இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஆசியாவிலும் ஐரோப்பியாவிலும் சோவியத் ஒன்றியம் ஒரு வலிமை மிக்க நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் “பொதுவுடமையைப் பரப்பல்” என்ற கொள்கையை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசிய விரிவாக்கமாகப் பார்த்தன. சோவியத் ஒன்றியத்தை அடக்குவதற்கு என நேட்டோ சுருக்கமாக அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பு 1949-ம் ஆண்டு 14 நாடுகளுடன் ஆரம்பிக்கபட்டது.
ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில்
பதினைந்து நாடுகளைக் கொண்ட சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளும் தனித்தனி நாடுகளாக உருவெடுத்தன. அவற்றில் முக்கியமான நாடுகள் உக்ரேனும் ஜோர்ஜியாவும் ஆகும். இரசியாவுடன் ஓரளவு நல்ல உறவுடன் இருக்கும் நாடு பெலரஸ் மட்டுமே. மொல்டோவா நடுநிலையான உறவை இரசியாவுடன் வைத்திருக்கின்றன. 2008-ம் ஆண்டு ருமேனிய நகர் புச்சரெஸ்டில் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதற்கான வழி-வரைபடம் வகுக்கும் முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து இரசியாவின் சினம் அதிகரித்தது. இரசியா உடனேயே ஜோர்ஜியாமீது படையெடுத்து ஜோரியாவை இரண்டு நாடுகளாக்கியது. உக்ரேனில் இரசிய சார்பு சார்பானவர்கள் ஆட்சியில் அமர்த்த இரசியா வழி செய்தது.
1987 மே மாதம் 27-ம் திகதி நிலைமை
அமெரிக்க உலக ஆதிக்கம்
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் உலக மக்கள் தொகையின் 6.3 விழுக்காடு மக்களைக் கொண்ட அமெரிக்காவின் செல்வம் உலகச் செல்வத்தின் அரைப்பங்காகும். இந்த நிலையில் அமெரிக்காவின் செல்வத்தை பாதுகாக்க பெரும் முயற்ச்சி தேவை என உணரப்பட்டது. அப்போது அமெரிக்க அரச திணைக்களம் வெள்ளை மாளிகைக்கு ஒரு இரகசிய அறிக்கை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் உலக செல்வ சம பங்கீட்டின்மையை பாதுக்காப்பதாகும். 1954-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளை மாளிகைக்குச் சமர்ப்பித்த இரகசிய அறிக்கையில் அமெரிக்கா நியாயம் நீதி போன்றவற்றிற்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவை 13 பில்லியன் டொலர்களில் இருந்து 60 பில்லியன் டொலர்களாகவும் அப்போது உயர்த்திக் கொண்டது. எமது எதிரிகளுக்கு எதிராக சதி, மறைமுக அள்ளிவைத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. பொதுவுடமைவாதம் உலகெங்கும் பரவினால் அது அமெரிக்காவின் செல்வத்திற்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் நேட்டோ உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
நேட்டோ விரிவாக்கம்
பதினாங்கு நாடுகள் ஆரம்பித்த நேட்டோவில் தற்போதுஅல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மொன்ரிநிகிரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலொவேக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், துருக்கி, ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இரசியா தனது கவச நாடுகளாகக் கருதும் எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டமை இரசியாவைக் கடுமையாக சினத்திற்கு உள்ளாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைய முற்பட்டபோது இரசியா அந்த நாடுகளுக்கு எதிராகப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிரான இரசிய நகர்வு
2021இன் இறுதியில் இரசியா 120,000படையினரை உக்ரேன் எல்லையில் குவித்து விட்டு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை நேட்டோ அமைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் விடுத்தார். ஒரு நாடு ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதா இல்லையா என்பதை அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். அம்முடிவை எடுப்பது இரசியா அல்ல என்பது நேட்டோ நாடுகளினதும் அதில் இணைய விரும்பும் நாடுகளினதும் பதிலாக அமைந்தது. புட்டீனின் வேண்டுகோள் ஒர் ஒப்பந்த வரைபாக வெளியிடப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படையினரின் உட்கட்டமைப்புக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கையாக இருக்கின்றது. உக்கிரேனுக்கு நேட்டோ நாடுகள் படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்பதும் இடைத்தூர தாக்குதல் ஏவுகணைகளை ஐரோப்பாவில் தடைசெய்ய வேண்டும் என்பதும் புட்டீனின் கோரிக்கைகளாக இருக்கின்றன. இவற்றை நேட்டோ நாடுகள் செய்யவில்லை எனில் இரசியா படை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற மிரட்டலும் புட்டீனால் விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான தாக்குதல் விண்வெளிப் போராகலாம்
2021 நவம்பரில் செய்மதி அழிப்பு ஏவுகணையை வெற்றீகரமாகப் பதிவு செய்தது. புவியின் மேற்பரப்பில் இருந்து 300மைல்கள் உயரத்தில் இருந்த இரசியாவின் செய்மதி அதனால் அழிக்கப்பட்டது. உக்ரேனில் இரசியப்படைகளின் நகர்வுகளை நேட்டோ நாடுகளின் செய்மதிகள் அவதானித்து உக்ரேனுக்கு தகவல் வழங்கினால் அச்செய்மதிகளை இரசியா அழிக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப்படை இரசியாவிற்கு எதிராக தாக்குதல் தொடுக்கலாம். அமெரிக்காவின் விண்வெளிப் படையின் ரடார்கள் 22,000மைல்கள் (36,000கிமீ) உயரத்தில் இருந்து ஒரு கால்பந்தின் நகர்வைக் கூட அவதானிக்கும் வகையில் உணர்திறன் மிக்கவை.
அனுபவமற்ற படையினர்.
கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்கா சமச்சீரற்ற போர்களை தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக செய்துள்ளது. வலிமை மிக்க எதிரியுடன் மோதும் அண்மைக்கால அனுபவம் அமெரிக்கப் படையினருக்கு இல்லை, அதேவேளை இரசியப் படையினர் போர் முனை அனுபவம் இல்லாமல் பல பத்தாண்டுகளைக் கடந்து வந்துள்ளன. 1950களின் ஆரம்பத்தில் நடந்த கொரியா போரின் பின்னர் வல்லரசு நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தாக்குவதை தவிர்த்து வந்துள்ளன. உக்ரேன் படையினர் உக்ரேனின் இரசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்குப் பதியில் இரசிய ஆதரவுடன் செயற்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக 2014-ம் ஆண்டில் இருந்து போர் செய்து வருகின்றனர். 120,000இற்கும் மேற்பட்ட படைகளை உக்ரேனுக்கு இரசியா அனுப்பவிருக்கும் இரசியா அவற்றிற்கான வழங்கல்களை ஓரு மோசமான கால நிலையில் செய்ய வேண்டியிருக்கும். ஜனவரி – பெப்ரவரி காலப் பகுதியில் உக்ரேனின் வெப்ப நிலை செண்டிகிரேட்டில் -10 முதல் +8 வரை இருக்கும். பனி நிறைந்த சூழலில் போர் அனுபவம் பெறுவதற்காக நேட்டோ படையினர் பின்லாந்துடன் இணைந்து ஆண்டு தோறும் போர்ப்பயிற்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரேனைத் துண்டாடுவது என்பதில் இருந்து உக்ரேனை முற்றாக ஆக்கிரமிப்பது என்பது வரை இரசியாவின் தெரிவுகள் பரந்துள்ளன. உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையாமல் தடுப்பதில் இரசியா தற்காலிக வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை நிரந்தரமாக்குவற்கு இரசியா பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. 2014-ம் ஆண்டில் இருந்தமையிலும் பார்க்க உக்ரேனியப் படையினர் தற்போது அதிக அளவு பயிற்ச்சிகளையும் படைக்கலன்களையும் நேட்டோப் படையினரிடமிருந்து பெற்றுள்ளார்கள். கனடியப் படையினர் பலர் உக்ரேன் சென்று பயிற்ச்சி வழங்கியுள்ளனர். அமெரிக்கப் படைத்துறை நிபுணர்களும் உக்ரேனில் இருந்து செயற்படுகின்றனர்.
செல்வாக்கு
விளடிமீர் புட்டீனை மேற்கு நாடுகள் எதிர்க்கும் போதெல்லாம் அவரது செல்வாக்கு இரசியர்கள் மத்தியில் அதிகரிக்கும். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டு வந்தபோது அவரது செல்வாக்கு இரசியாவில் அதிகரித்தது. இரசிய விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள்களைப் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டை மேற்கு நாடுகள் முன்வைத்த போது புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. இரசியா சிரியாவில் தலையிட்டதை மேற்கு நாடுகள் எதிர்க்க புட்டீனின் செல்வாக்கு அதிகரித்தது. உக்ரேனுக்கு எதிரான படை முற்றுகை மிரட்டல் அவரது செல்வாக்கை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனுக்குள் இரசியப் படைகள் நுழைந்த பின்னர் ஏற்படும் பின்னடைவுகள் உயிரிழப்புகள் பொருளாதார பாதிப்பு போன்றவை மக்கள் நடுவில் அவரது செல்வாக்கை இழக்கச் செய்யலாம்.
வலுவற்ற பொருளாதார நிலை
கொவிட் பெரும் தொற்று நோயால் ஒரு நீண்ட காலப் போரைச் செய்யக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள், உக்ரேன், இரசியா ஆகியவற்றின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. அதிலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உக்ரேனின் பொருளாதாரம் கொவிட்-19இற்கு முன்னரே பாதிப்படைந்த நிலையில் இருந்தது.
படைக்கலப் பரிசோதனைக் களம்
இரசியாவின் எஸ்-500 என்னும் வான் பாதுகாப்பு முறைமை 2021-ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இரசியா தனது எஸ்-400 வான்பாதுகாப்பு முறைமையை சிரியாவில் பரிசோதித்தது. அவற்றிற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கத் தயாரிப்பு F-35-I என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை பரிசோதித்தது. எஸ்-500ஐ இரசியா உக்ரேனில் பாவிக்கலாம். உக்ரேனிற்கு அமெரிக்கா புதிய போர் போர்விமானங்களை விற்பனை செய்யவில்லை. மாறாக இரசியாவின் போர்த்தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரசியாவின் T-14 Armata, T-70, T-90 ஆகியவை இரசியாவிடம் உள்ள எதிரிகளுக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய தாங்கிகளாகும். அமெரிகாவின் Javelin, BGM-71 TOW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் இரசியாவின் தாங்கிகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக உக்ரேன் போர் அமையலாம். துருக்கியின் ஆளிலிப்போர்விமானங்கள் ஆர்மினீயா – அஜர்பைஜான் போரில் இரசியத் தாங்கிகள் பலவற்றை அழித்தன. துருக்கி அதே பணியை உக்ரேனில் இரசியாவிற்கு எதிராக செய்யலாம். இரசியாவின் SU-37, SU-57, Checkmate போன்ற விமானங்களை எதிர் கொள்ளக் கூடிய படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்குமா?
அமெரிக்க – இரசிய நேரடி மோதல் நடக்க வாய்ப்பில்லை
உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்கும் போது இரசியாவுடன் அமெரிக்கா நேரடியாக மோதுவதைத் தவிர்த்து உக்ரேனிற்கு படைக்கலன்களையும் உளவுத் தகவல்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இரசியப் படைகள் நகரத் தொடங்கும் போதே அவற்றின் மீது முன்கூட்டித் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் உளவு ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது. நிலைமையை உக்ரேனியப் படைகள் சமாளிக்க முடியாத போது போலந்தும் துருக்கியும் படையினரை உக்ரேனுக்கு அனுப்பி நேரடியாக இரசியப் படையினருடன் போர் புரியச் செய்யலாம். இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகவிருப்பவை போலந்தும் துருக்கியுமே. அமெரிக்காவின் இணையவெளிப்படையினர் இரசியாவிற்கு எதிராக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. போர் என்று நடந்தால் அங்கு அமெரிக்கா தனது படையினருக்கு பயிற்ச்சி களமுனைப் பயிற்ச்சி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. இரசிய – உக்ரேன் போரில் இணையவெளிப் போர்ப் பயிற்ச்சியை அமெரிக்கா தனது படையினருக்கு வழங்கலாம். 2014-ம் ஆண்டு கிறிமியாவை உக்ரேனிடமிருந்து இரசியா அபகரித்த போது முதலில் உக்ரேனின் உட்கட்டுமானங்கள் மீது முதலில் இணையவெளித்தாக்குதல் தான் இரசியாவால் செய்யப்பட்டது.
பொருளாதாரத் தடை – SWIFT
உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் மேலதிக பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் செய்யலாம். குறிப்பாக பன்னாட்டு கொடுப்பனவு அமைப்பான SWIFTஇல் இருந்து இரசியா வெளியேற்றப்படலாம். 2014-ம் ஆண்டு அமெரிக்கா இரசியாவை SWIFTஇல் இருந்து வெளியேற்ற முற்பட்ட போது அப்படிச் செய்தால் அமெரிக்காவுடனான எல்லா அரசுறவியல் தொடர்புகளையும் துண்டிப்பேன் என்ற பதில் மிரட்டலை புட்டீன் விடுத்தார். இரு அணுக்குண்டு வல்லரசுகள் தொடர்பாடல் அற்ற நிலையில் இருப்பது மிகவும் ஆப்த்தான ஒன்று என்ற படியால் அமெரிக்கா தனது நடவடிக்கையை நிறுத்தியது. மீண்டும் அதைச் செய்யும் முயற்ச்சியில் அமெரிக்கா இணங்கலாம்.
தற்போது இரசியாவிற்கு உக்ரேனை விட்டுக் கொடுத்தால் அத்துடன் நிற்காமல் நேட்டோவில் இருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை விலக்க வேண்டும் என்ற மிரட்டலை புட்டீன் விடுப்பார் என நேட்டோ நாடுகள் கருதுகின்றன. அதனால் உக்ரேனை இரசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றும் புட்டீனின் முயற்ச்சியை நேட்டோ படையினர் உறுதியாக நிற்கின்றனர். புட்டீனிற்கு விட்டுக் கொடுத்தால் அவரது கனவான மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவார் என்ற கரிசனை நேட்டோ நாடுகளுக்கு மட்டுமல்ல பின்லாந்து, சுவீடன் போன்ற நேட்டோவில் உறுப்புரிமை இல்லாத நாடுகளுக்கும் உண்டு. போர் மூலம் உக்ரேனை ஆட்கொள்ளும் முயற்ச்சி வெற்றி தருமா?
2 comments:
உங்கள் தமிழ் எழுத்து நடையில் பல இலக்கணப் பிழைகள், செய்தித் தவறுகள் உள்ளன.
தயவு செய்து வெளியிட முன்னர் சரி பார்த்து எழுதவும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்த முயற்ச்சிக்கின்றேன்
Post a Comment