Saturday 10 November 2012

விகடன் போர்க்குற்றச் சாட்சிகளை பன்னாட்டு அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நேற்று விடுதலைப் போராளி இன்னாள் பாலியல் தொழிலாளி என ஒரு கட்டுரையை ஆனந்த விகடன் பதிவுசெய்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டது. குறிப்பிட்ட போராளி ஒரு கற்பனைப்பாத்திரம் என்று கூடப் பலர் அபிப்பிராயப்படுகின்றனர். விகடன் இந்திய உளவுத் துறையில் பரப்புரையை முன்னெடுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விகடன் ஆசிரியர் களத்தில் இறங்கி தமது சஞ்சிகைகள் ஈழவிடுதலைக்கு ஆதரவானது என்று வாதாடி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.


விகடன் பற்றிய முன்னைய பதிவுகளை இங்கு காணலாம்:
1. விகடன் கக்கும் நஞ்சு
2. சரத் பொன்சேக்கா விகடனுக்குப் பேட்டியளித்தது ஏன்?
3. நிருபாமா ராவே இலங்கைப் போர்இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா?
4. விகடனின் விவரம் கெட்ட தனமா? விஷமத்தனமா?
5. விகடனின் கபடம் – பிரபாகரனின் மரணம்.

விகடன் ஆசிரியர் தனது கட்டுரையில் இந்தப்படத்தையும் இணைத்துள்ளார்:
 இதில் ஈழப் போராளிப் பெண் வித்தியா ராணி ஈழத்தமிழில் சொல்லுவது போல எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒரு முக்கியமான சொல்  "படிச்சுப்பிட்டு" என்பதாகும். படிச்சுப்பிட்டு என்று ஈழத் தமிழர்கள் சொல்லுவது இல்லை. "படிச்சு போட்டு" என்றுதான் சொல்வார்கள். இது விகடனின் உண்மைத் தன்மையில் ஐயப்பட்டை ஏற்படுத்துகிறது. இதை ஒரு அச்சுப் பிழையாக எடுத்துக் கொள்வோம்.

விகடன் ஆசிரியன் தமது சஞ்சிகைகள் நடுநிலையானது என்கிறார்:

  • 'ஈழத்தைப் பார்க்காதே, ஈழம்பற்றிப் பேசாதே, ஈழம்பற்றி எழுதாதே’ என்று அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் காலத்திலேகூட, துயர் மிகுந்த ஈழத்  தமிழ் மக்களின் கண்ணீரை உலகத் தமிழர்களின் வாசல்களில் கொண்டுவந்து கொட்டியது விகடன் குழுமம்தான்.

இந்த அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனத்தை ஏற்படுத்தியது கருணாநிதியின் அரசா அல்லது மைய அரசான காங்கிரசு அரசா என்பதை விகடன் பகிரங்கப்படுத்த வேண்டும். தமிழர்களின் பெரிய பிரச்சனை தமது ஆதரவாளர்கள் யார் எதிரிகள் யார் என அறிய முடியாமல் இருப்பதே.

விகடன்மீது ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டைச் சரிசெய்யவும் விகடனுக்கு நல்ல விளம்பரம் ஏற்படுத்திக் கொடுத்த வித்தியா ராணிக்கு ஒரு நல்ல விடிவு கிடைக்கவும் விகடன் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. குறிப்பிட்ட வித்தியா ராணி என விகடன் பெயரிட்ட முன்னாள் பெண் போராளியின் பெயரையும் இருப்பிடத்தையும் பன்னாட்டு மன்னிப்புச் சபையிடமும்( Amnesty International) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்திடமும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமோசனம் செய்ய வழி வகுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு ஒரு நல்ல சாட்சி.  பாதிக்கப்பட்ட பலருக்கு நீதிகிடைக்க இது உதவும். பன்னாட்டு மன்னிப்புச் சபையிடமும்( Amnesty International) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்திடமும் வித்தியா ராணி தொடர்பான விபரங்கள் சமர்ப்பித்தால் அவர்கள் வித்தியா ராணியை சாட்சியாக அவரது பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். விகடனே தயவு செய்து ஐநா பொதுச் செயலாளர் பணிமனைக்கு இது தெரியக் கூடாது. அங்கு இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணிபுரிந்த சதீஷ் நம்பியாரின் உடன் பிறப்பு விஜய் நம்பியார் உயர்பதவியில் இருக்கிறார். இப்படிச் செய்வதால் வித்தியா ராணிபற்றி நீங்கள் எழுதியது உண்மைதான் என்று நிரூபிக்கலாம்.

விகடன் வித்தியா ராணி எனப்படும் முன்னாள் விடுதலைப் போராளியின் விபரங்களை பன்னாட்டு மகளிர் உரிமை அமைப்புக்களிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் வித்தியா ராணி எனப்படுபவருக்கு உரியன செய்வார்கள். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன் கொல்லும் நாட்டின் மகளிர் உரிமை அமைப்புக்களுக்கோ இரண்டாவது வரதட்சணைக்காக மருமகளை உயிருடன் கொழுத்தும் நாட்டு மகளின் உரிமை அமைப்பினருக்கோ வித்தியா ராணி எனப்படுபவருக்கு எந்த வித நன்மையும் கிடைக்காது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

விகடனின் கட்டுரைக்குப் பின்னூட்டமிட்டவர்கள் பாதிக்கப்பட்ட வித்தியா ராணிக்கு நிவாரணம் கிடைக்க ஏதாவது செய்யும் படி கேட்டிருந்தார்கள். இதுவரை அப்படி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.



2 comments:

Anonymous said...

சிந்திக்க வேண்டிய பதிவு. பாதிக்கப்பட்டவர்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியிருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தற்போது கூக்குரல் இடுபவர்கள் உதவியிருக்கலாம். பதிவில் உள்ளது போல் மனித உரிமை அமைப்புகளுக்கு விகடன் தெரிவித்து உதவினால் அதன் நம்பகத் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

Anonymous said...

சிந்திக்க வேண்டிய பதிவு. பாதிக்கப்பட்டவர்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியிருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தற்போது கூக்குரல் இடுபவர்கள் உதவியிருக்கலாம். பதிவில் உள்ளது போல் மனித உரிமை அமைப்புகளுக்கு விகடன் தெரிவித்து உதவினால் அதன் நம்பகத் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...