Sunday, 17 May 2015

அமெரிக்காவின் டெல்டாப் படையணி சிரியாவிற்குள் புகுந்து ஐ எஸ் மீது அதிரடித் தாக்குதல்



ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி அங்கு தங்கியிருந்த ஐ எஸ்இன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அபு சய்யஃப் என்பவரைக் கொன்று அவரது மனைவியைக் கைது செய்ததுடன் அவர்கள் அடிமையாக வைத்திருந்த 18 வயது யஷீதியப் பெண்ணை விடுவித்தனர். இந்தத் தாக்குதல் 15-05-2015 வெள்ளிக் கிழமை நள்ளிரவில் தொடங்கி மறுநாள் காலை வரை நடந்தது.

24 டெல்டாப் படையினர் Black Hawkஎன்ற ஒரு உழங்கு வானூர்தியிலும் V-22 Osprey என்ற ஒரு வானூர்தியிலும் சென்று அபு சய்யஃப் இருந்த கட்டிடத்தில் அதிரடித் தாக்குதல் நடாத்தினர். இவர்கள் போய் இறங்கியவுடன் அபு சய்யஃப்பிற்குப் பாதுகாவலராக இருந்த போராளிகள் டெல்டாப் படையினர் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடயில் நேரடிச் சண்டை மூண்டதால் அபு சய்யஃபை உயிருடன் கைது செய்யும் அமெரிக நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. ஐ எஸ் அமைப்பின் எரிபொருள் உற்பத்திப் பிரிவிற்கும் நிதித் துறைக்கும் பொறுப்பாய் இருந்த அபு சய்யஃபை தமது ஆளில்லா வேவு விமானங்கள் மூலமாகவும் இலத்திரனியல் தடயத் தேடல் மூலமாகவும் உளவாளிகள் மூலமாகவும் காட்டிக் கொடுப்போர் மூலமாகவும் தொடர்ந்து அவதானித்து வந்த அமெரிக்க உளவுத்துறையினர் அதிபர் பராக் ஒபாமாவின் அனுமதியுடன் தாக்குதல் நடாத்தினர்.அபு சய்யஃபும் அவரது மனைவியும் ஐ எஸ் அமைப்பின் போராளிகளுமாவார்.




அமெரிக்க டெல்டாப் படையின் தாம் தாக்குதல் தொடங்கியவுடன் ஐ எஸ் போராளிகள் பெண்களையும் சிறுவர்களையும் கவசங்களாகப் பாவித்ததாகச் சொல்கின்றனர். ஆனாலும் தாம் குறிதப்பாமல் சுட்டு பெண்களையும் சிறுவர்களையும் தாக்குதலில் இருந்து தவிர்த்ததாகச் சொல்கின்றனர். அபு சய்யஃபின் பணிமனையில் இருந்த தொடர்பாட கருவிகளையும்  மடிக் கணனிகளையும் வேறு பலவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ம் ஆண்டு ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போது பல யதீஷியர்களைக் கொன்றதுடன் பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர்.

1970களின் பிற்பகுதியில் உருவாக்கப் பட்ட டெல்டாப் படையணியினர்  Operation Eagle Claw என்னும் பெயரில் 1980-ம் ஆண்டு செய்த தாக்குதல் இடையில் உழங்கு வானூர்தி விபத்திற்கு உள்ளானதால் கைவிடப்பட்டது. ஐஸ் அமைப்பிற்கு எதிராக அண்மைக் காலங்களாகச் செய்தசில  தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் வெள்ளிக் கிழமை இரவு செய்த தாக்குதல் அமெரிக்கத் தரப்பில் எவரும் காயப்படமாலோ கொல்லப்படாமலோ செய்யப்பட்டுள்ளது.

சிரிய அரசுக்குத் தெரியாமல் இந்தத் தாக்குதல் செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் இது நம்பும்படியாக இல்லை. சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக தமது எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் சிரியா இடையூறு செய்யக் கூடாது என ஏற்கனவே சிரியாவிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல் விடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஐ எஸ் இன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்திற்கு வந்து இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்யும் படி அவர்களது வானொலி மூலம் அறை கூவல் விடுத்துள்ளார்.

உங்கள் இலக்கு எமது அபு சய்யஃப் என்றால் எமது இலக்கு பராக் ஒபாமாவும் மற்றும் சிலுவையைக் கும்பிடுபவர்களாக இருக்கும் என ஐ எஸ் அமைப்பினர் சூளுரைத்துள்ளனர். 


ஐ எஸ் ஐப் பொறுத்தவரை துனிசியக் குடிமகனான அபு சய்யஃப் கொல்லப் பட்டது ஓர் இழப்பு அவரது கணனிகளையும் உம் சய்யஃப் என்னும் பெயருடைய மனைவியையும் கைப்பற்றி சென்றது பேரிழப்பு. அபு சய்யஃபின் மனைவி பல பணயக் கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பற்றியவர்.. இதனால் ஐ எஸ் தொடர்பாகாப் பல தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிய முடியும். ஐ எஸ் எரிபொருள் விற்பனை மூலம் நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் டொலர்களை வருமானத்தைப் பெறுகின்றது.  இந்த நிதி மூலத்தை தற்போது அமெரிக்காவால் சிதைக்க முடியுமா?

Wednesday, 13 May 2015

ஹிஸ்புல்லாமீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?

ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக நின்று அங்குள்ள கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதால் களமுனை அனுபவத்தையும் படைக்கலன்கள் கையாளும் திறனையும் பெருக்கிக் கொண்டுள்ளது. தெற்கு லெபனானில் கிராமங்கள் தோறும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பல படைக்கல களஞ்சியங்களையும் ஏவுகணை வீசும் நிலைகளையும் கலாடபடைப்பிரிவுகளையும் தாங்கி எதிர்ப்பு நிலைகளையும் அமைத்துள்ளனர்.

1983-ம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கக் கடற்படையினர் மீது ஹிஸ்புல்லா தற்கொடைத் தாக்குதல் நடாத்தி 241 படையினரைக் கொன்றது. இது அமெரிக்கப் படையைப் பொறுத்தவரை ஒரு நாளில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இதில் இருந்து ஹிஸ்புல்லா உலகப் புகழ் பெற்றதுடன் அமெரிக்கப் படைகளையும் 1984இல் லெபனானில் இருந்து வெளியேற்றியது

2006-ம் ஆண்டு நடந்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் போருக்குப் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானின் ஆதரவுடன் தமது படைக்கலன்களைப் பெரிதும் அதிகரித்துள்ளனர். அத்துடன் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலான் குன்றுகளில் தமது ஏவுகணைகளையும் மற்றும் பல படைக்கலன்களையும் நிறுத்தியுள்ளனர். இஸ்ரேலியர்கள் மேற்குக் கரையிலோ, காசா நிலப்பரப்பிலோ , லெபனானிலோ தமக்கு எதிரான தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தால அளவுக்கு வலுப்பெறும் போதெல்லாம் முன் கூட்டியே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களின் ஆளணிகளையும் படைக்கலன்களையும் அழிப்பது வழக்கம். இஸ்ரேலின் கணிப்பின் படி ஹிஸ்புல்லாவிடம் இப்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட எறிகணைகளும் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை ஈரானில் தயாரிக்கப்பட்ட கற்றியூஷா என்னும் குறுந்தூர ஏவுகணைகளாகும்.  ஹிஸ்புல்லாவிடம் நிதிவலு, படைக்கலவலு ஆகியவை நிறைய உண்டு. கட்டமைக்கப்படாத போராளி இயக்கமான (Asymmetric movement) ஹிஸ்புல்லாவிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வேவுபார்க்கவும் தாக்கவும் கூடிய ஆளில்லாப் போர்விமானங்கள் ஆகியவை இருப்பதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது

ஹிஸ்புல்லா தன் படைவலுவை 2006-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவும் தாம் தற்போது மிகவும் வலுவடைந்திருப்பதாகச் சொன்னார்.

2006-ம் ஆண்டின் பின்னர் சற்று அமைதியாக இருந்த லெபனானில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஹிஸ்புல்லா செயற்படத் தொடங்கியதில் இருந்து அமைதி இழந்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பல குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் 2013-ம் ஆண்டு டிசம்பரில் கொலை செய்யப்பட்டார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்தது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார் என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு தமது நாட்டுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்திருதது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில் ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலன் குன்றுகளில் இஸ்ரேல் நடாத்திய விமானத் தாக்குதலில் ஈரானிய ஜெனரலான மொஹமட் அலி அல்லா தாதியும் மொஹமட் இஸ்ஸா என்ற ஓர் ஈரானியத் தளபதியும் ஜிஹாட் முக்னியா என்ற ஹிஸ்புல்லாத் தளபதியின் மகனும் கொல்லப்பட்டனர். அப்போது இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய படையினர் காவு வண்டி ஒன்றின் மீது ஹிஸ்புல்லாப் போராளிகள் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசி இரு படையினரைக் கொன்றனர்.இது ஒரு பெரும் போராக மாறாமல் இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையூடாக ஹிஸ்புல்லா வேண்டுகோளையும் விடுத்தது.

இஸ்ரேல் தான் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தினால் அதில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்தவித சீருடைகளையும் அணிவதில்லை அவர்கள் பொதுமக்களைப் போல் ஆடையணித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து செயற்படுவதால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்கின்றது இஸ்ரேல்.

லெபனானின் அரச படைகளால் இஸ்ரேலிடம் இருந்து லெபனானைக் காப்பாற்றும் திறன் இல்லை என்கின்றது ஹிஸ்புல்லா. தெற்கு லெபனானில் மக்கள் ஆதரவு தமக்கு மட்டுமே எனச் சொல்கின்றது ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் வேண்டுதலின் பெயரில் போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அகலக் கால்களை வைத்துள்ளது எனச் சொல்லலாம்.ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தினால் அது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து  உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு இன்னும் ஒரு பரிசோதனைக் களமாக அமைவதுடன் லெபனானில் ஒரு பேரழிவையும் ஏற்படுத்தும்.

Saturday, 9 May 2015

இரு விற்பன்னர்களின் மோதலால் முடிவு செய்யப்பட்ட பிரித்தானியத் தேர்தல்

தேர்தலைமுடிவு செய்த படம்

பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இவர்கள் தேர்தல் பரப்புரைகளை நடாத்துவது தொடர்பாக தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுப்பார்கள். பரப்புரை உத்திகளை வகுப்பார்கள். இவர்கல்இருவருக்கும் ஆளுக்கு ஐந்து இலட்சம் பவுண் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. கொன்சர்வேர்டிவ் கட்சிக்கு ஆலொசனை வழங்கிய லிண்டன் குறொஸ்பி தனிமனித நிந்தனைகள் செய்யத் தூண்டுவதில் பெயர் போனவர். ஆனால் கொன்சர்வேர்டிவ் கட்சியினர் டேவிட் கமரூன் தனிமனிதத் தாக்குதல் செய்யக் கூடியவர் அல்லர் எனக் கருதினர். அவர்கள் “David is too posh to push” என்றனர்

கொன்சர்வேர்டிக் கட்சிக்கு லிண்டன் குறொஸ்பி வகுத்த உபாயங்கள்:
1. தொழிற்கட்சித் தலைவர் எட்வர்ட் மில்லிபாண்ட் கொன்சர்வேர்டிவ் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான டேவிட் கமரூனுக்குச் சரியானதும் நம்பகத்தைமை வாய்ந்ததுமான மாற்றீடு அல்லர் எனப் பரப்புரை செய்வது. இதை ஒட்டி எட்வர்ட் மில்லிபாண்டிடம் நாட்டை ஒப்படைப்பது ஜிம்மி சவைலிடம் சிறுவர் பராமரிப்பு வேலையை ஒப்படைப்பது போன்ற கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவிடப்பட்டன. காலம் சென்ற ஜிம்மி சவைல் பிபிசியில் பணிபுரியும் போது பல சிறுவர்களை பாலியல் முறைகேட்டுக்கு உள்ளாக்கியவர்.
2 தொழிற்கட்சியுடன் தோழமையாக நடந்து கொண்ட தாராண்மைவாதக் கட்சிக்கு எதிராக தீவிர சந்தைப்படுத்தல் நுட்பங்களைப்பயன்படுத்தி செல்வாக்கிழக்கச் செய்தல்.
3. டேவிட்கமரூன் ஆட்சியில் இருபது இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தமை, அரச பாதீட்டில் துண்டுவிழும் தொகைகளைக் குறைத்தமை, வருமானவரிகளைக் குறைத்தமை தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்தல்.
4. டேவிட் மில்லிபாண்டின் பலவீனங்கள் மீது தாக்குதல் நடாத்துதல். இதற்காக அவர் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படத்தை பத்திரிகைகளில் பிரசுரித்து வருங்கால பிரித்தானியத் தலைமை அமைச்சர் இப்படியா அசிங்கமாகச் சாப்பிடுவது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

கொன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பரப்புரைகள் சில்லறைத்தனமானது என இரகசியமாக ஒப்புக் கொண்டார்கள்.

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் கொன்சர்வேர்டிவ் கட்சியினருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் லிண்டன் குறொஸ்பி எல்லாம் எமக்குச் சாதகமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது என ஊக்கமளித்தார். பின்னர் கடைசித் துருப்பாக தொழிற் கட்சி ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் அது ஆங்கிலேயர்களுக்கு பெரும் பாதகமாக அமையும் என்ற பரப்புரையைட் தீவிரமாகச் செய்யச் சொன்னார்.

ஆனால் பாவம் தொழிற்கட்சிக்கு ஆலோசனை வழங்க வந்த டேவிட் அக்ஸெல்றொட்டின் உபாயங்களை நிறைவேற்றப் போதிய பணம் தொழிற்கட்சியிடம் இல்லை. இவரை அழைப்பது என்றவுடன் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் எமது கட்சிக்கு இந்த அளவு பணம் செலவழித்து ஒரு ஆலோசகரைப் பெற வேண்டுமா என்ற கேள்வி தொழிற்கட்சியில் உள்ள சிலரிடமிருந்து எழுந்தது. அத்துடன் எமது ஊர்ப் பிரச்சனைகளைப்பற்றி இந்த அமெரிக்கர் எப்படி அறிவார் அவர் எப்படி எமக்கு ஆலோசனை சொல்வார் என்ற கேள்விகள் தொழிற்கட்சியினரிடம் எழுந்தது.

டேவிட் அக்ஸெல்றொட்டின் கருத்துப் படி பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் மிகவும் கட்சி சார்பானவை. அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸிலும் பார்க்க மோசமானவை பிரித்தானிய ஊடகங்கள்.

Thursday, 7 May 2015

ஐ எஸ் அமைப்பின் அமெரிக்கத் தாக்குதல்

2015-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் ரெக்ஸஸ் மாநிலத்தில் கார்லண்ட் நகரில் நபிகள் நாயகத்தைக் கேலிச் சித்திரமாக வரையும் போட்டி நடக்கும் இடத்தில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இத் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தாமே செய்ததாக ஐ. எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் இஸ்லாமிய அரசு என்றும் அழைக்கப்படும் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் அமைப்பு இரண்டு நாட்கள் கழித்து உரிமை கோரியுள்ளது. இத் தாக்குதல் ஐ.எஸ் அமைப்பின் வலிமை வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இத் தாக்குதல் அமெரிக்காவில் ஐ. எஸ் அமைப்பு வேரூன்றியுள்ளது என்பதற்கான அறிகுறியல்ல என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவில் நடந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கு முதல் முறையாக ஐ எஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளமை கவனிக்கத் தக்கது. தமக்குத் தெரியாமல் நடந்த தாக்குதல்களுக்குக் கூட தீவிரவாத அமைப்புக்கள் உரிமை கோருதல் வழக்கம் என்கின்றது அமெரிக்கா.

கேலிச்சித்திரம் வரையும் போட்டி நடந்த இடத்திற்கு ரைபிள்களுடனும் கவசங்களுடனும் எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும் தாக்குதல் நடத்தச் சென்றனர். இப்படி ரைபிள் எடுத்துத்துச் சென்று தாக்குதல் செய்வது அமெரிக்காவில் ஓர் இலகுவான செயல். ஆனால் முஹம்மது நபி தொடர்பான கேலிச் சித்திரப் போட்டி ஓர் ஆத்திரமூட்டும் செயல் என்பதை உணர்ந்த அமெரிக்கக் காவற்துறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. SWAT எனச் சுருக்கமாக அழைகப்படும்  Special Weapons And Tactics பாதுகாப்புப் பிரிவு அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பிரிவினர் வழமையான காவற்துறையினர் வைத்திருக்கும் படைக்கலன்களிலும் பார்க்க சிறந்த படைக்கலன்களையும் வைத்திருப்பர். அத்துடன் மறைந்திருந்து தாக்கக் கூடிய தொலைநோக்கிகளுடன் கூடிய துப்பாக்கிகளையும் வைத்திருப்பார்கள். தாக்குதலுக்குச் சென்ற எல்டன் சிம்சனும் நதிர் சூஃபியும் காவலுக்கு இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால் இவர்கள் இருவரையும் மற்றக் காவலாளிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தாக்குதல் பலர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய திட்டமிட்ட தாக்குதல் அல்ல ஒரு தனி ஓநாய் பாணித் தாக்குதல் (Own lone wolf-style strike) என்கின்றது அமெரிக்க அரசு. இத் தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கும் தொடர்பு இல்லை என அடித்துச் சொல்கின்றது அமெரிக்க அரசு.

ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் தமது போராளிகள் இருவர் தாக்குதல் நடாத்தியதாக சிரியாவிலும் ஈராக்கிலும் பெரு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ எஸ் அமைப்பு தமது வானொலி மூலம் தெரிவித்துள்ளது. அல்லாவின் ஆணைப்படி அவர்கள் தாக்குதல் நடாத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது போல இறைநம்பிக்கை அற்றவர்களை எல்லா இஸ்லாமியப் போராளிகளும் கத்திகளால் குத்தியோ, வாகனங்களால் மோதியோ பள்ளங்களில் தள்ளி வீழ்த்தியோ கொல்ல வேண்டும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.  இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் தமது போராளிகள் நடாத்தும் தாக்குதல் மேலும் மோசமாக இருக்கும் என்கின்றது ஐ எஸ் அமைப்பு.

இரு தாக்குதலாளிகள் செய்த தாக்குதலைத் தொடர்ந்து கேலிச் சித்திரப் போட்டியை ஒழுங்கு செய்த பமிலா கெல்லர் பேச்சுரிமையில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது என்றார். இவர் இப்படி ஒரு போட்டியை ஒழுங்கு செய்ய இடத்தைத் தேர்தெடுத்ததை அறிந்த  கார்லண்ட் நகரத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அதை உதாசீனம் செய்வதே சிறந்த வழி என்று எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 12,500டொலர் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. டலஸ் பிரதேச  இஸ்லாமியத் தலைவர் பமிலா கெல்லர் இனக் குரோதத்தைத் தூண்டுவதற்கு இஸ்லாமியர்களுக்குத் தூண்டில் போடும் நடவடிக்கையே இந்த கேலிச் சித்திரப் போட்டி என்றார். சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட உள்ளூர் மெதடிஸ்ற் கிருத்தவத் தலைவர் பேச்சுரிமை என்ற பெயரில் பமிலா இனக்குரோதத்தை வளர்க்கின்றார் என்றார்.  52 வயதான பமிலா கெல்லர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான குரோதத்தை வளர்க்கும் ஒரு இணையத்தை நடாத்தி வருகின்றார். இவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரது தந்தைக்கு அல்லாமல் மல்கம் எக்ஸ் என்பவருக்குப் பிறந்தவர் என்றும் அவர் இளைஞராக இருந்த போது ஒரு இஸ்லாமியராக இருந்தார் என்றும், ஒரு விலைமாதுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பரப்புரைகள் செய்தவர்.

அமெரிக்காவின் சில மாநிலங்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை அடிப்படையாக வைத்து உள்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடை செய்துள்ளன. சில நீதிபதிகள் இதனால் ஷரியாச் சட்டத்தை அடிப்படையாக வைத்துத் தீர்ப்புக்கள் வழங்குவதாகக் கருதப்படுகின்றது. ரெக்ஸஸ் மாநில சட்ட் சபையும் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட சட்டத்தை ஆதரிப்போர் இச்சட்டம் இஸ்லாமிற்கு எதிரானது அல்ல என்றும் பொதுவாக வேற்று நாடுகளின் வேற்று மதங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடுப்பதாகும் என்கின்றனர்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் ரெக்ஸஸ் மாநிலத்தின் கார்லண்ட் நகரில் நடாத்தப் பட்ட தாக்குதலுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவில் ஐ எஸ் அமைப்பு பயிற்ச்சிகளையோ அல்லது பாசறைகளையோ வைத்திருக்க முடியாது என்கின்றது அமெரிக்க அரசு.

31 வயதான எல்டன் சிம்சன் தாக்குதலுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் தன்னை ஒரு புனிதப் போராளியாக அல்லா ஏற்றுக் கொள்வார் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எல்டன் சிம்சன் என்பவரும் நதிர் சூஃபி என்பவரும்  நடாத்தியா தாக்குதலுக்கும் ஐ எஸ் அமைப்பிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என அமெரிக்கா அடித்துச் சொன்னாலும் இரண்டு அம்சங்களை இங்கு உறுதியாகச் சொல்லலாம்:

1. அமெரிக்காவின் பல்வேறு உளவுத் துறை அமைப்புக்களால் எல்லாத் தீவிரவாதத் தாக்குதல்களையும் முன் கூட்டியே அறிய முடியாது.
2. ஐ எஸ் அமைப்பிற்கும் ரெக்ஸஸ் தாக்குதலுக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவையும் ஊடறுக்கக் கூடியது.

Monday, 13 April 2015

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீனா இந்தியாவின் கணனிகளை ஊடுருவிக் கொண்டிருக்கின்றதாம்

சீனாவின் இணையவெளி ஊடுருவல் (Cyber Hacking) செய்யாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBIஇன் இயக்குனர் ஜேம்ஸ் கொமி சீனாவின் இணையவெளி ஊடுருவல்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் எல்லா வத்தக நிறுவனங்களும் உள்ளாகியுள்ளன என்றார். கடந்த பத்து ஆண்டுளாக இந்தியாவின் பல்வேறுபட்ட அரச மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கணனிகளை யாருமறியாமல் ஊடுவல் செய்து வருவதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இணைய வெளி ஊடுருவலும் போரும்(Cyber hacking and Cyber warfare)
இணையவெளி ஊடுருவல்கள் தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் மட்டுமல்ல அரசுக்களாலும் செய்யப்படுகின்றன. தகவல் திருட்டு, வங்கி விபரங்களை அறிந்து பணங்களை முறைகேடான மாற்றீடு செய்தல், வர்த்தக நிறுவனங்கள் பெரும் தொகை செலவழித்துக் கண்டறிபவற்றையும் கண்டு பிடிப்பவற்றையும் திருடுதல், ஒரு நாட்டுப் படைத்துறை இரகசியங்களைத் திருடுதல் போன்ற பல இணையவெளி ஊடுருவல்கள் மூலம் பெறப்படுகின்றன. இவை போக பொழுது போக்கிற்காக இணையவெளி ஊடுருவல்கள் செய்பவர்களும் உண்டு. ஒரு நாட்டின் இணையவெளிக்குள் ஊடுருவி அதன் கணனிகளைச் செயலிழக்கச் செய்வது இணைய வெளித் தாக்குதல் எனப்படும். இதன் மூலம் ஒரு நாட்டின் பல குடிசார் வழங்கல்களை முடங்கச் செய்வதுடன் பல படைத்துறை நடவடிக்கைகளையும் செயலிழக்கச் செய்யலாம். முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பல செய்ய முடியும் போன்றவை இணையவெளிப் போர் எனச் சொல்லலாம்.
வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணையவெளியிலும் நடக்கவிருக்கிறது. அதற்கான தாயாரிப்புக்களில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மட்டுமல்ல பல போராளி இயக்கங்களும் இதில் தமது திறமையை வளர்த்து வருகின்றன.

சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
அமெரிக்காவின் படையினர் இணையவெளியிலும் செய்மதித் தொடர்புகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை உணர்ந்த சீனா இணைய வெளியில் தனது போர் முறைகளை வளர்த்தது. அத்துடன் செய்மதிகளை நிலத்தில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.

இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.

FireEye நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பிறைஸ் போலண்ட்  ஆசியாவில் உள்ள பலநாடுகளின் மீது இணையவெளி ஊடுருவலகளும் தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என்கின்றார். 2011-ம் ஆண்டு Shady Rat என்னும் குறியீட்டுப் பெயருடன் சீனாவில் இருந்து பல ஆசிய நாடுகளினது அரசகளினதும் தனியார் நிறுவனங்களின் கணனித் தொகுதிகள் மீது ஊடுருவல்கள் செய்யப்பட்டதாக McAfee என்னும் இணையவெளிப் பாதுகாப்பு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் எல்லாக் குற்றச் சாட்டுகளையும் சீனா மறுக்கின்றது.

Friday, 10 April 2015

நகைச்சுவைக் கதை: பாக்கிஸ்த்தானியுடன் படுக்க முடியாது.

மத்திய கிழக்கில் ஒரு யூதன் ஒரு இந்தியன் ஒரு பாக்கிஸ்த்தானி ஆகிய மூவரும் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் ஒரு இடத்தில் வண்டி பழுதடைந்து விட்டது. நேரமோ இரவு. அவர்கள் மூவரும் அண்மையில் இருந்த ஒரு வீட்டுக் கதைவைத் தட்டினார்கள்.

அது ஒரு விவசாயின் வீடு அவனும் அவர்களை அன்புடன் உள்ளே அழைத்து உபசரித்து சுவையான உணவுகள் பரிமாறினான். மூவரும் அவன் வீட்டிலேயே இரவு தங்க முடியுமா என அந்த விவசாயியைப் பணிவன்புடன் கேட்டனர். அதற்கு விவசாயி தனது சிறு வீட்டில் இருவர் மட்டும் தங்க முடியும் என்றான். அதற்கு யூதன் எனது இனம் உலகமெல்லா அலைந்து துன்பப்பட்ட இனம் என்னால் எந்த மோசமான இடத்திலும் தங்க முடியும் என்றான். விவசாயி யூதனை தொழுவத்திலும் இந்தியனையும் பாக்கிஸ்த்தானியையும் வீட்டுக்குள் படுக்க ஏற்பாடு செய்தான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற யூதன் தொழுவத்தில் பன்றி இருக்கிறது எனது மத தத்துவப்படி என்னால் அங்கு நித்திரை கொள்ள முடியாது என்றான். அதற்கு இந்தியன் எமது நாட்டில் மக்கள் தெருவோரத்திலேயே படுத்து உறங்குவார்கள். சிவபெருமானும் திருமாலும் பன்றியாக அவதாரம் எடுத்தவர்கள். அவை கடவுளின் வடிவங்கள். என்னால் அங்கு தங்க முடியும் என்று போய் தான் தொழுவத்தில் தங்கினான்.


சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் நின்ற இந்தியன் தொழுவத்தில் பசு இருக்கிறது. நான் இன்று குளிக்கவே இல்லை. எனது மத தத்துவப்படி பசு இருக்கும் இடம் புனிதமானது. அங்கு நான் குளிக்காமல் தங்க முடியாது என்றான். அப்போது பாக்கிஸ்த்தானி சரி இப்போது எனது முறை எப்படியும் நான் தொழுவத்தில் சமாளிக்கிறேன் என்று சொல்லி தான் போய்த் தொழுவத்தில் தங்கினான்.

சில நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது. வெளியில் பசுவும் பன்றியும் மிகவும் பரிதாபகரமான முகத்துடன் நின்றன.

Tuesday, 7 April 2015

நகைச்சுவைக் கதை: காயத்திரி மதிரத்திரமும் விபசாரிகளும்

அந்தக் கோவிலில் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்த சாவித்திரியைப் பார்த்து பட்டாபி ஐயர் மிகவும் அக்கறையோடு ஏன் அம்மா கவலையுடன் இருக்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு சாவித்திரி "ஐயரே ஆசையுடன் இரண்டு பேசும் பெண் கிளிகள் நிறையப் பணம் கொடுத்து வாங்கினேன். அவற்றிற்கு சரஸ் என்றும் லக்ஸ்மி என்றும் பெயரும் வைத்தேன். ஆனால் அவை இரண்டும் நாள் முழுவதும் பேசுவது "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்ற வசனம் மட்டுமே. " என்று கவலையுடன் சொல்லி முடித்தாள்.

பட்டாபி ஐயர் "இதெல்லாம் பழக்க தோஷம் தான். என்னிடம் நரேஸ், சுரேஸ் என இரண்டு ஆண்கிளிகள் இருக்கின்றன. அவை காலையில் சுப்ரபாதம் பாடும். மதியம் திருவாசகம் பாடும். மாலையில் பஜகோவிந்தம் பாடும். மற்றும்படி தினமும் ஆயிரத்தெட்டுத் தடவை காயத்திரி மந்திரம் உச்சரிக்கும். உனது இரு பெண்கிளிகளையும் கொண்டு வந்து எனது வீட்டில் விடு. அவை ஒன்றாகப் பழகட்டும். எனது ஆண்கிளிகளின் நல்ல பழக்கத்தை உனது கிளிகளும் பழகிக்கொள்ளும். அவையும் தோத்திரங்கள் மந்திரங்களைச் சொல்லும்" என்றார்.

அதற்கு சாவித்திரி சரி ஐயரே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள். கொண்டு வருகிறேன் என்றாள்.

பட்டாபி ஐயர் வருகின்ற புதன்கிழமை ஏகாதசி அன்றே கொண்டு வாடியம்மா என்றார்.

சாவித்திரி பட்டாபி ஐயர் சொன்னபடியே புதன் கிழமை குரு ஹோரையின் போது தனது கிளிகளை பட்டாபி ஐயர் வீட்டிற்கு கொண்டு போனாள். ஐயர் சாவித்திரியின் கிளிகளான சரஸையும் லக்ஸ்மியையும் தனது காயத்திரி மந்திரத்தை கண்மூடி உச்சாடனம் செய்து கொண்டிருந்த ஆண்கிளிகளான நரேஸ், சுரேஸ் இருக்கும் கூட்டைத் திறந்து உள்விட்டுக் கதவை மூடினார். உள்ளே சென்ற சரஸும் லக்ஸ்மியும் "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்றன.

கண்ணைத் திறந்து பார்த்த நரேஸும் சுரேஸும் உடனே ஆகாயத்தை நோக்கி நாம் இவ்வளவு காலமும் பாடிய பாடல்களுக்கும் உச்சாடனம் செய்த காயத்திரி மந்திரமும் எதற்காகச் செய்தோமோ அதற்கான பலன் இன்று கைகூடியிருக்கிறது" என்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...