Friday 16 December 2011

நாணயமற்றவர்களின் ஆட்சியில் தள்ளாடும் இந்திய நாணயம்

இந்திய ரூபாவின் பெறுமதி பலவீனமான அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 19% வீழ்ச்சியடந்து இப்போது ஆசியாவிலேயே பலவீனமான நாணயம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை பாதுகாக்க இந்திய மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மட்டும் ஏழு தடவை வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. இப்போது இந்திய வட்டி வீதம் 8.5%இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்ததுடன் இந்தியப் பணவீக்கமும் அதிகரித்துக் காணப்படுவதே இந்திய ரூபாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். பொருளாதர வளர்ச்சி குறையும் போது வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி வீதம் அதிகரிக்கும் போது வட்டி வீதம் குறைக்கப்பட வேண்டும். இந்திய மத்திய வங்கி தலையிடிக்கு மருந்து கொடுப்பதா வயிற்றோட்டத்திற்கு மருந்து கொடுப்பதா என்று தெரியாமல் தடுமாறுகிறது. தலையிடிக்குக் கொடுக்கும் மருந்து வயிற்றோட்டத்தை அதிகரிக்கும். வயிற்றோட்டத்திற்கு கொடுக்கும் மருந்து தலையிடியை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக வட்டியை குறைத்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணவீக்கத்தைக் குறைக்க வட்டி வீதத்தை அதிகரித்தால் பொருளாதர வளர்ச்சி மேலும் குன்றும். 2011இல் இந்தியப் பொருளாதாரம் 9% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7%தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

தேயும் ரூபா ஏற்படுத்தும் முக்கிய தாக்கம்.
தேயும் ரூபா இறக்குமதிப் பொருள்களின் விலையை அதிகரிக்கும். இந்தியா தனது எரிபொருள்தேவையில்  மூன்றில் இரண்டு பகுதியை இறக்குமதி செய்கிறது. இந்திய நாணயம் பெறுமதி குறையும் போது இந்தியாவில் எரி பொருள் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தும். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் உறப்பத்திச் செலவு, விநியோகச் செலவு, போக்குவரத்துச் செலவு போன்றவை அதிகரித்து பொருட்களில் விலையை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஏன் ரூபா மதிப்பிறங்கியது?
இப்போது உலகச் சந்தையில் அதிக ஆயுதக் கொள்வனவு செய்யும் நாடு இந்தியா. படைத்துறைச் செலவு உட்படப் பல செலவுகளுக்கு இந்தியா கடன்பட வேண்டும். இந்திய  மொத்த தேசிய உற்பத்தி எதிர்பார்ததைப் போல் அதிகரிகாததால் இந்திய தேசியக் கடன் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் 104%மாக அதிகரித்துள்ளது. ஒரு பொருளாதார அபிவிருத்தியடையாத இந்தியாவிற்கு இந்த 104% அதிகமானதே. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே பொருளாதார அபிவிருத்தியடைந்த நாடுகள். தற்போது இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 48.77இலட்சம் கோடிகள், கடன் 51.12 இலட்சம் கோடி. இந்த 104%மே இந்திய ரூபாவின் மதிப்பைக் குறைத்தது.

களத்தில் இறங்கிய RBI
ரூபாவின் மதிப்பு இறங்கும் போது ஆரம்பத்தில் இந்திய மத்திய வங்கியான இந்திய ரிசேர்வ் வங்கி(RBI) பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை நிலமை மோசமாகியபோது தான் RBI தனது திறந்த சந்தை நடவடிக்கையில் இறங்கியது. முதலில் நாணய வர்த்தகர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. டாலரின் பெறுமதி ரூபாவிற்கு எதிராக ஏற்றமடையும் எனப் பலர் தங்கள் டாலர் கையிருப்பை அதிகரித்தனர். அக்கையிருப்பை அவர்கள் விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளும்படி விதிகள் விதிக்கப்பட்டன. இன்று (16/12/2011) RBI நாணய வர்த்தகர்கள் தாம் ஏற்கனவே இரத்துச் செய்த நாணய நடவடிக்கை ஒப்பந்தங்களை மீளப் புதிப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. நேற்று ஒரு டாலர் 54ரூபாக்களாக இருந்தது இன்று RBIஐயின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து 52.78ரூபாக்களாகக் குறைந்தது - ரூபாவின் மதிப்பு கூடியது.

நாணய மதிப்பிறக்கத்தால் நன்மையுண்டா?

இந்தியாவில் உள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களில் 70%மானவை ரூபாவின் மதிப்பிறக்கத்தால் நன்மையடையலாம். ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களே பெரும் நன்மையடையும். Tata Consultancy Services Ltd. போன்ற நிறுவனங்கள் நன்மை பெறும். அதே வேளை பெரும் நிறுவனங்களில்30%மானவை பாதிப்புக்குள் ஆகலாம். வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் பெற்ற Bharti Airtel Ltdஇன் கடன் பளு அதிகரிக்கும்.

இந்தியப் பங்குச்சந்தை
உலகின் முக்கிய நாடுகளில் இந்தியாவின் பங்குச் சந்தையே மிகப் பெரிய வீழ்ச்சியை 2011இல் கண்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 14500இற்கு வீழ்ச்சியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் விவசாயத்துறை, கட்டிட நிர்மாணத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை போன்றவை இந்திய அரசின் பிழையான நிதிக்கொள்கைகளால் பாதிப்படைந்துள்ளன. பொருளாதார நிபுணரைப் பிரதம மதிரியாகக் கொண்ட ஒரு அரசு தனது நாணய வழங்கல்களை எவ்வளவு தூரம் அதிகரிக்க முடியும் என்று தெரியாமல் போனது எப்படி? நாணய வழங்கலைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க சிதம்பரம், பிரணாப் முகர்ஜீ, மொன்ரேக் சிங் அலுவாலியா போன்ற வல்லுனர்களால் கூட முடியவில்லை. இந்த வல்லுனர்கள் சுயமாகச் சிந்திக்கவில்லையா?

இந்தியா சொல்லும் நொண்டிச் சாட்டு
இந்தியாவில் முதலீடு செய்த வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பெரு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட நட்டத்தையும் நிதி நெருக்கடியையும் ஈடு செய்ய தாம் இந்தியாவில் செய்த முதலீடுகளை விற்று அதை டாலர்களாக மாற்றி தமது நிறுவனங்களின் ஐந்தொகையை(Balance Sheet) பலமுள்ளதாக முதலீட்டாளர்களுக்கும் தமது வங்கிகளுக்கும் காட்டுவதே இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்துக்குக் காரணம் என்று சொல்கின்றன. இதுவும் ஒரு காரணம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. மற்ற BRIC நாடுகளுக்கும்(பிரேசில், இரசியா, சீனா) இது பொருந்தும். இருந்தும் இந்திய ரூபா மற்ற BRIC நாடுகளின் நாணயங்கள் இப்படிப் பாதிக்கப்படவில்லை. இந்தியப் பொருளியல் வல்லுனர் கௌசிக் பாசு பொது நலவாய நாடுகளிற்கிடையான விளையாட்டுப் போட்டியிலும் 2G அலைக்கற்றையிலும் நட்னத ஊழல்கள் இந்தியப் பொருளாதரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு இருந்த நம்பிக்கையில் பாதிப்பை ஏறடுதியது என்கிறார். இந்தியாவின் செலவீனங்களும் கடனும் அதிகரித்தமையே முக்கிய காரணம். இந்தியா ஆயுதக் கொள்வனவில் அதிகம் செலவிடுவது இந்தியாவின் பாதுகாப்பை உயர்த்த மட்டுமல்ல. எந்த ஒரு ஆட்சியாளரும் இலகுவில் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழி ஆயுதக் கொள்வனவே. பொருளாதார வளர்ச்சிக்கு என்று இந்திய அரசு செய்த நடவடிக்கைகள் சில வேண்டப்பட்ட பெரு முதலாளிகளின் நன்மையிலேயே இறுதியில் முடிந்தது. நாணய மதிப்பிறக்கத்திற்கு ஊழல் நிறைந்த தலைமையில் அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதே முதன்மைக் காரணம். நாணய மதிப்பிற்கு நாணயமான ஆட்சி முக்கியம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...