2011-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி கிளர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் தளபதி
கடாஃபி காலை 15 வாகனங்களைக் கொண்ட ஒரு வாகனத் தொடரணியில் தப்பி ஓட
முயற்ச்சித்தார். அந்த வாகனத் தொடரணியின் மீது காலை 8.30 அளவில் நேட்டோ
விமானங்களை குண்டு தாக்குதல் நடாத்தி அழித்தன. இதில் அமெரிக்க ஆளில்லா
விமானங்களே முதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
கடாஃபியைக் கொல்லும் அதிகாரம் நேட்டோவிற்கு இல்லை
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் முதலில் முன்னர் சென்ற ஒரு வாகனத்தைத் தாக்கி
மற்ற வாகனங்களைத் தடை செய்தன. பின்னர் வீசிய குண்டுகள் சுமார் ஆறு
வாகனங்களைத் தாக்கிச் சேதப் படுத்தின. மொத்தமாக 70 வாகனங்கள் தப்பி ஓட
முயற்ச்சித்ததாக இன்னொரு செய்தி தெரிவித்தது. நேட்டோ தாம்
தனிப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என்றும் தமக்கு
கடாஃபி அந்த வாகனங்களுக்குள் இருப்பது தாக்கும் போது தெரியாது என்றும்
கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1973இன் படி நேட்டோப் படைகள் லிபியாவில் ஒரு விமானப் பறப்பற்ற வலயத்தை நிலைநாட்டும் ஆணையை நேட்டோ நாடுகள் பெற்றிருந்தன. மும்மர் கடாஃபியைக் கொல்லும் ஐநா ஆணை நேட்டோவிடம் இருந்திருக்கவில்லை.
கடாஃபி உயிருடன் வேண்டும்
குண்டு வீச்சிலிருந்து தப்ப கடாஃபி ஒரு தண்ணீர் வாய்க்கால் குழாய்க்குள்
ஒளிந்து கொண்டார். நீண்ட நாட்களாக கடாஃபி ஆதரவுப் படைகள் சரணடையாமல்
மூர்க்கத் தனமாக பதில் தாக்குதல் தொடுத்ததில் இருந்தே கடாஃபிக்கு எதிரான
கிளர்ச்சிக்காரர்களுக்கு கடாஃபி சேர்டே (Sirte) நகரில் ஒளிந்திருக்கலாம் என்ற
சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. மும்மர் கடாஃபியை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைமை கிளர்ச்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. நீங்கள் கடாஃபியை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் கடாஃபி எமக்கு உயிருடன் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டிருந்தது.
கெஞ்சிய கடாஃபி
வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடந்திய பின்னர் கடாஃபிக்கு எதிரான
கிளர்ச்சிக்காரர்கள் கடும் தேடுதல் மேற்கொண்டனர். கடாஃபியின் ஆதரவுப்
படையினரில் ஒருவர் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து 12..30 மணியளவில்
கடாஃபி இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். கடாஃபியின் மெய்ப்
பாதுகாவலர்கள் சரணடைந்தனர். அவர்கள் தங்கள் தலைவனை ஒன்றும் செய்ய வேண்டாம்
அவர் காயப்பட்டுள்ளார் என்றனர். யார் தலைவர் என்று வினவிய போது அவர்கள்
யாரென்று சொல்லவில்லை. பின்னர் தண்ணீர் வாய்க்காலுக்குள் இருந்து வந்த
கடாஃபி எனது மகன்களே.... இங்கு என்ன நடக்கிறது?...... என்ன பிழை இங்கு.....
என்றபடி வந்தார். தனது எதிரிகளை எலிகள் என்று அடிக்கடி விமர்சித்த கடாஃபி
ஒரு வாய்க்காலுக்குள் எலிபோல் ஒளித்திருந்தார். அவரது தங்கக் கைத்
துப்பாக்கியுடன் வெளிவந்த கடாஃபி தன்னைச் சுடவேண்டாம் என்று கத்தினார்.
அவரை இனம் கண்டு கொண்ட அவரது எதிரிகள் அவரை மூர்க்கமாகத் தாக்கினர்.ஒரு
கட்டத்தில் 69வயதான கடாஃபி தன்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினார். நீங்கள்
செய்வது இசுலாமியச் சட்டங்களுக்கு விரோதமானது என்று கடாஃபி கூற அவரைத்
தாக்குபவர்கள் நாயே பொத்தடா வாயை என்றனர்.
கடாஃபி கொலை ஒரு போர்க்குற்றம்
கடுமையான தாக்குதல்களின் பின்னர் வயது குறைந்த ஒரு ஆண் ஒரு கைத்துப்பாகியால் கடாஃபியைக் கொன்றார். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை
தெருவில் போட்டு காலால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் அசிங்கப்படுத்தினர்
அவரது எதிரிகள். ஒரு நல்ல இசுலாமியர்களாக எதிரியின் உடலுக்கு மரியாதை
செலுத்த கிளர்ச்சிக்காரர்கள் தவறி விட்டனர். எனது மண்ணில் இருந்து கடைசிவரை
போராடுவேன் என்று அடிக்கடி அறை கூவல் விடுத்த கடாஃபி, தான் சொன்ன படியே
செய்தார். கடாஃபி கொலை ஒரு போர்க்குற்றம் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கடாஃபியுடன் இரகசியங்களும் கொல்லப்பட்டன
கடாஃபியை விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்பதால் அவர் கொல்லப்பட்டார் என்று இப்போது சொல்லப்படுகிறது. பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்களின் அரசியக் கட்சி நடவடிக்கைகளுக்கு கடாஃபி பணம் கொடுத்து உதவியிருந்தார். இந்த வரிசையில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோசியும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயரும் முக்கியமானவர்கள். கடாஃபி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தால் அவர் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியிருந்திருப்பார்.
இப்போது கடாஃபியைக் கொல்ல அப்போது பிரெஞ்சு அதிபராக இருந்த நிக்கோலஸ் சார்க்கோசி உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சார்க்கோசியின் நேரடி உத்தரவின் பேரில் பிரெஞ்சு உளவுத் துறை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக் காரர்களுக்குள் தனது கையாளை ஊடுருவச் செய்து அவர் மூலமாக கடாஃபியைச் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சார்க்கோசியின் 2007ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவருக்கு கடாஃபி பல மில்லியன் டாலர்களை தேர்தல் செலவுகளுக்காக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொல்ல உத்தரவிட்டாரா சார்க்கோசி?
தற்போதைய லிபிய இடைக்காலப் பிரதமரான மஹ்மூட் ஜிப்ரில் கடாஃபியின் கொலையில் வெளிநாட்டு உளவாளி சம்பந்தப்பட்டிருப்பதாக எகிப்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். இத்தாலியப் பத்திரிகையான கொரிரே டெல்லா அந்த வெளிநாட்டு உளவாளி ஒரு பிரெஞ்சு தேசத்தவர் என்கிறது. அப்பத்திரிகை கடாஃபிக்கு எதிரான போரில் நேட்டோப்படைகள் ஈடுபட்டதில் இருந்து கடாஃபி பல மேற்கு நாட்டுத் தலைவர்களைப்பற்றி பல அந்தரங்கச் செய்திகளை வெளியிடுவதாக மிரட்டி இருந்தார் என மேலும் தெரிவிக்கிறது. வேறு செய்திகள் கடாஃபியின் சகல நடமாட்டத்தையும் நேட்டோப் படைகளின் செய்மதிகளும் விமான ராடார்களும் கடைசிவரை கண்கணித்தபடியே இருந்தன என்கிறது. கடாபியும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தும் செய்மதித் தொலைபேசி மூலம் பேசியவற்றை நேட்டோப்படைகள் கண்காணித்தபடியே இருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடாஃபியை காட்டிக் கொடுத்த சிரிய அதிபர்
கடாஃபியின் இறுதிக் காலத்தில் தனது விசுவாசியான யூசுப் சக்கீருடனும் சிரியாவில் இருந்த ஒரு பாலஸ்தீனப் போரளிக்குழுத் தலைவர் அகமத் ஜிப்ரில் உடனும் செய்மதித் தொலைத் தொடர்பு உரையாடல் நடந்தது. இதன் மூலம் கடாஃபியின் இருப்பிடத்தை அறிந்த சிரிய அதிபர் பஷார் அல் அசாத் கடாஃபியின் இருப்பிடத்தை பிரெஞ்சு உளவுத்துறைக்குக் காட்டிக் கொடுத்ததாக இன்னொரு சதிக் கோட்பாடு(conspiracy theory) சொல்கிறது. இதற்குப் பதிலாக சிரிய அதிபருக்கு எதிரான சீர்திருத்த அழுத்தங்களை பிரான்ஸ் சில காலம் தள்ளிவைப்பதாகப் பேரம் பேசப்பட்டதாம். இந்தத் தகவல்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் உளவுத் துறைத் தலைவராக இருந்த அல் ஒபைதியிடம் இருந்து வந்துள்ளதாம்.
முன்பு பலதடவை தான் கடாஃபியிடம் இருந்து நிதி பெற்றதை நிக்கோலச் சார்க்காசி மறுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment