Tuesday, 6 October 2009

திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?


திருமாவளவன் அண்மையில் இலண்டனில் புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நிகழ்வில் உரையாற்றினார். அவரது உரை சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை நீடித்தது. இலண்டனைப் பொறுத்தவரை இது ஒரு மிக நீண்ட உரை. ஆனாலும் மக்கள் சலிக்காமல் இருந்து செவிமடுத்தனர். உரையின் முடிவில் எழுந்து நின்று கைதட்டினர். எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி எழுந்திருக்கவில்லை. அவரிடம் ஏன் என்று வினவியபோது இவங்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என்றார். அவர் ஒன்றும் சாதாரணப் பெண்மணியுமல்ல. ஒரு மருத்துவர். தமிழ்த்தேசியப் போராட்டதில் அவரது குடும்பமே நீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றது. ஆனாலும் ஈழத் தமிழர்களது போராட்டத்திற்கு நீண்டகாலமாக ஆதரவு கொடுத்துவரும் திருமாவைப் பற்றி - தமிழ்நாட்டின் தலித் மக்களிடம், வறிய மக்களிடம் ஈழப் போராட்டத்தை எடுத்துச் சென்ற திருமாவைப் பற்றி ஏன் இப்படிச் சொன்னார்? இது பற்றி சற்று விபரமாகத் தகவல் திரட்ட முயற்ச்சித்தேன்.

ஒரு நல்லவரைச் சந்தேகித்தல் துரோகிகளின் செயலிலும் கொடிது என்பதை யாவரும் அறிவோம்.

ஆனாலும் தோழர் திருமாவளவனுக்கும் இலண்டன் தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இடையில் என்ன பிணக்கு?

திருமாவளவனில் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் படி ஒரு குறுந்தகவல் இலண்டனில் உலாவியது.

திருமாவளவனின் நிகழ்ச்சியில் தமிழ் இளையோர் அமைப்போ அல்லது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களோ பங்குபற்றவில்லை.

இலண்டனில் உள்ள தமிழ்த்தேசிய வாதிகள் திருமா இந்திரா காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் நின்றதை வரவேற்கவில்லை.
இலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:
  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.
  • தமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.
  • தோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.
  • எல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.

தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் இலங்கையிலும் பார்க்க இந்தியாஅதிக முனைப்புக் காட்டியதை யாவரும் அறிவர்.

இந்தியாவிற்கு தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழிக்க இலங்கை உதவியதாக பலரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் திருமா இப்படிக் கூறியது அவர் இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலில் அகப் பட்டு விட்டாரா என்ற சந்தேகத்தைச் சிலருக்கு உண்டாக்கியுள்ளது.

இது எங்க (இந்தியாவின்) ஏரியா உள்ளே வராதே!
இந்தியாவை விட்டால் உங்களுக்கு உதவயாரும் இல்லை என்ற கருத்தை தமிழருவி மணியனும் முன்வைத்தார். மே மாதம் 17-ம் திகதிக்கு முன்னர் பிரித்தானியாவுடன் இணந்து ஒரு கடற்படையை அனுப்பி போரில் அகப் பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்கத் தயார் என்று பிரான்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் இதைத் தடுத்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

அமெரிக்கா திரைமறைவில் ஒரு கடற்படையை இலங்கை நோக்கி நகர்த்தியது அது எடுக்க இருந்த நடவடிக்கையைதிருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

ஸ்கண்டிநேவிய நாடுகள் அரச மட்டத்தில் பல அழுத்தங்களைப் பிரயோகித்தன அதை எதிர்க்க இலங்கைக்கு பக்கபலமாக இருந்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு உதவ யாருமில்லையா?

இருந்தும் ஏன் இந்தப் பொய்?

இந்தியா தமிழனுக்கு உதவ யாரையும் விடவில்லை என்பதே உண்மை.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...