Thursday, 2 June 2011
வல்லரசு நாடுகளின் இணையவெளிப் போர்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமெரிக்கப் படை பலத்தை ஆய்வு செய்த சீனப் படைத் துறை வல்லுனர்கள் அமெரிக்கப் படைபலம் இரு அம்சங்களில் பெரிதும் தங்கியுள்ளதை அவதானித்தனர். அமெரிக்கா தனது உலகெங்கும் உள்ள தனது விமானம் தாங்கி கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள், உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கும் அவற்றிற்கிடையான தொடர்பாடல்களுக்கும் செய்மதிகளிலும் இணையவெளியிலும் பெரிதும் தங்கி இருக்கின்றன.
போர் நடவடிக்கையாகக் கருதும் அமெரிக்கா
தனது நாட்டு கணனிக் கட்டமைப்புக்கள் மீது மேற்கொள்ளப் படும் ஊடுருவல் நடவடிக்கைகளை அமெரிக்காமீது தொடுத்த போராக கருதப் போவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பெண்டகன் 2011 ஜூன் முதலாம திகதி அறிவித்தது. இந்த அறிவிப்புப் பாரதூரமானது. எந்த ஒரு நாட்டில் இருந்தாவது அமெரிக்க கணனிக் கட்டமைப்பின் மீது ஊடுருவல்கள் மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தலாம்.
உலகை அதிர வைத்த சீன விஞ்ஞானிகள்
2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் திகதி அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, தாய்வான் ஆகியவை உடபட பல நாடுகளை அதிரவைத்தனர் சீன விஞ்ஞானிகள். சீன விஞ்ஞானிகள் தரையில் இருந்து செலுத்திய ஒரு ஏவுகணையினால் தமது செய்மதி ஒன்றை அழித்தனர். இது அமெரிக்காவின் பலம் தங்கி இருக்கும் இரண்டில் ஒன்றைப் பலவீனமாக்கியது.
இணையவெளி ஊடுருவல்கள்
கணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.
இணையவெளிப் போராளிகள்
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.
அமெரிக்காவை உலுக்கிய கூகுளின் அறிவிப்பு
2011 ஜூன் 2-ம் திகதி சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ளவர்களின் பல மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாக கூகிள் அறிவித்தது அமெரிக்க அரசை உலுக்கியுள்ளது. இது அமெரிக்க அரசுச் செயலர் கிலரி கிளிண்டனையே களத்தில் இறக்கியது. அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மின்னஞ்சல்கள் ஊடுருவப்படுவது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் கூகிளின் அறிவிப்பை அமெரிக்க அரசு பாரதூரமானதாக எடுத்துக் கொண்டமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த ஊடுருவல் சீனாவின் படைத்துறைப் பயிற்ச்சி மையங்கள் உள்ள நகரில் இருந்து மேற்கொள்ளப்பட்டமை; மற்றது அமெரிக்கப் அரச அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டுள்ளன. சில வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மின்னஞ்சல்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவில் கூகிளை போன்று போலியான ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதன் மூலம் பலரது மின்னஞ்சல் முகவரிகளும் கடவுச்சொற்களும் திருடப் பட்டுள்ளன. இப்படிச் செய்வது ஒரு நிறுவனத்தால்தான் முடியும். தனிப்பட்ட ஒருவாரால் செய்ய முடியாது.
மரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப்போர்.
இணையவெளிப் போரில் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பல குடிசார் நடவடிக்கைகளை முடக்க முடியும். இதனால் வங்கி நடவடிக்கைகள் பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவை போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பணிகளை முடக்க முடியும். அத்துடன் படைத்துறையின் தொடர்பாடல்கள் வழங்கல் சேவைகளை முடக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலக இலகுவான உளவாடலுக்கு இணையவெளி மூலம் செய்யலாம். இதனால் பல நாடுகள் இப்போது மரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப் போரையும் கருதுகின்றன. சீனாதான் இந்த இணையவெளிப் போரில் முன்னோடி என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். 31 மே 2011இலன்று பிரித்தானிய தான் இணையவெளி படைபலத்தை தான் 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது. 2003-ம் ஆண்டே வட கொரியா தனது இணயப் போராளிகள் பலரை வெளி நாடுகளுக்கு அனுப்பி நவீன இணையவெளி ஊடுருவல் தொடர்பாகப் பயிற்றுவித்தது. ஈரானின் அணுக்குண்டுத் திட்டத்திற்கு எதிராக பெண்டகன் ஒரு சிறப்பு வைரசை உருவாக்கி திட்டதில் பின்னடைவை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் புதிய திட்டம்.
அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும். இந்த வைரசுக்கள் வெறும் படைத்துறையை மட்டும் இலக்கு வைக்குமா அல்லது மற்ற சேவைகளையும் குறிவைக்குமா என்று வெளியிடப்படவில்லை.
கொஞ்சம் மாத்தி யோசியுங்களப்பா.
உலகம் பொருளாதாரத்தில் மோசமாகிக் கொண்டு போகிறது. உணவு உற்பத்திப் பிரச்சனை, எரி பொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனை என்று எத்தனை பிரச்சனைகள்? இவற்றைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்களா? எல்லாவற்றையும் மேலுள்ள மாதிரி ஆழ சிந்தித்து செய்பவர்கள் இப்படி எல்லம் ஆளுக்கு அடித்துக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்று சிந்திக்க மாட்டார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
நாங்களும் தயார் இணையவெளி போருக்கு ஈழத்தமிழர்
Post a Comment