Sunday 8 December 2013

அணுக்குண்டுகளை எடுத்துச் செல்லக் கூடிய அமெரிக்காவின் புதிய ஆளில்லாப் போர் விமானம்

பின் லாடனைக் கொலை செய்த போது பாவிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானம் இப்போது மேலும் மேம்படுத்தப்பட்டு ஒரு புதிய ரக விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. Unmanned Aerial System (UAS) என்றும் Drone என்றும் அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் அமெரிக்கா இன்னும் ஒரு படியைத் தாண்டியுள்ளது. புதிய ஆளில்லாப் போர்விமானத்திற்கு RQ-180 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உளவு பார்த்தல், கண்காணித்தல், வேவுபார்த்தல் {intelligence, surveillance and reconnaissance (ISR)} ஆகியவற்றி ஈடுபடுத்தக் கூடிய புதிய RQ-180ஆளில்லாப் போர்விமானங்கள் படைத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் வான் பரப்பில் கூட அவர்களின் விமான எதிர்ப்பு முறைமை, கதுவி(ரடார்) முறைமை ஆகியவறிற்கு புலப்படாத வகையில் பறக்கக் கூடியவை. இவற்றில் active, electronically scanned array (AESA) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் வேவு பார்க்கச் சென்று ஈரானியர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட RQ-170ஆளில்லாப் போர்விமானத்திலும் பார்க்க பல மடங்கு திறனுடையது புதிய RQ-180. அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயின் பணிக்காக ஈரானுக்கு வேவு பார்க்கச் சென்ற  ஆளில்லாப் போர்விமானம் ஒன்று காணாமற் போனதாக 2011 டிசம்பர் மாத ஆரம்பத்தில் அறிவித்தது. டிசெம்பர் 4-ம் திகதி ஈரான் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானமொன்றை தனது இணையவெளிப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. இந்த முரண்பட்ட செய்தியில் அடிபட்டது அமெரிக்காவிடமுள்ள  வேவுபார்க்கும் ஆளில்லா விமானமான RQ-170 வகையைச் சேர்ந்தது. இது அமெரிக்காவிடம் உள்ள மிக உயர்தர உணர்திறனுடைய கருவிகளைக் கொண்டது. இந்த சம்பவம் இரு அம்சங்களை உணர்த்தியது: 1. எதிர்காலப் போர் முனைகளில் ஆளில்லாப் போர்விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. 2. எதிர்காலப் போர் இணையவெளியிலும் நடக்க விருக்கிறது.

இரு வகையான ஆளில்லாப் போர் விமானங்கள்
முதலில் வேவு பார்க்க மட்டும் பாவிக்கப்பட்டு வந்த ஆளில்லப் போர் விமானங்கள் இப்போது ஏவுகணைகள் வீசித் தாக்குவதற்கும் பயன் படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும்  ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன.

RQ-180 ஆளில்லாப் போர்விமானம் புலப்படாமை (stealth)  காற்றியக்த் திறன் (aerodynamic efficiency) ஆகியவற்றில் மிகச்சிறந்து விளங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. மற்ற ஆளில்லாப் போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இவை அதிக உயரம் அதிக தூரம் அதிக நேரம் பற்ப்பில் ஈடுபடக் கூடியவையாகும். 15 தொன் எடையுள்ள்ள தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடியவை. இதற்கு முந்திய ஆளில்லா விமானங்கள் ஆகக் கூடியது ஆறு மணித்தியாலங்கள் மட்டுமே பறக்கக் கூடியவை. 1200 வான் மைல்கள் தூரம் பறக்கக் கூடியவை. RQ-180 தாக்குதல் திறன் பற்றிய தகவல்கள் வெளிவிடப்படவில்லை. சில தகவல்கள் இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக்கூடியவை எனத் தெரிவிக்கின்றன. இவை electronic attack missions இலும் ஈடுபடக் கூடியவை எனப்படுகின்றது. எதிரி நாட்டில் இலத்திரனியல் கருவிகளை இவை செயலிழக்கச் செய்யக் கூடியவை. இதனால் எதிரி நாட்டின் கதுவிகள், வான் எதிர்ப்பு முறைமைகள் செயலிழக்கச் செய்யப்படும்.

அமெரிக்காவின் இரகசிய விமானப்படைத் தளமான Area - 51இல் RQ-180 ஆளில்லா விமானம் இப்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இவை 2015-ம் ஆண்டில் இருந்து பாவனைக்கு வரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...