
ஜோசேப் பரராஜசிங்கம், அரியநாயகம் சந்திரநேரு, குமார் பொன்னம்பலம் இப்படி தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பாராளமன்ற உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர். சிலர் பாராளமன்றத்துக்குள்ளேயே தாக்கப் பட்டனர். பல தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழ்வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் மக்களோடு சுதந்திரமாக நடமாடுவது உயிராபத்தானதே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இப்போதைய பெரிய பிரச்சனை தாம் "ஜனநாயக" அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதை எப்படி உறுதி செய்வது என்பதே. அரசிலில் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற சம்பந்தன் ஐயா அவர்கள் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பது அவரால் எடுக்கப் பட்ட முடிவாக இருக்காது. அவர் மீது வெளிநாட்டுச் சக்திகளால் திணிக்கப் பட்ட ஒன்றே. அதற்குப் பதிலாக அவர்கள் பெற்றது அவர்கள் இலங்கையில் சுதந்திரமான நடமாட்டம். அதன் பிறகே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலாவது நடமாடும் சுதந்திரம் பெற்றனர்.
பல இலட்சம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இப்போது முக்கியமாக முன்னின்று ஒன்று பட்டுச் செயற்படுகின்றனர். சிவாஜிலிங்கம் என்வழி தனிவழி என்று நிற்கின்றார். சம்பந்தன்-மாவை-சுரேஸ் ஆகியோர் சரத் பொன்சேக்கா மஹிந்த ராஜபக்சே ஆகியோருடன் மாறி மாறி சந்திப்பில் ஈடுபட்டனர். அவர்கள் சந்திப்பில் அவர்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் சம்பந்தமாகவே அதிகமாகப் பேசப் பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பார்க்க அவர்கள் அடுத்த பாராளமன்றத் தேர்தலில் தமது பாதுகாப்பான போட்டியிடுதலிலேயே அவர்கள் கவனம் அதிகம் செலுத்துகின்றனர். ஆயுதக் குழுக்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரிடம் இருந்து தம்மைப் பாதுகாப்பதே அவர்கள் நோக்கம். ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் தங்கள் அரசியல் தீர்மானத்தை விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டோ அல்லது வேலை வாய்ப்புக்களை கருத்தில் கொண்டோ தீர்மானிப்பதில்லை. அவர்கள் அரசியலால் படுமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இது கடந்த 40 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த 40 வருட அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர்களால் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியும் என்பதை அண்மையில் நடந்த வவுனியா மற்றும் யாழ் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் நடந்து கொண்ட முறையில் இருந்து அறியலாம்.
கடுகடுப்புடன் நடந்த மஹிந்தவுடனான சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு காரசாரமானதாகவே அமைந்தது. மஹிந்த தன்னுடன் கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரைத் தன்னுடன் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதாசீனம் செய்ததை அவர்கள் மஹிந்தவிடம் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இனப் பிரச்சனைக்கான "தீர்வு" காணும் சர்வகட்சி குழுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மஹிந்த அரசு அழைக்கவில்லை. மக்களால் தேர்தேடுக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசிய்ற் பிரிவாகவே கருதப்பட்டனர்.
ரணில்-சரத் கூட்டணியினரின் மந்திரிப் பதவி தூண்டில்
தமிழத் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மந்திரிப் பதவி வழங்கும் தூண்டிலைப்போட்டுள்ளார். அதை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுக்கவுமில்லை.
காணமற்போன அதிகாரப் பரவலாக்கல்
இந்தத் தேர்தலில் அதிகாரப் பரவலாக்கல் என்ற சொல் காணமரற் போய்விட்டது. அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மறந்து விட்டதா?
No comments:
Post a Comment