Friday 6 January 2012

இலங்கையில் சீனா இந்தியாவிற்கு வைக்கும் அடுத்த ஆப்பு


2011 ஐ சிசில் நாட்டில் தனது தளம் அமைக்கப்படும் என்ற அதிரடியுடன் முடித்த சீனா 2012ஐ  இலங்கையில் இரண்டு அதிரடிகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒன்று இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்தமை. மற்றது சீனாவின் நிதி உதவியுடன் ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பமாகின்றது என செய்திகள் வெளிவந்தமை.

புதையல் வேட்டையா? இந்தியாவிற்குப் புதைகுழியா?
இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியிருக்கும் கப்பல்களுக்குள் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இருப்பதாகவும் அவற்றை இலங்கையும் சீனாவும் ஆளுக்கு அரைவாசியாகப் பங்கிட்டுக் கொள்ளும். இலங்கைக் கடலுக்க்குள் பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் கப்பல்கள் மூழ்கி இருக்கின்றன என்பது இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி. இலங்கைக் கடலுக்குள் சீனா உண்மையில் பழைய கப்பல்களைத் தேடத்தான் வருகிறதா? அண்மையில் ஒரு சீன கடற்படைக்கப்பல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வைத் தொடர்ந்தே சீனாவின் இந்த புதையல் வேட்டை அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீனா அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகத்தை அமைத்தைத் தொடர்ந்து முல்லைத் தீவில் ஒரு பெரிய மீன்பிடித் துறை முகத்தை அமைக்கவிருக்கிறது. இந்தியாவிற்கு மிக அண்மையில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையில் ஒரு பாதை அமைப்புப் பணியிலும் ஈடுபடவிருக்கிறது. சுண்ணாகத்தில் மின்பிறப்பாக்கி அமைக்க வந்த சீனர்கள் அங்கு பராமரிப்புப் பணிக்கு என்று சொல்லித் தங்கிவிட்டனர். இப்படி பல திட்டங்களுக்கு என வந்த சீனர்கள் ஒரு இலட்சம் பேர் இலங்கையில் இருக்கின்றனர். அநுராதபுரத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பாரிய வர்தக வலயத்தையும் சீனா அமைக்க விருக்கிறது 2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியது. இலங்கையில் சீனா செய்யப் போகும் கடல் ஆய்வு அப்பகுதியில் பயணிக்கக் கூடிய வகையில் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைக்கவும் ஒரு நீமூழ்கித் தளத்தை உருவாக்கவுமே என்று நாம் முடிவு செய்ய முடியும்.

தொ(ல்)லை நோக்குடன் தொலைத் தொடர்புக் கோபுரம்
இலங்கையில் சீனா அமைக்க விருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரம் தொடர்பான திட்டங்கள் யாவும் இதுவரை மறைத்து வைக்கப்பட்டு திடீரென்று இன்று வேலைகள் இன்று ஆரம்பமாகின்றது என்று அறிவித்தது ஏன்? இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்தின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு? 50 ஒளிபரப்புச் சேவைகள், 50 ஒலிபரப்புச் சேவைகள், 10 தொலைபேசிச் சேவைகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், உணவகம், பணிமனைகள், மாநாட்டு மண்டபங்கள், பொருட்காட்சி நிலையங்கள், ஆடம்பரத் தங்ககங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 350 மீட்டர் உயரமான கட்டிடத்தை சீனா 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இலங்கையில் அமைக்க விருக்கிறது. கோபுரத்தின் பெயர் தமரைக் கோபுரம். இக் கோபுரம் இந்தியாவிற்குச் சீனா இலங்கையில் வைக்கும் இன்னொரு ஆப்பு.

இலங்கையில் இந்திய தங்கி இருக்கிறதா அல்லது தயவை வேண்டி கை ஏந்துகிறதா?
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியா இலங்கையில் தங்கி இருக்கிறது என்றார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா. இச் செய்தி இலங்கை ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டதும் இலங்கையில் தெரிவிக்கப்படகருத்துக்கள் முக்கியமானவை:

  • இலங்கையின் சீனாவுடனான உறவையிட்டு இந்தியா கவலை கொண்டுள்ளது ஆனால் அது தான் பயப்படவில்லை என்று காட்டிக் கொள்கிறது. இந்தியாவின் மெதுவான நகர்த்தல்களால் சீனாவின் விரைவு நடவடிக்கைகளின் முன் தாக்குப் பிடிக்காமல் போனதால் இலங்கையில் சீனப் பிடி இறுகிவிட்டது.
  • இலங்கை இறுதியில் இந்தியாவை ஏமாற்றி விடும்
பாக்கிஸ்த்தானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல்கள் வலுக்க பாக்கிஸ்தான் படைத்துறைத் தளபதி சீனா சென்று விட்டார். பாக்கிஸ்தான் முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் நிலை வர இலங்கையில் சீனப் பிடி அதிகரித்துக் கொண்டு போக இலங்கையின் தயவில் இந்தியப் பாதுகாப்புத் தங்கியிருக்க வேண்டியிருக்கும். இலங்கையிடம் இந்தியா கையேந்த வேண்டி வரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...