

நேற்றைய தினம் -11ம் திகதி - பிரித்தானிப் பாராளமன்றத்தின் முன் கூடி நாலு பெருந்தெருக்களை முடக்கி அங்குள்ள தமிழர்கள் இலங்கையில் 3200ற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டதற்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர்.
.
மூன்று காவல் வலயம்
ஒரு மாதத்திற்கு மேல் தமிழர்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் இரவு பகலாக தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவர்களைச் சுற்ற மூன்று வலயமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதல் வலயம் ஆயுதம் தரிக்காத நகரக் காவல் துறையினர். இரண்டாவது வலயம் குண்டாந்தடி போன்ற சிறு ஆயுதங்கள் தாங்கிய கலகம் அடக்கும் காவல் துறையினர். இவர்கள் ஆர்ப்பாட்டக் காரர்களிலிருந்து தொலைவில் நிற்கின்றனர். மூன்றாம் வலயம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு. இவர்கள் செந்நிற வாகனங்களுக்குள் இருப்பார்கள் இவர்கள் என்ன ஆயுதம் வைத்திருப்பார்கள் என்று காண்பது கடினம். இத்தனை காவல் வலயங்களுக்கு மத்தியிலும் ஒருமாதத்திற்கு மேல் தொடர் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர் தமிழர்கள்.
,
நேற்று தமிழர்கள் 3200 தமிழர்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து கொதித்து எழுந்து பாராளமன்றத்தின் முன் உள்ள நான்கு தெருக்களில் மறியல் செய்தனர். காலை 11-30 இற்கு இது ஆரம்பமானது. பலத்த வாகன நெரிசல் இலண்டன் நகர் முழுக்க ஏற்பட்டது. பாராளமன்றத்திற்கான பிரதான வாசல் மூடப் பட்டது. காவல் துறையினர் முதலில் பேச்சு வார்தை மூலம் தீர்க்க முற்பட்டனர். தாம் 3 நாள்கள் தொடர்ந்து மறியல் செய்யப் போவதாக தமிழர்கள் அறிவித்தனர்.
புதிய உத்தியைக் கையாண்ட காவல் துறையினர்
புதிய உத்தியைக் கையாண்ட காவல் துறையினர்
இப்படிப்பட்ட மறியல்களை கண்ணீர்ப்புகை அல்லது தண்ணிர்த் தாரை அடித்து கலைப்பது முடியாவிட்டால் குதிரைகளில் வந்து தாக்கிக் விரட்டுவது போன்றவற்றை காவல் துறையினர் செய்வது வழக்கம். இதில் மரணங்களும் நிகழ்வதுண்டு. இது இளையோரை மட்டும் கொண்ட கூட்டங்களில் செய்யலாம். ஆனால் தமிழர்கள் மத்தியில் முதியோரும் கைக்குழந்தைகளும் நிறைந்து காணப்பட்டனர். பலர் மரணமடைவதையும் பத்திரிகைகளின் கண்டனங்கள் அரசியல் வாதிகளின் அறிக்ககைள் ஆகியவற்றைத் தவிர்க்க காவல் துறையினர் புது உத்தியைக் கையாண்டனர். பெருமளவில் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டு உள் நுழைந்து ஒருவர் அல்லது இருவரை சுற்றி வளைத்து இரும்புக் கம்பிகளால் இடுப்புக்குக் கீழ்த் தாக்கியும் காலால் உதைத்தும் கைது செய்தனர். இதைப் பத்திரிகையாளர்களால் படம் பிடிக்க முடியவில்லை. ஒரு வயதும் நிறையாத குழந்தையுடன் நின்ற ஒரு 19 வயதுத் தாய் தன்னை நான்கு காவல் துறையினர் சூழ்ந்து நின்று தாக்கியதாகவும் குழந்தையை இழுத்துப் பறித்ததாகவும் கூறினார். இப்படியான தாக்குதல் மூலம் மூன்று வீதிகளிலிருந்து தமிழரக்ளை அப்புறப் படுத்தினர். தமிழர்களின் ஆத்திரத்தை தணிக்கு முகமாக அவர்களை ஒரு வீதியில் அமர்ந்து மறியல் செய்ய அனுமதித்தனர். பின்னர் அவர்களைச் சுற்றி வளைத்து நின்று வேறு தமிழர்கள் உட்செல்லாதவாறு தடுத்து வருகின்றனர். உள் நிற்பவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். உள்நிற்பவர்கள் சாப்பிட நீர் அருந்த இயற்கைக் கடன்கள் செய்ய எப்படியும் வெளியே வந்துதானே ஆகவேண்டும். இப்படி அவர்களின் தொகையைக் குறைத்து விட்டு பின்னர் அப்புறப் படுத்தும் திட்டமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment