Monday, 7 August 2017

சீன இந்திய எல்லைப் போர் நடக்குமா?

பிரித்தானியப் பாரளமன்றத்தின் மேலவையான பிரபுக்கள் சபையின் உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான மேக்நாத் தேசாய் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு முழுமையான போர் விரைவில் நடக்கும் என்றும் அதில் அமெரிக்கா இந்தியாவின் பின் நிற்கும் என எதிர்வு கூறியுள்ளார். அந்தப் போர் பல முனைகளில் நடக்கும் எனவும் அவர் எதிர்பார்க்கின்றார். 2017-ஓகஸ்ட் 7-ம் திகதி சீன மக்கள் படை இந்தியர்கள் சீனாவின் நிலத்தில் இருந்து வெளியேறாவிடில் மோதல் வெடிக்கும் என்கின்றது.

ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பு அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்த ப்பட்டிருக்க மாட்டாது. இரசியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பிற்கு உக்ரேனும் ஜோர்ஜியாவும் முக்கியமானவை. அதன் தென் பகுதிப் பாதுகாப்பிற்கு கஜகஸ்த்தான், கிரிகிஸ்த்தான் போன்றநாடுகளும் கிழக்குப் பகுதிக்கு மங்கோலியாவும் முக்கியமானவை. இந்த நாடுகள் இரசியாவிற்கு எதிரான நாடுகளின் கைகளுக்கு போகமல் இருக்க இரசியா எந்த விலையையும் கொடுக்கத் தயாராக உள்ளது. இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்க தீபெத் முக்கியமான பிரதேசம் என்பதாலும் ஆசிய நீர்வழங்கலுக்கு அது முக்கியமான பிரதேசம் என்பதாலும் சீனா 1950இல் அதை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்தியாவுடன் கைகோர்த்த பூட்டானும் இணைந்த சிக்கிமும்
தீபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் சீனா தமது நாட்டையும் ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் கொண்ட பூட்டான் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது, அதன் வெளியுறவுத் துறை நடவடிக்கைகளையும் பன்னாட்டு அரசுறவியல் நடவடிக்கைகளையும் இந்தியாவே செய்து வருகின்றது. பூட்டானை தன் பக்கம் இழுக்க சீனா பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடன் வழங்கல், உதவி வழங்கல் போன்ற பல வகைகளை சீனா கையாளுகின்றது. குடியேற்ற ஆட்சியின் போது பிரித்தானியாவும் அதையே செய்து வந்தது. பூட்டானைப் போல் அச்சம் கொண்ட சிக்கிம் 1975இல் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்து கொண்டதுபூட்டானும் சிக்கிமும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இந்தியாவிற்கு ஒரு கவசமாக இருக்கின்றன. பூட்டானைத் தன் பக்கம் இழுக்கும் முயற்ச்சியில் இந்தியாவால் பூட்டானைப் பாதுகாக்க முடியாது என பூட்டானுக்கு உணர்த்த சீனா பல வகைக்களில் முயல்கின்றது. பூட்டான் தனது வட பகுதியில் 470 கிலோ மீட்டர் எல்லையை சீனாவுடன் கொண்டுள்ளது. இந்தியா தனது 650 கிலோ மீட்டர் எல்லை மூலம் பூட்டானை கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பிடிக்குள் வைத்திருக்கின்றது.

சில்குரி இணைப்பாதை
நிலத்தில் இருந்து உயரமான இடத்தில் இருக்கும் சமதரையை பீடபூமி என்பர். உலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்டதும் அதிக உயரத்தில் இருப்பதும் தீபெப் பீடபூமியாகும். இது சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் தீபெத் நாடு மட்டுமல்ல நேப்பாளம், பூட்டான், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. தீபெத் நாட்டில் இருந்து சம்பி பள்ளத்தாக்கு என்ற முக்கோணவடிவப் பிரதேசம் பூட்டானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் தெற்கு நோக்கி நீண்டுள்ளது. அந்த முக்கோண வடிவ சம்பி பள்ளத் தாக்கின் தென் முனை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளிக்கும்  இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கும் அண்மை வரை செல்கின்றது.

ஈசான மூலையில் இந்தியாவிற்குப் பிரச்சனை
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள்.

வட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து
சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு ஆப்பாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது. பூட்டானின் வேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது. அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது. கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். டொலம் சமவெளிக்கு அண்மையில் கூட சீனர்களை இந்தியா அனுமதிக்கக் கூடாது. இதுதான் பூட்டானின் டொலம் சமவெளியை ஒட்டி இந்தியாவும் சீனாவும் தமது படைகள் மூவாயிரத்திற்கு மேற்பட்டோரை  ஒருபடையினரது கண்களை மற்றப்படையினர் பார்க்கக் கூடிய அளவிற்கு நெருக்கமான நிலையில் நிறுத்தி ஒருவரை ஒருவர் விலகிச் செல்லும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீரின்றி அமையாது அமைதி
சீனாவில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மெகாலயா, சிக்கிம், நாகலாந்து மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உணவு உற்பத்திக்கு நீர்வழங்கிக் கொண்டு பங்களாதேசத்தினூடாகச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றது. சீனாவில் உருவாகிக் கொண்டு வரும் நீர்த் தட்டுப்பாட்டிற்கு பிரம்மபுத்திரா திசை திருப்பப்பட வேண்டும் இந்தியாவின் வட கிழக்கில் இருக்கும் மாநிலங்களை ஆக்கிரமித்தால் அது இலகுவானதாக அமையும். அதனால் சீனா நீண்டகாலமாக அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அருணாசலப் பிரதேச எல்லையில் இந்தியாவும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தவாங் மாவட்டத்தை நோக்கி சீனா பாரிய தெருக்கள் உட்படப் பல  உட்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. சனன் என்னும் நகரில் இருந்து அருணாச்சலபிரதேச் எல்லையை நோக்கி இருநூறு கிலோ மீட்டர் நீளமான எஸ்-202 என்னும் நெடுஞ்சாலை முக்கியமானதாகும். பிரம்மபுத்திரா நதியைத்துருப்புச் சீட்டகப் பாவித்து பங்களாதேசத்தை சீனாவின் பிடிக்குள் கொண்டுவருதல் முடியும். இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களை சீனா அபகரித்தால் அதன் மூலம் பங்களாதேசத்தையும் சீனாவால் இலகுவாக அபகரிக்க முடியும். பின்னர் இந்து மாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும். பின்னர் இந்தியாவின் கிழக்குக் கரைக்கு பெரும் அச்சுறுத்தலை விடுக்க முடியும். ஏற்கனவே பாகிஸ்த்தானின் குவாடர் துறைமுகமும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகமும் இந்தியாவின் மேற்குக் கரைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

படை நகர்வுகள்
உலகிலேயே படைநகர்வுக்கு சிரமமான பிரதேசம் டொலம் சமவெளியாகும். இந்தியாவிலும் பார்க்க சீனாவிற்கே அதிக சிரமம் உண்டு. டொலம் சமவெளிக்கு அண்மையாக சீனாவிடம் 15 வான்படைத் தளங்களும் இந்தியாவிடம் 22 வான்படைத் தளங்களும் உள்ளன. டொலம் சமவெளிக்கு அண்மையில் உள்ள சீனா வான்படைத் தளங்கள் கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து உயரமான ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் எழும்புவதற்கு அதிக நேரம் எடுக்கும். அத்துடன் அதிக அளவு படைக்கலன்களையும் தாங்கிச் செல்ல முடியாது. ஆனால் இந்தியாவின் பக்கத்தில் அந்தப் பிரச்சனை குறைவு. டொக்லா பீடபூமிக்கு அண்மையில் உள்ள இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்தியாவின் 63வது படைப் பிரிவும் 112வது படைப்பிரிவும் நிலை கொண்டுள்ளன. இரண்டிலும் மொத்தமாக ஆறாயிரம் படையினர் உள்ளனர். இந்தியாவின் 164-வது படைப்பிரிவு அருட்டப்பட்டு சீன எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் போர் செய்யும் திறனுடைய இரண்டு காலாட்படையணிகள் டொக்லம் பீடபூமியை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவற்றில் மொத்தம் இருபதினாயிரம் படைவீரர்கள் இருக்கின்றார்கள். சீனா எத்தனை படை வீரர்களை டொக்லம் பீடபூமியை நோக்கி நகர்த்தி உள்ளது என்பது பற்றி சரியான தகவல் இல்லை. சீனா வெளிவிட்ட தகவல்களின் படி மூவாயிரம் படையினர் உள்ளனர் என அறிய முடிகிறது. உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.  சீனாவின் படைத்துறை ஆரம்பித்த 90வது ஆண்டு நிறைவை ஒட்டிய படை அணிவகுப்பு  பீஜிங்கில் இம்முறை கொண்டாடவில்லை. எல்லைப் பிரச்சனை இருக்கும் போது தலைநகர் பீஜிங்கிற்கு படையினரை  அனுப்புவது ஆபத்தானது. இதனால் சீனாவின் வட பிரதேசத்தில் உள்ள பாரிய படைத்தளத்தில் இது நடத்தப்பட்டது.
.
பல்குழல் எறிகணைகள் சீனாவிடம் 1770உம் இந்தியாவிடம் 292உம் இருப்பதாக நம்பப்படுகின்றது. நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிடம் 68, இந்தியாவிடம்14

இந்திய சீன எல்லை வரலாறு
1949 க்டோபரில் சீனாவில் பொதுவுடமைப் புரட்சி மூலம் மாவோ சே துங் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவரது அரசை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 1954-ம் ஆண்டு இரு நாடுகளும் பஞ்சசீலப் பத்திரத்தில் கையொப்ப்டம் இட்டன. ஆனால் அதற்கு முன்னரே சீனா தீபெத் நாட்டை அபகரித்து விட்டது. 1955-இல் இந்தியாவிற்கு சொந்தமான பிரதேசங்களை சீனா தனது நாட்டின் வரைபடத்தில் உள்ளடக்கியது. இந்தியாவைன் ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் சீனா மீண்டும் 1958இல் இந்தியாவின் வட கிழக்குப் பிரதேசத்தை தனது நாட்டின் வரைபடத்தில் உள்ளடக்கியது. இந்தியாவின் 40,000 சதுர மைல் நிலப்பரப்பை சூ என் லாய் தமது நாட்டுக்குச் சொந்தமானது என்றார். 1960இல் ஜவகர்லால் நேருவும் சூ என் லாயும் இந்தியாவில் எல்லைகள் தொடர்பாக நடத்திய பேச்சு வார்த்தை முறிவடைந்தது. 1961இல் சீனா இந்திய சீன எல்லையில் 12,000 சதுர மைல்களை அபகரித்தது. 1962 நவம்பர் 15-ம் திகதி சீனப் படைகள் இந்தியாமீது தாக்குதல் நடத்தின. 21-ம் திகதி சீனா ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தையும் அறிவித்தது.

தகராற்றின் சதிக் கோட்பாடுகள்
அண்மைக்காலங்களாக அமெரிக்கா இந்தியாவுடன் தனது உறவை அதிகரித்து வருகின்றது. அந்த உறவை சீனாவை அச்சுறுத்தக் கூடிய அளவிற்கு வளர்க்க அமெரிக்காவின் பெண்டகனில் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். சீனாவிற்கு எதிரான ஓர் உறுதியான நிலைப்பாடை இந்தியா எடுத்து சீனாவுடன் ஒரு போருக்குக் கூடத் தயாரான நிலையில் இந்தியா இல்லை என நினைப்பவர்களைக் குறிவைத்தே இந்தியா டொக்லம் பீடபூமியில் உறுதியாக நிற்கின்றது. ஒரு போருக்குக் கூட இந்தியா தயக்கம் காட்டாமல் இருக்கின்றது. சீனாவின் பாதுகாப்புத் துறை தரப்பில் இந்தியாவிற்கு மூக்கு உடைபடக்கூடிய ஒரு குறுங்காலப் போரை சீனா செய்ய வேண்டும் என சிலர் நம்புகின்றனர். அப்படி ஒரு சரியான பாடம் கற்பிக்கப்படுமிடத்து எல்லா நாடுகளும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் என அவர்கள் கருதுவதுடன் தென் சீனக் கடலை ஒட்டியுள்ள நாடுகளையும் அது அடக்கி வைக்கும் என அடித்துச் சொல்கின்றனர்.

இரு தலைகள் போடும் சீன்
இந்தியாவில் தான் ஒரு தன்னிகரில்லாத தலைவன் என சீன் போடுவதற்கு டொக்லம் சமவெளியை மோடி பயன்படுத்துகின்றார். அவர் ரேஷன் ஒழிப்பு எரிவாயுவிற்கான உதவித் தொகை ஒழிப்பு போன்றவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சீனாவுடனான ஒரு முறுகல் நிலை மோடிக்கு பெரிதும் உதவும். 2017 இலையுதிர்காலத்தில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது அதில் சீன அதிபர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு தன்னிகரில்லாத தலைவராக நிலை நாட்ட வேண்டும். இதனால் இரு நாடுகளும் டொக்லா பிரதேசத்தில் இருந்து இப்போதைக்கு விலகிச் செல்ல வாய்ப்புக் குறைவு.

சீன ஊடகங்கள் ஒரு குறுகியகாலம் மட்டும் நீடிக்கக் கூடிய படை நடவடிக்கை மூலம் இந்தியர்களை டோலம் பீட பூமியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தைப் பரவலாக முன் வைத்த கருத்தை சீனப் பாதுகாப்புத் துறை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.  

போர் நடக்குமா?

2016-ம் ஆண்டு சீனா இந்தியாவிற்கு 60பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்து கொண்டு 9பில்லியன் பெறுமதியான இறக்குமதியை மட்டும் இந்தியாவில் இருந்து செய்தது. இந்த வர்த்தகம் பாதிக்கப்படுவதை இரு நாடுகளும் விரும்பாது. போர் ஓரு அணுக்குண்டுப் போராக நடந்தால் இரு நாடுகளும் பேரழிவைச் சந்திக்கும் அணுக்குண்டுகள் இல்லாத போர் நடக்கும் போது சீனா மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றலாம். ஆனால் இந்தியாவின் ஏவுகணைகள் சீனாவின் பல நகரங்களைப் பதம் பார்த்துவிடும். அதே போல சீனாவாலும் செய்ய முடியும். உலகத்திலேயே அதிக வேகமாகப் பாயக்கூடிய வழிகாட்டல் ஏவுகணையாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் போரில் முக்கிய பங்கு வகிக்கும். சீனா தனது பொருளாதாரம் உச்ச நிலையடைந்து அமெரிக்காவையும் மிஞ்ச வேண்டும் என்ற இலக்கை அடையும் முயற்ச்சி இந்தியாவுடனான போரில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். அதனால் போர் ஒன்று உடனடியாக நடக்காது ஆனால் இந்த முறுகல் நீடிக்கும். ஆனால் அது போர் என்ற நிலையை நோக்கி நகரும் போது இரசியா தலையிட்டு சமாதானத்தை நிலை நாட்டும். இரு நாடுகளும் போரால் அழியாமல் தன்னிடமிருந்து படைக்கலன்களைப் பெருமளவில் கொள்வனவு செய்ய வேண்டும் என அது நம்புவதால் போர் தவிர்க்கப்படும். 

Tuesday, 1 August 2017

விலைகள் உயருமா? உலகப் பொருளாதாரம் தேறுமா?

பன்னாட்டு நாணய நிதியம் 2017-ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார எதிர்பார்ப்பு தொடர்பான தனது ஜூலை மாத அறிக்கையை வெளிவிட்டுள்ளது. கடந்த ஆறுமாதங்களாக உலகப் பொருளாதாரத்தின் போக்கினை அவதானித்து ஏற்கனவே வெளிவிட்ட அறிக்கையை அது புதிப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தான் ஏற்கனவே வெளிவிட்ட பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ர்புக்களை பநாநிதியம் குறைத்துள்ளது. இவை இரண்டினதும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் பார்க்க 0.2விழுக்காடு குறைவாக வளரும் என நிதியம் எதிர்வு கூறுகின்றது. உலகின் ஏனைய நாடுகளில் பெரும்பாலானவற்றின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க நடுவண் வங்கி வாங்கியதை விற்கப் போகின்றது.
அமெரிக்க நடுவண் வங்கியின் ஆளுநர் சபைத் தலைவர் ஜனெட் யெலென் 2017 ஜூலை 26-ம் திகதி நடந்த வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தின் பின்னர் அமெரிக்காவில் விலை அதிகரிப்பு விழுக்காடு தொடர்ந்து குறைந்த நிலையில் இருக்கின்றது என்பதனால் அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படவில்லை என அறிவித்தார். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்பான எதிர்பார்ப்பு நம்பிக்கைக்கு உரியதாக இருப்பதால் அடுத்த கூட்டத்தில் அமெரிக்க மைய வங்கி தனது ஐந்தொகை நிலையை மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்தார். அமெரிக்கப் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருக்கும் போது செய்த அளவுசார் தளர்ச்சி (Quantitative easing (QE) மீளப்பெறப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது. அளவுசார் தளர்ச்சியின் போது இலத்திரனியல் காசு உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசின் கடன் முறிகளை நடுவண் வங்கி வாங்கியிருந்தது. அவற்றை இனி விற்பனை செய்யலாம்.. அதனால் நாட்டில் உள்ள பணப்புழக்கம் குறைக்கப்படும். எதிர்கால விலைவாசி அதிகரிப்பு அதனால் கட்டுப்படுத்தப்படும்.

புது நோயாளி
2017-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடாக இருக்கும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார ரீதியாக நோயாளியாகக் கருதப்பட்ட ஜப்பான் 2017-ம் ஆண்டு 1.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஜப்பானின் இடத்தை பிரித்தானியா பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேறு சில பொருளாதார ஆய்வுகள் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்பார்ப்பது போல் பிரித்தானியா 1.7விழுக்காடு வளராது எனச் சொல்கின்றன. அந்த ஆய்வுகள் பிரித்தானியா 1.2 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்வு கூறுகின்றன. பிரித்தானியாவின் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை அதிகரித்தது. ஆனால் இந்த விலை அதிகரிப்பு மக்களின் செலவைக் கட்டுப்படுத்தியதால் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படவில்லைவளர்ச்சியடைந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அரச நிதிக்கொள்கையையும் நாணயக் கொள்கையையும் (fiscal and monetary policy) கடைப்பிடித்தமை வெற்றியளிக்கின்றன.

இரு புறமும் வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சியை இருவகையில் தூண்டலாம். ஒன்று வேண்டல் (demand side) பக்கம் மற்றது வழங்கல் அல்லது நிரம்பல் (supply side) பக்கம். மக்களின் கொள்வனவைக் கூட்டி அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தலும். மற்றது நிறுவனங்கள் தமது முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். J.P. Morganஇன் கணிப்பின் படி உலக மக்களின் பொருட் கொள்வனவுச் செலவு (consumers’ expenditure in the goods sector) 2017இன் இரண்டாம் காலாண்டில் ஐந்து விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே வேளை உலகெங்கும் முதலீடுகளுக்கான செலவு ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது. இது இயல்பான பொருளாதாரச் சுழற்ச்சியா அல்லது உலக நாடுகளும் உலக பொருளாதார அமைப்புக்களும் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் எடுத்த நடவடிக்கையில் பலாபலனாகும். ஆனால் J.P. Morgan போன்ற நிறுவனங்கள் உலக பங்கு சந்தை வியாபாரத்தை அதிகரிக்க இப்படியான நற்செய்திகளை வெளிவிடும் இலுமினாட்டி கும்பல்களில் ஒன்று என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா ஆடினால் உலகம் அதிருமா?
ஐக்கிய அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக வேலையற்றோர் தொகை குறைந்து கொண்டு போவதால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வீழ்ச்சியடையும் வேலையற்றோர் தொகையால் ஊதிய அதிகரிப்பு ஏற்பட்டு நாட்டில் பணவீக்கம் உருவாகும் என அமெரிக்க அரசு அஞ்சுகின்றது. அதனால் நாட்டின் வட்டி விழுக்காட்டைக் கூட்டி பொருளாதார வளர்ச்சி வேகம் குறைக்கப்படலாம்.
அமெரிக்காவின் பல வங்கிகளின் ஐந்தொகை நிலைமை 2007-ம் ஆண்டு நடந்த உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது மோசமாக இருந்தன. ஆனால் தற்போது அந்த வங்கிகளின் நிலைமைகள் பெருமளவு சீரடந்துள்ளது. அவற்றின் நீர்மை விகிதங்கள் (liquidity ratios) உயர்ந்துள்ளன. 2007இன் பின்னர் யூரோவலய நாடுகளின் வங்கிகள் பலவும் மோசமான நிலையில் இருந்தன. ஆனால் எல்லா வங்கிகளினதும் நிதி நிலைமை சீரடையவில்லை எனச் சொல்லலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய நடுவண் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தது.  

நிழல் வங்கிகள்
அரசு அனுமதி பெற்ற வங்கிகளின் செயற்பாட்டை அரசுக்குத் தெரியாமல் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் நிழல்வங்கிகள் எனப்படும். 2007-ம் ஆண்டின் பின்னர் வங்கிகளின் திரவத் தன்மை குறைந்ததாலும் வங்கிகள் கடன் வழங்குவது தொடர்பாக நடுவண் வங்கிகள் கட்டுப்பாடு விதித்ததாலும் நிழல் வங்கிகள் உருவாகின. சீனாவில் மட்டும் நிழல் வங்கிகள் எட்டு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை வழங்கியிருந்தன. நிழல் வங்கிகளின் செயற்பாடுகள் உலகப் பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலையை மோசமாக்கின. வங்கிகள் வருவிகளுக்கு (derivatives) நிதி வழங்குவதைக் கட்டுப்படுதிய போது அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நிழல்வங்கிகள் அத்துறைக்கு கடன் வழங்கின. இதனால் அமெரிக்க நடுவண் வங்கி சில வங்கிகள் முறிவடையும் நிலையில் இருந்து மீட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. முக்கியமாக வருவிகளுக்கு நிதி வழங்கிய AIG என்ற காப்புறுதி நிறுவனத்தை மீட்க 180பில்லியன் டொலர்கள் தேவைப்பட்டது. G-20 நாடுகள் 2009-ம் ஆண்டு உலக நிதி நிலைமையை சீர்படுத்த உருவாக்கிய நிதி உறுதிப்பாட்டுச் சபை (Financial Stability Board) மூலமாக எடுத்த பல நடவடிக்கைகள் நிழல் வங்கிகளின் செயற்பாட்டை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளதாக 2017 ஜூலையில் நடந்த G-20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளை நிழல்வங்கிகள் வேறு வடிவத்தில் வரலாம் எனவும் அங்கு எச்சரிக்கை விடப்பட்டது.

Macro-prudential policy

நாட்டில் பணப்புழக்கத்தையும் கடன் அதிகர்ப்பதையும் கட்டுப்படுத்துவதற்கு வட்டி விழுக்காட்டை அதிகரிப்பதிலும் பார்க்க வேறு சிறந்த நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பதைக் கண்டு பிடிப்பது தொடர்பாக உலக வங்கியியல் நிபுணர்களும் முன்னணி நாடுகளின் நடுவண் வங்கிகளும் கடுமையாக வேலை செய்கின்றன. வங்கிகள் கடன் கொடுக்கும் போது நம்பிக்கையாக சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கள் அல்லது அக்கடன் மூலம் பெறவிருக்கும் வருவாமானங்கள் இடையிலான விகிதத்தைக் கட்டுப்படுத்துவதும் ஒரு உபாயமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதை macro-prudential policy என அழைக்கின்றனர். இது என்னும் பரீட்சிக்கப்படவில்லை. கடன்படுபவர்கள் தமது சொத்துக்களின் மதிப்பை அல்லது பெறும் கடன் மூலம் வரவிருக்கும் வருமான அதிகரிப்பை பல்வேறு வழிகள் மூலம் வேண்டுமென்றே அதிகரித்து மதிப்பிட்டு கடன் பெறும் போது வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம்.

G-20 முயற்ச்சிகள்
G-20 நாடுகளும் அவற்றின் நிதி உறுதிப்பாட்டுச் சபையும் (Financial Stability Board) மீண்டும் ஓர் உலக நிதி நெருக்கடி ஏற்படாதிருக்க தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தளர்த்திக் கொண்டிருக்கின்றார். அவ்வகையான தளர்த்தல் அமெரிக்க வங்கித்துறையின் கடன் வழங்கும் தகமையை 2ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கும். வங்கிகளின் கடன் வழங்கல் மீதான கட்டுப்பாடு உலக அரசுகளின் கடன் முறிகளின் விலையைக் குறைத்துள்ளது. `

எதிர்ம பணவிக்கம்(deflation)
2007-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் இருந்தமைக்கு ஒரு காரணியாக எதிர்ம பணவிக்கம்(deflation) முன்வைக்கப்பட்டது. ஜப்பானிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இது பெரும் பிரச்சனையாக கருதப்பட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியமையால் உலகச் சந்தையில் மூலப் பொருட்களிற்கான தேவை குறைந்தது. இரசியாவிற்கு எதிரான மேற்கு நாடுகளின் நடவடிக்கையாலும் ஷேல் எரிவாயு உற்பத்தியாலும் ஒபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைக்கத் தவறியமையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தது. மசகு எண்ணெய் விலை 140 டொலரில் இருந்து 50 டொலருக்குக் கீழ் குறைந்தது. வெனிசுவேலாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பமும் அதற்காக அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக எடுத்த பொருளாதார தடையும் 2017 ஓகஸ்டில் மசகு எண்ணெய் விலையை 50 டொலருக்கு உயர்த்தி உள்ளது. எரி பொருள் விலை 50 டொலர்கள் வரை குறைந்திருப்பதால் பொருட்களின் விலையும் குறைவானதாக இருந்தது.  எதிர்மபணவீக்கம் தற்போது இல்லை என்றாலும் தாழ் பணவீக்கம் (lowflation) இப்போது ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. சரியான பொருளாதார வளர்ச்சிக்கு பணவீக்கம் குறைந்தது இரண்டு விழுக்காடாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார நிபுணர்களினது கருத்து. பெரும்பாலும் எல்லா முன்னணி நாடுகளின் நடுவண் வங்கிகளும் இரண்டு விழுக்காடு பணவீக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன.
யூரோ வலய நாடுகளில் தற்போது பணவீக்கம் ஒரு விழுக்காடாக இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது தடையாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க குறைவாகவே உள்ளது என்றாலும் அது தற்போது இரண்டு விழுக்காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது. இதனால் வட்டி விழுக்காட்டைத் தாழ் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. அது யூரோ நாணயத்தின் பெறுமதிக்கு உகந்தது அல்ல. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது பணவீக்கம் உருவாகும் என்பது பொதுவான கணிப்பு. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பல மேற்கு நாடுகளில் சீரான பொருளாதர வளர்ச்சியும் தாழ்பணவீக்கமும் நிலவுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொருளாதாரச் சுழற்ச்சி இந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தால் அடுத்த பொருளாதார விழ்ச்சி வராமல் இருக்க பணவிக்கம் உகந்த நிலையில் இருக்க வேண்டும். எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலைதோன்றும் போதெல்லாம் அமெரிக்காவில் ஷேல் எரிகாற்று உற்பத்தி அதிகரிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைந்த அளவில் இருப்பதால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் வருமானம் பதிக்கப்பட அந்த நாடுகளின் கொள்வனவும் முதலீடும் குறைந்திருக்கின்றது. இது உலகப் பொருளாதார மொத்த உற்பத்தியைக் குறைக்கின்றது. அது உலகின் எரிபொருள் தேவையைக் குறைக்கின்றது. இந்தச் சுழற்ச்சி உலகப் பொருளாதாரத்தை தொடர்ந்து வளரவிடாமல் தடுக்கலாம்.

அமெரிக்கா தனது நாட்டில் மக்கள் செய்யும் செலவை அளவிட Personal consumption expenditures (PCE) Index என்னும் சுட்டியைப் பாவிக்கின்றது. இது மக்கள் தமது வருமானத்தில் எந்த அளவைச் செலவிடுகின்றார்கள் என்பதைக் காட்டும். 2017 பெப்ரவரிவரை இந்த சுட்டி ஒரு சீரான ஏறு முகத்தில் இருந்தது அதன் பின்னர் ஒரு தளம்பல் நிலையை அடைந்துள்ளது. மார்ச்சில் அது வீழ்ச்சியடைந்தது. பின்னர் ஏப்ரலில் அது அதிகரித்தது. தொடர்ந்து மேயில் மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
உலகப் பொருளாதாரத்திற்கு இப்போது தேவைப்படுவது:
விலைகள் உயர உற்பத்தியாளர்களின் இலாபம் உயரும்
இலாபம் உயர முதலீடு உயரும்

முதலீடு உயர பொருளாதாரம் வளரும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...