Thursday 13 September 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கற்றுக் கொள்ளாத பாடங்கள்


இலங்கைப் பாராளமன்றத்தினுள் தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்தத் தீர்மானமும் எடுக்கப்பட மாட்டது என்பதில் 1956இல் இருந்தே தமிழர்களுக்கு நல்ல பட்டறிவு இருக்கிறது. ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்த அரசியல் அமைப்புச் யாப்புக்கள் தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்தன. ஆனால் இந்த உணமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்க நிர்ப்பந்தம் நன்மை தராது
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்த்தன ஒரு பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அதை ஏற்றுக் கொண்டது. மாவட்ட சபைத் தேர்தல் நட்ந்த போது ஒரு இனக்கலவரம் நடந்தது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.  பின்னர் தமிழர்கள் மாவட்ட சபை ஒன்றுக்கும் உதவாதது என்பதை உணர்ந்து கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழர் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. சிங்கள தமிழ் விரோதம் தீவிர மடைந்தது. அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு இலங்கையில் சிங்கள தமிழ் குரோதத்தை மோசமாக்கியதுடன். தமிழர்களின் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை தீவிரமடையச் செய்தது. இதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்க நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.


சுனாமியிலேயே சுவிம்மிங் போறவங்க சுவிம்மிங் பூலில் சும்மா இருப்பாங்களா?
கடைசியாக நடந்த குடியரசுத் தலைவர் தேர்ந்தலில் தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் என்ற வதந்திகளின் உண்மைத் தன்மை த. தே. கூட்டமைப்பு அறியாததா? உலகக் கவனம் திரும்பி இருந்த அந்தத் தேர்தலில் என்ன நடந்தது என்று கூட்டமைப்பு அறியாதா? அதிலேயே அப்படி என்றால் மாகாணசபைத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கூட்டமைப்பு அறியாதா? 1981இல் மாவட்ட சபைத் தேர்தல் நடந்த போது கூட்டுறவுச் சங்கங்களில் வேலை செய்யும் சிங்களக் காடையர்கள் தேர்தல் அதிகாரிகளாகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுக்கள் திணிக்கப்பட்டன. அரச மந்திரிகள் இருந்த சுபாஸ் விடுதியில் இருந்து ஒரு வாக்குப்  பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை இலங்கையில் நீதியான தேர்தல் ஒரு போதும் நடந்தது இல்லை. இதைக் கற்றுக் கொள்ளாத த. தே. கூட்டமைப்பு தேர்தலில் எந்த நிபந்தனையும் இன்றிப் போட்டியிட்டது. தன்னை நிர்ப்பந்தித்தவர்களிடம் நீதியான தேர்தல் ஒன்றிற்கு உத்தரவாதம் தாருங்கள் என்று விடாப்பிடியாக நிற்கவில்லை. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் வேட்பாளர்கள் மிரட்டி விலகச் செய்யப்பட்டனர். வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர். வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். வாக்காளர்கள் தாக்கப்பட்டனர். வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டனர். வாக்குச் சீட்டுகளில் முறை கேடு நடந்தது. வாக்குக்க்கள் எண்ணப்படும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாக்கு நிலைமை மாற்றப்பட்டு முடிவு மாற்றப்பட்டது. இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையாவும் நடக்கும் என்று த. தே. கூட்டமைப்பிற்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் குற்றச் செயல்களை நவீன காணொளிக் கருவிகள் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்திருக்க வேண்டும். தேர்தலில் நடந்த முறை கேடுகள் பன்னாட்டு மட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும் அரிய சந்தர்ப்பத்தை த. தே. கூட்டமைப்புத் தவற விட்டு விட்டது. 

யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்தப் போனீர்கள்?

மாகாண சபைக்கு எந்த வித அதிகாரமும் இல்லை என அன்று சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திரா அன்று சொன்னார். நேற்று யாழ் பல்கலைக்கழகத்தில் அதன் விரிவுரையாளார் குமரகுருபரன் மாகாணசபைகளுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அதிகாரம் மாகாண ஆளுநர் கைகளிலேயே இருக்கிறது என்றும் த. தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் எடுத்து விளக்கினார். த. தே. கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டது. த. தே. கூட்டமைப்பு வெற்றி பெற்று நடாத்திக் கொண்டிருக்கும் சிறிய பிரதேச சபைகளையே ஒழுங்காக நடாத்த விடாமல் அரசு கெடு பிடி செய்கிறது என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி இருக்க உங்களை மாகாண சபையை மட்டும் நடாத்த விட்டு வைப்பார்களா? உங்களிற்கு அழுத்தம் கொடுத்த இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் போதிய அதிகாரம் மிக்க மாகாண சபையை உருவாக்கும் படி நீங்கள் ஏன் கேட்கவில்லை. சுருங்கச் சொன்னால் மாகாண சபை பேஸ்மென்ரும் வீக் பில்டிங்கும் வீக்! அதிகாரமில்லாத மாகாணசபைத் தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?

கட்டத்துரைகளின் கைப்பிள்ளை ஆகாதீர்கள்
அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர்கள் மேல் அக்கறை கொள்வது மஹிந்த ராஜபக்சவை தமது வழிக்குக் கொண்டுவரும் வரை மட்டுமே. இலங்கையில் அமைதியை உறுதி செய்வதும், மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று சொன்னார் சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக்இன்ரைர். அவர் ஏன் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லவில்லை? தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை?
அமெரிக்கா ஒரு போதும் சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடிய எந்த ஒரு வார்த்தையையும் கூறாது என்பது அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைக்களைப் பார்த்தால் தெரியும். அதிகாரப்பரவலாக்கம் என்ற பதம் சிங்களவர்களுக்குப் பிடிக்காது என்பதால் அமெரிக்கா இப்போது நல்லிணக்கம் என்ற பதத்தை முன்வைக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தியா தமிழர்களின் நண்பன் போல் நடித்து ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி திருமலையிலும் சிலாபத்திலும் அமெரிக்கக் காலூன்றலைத் தடுத்தபின்னர் தமிழர்களின் எதிரியாக மாறியதில் இருந்து த. தே. கூட்டமைப்பு எதையும் கற்றுக் கொள்ளவில்லை!  நாளை மஹிந்த தனது சீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றினால் இந்தியாவோ அமெரிக்காவோ இலங்கையில் தேர்தல் நடந்து விட்டது. இனிப் பிரச்சனகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். வெளியில் இருந்து தீர்வு திணிக்கப்பட்டால் அது பிரச்சனையை வளர்க்கும் என்று சொல்வார்கள். அதனால் த. தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எது உகந்த தீர்வு என்பதைத் தீர்மானித்து  அதை பன்னாட்டு சமூகத்தின் முன்வைத்து அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் படி செய்ய வேண்டும்.

இணைந்த வடக்குக் கிழக்கே தீர்வாகும்
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் "தமிழர்களுக்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த அலகில் போதிய அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய ஒரு தீர்வால் மட்டுமே நன்மை கிட்டும்" என்பதாகும். இதைக் கற்றுக் கொள்வீர்களா?


பொங்கல் பானை உடைத்த இந்தியா.....

ஐம்பதிற்கு ஐம்பது என்னும் அரிசியிட்டு

எம்பதி ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையில்

தன்மானத்தோடு சமத்துவப்  பொங்கலொன்று
சமைக்க முயன்றோம் அன்று நாம்
சோல்பரியாரின் தூர நோக்கின்மையால்
அரிசியே  மண்ணில் சிந்தியது

காந்தீய அரிசியெடுத்து கடமைப் பாலெடுத்து
தமிழுணர்வுப் பானை தேர்ந்தெடுத்து
இணைப்பாட்சி என்னும்  சமஷ்டிப்
பொங்கலிட முயன்றோம் அன்று நாம்
காடையரை ஏவிவிட்டுப் கொடுமை செய்து

பொங்கலைச் சிதைத்தது கயவர் ஆட்சி

ஐந்து வீடாவது கொடு என்ற பாண்டவர்போல்
மாவட்ட சபை என்னும் மட்டமான அரிசியிலே
அரை வேக்காட்டுப் பொங்கலொன்று சமைத்தோம்
நூல் நிலையம் கொழுத்தி நோகடித்தனர்  எம்மை


மிரட்டல் பானையிலே வஞ்சகப் பாலூற்றி
இந்திய நட்பென்னும் புழுத்துப் போன அரிசியிலே
பதின் மூன்றாம் திருத்தம் எனும்
பொங்கலை எம் வாயில் திணித்தனர்
தொண்டையில் இன்றும் சிக்கி நிற்கிறது நஞ்சாக


வீரத் தீமூட்டி தியாகப் பானை எடுத்து
தீரப் பால் வார்த்து உறுதி நெய்யூற்றி
தூய்மை அரிசியோடு வாய்மைத் தேனிட்டு
பொங்கிய  ஈழப் பொங்கல் இறக்கும் வேளையிலே
பன்னாட்டுச் சமூகமென்னும் பன்னாடைக் கூட்டமும் 

மானம் கெட்ட பாதக இந்தியாவும் 
பொங்கல்  பானை உடைத்துச் சென்றன

பட்டதுயரங்கள் நெஞ்சில் ஆறா ஆறா
இழந்த உயிர்கள் எண்ணில் அடங்கா
பட்டறிவுகளையாவது பயன்படுத்துவோம்
நாளை சந்ததிக்காவது நன்மை செய்வோம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...