Sunday 18 September 2011

ஆலயங்களில் ஆட்டுப்பலியும் நாட்டில் மனிதப் பலியும்


நான் சைவம் என்று சொன்னால் அதற்கு இலங்கையில் இரண்டு கருத்துக்கள் உண்டு. ஒன்று நான் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். மற்றது நான் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். சைவ சமயமும் புலால் உண்ணாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. ஆனாலும் இலங்கையில் சில சைவக்கோவில்களில் மிருங்களைப் பலியிடுதல் நீண்டகாலமாக நடந்து வருகிறது.

சைவ ஆலயங்களில் மிருகபலியின் பின்னணி
மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே மிருகங்களை உண்டு வந்தான். அவனது நாகரீக வளர்ச்சியின் முதல் கட்டம் விவசாயம். மிருகங்களை வேட்டையாடி உண்பது அவனுக்கு விவசாயத்திலும் பார்க்க இலகுவானது. இயற்கைச் சமநிலையைப் பேண மிருகங்களை உண்ணுதலைத் தவிர்க்கும் படி அவன் சமயங்களால் வலியுறுத்தப் பட்டான். இதனால்தான் சைவ சாப்பாடு என்பது புலால் உண்ணாமையை குறித்தது. அதாவது சைவ சமய விதிகளுக்கு ஏற்ப சாப்பிடுவது.  ஆனாலும் மனிதனுக்கு புலால உண்ணும் வேட்கையை தீர்பதற்கு சைவ சமயத்தில் சிலர் ஒரு வழி கண்டனர். அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் ஆடு கோழி போன்றவற்றை கடவுளுக்கான நேர்த்திக் கடனாக வளர்த்து ஆண்டில் சில தடவைகள் அவற்றை கோவிலில் பலியிட்டு உற்றாருடன் பகிர்ந்து உண்ணுவது.


ராஜபக்சவின் அடக்க முடியாத அடி-தடி அமைச்சர்.
ஆலயத்தில் கால்நடைகளைப் பலியிடுதலைப் பல கோவில்கள் 1960களின் பிற்பகுதிகளில் இருந்து கைவிட்டுவிட்டன. சில கோவில்களில் இன்றும் அது நடந்து வருகிறது. அதில் ஒன்று சிலாபத்தில் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோவில்.  இக்கோவிலை தமிழர்களுடன் பௌத்த சிங்களவர்களும் வழிபடுபவர்கள். அங்கு இந்த ஆண்டு நடைபெறவிருந்த பலி பூசையை மஹிந்த ராஜபக்சவின் அடி-தடி அமைச்சர் தனது அடியாட்களுடன் சென்று தடுத்துவிட்டார்.  இது இலங்கையில் ஒரு சட்ட விரோத நடவடிக்கை. முன்னேஸ்வரத்தில் மிருகங்களைப் பலியிடுதல் தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.

 உயிர்க் கொலையும் "இலங்கை பௌத்தமும்"
அஸ்கிரிய பீடாதிபதி மிருகங்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அமைச்சர் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா போன்ற நபர்கள் இந்த நாட்டுக்கு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார் .மிருக வதை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் கௌதம புத்தர் பாதம் பதிந்த நாட்டில் தொடர்ச்சியாக இவ்வாறான மிருக வதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது எனவும் அஸ்கிரிய பீடாதிபதி தெரிவித்துள்ளார். கௌதம புத்தர் பாதம் பதிந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழர்கள் கொல்லப்படுவது
1956இல் கொதிதாரில் குழந்தைகளை ஆலயப் பூசாரிகளைப் போட்டுக் கொன்றதில் இருந்து நடைபெறுகிறது. இது வரை இலங்கையில் இதைத் தடுக்க எந்த பௌத்தரும் போதிக்கவில்லை என்பது மட்டுமல்ல பௌத்தத்தை பாதுகாக்க தமிழரைக் கொல்வது புண்ணியமான செயல் என்றும் போதிக்கப் பட்டு வருகிறது. 1983இல் கடைகளில் தமிழன் இறைச்சி விற்கப்படும் என்று எழுதிப் பலகை மாட்டியதையும் நாம் அறிவோம். வன்னி இறுதிப் போரில் எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் உயிருடன் புதைக்கப்பட்டனர் சரணடைய வந்த எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதையும் நாம் அறிவோம். இலங்கையில் கடலிலும் நிலத்திலும் எத்தனை இலட்சம் உயிர்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்காகப் பலியிடப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். இலங்கையில் எத்தனை சைவ ஆலயங்கள் திட்டமிட்டு பௌத்த சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன என்பதையும் நாம் அறிவோம். முன்னேஸ்வரம் நிகழ்வு தமிழர்கள் மீதான அடைக்கு முறையின் ஒரு அம்சமே. உயிர்கள் மீதுள்ள கருணை அல்ல.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...