Friday, 22 May 2009

உலகெங்கும் வாழ் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்களா?


நேற்று பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தில் தமிழ்த் தேசிய போராட்டத்தில் நீண்டகால ஈடுபாடுள்ள ஒரு பெரியவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ்த்தேசிய போராட்டம் கீழ் முகமாகச் செல்கின்றதா என்று அவரிடம் வினவினேன். சற்று யோசித்து அண்ணாந்து சிலகணம் வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார். இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர்களைப் பார்க்கும் போது 1972 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாடு தனது நினைவிற்கு வருவதாகக் கூறினார். அந்த மாநாடு நடந்த போது அப்போது இளைஞர்கள் என்ன மனநிலையில் இருந்தார்களோ அதே மனநிலையில் இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அந்த மாநாட்டு முடிவில் இலங்கை காவல்துறை மின்சாரக் கம்பிகளைத் துண்டித்தும் கண்ணீர்ப் புகை அடித்தும் மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து தமிழர்கள் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போது இங்குள்ள இளைஞர்களுக்கும் விரக்தி ஏற்பட்டால் இவர்களில் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் கையில் எடுப்பார்கள். இவர்கள் ஆயுதம் கையெடுத்தால் அது எவரும் எதிர்பாராத வடிவமாக இருக்கும். ஆம் அந்தப் பெரியவர் சொல்வது நடப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஐரோப்பாவிலாகட்டும் கனடாவிலாகட்டும் அல்லது அவுஸ்திரெலியாவிலாகட்டும் இந்த இளைஞர்களுக்கு பலநாட்டு இளைஞர்களின் தொடர்புகள் உண்டு. அந்தத் தொடர்புகளும் அனுபவங்களும் இவர்களுக்கு இன்னொரு பரிமாணத்தில் பலமூட்டும்.
.
தமிழர்கள் ஏமாற்றப் பட்டனர்.
.மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சனைப் பேசி ஒரு முடிவு கட்டவேண்டும் அல்லது சண்டை மூலம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முடிவை 2000-ம் ஆண்டில் எடுத்துவிட்டன. இலங்கையில் நடக்கும் சண்டை அங்கு அவர்களது வர்த்தகரீதியான சுரண்டலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவே அவர்கள் உணர்ந்தனர். இணைத் தலைமை நாடுகள் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு இல்லை என்று சொல்லிவந்த போதும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இலங்கையுடன் உடன்பட்ட நிலையிலேயே இருந்தன. ஆனால் இலங்கையின் புலி அழிப்புப் போர் மாபெரும் இன அழிப்புப் போராக முடியும் என்பதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரம் முழுக்க அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். சாட்சியங்களும் அவர்களிடம் உண்டு. அவற்றை அவர்கள் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாரமல் இருப்பதற்கான மிரட்டலுக்கு பயன் படுத்துவார்கள். உலகெங்கும் வாழ் தமிழர்கள் போர் நிறுத்தம் வேண்டி ஆர்பாட்டம் செய்ததை இவர்கள் தட்டிக் கழித்து விட்டு தாம் எதாவது செய்வோம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை கடத்தினர். அது அவர்கள் இலங்கை அரசிற்கு தேவையான கால அவகாசத்தைக் கொடுக்கவே என்ற சந்தேகம் இப்போது தமிழர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. இணைத் தலைமை நாடுகளின் நோக்கம் புலி ஒழிப்பிற்கு பிறகு ஏதாவது செய்வோம் என்பதே. இந்த விடயத்தில் தாம் இணைத் தலைமை நாடுகளால் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகவே தமிழர்கள் நம்புகின்றனர். இந்த ஏமாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
.
பிழையாகிப் போன புலனாய்வுத் தகவல்
விடுதலைப் புலிகளைத் தடை செய்யமுன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒரு புலனாய்வுத் தகவலைத் திரட்டின. அதன் படி மூத்த தலை முறையினர் மட்டுமே இலங்கப் பிரச்சினையில் அக்கறை உள்ளவர்கள். இளைய தலைமுறையினர் தமது கலாச்சாரத்துடனும் நாடுகளுடனும் ஒன்றி விடுவார்கள். இத்தகவல்கள் இப்போது ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் எங்கும் பொய்ப்பிக்கப் பட்டுக் கொண்டுடிருக்கிறது. தமக்குத் தாமே தீ மூட்ட ஆற்றில் பாய்ந்து தற் கொலை செய்ய முயற்சிக்க இளையோர் உண்டு என்றால் ஆயுதம் எடுத்துப் போராட்வும் அவர்கள் மத்தியில் இளையோர் தயாராக உள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டும்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...