதிபராகா இருந்த Cristina Fernandez ஒரு இடதுசாரியாவார். 2015 டிசம்பரில் நடந்த ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றுவதே ஒபாமாவின் ஆர்ஜெண்டீனாவிற்கான பயணத்தின் முக்கிய நோக்கம். ஒபாமா தனது மனைவியுடன் நகர மண்டபம் ஒன்றில் ஆர்ஜெண்டீனாவின் இளையோரச் சந்தித்தார். இச் சந்திப்பு அமெரிக்க-ஆர்ஜெண்டீன உறவைச் சீராக்குவதற்கு எனத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டது போல் அங்கு நடந்தவை சுட்டிக் காட்டுகின்றன.

தூய்மையான தோழமை மிக்க பங்காண்மையே தேவை
ஐக்கிய அமெரிக்கா தனது தென் புற அயலவர்களுடன் நல்ல உறவை வளர்பதற்கு அதனுடைய கடந்த கால நடவடிக்கைகள் சாதகமாக இல்லை. 1970களில் இருந்ததைப் போல் இல்லாமல் தற்போது பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் லத்தின் அமெரிக்க நாடுகளுடன் நல்ல உறவைப் பேண பொருளாதாரச் சுரண்டல் நோக்க மில்லாத சிறந்த உறவை லத்தின் அமெரிக்க நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா உருவாக்குவதன் மூலமே கடந்த கால வடுக்களை லத்தின் அமெரிக்கர்கள் புறம் தள்ளுவார்கள். அமெரிக்காவின் தொழில் நுட்ப வளர்ச்சியும் பெரிய சந்தையும் லத்தின் அமெரிக்க நாடுகளை மேம் படுத்த உதவும். அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் கலாச்சாரப் பங்காண்மை இருதரப்பினருக்கும் வாய்ப்பாக அமைவதுடன் சீன ஆதிக்கத்தை இல்லாமாற் செய்யும். ஆனால் அமெரிக்காவிற்கும் தூய்மையான தோழமைக்கும் சம்பந்தம் உண்டா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...