Wednesday 14 August 2013

அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை சீனாவில் தலையில் கட்டப் பார்க்கிறது.

சீன அரச நிறுவனமான China Metallurgical Group Corp ஆப்கானிஸ்த்தான் அரசுடன் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஆப்கானிஸ்த்தானில் செப்பு உலோகத்தை அகழ்வு செய்யும் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. காபுலுக்கு தென் கிழக்கே உள்ள லோகர் மாகாண தரிசு நிலத்தில் இந்த அகழ்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த லோகர் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தினரின் பலமாக உள்ளனர். இருந்தும் சீனா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

லோகர் மாகாணத்தில் இருந்து பாக்கிஸ்த்தானிற்கு ஒரு தொடரூந்துப் பாதையையும் சீனா அமைக்கவிருக்கிறது. ஆப்கான் வரலாற்றிலேயே அதிக பெறுமதியான வெளிநாட்டு முதலீடு இதுவாகும். ஆப்கானிஸ்த்தானில் நூறு பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான கனிம வளங்களும் எரிபொருள் வளங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். சீனா அமைதியாக இருந்து தலிபானினிடம் நற்பெயர் வாங்கியுள்ளது. அமெரிக்கா அமெரிக்கா தனது 672பில்லியன் டாலர்களைச் செலவளித்தும் 2,200 அமெரிக்க உயிர்களைப் பலிகொடுத்தும் செய்ய முடியாத பொருளாதாரச் சுரண்டலை சீனா இழப்பீடு எதுவுமின்றி செய்கின்றது. உண்மையில் ஆப்கானிஸ்த்தானில் சீனச் சுரண்டலை அமெரிக்கா விரும்புகிறதா அல்லது அமெரிக்கா ஆப்கான் பொறிக்குள் சீனாவை விழுத்துகிறதா என்பது இப்போது உள்ள பெரும் கேள்வி. அமெரிக்காவும் மற்ற நேட்டோப் படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு பெரும் பொருளாதார நெருக்கடியும் மோசமான உள்நாட்டுக் கலவரமும் வெடிக்கலாம். சீனாவைப் பொருளாதார இலாபங்களைக் காட்டி ஆப்கானிற்குள் இழுக்க அமெரிக்கா முயல்கிறது.

எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது.  ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  ஆப்கான் சந்தைகளிலும் தெருவோரக் கடைகளிலும் சீனத் தயாரிப்புகள் ஏற்கனவே குவிந்து விட்டன. சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஆப்கானிய காவற்துறையினருக்கு தனது நாட்டில் பயிற்ச்சியளிக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை 2001இல் ஆக்கிரமித்த போது அங்கு காணி விலைகளும் கட்டிட விலைகளும் அதிகரித்தன. அதிக வேலை வாய்ப்புக்கள் உருவானது. இப்போது கட்டிட விலைகள் சரியத் தொடங்கி விட்டன. வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது ஆப்கான் பொருளாதரத்திற்கு உகந்தது அல்ல. இதை சீன முதலீட்டால் சரிக்கட்டலாம் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நம்புகின்றன.

சீனா தான் முதலீடு செய்யும் நாடுகளில் தனது தொழிலாளர்களைக் கொண்டு போய் குவிப்பது வழக்கம். ஆப்கானிலும் சீனா அதையே செய்கிறது. சில இடங்களில் சீனத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. தனது தொழிலாளர்களைப் பாதுகாக்க சீனா தனது படைகளை ஆப்கானுக்கு அனுப்ப வேண்டி இருக்கும். சீனாவின் முதலீடுகள் திடமற்ற நிலையில் இருக்கும்  ஆப்கானில் அதிகரித்தால் அவற்றைப் பாதுகாக்க சீனா படையினரை அங்கு அனுப்ப வேண்டும். தலிபானுடன் நல்ல உறவை சீனா வளர்க்க வேண்டும் அல்லது தலிபான்களுடன் மோத வேண்டும். தலிபானும் அல் கெய்தாவும் சீனாவில் வாழும் இசுலாமியர்களிடையே ஏற்கனவே தீவிரவாதத்தைப் பரப்பி வருகின்றன.

சீனாவால் பாக்கிஸ்த்தானை கட்டுப்படுத்த முடியும்.
சீனாவால் பாக்கிஸ்த்தானின் இசுலாமியப் போராளிக் குழுக்களுக்கான உதவிகளை நிறுத்த முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாக்கிஸ்த்தான் தனது மோசமடையும் பொருளாதாரத்தை சீர் செய்ய சீனாவில் பெரிதும் தங்கியுள்ளது. தலிபான் போராளிகளோ அல் கெய்தாப் போராளிகளோ சீனாவிற்கு எதிராக கிளம்பும் பட்சத்தில் சீனாவால் பாக்கிஸ்த்தானில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவோ அடக்கி கைது செய்யப்பண்ணவோ முடியும் என அமெரிக்கா நம்புகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன ஆப்கானில் தனது காய்களை மிகவும் திட்டமிட்டும் நிதானமாகவும் நகர்த்துகிறது.

அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தது தலிபானகளையும் அல் கெய்தாவையும் கொல்வதற்கு. சீனா ஆப்கானில் தலையிடுவது ஆப்கானைப் பொருளாதார ரீதியில் சுரண்டுவதற்கு.  தனது நாட்டிலும் இசுலாமியர்கள் இருப்பதால் சீனா இசுலாமிய தீவிரவாதம் உலகில் ஓங்கினால் அது தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...