Friday 13 September 2013

இரு பயங்கரவாத நிகழ்வுகளின் நினைவு கூரல்



அமெரிக்கா தனது நியோர்க் நகரின் இரட்டைக் கோபுரத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளை செப்டம்பர் 11-ம் திகதி கொண்டாடியதை உலகெங்கும் பலர் அறிந்திருந்தனர். அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனச் சொல்லி உலக ஒழுங்கையே தலைகீழாக மாற்றி உலகெங்கும் உள்ள விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாத இயங்கங்களாக முத்திரை குத்தி ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல அப்பாவிகளை கொன்று குவித்தது அமெரிக்கா.

இன்றும் பயங்கரவாத ஒழிப்பு என்னும் போர்வையில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு தென் அமெரிக்க நாடான சிலி அமெரிக்காவின் அரச பயங்கரவாதத்தால் நிகழ்ந்த இரத்தக் களரியின் நாற்பதாம் ஆண்டு நினைவை யாரும் அறியாமல் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தது. அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமைதியாக நினைவு கூரப்பட்டது. அமெரிக்கா சிலியில் செய்த பயங்கரவாத நடவடிக்கையை நினைவு கூர்ந்தோர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசித் தாக்குதல்கள் செய்யப்பட்டன.

ஒரு மாக்ஸிச வாதியான சல்வடோர் அலண்டே மக்களாட்சி முறைமைப்படி நடந்த தேர்தலின் மூலம் வெற்றி பெற்று சிலி நாட்டின் அதிபரானார். அவர் நாட்டை சோஸலிசப் பாதையில் இட்டுச் செல்லும் முகமாக அமெரிக்காவிற்கு சொந்தமான செப்பு உலோக நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். சிலியின் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்தனர். சிலியின் விவசாய விளைச்சல்களை அமெரிக்க உளவுதுறையான சிஐஏ தனது சதிமூலம் அழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை சிஐஏ திட்டமிட்டுச் சீரழித்தது. இதைத் தொடர்ந்து சிலியின் படைத்துறையினர் சதிப் புரட்சி மூலம் ஒகஸ்டோ பினோசேயின் தலைமையில் அலெண்டேயின் பணிமனையை முற்றுகையிட்டது. பலர் பலியானார்கள். அலெண்டே தற்கொலை செய்து கொண்டார். ஆட்சியைக் கைப்பற்றிய கொடியவனான ஒகஸ்டோ பினோசே 17 ஆண்டுகள் கொடிய அடக்குமுறையுடன் ஆட்சி புரிந்தான். சிலியின் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தி அமெரிக்க சுரண்டலுக்கு மீண்டும் வழி வகுத்தான்.   ஸ்பானிய நீதிமன்றம் 1998இல் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி ஒகஸ்டோ பினோசேயைக் கைது செய்ய உத்தரவிட்டது. இலண்டனில் கைது செய்யப்பட்ட பினோசே பின்னர் சிலிக்கு நாடுகடத்தப்பட்டு முதலாளித்துவ நாடுகளின் சதியால் தண்டனையில் இருந்து தப்பிக் கொண்டான்.  1973-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகது உயிர் நீத்த சல்வடோர் அலெண்டேயின் 40வது நினைவு நாளைக் கொண்டாடியதை பல ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...