Monday, 7 September 2020

புவிசார் அரசியலில் வான்வலிமையும் பொருளாதாரமும்

  


இரண்டாம் உலக போர் நடக்கும்போதே புவிசார் அரசியல் கோட்பாடுகள் பல மாற்றத்திற்கு உள்ளானது. புவிசார் அரசியல் கோட்பாடுகள் வெறும் பூகோள அமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல் பொருளாதாரம்வரலாறுஇனப்பரம்பல்மக்கள்தொகைக் கட்டமைப்புபோரியல் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளது. வேறும் பல அம்சங்கள் அதில் தொடர்ச்சியாக உள்ளடக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹல்போர்ட் மக்கிண்டர் புவிசார் அரசியலுக்கு கொடுத்த வரைவிலக்கணம் இப்போது பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது. 

முன்னையிட்ட கோட்பாடுகள்

ஹல்போர்ட் மக்கிண்டர் ஜேர்மனியையும் உள்ளடக்கிய கிழ்க்கு ஐரோப்பாவை உலகின் இதய நிலம் எனபெயரிட்டு அதை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். நிக்கொலஸ் ஸ்பீக்மன் ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களின் தென் கரை ஓரத்தை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார். அல்பிரட் ரி மஹான் கடல்களை ஆள்பவனே உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார்.

வான்படை வலுக் கோட்பாடு

அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

வான்படைக் கோட்பாட்டை முன்வைத்த இரசியாவில் பிறந்த அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்தவர். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று விமான உற்பத்தியில் ஈடுபட்டவர். 1942-ம் ஆண்டு தனது வான்படை வலிமை மூலமான வெற்றி என்னும் நூலை வெளியிட்டார்.

1. வான்படைகளது தாக்கு திறனும் தாக்குதல் தூரமும் அதிகரித்துக் கொண்டிருப்பது அமெரிக்காவிற்கு ஆபத்தானது. பிரித்தானியாவை ஜேர்மன் வான்படையினர் 1940-41இல் நிர்மூலம் செய்தமை அமெரிக்காவிற்கும் நடக்கலாம்.

2. இதை மறுப்பவர்கள் பிரான்சின் மகிநொட் கோடு என்ற பாதுகாப்பு அரண் மனப்பாங்குடன் இருப்பவர்களாகும்

3. மாக்கடல்களூடாக நடக்கவிருக்கும் புவிப்பந்தின் இரு பாதிகளுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா உடனடியாக தயாராக வேண்டும்.

4. உலகின் கடல்வலிமை மிக்க நாடாக பிரித்தானிய இருந்தது/இருப்பது போல் அமெரிக்கா உலகின் வான் வலிமை மிக்க நாடாக வேண்டும்.. சுதந்திரமான விமானப்படை அமைக்கப்படவேண்டும். மூவாயிரம் மைல்களுக்கும் மேலாக கண்டம் விட்டுக் கண்டம் செல்லக் கூடிய தொலைதூர குண்டு வீச்சு விமானங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

1941-ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது செய்த பேர்ல் துறைமுகத் தாக்குதலின் பின்னர் செவெர்ஸ்கியின் கருத்துக்கள் பிரபலமாகியதுடன் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இவரது நூல் அப்போது அதிக விற்பனையாகி சாதனையும் படைத்தது. இந்த நூலால் கவரப்பட்ட வால்ட் டிஸ்னி அவரின் கருத்து எல்லோரையும் போய்ச் சேரவேண்டும் என உணர்ந்து 1943-இல் அதை திரைப்படமாக வெளியிட்டார். 

உலக முறைமைக் கோட்பாடு – இம்மானுவேல் வல்லரஸ்ரைன்

மற்றவர்கள் புவியியலையும் போரியலையும் அடிப்படையாக வைத்து புவிசார் அரசியல் கோட்பாடுகளை வகுக்க இம்மானுவேல் வல்லரஸ்ரைன் பொருளாதாரத்தையும் சமூக நிலைமைகளையும் கருத்தில் கொண்டு தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை முன்வைத்தார். அமெரிக்காவின் யேல் பலகலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டில் இணைந்து 2019இல் இறக்கும் வரை அங்கு பணியாற்றினார். சமூகவியலாளரான இம்மானுவேல் வல்லரஸ்ரைன் உலக பொருளாதார முறைமை சில நாடுகளுக்கு சாதகமாகவும் பல நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பதை அவதானித்தார். அந்த அவதானிப்பை ஆதாரமாக வைத்து அவர் உலக முறைமைக் கோட்பாட்டை முன்வைத்தார். அவரது கோட்பாட்டில் உலக நாடுகளை உள்ளக நாடுகள், அரை-வெளியக நாடுகள், வெளியக நாடுகள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்தார்.

1. உள்ளக நாடுகள் வெளியக் நாடுகள் மீது முலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் சுரண்டுவதற்காக ஆதிக்கம் செலுத்துகின்றன.

2. வெளியக நாடுகள் தங்கள் மூலதனத்திற்காக உள்ளக நாடுகள் மீது தங்கியிருக்கின்றன.

3. அரை-வெளியக நாடுகள் உள்ளக நாடுகளின் தன்மைகளையும் வெளியக் நாடுகளின் தன்மைகளையும் கொண்டுள்ளன.

4. உலக சமூக கட்டமைப்பில் சமத்துவமின்மை நிலவுகின்றது.

5. உள்ளக நாடுகள் படைவலிமை மிகுந்ததாக இருப்பதுடன் மற்ற நாடுகளில் தங்கியிருப்பதில்லை. அவற்றின் உற்பத்தி முலதனம் மிகுந்ததாகவும் செயற்திறன் நிறைந்ததாகவும் இருக்கின்றது. மற்ற நாடுகளின் மூலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் அவை குறைந்த விலைகளைக் கொடுக்கின்றன. வெளியக நாடுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கு உள்ளக நாடுகள் அதிக விலைகளை விதிக்கின்றன. இந்த சமத்துவமின்மையை உள்ளக நாடுகள் தொடர்ச்சியாக மீளுறுதி செய்து கொண்டிருக்கின்றன.

உள்ளக நாடுகள்: ஐக்கிய அமெரிக்காபிரித்தானியாஇத்தாலிஜேர்மனிபிரான்ஸ்ஜப்பான்கனடா,  ஆகிய நாடுகள்

அரை வெளியக நாடுகள்: ஒஸ்ரேலியாஆர்ஜெண்டீனாசீனாதென் கொரியாசவுதி அரேபியாதுருக்கிஇந்தோனேசியாஇரசியாதைவான்மெக்சிக்கோபிரேசில் இந்தியா போன்ற நாடுகள். சீனா அரைவெளியக நாடுகளுக்கும் உள்ளக நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றது எனச் சொல்லலாம். ஜீ-7 நாடுகளின் பட்டியலில் இன்னும் சீனா இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

வெளியக நாடுகள்: மேற்கூறிய உள்ளக மற்றும் அரை உள்ளக நாடுகள் அல்லாத நாடுகள் (ஜி-20 நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகள்)

ஆபிரிக்க கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் புதிய உலக முறைமை-1: முதலாளித்துவ விவசாயமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆரம்பமும் என்ற நூலை  1974இல் எழுதினார். இம்மானுவேல் வல்லரஸ்ரைன் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் Geopolitics and Geoculture (புவிசார் அரசியலும் புவிசார் கலாச்சாரமும்) என்னும் பெயரில் மூன்று நூலகளாக வெளியிடப்பட்டன. மற்ற புவிசார் அரசியல் கோட்பாட்டாளர்கள் தமது நாடுகள் எப்படி உலகில் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிக் கவனம் செலுத்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் மட்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளைச் சுரண்டுவது பற்றிக் கவனம் செலுத்தினார்.

மூன்றாம் அலைக் கோட்பாடு

புவிசார் அரசியலுக்கான மரபுவழிக் கோட்பாடுகளும் அதன் பின்னர் வந்த கோட்பாடுகளையும் தவிர்த்து முன்வைக்கப்பப்பட்டது "மூன்றாம அலைக் கோட்பாடு"

1. நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும்

2. தேவை ஏற்படும் போது வலிய நாடுகள் மற்ற நாடுகள் மீது மென்வலு அழுத்தம் பாவிக்கலாம்

3. பன்னாட்டு உறவுகளுக்கான புதிய உலக ஒழுங்கு ஏற்படுத்துதல்

4. நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து உலகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அரபு வசந்தம் எழுச்சி, இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க படை நடவடிக்கைகள், உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமை, தென் சீனக் கடலில் சீனா அதிகரித்த ஆதிக்கம் ஆகியவை நிலவிய சூழலில் மூன்றாம் அலைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கத்தால் உலகப் பொருளாதாரமும் உலக நாடுகளிற்கு இடையிலான உறவுகளும் சீர் குலைந்துள்ள நிலையில் எந்த ஒரு கோட்பாடும் உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.

முன்னைய கட்டுரையைக் காண இந்த இணைப்பில் சொடுக்கவும்:

புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்



Monday, 31 August 2020

புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்

 


புவிசார் அரசியல் எப்போது தோன்றியது என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர்களுள் Friedrich Ratzel என்ற ஜேர்மனியர் முதன்மையானவர். இவருக்குப் பின்னர் பிரித்தானியப் புவியியல் நிபுணர் Halford Macinder, அமெரிக்க கடற்படைத்தளபதி Alfred Thayer Mahan, அமெரிக்க அரசறிவியலாளர் Nicholas John Spykman, அமெரிக்க அரசறிவியலாளர் Samuel Huntington முக்கியமான புவிசார் அரசியல் கோட்பாடுகளை முன்வைத்தனர்.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். பூமியில் உயிரனங்களின் பரம்பலை மிகவும் உன்னிப்பாக கவனித்து தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை இவர் வகுத்தார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பாளர்கள். இதை அவர் டார்வினின் தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the Fittest) என்ற கோட்பாட்டுடன் இணைத்து முன் வைத்தார். உயிரினங்கள் தப்பி வாழ உணவு தேடித்திரிவது போல் அரசுகள் நிலங்களைத் தேடித்திரியும் என்ற இவரது கோட்பாடு சேதன கோட்பாடு (Organic Theory) என  அழைக்கப்படுகின்றது. 1844 முதல் 1904 வரை வாழ்ந்த இவரது கோட்பாடு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்டது. ஜேர்மனிய அதிபராக இருந்த ஹிட்லர் அயல் நாடுகள் மீது போர் தொடுத்தமைக்கு இவரது கோட்பாடே உந்து வலுவாக இருந்தது.


இதய நிலக் கோட்பாடு

1904-ம் ஆண்டு Sir Halford John என்பவர் முன்வைத்த The Geographical Pivot of History" (சரித்திரத்தின் புவியல் சுழற்ச்சி மையம்) என்ற கட்டுரையே புவிசார் அரசியலின் முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றது. புவியியல் நிபுணராகவும் பாராளமன்ற அரசியல்வாதியாவும் இரசியாவிற்கான பிரித்தானியத் தூதுவராகவும் இருந்தவர் இவர்.புவிசார் அரசியலின் தந்தை எனப்படுகின்றார். கால ஓட்டத்திற்கு இணங்க அவரே தனது கருத்துக்களில் மாற்றங்கள் செய்தார். புவிசார் அரசியல் என்பது எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1861 முதல் 1947 வரை வாழ்ந்த Sir Halford John இரண்டு உலகப் போர்களை அனுபவித்தவர். தற்போது ரெடிங் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் இயங்குவது University Extension College என்னும் பெயரில் இருக்கும் போது அதன் முதல்வராக இருந்தவர். 1910 ஆண்டு முதல் 1922-ம் ஆண்டு வரை ஐக்கிய இரச்சியப் பாராளமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழத்தின் புவியியல் துறையில் படிப்பாளியாகவும் பணியாற்றியவர். பல்கலைக்கழகங்களில் உலக அளவில் நிபுணராக இருப்பவர்களை படிப்பாளியாக நியமிக்கும் வழமை பிரித்தானியாவில் இருக்கின்றது.  London School of Economicsஐ ஆரம்பித்தவர்களில் ஒருவரான Sir Halford John Mackinder அதில் புவியியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

1902-ம் ஆண்டு பிரித்தானியாவும் பிரித்தானியக் கடலும் என்ற நூலை எழுதியவர். நில உருவாக்கவியலை முதலில் அறிமுகம் செய்தவரும் இவரே. தனது அரசியல் மற்றும் அரசுறவியல் அனுபவங்களையும் தனது உன்னதமான புவியியல் அறிவையும் வைத்து அவர் புவிப்பந்தை மூன்று பெரும் பிரதேசங்களாக வகுத்தார். 1904-ம் ஆண்டு உலகத்தீவும் இதயநிலமும் என்ற கட்டுரையை இவர் சமர்ப்பித்தார். அதில் அவர் புவியை பின்வரும் பிரதேசங்களாக வகுத்தார்.

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland) : உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்காமேற்கு ஐரோப்பாமத்திய கிழக்குஈரான்இந்தியாசீனக்கரையோரம்ஜப்பான்இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.



கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது இவர் முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது.  

வளையநிலக் கோட்பாடு


நெதர்லாந்தில் பிறந்த Nicholas Spykman உலகின் பல பகுதிகளில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். 1920-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய இவர் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கற்கை நெறியை ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவர். வெளியுறவுக் கொள்கை பற்றி இரண்டு நூல்களை எழுதியவர். Nicholas Spykman (1893-1943) மக்கிண்டரின் இதயநிலக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தனது கோட்பாட்டை முன்வைத்தார். Nicholas Spykman வளைய நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வளையநிலத்தை ஆள்பவன் இதயநிலத்தை ஆள்வான். இதயநிலத்தை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்றார். இவரது கோட்பாடு வளையநிலக் கோட்பாடு எனப்படுகின்றது. 1. புவி என்றுமே மாறாமல் இருப்பதால் ஒரு நாட்டின் வெளியுறாவுக் கொள்கையில் புவியியல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 2 அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டும் பன்னாட்டு உறவுகளை அடிப்படையாகக் கொண்டும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். 3. போருக்கும் அமைதிக்குமான பெரும் கேந்திரோபாயம் புவியியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட வேண்டும். என்பவை இவரது கொள்கைகளாகும். யேல் பல்கலைக் கழகத்தில் தனது மாணவர்கள் புவியியல் தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என இவர் வலியுறுத்தினார். அமெரிக்கா உலக அரங்கில் கவனம்(ஆதிக்கம்) செலுத்துவதா அல்லது தனது பாட்டை தான் பார்த்துக் கொள்வதா என்ற விவாதம் அமெரிக்காவில் தீவிரமாக நடந்த போது இவர் அமெரிக்கா உலகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கர்களை ஏற்கச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். இரசியாவை அமெரிக்கா அடக்கி வைக்க வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக்கினார். இதனால் இவர் "அடக்கலின் ஞானத் தந்தை" எனப்படுகின்றார்.

கடல்வலிமைக் கோட்பாடு


அமெரிக்கரான Alfred Thayer Mahan பட்டப்படிப்பின் பின்னர் அமெரிக்கக் கடற்படையில் இணைந்தவர். பின்னர் அமெரிக்காவின் கடற்போர்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.. பிரித்தானியாவிற்கும் டச்சு தேசத்திற்கும் மற்றும் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் நடந்த போர்களில் பிரித்தானியாவின் கடல் வலிமை வெற்றியைத் தீர்மானித்ததை உணர்ந்த இவர் ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களிலும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது.

நாகரீக கோட்பாடு


அமெரிக்கரானா Samuel Phillips Huntington (1927- 2008) ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மாணவப் பருவம் முதல் ஐம்பது ஆண்டுகள் கழித்தவர். 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். மேற்கு நாடுகள்லத்தின் அமெரிக்க நாடுகள்இஸ்லாமிய நாடுகள்சீனாஇந்துமரபு வழியினர்ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப்படுத்தியுள்ளார் வருங்காலத்தில் போர் நாடுகளிடையே நடக்காமல் நாகரீகங்களிடையே நடக்கும் என்றார். மேற்கு நாடுகளின் உலக ஆதிக்கத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சவாலாக அமையும் என்றார். அமெரிக்க குடிமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவிற்கு புது வடிவம் கொடுப்பதற்கு இவர் பேருதவியாக இருந்தவர். உலகப் பல்கலைக்கழகங்களின் அரசுறவியல் துறைகளில் அதிகம் பேசப்படும் ஒருவராக Samuel Phillips Huntington இப்போது இருக்கின்றார்.

எல்லா புவிசார் அரசியல் நிபுணர்களும் உலக அமைதியிலும் பார்க்க உலக ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரையைக் காண இந்த இணைப்பில் சொடுக்கவும்

புவிசார் அரசியலில் வான்வலிமையும் பொருளாதாரமும்

அடுத்த கட்டுரை இந்த இணைப்பில் உண்டு:

https://www.veltharma.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

Friday, 28 August 2020

இரசியாவின் மேற்குக் கவசத்தில் குழப்ப நிலை

சோவியத் ஒன்றியம் இருக்கும் போது இரசியாவைச் சுற்றவர பல நாடுகள் இரசியாவிற்கு கவசப் பிரதேசங்களாக இருந்தன. தற்போது இரசியாவுடன் பாதுகாப்பு உறவுகளைப் பேணும் நாடுகள் ஆர்மீனியா, பெலருஸ், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளாகும். இவற்றில் இரசியாவின் மேற்கு எல்லையில் உள்ள பெலருஸ் அதன் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த பெலருஸில் நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ முறைகேடாக வெற்றி பெற்றதாக மக்கள் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். 1994-ம் ஆண்டில் இருந்து நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் லுகஷெங்கோ 2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

யூரியூப்பில் எதிர்ப்புக் காட்டியவர் கைது

காணொலித் துண்டங்கள் மூலம் அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய திகனொவிஸ்காயா கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனால் சினமடைந்த அவரது 37 வயது மனைவி அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிராக தேர்தலில் களமிறங்கினார். அவரது பரப்புரைக் கூட்டத்திற்கு மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.  அவர் எழுபது விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றியடைவார் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் அலெக்சாண்டர் லுகஷெங்கோ எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்ததுடன் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முடிவை ஏற்காத போதிலும் பெலருஸின் எதிர்க்கட்சிகள் கேட்டதைப் போல ஒரு மறுதேர்தலை இன்னும் வலியுறுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தான் ஓர் அமைதியான ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சொல்கின்றது. ஜேர்மனிய அதிபர் எஞ்சலாமேக்கல் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்சாண்டர் லுகஷெங்கோவுடன் தொலைபேசியில் உரையாட முயன்றபோது அவர் மறுத்துவிட்டார். தனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முயன்ற பலரை போட்டியிடும் தகுதியற்றவராக்கியிருந்தார் அலெக்சாண்டர் லுகஷெங்கோ. அவர்களின் மனைவியரும் திருமதி திகனொவிஸ்காயாவிற்கு ஆதரவாக களமிறங்கினார்கள். பொதுவாக கடும் குளிர்காலமான ஜனவரி அல்லது பெப்ரவரியில் லுகஷெங்கோ தேர்தலை நடத்துவது வழமை. பனிப்பொழிவால் மக்கள் நடமாட முடியாத நிலை அப்போது இருக்கும். அதனால் பரப்புரையும் அதிகம் நடக்காது அதிக வாக்களிப்பும் நடக்காது. லுகஷெங்கோ தனக்கு ஏற்றபடி வாக்களிப்புக்களைச் செய்யலாம். 

 

பெலருஸின் முக்கியத்துவம்

இரசியாவின் மேற்குப் புறமாக உள்ள போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்த பின்னர் இரசியாவின் மேற்கு கவசப் பிராந்தியம் மிகவும் வலுவிழந்தது. பனிப்போருக்குப் பின்னர் இரசியா தனது மிகப்பெரிய போர்ப்பயிற்ச்சியை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பெலருசுடன் இணைந்து செய்தது. Zapad 2017 என்னும் பெயரிடப்பட்ட இந்தப் போர்ப்பயிற்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இரசியாவின் Zapad 2017 என்னும் போர்ப் பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் புறத்திலும் லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் எல்லையிலும் உள்ள பெலருஸ் நாட்டிலும் இரசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கலினின்கிராட்  என்ற போல்ரிக்கடற் துறைமுகத்திலும் நடந்தது. இரசியாவை சுற்றியுள்ள நாடுகளில் இரசிய சார்பு ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இரசியா கடுமையாக நடந்து கொள்ளும். ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளிற்கு எதிராக இரசியா படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பெலருஸில் இரசியக் கூலிப்படைகளா?

2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்த தேர்தலுக்கு முன்னர் பெலருஸின் 33 இரசியக் கூலிப்படையினரைக் கைது செய்ததாக பெலருஸ் அரசு அறிவித்திருந்தது. இருநூறு இரசியக் கூலிப்படையினர் பெலருஸுக்குள் ஊடுருவியிருப்பதாக கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக இரசியாவிற்கும் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கும் இடையில் உறவு சற்று சீர் குலைந்திருந்தது. இரசியாவில் இருந்து பெலருஸிற்கு வரும் நிதி உதவிகளும் குறைந்திருந்தது. சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் செயற்படும் இரசியத் தனியார் படை அமைபாவக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பெலருஸ் தேர்தலைக் குழப்ப முயன்றனர் என நம்பப்படுகின்றது. இரசியாவிற்கு வேண்டியவரான லுகஷெங்கோ தேர்தலில் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பினால் இரசியக் கூலிப்படையினர் தேர்தலை குழப்ப முயன்றனர் எனவும் கருதப்படுகின்றது. அப்படி தேர்தலைக் குழப்புவதிலும் பார்க்க முறைகேடான தேர்தல் மூலம் தான் வெற்றி பெறலாம் என லுகஷெங்கோ நம்பிச் செயற்பட்டதால் தேர்தலின் போது இரசியாவும் லுகஷெங்கோவும் எதிர் எதிராகச் செயற்பட்டிருக்கலாம். முறைகேடான தேர்தலைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் பெலருஸில் தலையிடலாம் என இரசியா கரிசனை கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். வாழ்த்துச் செய்தி தெரிவித்த பின்னர் கூலிப்படையினர் எனச் சொல்லி கைது செய்து வைத்திருந்தவர்களை லுகஷெங்கோ விடுதலை செய்தார்.

ஆர்ப்பாட்டம் செய்பவரகள் மீது கடும் தாக்குதல்

அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது அவரது கறுப்பு ஆடையணிந்த குண்டர்கள் குடமையாக தாக்குதல் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓசை எழுப்பும் கார்களை அவர்கள் நொருக்குகின்றார்கள். இந்தக் குண்டர்களிடமிருந்து தப்ப பெலருஸ் ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் சீனாவிற்கு எதிராக ஹொங் கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தவற்றைப் பின்பற்றுகின்றார்கள். தாக்குதலுக்கு வரும் குண்டர்களின் நடமாட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து கைப்பேசிகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து ஆர்பாட்டம் செய்யும் இடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அலெக்சாண்டர் லுகஷெங்கோ தனக்கு எதிராகப் போட்டியிட்ட திருமதி திகனொவிஸ்காயாவையும் அவரது பிள்ளைகளையும் மிரட்டி அயல் நாடான எஸ்தோனியாவிற்கு அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புவதால் ஆர்ப்பாட்டத்தை தணிக்கலாம் என அவர் நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தமைக்கு மாறாக ஆர்ப்பாட்டம் உக்கிரமாக நடக்கின்றது. பிள்ளைகளை பணயக்கைதிகள் போல் வைத்திருந்து திருமதி திகனொவிஸ்காயாவை மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னரும் தன் அரசியல் எதிரிகளின் குடும்பத்தினரை சிறையிலடைத்து மிரட்டினார் என அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிரனாவர்கள் சொல்கின்றார். திருமதி திகனொவிஸ்காயாவின் கணவர் இப்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீனா கரம் கொடுக்குமா?

அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன் அவருக்கு முதல் வாழ்த்துச் சொல்லியவர் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகும். சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் சீனாவிற்கும் பெலருஸிற்கும் இடையிலான காத்திரமான கேந்திரோபாய பங்காண்மையை இரு தரப்பினருக்கும் பல துறைகளில் நன்மை தரக்கூடிய வகையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் வாழ்த்து ஐரோப்பிய ஒன்றியத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.

புட்டீன் படை அனுப்புவாரா?

தேர்தலுக்கு முன்னர் தேர்தலை இரசியா குழப்ப முயல்வதாக குற்றம் சாட்டிய அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலுக்குப் பின்னர் தனது நாட்டில் மேற்கு நாடுகள் குழப்பம் விளைவிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். 2020 ஓகஸ்ட் 27-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அல் ஜசீராவிற்கு வழங்கிய செவ்வியில் இரசியப் படையினர் பெலருஸிற்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அனுப்புவதற்கான தேவை இப்போது இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும் அச் செவ்வியில் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ தமது நாட்டில் அமைதியை நிலை நாட்ட இரசிய சட்ட அமூலாக்கப் பிரிவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் புட்டீன் தெரிவித்தார். பெலருஸில் மக்கள் அரசுக்கு எதிராக செய்யும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றால் அதனால் இரசியர்களும் உந்தப்பட்டு புட்டீனிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம்.  பெலரஸு மக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை அளவோடு வைத்திருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் இரசியா தலையிடும் என புட்டீன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

 

"பெலருஸுக்கான எமது செய்தி தெளிவானது. வன்முறையை ஏற்க முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்" என்கின்றார் நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரட்டே. ஆட்சியாளரை மாற்றுவது கடினம் என மேற்கு நாடுகள் கருதும் இடங்களில் அந்த ஆட்சியாளரின் மனதை தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்கள். அப்படி நடக்கும் போது மனித உரிமை ஓரம் கட்டப்படும்.

Friday, 21 August 2020

சீனா உளவுத்துறை

  


மக்கள் சீனக் குடியரசு 1949-ம் ஆண்டு உருவானதில் இருந்தே படைத் துறைத் தொழில்நுட்பங்களை ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் நிகராக உருவாக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை மேற் கொள்கின்றது. தற்போது சீனா உலகத்தில் தனது நிலை தொடர்பாக அவசரம் கலந்த அக்கறை காட்டுகின்றது. 2021-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் 2049-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் சீனா உலக அரங்கில் மேன்மை மிக்க நாடாக கருதப் பட வேண்டும் என சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் விரும்புகின்றார்கள். சீனாவின் தற்போது இளையோர்களாக இருப்பவர்கள் வயதானவர்களாக மாற முன்னர் சீனாவை உலகின் முதன்மை மிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செல்லச் செல்ல சீனாவில் இளையோர் தொகை குறைந்தும் வயோதிபர் தொகை அதிகரித்தும் செல்கின்றது.

வரலாற்றுப் பெருமை மிக்க உளவுத் துறை

சீனாவின் கேந்திரோபாய நோக்கங்களுக்கும் அதன் கனவுகளை நிறைவேற்றவும் உளவு அவசியம் என்பதை சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். Sun Tzu என்ற சீனப் போரியியலாளர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே படையினரின் நகர்வுக்கு முன்னோடியாகவும் முக்கியமாகவும் அமைவது உளவாளிகளே என்றார். அந்தச் சிந்தனைத் தொடர்ச்சி சீனர்களை உலகின் மிகச் சிறந்த இணையவெளி உளவாளிகளாக உருவாக்கியுள்ளது. நவீன சீன உளவுத்துறை கடந்த முப்பது ஆண்டுகளாகவே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்குள் அது பல நூற்றாண்டுகளாக உளவுத்துறையை வைத்திருக்கும் நாடுகளின் உளவுத் துறையை விஞ்சி விட்டது. வெளிநாடுகளின் கல்வி பயிலும் சீன மாணவர்களையும் கால்வி போதிக்கும் சீனக் கல்விமான்களையுமே சீன பெரும்பாலும் தமது உளவாளிகளாகப் பாவிக்கின்றது. பல்வேறு சமூகவலைத்தளங்களையும் சுட்டிகைக் கைப்பேசிகளின் செயலிகளையும் (Smartphone Apps) சீனா தனது உளவுத் தளங்களாகப் பாவிக்கின்றது.

சீனா திருடுவதாக பரவலான குற்றச் சாட்டு

சீனாவின் திருட்டு வேலைகளால் ஆண்டு தோறும் தமக்கு இரு நுறூ முதல் முன்னூறு பில்லியன் டொலர் இழப்பீடுகள் ஏற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இந்தக் குற்றச் சாட்டை சீனா மறுக்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில் நுட இடைவெளியை குறக்க அல்லது இல்லாமற் செய்ய சீனா பல நட்ட கெட்ட வழிகளில் முயல்கின்றது. 1. அமெரிக்காவின் உயர் தொழில்நுட்பங்களை களவாக விலை கொடுத்து வாங்குதல். 2. அமெரிக்க படைத்துறைத் தொழில்நுட்பங்களை இணையவெளித் திருட்டு மூலம் அபகரித்தல். அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய போர்விமானங்களின் தொழில்நுட்பங்களை சீனா திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 3. சீன மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்பித்தல். 4. அமெரிக்கர்களை சீன உளவாளிகளாக்கி அவர்கள் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை பெறுதல். 5. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குள் சீனா மறைமுகமாக நிதி உதவி வழங்கி ஆராச்சிகளை செய்து தொழில்நுட்பங்களைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. உலக ஆதிக்கத்தில் அமெரிக்காவை சீனா முந்துவதற்கு சீனாவிற்கு முதல் தேவைப்படுவது வெட்டு விளிம்பு தொழில்நுட்பமாகும் (Cutting-edge technology) அதைப் பெறுவதற்கு மலிவான வழி அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்களை திருடுவதாகும் என அமெரிக்காவில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு பெரும் சவால்

சீனா அமெரிக்க தொழில்நுட்பங்களைத் திருடுவது அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இணையவெளித் திருட்டை தடுக்க முடியாமல் அமெரிக்கா சீனாவை அதை நிறுத்தும் படி வற்புறுத்தியது. அதற்கு சீனா இணங்க மறுத்த படியால் அமெரிக்கா சீனா மீது வர்த்தக்ப் போர் தொடுத்தது. சீனாவின் திருட்டுடன் தொடர்புடைய 24 பேரை 2019-ம் ஆண்டிலும் 2020 முதல் இரண்டு மாதத்தில் 19 பேரையும் அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறையினர் கைஹ்டு செய்தனர். மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசாரணைகள் நடக்கின்றன. 2019 ஓகஸ்ட் மாதம் ஒரு பயணப் பை நிறைய கதிர்வீச்சுத்தாக்கங்களால் பாதிப்படையாத மைக்குறோசிப்ஸ்களுடன் ஹொங் கொங் பயணமாகவிருந்த 33 வயது சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டார். அவர் கடத்த முயன்றவை ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பாவிக்கப்படும் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்ட இலத்திரனியல் கருவிகளாகும். அமெரிக்காவின் University of Tennessee இன் பொறியியல் துறை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுற்காக ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. அதன் பொறியியற்றுறைப் பேராசிரியல் சீனாவுடன் இணைந்து இரகசிய ஆய்வு செய்வதமைக்காகக் 2020 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டார். 2019 டிசம்பரில் அமெரிக்கப் படைத்துறைக்கு உபகரணங்களை வழங்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று சீனாவில் உற்பத்திய செய்த உபகரணங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தவை எனச் சொல்லி அமெரிக்கப் படைத்துறைக்கு விற்பனை செய்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களில் உளவு பார்க்கக் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றப் பிரிவின் அரைப்பங்கினர் சீனாவின் உளவுத்துறையை கையாள்வதை முழு நேர வேலையாகச் செய்கின்றனர். ஒரு மாதந்தோறும் 72 புதிய சீன உளவு வேலைகள் விசாரணைக்கு உள்ளாகின்றன. Jongjin Tan என்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சீன விஞ்ஞானி 2019 அமெரிக்காவின் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க சொத்துக்களை திருடிய குற்றத்தை நீதி மன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

சீன உளவுத்துறைப் பிரிவுகள்

இணையவெளியில் படைத்துறை இரகசியங்களைத் திருடுவதற்கு சீனப் படைத்துறையின் General Staff Department (GSD) என்னும் பிரிவு பொறுப்பாக இருக்கின்றது. இதை விரிவு படுத்தும் போது 2PLA, 3PLA, 4PLA, என புதிய இணையவெளிஉளவுத்துறைகளும் சீனப் படைத்துறையால் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சீன உளவுத்துறைகள்:

1. Military Intelligence Department

2. General Staff Department (2PLA)

3. Third Department of the Peoples Liberation Army (3PLA)

4. Signals Intelligence (SIGINT)

5. Joint Staff Department

6. Strategic Support Force

சீனாவின் உளவு முறைகள்

சீனா முக்கியமாக ஐந்து வகையான உளவுகளைச் செய்வதாக கருதப்படுகின்றது:

1 தேன் கிண்ணம்: இது ஆண் பெண் உறவை வைத்து திரட்டப்படும் முறையாகும். கள்ளக் காதலை அறிந்து அதை வெளிவிடுவதாக மிரட்டி தகவல்களைப் பெறுவதும் இதில் அடங்கும். 

2. ஆயிரம் மணல்: இதன் மூலம் தேவையற்ற பல தகவல்களைத் திரட்டி பின்னர் அவற்றை ஒன்றாகப் பொருத்திப் பார்த்து இரகசியங்களை அறிவதாகும்.

3. சித்திரவடிவு: இது பல்கலைக்கழகங்களில் இருந்து பல தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து இரகசியங்களை அறிதல்

4. விதையிடல்: இது பரவலாகப் பாவிக்கப்படும் ஓர் உளவு முறையாகும். தமது ஆட்களை எதிரியின் நிறுவனங்களுக்குள் அமர்த்தி உளவு பார்ப்பதாகும்.

5. குடிமக்கள் உளவு: உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட சீனாவின் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழுகின்றனர். அவர்களை சீனா தனது உளவாளிகளாகப் பாவிக்கின்றது.

ஹுவாவே

ஹுவாவே நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கியதன் மூலம் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் முந்திக் கொண்டு 5ஜீ அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. உலக கைப்பேசி தொடர்பாடலில் ஹுவாவே ஆதிக்கம் செலுத்தினால் அதனால் உலகெங்கும் உளவுத் தகவல்களை திரட்ட முடியும் என அமெரிக்கா அஞ்சுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் ஹுவாவேயின் பல சேவைகளையும் உபகரணங்களையும் தடை செய்துள்ளன. பப்புவா நியூகினி அரசின் தேசிய தரவு நிலையத்தை சீனாவின் ஹுவாவே நிறுவனம் 2016-ம் ஆண்டு உருவாக்கியிருந்தது. அந்த நிலையத்தில் சீனா காலாவதியான பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பாவித்ததால் பப்புவா நியூகினியின் தகவல்கள் திருடப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது என அங்கு ஆய்வு செய்த ஒஸ்ரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  


Monday, 27 July 2020

இந்தியா வாங்கிக் குவிக்கும் படைக்கலன்கள்

கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் சீனாவுடன் ஏற்பட்ட முறுகலுக்குப் பின்னர் இந்தியா புதிதாக ஐந்தரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கல கொள்வனவை செய்யவுள்ளதுடன் பிரான்சிடமிருந்து செய்யும் ரஃபேல் பற்பணி விமானக் கொள்வனவையும் துரிதப் படுத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு கொள்வனவுச் சபையின் சிறப்புக் கூட்டம் 2020 ஜூலை 15-ம் திகதி நடைபெற்றது. இந்தியத் தரைப்படை தனது பீஷ்மா போர்த்தாங்கிகளில் (T-90 Bhishma Tanks) பொருத்துவதற்கென 1512 கண்ணிவெடிகளை அகழ்ந்து எடுக்கும் கருவிகளை வாங்குகின்றது. சீனாவுடனான எல்லையைக் கண்காணிப்பதற்கு இந்திய தனது உள்ளூர்த் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. Igla-S என்கின்ற வான் பாதுகாப்பு முறைமையையும் அவசரமாக வாங்குகின்றது. மேலும் இந்தியாவின் அவசரக் கொள்வனவில் இரசியாவிடமிருந்து புதிய 21 மிக்-29 ஜெட் விமானங்களும் ஏற்கனவே வாங்கிய 59 விமானங்களை மேம்படுத்துதலும் அடங்கும். லடாக் பிரதேச முறுகலின் பின்னர் அவசர தேவை அடிப்படையில் இந்தியா பல படைக்கலன்களைக் கொள்வனவு செய்வதால் வழமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு தவிர்க்கலாம். அமெரிக்காவிடமிருந்து வாங்கிய CH-47 Chinook heavy-lift helicopters என்னும் உலங்கு வானூர்திகளை லடாக் பிரதேசத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.

ரஃபேல் கொள்வனவு
பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்கும் இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா முன்பு கடைப்பிடித்தது. அதனால் பிரான்சிடமிருந்து தனக்குத் தேவையான பற்பணி விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதன் பின்னணியில் பல அரசியற் பிரச்சனைகள் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்தியா இரசியாவிடமிருந்து புதிய பன்னிரண்டு Su-30MKI போர்விமானங்களையும் 1.53பில்லியன் டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இரசியா தாமதப் படுத்திய எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா தற்போது துரிதப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிடமிர்ந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Spike anti-tank guided missiles) இந்தியா வாங்குகின்றது. இந்தியாவின் கொள்வனவுப் பட்டியலில் ஜேர்மனியில் இருந்து வாங்குக் 72000 துமுக்கி துப்பாக்கிகளும் (sig 716 rifle) அடங்கும்.
இரண்டு ரஃபேல் படையணிகள்
ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலட்தில் உள்ள அம்பாலா ராணுவ விமான தளம் போய்ச் சேருகின்றன. ஆனால் அவை போருக்குத்தயார் நிலைக்கு வர 2 மாதங்கள் எடுக்கலாம். ஏற்கனவே இந்திய விமானிகளுக்கு பிரான்சில் வைத்து ரஃபேல் போர்விமானங்களை பறக்கும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் முப்பத்தியிரண்டு ரஃபேல் விமானங்களைக் கொண்ட இரண்டு விமானப்படையணியை இந்தியா உருவாக்கவுள்ளது. ஒரு படையணி ஹரியானாவில் அம்பாலாவிலும் மற்றது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானத் தளத்திலும் நிலைகொள்ளவுள்ளன. இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வரும் அம்பாலா விமானத்தளம் சீன எல்லையில் இருந்தும் பாக்கிஸ்த்தான் எல்லையில் இருந்தும் சம தொலைவில் உள்ளது. ஹசிமாரா விமானத் தளம் இந்தியாவின் ஏழு வட கிழக்கு மாநிலங்களை இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கோழிக்கழுத்து என அழைக்கப்படும் சில்குரி பாதையை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். இது பங்களாதேசத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையில் உள்ள குறுகிய பாதையாகும். அத்துடன் இரு விமானத் தளங்களும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.
ரஃபேல் விமானத்தில் பொருத்தக் கூடிய ஏவுகணைகள்:
1. MBDA Scalp ஏவுகணைகள் (Air To Ground Cruise Missile). பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய இந்த MBDA Scalp ஏவுகணைகள் 5.1 மீட்டர் நீளமும் 450 கிலோகிராம் எடை 1000கிமீ/வினாடி தூரம் 560 கிலோ மீட்டர். 
2. Meteor ஏவுகணைகள் Air To Air Missile இவை தற்போது உள்ள வானில் இருந்து வானிற்கு தாக்குதல் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஏவுகணைகளாகும். Meteor ரக ஏவுகணைகள் : 3.7 மீட்டர்  190 கிலோக எடையும் கொண்டவை. இவை ஒலியிலும் பார்க்க நான்கு மடங்கு (Mach4) வேகத்தில் சென்று, 100 கிலோ மீட்டர் வரை உள்ள எதிரி போர் விமானங்களை தாக்கும் வலிமையுள்ளவை.
3. இரசியாவும் இந்தியாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள். பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.  ரஃபேல் விமானங்களும் அவற்றில் பொருத்தப்படவுள்ள ஏவுகணைகளும் இந்திய எல்லையில் பறந்து கொண்டே ரஃபேல் விமாங்களால் னபாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளை அழித்துவிட முடியும். அதே போலவே சீனாவின் பல பிரதேசங்கள் ரஃபேலின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.
இந்தியாவிற்கு என தனித்துவமான ரஃபேல்


பதின் மூன்று ரஃபேல் விமானக்கள் இந்தியாவிற்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் குளிரான கால நிலையில் விமானம் மேலெழும்பக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை India Specific Enhancements (ISE) என அழைக்கப்படுகின்றன. இமயமலைக்கு அண்மையாக உள்ள கஷ்மீர் பிரதேசத்தின் புவி அமைப்பைக் கருத்தில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இமய மலைச் சாரலில் இருந்து விமானங்களை தரையில் இருந்து எழும்பச் செய்வதில் சீனா பெரும் பின்னடைவு நிலையில் உள்ளது.
சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
சீனா அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானங்களின் இரகசியங்களை இணையவெளி ஊடுருவல் மூலம் அபகரித்து தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இப்போது சீனா ஜே-20-பி என ஒரு மேம்படுத்தப்பட்ட போர்விமானங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. ரஃபேல் விமானங்கள் புலப்படாத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் சீனாவின் ஜே-20 போர்விமானங்களும் ஜே-31 போர் விமானங்களினதும் புலப்படாத் தனமை கேள்விக்குறியாகவே உள்ளது. சீன பாதுகாப்புத் துறை ஊடகங்கள் தமது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை இந்தியாவின் ரஃபேல் விமானங்களால் எதிர் கொள்ள முடியாது என மார்தட்டுகின்றன. ஒரு போர் நடக்கும் போது மட்டும் ரஃபேல் எந்த அளவுக்கு சீனாவிற்கு அச்சுறுத்தலானது என அறிய முடியும். விமானிகளின் போர் முனை அனுபவம் எனப்பார்க்கும் போது இந்திய விமானிகள் சிறப்பான நிலையில் இருக்கின்றனர்.
சீனாவை அச்சப்பட வைக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும்.


Monday, 29 June 2020

நேபாளத்தில் சீனாவின் பூபாளம் இந்தியாவின் முகாரி

இந்தியாவுடன் நேபாளம் எல்லைப் பிரச்சனையில் முறுகல் நிலையில் இருக்கையில் 24-06-2020 புதன்கிழமை நேப்பாளத்தின் 33ஹெக்டேயர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நேபாள அரசின் நில அளவைத் திணைக்களத்தின் தகவலின் படி பத்து இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பு படைத்துறையை மட்டும் கொண்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாக சீன உல்லாசப் பயணிகளும், சீன பௌத்த மதகுருக்களும் நேபாளத்தில் சீன ஆதிக்கத்தை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றனர். நேபாளத்தின் வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் சீனர்கள் முதலீடு செய்து அதன் பொருளாதாரத்தை படிப்படியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். சீனா கைப்பற்றி வைத்துள்ள தீபெத்தில் இருந்து நேபாளத்தை நோக்கி பல தெருக்களை சீனா நிர்மாணிக்கின்றது. அத்தெருக்கள் எல்லை தாண்டியும் செல்கின்றன. சீனாவின் பாணியில் நேபாளத்தில் ஆட்சி செய்வது, மக்களைக் கட்டுப்படுத்துவது, போன்றவற்றில் நேபாளத்திற்கு சீனா பயிற்ச்சியளித்து வருகின்றது.



இரண்டு யானைகளுக்கிடையில் நேபாளம்
நேபாளத்தின் பூகோள அமைப்பு இந்திய சீன புவிசார் அரசியல் போட்டியில் முக்கிய இடம் வகிக்கின்றது. தீபெத்தை இந்தியாவிடமிருந்து பாதுகாக்கவும் இந்தியாவிற்கு எதிரான கவசப் பிரதேசமாகவும் சீனா நேபாளத்தைக் கருதுகின்றது. இரண்டு யானைகள் சண்டையிட்டாலும் காதல் செய்தாலும் அதன் காலடியில் இருக்கின்ற புற்கள் நசிக்கப்படுவது போல் சீன இந்திய உறவிலும் போட்டியிலும் நேபாளியர்கள் மிதிபடுகின்றார்கள் என ஒரு நேபாளக் குடிமகன் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார். 1992-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் வர்த்தக உறவை மேம்படுத்திய போது லிபுலேக் கடவையூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வர்த்தகப் பரிமாற்றத்தை செய்ய ஒப்புக்கொண்டன. ஆனால் லிபுலாக் கடவை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ளது என நேபாளம் ஆட்சேபித்த போது  இரு நாடுகளும் அதை உதாசீனம் செய்தன. லிபுலேக் கடவையூடாக சீனா இந்தியாமீதும் இந்தியா சீனாமீதும் ஊடுருவலை மேற்கொள்ள முடியும் என இரு நாடுகளும் கருதுகின்றன.இதனால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாகவும் அது உள்ளது. இது இந்தியாவில் லிபுலேக் கடவை என்றும் சீனாவில் கியங்லா பாதை எனவும் அழைக்கப்படுகின்றது லிபுலேக் கடவையில் இந்தியா தனது படையினரை நிறுத்தியதுடன் அதற்கான பாதைகளையும் மேம்படுத்தியுள்ளது. கைலாசத்தின்ற்கு புனிதப் பயணம் செய்வோரின் வசதிக்காக அந்தப் பாதை செப்பனிடப்பட்டதாக இந்தியா சொன்னது. 2019 நவம்பரில் லிபுலேக் கடவையை உள்ளடக்கிய கல்பானி பிரதேசத்தை தனது வரைபடத்தில் இந்தியா உள்ளடக்கியிருந்தது.


முன்னாள் நண்பன் இன்னாள் பகைவன்
நேபாளத்தின் பொதுவுடமைவாதத் தலைவர் மதன் பண்டாரியின் நினவு நாளில் உரையாற்றிய கே பி சர்மா ஒலி  தன்னைப் பதவியில் இருந்து அகற்ற இந்தியாவில் இருந்தும் நேபாளத்திற்கு உள்ளிருந்தும் சதிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். முன்பு நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக சர்மா ஒலி இருந்த போது இந்திய நேபாள உறவை அவர் வளர்தெடுத்தார். 2015-ம் ஆண்டு அவர் நேபாள தலைமை அமைச்சரானார். 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின்னர் நேபாளத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதித்தது. மூன்று புறம் இந்தியாவையும் நான்காம் புறத்தில் சீனாவையும் எல்லையில் கொண்ட நாடாகிய நேபாளம் தனது தேவைகள் பலவற்றை இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி மூலமாகப் பெறுகின்றது. நேபாளம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியதை இந்தியா வெறுத்ததால் இந்தியா பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது. நேபாளம் நிறைவேற்றிய புதிய அரசிலமைப்பு யாப்பு நேபாள இந்திய எல்லையில் வாழும் மாதேசிய இன மக்களுக்கு என போதுமான நிலப்பரப்பை ஒதுக்கவில்லை என்ற படியால் இந்தியா வெறுப்படைந்திருந்தது. மாதேசிய இனமக்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.



இந்தியாவுடன் முரண்படும் நேபாளம்
உத்தராகண்ட் மாநிலத்தின் பகுஹிகள் என இந்தியா உரிமை கோரும் லிம்பியாதுராகாலாபானிலிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தன் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கும் வகையில் நேபாள பாராளமன்றம் தனது அரசியலமைப்பை திருத்தியுள்ளது. 335 சதுர கிலோ ழ்மீட்டர்(129 சதுர மைல் கொண்ட இந்தப் பிரதேசம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அகலம் குறைந்த ஆனால் நீளமான நிலப்பரப்பாகும். புதிய நேபாள வரைபடத்தை வைத்துக் கொண்டு நேபாள தலைமை அமைச்சர் சீனாவில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் வரும் கொரொன நச்சுக்கிருமிகளிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வரும் நச்சுக் கிருமிகள் ஆபத்தனவை என்றார். இந்தியாவும் சீனா கஷ்மீரின் லடாக் பகுதியில் மோதிக் கொண்டிருக்கையில் நேப்பாளம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியர்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் வரலாறு
1768-ம் ஆண்டு கூர்க்காக்கள் உருவாக்கிய நேபாளத்தின் விரிவாக்கத்தை முதலில் திபெத்தியர் தடுத்து நிறுத்தினர். 1792-ம் ஆண்டு நேபாளத்தை கைப்பற்ற கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி எடுத்த முயற்ச்சி இழப்பு மிக்க போராகியது. அதன் பின்னர் நேபாளத்தில் இருந்து சிக்கிம் பிரிக்கப்பட்டது. பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி தற்போதிய நேபாளம் ஊருவானது. 1923-ம் ஆண்டு பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி நேபாளத்தின் இறையாண்மை ஒரு மன்னராட்சியின் கீழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பிரித்தானியா தனது புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் நேபாளத்தை ஒரு காயாகப் பவித்தது.
நேபாள பொருளாதாரம்
147,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேப்பாளம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் 8000மீட்டர் உயரமான மலைத்தொடர்களையும் கொண்டது. உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றான நேப்பாளம் வெளிநாட்டு உதவிகளிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் பெரிதும் தங்கியுள்ளது. காற்பங்கு மக்களை வறுமைக் கோட்டின் கீழ் கொண்டுள்ள நாடாகிய நேபாளத்தின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள அரசு தனது திறனற்ற ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இந்திய நிலப்பரப்பை நேப்பாளத்தினுடையது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தரையால் சூழப்பட்ட நேபாளத்தின் வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடன் செய்யப்படுகின்றது. நேபாளத்தின் வெளிநாட்டு முதலீடுகளில் அரைப்பங்கு இந்தியாவில் இருந்து செய்யப்படுகின்றது. நேபாளத்தின் நாணயம் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நெடுஞ்சாலைகள், இணையவெளி தொடர்புகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கறகை நிலையங்கள், நலன்புரி நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை கடந்த பல ஆண்டுகளாக இந்தியா நிர்மாணித்து வருகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவும் நேபாளமும் சிறந்த உறவைப் பேணி பல துறைகளில் ஒத்துழைப்புக்கள் செய்தன. 1950-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டுக் குடிமகன் மற்ற நாட்டுக்கு கடவுட் சீட்டின்றி சென்று பணி புரியலாம், தொழில்கள் ஆரம்பிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். இந்த உடன்படைக்கையால் இந்தியாவிற்ல்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள 1800கிமீ(1118மைல்) நீளமான எல்லை ஒரு கட்டுப்பாடற்ற எல்லையாக இருக்கின்றது. அந்த உடன்படிக்கையில் நேபாளம் தனது பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் ஏற்பாடு இருப்பதை நேபாளியர்கள் வெறுக்கின்றார்கள். இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்களிலும் பார்க்க அதிக அளவு இந்தியர்கள் நேபாளத்தில் பணிபுரிகின்றார்கள். அத்துடன் இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்கள் காவலாளிகள் போன்ற குறைந்த ஊதிய தொழிலைச் செய்ய நேபாளத்தில் பணி புரியும் இந்தியர்கள் அதிக வருமானமுள்ள பணிகளைச் செய்கின்றார்கள். நேபாளத்தை உருவாக்கிய தேசத் தந்தை பிரித்வி நாராயண ஷா அவர்களின் திவ்வியபோதனையின் படி நேபாளம் அதன் தென் திசை அயல்நாடான இந்தியாவை விரும்பவில்லை.
புத்தமத வியாபாரம்
கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் தியானம், யோகா போன்றவற்றை உள்ளடக்கிய உல்லாசப்பயணத்துறை பெரும் இலாபகரமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சீனர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றார்கள். நேபாளத்தில் 80 விழுக்காடு இந்துக்களும் பத்து விழுக்காடு இந்துக்களும் இருக்கின்றனர். நேபாளத்தின் இனக் கட்டமைப்பைப் பார்க்கும் போது 82விழுக்காட்டினர் இந்திய-ஐரோப்பியர்களாகவும் 17விழுக்காட்டினர் சீன-திபெத்தியர்களாகவும் இருக்கின்றனர். ஒரே ஒரு இந்து நாடாக இருந்த நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக இருக்கின்றது. இருந்தும் இந்திய நேபாளிய நட்பு மோசமாக இருப்பதற்கு நேபாளத்தின் அரசியல்வாதிகள் இந்தியாவை வெறுப்பதாகச் சொல்லப்படுகின்றது.
சீனா நேபாளத்திற்கு பூ-பாலம் அமைத்திசைக்கும் பூபாளம் இந்தியாவின் முகாரியாகும்.
நேபாளத்தை தன் கவசமாக மாற்ற முயல்வது இந்தியாவிற்கு நேபாளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க சவாலாகும். நேபாளம் சீனாவின் கைக்குப் போனால் அதைத் தொடர்ந்து ஒரு டொமினோ தொடர் சரிவாக பூட்டானும் சீனா வசமாகலாம். அது இந்தியாவின் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம்அசாம்மணிப்புரிமிஸ்ரோம் மேகாலயாநாகலாந்து. திரிபுரா ஏழும் சீனாபூட்டான்மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள். சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (BELT & ROAD INITIATIVE - BRI) என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் 2017-ம் ஆண்டு நேபாளம் இணைந்து கொண்டது. ஆனால் ஒத்துக் கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது. புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனா நேபாளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் கால் பதிக்க வழிவகுக்கும்.
இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்புவதில்லை. இந்தியாவுடன் இணைந்து அந்த ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க செய்யும். இலங்கை, மியன்மார், பங்களாதேசம், மால தீவு போன்ற நாடுகளில் அமெரிக்கா அப்படிச் செய்தது. அதை நேபாளத்திலும் செய்யும் என நம்பும் வகையில நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியவாலியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோவுடன் 24-06-2020 புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

Monday, 22 June 2020

இந்திய வெளியுறவில் இரசியாவின் இடத்தை பிரான்ஸ் பிடிக்குமா?

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று வல்லரசு நாடுகளுக்கும் தமக்கிடையிலேயிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அவற்றிற்கு இடையில் பிளவு ஏற்பட்டால் உள்ள தீமையையும் நன்கு உணர்ந்துள்ளன. அந்த மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதுண்டு. எஞ்சிய வல்லரசுகளான இரசியாவும் சீனாவும் தாம் ஒன்றுபட வேண்டும் என நினைத்தாலும் எந்த அளவிற்கு ஒன்று பட முடியும் என்பதில் நிச்சயமற்றிருக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் தமது பாதுகாப்பையிட்டு கரிசனை கொண்ட நாடுகளாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவின் கேந்திரோபாயப் பாதுகப்புப் பங்காண்மை மற்ற நாடுகளின் பங்காண்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை
எதிரிகள் வீசும் ஏவுகணைகளை இடைமறிப்புச் செய்து அழிக்கும் எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி இந்தியா 2018 ஒக்டோபரில் இரசியாவிடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா செய்தது. இரசியாவின் S-400 Triumf air defence missile systems என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகிலேயே மிகச் சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பதுடன் அமெரிக்காவின் "தாட்" ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் பார்க்க சிறந்ததும் மலிவானதுமாகும்.  இரசியாவினது $500மில்லியன் விலை என்றும் அமெரிக்காவினது $3பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இரசியா எஸ்-400 முறைமையின் இந்தியாவிற்கான விநியோகத்தை 2020 ஒக்டோபரில் ஆரம்பித்து 2021-ம் ஆண்டு முடிப்பதாக இருந்தது. ஆனால் 2020 பெப்ரவரியில் இரசியா கொவிட்-19 தொற்று நோயைக் காரணம் கட்டி எஸ்-400 விநியோகத்தில் இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்படும் என அறிவித்தது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரசியாவிற்கு பயணமானார். மூன்றுமாதங்கள் தடங்கல் ஏற்படுத்திய கொவிட்-19 தொற்று நோய் இரண்டு ஆண்டு கால தாமதம் ஏற்படுத்துகின்றது என்பது நம்ப முடியாத ஒன்று. அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த பிரச்சனைக்குரிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் இரசியா செல்கின்றார் என்பது இந்த தாமத்தில் வேறு அரசுறவியல் பிரச்சனை இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எஸ்-400 முறைமையை ஏற்கனவே சீனாவிற்கு இரசியா வழங்கிவிட்டது. மேற்கு நாடுகள் சீனாவிற்கு எதிராக தொழில்நுட்ப போரை தொடுத்துள்ள நிலையில் சீனா அதிக படைக்கலன்களை இரசியாவிடமிருந்து இனி வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றது. இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு உள்ள தடைகளை மேற்கு நாடுகள் நீக்குவது அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்து மேற்கு நாடுகளிடமிருந்து அதிக படைக்கலன்களை வாங்க வாய்ப்புண்டு. 



இந்திய இரசிய உறவு
இந்தியாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான கேந்திரோபாயப் பங்காண்மை பாக்கிஸ்த்தானில் இருந்து பங்களாதேசத்தைப் பிரிக்க 1971 நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்திய போது இரசியாவும் தனது கடற்படையை இந்தியாவை நோக்கி நகர்த்தியது. பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவை நோக்கி நகர முற்பட்ட போது மத்திய தரைக் கடலில் அதை இரசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தடுத்து நிறுத்தியது. பனிப்போர்க் காலத்தில் இது போல பல சந்தர்ப்பங்களில் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாக நடந்து வருகின்றது.  இரசிய இந்திய உறவு எந்த சூழலிலும் மாற்ற முடியாது என்ற நிலை இது வரை காலமும் இருந்து வந்தது. இரசிய தரப்பில் இந்த உறவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் வேறு விதமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு சீனா தேவைப்படுகின்றது
விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார். மீண்டும் சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பல நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பை இரசியா தலைமையில் உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். இரசியாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடையில் இருந்து இரசியப் பொருளாதாரத்தை தக்க வைக்க இரசிய சீன உறவை மேம்படுத்த விரும்புகின்றார். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும் அது இரசியாவின் படைத்துறை வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த்தும். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தத்தமது நாட்டில் தமது பிடியை உறுதியாக்கியுள்ளனர். அவரிகளின் வெளியுறவுக் கொள்கைக்கு அவர்களின் மக்களிடையே காத்திரமான ஆதரவு உள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றது. அதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க முடியவில்லை. இரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர் விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால் குறைத்தது.
இந்தியாவின் இரசியா தேவைப்படுகின்றது.
இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் வலதுசாரி-பழமைவாதச் சிந்தனை இந்திய அமெரிக்க நட்புறவிற்கு சாதகமாக உள்ளது. நேரு இந்திராவின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து இந்தியாவை உலக அரங்கில் முன்னேற்ற அவர்கள் விரும்புகின்றார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளில் முக்கியமானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று ஒரு வல்லரசாக வேண்டும்; அதற்கு ஏற்ப்ப தனது பொருளாதாரத்தையும் படைவலிமையையும் பெருக்க வேண்டும். ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரத்துடன் இருக்கும் சீனாவின் ஆதரவின்றி இது நடக்காது.  அதுவரை இந்தியாவிற்கு பாதகமாக பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகளை இரத்துச் செய்ய இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு தேவைப்படுகின்றது.
இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பெறும் பிரான்ஸ்
இந்திய இரசிய உறவைப் பற்றி சிந்திக்க வைக்கும் இரு நிகழ்வுகள் 2020 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்தன. ஒன்று இரசியாவின் தாஸ் செய்தி நிறுவனம் அமெரிக்க சீனா போட்டியில் இருந்து இந்தியா விலகி நிற்க வேண்டும் என ஒர் அறிவுறுத்தலை ஒரு நிபுணர் மூலமாக இந்தியாவிற்கு விடுத்திருந்தது. இரண்டாவது பிரெஞ்சு அரசுறவியலாளர் ஒருவர் இந்திய பிரெஞ்சு உறவு பல முனைகளிலும் வளர்கின்றது என்றார். அவரிடம் இரசியாவின் இடத்தை பிரான்ஸ் பிடிக்கப் போகின்றாதா என்ற கேள்விக்கு நேரடியாக அவர் பதிலளிக்காமல் புது டில்லியில் இரசியாவின் இடத்தில் பிரான்ஸ் எனச் சொல்வது பெருமை சேர்ப்பதாகும் என்றார். கஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்த போது பிரான்ஸ் இந்தியாவுடன் உறுதியாக நின்றது. இந்தியாவிற்கு தேவையான போதெல்லாம் ஐநா பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ் இந்தியாவிற்கு முழுமையான ஆதரவுடன் செயற்பட முடியும். அதனால் இந்தியாவிற்கான இரசிய உறவின் முக்கியத்துவத்தை குறைக்கலாம. அது மட்டுமல்ல இந்தியாவிற்கு தேவையான படைக்கலன்களை பிரான்ஸால் வழங்க முடியும். இந்தியாவுடன் படைத்துறைத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த தடைகளை அமெரிக்கா தொடர்ந்து தளர்த்தி வருகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் இஸ்ரேலும் இந்தியாவிற்கு தனது தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதை விரும்புகின்றது. படைத்துறைத் தொழில்நுட்பத்தில் இரசியாவின் தேவை இந்தியாவிற்கு குறைந்து கொண்டே போகின்றது. சுவீடன் சிறந்த போர்விமானங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்கின்றது. அவற்றின் இலத்திரனியல் திறன் தன்னிகரற்றவையாக இருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டமைப்பில் இந்தியாவும் இணைவதை விரும்புகின்றன. அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்க வெளியுறவில் பாக்கிஸ்த்தானின் முக்கியத்துவம் பெரிதும் குறைந்து விடும். அதனால் இந்திய அமெரிக்க உறவு மேம்படலாம். இந்திய வெளியுறவில் இரசியாவின் முக்கியத்துவம் குறைந்து செல்லும் வாய்ப்பு அதிகமாகின்றது.
திட்டமிடப்பட்ட நகர்வுகளா?

இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையில் உறவை வளர்ப்பது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட நகர்வாகவும் இருக்கலாம். அதன் மூலம் இரசியாவிடமிருந்து இந்தியாவைப் விலக்கி இந்தியாவைச் சீன-இரசியாவிற்கு எதிரான தமது அணியில் இனைப்பது அவர்களின் எண்ணமாகவும் இருக்கலாம். 2020 ஜூன் நடுப்பகுதியில் நேட்டோவின் பொது செயலாளர் சீனாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை விடுத்திருந்தார். இந்தியாவிற்கு எதிராக சீனா படைக்கலன்களைப் பாவிப்பதிலும் பார்க்க சீனாவில் இருந்து இந்தியாவிற்குப் பாயும் ஆறுகளை திசை திருப்பி இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சீனா எப்போதும் இந்தியாவிற்கு அச்ச மூட்டும் ஒரு நாடகவே இருக்கும். சீனா உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை நிதானமாகவும் காத்திரமாகவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சீன வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இந்தியாவிற்கு ஒரு வலிமையான நட்புக் கட்டமைபு தேவை. சீனாவை நெருங்கி நட்பை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு எந்த அளவு உதவியாக இருக்கும் என்பதை இந்தியா கவனமாக கருத்தில் கொள்ளும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...