Friday 6 December 2013

ப சிதம்பரத்தின் ஒப்பரேஸன் காதில பூ

இலங்கை மீதான இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாத நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்வு 1987இல் ஒப்பரேஸன் பூமாலை என்னும் பெயரில் அரங்கேறியது. பின்னர் அது இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதத்துடன் கைகோத்துக் கொண்டது. தொடர்ந்து இலங்கை அரசின் இனக்கொலை உச்சமடைந்தது.

இலங்கை கொடுத்தாலும் இந்தியா விடாது
2002-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை தமிழர்களுக்கு கொடுக்க முன்வந்த போது அது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமாக இருந்த படியால் இந்தியப் பேரினவாதிகள் வெகுண்டெழுந்தனர். அப்போதைய இலங்கைத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் விரைந்து செயற்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய விரோத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்திய முயற்ச்சியால் கூட்டணிகளாக இணைக்கப்பட்டன. மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சராக்கப்பட்டார். பின்னர் ரணில்-பிரபா உடன்படிக்கையை மீறி தமிழர்கள் மீது மோசமான இனவழிப்புப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புத் தொடர்ந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கு பற்றி தமிழ்நாட்டில் வாழ் தமிழர்களுக்கு சரியான தகவல் 2011-ம் ஆண்டு வரை முழுமையாகப் போய்ச் சேரவில்லை.  முத்துக்குமாரனின் தற்கொடை உட்படப் பலரின் தற்கொடைகள் திராவிடக் கட்சிகளின் ஊடகங்கள் உட்படப் பல ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்ததுடன் வயிற்று வலியால் செத்தான், காதலில் தோல்வியால் செத்தாள் போன்ற போலிச் செய்திகளையும் உருவாக்கி மக்களைக் குழப்பின.  2011இல் நடந்த தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலின் போதுதான் தமிழ் ஈழத்தில் நடந்த இனக்கொலை தொடர்பான உண்மைகள் ஓரளவிற்கு தமிழ்நாட்டு மக்களைப் போய்ச் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் மேலும் பல பரப்புரைகளைச் செய்தன. 2011-ம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.

2014-ம் ஆண்டு மே மாதம் அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவின் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடக்க விருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற மாட்டாது என்பதை 2011இல் நடந்த சட்ட சபைத் தேர்தல் கட்டியம் கூறிவிட்டது. காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. த்மிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி ஒரு தீண்டத் தகாத கட்சி ஆகிவிட்டது என்றனர் சில அரசியல் விமர்சகர்கள். காங்கிரசின் தலைமைப் பீடத்தைப் பொறுத்த வரை தமிழ்நாடு தவிர்ந்த மற்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அது காங்கிரசுக் கட்சியின் வெற்றியே. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேவைப்படும் நேரத்தில் ஒரு சில அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து அவற்றை தம்முடன் இணைத்து ஒரு கூட்டணி அரசை அமைத்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரசு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய அவர்கள் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதிலும் ப சிதம்பரம் காங்கிரசுக் கட்சியில் ஓர் உயர் மட்டத் தலைவராகும். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன் மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த படியான தலைவர் ப சிதம்பரம். அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மட்டுமே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்பேன் என ராகுல் காந்தி உறுதிபடக் கூறிவிட்டார். இந்தப் பாராளமன்றத்துடன் மன் மோஹன் சிங் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகின்றார். இதனால் ப சிதம்பரம் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு அவர் தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும். இதற்காக அவர் புதுச்சேரித் தொகுதியில் போட்டி போட முயற்ச்சி செய்தார். அதற்கு அந்தப் பிராந்திய காங்கிரசுக் கட்சியினரிடம் வரவேற்பில்லை. ஜி. கே வாசன் அணியினர் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் அதிக செல்வாக்குப் பெறுவதையும் சிதம்பரம் தடுக்க வேண்டும். காங்கிரசும் திமுகவும் எதிர் அணிகளில் தேர்தலில் போட்டியிட்டால் சிதம்பரத்தின் செல்வாக்குக் குறையும். அந்த அளவிற்கு கருணாநிதி குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு நெருக்கம் உண்டு.

மேற்படி சூழலில்தான் சிதம்பரம் ஒரு இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில் அவர் தமிழர்களின் காதில் பூச்சுற்றினார்.

பூச்சுற்று - 1: இலங்கையில் நடந்தது இனக்கொலை
. 2009-ம் ஆண்டு இலங்கையின் இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறி அதைக் கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டு வந்தபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றிய போது சிதம்பரம் இந்திய அமைச்சரவையில் இருந்தார். இந்தியப் பாராளமன்றத்தில் பொதுவுடமைவாதி ராஜா இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என ஆற்றிய உரையை சிதம்பரத்தின் காங்கிரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்து அதை அவைக்குறிப்பில் (ஹன்சார்ட்) இருந்து நீக்கினர். சிதம்பரத்திற்கு திராணியிருந்தால் இதைப் இந்தியப் பாராளமன்றத்தில் அல்லது ஏதாவது ஒரு வட இந்தியத் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்தது ஓர் இனக்கொலை எனச் சொல்லட்டும். மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இலங்கையில் நடந்த இனக் கொலைக்கு ப சிதம்பரமும் உடந்தை என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். இது பற்றி தன்னுடன் விவாதத்திற்கு வரும்படி சிதம்பரத்திற்கு சவாலும் விடுத்துள்ளார். சவாலைச் சிதம்பரம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையில் இலன்க்கை விவகாரத்தை கையாண்ட சிவ் சங்க்ர மேனனை சிதம்பரம் பதவி நீக்கம் செய்வாரா?

பூச்சுற்று - 2: சிதம்பரத்தின் இராசதந்திர நடவடிக்கைகளால் தான் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக நடந்து கொண்டார்.
இதுதான் மொட்டந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சுப் போடுவது. ஆனால் சிததமபரத்தின் அமைச்சரவை சகாவான சல்மான் குர்ஷித் இலங்கையில் போரின் போது ந்டந்தவற்றிற்கு எந்த ஒரு பன்னாட்டு விசாரணையும் தேவையில்லை என்கிறார். அவர்களது கமலேஷ் ஷர்மா இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலி போல் செயற்படுகின்றார்.

பூச்சுற்று - 3 இந்தியத் தலைமை அமைச்சர் யாழ்ப்பாணம் போய் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பார்
. உங்கள் தலைமை அமைச்சரே ஒரு தலையாட்டிப் பொம்மை என உலகத்தால் விமர்சிக்கப்படும் ஒருவர். அவர் யாழ் போவதால் எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை ஐயா.

பூச்சுற்று - 4 : தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்வரை காங்கிரசு ஓயாது
. 1987இல் தமிழர்களை நீங்கள் உங்கள் படைக்கலன்களை ஒப்படையுங்கள் நாம் இனி உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றது காங்கிரசின் ஆட்சி. அதன் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டபோது காங்கிரசு தூங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை முன்னின்று அந்தக் கொலைகளுக்கு உதவியது. உங்கள் 13வது திருத்தம் 26 ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்படவில்லை. 26 ஆண்டுகாலம் ஓய்வெடுத்தீர்களா கோமாவில் இருந்தீர்களா?

பூச்சுற்று - 5: மனித உரிமை மீறியவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும்.
முதலில் இலங்கைக்கு அமைதிப் படை என்ற போர்வையில் சென்று அங்கு போர்க் குற்றம் புரிந்தவர்களை நீங்கள் முதலில் தண்டியுங்கள்.

பூச்சுற்று - 6 காங்கிரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். காங்கிரசு ஆட்சியில் இருந்த போது அதன் உதவியுடன் தான் இலங்கையில் மூன்று இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் போரைத்தான் நாம் செய்தோம் என்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச. இந்தியாவில் தென் மண்டலத்தின் உள்ள பார்ப்பன, மலையாளிக் கும்பல்களும் உங்களது கட்சியினரும் தான் தமிழர்களின் பரம் விரோதிகளாக இருந்தார்கள் இப்போது அவர்களுடன் இல்ங்கையில் முத்லீடு செய்த இந்தியப் பெரும் பணக்காரர்களும் இணைந்து கொண்டார்கள். ஆகையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தியாதான் தமிழர்களின் முதலாம் எதிரி என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

பூச்சுற்று - 7 இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது. சிதம்பரம் இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது அதை வேறு நாடுகள் தடுத்தது விட்ட்ன என்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது தலைகீழானது. திருமுருகன் காந்தி இதையும் தன்னால் நிரூபிக்க முடியும் என்கிறார்.

முதல் கக்கூசு கட்டிக் கொடு
சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தமிழர் தரப்பில் இருந்து வந்ததிலும் பார்க்க சிங்களத்தரப்பில் இருந்து அதிகம் கிள்ம்பியுள்ளது. சிங்கள அமைச்சர் ஒருவர் சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து நீ முதலில் உனது நாட்டு மக்களுக்குப் போதிய அளவு கழிப்பறைகளைக் கட்டிக் கொடு பிறகு இலங்கையைப் பற்றிப் பேசு என முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிட்டார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுபற்றி மௌனமாக இருக்கிறது. பாவம் சிதம்பரம்.

சிதம்பரத்தின் நடவடிக்கை வெறும் தேர்தல் தந்திரம் மட்டுமல்ல.
சிதம்பரம் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தது தனியே அவரது தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டதல்ல. தமிழர்களை தலையெடுக்க விடாமல் செய்ய அவரது எசமானர்கள் இட்ட உத்தரவின் படி சிதம்பரம் செயற்படுகின்றார். கனடா, பிரித்தானியா, மொரிஸியஸ் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தமது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டன. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையும் முன்பு போல் இல்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒரு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதற்குப் பல நாடுகள் ஆதரவு அளிக்கும். ஒஸ்ரேலியா நியுசிலாந்து  போன்ற நாடுகளும் இதில் அடங்கும். சீனா தான் உலக அரங்கில் மனித உரிமை மீறும் நாடுகளின் காவலன் என்ற் பிம்பத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. தான் உலகின் முதன்மை நாடாக மாறுவதற்கு இது அவசியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஆதாலால் இலங்கையை எல்லாக் கட்டதிலும் சீனா பாதுகாக்க மாட்டாது. இவற்றால் பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிரான ஒரு கருத்துப் பரவலாகிக் கொண்டு போகின்றது. பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையைத் தண்டிக்காவிட்டால் அதன் வழியை மற்ற ஆட்சியாளர்கள் பின்பற்றுவார்கள் என நினைக்கின்றன. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இரு விடயங்களால் கலங்கிப் போய் உள்ளனர். ஒன்று இலங்கை விவகாரம் இந்தியாவின் கையை மீறிப் போய் விடப்போகிறது. இரண்டாவது இலங்கையில் நடந்த  போர் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை வந்தால் அதில் இந்தியாவின் பங்களிப்பு அம்பலமாகும். விஜய் நம்பியார், சிவ் சங்கர மேனன்,  எம் கே நாராயணன் ஆகியோரின் பங்கு வெளிவரும். இதை தவிர்ப்பதற்கு சிதம்பரத்தினூடாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முயல்கின்றனர். இது நம்ம ஏரியா நாம் எமது ராஜிவ்-ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கிறோம் அதை எங்களிடம் விட்டு விடுங்கள் என உலக நாடுகளிடம் இந்தியா சொல்லப் போகிறது. ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள எல்லா நாடுகளிலும் இந்திய வெளியுறவுக் கொள்கை பிழையாகிப்போனதை எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளன.  

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...