வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும். எமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம். இது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.
வட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும். விமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும். அது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.
வட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம். உருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும். அத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
வட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு. அவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.
தனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.
Friday, 8 December 2017
Monday, 4 December 2017
சிக்கல் என்றால் அது மேற்காசியா
அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியினர், யூதர்கள், குர்திஷ்கள்
எனப் பலதரப்பட்ட இனங்கள் ஆயிரக்கணக்கான இனக் குழுமங்கள் போன்றவற்றை கொண்ட இயற்கை
வளம் மிக்க மேற்காசியாவில் மன்னராட்சி, மக்களாட்சி, மதவாத ஆட்சி, தன்னதிகாரிகளின் ஆட்சி எனப் பலவிதமான
ஆட்சிகள் இருப்பதால் அங்கு சிக்கல்களுக்கு குறைவில்லை. பிராந்திய வல்லரசுகளுக்கு
இடையிலும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான போட்டி அந்த சிக்கல்களை மேலும்
மோசமாக்குகின்றது.
அகலக் கால் வைக்கும் இரசியா
சிரியா, ஈராக்,
யேமன் ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் போரும் கட்டாருக்கும் மற்றைய வளைகுடா
நாடுகளுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையும் இரசியாவின் மேற்காசிய ஆதிக்கத்திற்கு
வாய்ப்பாக அமைந்தன. எரிபொருளில் தன்னிறைவடைவதும் இஸ்ரேலின் பாதுகாப்பு அசைக்க
முடியாத நிலையில் இருப்பதாலும் ஐக்கிய அமெரிக்கா மேற்காசியாவிலும் வட
ஆபிரிக்காவிலும் தனது கவனத்தை குறைக்க முடிவெடுத்து. அது இரசியா
அப்பிராந்தியத்தில் தனது பிடியை இறுக்க ஏதுவாக அமைந்துள்ளன. சிரியாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக
கஜகஸ்த்தான் தலைநகர் அஸ்டானாவில் 2015 மே மாதத்தில் இருந்து ஒரு பேச்சுவார்த்தை இரசியாவின்
ஏற்பாட்டின் பேரில் நடக்கத் தொடங்கியது. அமெரிக்கா ஏற்பாடு செய்த ஜெனீவாப் பேச்சு
வார்த்தைக்கு மாற்றாக இது ஏற்பாடு செய்யப்பட்டது. 2016 டிசம்பரில் சிரியாவில்
இரசியா தன்னை ஒரு பிரச்சனை தீர்க்கும் நடுவராக முன்னிறுத்தியது.
இரசியா கைவிட முடியாத
சிரியா
சிரிய உள்நாட்டுப் போரின்
இறுதிக் கட்டத்தில் அங்கு ஒரு ஆட்சி உருவாக்குபவராக (King Maker) திகழ இரசியா பெரிதும்
விரும்புகின்றது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைக் காப்பாற்ற
ஹிஸ்புல்லா அமைப்பை போராட வைத்ததுடன் பல நாடுகளில் இருந்து போராளிகளைத் திரட்டி
சிரியாவிற்கு அனுப்பியது ஈரான். போர் முடிந்த சிரியாவிலும் தனது ஆதரவுப் படைகள்
தொடர்ந்து நிலை கொண்டிருக்க வேண்டும் என ஈரான் விரும்புகின்றது. அதாவது லெபனானில்
ஹிஸ்புல்லா அமைப்பின் மூலம் தனது பிடியை ஈரான் இறுக்கி வைத்திருப்பது போல
சிரியாவிலும் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது.
சிரியாவைக் கைப்பற்றத்
துடிக்கும் ஈரான்
இரசிய நகர் சொச்சியில்
நடந்த சிரிய சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈரானும், இரசியாவும் துருக்கியும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதாக ஒத்துக் கொண்டன. சிரியா
தொடர்பான இந்த மூன்று நாடுகளிடையேயான ஒற்றுமையை ஈரான் சந்தேகக் கண்களுடனேயே
பார்க்கின்றது. இரசியா சிரியா தொடர்பாக அரபு நாடுகள், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, சிரியா எனப் பல தரப்புக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்
கொண்டிருக்கின்றது. சிரியா தொடர்பான இரசியாவின் இறுதி நோக்கம் என்பதையிட்டு ஈரான்
கரிசனை கொண்டுள்ளது. சொச்சி நகரில் நடந்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் சிரிய
அதிபர் பஷார் அல் அசாத் மொஸ்கோ சென்றது ஈரானுக்கு முன்கூட்டியே
அறிவிக்கப்படவில்லை. ஆனால் அப்பயணம் தொடர்பாக முன் கூட்டியே இரசிய அதிபர்
விளடிமீர் புட்டீன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அறிவுறுத்தியதுடன்
தொலைபேசியூடாக ஒரு கலந்துரையாடலையும் செய்திருந்தார். இது இயல்பாகவே ஈரானை
எரிச்சலூட்டக் கூடிய ஒன்றுதான்.
கட்டவிழ்த்த கட்டார்
இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லவ்ரோவ்
காட்டாருக்கு மேற்கொண்ட பயணத்தின் போது வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள உறுதியற்ற
நிலைபற்றி தனது கரிசனையை வெளியிட்டார். அமெரிக்காவை நம்பிப் பயனில்லை என்ற
நிலையில் கட்டார் தனக்கான ஆதரவுத்தளத்தை ஈரான், துருக்கி,
இரசியா என விரிவு படுத்துகின்றது. கட்டாரின் வான் பாதுகாப்புப்
பணியை இரசியா ஏற்க முன் வந்துள்ளது.
ஈராக்கும் இரசியாவும்: நானா குர்திஷ்த்தானா?
ஈராக்கிய சியா இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமது
நாட்டில் ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கு ஈரானைப் பெரிதும் நம்பினார்கள். அமெரிக்காவின்
உதவியை இரு கைகளும் நீட்டி வரவேற்றனர். ஆனால் இரசியாவை தமது நாட்டுக்குள்
அனுமதிக்க வில்லை. ஆனால் ஐஎஸ் தொடர்பான உளவுத் தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து
கொண்டன. ஈராக் எழுபத்தி மூன்று T-90S மற்றும் T-90SK போர்த் தாங்கிகளை இரசியாவிடமிருந்து வாங்கவுள்ளது. அதே வேளை
ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசிடமிருந்து இரசியா எரிபொருள் வாங்க முடிவு
செய்ததையும் அப்பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகக் குழாய்களில் இரசியா முதலீடு
செய்ய முடிவு செய்ததையும் ஈராக்கிய அரசு கடுமையாக ஆட்சேபித்தது.
யேமன்
ஒரு சாதாரண படைக்குழுவாக இருந்த ஹூதிகள் தற்போது சவுதி அரேபியா
வரை பாயக் கூடிய ஏவுகணைகளைக் கொண்ட வலிமை மிக்க படையாக மாறியுள்ளது. அரபு நாட்டின்
வறுமை மிக்க நாடாகிய யேமன் உள் நாட்டுப் போராலும் சவுதி அரேபியா தலைமையிலான படையினரின்
தாக்குதல்களாலும் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றது. 2017 டிசம்பர் 4-ம் திகதி
யேமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே சவுதி அரேபியாவிற்குத் தப்பி ஓடுகையில்
கொல்லப்பட்டார் என ஹூதி போராளிகள் அறிவித்தனர். 2017 டிசம்பர் 2-ம் திகதி யேமனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அணு உலை மீது யேமலில் இருந்து ஏவுகணை வீசியதாக ஹூதி போராளிகள் தெரிவித்தனர்.
ஈராக்கும் ஈரானும்
அண்மைக் கால வரலாற்றிலே மேற்காசியாவில் மிக
நீண்ட காலம் போர் புரிந்த நாடுகள் ஈரானும் ஈராக்கும் ஆகும். வளைகுடாவை தனது
ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற ஈராக்கின் நீண்டகாலக் கனவை தடுத்து
நிறுத்தியவர் முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேய்ன். ஈராக்கின் ஐ எஸ்
அமைப்புக்கு எதிரான போரின் போதும் குர்திஷ் தனிநாட்டுப் பிரகடனத்தின் போதும்
ஈரானுக்கு ஈராக் படைத்துறை ரீதியாகவும் அரசுறவியல் நடவடிக்கை ரீதியாகவும் பேருதவி
புரிந்தது. நீண்ட காலம் சுனி முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கை சியா
முஸ்லிம்களின் ஆட்சியை உருவாக்கி அதைத் தக்க வைப்பதில் ஈரானின் பங்களிப்பு
காத்திரமானது. ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து பஸ்ரா நகரை மீட்பதில் ஈரானின் படையினர்
பெரும் பங்கு வகித்தனர். இப்போது ஈராக்கிலும் ஈரானிய ஆதரவுப் படையினர் பெருமளவில்
இருக்கின்றனர்.
ஆப்பிழுத்த அமெரிக்கா
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி அகற்றப்பட
வேண்டும், இஸ்லாமியத் தீவிரவாதம் ஒழிக்கப் படவேண்டும்
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கொள்கையுடன் சிரியாவில்
தலையிட்டது அமெரிக்கா. சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கும் போது இரசியா உலக
விவகாரங்களில் இருந்து விலகி இருந்தது. உக்ரேன் தனது எதிரிகளின் கைகளுக்குப்
போவதைத் தடுக்க அது உலக விவகாரங்களில் தலையிட வேண்டிய சூழல் உருவானது. சிரியாவில்
அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக அங்கு களமிறங்கியது அமெரிக்காவில்
அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலானது. ஐ எஸ் அமைப்பு போராளிகளிடமிருந்து நிலங்களைக்
கைப்பற்றுவதில் வெற்றி காண அமெரிக்காவிற்கு உதவிய போராளிக் குழுக்கள் இரண்டு
வகைப்படும். ஒன்று குர்திஷ் போராளிக் குழு மற்றது அரபுக்களைக் கொண்ட பல்வேறுபட்ட
போராளி அமைப்புக்கள். அசாத் அரசு முழு சிரியாவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர
வேண்டும் என்கின்றார். அது அவரால் முடியும். ஆனால் அமெரிக்காவிற்காகப் போராடிய
குழுக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அமெரிக்காவின் நம்பகத்தைதன்மைக்கு சவால்
விடுக்கின்றது. ஏற்கனவே பல தடவைகள் அமெரிக்காவால் முதுகில் குத்தப்பட்ட குர்திஷ்
போராளிகள் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்கா பயிற்ச்சியும்
படைக்கலன்களும் வழங்க்கிய பல போராளிகள் அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல்
நஸ்ரா அமைப்புடன் இணைகின்றார்கள். அது அமெரிக்காவிற்கு ஆபத்து விளைவிக்கக்
கூடியது.
கால் விட்டுத் தவிக்கும் சவுதி
2011-ம் ஆண்டு யேமனிலும் அரபு வசந்தம் எனப்படும் மக்கள் எழுச்சி உருவானது. அதுவும்
சிரியாவைப் போலவே ஒரு பெரும் உள்நாட்டுப் போராக மாறியது. அதை ஹூதி இனத்தவர் தமக்குச்
சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களுக்கு ஈரானும் லெபனானில்
இருந்து செயற்படும் சியா அமைப்பான ஹிஸ்புல்லாவும் ஆதரவு வழங்கின. பூகோள ரீதியில் யேமன்
ஈரான் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் இருப்பது சவுதி அரேபியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
செங்கடலுக்கும் ஏடன் வளை குடாவிற்கும் இடையிலான குறுகிய மண்டெப் நீரிணை (Mandeb Strait) யேமனை ஒட்டியே இருக்கின்றது.
அதன் ஒரு புறத்தில் யேமனும் மறு புறத்தில் சோமாலியாவும் எதியோப்பியாவும் இருக்கின்றன.
இந்த சிக்கலான நிலையில் யேமனில் சவுதியின் எதிரிகள் ஆட்சியில் அமர்வது ஆபத்தானதாகும்.
இதனால் 2015 மார்ச் மாதம் 26-ம் திகதி சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர்
யேமனில் ஹூதி இனத்தினர் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். ஆனால் சவுதி அரேபியா
அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக உலகெங்கும் இருந்து குற்றச் சாட்டுக்கள்
முன்வைக்கபட்டு வருகின்றது. அங்கு ஒரு வெல்ல முடியாத போரை சவுதி அரேபியா
செய்வதாகப் படைத்துறை நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர். யேமனில் அகப்பட்டுள்ள தனது கால்களை சவுதி அரேபியா கௌரவமாக வெளியே எடுக்க
விரும்புகின்றது என்பதை இரசியா அறியும். சவுதி ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில்
அங்கு இரசியா தலையிடுவதை சவுதி அரேபியா விரும்பும் என்பதையும் இரசியா அறியும்.
இந்த நிலையில் அங்கு தலையிட இரசியா காய்களை நகர்த்துகின்றது. 2017 ஒக்டோபரில்
இரசியாவிற்குப் பயணம் மேற்கொண்ட சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல் அல்
ஜுபீர் இரு நாடுகளுக்கும் இடையில் பல முனைகளில் ஒத்துழைப்பு வளர்க்கப்படும்
என்றார். யேமனில் சவுதி ஆதரவு அமைப்புக்களில் ஒன்றான இஸ்லாமிய சகோதரத்துவ
அமைப்பின் அல் இஸ்லா படைக்குழுவின் மீது ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்படையினர்
தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து யேமனில் சவுதி அரேபியாவின் நிலை மேலும்
சிக்கலானது. இந்த நிலையில் சவுதிக்கு சாதகமாக இரசியா யேமனில் காய்களை நகர்த்துவது
அங்கு அமெரிக்காவை ஓரம் கட்டும் என இரசியக் கொள்கை வகுப்பாளர்கள்
கருதுகின்றார்கள். யேமனில் பல சமாதான முயற்ச்சிகளை மேற்கொண்ட குவைத்தும் ஓமானும்
பயன் ஏதும் கிடைக்காததனால் களைப்பும் சலிப்பும் அடைந்துவிட்டன.
லெபனான்
லெபனானில் உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு
சிரியாவிலும் யேமனிலும் சவுதி அரேபியாவின் கேந்திரோபாய நலன்களுக்கு எதிராகச்
செயற்பட்டுக் கொண்டிருப்பதால் அதை அடக்க சவுதி அரேபியா விரும்புகின்றது.
ஹிஸ்புல்லா லெபனானில் மட்டும் செயற்படவேண்டும்; இஸ்ரேலுக்கு
எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சவுதி அரேபியா இருக்கின்றது.
ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் ஈராக், சிரியா, லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சியா பிறைத்திட்டத்தை நிறைவேற்ற
முனைப்புக் காட்டுகின்றது. அதையிட்டு அரபு நாடுகள் மட்டுமல்ல இஸ்ரேலும் அதிக
கரிசனை கொண்டுள்ளது. மேற்காசியாவின் அடுத்த சிக்கலான போர்க்களமாக லெபனான்
உருவெடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
தன்னிலை இழக்க விரும்பாத இஸ்ரேல்
அரபு வசந்தத்தின் பின்னர் இஸ்லாமிய சகோதரத்துவ
அமைப்பு ஆட்சிக்கு வந்ததால் கரிசனை கொண்ட இஸ்ரேல் அது ஆட்சியில் இருந்து
அகற்றப்பட்டு முன்பு இருந்ததிலும் பார்க்க மோசமான நிலையை அடைந்ததால்
நிம்மதியடைந்தது. சிரியா இனி தன்னுடைய எதிரி நாடாக இருக்கும் என இப்போது இஸ்ரேல் நினைக்கின்றது.
தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உருவாகுவதைக் கொஞ்சம் கூட இஸ்ரேல்
அனுமதிப்பதில்லை. முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்துவிடும்.
சிரியாவில் ஈரானிய ஆதரவு படைக்குழுக்கள்
நிலைகொள்வதற்கு அமெரிக்காவும் இரசியாவும் உடன்பட்டுள்ளன. அது லெபனானூடாக இஸ்ரேலுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் இஸ்ரேல் கலவரமடைந்துள்ளது. சிரிய விவகாரத்தில்
இரசியாவுடன் பல அம்சங்களில் இஸ்ரேல் ஒத்துழைத்தது. சிரியாவில் நிலைகொண்டுள்ள
ஈரானிய சார்புப் படைக்குழுக்களால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படாது என இரசிய
வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இஸ்ரேலுக்கு உறுதியளித்துள்ளார்.
ஈரானின் விரிவாக்கக் கனவும் அதையிட்ட சவுதி
அரேபியாவின் கரிசனையும் அரபு இஸ்ரேல் மோதலிலும் பார்க்க ஆபத்தானது. அது பேரழிவைக்
கொண்டு வரக் கூடியது என்பது சிரியாவிலும் யேமனிலும் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதில்
எல்லோரும் பலஸ்த்தீனியர்களை மறந்து விட்டனர்
Thursday, 30 November 2017
மூன்று சுற்றுக்களிலும் முற்றுப் பெறாத உக்ரேன் பிரச்சனை
உக்ரேனில் அமைதியை
ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிநிதி கேர்ட்
வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே
சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு சுமூகமான
உடன்பாடு எட்டப்படவில்லை. சேர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில் நடந்த இந்த மூன்றாவது
சுற்றுப் பேச்சு வார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் அமைதி ஏற்படுத்துவது
தொடர்பாக வெவ்வேறு எண்ணக்கருக்களைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அமைதிக்கான பேச்சு
வார்த்தை தொடரும் எனவும் தெரிவித்தனர்.
முதல் இரு சுற்றுப் பேச்சு
வார்த்தைகள்
அமெரிக்க மற்றும் இரசியப்
பிரதிநிதிகளான வொல்கரும் சுர்கோவும் பெல்கிரேட்டில் 2017 ஓகஸ்ட் 21-ம் திகதி முதலாவது சுற்றுப் பேச்சு வார்த்தையும் ஒக்டோபர் 7-ம் திகதி இரண்டாம்
சுற்றுப் பேச்சு வார்த்தையும் நடத்தியிருந்தனர். கேர்ட் வொல்கரும் முன்பு நேட்டோவிற்கான அமெரிக்கப்
பிரதிநிதியாகக் கடமையாற்றியவர். இரசியப் பிரதிநிதி விலடிஸ்லே சுர்கோவிற்கு எதிராக
ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்திருந்தது. முதலாம் சுற்றுப் பேச்சு
வார்த்தையில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை. பேச்சு வார்த்தை சுமூகமாகவும்
நேர்மையுடனும் நடைபெற்றது என இருதரப்பினரும் முடிவில் தெரிவித்தனர். இரண்டாம்
பேச்சு வார்த்தையில் ஐக்கிய் நாடுகள் சபையின் அமைதிப்படையை உக்ரேனுக்கு அனுப்புவது
பற்றிய கருத்து முன் வைக்கப்பட்டது.
உக்ரேன் பிரச்சனையின்
வரலாறு
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உக்ரேன்
தனி நாடாகியது. அப்போது சோவியத் ஒன்றியத்தின்
மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது. இதானால் உக்ரேன் உலகிலேயே
ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும்
அடுத்த படியாக மூன்றாவது பெரிய அணுக்குண்டு
நாடாக உருவெடுத்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும்
இரசியாவும் அதை விரும்பவில்லை. அரசியல் உறுதிப்பாடில்லாத ஒரு புதிய நாட்டிடம் அதிக
அணுக்குண்டுகள் இருப்பது எங்கு போய் முடியும்
என்ற அச்சம் பல நாடுகளிடம் அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் தமது நாட்டில் உள்ள
அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார். அவர் கேட்ட
நிபந்தனை பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது
The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. அதன்படி உக்ரேனின் பிராந்திய
ஒருமைப்பாட்டை இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன. சோவியத் ஒன்றியத்தின்
வீழ்ச்சிக்குப் பின்னர் தனது ஆதிக்க நிலப்பரப்பை
இரசியா விரிவாக்கவே விரும்பியது. அதன் முதல் முயற்ச்சியாக இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து சுதந்திர
நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.
பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா, தேர்க்மெனிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான்
ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும்
இணைந்து கொண்டது. பின்னர் உக்ரேன்,
ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான்
ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின்
பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின. ஆனால் உக்ரேனை ஐரோப்பிய
ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைக்கும் சதிகள் திரைமறைவில் நடப்பதை அறிந்த இரசிய
அதிபர் விளடிமீர் புட்டீன் கடும் சினமடைந்தார். உக்ரேன் நேட்டோவில் இணைந்தால்
இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க நேரிடும் எனப் படைத்துறை நிபுணர்கள்
கருத்துத் தெரிவிக்குமளவிற்கு இரசியாவிற்கு உக்ரேன் கேந்திர முக்கியத்துவம் மிக்க
நாடாகும். உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் இணைப்பதற்கு ஏற்ப அங்கு
ஆட்சி மாற்றம் அரங்கேற்றப்பட்டு பெட்றே பொரோஷெங்கோ (Petro Poroshenko)உக்ரேனின் ஆட்சி
பீடத்தில் ஏறினார். கிறிமியாத் தீபகற்பம் உட்பட்ட உக்ரேனின் கிழக்குப்
பிராந்தியத்தில் இரசியர்களே அதிகம் வாழ்கின்றனர். இரசியாவுடன் எல்லையைக் கொண்ட
இப்பிராந்தியத்தில் இரசியர்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்கள் சோவியத்
ஒன்றியத்தில் உக்ரேன் இணைந்திருந்த வேளையில் குடியேறியவர்கள். இதனால் உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாதம் இலகுவாக உருவாக்கப்பட்டது. இரசியா
கிறிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில்
பெருமளவு இரசியப் படைகள் கனரகப் படைகலன்களுடன் இரகசியமாக நிலைகொண்டிருப்பதாக
மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
வெளுக்காத கிழக்கு
உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க், லுதன்க்ஸ்க் (Donetsk and Luhansk) ஆகிய மாகாணங்கள் இரசிய ஆதரவுப் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன. அந்த மாகாணங்களில் உள்ள அமைதியற்ற சூழலை முடிவுக்குக் கொண்டுவர அங்கு
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை நிறுத்த இரசியாவும் அமெரிக்காவும்
முயல்வதாகத் தெரிவித்தன. பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேன் அரசுக்கும் மோதல் நடக்கும்
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் கனரகப் படைக்கலன்கள் இருக்கக் கூடாது என்பது
அமெரிக்காவின் நிலைப்பாடு என கேர்ட் வொல்கர் பேச்சு வார்த்தைக்கு முன்னர் கருத்து
வெளியிட்டிருந்தார்.
உறை
நிலையில் இருந்து உருகு நிலை
உக்ரேனின் கிழக்குப்
பிராந்தியம் நவம்பரில் பனியால் மூடப்பட்டு உறைந்து போய் இருக்கும். அங்கு நடந்த
போரும் கடந்த சில மாதங்களாக உறைநிலையிலேயே இருந்தது. Luhansk People's Republic என்று தம்மைப் பிரகடனப் படுத்தி ஒரு “அரசை” லுதன்க்ஸ்க் மாகாணத்தில் நடத்தி வருபவர்களுக்கு இடையில் ஒரு குழப்ப நிலை
2017 நவம்பர் 27-ம் திகதி உருவானது. உள்துறை அமைச்சர் Igor Kornetஐ அரசுத் தலைவர்
Igor
Plotnitsky பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். ஆனால் காவற்துறையைத் தன்வசம் வைத்திருந்த உள்துறை அமைச்சர் Igor Kornet அதிபர் Igor Plotnitskyஐ பதவி நீக்கம் செய்தார்.
இதனால் Igor
Plotnitsky இரசியாவிற்குத் தப்பி ஓடினார். டொனெட்ஸ்க்
மாகாணத்தில் இருந்து வந்த படையினர் Igor Kornetஇற்கு உதவி செய்து Igor Plotnitskyஇன் ஆதரவாளர்களைக் கைது
செய்தனர். பின்னர் Igor Plotnitsky உடல் நலமின்மையால் பதவி விலகுவதாக அறிவித்தார். பாதுகாப்புத் துறை
அமைச்சர் Leonid Pasechnik இடைக்கால அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இரசியாவில்
ஏற்பட்டஉள்ளகப் போட்டியால் உக்ரேனில் பதவிப் போட்டி நடப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் கருத்து
வெளியிட்டுள்ளன.
எந்த எல்லையில் அமைதிப்படை?
ஐக்கிய நாடுகள் சபையின்
அமைதிப்படையினரை இரசிய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனின்
பிரதேசங்களையும் ஏனைய உக்ரேன் பிரதேசத்திற்கும் இடையிலான எல்லையில் நிறுத்தப்பட
வேண்டும் என 2017 செப்டம்பரில் இரசிய அதிபரி விளடிமீர் புட்டீன்
தெரிவித்திருந்தார். அதற்கு உக்ரேனில் இருந்தும் மேற்கு நாடுகளில் இருந்தும் கடும்
எதிர்ப்புக்கள் கிளம்பின. அதனால் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனைய
அரசு ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால் இரசியா தனது படையினரையும்
படைக்கலன்களையும் உக்ரேனில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து தடையின்றி
அனுப்பலாம் என அதை எதிர்ப்பவர்கள் கருத்து வெளியிட்டனர். அதனால் இரசிய அதிபரின்
முன்மொழிவு உக்ரேனை இரண்டாகப் பிரிக்கும் சதி என விமர்சிக்கப்பட்டது. அதைத்
தொடர்ந்து தனது முன்மொழிவுகள் பேச்சு வார்த்தை மூலம் மாற்றக் கூடியது என புட்டீன்
தெரிவித்திருந்தார். உக்ரேனும் மேற்கு நாடுகளும் இரசிய உக்ரேன் எல்லையில் ஐக்கிய
நாடுகள் சபையின் அமைதிப்படையினர் நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றன.
மின்ஸ்க் உடன்படிக்கை
உக்ரேனின்
கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் ஆகிய மாகாணங்களில் 2014 ஏப்ரல் மாதம் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேன்
அரசுக்கும் இடையில் தொடங்கிய மோதலில் பத்தாயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர்.
இருதரப்பினருக்கும் இடையில் மோதலைத் தவிர்க்கும் பேச்சு வார்த்தைகள் செப்டம்பர்
2014இலும் பெப்ரவரி 2015இலும் பெலரஸ் தலைநகர் மின்ஸ்கில் நடந்து மோதல் தவிர்ப்பு
ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதற்கு மின்ஸ்க் உடன்படிக்கை எனப் பெயரும் இடப்பட்டன.
இருதரப்பினரும் அதை மீறி மோதலில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் உக்ரேனுக்கான சிறப்புப் பிரதிந்தி கேர்ட்
வொல்கரும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சிறப்பு ஆலோசகர் விலடிஸ்லே
சுர்கோவும் 2017 நவம்பர் 13-ம் திகதி நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில்
வெளிவிட்ட கூட்டறிக்கையில் மின்ஸ்க் உடன்படிக்கைப் படி மோதல் தவிர்ப்புச்
செய்வதற்கு அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்திட்டங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
பொருளாதாரத் தடையும்
அமைதிப்படையும்
2014இல் உக்ரேனின் கிறிமியாவை
இரசியா தன்னுடன் இணைத்தமைக்கும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியா
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியமும்
அமெரிக்காவும் கனடாவும் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை கொண்டு
வந்தன. உக்ரேனில் மேற்கு நாடுகளின் வேண்டுகோளின் படி ஐநா அமைதிப்படையை
நிறுத்தினால் அதற்குப் பதிலாக இரசியா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்ற
இரசியாவின் கோரிக்கையை ஜேர்மனி உடனடியாக நிராகரித்தது. இரண்டையும் தொடர்புபடுத்தக்
கூடாது என்பது மேற்கு நாடுகளின் நிலைப்பாடாகும்.
முழு உக்ரேனும்
இரசியாவிற்கு வேண்டும்
இரசியாவிற்கு கிறிமியா
கட்டாயம் வேண்டும். இரசியாவின் கடற்படைக்கு அது மிக முக்கியமாகும். அடுத்து
இரசியாவிற்கு மேற்கு நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க முழு உக்ரேனும்
அவசியமாகும். உக்ரேன் இரசியாவின் பாதுகாப்புக் கவசமாகும் என்பதாலே உக்ரேன்
இரசியாவின் எதிரிகள் வசமானால் இரசியா தனது வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டும்
எனத் தெரிவிக்கப்படுகின்றது. முழு உக்ரேனையும் வன்முறை மூலம் இரசியமயமாக்க
முடியாது. இரசியா உக்ரேனின் டொனெட்ஸ்க் ஆகிய இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் மாகாணங்களை
மட்டும் தனதாக்கினால் அது இரசியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்காது.
தொடர்ந்தும் அந்த இரு மாகாணங்களில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கும் ஆதரவு
முழு உக்ரேனியர்களையும் இரசியாவிற்கு எதிராகத் திருப்பிக் கொண்டிருக்கின்றது.
இரசியாவிற்கு செலவு மிக்க உக்ரேன்
மேற்கு நாடுகளின்
பொருளாதாரத் தடைகளாலும் சரிந்து போன எரிபொருள் விலையாலும் இரசியப் பொருளாதாரம்
பாதிப்புக்கு உள்ளாகியது. உக்ரேனின் டொனெட்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள அரச ஊழியர்களின்
சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்கு மட்டும் இரசியா ஆண்டு தோறும் ஒரு பில்லியன்
அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றது என ஜேர்மனிய நிறுவனம் ஒன்று
மதிப்பிட்டுள்ளது. இரசியா செய்யும் மொத்தச் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஆறு பில்லியன்
டொலர்களுக்கும் அதிகம் என உக்ரேனிய அரச நிறுவனம் ஒன்றின் மதிப்பீடு
தெரிவிக்கின்றது. இது சற்றி மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும்
கருதப்படுகின்றது. ஒரு முடிவில்லாத பிரச்சனைக்கு இரசியா தொடர்ந்து பெருந்தொகைப்
பணத்தை செலவு செய்ய முடியுமா?
டிரம்பின் கைகளைக்
கட்டிப்போட்ட பாராளமன்றம்
உக்ரேன் விவகாரச் சிக்கலில்
இருந்து இரசியாவைத் தப்ப வைக்கத்தான் டொனால்ட் டிரம்பை விளடிமீர் புட்டீன்
தேர்தலில் வெற்றியடைய வைத்தார் என்ற குற்றச் சாட்டு சட்ட அடிப்படையில்
அமெரிக்காவில் நிரூபிக்கும் நிலையை ஒட்டி நகர்வுகள் இப்போது அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன. டொனால்ட் டிரம்ப் இரசியாவிற்கு உக்ரேன் விவகாரத்தில் எந்தவித
விட்டுக் கொடுப்பும் செய்ய முடியாத அளவிற்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு
அவைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிரியாவில் பஷார் அல்
அசாத்திற்கு எதிரான போரில் இரசியா தலையிட்டு அதை உக்ரேன் விவகாரத்தில் பேரம்
பேசும் இரசியாவின் உத்தி வெற்றியளிக்கவில்லை. இரண்டையும் தொடர்பு படுத்த மேற்கு
நாடுகள் விரும்பவில்லை. ஆனால் சிரியாவில் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில்
விளாடிமீர் புட்டீன் வெற்றியடைந்தார். வட கொரியாவிலும் அமெரிக்காவிற்குப் பிரச்சனை
கொடுக்கும் வகையில் புட்டீன் செயற்படுகின்றார். ஆனால் புட்டீனின் இந்த
நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்கா உக்ரேனுக்கு தாக்குதல் படைக்கலன்களை
வழங்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இரசியாவின் நட்புறவை அடிப்படையாக வைத்து உக்ரேனுக்கு
கடுமையான தாக்குதல் படைக்கலன்களை அமெரிக்கா வழங்காமல் இருந்தது. இரசியா
தொடர்ச்சியாக பல முனைகளில் அமெரிக்காவிற்குப் பிரச்சனை கொடுப்பதைச் சாக்காக
வைத்துக் கொண்டு இரசியாவிற்கு சவால் விடக்கூடிய படைக்கலன்கள் உக்ரேனுக்கு இப்போது
வழங்கப்படுகின்றன.
சோவியத் ஒன்றியத்தின்
உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்தபடைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன்
இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில்
தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு
உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க
அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை
உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது
இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா
என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள
உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு
மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக்
கூடியவை.
இரசியாவுடன் அதிக அளவு
வர்த்தகத்தை செய்து வந்த ஜேர்மனி இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் தனது
ஏற்றுமதி வருமானத்தை இழந்துவிட்டது. உக்ரேனில் ஒரு சுமூகமான தீர்வு விரைவில்
வருவதை ஜேர்மனி பெரிதும் விரும்புகின்றது. அத்துடன் இரசியாவில் இருந்து மலிவாகவும்
இலகுவாகவும் எரிபொருளை ஜேர்மனி இறக்குமதி செய்ய விரும்புகின்றது.
உக்ரேனியப் பிரச்சனை
பொருளாதாரத் தடை, சிரியாவில் தலையீடு, அமெரிக்கத்
தேர்தலில் குறுக்கீடு, வட கொரியாவில் பிரச்சனை எனச் சுற்றி
இப்போது மூன்றாவது சுற்றுப் பேச்சு வார்த்தை வரை இழுபடுகின்றது. ஆனால் மோசமடைவது
உக்ரேனின் பொருளாதாரம்.
Tuesday, 21 November 2017
சவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி
சிரியா, ஈராக், லெபனான்,
யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம்
சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் அல்ல.
அந்தப் போர்வையில் ஈரானிய ஆட்சியாளர்களுக்கும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களுக்கும்
இடையில் இடையில் உள்ள பிராந்திய ஆதிக்கப் போட்டியே காரணமாகும். லெபனானின் தலைமை
அமைச்சர் சாட் ஹரிரீ 2017 நவம்பர் 4-ம் திகதி தன்னைக் கொல்ல ஒரு சதி நடப்பதால தான்
பதவி விலகுவதாகச் சொல்லும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தி சவுதி அரேபிய
ஊடகங்களில் வெளிவந்தது. அதில் அவர் லெபனானில் தலையிடுவதாக ஈரானையும் லெபனானை ஒரு
பணயக் கைதி போல் வைத்திருப்பதகா ஹிஸ்புல்லா அமைப்பையும் குற்றம்
சாட்டியிருந்தார். இது சவுதி
அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி லெபனானில் தீவிரமடையப் போவதைக்
கட்டியம் கூறியது.
ஹிஸ்புல்லாவிற்கு எதிரான சவுதியின் முதல் நகர்வு
சவுதி அரேபியா லெபனான் தலைமை அமைச்சர் சாட்
ஹரிரீயை மிரட்டிப் பதவி விலக வைப்பதாகப் பரவலான குற்றச் சாட்டுகள் எழுந்தன.
லெபனானியப் படைத்துறையினரும் அதன் அதிபர் மைகேல் ஔனும் லெபனானில் ஹரிரீக்கு
ஆபத்தில்லை எனத் தெரிவித்தனர். ஹரிரீயின் பதவி விலகலைத் தொடர்ந்து லெபனானில் உள்ள
சவுதி அரேபியக் குடிமக்களை நாடு திரும்புமாறு கோரும் அறிவுறுத்தலை அரசு
வெளியிட்டது. சவுதி அரேபியாவின் ஆட்சியில் அதிக அதிகாரம் செலுத்தும் இளவரசர்
முஹம்மது பின் சல்மன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தீவிர நடவடிக்கைகளை மேற்
கொள்கின்றார். அவரது நடவடிக்கைகள் அவரை பயமறியா இளங்கன்றா என ஒரு புறமும் சிறு
பிள்ளை வேளாண்மை என மறு புறமும் சிந்திக்க வைக்கின்றன. அமெரிக்காவின் சமாதானத்
திட்டத்தை பலஸ்தீனியர்களின் தலைவரனால மஹ்மூட் அப்பாஸ் ஏற்க வேண்டும் அல்லது பதவி
விலக வேண்டும் என சவுதி அரேபியா உத்தரவிட்டதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல்
வெளியிட்டதை பலஸ்தீனிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தின்
முக்கிய கருவியான ஹிஸ்புல்லாவை ஒழித்துக் கட்டும் முயற்ச்சியில் சவுதி அரேபியா
தீவிரமாக இறங்கப் போவதற்கான முதல் நகர்வுதான் ஹரிரீயின் பதவி விலகல்.
ஹிஸ்புல்லாவின் தோற்றமும் வளர்ச்சியும்
லெபனானை மையமாகக் கொண்டு செயற்படும் ஹிஸ்புல்லா
அமைப்பு ஈரானின் ஆதரவுடன் செயற்படும் அமைப்புக்களில் வலிமை மிக்கதாகும். 1978இல் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் எகித்தும் இஸ்ரேலும்
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் ஜோர்தானும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்பில் அக்கறை
இன்றி இருந்தது. அதை தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்தி கலிலீ படை நடவடிக்கை முலம் தெற்கு லெபனானை ஆக்கிரமித்து அங்கு இருந்த
பலஸ்த்தீனிய விடுதலை அமைப்பினரை விரட்டியது. பின்னர் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து நிலை
கொண்டது. இஸ்ரேலியப் படையினரை எதிர்க்க லெபனானில் வாழும் சியா இஸ்லாமியர்களைக்
கொண்டு ஈரானால் ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது. 22 ஆண்டு கால ஆக்கிரமிப்பை
ஹிஸ்புல்லாப் போராளிகளின் தொடர் போராட்டத்தால் 2000-ம் ஆண்டு வெளியேறியது. 1983-ம் ஆண்டு அமைதிப் படை என்ற பெயரில் லெபனானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க
மற்றும் பிரெஞ்சுப் படைகள் மீது தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்டு 241 அமெரிக்கப்
படையினரையும் 58 பிரெஞ்சுப் படையினரையும் கொன்றனர். 2006-ம் ஆண்டு ஈரானிய ஆதரவுடன் லெபனானில் இயங்கும் சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தி ஐந்து இஸ்ரேலியப் படையினரைக் கொண்டு இருவரைச் சிறைப்பிடித்தது. இவற்றால் ஹிஸ்புல்லாவை ஒரு வலிமை மிக்க போராளி அமைப்பாக உலகம்
பார்க்கத் தொடங்கியது. ஹிஸ்புல்லா ஒரு அமைப்பாக இருந்தாலும் மேற்காசியாவில் உள்ள பல
அரச படைகளை வெட்கமடையச் செய்யுமளவிற்கு அது போர் செய்யும் திறன் மிக்கது.
பிரச்சனை மிக்க லெபனானில் வலிமை மிக்க
ஹிஸ்புல்லா
சிரியா, ஈராக், யேமன்
ஆகிய நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானிற்கு ஆதரவாகவும் சவுதி அரேபியாவின்
நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 30,000இற்கு மேற்பட்ட படையினரைக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் அரச படைகளிலும்
பார்க்க வலிமை மிக்கதாகும். ஹிஸ்புல்லா அமைப்பிடம் ஒரு வலிமை மிக்க அரசியல்
பிரிவும் உண்டு. லெபனானில் 27 விழுக்காடு சியா முஸ்லிம்கள், 27 விழுக்காடு சுனி முஸ்லிம்கள், 5.6 விழுக்காடு துரூஷ்
இனத்தவர்கள், 40.4 விழுக்காடு கிறிஸ்த்தவர்கள் வாழ்கின்றனர்.
முதலாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியாவும் பிரான்ஸும் திட்டமிட்டு லெபனானை
ஒரு கிறிஸ்த்தவர்களைப் பெரும் பான்மையினராகக் கொண்ட நாடாக உருவாக்கின. ஆனால்
இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பின்னர் அதிகரித்து விட்டது.
ஐ எஸ் அமைப்பைப் போன்ற சவுதி
சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ எஸ் அமைப்பு தமது
ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்திய போது
சவுதி அரேபியாவில் நடப்பதும் அதுதான் எனப் பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஒரு நாடு தமது உலக வர்த்தகத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் வரை அந்த நாட்டின்
ஆட்சி என்பது எப்படி நடக்கின்றது என்பதையிட்டு மேற்கத்தைய நாடுகள் அலட்டிக் கொள்ள
மாட்டாது. ஆட்சியாளர்கள் தமது பொருளாதார ஒழுங்குக்கு விரோதமாகச் செயற்படும் போது
மட்டும் அவர்களின் ஆட்சி முறைமை மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிப் பெரிது
படுத்துவார்கள். மும்மர் கடாஃபின் ஆட்சியின் கீழ் லிபியாவும் சதாம் ஹுசேய்னின்
ஈராக்கும் அவர்களின் ஆட்சியில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் மிக மிக மோசாமான
நிலையில் இப்போது இருக்கின்றன
தொடரும் சவுதிச் சறுக்கல்கள்
சவுதி அரேபியா தொடர்ச்சியாகச் செய்து வரும்
அரசுறவியல் தவறுகளால் சிரியாவிலும் யேமனிலும் இரத்தக் களரி தொடர்கின்றது; இஸ்ரேல்
தட்டிக் கேட்பாரின்றி இருக்கின்றது; லெபனானில் மீண்டும் ஓர் உள்நாட்டுப் போர்
உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளிடையேயான ஒற்றுமை ஆபத்துக்கு
உள்ளாகின்றது. கட்டாருக்கு எதிரான சவுதி அரேபியாவின் நகர்வுகள் இரசியாவிற்கு மேலும்
ஒரு பிடியை மேற்காசியாவில் வழங்குகின்றது. சிரியாவில் அதிபர் அல் அசாத்தை
ஆட்சியில் இருந்து அகற்றுதல், ஈரானிய ஆதிக்கத்தை ஒழித்தல், ஹிஸ்புல்லாவை அடக்குதல்
ஆகிய மூன்று நோக்கங்களிலும் சவுதி அரேபியா தோல்வி கண்டுவிட்டது. இத்தனைக்கும்
நடுவில் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் ஆதரவு சவுதி அரேபியாவிற்கு உண்டு.
சவுதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும்
இடையிலான உறவு 1933இல் இருந்து 1945 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்லின்
ரூஸ்வெல்ற் காலதில் இருந்து கட்டி எழுப்பப்பட்டது. மேற்காசியாவிலிருந்தும் வட
ஆபிரிக்காவிலிருந்தும் சீரான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு இரு
நாடுகளும் இணைந்து செயற்பட்டன. அமெரிக்காவிலிருந்து அதிக படைக்கலன் கொள்வனவு
செய்யும் நாடாக சவுதி அரேபியா இருந்து வருகின்றது. அரேபியா தனது பாதுகாப்பை தாமே
பர்த்துக் கொள்ளாமல் அமெரிக்கா எப்போதும் உத்தரவாதமளிக்கும் என தொடர்ந்தும்
நம்பியிருப்பது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரை விரக்திக்கு உள்ளாக்கி விட்டது.
அமெரிக்கா தன் நிலையை மாற்றிய போது சவுதி அரேபியா அமெரிக்காவைத் திருப்திப் படுத்த
கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்த தனது பிராந்தியக் கொள்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அதனால் சவுதி அரேபியா சிரியா போல் ஆகுமா என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பும்
அளவிற்கு நிலைமை மோசமடைகின்றது. அமெரிக்காவிற்கு சவுதி அரேபியாவில் பிடித்தது அதன்
எரிபொருள் வளம் மட்டுமல்ல அங்கு உள்ள உறுதியான ஆட்சியும் அமெரிக்கா விரும்புகின்ற
ஒன்றாகும். இரண்டுக்குமாக அங்கு நடக்கும் மக்களாட்சிக்கு எதிரான நிலைமையயும் மனித
உரிமை மீறல்களையும் அமெரிக்கா கண்டு கொள்ளாதது போல் இருக்கின்றது.
சவுதி அரேபிய இளவரசர் பின் சல்மன் சவுதியின்
பொருளாதாரம் எரிபொருளில் தங்கியிப்பதை தவிர்த்தல், சவுதி
அரேபிய இஸ்லாமை சீர் திருத்துதல், சமய போதகர்களின்
ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டல், அரச குடும்பத்தில்
உள்ளோரின் ஊழலை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கையில் யேமனில்
இருந்து ஒரு ஏவுகணை சவுதி அரேபியாவை நோக்கி வீசப்பட்டது. இந்த நடவடிக்கைகள்
உள்நாட்டில் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம். இப்படி இருக்க சவுதியைச் சூழவுள்ள
நாடுகளில் ஈரானின் ஆதிக்கத்தை ஒழிக்கும் இளவரசரின் நடவடிக்கை மேற்கு ஆசியாவிலும்
வட ஆபிரிக்காவிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம்.
ஈரான் சவுதி உறவு
1979இல் ஈரானில் நடந்த மதவாதப் புரட்சி அங்கு மன்னர்
ஆட்சியை ஒழித்தது போல் சவுதியில் நடக்கலாம் என்ற அச்சத்தில் சவுதி அரேபிய அரச
குடும்பம் ஈரானிய ஆட்சியாளர்களை அச்சத்துடன் பார்க்கத் தொடங்கியது. 1980-1988
ஈராக்-ஈரானியப் போரின் போது சவுதியின் மூன்று துறைமுகங்கள் ஈராக்கிற்கான படைக்கல
விநியோகத்திற்குப் பாவிக்கப் பட்டன. 1988இல் சவுதியில் ஈரானிய ஹஜ் பணிகளுக்கு
எதிரான நடவடிக்கைகளின் எதிரொலியாய சவுதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈரானில் ஒரு
சவுதி அரேபியாவின் அரசுறவியலாளர் கொல்லப்பட்டார். 1996-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் கோபர் கோபுரம் தீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பிய பாரா ஊர்தியை வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டதன் பின்னணியில் ஈரான் இருந்ததாக சவுதி அரேபியா ஐயம் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. ஈரானின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா ஒரு வலிமை மிக்க அமைப்பாக உருவாகியது அதனால் உறுதி செய்யப்பட்டது. ஈரான் முழு லெபனானையும் கைப்பற்றும் என்ற கரிசனையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது.
2004-ம் ஆண்டு ஈரானின் சியா பிறைத் திட்டம்
அமெரிக்கா சார்பு நிலைப்பாடுடைய ஜொர்தான் மன்னர் அப்துல்லா – 2 அவர்கள் 2004-ம் ஆண்டு ஈரானிடம் ரெஹ்ரானில் இருந்து பெய்ரூட் வரை ஒரு நீண்ட நிலப்பரப்பைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் திட்டம் ஈரானிடம் இருக்கின்றது என்றார். மேலும் பல மேற்கத்தைய பன்னாட்டரசியல் ஆய்வாளர்கள் ஈரான் லிபியா, எகிப்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து ஒரு வல்லரசாக உருவெடுக்கத் திட்டமிடுகின்றது என எழுதித் தள்ளினர். இவை எல்லாம் ஈரானின் மேற்குலக எதிர்ப்புப் போக்கால் உருவாக்கப்பட்ட பொய்களாகவும் இருக்கலாம். அப்பொய்கள் மூலம் ஈரானின் அயல் நாடுகளை ஈரானுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கச் செய்த சதிகளாகவும் இருக்கலாம். அமெரிக்காவிற்கு அழிவு வரட்டும் என்ற ஈரானிய ஆட்சியாளர்களின் கொள்கையும் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற அவர்களின் நிலைப்பாடும் அவர்களுக்கு எதிரான பல உலகளாவிய அரசுறவியல் நகர்வுகளையும் சதிகளையும் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
சவுதி அரேபியா லெபனானில் தலையிடுவது ஹிஸ்புல்லாவை
அடக்குவதற்காக எனச் சொல்லப்பட்டாலும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சவுதி அரேபியா எடுக்கும்
நடவடிக்கைகள் அதை மேலும் வலிமையடையச் செய்யலாம். ஏவுகணைகள், எறிகணைகள் போன்றவை மூலமாகவும் தீவிரவாதத் வழிகளிலும் சவுதி அரேபியாவின்
மீதான தாக்குதல்கள் எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்யலாம். அது ஈரானியப் பொருளாதாரத்தை
வலிமையடையச் செய்வதுடன் ஹிஸ்புல்லாவிற்கான ஈரானின் ஆதரவை அதிகரிக்கச் செய்யும்.
இஸ்ரேலும் களமிறங்குமா?
2017 நவம்பர் அமெரிக்கா இரண்டு A-29 Super Tucano என்னும் இரண்டு தாக்குதல் விமானங்களை லெபனானிய அரச
படைகளுக்காக அனுப்பியதும் சவுதியும் அதன் நட்பு நாடுகளும் தமது குடி மக்களை
லெபனானில் இருந்து தமது குடிமக்களை வெளியேறும் படி கோரியதும் லெபனானில் ஒரு
தாக்குதல் நடக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. போர் முனை அனுபவம் குறைந்த
சவுதி அரேபியப் படைகள் யேமனில் தடுமாறுவதுடன் அப்பாவிகளை அதிக அளவில் கொல்கின்றன.
அப்படிப் பட்ட சவிதி அரேபியப் படைகளால் சுமார் நாற்பது ஆண்டுகளாகப் போர் செய்யும்
ஹிஸ்புல்லா அமைப்பை அழிக்க முடியுமா? ஹிஸ்புல்லாவின்
வளர்ச்சியால் கரிசனை கொண்டுள்ள இஸ்ரேலின் இரகசிய ஆதரவு சவுதி அரேபியாவிற்குக்
கிடைக்குமா?
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...



