Monday, 12 February 2018

இந்திய சீன முறுகல் நிறுத்தப்பட முடியாதது


இந்திய சீன உறவைப் பற்றிய கருத்தறியவையம் 2018 பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும் எனவும் டோக்லம் முறுகல் நிலை போல் மேலும் பல தொடரும் எனவுக் கருத்து வெளியிட்டிருந்தார்.

எம் கே நாராயணன் எல்லைப் பிரச்சனைகளுக்கு மேலாக சீன இந்தியப் பிரச்சனையில் முக்கிய பங்கு வகிப்பவற்றை முன்வைத்தார்:
1. தலாய் லாமாவிற்கான இந்திய ஆதரவு சீனாவை சீண்டுகின்றது
2. சீனாவின் சீண்டுதல் நடவடிக்கைகள் தொடரலாம்.
3.இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் அயல் நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார மிரட்டல்கள் தொடரும்.
4. சீனாவின் பிராந்தியத் திட்டத்தில் பாக்கிஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு
5. சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், பாக்கிஸ்த்தானிய குவாடர் துறைமுகம் ஆகியவற்றுடன் ஜிபுக்த்தியில் உள்ள சீனப்படைத்தளமும் சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையிலான முறுகலை அதிகரிக்கும்.
6. இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தாலும் போர் நடக்கும் ஆபத்து இல்லை.
7. சீனாவின் நன்னுதல் உபாயம் தொடரும்.


2017 ஓகஸ்ட் மாதம் இந்தியப் படைகளும் சீனப் படைகளும் டொக்லம் பிராந்தியத்தில் ஒரு தரப்பும் மறுதரப்பும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் முறுகல் நிலையில் எதிர் கொண்டிருந்தன. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் சீனாவில் பிரச்சனை இன்றி நடப்பதை சீனா விரும்பியபடியால் அந்த முறுகல் நிலை தவிர்க்கப்பட்டது. அதனால் டொக்லம் சமவெளியில் சீனா மீண்டும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுவிக்கக் கூடிய வகையில் நடக்கலாம் என எம் கே நாராயணன் சீன இந்திய சமகாலப் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுகையில் தெரிவித்தார். அவரின் பேச்சில் நேப்பாளத்தில் நடந்த ஆட்சி மாற்றம் பற்றிய கருத்து உள்ளடக்கப்படவில்லை. ஆனால் நேப்பாளத்தில் நடந்த ஆட்சி மாற்றம் சீனாவால் பூட்டானிலும் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படி நடக்கும் போது சீனா டோக்லம் சமதரையை கைப்பற்றத் தூண்டப்படும்.

இந்துத்தேசியவாதத்தில் ஓர் ஓட்டை துளைக்க முனையும் சீனா.
இந்தியாவில் ஆதரவு அதிகரித்துவரும் இந்து தேசியவாதம் தனக்கு சவால் விடத் துடிப்பதை சீனா அறியும். அதற்கு ஆரம்பத்திலேயே ஓர் அடி கொடுப்பது அவசியம் என சீனா கருத இடமுண்டு. ஆனால் இந்தியர்களின் கௌரவத்தை சிதைக்கக் கூடிய வகையில் சீனா எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு மிகை-தேசியவாதத்தை (Hyper-nationalism) தூண்டும் என்பதையும் சீனா உணரும்.  காங்கிரசுக் கட்சியின் இந்திப் பேரினவாதமும் பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத் தேசியவாதமும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவை என்றாலும் அதை வைத்து இந்தியாவை பிளவு படுத்தும் திறன் மிக்கதாக சீன வெளியுறவுத் துறையோ அல்லது அதன் உளவுத் துறையோ இல்லை. சீனா கைப்பற்றி வைத்துள்ள திபெத்தில் இந்துக்களின் புண்ணிய நிலையமான கைலாய மலையும் அடங்கும். அதை சீனா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இன்றுவரை ஒரு கோரிக்கையாக மட்டும் இருக்கின்றது. இந்துத் தேசியவாதமும் இந்தியப் படையும் உரிய வலிமையை அடையும் போது அது ஒரு மீட்பு முயற்ச்சியாக மாறும்.

அருணாச்சலப்பிரதேசம்
2003-ம் ஆண்டு சீனாவிற்குப் பயணம் மேற்கொண்ட அடல் பிஹாரி வாஜ்பாய் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் சீனா அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவின் கடவுச்சீட்டில் அருணாசலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை சீனா இணைத்தது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இந்திய அதிகாரிகள் சீனா வருவதற்கு நுழைவு அனுமதி தேவையில்லை என்றது. 2009-ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியில் இந்தியா கடன் பெற முனைந்தபோது தனது பிரதேசமான அருணாச்சலப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு இந்தியா கடன் வாங்க முடியாது எனச் சொல்லித் தடுத்தது. இந்திய சீன முறுகலில் என்றும் தீர்க்க முடியாத பிரச்சனையாக அருணாச்சலப் பிரதேசம் இருக்கப்போகின்றது. எம் கே நாராயணன் தனது உரையில் சீனாவின் நன்னுதல் உபாயம் தொடரும் (China’s nibbling tactics will continue) என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சீனா சிறிது சிறிதாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் எல்லைகளுக்கு ஊடுருவி படை நிலைகளை நிறுவி இந்தியாவைச் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கின்றது. அதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. காங்கிரசுக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இவை மூடி மறைக்கப்பட்டன என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த மெல்ல மெல்ல சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கும் சீனாவின் உபாயம் தொடரும் என்பதை எம் கே நாராணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
   

பொருளாதாரத்தில் கவனம் செலுத்திய தளபதி
முன்னாள் இந்தியத் தளபதி ஜெனரல் ரொய் சௌத்திரியும் எம் கே நாராயணன் உரையாற்றிய அதே கருதறியவையில் உரையாற்றினார். அவர் இந்தியப் படையின் வலிமை பலர் நினப்பதிலும் பார்க்க அதிகம் என்றார். அத்துடன் அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரச் செயற்பாடுகள் பற்றியும் உரையாற்றினார். அவர் தொட்ட விடயங்கள்.
1. இந்தியப் பொருளாதாரத்தின் சோம்பல் நிலையும் பேராசையுமே சீனாவிலும் பார்க்க இந்தியா கைத்தொழில்துறையிலும் உற்பத்தித் துறையிலும் பின் தங்கியிருக்கக் காரணம்.
2. இந்தியச் சந்தையில் சீனா தனது பொருட்களைக் கொட்டுவதற்குக்(dumping) காரணம் இந்தியாவின் பிழையான கொள்கைகள்
3. விநாயகர் சிலைகளைக் கூடை சீனா இந்தியாவில் விற்பனை செய்கின்றது.
4. சீனாவுடன் ஒத்துழைப்பு, போட்டியிடல், எதிர்கொள்ளல் ஆகிய மூன்றையும் இந்தியா சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.
5. இந்தியாவின் பொருளாதாரச் செயற்பாட்டையே குறை கூற வேண்டும், சீனாவை அல்ல.
6. இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை இடைவெளி 1962இல் இருந்தது போல் இல்லை.
7. சீனாவுடன் போட்டி போடக் கூடிய வகையில் இந்திய உற்பத்தித் துறை வலிமைப் படுத்தப்பட வேண்டும்.

சீனப் பொருட்கள் இந்தியாவில் பெருமளவில் விற்பனை செய்வதற்குக் காரணம் ஒரு சில இந்தியப் பெரு முதலாளிகளே என்பதைச் சுட்டிக்காட்ட சௌத்திரி தவறிவிட்டார். சீனாவின் படைத்துறை வளர்ச்சிக்கு அதன் பொருளாதார வளர்ச்சி உறுதுணையாக இருக்கின்றது. சீனாவிர்கு ஈடாக இந்தியாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தால் மட்டுமே படைத்துறையில் சீனாவிற்கு இந்தியா ஈடு கொடுக்க முடியும் என்பதாலேயே சௌத்திரி இந்தியப் பொருளாதாரத்தின் சோம்பல் தன்மையை எடுத்துக் காட்டினார்.

மக்கள் தொகைக் கட்டமைப்பை மறந்த நிபுணர்கள்
சீனா ஒரு பிள்ளைக் கொள்கையை கடுமையாக நிறைவேற்றியபடியால் சீனாவில் வயோதிபர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்தும் உள்ளது. இந்தியாவின் நாம் இருவர் நமக்கிருவர் கொள்கை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் உலகிலேயே இளையோர் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியயா இருக்கின்றது. படைத்துறைக்கு ஆட் சேர்பதில் சீனா பிரச்சனையை எதிர் கொள்ளும். இந்தியாவிற்கு அது பெரும் பிரச்சனையாக இருக்காது. எம் கே நாராயணனோ அல்லது ரோய் சௌத்திரியோ சீனா எதிர் கொள்ளும் மக்கள் தொகைக் கட்டமைப்பு பிரச்சனையைப் பற்றியும் இந்தியாவின் சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பையும் பற்றி எடுத்துரைக்கவில்லை.


நீர்ப்பங்கீடு
சீனாவில் உற்பத்தியாகி இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் செல்லும் பிரம்ம புத்திரா நதியை சீனா திசை திருப்பினாலும் அது இந்தியப் பகுதியில் உள்ள பிரம்புத்திரா நதியைப் பாதிக்காது என்றார் முன்னாள் இந்தியத் தளபதி ரோய் சௌத்திரி. அதனால் அதையிட்டு அச்சம்டையத் தேவையில்லை என்பது அவரது கருதாக இருந்தது.  திபெத்தில் உள்ள கைலாய மலையில் உருவாகும் நான்கு பெரும் நதிகளில் இந்திய நீர்த் தேவை பெருமளவில் தங்கியிருக்கின்றது. இந்திய நீர்வளத்தின் 34 விழுக்காடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கைலாய மலையில் இருந்து உருவாகின்றது. அவற்றில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி சீனாவில் சாங்போ (Tsangpo) என அழைக்கப்படுகின்றது.  பிரம்மபுத்திரா நதி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மெகாலயா, சிக்கிம், நாகலாந்து மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உணவு உற்பத்திக்கு நீர்வழங்கிக் கொண்டு பங்களாதேசத்தினூடாகச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றது. சீனாவில் அதிகரிக்கும் நீர்த் தட்டுப்பாட்டிற்கு பிரம்மபுத்திரா திசை திருப்பப்பட வேண்டும் என்ற திட்டம் சீனாவிடமுள்ளது. இந்தியாவின் வட கிழக்கில் இருக்கும் மாநிலங்களை ஆக்கிரமித்தால் அது இலகுவானதாக அமையும். அதனால் சீனா நீண்டகாலமாக அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அருணாசலப் பிரதேச எல்லையில் இந்தியாவும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தவாங் மாவட்டத்தை நோக்கி சீனா பாரிய தெருக்கள் உட்படப் பல  உட்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. சனன் என்னும் நகரில் இருந்து அருணாச்சலபிரதேச் எல்லையை நோக்கி இருநூறு கிலோ மீட்டர் நீளமான எஸ்-202 என்னும் நெடுஞ்சாலை முக்கியமானதாகும். பிரம்மபுத்திரா நதியைத்துருப்புச் சீட்டகப் பாவித்து பங்களாதேசத்தை சீனாவின் பிடிக்குள் கொண்டுவர சீனாவால் முடியும். இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி நீர்வளம் சீனாவின் கையில் இருப்பது மிகவும் அச்சமூட்டுவதே என்பதை ஏன் தளபதி சௌத்திரி உணர மறுத்தார்.

இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களை சீனா அபகரித்தால் அதன் மூலம் பங்களாதேசத்தையும் சீனாவால் இலகுவாக அபகரிக்க முடியும். பின்னர் வங்காள விரிகுடாவில் இருந்து இந்து மாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனாவால் முடியும். சிட்டக்கொங், அம்பாந்தோட்ட, குவாடர் ஆகிய மூன்று துறைமுகங்களும் இந்தியாவிற்கான இறப்புச் சுருக்குக் கயிறாக மாறுவதை இந்தியா எந்த வகையிலாவது தடுக்க வேண்டும். அதற்கான அரசுறவியல் நகர்வுகள் நேப்பாளத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும். அது பின்னர் பூட்டான், பங்களாதேசம், மியன்மார் ஆகிய நாடுகளுடனான நட்பையும் ஒத்துழைப்பையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். சீனாவின் நட்பு இந்த நாடுகளை சீனாவிற்கான கடனாளியாக மாற்றும் என்ற பரப்புரை சிறப்பாக முன்னெடுக்கப்படுவதுடன். இந்தியாவின் நட்பு அந்த நாடுகளுக்கு நன்மையாக முடியக் கூடிய வகையில் இதய சுத்தியுடன் இந்திய வெளியுறவுத் துறை செயற்பட வேண்டும். நேப்பாளத்தில் இவற்றிற்கு நேர் மாறான கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் இந்திய எதிர்ப்பாளர்கள் அங்கு ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை இந்தியா உணர வேண்டும்.

கோழிக்கழுத்து
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை


சீனா இந்தியாவிற்க் எதிராக மாலை தீவை திருப்பி வைத்திருக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அடுத்த புவிசார் அரசியல் சம்பந்தப்பட்ட ஆட்சி மாற்றப் போட்டி மாலை தீவில் தீவிரமாக நடக்கம் போகின்றது. அமெரிக்காவின் உதவி மாலைதீவிலும் இந்தியாவிற்கு மிக அவசியமாகும்.

Monday, 5 February 2018

இந்தியாவின் சாகர்மாலாவும் சீனாவின் பட்டுப்பாதைகளும்

இந்தியாவில் சரக்குகளுக்கான போக்கு வரத்துச் செலவு சீனாவிலும் பார்க்க மூன்று மடங்குக்கு மேல் அதிகம். போக்குவரத்துக்கு எடுக்கும் காலமும் அதிகம். இந்தியா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருக்கின்றது. இந்திய மின் உற்பத்தியில் 69விழுக்காடு நிலக்கரியில் இருந்து பெறப்படுகின்றது. நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு அதிகம் என்ற படியால் மின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதிகம். நிலக்கரிப் போக்குவரத்தில் அதிக செலவு ஏற்படுவதால் இந்தியாவின் மின் உற்பத்திச் செலவு சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கின்றது. சீனாவில் மின் உற்பத்திச் செலவு 7 என்றால் இந்தியாவில் 12 ஆக இருக்கின்றது.
இந்தியாவில் மின்சாரத்திற்கான செலவும் போக்குவரத்திற்கான செலவும் அதிகம் என்ற படியால் இந்தியாவில் எல்லாப் பொருட்களின் உற்பத்திச் செலவு சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கின்றது.

அந்நியனே அந்நியனே வா வா
உலகச் சந்தையில் ஏற்றுமதிக்காகவும் அந்நிய முதலீட்டை கவர்வதிலும் சீனாவுடன் போட்டி போடுவதற்கு போக்குவரத்துச் செலவையும் மின்சார உற்பத்திச் செலவையும் இந்தியா குறைக்க வேண்டும். உதாரணத்திற்குப் பார்ப்போமானால் உருக்கு உற்பத்திச் செலவு இந்தியாவில் சீனாவிலும் பார்க்க 3 மடங்கு அதிகம். டவோஸ் மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உரையாற்றும் போது 2025-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் இரண்டு மடங்காகும் என்றார். அதற்கு ஆண்டொன்றிற்கு 10 விழுக்காடு வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் எட்ட வேண்டும். இந்திய பாதிட்டு குறையை 3 விழுக்காடாக்க வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டம். 2019 ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளும் ஆட்சியாளர்கள் தமது வெற்றியை உறுதி செய்ய அரச செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்கும் எரிபொருள் விலையும் அரச நிதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் சாகர்மாலத் திட்டத்திற்கு அதிக அளவு வெளிநாட்டு முதலீடு தேவைப்படும். உலகின் பல நாடுகளில் 2017-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 2016-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க அதிகரித்திருக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருந்தது. அந்நிய முதலீட்டிற்கு சிவப்பு நாடா நீக்கப்பட்டு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் என்ற வழமையான சுலோகத்தையும் டவோஸில் முன்வைக்கத் தவறாவில்லை. இந்தியாவிற்குப் பயணிப்பது, முதலிடுவது, உற்பத்தி செய்வது ஆகியவை இலகுபடுத்தப் பட்ட்டுள்ளது என்றார் மோடி அங்கே.

சீனா எவ்வழி இந்தியா அவ்வழி
சீனா தனது பொருளாதார அபிவிருத்தியையும் சீர்திருத்தத்தையும் தனது கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரம்பித்தது. அங்கு அந்நிய முதலீட்டை ஊக்குவித்தது. அங்கிருந்து சீனா தனது ஏற்றுமதியை அதிகரித்து தொடர்ந்து பல பத்தாண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை ஈட்டிய ஒரே ஒரு நாடு என்று பாராட்டப்படும் நாடாகியது. பல கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது கரையோரத்தை பயன் படுத்தி தனது பொருளாதாரத்தை மேம்படுத்திய பின்னர் உலகெங்கும் தனது விநியோகத்தையும் கொள்வனவையும் தங்கு தடையின்றி நடக்க முத்துமாலைத் திட்டத்தையும் பட்டுப்பாதைத் திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சீனாவின் வழியில் இந்தியாவும் சாகர்மாலத் திட்டத்தின் மூலம் பயணிக்க முயல்கின்றது.

வாஜ்பாயின் கனவுத் திட்டம்
கடற் போக்குவரத்துச் செலவு நிலப் போக்குவரத்துச் செலவிலும் மிகவும் குறைவானதே. சாகர்மாலாத் திடத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் போக்குவரத்துச் செலவையும் மின் உற்பத்திச் செலவையும் குறைத்து அந்நிய முதலீட்டை கடலோரப் பகுதிகளில் அதிகரித்து பொருளாதார உற்பத்தியைத் தூண்டுவதே.2003-ம் ஆண்டு இந்தியாவில் அப்போது ஆட்சியில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியால் சாகர்மாலத் திட்டம் இரகசியமாக தீட்டப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு மன்மோகன் சிங் தலைமையில் வந்த காங்கிரசுக் கட்சியும் சாகர்மாலத் திட்டம் பற்றிய இரகசியத்தைப் பேணியது. இரண்டு இந்தியப் பேரினவாதக் கட்சிகளும் சாகர்மாலத் திட்டம் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதை இரகசியமாக வைத்திருந்தன.

130பில்லியன் டொலர் திட்டம்
சாகர் மாலா என்பது கடல் மாலை எனப் பொருள்படும். இதற்கான மொத்தச் செலவு 130பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது  8,000,000மில்லியன் இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 150,000 நேரடி வேலை வாய்ப்புக்களும் அதிலும் பல மடங்கான மறைமுக வேலைவாய்ப்புக்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்கின்றது.  7517 கிலோ மீட்டர் கடற்கரையைக் கொண்டது இந்தியா. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களும் மற்றும்187 துறைமுகங்களும் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்திட்டம் பாவனையாளர்-சார் பொருளாதாரக் கேந்திரோபயத் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. ஏற்கனவே உள்ள துறைமுகங்களை பெரிது படுத்துதலும் புதிதாகப் பல துறைமுகங்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். இந்தியாவின் மேற்கில் குஜராத் மாநிலத்தில் இருந்து கிழக்கில் ஒரிசா மாநிலம் வரை இத்திட்டம் நீண்டிருக்கின்றது. ஆறுக்கு மேற்பட்ட பாரிய துறைமுகங்கள் பதின்னாங்கிற்கு மேற்பட்ட கடற்கரைப் பொருளாதார வலயங்கள் உருவாக்கப் படவிருக்கின்றன.

1. துறைமுகங்களை நவீனமயப்படுத்தல், 2. துறைமுகங்களை தொடர்புபடுத்தல்
3. துறைமுகம்-சார் அபிவிருத்தி, 4. கடற்கரை சமூக அபிவிருத்தி 5. ஆற்றுவழிப் போக்குவரத்துக்கள் உருவாக்கபட்டு அவற்றைத் துறைமுகங்களுடன் இணைத்தல் ஆகியவை சாகர்மாலத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இதில் பழைய துறைமுகங்களை சீரமைத்தல், புதிய துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களிடையேயான இணைப்பு, துறைமுகங்களையும் பெரு நகரங்களையும் இணைத்தல் ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியத் துறைமுகங்களை வெளிநாட்டுத் துறைமுகங்களுடன் தொடர்பு படுத்துதல் ஆகியவையும் அடங்கும். தொடருந்துப் பாதைகளை துறைமுகங்களுடன் இணைக்கப்படும். விமானப் போக்குவரத்தும் துறைமுங்களுடன் தொடர்பு படுத்தப்படும். குளிர்பதன வசதிகள், சேமிக்கும் வசதிகள் போன்றவை உருவாக்கப்படும்.

சீனாவின் பாதைகள் பல
சீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த பட்டுப்பாதைகளை Belt and Road, One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள். சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும் சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது. இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள் போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. இதில் ஒன்பது பில்லியன் டொலர்கள் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள் கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.

இந்தியாவின் 1200இற்கு மேற்பட்ட கடற்கரையோரத் தீவுகள் வெளிநாட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். 1450கடல் வழிப் பாதைகள் உருவககப்படும். 12இற்கு மேற்பட்ட சுட்டிகை நகரங்கள் (Smart Cities) உருவாக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பனிபடர்ந்த பட்டுப்பாதை
சீனா கடல்வழிப் பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை ஆகிய இரண்டையும் முன்னெடுக்கும் சீனா துருவப்பட்டுப்பாதை என மூன்றாவது பட்டுப்பாதையையும் உருவாக்கும் வெள்ளை அறிக்கையை 2018 ஜனவரி 26-ம் திகதி வெளியிட்டுள்ளது. புவி வெப்பமாவதால் வட துருவத்தில் உள்ள பனி உருகி அதனூடாக கப்பல் போக்குவரத்துச் செய்யக் கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது புவியின் வட முனையான ஆர்க்டிக் வளையத்தில் கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, இரசியா, சுவீடன் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் எல்லையைக் கொண்டிருந்தாலும் அதில் பெரும் பகுதி உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவுடையதே. ஆர்க்டிக் வளையத்தினூடாகச் சீனா தனது ஏற்றுமதியை வட ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவுற்கும் மிகக் குறுகிய தூரக் கப்பற் பயணத்தால் செய்ய முடியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சீனா இரசியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பைச் செய்ய வேண்டி வரும் அது இந்தியாவிற்கு சவாலாக அமையும்.

சீனாவின் இனிய கனவு இந்தியாவின் நித்திரையைக் கெடுக்கிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதையான ஒரு வளையம் ஒரு பாதை திட்டம் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாக உறுதி செய்வதாகும். அதன் குறுங்காலத் திட்டம் சீனாவில் மிகையாக உள்ள உற்பத்திச் சாதனங்களை பயன் படுத்தி பல நாடுகளின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்து அந்த நாடுகளை சீனாவுக்கு கடன் படச் செய்தல். நடுத்தர காலத் திட்டம் அத்திட்டத்துக்குள் வரும் நாடுகளை தன்னைச் சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்புக் கொண்ட நாடுகளாக மாற்றுவதும் அங்குள் வளங்களை தனது தேவைகளுக்குப் பயன்படுத்துவதும். நீண்ட காலத்திட்டம் அந்த நாடுகளில் படைத்துறை ஆதிக்கத்தைச் செலுத்துவது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடாக மாறவிருக்கும் இந்தியா தனது நாட்டு மக்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்க உலகச் சந்தையில் தனது ஏற்றுமதியைக் கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும். அதைச் செய்ய இந்தியாவால் முடியாமல் போகும் நிலையை சீனா ஏற்படுத்தினால் இந்தியா உலகிலேயே அதிக அளவு வறிய மக்களைக் கொண்ட நாடாக மாறலாம். அது இந்தியாவில் பல உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கவும் நாடு பிளவுபடும் ஆபத்தை அதிகரிக்கவும் செய்யும்.

இரசியாவின் ஆர்க்டிக் ஆதிக்கம்
வட துருவப் பகுதிகளில் கப்பலோட்டுவதில் இரசியா அமெரிக்காவிலும் பார்க்க சிறந்து விளங்குகின்றது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் வளங்களையும் கனிம வளங்களையும் மேற்கு நாடுகள் சூறையாடமல் தடுப்பதற்கு இரசியா பல நடவடிக்கைக்களை எடுக்கின்றது. வட துருவத்தினூடான கப்பல் போக்குவரத்தில் மற்ற நாடுகள் அக்கறை செலுத்துவதை இரசியா அறியும். வடதுருவத்தின் ஆர்க்ரிக்சார் நீர் பகுதியில் (subarctic waters) தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட பரென்ஸ் கடற்பகுதிக்கு 2018 ஜன்வரி இறுதியில் தனது போர்க்கப்பல்களை அனுப்பி அங்கு ஆட்டிலறி பயிற்ச்சிகளையும் ஏவுகணை எதிர்ப்புப் பயிற்ச்சிகளையும் செய்தது. இரசியாவின் கடல் கேந்திரோபாயத் திட்டத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் இரசிய நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தமது வலிமையைப் பெருக்க முனைப்புக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசைமாறும் நட்புகள்
சீனாவும் இரசியாவும் துருவப் பட்டுப்பாதையில் கை கோர்க்கும் போது அது இந்தியாவை அமெரிக்காவை நோக்கி மேலும் நகர்த்தும். ஏற்கனவே இந்தியாவும் அமெரிக்காவும் Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) என்னும் உடன்படிக்கை மூலம் இந்தியாவில் அமெரிக்கப் படைகள் தமது படைக்கலன்களைப் பராமரிக்கவும் திருத்துதல் வேலைசெய்யவும் வழங்குதல்களைப் பெறவும் முடியும். இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் ஈடுபட்டுள்ள உற்பத்தி நிறுவனங்களையும் பாதுகாக்க வலிமை மிக்க கடற்படையைக் கொண்ட அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட வேண்டியிருக்கும்.

சாகர்மாலா மாநில அதிகாரங்களைச் சாகடிக்குமா?
இந்தியாவின் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியக் கடலோரம் வாழும் 25 கோடி மீனவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும். கடலோரப் பகுதிகளில் இருந்து மீனவர்கள் வெளியேற்றப்பட்டு பிற மாநிலத்தவர்களும் பிற நாட்டவர்களும் குடியேற்றப்படுவார்கள்.

தமிழர்களின் இறைமைக்கு ஆபத்து
. இந்துத்துவாவின் கொள்கை மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகும். அதற்கான ஒரு கருவியாக சாகர்மாலா திட்டம் பாவிக்கப்படலாம்.
தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின் கைக்குப் போவதாலும், தமிழ்நாட்டுக் கரையோரங்களில் பிறநாட்டவர்களும் பிற மாநிலத்தவர்களும் குடியேற்றப்படுவதாலும், படைத்தளங்கள் அமைக்கப்படுவதாலும் தமிழர்களின் இறைமைக்கு ஆபத்து. தமிழர்களின் கவசமாக இருப்பவர்கள் கரையோரங்களில் வாழும் மீனவர்கள். அவர்கள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மீன் பிடித்துறை முழுவதும் கூட்டாண்மை (corporate) நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும் ஆபத்தும் உண்டு

அதானிகளின் அடிமைகளாக தமிழர்கள்
பாரதிய ஜனதா ஆட்சியாளர்களின் முதலாளிகளான அதானி போன்றோரினதும் அவர்களுடன் இணைந்து செயற்படும் வெளிநாட்டு கூட்டாண்மைகளினதும் பணியாளர்களாக தமிழர்கள் மாறி அவர்களின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆக்கப்படலாம். பிரித்தானிய ஆட்சியின் போது தமிழ்நாட்டுத் தமிழர்களின் நீர்வளம் மிக்க நிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கு ஜமீந்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தமிழர்கள் தம் வாழ்வாதரங்களை இழந்து உலகெங்கும் உள்ள பிரித்தானியப் பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


சாகர்மாலா  தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தான ஒன்றே!

Friday, 2 February 2018

எதிரிகளின் அணுக்குண்டுகளைச் சமாளிக்க அமெரிக்கா முயலும் வகைகள்

வட கொரியா போன்ற சிறு நாடுகள் கூட அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்கும் வேளையிலும் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக தேவை ஏற்படின் அணுப் படைக்கலன்களைப் பாவிக்கத் தயங்க மாட்டோம் என இரசியா பகிரங்கமாக அறிவித்திருக்கையிலும் சீனா தனது படைவலுவை மிகத் துரிதமாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும் அமெரிக்கா எதிரிகளின் அணுப்படைக்கலன்களை அழிக்க பல் வேறு வழிகளை உருவாக்கி வருகின்றது.

அமெரிக்க ஆதிக்க முறியடிப்பு
எதிரி நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்( “Anti-Access/Area Denial strategy”) உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக் கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை. ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில் படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர் வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர். அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தை முறியடிக்க அணுப்படைக்கலன்கள் அவசியமானவை என அதன் எதிரி நாடுகள் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களைக் கொண்டிருந்தால் அமெரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை வட கொரியா உலகிற்கு உணர்த்தியுள்ளது. தன் எதிரிகளின் அணுப்படைக்கலன்களை புதிய முறைகள் மூலம் அணுக அமெரிக்கா முனைகின்றது.

இணைய வெளியூடான தாக்குதல்
எதிரியின் அணுப்படைகளுடன் தொடர்பு பட்ட கணினித் தொகுதிகளை இணையவெளி ஊடுருவல் மூலம் செயலிழக்கச் செய்வதும் எதிரியின் செய்மதிகளை அழிப்பதும்இணைந்த ஒரு வகை பாதுகாப்பு முறைமைய அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதனால் எதிரி அணுக்குண்டு வீசுவதை தற்காலிகமாகத் தடை செய்ய முடியும். அந்த இடைப்பட்ட வேளையில் எதிரியின் அணுக்குண்டு வீசும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க வேண்டும். மைக்குரோவேவ் என்னும் நுண்ணலைத் தொழில்நுட்பம் கொண்ட குண்டுகளை வீசுவதன் மூலம் எதிரியின் கணினிகளைச் செயற்படாமல் தடுக்க முடியும். இணயவெளி ஊடுருவலிலும் பார்க்க இது செயற்திறன் மிக்கது. ஆனால் ஏவுகணை எதிர்ப்பு முறைமையைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

இடை மறிப்புத் தாக்குதல்
அமெரிக்காவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை ஒன்று ஒன்று கடும் போட்டியாக உருவக்கி வருகின்றன. இஸ்ரேல், இரசியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உருவாக்குகின்றன. அத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலிய ஆகிய நாடுகள் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன. ஆனால் மறுபுறத்தில் பல நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றன. ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக பெரும்பாலான ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் செயற்பட முடியாது. ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான், துருக்கி உட்படப் பல நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருக்கின்றன. இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது உள்ள ஏவுகணைகளில் அதிக வேகமாகப் பாயக் கூடியவை.

ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் லேசர் கதிர்கள்
லேசர் கதிர்களை பாவித்து எந்த வேகத்தில் வரும் ஏவுகணைகளையும் அழிக்க முடியும். இது சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா உருவாக்கிய உபாயமாகும். இப்படிப் பட்ட லேசர் படைக்கலன்களை பரிசோதிக்கும் போதுதான மலேசியாவின் எம்.எச்-17 பயணிகள் விமானம் தவறுதலாக அகப்பட்டுக் கொண்டது என்ற சதிக்கோட்பாடும் சிலரால் முன்வைக்கப்பட்டது.

ரொபோக்களைப் போரில் ஈடுபடுத்துதல்
செயற்கை விவேகத்தின் (artificial intelligence) வளர்ச்சி ரொபோக்கள் என்னும் இயந்திர மனிதர்களை போர்களம் இறக்கும் திறனை உருவாக்கியுள்ளது. முதலில் ஒரு படையணியை வழிநடத்துவதற்கும் தாக்குதல்களை நெறிப்படுத்துவதற்கும் செயற்கை விவேகம் பாவிக்கப்பட்டது. போர்களத்தில் இருந்து பெறப்படும் பல்வேறு தகவல்களை அடிப்படியாக வைத்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக முடிவெடுக்கும் பணியை ரொபோக்கள் செய்தன. இவை கட்டளைப் பணியகத்தில் உள்ள தளபதிகளின் பணியை திறன் மிக்கதாக்கியது. தற்போது போர்க்களத்தில் இறக்கப்படக் கூடிய ரொபோக்கள் உருவக்கப்படுகின்றன. இவை அணுக்குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியுலும் நின்று செயற்படும். இவற்றை களமிறக்கிய பின் தாமாகவே போர் புரியும். எவரும் அவற்றை இயக்கத் தேவையில்லை.

எதிரியின் அணுக்குண்டுகளை நிர்மூலமாக்குதல்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா எதிரியின் அணுக்குண்டுகளை எதிரியின் இடத்தில் வைத்தே அழித்து ஒழிக்கும் முறைமை பற்றி பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றது. 2017 நவம்பரில் அமெரிக்கக் கடற்படையினர் உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரீட்சித்தனர். உலகின் மிகக் கூடிய தொலைவில் உள்ள இலக்கை ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த ஏவுகணைகளால் தாக்க முடியும். இவை மரபு வழிப் படைக்கலன்களை அதாவது அணுக்குண்டு அல்லாத குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. எதிரியின் அணுக்குண்டுகளை ஒழிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு Conventional Prompt Global Strike (CPGS) எனப் பெயரிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சங்கள்
1. மரபுவழிக் குண்டுகளைப் பாவித்தல்
2. ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை முறியடிக்கக் கூடிய வகையில் ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைப் பாவித்தல்.
3. உலகின் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தும் திறன் பெறுதல்.
4. மிகத் துரிதமான நடவடிக்கை.
இவற்றால் தான் இத்திட்டத்திற்கு மரபுவழி துரிதசெயலில் உலகெங்கும் தாக்குதல் {Conventional Prompt Global Strike (CPGS)} எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்போது சீனாவும் இதே போன்ற முறைமையை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வட கொரியாவை அதன் அணுக்குண்டுகளைக் கைவிடாவிட்டால் தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது. இது வட கொரியாவை அடக்க மறுக்கும் சீனாவைப் பழிவாங்கு நடவடிக்கையே. ஏற்கனவே சீனா இந்தியாவின் அணுக்குண்டுகளையும் அதன் ஏவுகணைகளின் வளர்ச்சியையும் இட்டு மிகக் கரிசனை கொண்டுள்ளது.

ஆக மொத்தத்தில் படைகலப் போட்டி பல வழிகளில் தொடரும். அதனால் பெருமளவு பணம் விரயமாகும். ஆனல் உலகம் அமைதியடையப்போவதில்லை.


Monday, 29 January 2018

சீனாவில் சிதைக்கப்பட்ட அமெரிக்க சிஐஏ

ஜெரி சுன் ஷிங் லீ என்பவர் ஹொங் கொங்கில் இருந்து நியூயோர்க் சென்ற வேளையில் அங்கு கெனடி விமான நிலையத்தில் வைத்து 2018 ஜனவரி 15-ம் திகதி கைது அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBIயினால் செய்யப்பட்டார். ஹொங் கொங்கில் அதிகம் அறியப்படாடதவரான இவர் சிஐஏயிஅமெரிக்க அரசிற்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 53 வயதான ஜெரி சுன் ஷிங் லீ சிஐஏயில் பணி புரிந்தவர். அதிலிருந்து 2007-ம் ஆண்டு விலகி ஹொங் கொங்கில் வசித்து வந்தவர். அவர் சிஐஏயிற்கு எதிராகச் செயற்பட்டவர் என்பதை சிஐஏ அறிந்திருந்த வேளையில் அவரது அமெரிக்கப் பயணம் அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

படைத்துறையில் ஆரம்பித்த ஜெரி சுன் ஷிங் லீ
ஜெரி சுன் ஷிங் லீயிற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களின் படி அவர் 1982இல் இருந்து 1986வரை அமெரிக்கத் தரைப்படையில் அவர் கடமையாற்றியிருந்தார். பின்னர் 1994இல் சிஐஏயில் இணைந்து கொண்டார். அமெரிக்க உளவுத் துறையில் பணி புரிவர்களின் உண்மையான பெயர்கள், அவர்களின் சந்திப்புகள், பணிபுரியும் இடங்கள், தொடர்பாடல் இலக்கங்கள், அவர்களுக்கு வழங்கப் பட்ட வசதிகள் அடங்கிய குறிப்பேட்டை ஜெரி சுன் ஷிங் லீ வைத்திருந்தமையை அமெரிக்க அரசு 2012-ம் ஆண்டே அறிந்திருந்தது. 2007-ம் ஆண்டு சிஐஏயில் இருந்து விலகிய ஜெரி லீ அமெரிக்காவில் இருந்து ஹொங் கொங் சென்று அங்கு ஏலத்தில் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.


சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்கள் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா போன்ற தீவிரவாத இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பகரம், நேர்மை, கிடைப்புத்தகமை (Confidentiality, integrity and availability) ஆகியவை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின்தூயதிரித்துவங்களாகும்என் அந்த அமைப்புச் சொல்கின்றது. அது தன் உளவாளிகளை சொத்துக்கள் என்றே அழைக்கின்றது. வெறும் மனிதர்கள் மட்டும் அதன் உளவாளிகள் அல்ல பல்வேறுவிதமான உளவுக் கருவிகளையும் அது பாவிக்கின்றது. கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோவைக் கொல்லும் முயற்ச்சியில் படு தோல்வியையும் பின் லாடனைக் கொன்றதில் பெரு வெற்றியையும் சிஐஏ கண்டிருந்தது.


மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாற்றப்பட்டது.

தான் தோன்றித்தனமிக்க சிஐஏ
அமெரிக்காவின் எந்த அரச அமைப்புக்களுக்கோ நீதித் துறைக்கோ பொறுப்புக் கூறும் நிர்ப்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தன்னிச்சைப்படி செயற்படும் ஓர் அமைப்பாக சிஐஏ திகழ்கின்றது என பல மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். இதனால் சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளும் நடவடிக்கைகளை இந்த நூற்றாண்டில் ஆரம்பத்தில் தொடங்கியது. சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொண்டது. யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரகசியமாக சிறைக்கூடங்களையும் சித்திரவதைக் கூடங்களையும் சிஐஏ நடத்துவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இரகசியத் தன்மையை இழந்த சீனா
சீனாவின் ஆட்சியினதும் பொதுவுடமைக் கட்சியினதும் உயர் மட்டங்களில் நடப்பவை எல்லாம் சிஐஏ அறிந்து கொள்ளக் கூடிய வகையில் தனது உளவாளிகளை அது உருவாக்கியிருந்தது.  அதற்கு பல சீன வம்சாவளி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினரைப் பயன் படுத்தியது. அவர்கள் உலகின் பல் வேறு இடங்களில் இருந்து செயற்பட்டனர். சீனாவில் சிஐஏயிற்கு உளவு பார்க்கக் கூடியவர்கள் இவர்கள் மூலம் திரட்டப் பட்டனர். அவர்களில் பலர் சீன அரசு, பொதுவுடமைக் கட்சி, உட்படப் பல் வேறு நிறுவனங்களில் உயர் மட்டங்களில் பணி புரிபவர்கள். இதனால் சீன அரசினதும் பொதுவுடமைக் கட்சியினதும் முடிவுகள் செயற்பாடுகள் பற்றி அமெரிக்கா அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் சீனாவில் இருந்து கிடைக்கும் உளவுத் தகவல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து 2010-ம் ஆண்டு எந்த ஒரு இரகசியத் தகவல்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சிஐஏயின் வரலாறு காணாத இழப்பு
தனது நாட்டில் நடப்பவற்றை அமெரிக்கா நன்றாக அறிந்து கொள்கின்றது என்பதை சீனா 2005-ம் ஆண்டில் உணர்ந்து கொண்டது. அதற்கான உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயற்படுத்தத் தொடங்கியது. அது எப்படி தனது நாட்டிற் செயற்படும் உளவாளிகளை அறிந்து கொண்டது, அவர்களை எப்படித் தண்டித்தது என்பதை உலகம் அறியாது. சீனாவில் செயற்பட்ட எல்லா அமெரிக்க உளவாளிகளையும் சீனா கண்டு பிடித்தது அமெரிக்க உளவுத் துறைக்கு வரலாறு காணாத இழப்பாகும். அமெரிக்கா படு இரகசியமாக வைத்திருந்த உளவாளிகள் பற்றிய தகவல்கள் எப்படி சீனாவின் கைகளில் சிக்கியது என்பதை இரண்டு ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு சிஐஏ ஆராயத் தொடங்கியது. முதலில் தமது கணினிகளை சீனா ஊடுருவி தகவல்களைப் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலேயே ஆராயத் தொடங்கியது சிஐஏ. இந்த ஆய்வில் உளவுத் துறையான சிஐஏயிற்கும் புலனாய்வுத் துறையான FBIயிற்கும் முறுகல்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. இறுதியில் சிஐஏயைச் சேர்ந்த ஒருவர்தான் சீனாவிற்கு தகவல் வழங்குகின்றார் என அறிந்து கொள்ளப்பட்டது. அது ஜெரி சுன் ஷிங் லீ எனவும் சிஐஏ கண்டறிந்தது.

கடுமையாகவும் இரகசியமாகவும் செயற்பட்ட சீனா
சிஐஏயின் உளவாளியாகச் செயற்பட்ட ஒரு சீனரை சீன அரசு பொது இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றது. இது மற்ற சீன அரச அதிகாரிகளுக்கும் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கும் விதத்தில் நிறைவேற்றப்பட்டது. பகிரங்கமாகச் செய்யப்பட்டதால் இது போன்ற சில செய்திகள் மட்டும் வெளியில் வந்தன. சீனாவிற் செயற்பட்ட இருபது சிஐஏ உளவாளிகளை சீன அரசு கொன்றிருக்கலாம் அல்லது சிறையில் அடைத்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை நம்புகின்றது. சரியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் சிறையிலடைக்கப்பட்டனர் என்பது எட்டு ஆண்டுகள் சென்றும் அமெரிக்காவால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை.

விட்டுப் பிடித்த அமெரிக்கா
ஹொங் கொங்கில் இருந்து ஜெரி சுன் ஷிங் லீ 2012-ம் ஆண்டு அமெரிக்கா திரும்பிய போது அவர்தான் தமக்குத் துரோகம் செய்தவர் என்பதை அறிந்திருந்தும் அவரைக் கைது செய்யாமல் விட்டது.  போதிய தகவல்கள் பெறுவதற்காக அப்படிச் செய்யப்பட்டது. முன்னாள் சிஐஏ உளவாளிகளை மீளப் பணிக்கு அமர்த்துவது என்ற போர்வையில் அவருடன் சிஐஏயின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர். அவர் மீண்டும் ஹிங் கொங் செல்ல அனுமதிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டன.


பல்வேறு வாதங்கள்
அமெரிக்காவின் உளவுத்துறை ஒரு சீன வம்சாவளியினரை பணிக்கு அமர்த்தியது தவறு என சிஐஏ மீது பல அமெரிக்கர்கள் சினம் கொண்டுள்ளனர். ஆசியர்கள் எப்படித்தான் அமெரிக்கக் குடிமகக்களாகி நாட்டுக்காக உழைத்தாலும் அவர்களுக்கு வெள்ளையர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, சன்மானம், பாராட்டு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில்லை அதனால் அவர்கள் பல ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் விரக்தியடைந்து அமெரிக்காவை வெறுப்பவர்களாக மாறுகின்றனர் என்ற குற்றச் சாட்டும் முன் வைக்கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவின் பிறக்காமல் வெளிநாடுகளில் பிறந்து அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்புத் தேடிச் சென்று குடியுரிமை பெற்ற பல இலட்சம் பேர் அமெரிக்காவிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வது அமெரிக்காவின் எதிரி நாடுகளை வியக்க வைப்பதும் உண்டு.


2010இல் சீனாவில் சிதைக்கப்பட்ட சிஐஏ 201 கட்டமைப்பிலும் பார்க்க சிறந்த கட்டமைப்பு 2018இல் சீனாவில் இல்லை எனச் சொல்ல முடியாது!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...