Sunday 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் நிலை சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

  


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 1992இல் சீனாவினதும் இரசியாவினதும் பொருளாதாரம் ஒரே அளவிலானதாக இருந்தன ஆனால் 2022இல் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க சீனாவினது பத்து மடங்கு பெரியது. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.


2 comments:

Unknown said...

சரித்திரம் சரித்திரமாக, றஸ்ய அரசர்கள் ஆண்ட காலமாகஇருந்தாலென்ன,
பின்னர் சர்வாதிகார கம்யூனிஸ்ட் ஆண்ட காலமாகவிருந்தாலென்ன,
சோவியத் உடைந்தபின்னும் சிலகாலம் உௐறேனையும், தொடர்ந்து சில நாடுகளை திரும்பவும் ஆயுதமுனையில் அடக்கியாளலென்றாலும்,
உக்றேய்னை கைபற்றி கொலொனியாக அடக்கி ஆண்ட கொடூர றஸ்யா,
இப்போதும் தன் பொம்மை ஆட்சியை உருவாக்கதான் படையெடுத்திருப்பதாக, விசர்பிடித்த பிசாசு பூட்டின் பகிரங்கமாகவே சொல்லுது.

கம்யூனிஸ்ட் சீனா ஆரம்பத்தில் ஐநாவில் அனுமதிக்கபடவில்லை. தாய்வாந்தான் சீனாவாக ஐநாவில் அங்கீகரிக்கபட்டிருந்தது. இலங்கை அர்சுதான், மற்றநாடுகள் முன்வராத நிலையில், கம்யீனிஸ்ட் சீனாவை சீனாவாக அங்கீகரிக்கசொல்லி திரும்பதிரும்ப பிரேரணை பரிந்துரைத்து இறுதியில் வென்றும்விட்டது.


2009காலத்தில் ஐநா பாதுகாப்புசபைக்கு ஈழபோர்விடயத்தை விவாதிக்கவிடமாட்டோம் என்றது சீனா/றஸ்யா. அதனால்தான் ஈழ விடயம் ஜெனீவாவிற்கு பின்னதாக மாற்றபட்டது.
ஜெனீவாவில் சீனா/றஸ்யாதான் சிங்களத்தின் கொடூரங்களை ஆதரித்து தமிழரை தோர்கடிக்க பகிரங்கமாகவே செயல்படுகின்றன.
அமெரிக்காவின் துணையுடன் ஜெனீவாவில் தமிழர் வென்றிருக்காவிட்டால், கேட்பதற்க்கு யாரும் இல்லாமல், இலங்கை ஆரம்பித்த தனது 2ம்போரை விரிபுபடுத்தி இப்போது நாம் வடக்கிலும் கிழக்கிலும் சிங்களர்ர் பெரும்பான்மையா என்றுதான் விவாதித்துகொண்டிருப்போம். வாழ்க அமெரிக்கா.

Vel Tharma said...

அமெரிக்காவின் துணையுடன் ஜெனீவாவில் தமிழர்கள் எதை வென்றனர்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...