Wednesday 4 January 2012

ஈரான் வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறது

பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு கருடனைப் பார்த்து எப்படி மச்சான் சுகம் என்று கேட்கலாம் ஆனால் பரமசிவனின் கழுத்தை நெருக்கவோ சுருக்கவோ முயலக்கூடாது. ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அமெரிக்காவை மிரட்டுகிறது.


ஈரான் ஒருதடவை சொன்னால் நூறுதடவை சொன்ன மாதிரி
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்பிரிவின் விமானம் தாங்கிக் கப்பல் ஜோன் சி ஸ்ரென்னிஸ்  பாராசீக வளைகுடாவில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டு ஹோமஸ் நீரிணையைத் தாண்டி ஓமான் கடலுக்குள் பிரவேசித்த பின்னர் ஈரானிய படைத் துறைத் தளபதி (மேஜர் ஜெனரல்) அத்துல்லா சாலேஹி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீண்டும் ஹோமஸ் நீரிணைக்கு வரக்கூடாது என்று அமெரிக்காவிற்கு தான் அறிவுரை, பரிந்துரை, எச்சரிக்கை செய்வதாகவும் கூறினார். அத்துடன் தாம் எச்சரிக்கைகளை ஒரு தடவை மட்டுமே விடுப்போம். அதை மீண்டும் மீண்டும் சொல்வதில்லை என்றும் சொன்னார்.

ஹோமஸ் நீரிணை மூடல் மிரட்டலின் பின்னணி
இஸ்ரேலால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும். இஸ்ரேல் அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்யாமல் அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அந்த இஸ்ரேலுக்கு இன்னொரு அரபு நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை பொறுக்க முடியாது. அமெரிக்காவாலும் ஒரு இசுலாமிய நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதைப் பொறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அமெரிக்கா தனது செய்மதிகளினூடாகவும் ஆளில்லா வேவு விமானங்களூடாகவும் கண்காணித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பதிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை கொண்டுவரத் திட்டமிட்டது. உடன் வெகுண்டெழுந்தது ஈரான். ஈரானின் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி பொருளாதாரத் தடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையொப்பமிட்டால் தாம் ஹோமஸ் நீரிணையை மூடி விடுவோம். ஹோமஸ் நீரிணையை மூடுவது எமக்கு காப்பி குடிப்பது போன்றது என்றார். 31-12-2011இலன்று அமெரிக்க அதிபர் பராக ஒபாம ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் ஒப்பமிட்டார்.



பிரச்சனைக்குரிய ஹோமஸ் நீரிணை
35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை பலம் இருந்ததில்லை. ஆனால் இம்முறை ஈரான் நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளுக்கு மத்தியில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் அண்மையில் ஆயிரக்கணக்கான கடற்கண்ணிகளும் பல சீர்வேக ஏவுகணைகளும் ஆயிரம் விசைப்படகுகளும் வாங்கிக் குவித்துள்ளது.


படைவலிமை
ஈரானிடம் ஒரு விமானம் தாங்கிக்கப்பல் கூட இல்லை. ஈரானினதும் அமெரிக்காவினது படை வலிமை:


அமெரிக்காவின் வல்லமை மிக்க ஐந்தாவது கடற்படைப் பிரிவு வளைகுடாப் பாதுகாப்புக்குப் பொறுப்பானது.


ஈரானுக்கு எதிரான போர் என்று வரும் போது அமெரிகாவுடன் சில நேட்டோ நாடுகளும் போரில் குதிக்கும். ஈரான் ஆட்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபடாது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால் பிரான்ஸ் 03/01/2012இலன்று ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடை வேண்டும் என்று வலியுறுத்தியது அதன் கணக்கைப் பிழைக்க வைத்தது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வரலாம். சீனா ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் மூலப் பொருள்களின் வழங்கல் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்க ஈரானிடம் நட்புப் பாராட்டுகிறது, சிரியாவிற்கு எதிராக மேற்க்கு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பிரேரணை கொண்டு வந்த போது சீன அதை இரத்து(வீட்டோ) செய்தது. இதற்கான முக்கிய காரணம் சிரியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் அதுஈரானில் இருக்கும் தனக்குச் சாதகமான  ஆட்சியாளர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே. ஆனால் இப்போது உள்ள சூழலில் ஒரு நேட்டோ - ஈரான் போர் ஏற்பட்டால் சீனா வெறும் அ|றிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ளும் அல்லது ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும். மேற் கொண்டு எதையும் செய்யாது.


ஒரு சில நாட்கள் மட்டுமே ஈரானால் தாக்குப் பிடிக்க முடியமாம்



ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டு மே ஹோமஸ் நீரிணையை மூட முடியும் அதை அமெரிக்கப்படைகளால் சில நாட்களில் மீண்டும் திறக்க முடியும். என அமெரிக்கப் படை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஈரானின் படை நிலைகள் மீது நேட்டோ விமானப் படைகள் முதலில் தாக்குதல் தொடுத்து அவற்றை நிர்மூலமாக்கும். ஈரானியப் படை நிலைகள் பற்றி ஏற்கனவே அமெரிக்கா தனது ஆளில்லா விமாங்கள் மூலம் தகவல்கள் திரட்டி வைத்துள்ளது. ஈரானைச் சுற்றவர உள்ள பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கப் படை நிலைகள் உள்ளது இந்து சமூத்திரத்தில் உள்ள கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடாவிற்கு நகர்த்தப்படலாம். மேலும் இஸ்ரேல் ஈரானின் கணனிகளை ஊடுருவி அதன் படைத்துறை கட்டளைப் பணியகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். பின்னர் கடற்சண்டையும் ஆளில்லா விமானத் தாக்குதலும் தொடரலாம். இதனால் ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி ஒரு சில வாரங்களே தாக்குப் பிடிப்பார் என நேட்டோப் படையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் ஆறு மாதங்கள் நின்று பிடித்தார்.

ஈரானைச் சுற்ற உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்

ஈரானுக்குப் பாதகமான சூழல் உருவாகலாம்
ஹோமஸ் நீரிணை மூடப்பட்டால் ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கான எண்ணை விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஈரானுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும். ஈரான் ஹோமஸ் நீரிணை முடப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஈரானிய நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் பாராளமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. பாராளமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஈரானின் சீர்திருத்தவாதிகள் அறிவித்திருக்கின்றனர். ஈரானில் மக்கள் கிளர்ந்து எழாமல் திசை திருப்பவே இந்த ஹோமஸ் நீரிணை நாடகம் ஆடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். பாம்பு பரமசிவனின் கழுத்துக்கு சுருக்குப் போட்ட நிலைதான் ஏற்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...