Thursday, 18 February 2010

மாறும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கம் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா?


இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்து மேற்குலகப் பத்திரிகைகள் அடிக்கடி இப்போது எழுது வருகின்றமையில் இருந்து இலங்கை தொடர்பாக வட அமெரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன அல்லது ஏற்படுத்தவிருக்கின்றன என்று சொல்லலாம். இதற்கு அவை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பத்திரிகைச் சுதந்திரம் போன்றவற்றை கையில் ஆயுதமாக எடுத்தாலும் உண்மையில் அவை இலங்கையின் சீனாவைச் சார்ந்து செல்வதாக அவை கருதுவதே முக்கிய காரணம்.

அமெரிக்க சீன பங்காளிக் கொள்கை
அமெரிக்கா தனது வெளியுறவுக்கொள்கையை தனது வர்த்தக நலன்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். சென்ற நூற்றாண்டின் இறுதியில் சீனா பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சியைக் காணத் தொடங்கியபோது அமெரிக்க வெளியுறவுத் துறை ஆலோசகர்கள் சீனாவுடன் முரண்படுவதிலும் பார்க்க ஒரு பங்காளியாக இணைந்து சீனாவுடன் ஒரு நல்ல வர்த்தக உறவை ஏற்படுத்தும் படி அமெரிக்காவை வலியுறுத்தினர். அதன் விளைவாக சீனா தனது ஏற்றுமதியை பெருமளவில் பெருக்கி உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுச் செலவாணியைக் கொண்ட நாடாக மாறியது. சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பிறகு ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த போது ஜப்பானிய நாணயம் அமெரிக்க டொலருக்கு எதிராக மூன்று மடங்கு மதிப்பு வளர்ச்சி கண்டது. அதனால் ஜப்பான தனது நாட்டின் உற்பத்திகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜப்பானிய வட்டிவீதம் சுழியம் வரை இறங்கியது. அவற்றின் பலனை இப்போது ஜப்பானிய தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். ஜப்பான் விட்ட பிழையைத் தான் விடக்கூடாது என்று சீனா கவனமாகச் செயற்பட்டு தனது பொருளாதாரத்தையும் பிராந்திய ஆதிக்கத்தையும் கட்டியெழுப்பியது. அதன் ஆதிக்கம் ஆசியாவுடன் நிற்காமல் ஆபிரிக்க மத்திய அமெரிக்க நாடுகள் வரை நீண்டது. அமெரிக்க எதிரி நாடுகளான ஈரான சிம்பாவே மியன்மார் ஆகிய நாடுகளுடன் உறுதியான உறவுகளை வளர்த்துக் கொண்டது. அமெரிக்கா சீனாவிடன் வர்த்தகப் பங்காளி உறவை மேம்படுத்திக் கொண்டிருக்கையில் இந்தியா என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியது.

தேய்ந்து செல்லும் இந்தியப் பிராந்திய ஆதிக்கம்.
இந்திரா காந்தி - பார்த்தசாரதி(வெளியுறவுச் செயலர்) காலத்தில் இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை நன்கு வைத்திருந்தது. பங்களா தேசப் பிரிவினையை வெற்றீகரமாக ச் சாதித்தது. அமெரிக்காவாலும் சீனாவாலும் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது.

1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவ்ரால் சாதிக்க முடிந்தது. இப்படியெல்லாம் இந்தியப் பிராந்திய ஆதிக்கம் இருந்தது.

இலங்கை குடியரசுத் தலைவரைத் திருப்திப்படுத்த ராஜீவ்கந்தி பார்த்தசாரதியைப் பதவி நீக்கம் செய்தபின் நிலைமைகள் தலை கீழாக மாறின. அதன் பின் இன்னோரு வெளியுறவுச் செயலர் வெங்கடேசனையும் ராஜீவ் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தார் இலங்கையைத் திருப்திப் படுத்த. பின்னர் வந்த வெளியுறவுச் செயலர்கள் எல்லாம் அவர்கள் சாதிகளையும் ஆட்சியாளர்களைன் குடும்ப நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்பட்டனர். இந்தியாவின் இந்தப் பலவீனமான வெளியுறவுத் துறை அமெரிக்கா சீனாவுடன் வர்த்தகப் பங்காளியாகச் செயற்பட்ட காலத்தில் இருந்தது சீனாவிற்கு வசதியாகப் போய்விட்டது. இந்தியாவிற்கு எதிராக தனது பிராந்திய ஆதிக்கத்தை நன்கு நிலை நாட்டி விட்டது.

சீனாவின் முத்து மாலைத் திட்டம் - இந்தியாவிற்கு சுருக்குக் கயிறு
சீனா இந்தியாவைச் சுற்றி மறைமுக கடற்படைத் தளங்களை அமைத்துவருகிறது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து மாக்கடலுாடாகவே நடக்கிறது. இந்தப் பாரிய கடல் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள சீனா ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
.
இந்தியாவின் வடபகுதி முழுக்க எதிரிகளான சீனாவினதும் பாக்கிஸ்தானுடன் உள்ளது. நேப்பாளமும் பங்களா தேசமும் இந்தியச் சார்பான நாடுகள் அல்ல. இந்தியாவின் எனைய எல்லைகள் யாவும் கடற்பரப்பாகும்.பாக்கு நீரிணை இந்திய மீனவர்களின் கொலைக்களம்.
இந்நிலையில் பாக்கிஸ்த்தானில் குவாடார் துறைமுகத்தில் சீனா பலமான மறைமுகத் தளம் அமைத்துள்ளது. இது அரபுக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் அமைக்கப் பட்டதாகும்.
.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் மிகப் பெரும் செலவில் ஒரு துறைமுகத்தை அமைத்து வருகிறது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சீனாவிற்க்குத் தேவையான பெற்றோலியம் அரபியநாடுகளில் இருந்து இவ்வழியாகவே செல்கிறது. இதில் சீனாவும் ஈரானும் இணைந்து இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளது.
.
மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தின் முக்கியமான சிட்டகொங்கிலும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவை வங்கக் கடலில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் சீனாவால் அமைக்கப் பட்டுள்ளன.

குடும்ப நலன்களுக்காக பிராந்திய நலனைக் கைவிட்ட இந்தியா
மேற்குலக நாடுகள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இலங்கைப் பிரச்சனையை கையில் எடுத்த வேளை இந்தியா சீன-இலங்கைக் கூட்டில் தன்னையும் ஒரு பங்காளனாக இணைத்துக் கொண்டது. ஐக்கியா நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டினால் போதும் என்பது மட்டும் தான் தமது எண்ணம் என்பது போல் இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்டது. அப்படி நடந்தமைக்குக் காரணம் ஒரு குடும்ப நலனை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் செயற்பட்டமையே. சிங்களப் பேரினவாதிகள் கடும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்பது சிங்கள மக்களுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.

சீனாவிற்கு எதிராகக் காய்கள் நகர்த்தும் அமெரிக்கா.
சீனாவுடனான தனது பங்காளிக் கொள்கை சீனாவை வளர்க்கவே உதவியது என்பதை இப்போது அமெரிக்கா உணர்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கா இப்போது சீனாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்துவது போல் தெரிகிறது. இதன் பகுதிகளாக தைவானிற்கு பாரிய ஆயுத விற்பனையும் தீபெத்தியத் தலைவர் தலய் லாமாவுடனான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சந்திப்பும் நடந்தேறியுள்ளன. அத்துடன் அமெரிக்கா இந்தியாவையும் தன் சீனவிற்கு எதிரான காய் நகர்த்தல்களில் ஈடுபடுத்த முயல்கிறது. அண்மையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன் அவர்களின் பாக்கிஸ்த்தானியப் பயணத்தின் போது அமெரிக்கா இப்போது பாக்கிஸ்த்தானை சற்று அடக்க முயல்கிறது போல் நடந்து கொண்டுள்ளதுடன் சற்று இந்தியச் சார்பாகவும் நடந்திருக்கிறார். அத்துடன் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கவிற்கு பாக்கிஸ்த்தான் தேவைப்படுவதற்க்கும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப் படுவதற்கும் இடையில் ஒரு சமநிலையை உறுவாகக அவர் பெரிதும் சிரமம் எடுட்திருகுக்கிறார்.

தமிழர்கள் மீண்டும் தேவைப் படுவார்களா?
மஹிந்த ராஜபக்சே தனது அதிகாரத்தை நாட்டில் தக்க வைக்க மேற்குலகிறகு எதிரான சக்திகளுடன இணைய விரும்புகிறார். மேற்குலகிற்கு எதிராக அவர் நிற்பது அவருக்கு சிங்களமக்கள் மத்தியில் ஒரு வீர மிக்க தலைவராக உருவாககும் என்று அவர் நம்புகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு காரணி. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் இரசியா சென்றது கவனிக்கத் தக்கது. அவர் அங்கு இருக்கும் போதுதான் சரத் பொன்சேக்கா கைது செய்யப் பட்டார். அவர் அங்கு ஏதாவது உறுதி மொழியை வாங்கிக் கொண்டுதான் துணிந்து சரத் பொன்சேக்காவைக் கைது செய்யும் காரியத்தில் இறங்கினாரா?
சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் காய் நகர்த்தல்களும் தனது ஆட்சி அதிகாரத்தை இலங்கையில் நிலை நிறுத்த மஹிந்த ராஜபக்சே மேற்குலகின் சொற் கேளாமல் நடப்பதும் அவர் சீன இரசிய நாடுகளுடன் உறவை வளர்ப்பதும் மஹிந்தவிற்கு எதிரான சிங்கள சக்திகள் வலுவிழந்து நிற்பதும் மேற்குலகைத் தமிழர்பக்கம் பார்வையைத் திருப்ப வைக்குமா?

3 comments:

ஸ்டாலின் குரு said...

http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html


http://stalinguru.blogspot.com/2010/02/2.html


இதை கொஞ்சம் பாருங்கள் நண்பா

Anonymous said...

நல்ல கட்டுரை

Anonymous said...

kudumpa nalanukaka...........
nala vati

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...