Sunday, 14 June 2020

தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும்



கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள்
என ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை பராக் ஒபாமா கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார்.

அமெரிக்க வெளியுறவில் கையாள்தல் அரசுறவியல்
பில் கிளிண்டன் பொஸ்னியாவிலும் கொசொவாவிலும் படைத்துறைக் கையாளலையும் செய்யத் தயங்கவில்லை. அந்த நடவடிக்கை சீனத் தூதுவரகத்தின் மேல் தெரிந்து கொண்டே குண்டு வீசும் அளவிற்கும் இரசியாவுடன் ஒரு போர் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் வரைக்கும் தள்ளப்பட்டது. தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது தைவான் நீரிணைக்கு அமெரிக்காவின் இரு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கிளிண்டன் கைவிடச் செய்தார். எதிரிகளுடன் தெளிவான உறவை உருவாக்க எடுக்கும் முயற்ச்சியை கிளிண்டன் மேற்கொண்டார். இரசியாவை ஜீ-8 அமைப்பிலும் ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பிலும் மற்றும் பல பன்னாட்டு நிதி அமைப்புக்களிலும் இணைய கிளிண்டன் வழிவகுத்தார். பராக் ஒபாமா கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு என்றார். மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார். இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் எதிர்ப்புக்கிடையிலும் ஈரானுடன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தை ஐந்து நாடுகளுடன் இணைந்து ஒபாமா செய்தார். ஒபாமாவின் கையாள்தல் இருதரப்பு மரியாதை, பொதுவான அக்கறைகள், பகிரும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இரசியா உக்ரேனுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவின் கையாள்தல் அரசுறவியலின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. விரும்பத்தகாத ஆட்சியாளர்களால் ஆளப்படும் நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தி அந்த நாட்டு மக்களையும் வர்த்தக அடிப்படையில் சுரண்டுதலை நோக்கமாகக் கொண்டதுதான் பராக் ஒபாமாவில் கையாள்தல் அரசுறவியல். 

ஹென்றி கிசிஞ்சரின் கள்ளத்தனமான கையாளல் அரசுறவியல்
1981 முதல் 1989 வரை அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஆட்சியின் போது உலகெங்கும் தென் ஆப்ரிக்காவின் இன ஒதுக்கல் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது தென் ஆபிரிக்காவை ஒதுக்காமல் அதனுடன் உறவை பேணுவதற்கு ரீகனின் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிசிஞ்சரின் “ஆக்கம்சார் கையாளல்” (Constructive Engagement) என்ற பெயரைக் கொடுத்தார். அமெரிக்கா தீவிரமான பனிப்போரில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இரசியாவிற்கு எதிரான அணியில் தென் ஆபிரிக்கா இருப்பது அவசியமானதாக இருந்தது. சஹாரா பாலைவனத்திற்கு தெற்கில் உள்ள நாடுகளின் பொதுவுடமைவாதம் பரவாமல் இருப்பதற்கு தென் ஆபிரிக்க நிறவெறி அரசின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதனால் அந்த கள்ள உறவை நியாயப்படுத்த ஹென்றி கிசிஞ்சர் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவித்தார். அவரது திடுட்டுத்தனம் அம்பலமான பின்னர் யாரும் “ஆக்கம்சார் கையாளல்” என்ற பதத்தை பாவிப்பதில்லை. தென் ஆபிரிக்கா மீதான பொருளாதாரத் தடைகளால் அது நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் “ஆக்கம்சார் கையாளல்” என்னும் போர்வையில் படைக்கல ஏற்றுமதி, முதலீடு உட்பட பல உதவிகளை ரீகன் - கிசிஞ்சர் ஆட்சி செய்தது. அப்படிச் செய்வதால் அங்கு மக்களாட்சியை நோக்கிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இந்திய ஜெய்சங்கரின் கையாளல்
இந்திய அமெரிக்க உறவை மிக நெருக்கமாக்குவதில் முன்னின்று செயற்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 2019 டிசம்பர் நடுப்பகுயில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் 2+2 சந்திப்பை வாஷிங்டனில் நடத்தி முடித்த பின்னர் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாவதை விரும்பாதவர்களுக்கு பதிலளிக்கும் போது இந்தியா பாக்கிஸ்த்தானைத் தவிர தன்னுடன் முரண்பட்டுக்கொண்டு இருப்பவர்களை எப்போதும் “கையாள்வதை” வழக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றார். இந்தியாவை சீனாவிற்கு எதிரான அணியில் இணைவதால் உள்ள ஆபத்தை மறைக்க ஜெய்சங்கருக்கு அந்த கையாள்தல் எனற திரை தேவைப்பட்டது.

தமிழர்களால் இந்தியாவைக் கையாள முடியுமா?
இந்தியா தொடர்பாக தமிழ்த் தரப்பு எதிர் நிலையும் எடுக்க வேண்டாம். எடுபிடியாகவும் இருக்க வேண்டாம். கையாளும் மார்க்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.” என்ற கருத்தை சிலர் ஈழத் தமிழர்கள் முன் வைக்கின்றார்கள். நாம் இந்தியாவை அப்படிக் கையாள முடியுமா? 2009 மே மாதத்தின் பின்னர் ததேகூ ஐ சந்தித்த எம் நாராயணனும் ஷிவ் ஷங்கர் மேனனும் உங்களுக்கு என்ன வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டாம், உங்களுக்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்கின்றோம் என்றனர். கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நீங்கள் என அவர்களின் நிலைப்பாடு இருந்தது; இன்றும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இருதரப்பு மரியாதை இல்லாத நிலையில் கையாளல் என்ற கொள்கையை தமிழர்கள் முன்னெடுக்க முடியாது. பில் கிளிண்டனின் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். அதைத் தான் தமிழர்களும் செய்ய வேண்டுமா? கையாள்தல் என்றால் என்ன, அதை எப்படி முன்னெடுப்பது என்ற விளக்கம் இல்லாமல் இந்தியாவைக் கையாளுவோம் என்கின்றனர். 2013-ம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைக் கூட்டக் கூடாது என தமிழர்கள் முன்வைத்த போது அதன் பொதுச் செயலராக இருந்த இந்தியர் சொன்னது நாங்கள் இலங்கையை கையாள வேண்டும். என்பது அப்பது அவர்கள் சொன்னது ஒரு நொண்டிச்சாட்டு மட்டுமே. தமிழர்களை ஏமாற்ற சிலர் கையாள்தல் அரசுறவியலைக் கையில் எடுத்துள்ளனர்.
தமிழர்கள் இந்தியாவைக் கையாள வேண்டும் எனப் போதிக்கும் அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் 1980களில் இருந்து இப்படி மாறிக் கொண்டு போகின்றது:

  • ·         இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.
  • ·         இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்
  • ·         இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் பெற்றுத் தரும்
  • ·         இந்தியா தமிழர்களைக் கைவிடாது.
  • ·         இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.

ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இரு புறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவு சார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கின்றனர். அதுதான் நாம் “இந்தியாவை கையாள வேண்டும்” என்ற முன்மொழிபு. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன் வைக்கும் விவாதம்தான் இந்த கையாள்தல் என்ற வாசகம்.

சிங்களத் தலைவர்களின் மாறிய நிலைப்பாடு
இந்தியக் கொள்கை வகுப்பாளரகள் தமிழர்களை தமது வெளியுறவுக் கொளையைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே கருதுகின்றனர். சிங்களவர்களை தமது பக்கம் நிற்க வைப்பதே இந்தியாவின் நோக்கமாக இருக்கின்றது. இலங்கையை ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டாரகள் என்பது தலைமை அமைச்சர் மஹிந்த ராஜ்பக்ச 2020 மே மாதம் நியூஸ்-18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது. 2014-ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலின் பின்னர் ராஜபக்சேக்கள் இந்தியா அதிருப்தியடையும் வகையில் சீனாவுடன் உறவை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டனர்.
கையாள்தல் அரசுறவியல் என்றால் என்ன?
அரசுறவியலில் தற்போது அரசுகள் அரசிலா அமைப்புக்கள், பன்னாட்டு பொது அமைப்புக்கள், இனக்குழுமங்கள், குடிசார் சமூகங்கள், படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் என்ப பல உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அரசு அல்லது அமைப்பு எனச் சுருக்கமாக அழைப்போமாக
·         ஓர் அரசு அல்லது அமைப்பு தனக்கு போட்டியாளருடன் அல்லது எதிரியுடன் மோதல் தவிர்ந்த பிறவழிகள் மூலம் தனது நலன்களுக்கும் கௌரவத்திற்கும் பாதகம் ஏற்படாத வகையில் இடைவினையாற்றி இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் இடைவினையாற்றுதல் (interacting) கையாளுதல் எனப்படும்

இந்தியா ஈழத் தமிழர்களின் நலன்களுக்கும் கௌரவத்திற்கும் பாதகம் ஏற்படாத வகையில் செயற்படாதவரையில் தமிழர்களால் இந்தியாவைக் கையாள முடியாது. சிங்கள அரசியல்வாதிகள் இலங்கைப் பாராளமன்றத்தில் நாம் தமிழர்களுக்கு இணைப்பாட்சி கொடுக்கத் தயாராக இருந்தாலும் இந்தியா அதை அனுமதிக்காது என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவின் நிலைப்பாடு உள்ளது. 
கையாள்தல் என்ற சொல் கள்ளர்களின் கடைசிக் குகை.

Tuesday, 9 June 2020

சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை


துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு இவை யாவும் சீனா ஆட்சியாளர்களுக்கு பெருமையை மட்டுமல்ல துணிச்சலையும் கொடுக்கக் கூடியவை. 2020 மே மாதம் சீனா வியட்னாமின் படகை மூழ்கடித்தது, தைவான் வான்பரப்புக்குள் தன் போர் விமானங்களைத் தொடர்ச்சியாக அனுப்பியது, ஹொங் கொங் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறி அங்கு தன் அதிகாரப் பிடியை இறுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது, இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களை அதிகரித்தது, அமெரிக்காவுடன் ஒரு வார்த்தைப் போரைச் செய்து வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்துகின்றது.
இரசியாவும் அதைத் தொடர்ந்து ஜப்பானும்
1914இல் இருந்து 1918வரை நடந்த உலகப் போரின் முன்னரும் பின்னரும் பிரித்தானிய உலகப் பெருவல்லரசாக இருந்தது. 1929இல் இருந்து 1933வரை நிலவிய பொருளாதாரப் பெருமந்த நிலைக்குப் பின்னர் அதன் நிலை தேயத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. அமெரிக்காவின் அந்த நிலைக்கான சவால் சோவியத் ஒன்றியத்திடமிருந்து இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது போல் கொவிட்-19 தொற்று நோய்ப் பிரச்சனையின் பின்னர் சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றதா? 1980களில் இனி ஜப்பான் உலகை ஆளப் போகிறது சொன்னவர்கள் பலர். பின்னர் முப்பது ஆண்டுகளாக அது பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தது. ஜப்பானின் தனிநபர் வருமானம் அதிகரித்த போது ஜப்பானிய ஊழியர்களின் வேதனம் அதிகரித்தது, அதனால் ஜப்பானின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. அந்தத் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக ஜப்பானின் மக்கள் தொகையில் முதியோர் அதிகமாயினர். அதனால் உலகப் பொருளாதார அரங்கில் ஜப்பான் தனது போட்டி போடும் திறனை இழந்து. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பனிப்போர் நடந்த போது சோவியத் ஒன்றியம் உலகை ஆளப்போகின்றது என்றனர். சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்காக போட்டியிடும் போது அதன் மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்காவின் அமெரிக்காவினுடைய மொ.தே.உஇன் அரைப்பங்காக இருந்தது, தனிநபர் வருமானம் காற்பங்காக இருந்தது. ஆனால் படைத்திறையில் அமெரிக்காவிற்கு ஈடாக நின்றது. அதன் பொருளாதாரப் பின்னடைவால் அது பனிப்போரில் பின்னடைவைக் கண்டதுடன் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்தது.
அனுபவங்களைக் கருத்தில் கொண்ட சீனா
இரசியாவினதும் ஜப்பானினதும் அனுபவங்களை சீனா நன்கு புரிந்து வைத்துள்ளது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் தொழில்நுட்பத்தையும் அது உறுதியாக மேம்படுத்தி வருகின்றது. அதனால் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் சீனாவால் அமெரிக்காவிற்கு வரும் அச்சுறுத்தல் சோவியத் ஒன்றியத்திடமிருந்த வந்த அச்சுறுத்தலிலும் பார்க்க கையாள்வதற்கு சிக்கலானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்துள்ளனர். சீனர்களின் சராசரி சம்பளம்1990-ம் ஆண்டு $150, 2005-ம் ஆண்டு $2800, 2015-ம் ஆண்டு $8900, 2020-ம் ஆண்டு $13500. இந்த பன்மடங்கு அதிகரிப்புக்கு மத்தியிலும் சீனா உலகில் முதற்தர உற்பத்தி நாடு என்ற நிலையை இழக்கவில்லை. ஊழியர்களின் வருவாய் அதிகரிப்பை உற்பத்தித் திறன் அதிகரிப்பால் சீனா ஈடு செய்ய முயற்ச்சிக்கின்றது. இதனால் ஜப்பானைப் போல் சீனா தொடர்ச்சியாக பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கப் போவதில்லை. 


அமெரிக்கா எதிர்பார்த்தது போல் சீனா நடக்கவில்லை
1979-ம் ஆண்டு நிக்சன் - கிஸ்ஸிங்கர் நிர்வாகம் சீனாவுடனான அமெரிக்க உறவை உயர்த்திய போது சீனா உள்நாட்டில் மக்களாட்சி நோக்கிய நகர்வுகளை உருவாக்கும் என்றும் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படமாட்டாது என்றும் அமெரிக்கா தரப்பில் நம்பப்பட்டது. 2011-ம் ஆண்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைய அமெரிக்கா அனுமதித்த போது சீனா மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவை ஏதும் இனி நடக்காது என்பதை சீன அதிபர் ஜீ ன்பிங்கின் தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா தொடர்ச்சியாக திருடிக் கொண்டிர்க்கின்றது என அமெரிக்கர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்தான் அமெரிக்கா சீனாமீது வர்த்தகப் போரை 2018ஆரம்பித்ததுடன் 2019இல் தொழில்நுட்பப் போரை ஆரம்பித்தது. கடைசியாக அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்ப்பு மருந்து ஆராய்ச்சிகளைக் கூட சீனா திருட முயற்ச்சிக்கின்றது என்றும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரியில் நடந்த மியூனிச் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்ப்பர் சீனாவை “அதிகரிக்கும் அச்சுறுத்தல்” என விபரித்ததோடு மற்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடன் ஒரு மோதலுக்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 2020 மே மாதம் சீன அதிபர் சீனப்படைகளை ஒரு போருக்கு தயாராகும் படை அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவை மிரட்டும் சீனா?
2020 மே மாத நடுப்பகுதியில் சீன அரச ஊடகம் தற்போதைய சூழலில் சீனா மூன்று கேந்திரோபாயங்களை முன்னெடுக்கின்றது என்றது. 1. அமெரிக்காவைக் கையாளுதல், இந்தியா, ஜப்பான், இரசியா உள்ளிட்ட அயல்நாடுகளுடனான உறவிற்கு முன்னுரிமை கொடுத்தல், சீன நிகழ்ச்சி நிரலின் அடிப்படையாக வளர்முக நாடுகளை கருதுதல். ஆனால் சீனப் படைகள் இந்திய எல்லைகளில் அத்து மீறுவது சீனாவின் இரண்டாவது கொள்கைக்கு முரணாக இருக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவுச் செயற்பாடுகளை “ஊரை அடித்து உலையில் போடுதல்” எனவும் சீனாவின் செயற்பாடுகள் “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என்வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?” எனவும் விபரிக்கலாம். சீனா தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா வரவேண்டும் என எதிர்பார்க்கின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் இந்தியா சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நிற்கின்றது. தைவானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்க வேண்டும் என இந்தியா கருதுகின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்கு சீனாதான் காரணம் என இந்தியாவும் கருதுகின்றது. இவற்றால் சினமடைந்த சீனா மோடி அரசுக்கு இந்திய மக்களிடையே அவமதிப்பை ஏற்படுத்த எல்லைப் படை நகர்வுகளை மேற்கொள்கின்றது. சீனாவின் நிபந்தனைகளுக்கு மோடி அரசு பணியாவிடில் ஒரு சிறிய போரை சீனா இந்திய எல்லையில் செய்யத் துணிந்து நிற்கின்றது.  சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் (சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.)
பொருளாதார பேரரசு
சீனா தனது பட்டி+பாதை முன்னெடுப்பில் (BELT & ROAD INITIATIVE)138 நாடுகளையும் முப்பது பன்னாட்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது. 2027-ம் ஆண்டளவில் இந்தத் திட்டத்திற்கு சீனா செய்யும் மொத்தச் செலவு 1.2ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சீனாவை ஒரு பொருளாதார ஏகாதிபத்திய நாடாக்கும் முயற்ச்சி எனவும் சீனாவை ஒரு பொருளாதாரப் பேரரசாக்கும் திட்டம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது. இன்னொரு புறம் சீனா இந்த நாடுகளுக்கு உயர்வட்டிக் கடன்களை வழங்கும் பொறிக்குள் சிக்க வைத்து அந்த நாட்டின் வளங்களைத் தனதாக்கும் முயற்ச்சி எனவும் விமர்சிக்கப்படுகின்றது. சீனாவின் எதிரிகள் இந்தத் திட்டத்தை முறியடித்து சீனாவிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த முயற்ச்சிக்கலாம். இந்த நாடுகளை சீனா பொருளாதார அடிப்படையில் சுரண்டுகின்றது என்ற பரப்புரையை சீனாவின் எதிரிகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். அந்த நாடுகளில் ஒரு புரட்சிகர அரசு பொறுப்பேற்று பன்னாட்டு நியமங்களை மீறி அங்குள்ள சீனச் சொத்துக்களை அரசுடமையாக்கலாம். உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு அரசு பதவியேற்று தற்போது சீனாவிற்குச் சொந்தமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசுடமையாக்கி அதில் சீனாவிற்கு எதிரான நாடுகளை தளம் அமைக்க வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளால் சீனா தனது முதலீடுகளை முற்றாக இழக்கலாம் என்பதையிட்டு சீனா அஞ்சாமல் இருக்கின்றது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை

கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்பிலும் பார்க்க குறைந்த அளவு பாதிப்பையே சீனாவிற்கு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியின் மூன்றி இரண்டு பங்கு என்ற உயர்ந்த நிலையில் இருந்த நிலையில் இருந்தது. அதை அடிப்படையாக வைத்து அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தைக் கட்டி எழுப்பியது. அப்போது மற்ற முன்னணி நாடுகள் ஒரு போர் செய்து சலித்துப் போயிருந்தன. இப்போது அந்த மாதிரியான நிலையில் சீனா இல்லை. படை, குடி, கூழ், ஆகியவை சீனாவிடம் சிறப்பாக இருந்தாலும் நட்பும் அரணும் அமெரிக்காவிற்கு இருப்பது போல் சீனாவிற்கு இல்லை.

Monday, 1 June 2020

புவிசார் அரசியல்

புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக்காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் சிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

மாறிக்கொண்டே இருக்கும் புவிசார் அரசியல்
21-ம் நூற்றாண்டில் புவிசார் அரசியலில் நீர்ப்பங்கீடு பெரும் பங்கு வகிக்கவிருக்கின்றது. பல நாடுகள் ஒரு நதியைப் பங்கிடுவதிலும் ஒரு நாட்டில் உள்ள வெவ்வேறு இனக்குழுமங்கள் நீர் வளங்களை இட்டும் நீர் வழங்கலையும் இட்டும் மோதிக்கொள்ளும். ஏற்கனவே சூழல் பாதுகாப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டது. சீனா தனது ஏற்றுமதி – இறக்குமதிக்கான பாதையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய புவிசார் அரசியல் பிரச்சனையை உருவாக்கி விட்டது. தென் அமெரிக்காவின் புவிசார் அரசியலில் பெரும் பிரச்சனையாக இருப்பது போதைப் பொருள் உற்பத்தி. இன்று தாமாகவே நாடுகள் கடந்து செல்லும் வெட்டுக்கிளிகள் நாளை ஒரு புவிசார் அரசியல் கருவியாகப் பாவிக்கப்பட்டு செயற்கையாவெ பரவச் செய்யப்படலாம்.

புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:
1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்
2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.
3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.
4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.
5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு
7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.
இதையே சுருக்கமாகச் சொல்வதானால்:
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள், மதம், கலாச்சாரம், வளம் தொடர்பான அங்குள்ள அதிகார மையங்களின் கொள்கைகளையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் அரசற்ற அமைப்புக்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் புவிசார் அரசியல் என அழைக்கப்படும்.

தமிழ் அரசியல் அறிஞர்களும் கையாள்தலும்
எமது அரசியல் அறிஞர்களுக்கு தெரிந்த புவிசார் அரசியல் என்பது பாக்கிஸ்த்தான் வந்தால் இந்தியா வரும், இந்தியா வந்தால் சீனா வரும், சீனா வந்தால் அமெரிக்கா வரும், அமெரிக்கா வந்தால் இரசியா வரும் என்பதாகும். அத்துடன் அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தையும் இந்து மாக்கடலின் வர்த்தகப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் சொல்லுவாரகள். இந்த அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் இப்படி மாறிக் கொண்டு போகின்றது:
·         இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும்.
·         இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும்
·         இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் பெற்றுத் தரும்
·         இந்தியா தமிழர்களைக் கைவிடாது.
·         இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.
ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இரு புறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவு சார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கின்றனர். அதுதான் நாம் “இந்தியாவை கையாள வேண்டும்”. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன் வைக்கும் விவாதம்தான் இந்த கையாள்தல் என்ற வாசகம்.

உலக அரங்கில் கையாள்தல் கொள்கை
முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்ற எண்ணத்தை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் எனச் சொல்லி முன்னாள் அமெரிக்க அதிபர்களான இரண்டு ஜோர்ஜ் புஷ்களும்  ஒதுக்கியது போல் ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கை நோக்கிய நகர்வு. மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூக்கியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார். கியூபா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் செயற்படுத்திய கையாள்தல் கொள்கை போதிய பயனளிக்கவில்லை. பில் கிளிண்டனின் வெளியுறவுத்துறையில் பணி புரிந்த ரொபேர்ட் சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல் மோசமாக வரையறைச் செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். மிக உயர்ந்த பேரம் பேசல் வலுவில் உள்ள அமெரிக்காவிலேயே கையாளுதல் சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்றால் தமிழர்கள் கையாள்தல் கொள்கையைப் பாவித்து தமது நிலையை உயர்த்துவது எப்படி?

பரந்த அறிவற்ற அரசியலறிஞர்கள்
ஈழத் தமிழர்களைச் சூழவுள்ள புவிசார் அரசியலைப் பார்த்தோம் என்றால் சீனா இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றது என்பது முதன்மையான உண்மை. அதை எதிர்க்க ஈழத் தமிழர்களை இந்தியாவும் அமெரிக்காவும் தனித்தனியாகவோ இனைந்தோ பாவித்து இலங்கைமீது அழுத்தம் கொடுக்கும். அதை தமிழர்கள் வாய்ப்பாகப் பயன் படுத்தி இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க அழுத்தம் கொடுக்கச் சொல்லி இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் பேரம் பேசலாம் என சில அரசியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். அவர்கள் வெறும் அரசியல் அறிஞர்கள் மட்டுமே. புவிசார அரசியல் அறிஞர்கள் அல்லர். இலங்கையின் ஏற்றுமதியில் 60%இற்கு மேலானவை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு செல்கின்றது. இவற்றைத்தான் மேற்கு நாடுகள் எனச் சொல்கின்றனர். இலங்கை மேற்கு நாடுகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சீனாவுடன் இணைய முடியாது. பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என மேற்கு நாடுகள் அறிவித்தால் இலங்கை தனது கொள்கையை மேற்கு நாடுகளுக்கு இசைவாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவிற்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானது. இலங்கை தொடர்பான பொருளாதார அறிவுள்ள அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமே இலங்கையில் மேற்கு நாடுகளும் சீனாவும் இடையிலான போட்டியில் மேற்கு நாடுகளின் வலிமையை உணர்ந்து கருத்துச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இலங்கையில் சீனப் படைத்தளப் பூச்சாண்டி
இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்கலாம் அல்லது அமைக்க முயற்ச்சிக்கின்றது என படைத்துறை அறிவில்லாதவரகள் மட்டுமே ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். இந்தியாவின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இந்தியாவிற்கு எதிரான நாடு படைத்தளம் அமைக்க மாட்டாது  என்பதை உணர்ந்து கருத்துச் சொல்வதற்கு உலகெங்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய படைக்கலன்களைப் பற்றிய அறிவு தேவை. B-21, C-5 எனப்படுபவை நெடுஞ்சாலைகளா எனக் கேட்பவர்களால் புவிசார் அரசியலை உணர்ந்து கருத்துச் சொல்ல முடியாது. அண்மையில் ஒரு காணொலிச் செய்தியில் அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களுக்கு சீனா அஞ்சி நடுங்குகின்றது என செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவிடமும் லேசர் படைக்கலன்கள் உள்ளன என்பதை அந்த காணொலித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவாளிகள் நடுவில் தொலைநோக்கம் ஏதுமே இல்லாத தலைவகளின் வழிகாட்டுதலுடன் தமிழர்கள் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பிரித்தலும் புகுத்தலும்
தமிழர்களின் எதிரி நாடுகள் தமிழர்களின் படைக்கலன் ஏந்திய போராட்டத்தை அழிக்க அதனுள் இருந்து சிலரை வெளியே எடுத்து கொழும்பிற்கு கொண்டு சென்றன. இப்போது அதே நாடுகள் ஒருவர் பின் ஒருவராக தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே சில கொழும்பு அறிவாளிகளைப் புகுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இலங்கையை சூழவுள்ள பிரதேசத்தின் புவிசார் அரசியலில் எந்த பாகமும் வகிக்க முடியாத வகையில் அவர்களிடையே பல கட்சிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மைவாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை 2009இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத் தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர்.

புவிசார் அரசியல் கோட்பாடுக்ளைப் பற்றி அறிய இந்த இணைப்பில் சொடுக்கவும்:

Monday, 25 May 2020

பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா?

2019 ஓகஸ்ட் மாதம் 6-ம் திகதி இந்திய அரசியலமைப்பில் கஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் இன்ஹ்டிய அரசியலமைப்பின் 370வது பிரிவை இரத்துச் செய்யும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் சீன வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் இந்தியாவின் ஒருமித்த பகுதிகள் என்றார். 2020 ஜனவரியில் இந்திய படைத் தளபதி மனோஜ் நரவானே இந்தியப் பாராளமன்றம் அனுமதித்தால் தாமது படையினர் பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரைக் கைப்பற்றத்தயார் என்றார். 2020 பெப்ரவரி 23-ம் திகதி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்திருக்கும் கஷ்மீரை “மீளக் கைப்பற்றுவது” செய்யக் கூடிய ஒன்று ஆனால் இலகுவானதல்ல என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் இந்தியா செய்ய வேண்டி படை நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன:
1. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் தனது அமெரிக்கத் தயாரிப்பு F/A-18 Super Hornet விமானங்களுடனும் மற்ற போர்க்கப்பல்களுடனும் அரபிக்கடலில் செயற்பட்டு பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகை செய்ய வேண்டும்.
2. F/A-18இல் இரசிய இந்திய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைளைத் தாங்கி நிற்கும்.
3. ஐம்பதாயிரம் இந்தியப் படையினர் T-90, T-72 ஆகிய போர்த்தாங்கிகளுடன் தானாகவே செலுத்தும் தென் கொரியாவின் கே-9 வஜ்ரா எறிகணைகளுடனும் பிரெஞ்சு ரஃபேல் விமானங்களின் ஆதரவுடனும் எல்லை தாண்டிச் செல்ல வேண்டும்
4. ரஃபேல் விமானங்கள் இஸ்ரேலியத் தயாரிப்பு லேசர்-வழிகாட்டி குண்டுகளை பாக்கிஸ்த்தானின் படைக்கலக் கிடங்குகள் மீது வீச வேண்டும்.
5. இரசியவின் எஸ்யூ-30எம்கேஐ விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை எதிரி இலக்குகள் மீது வீச வேண்டும்.
இந்தியப் படை நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்த்தானின் எதிர்வினையையும் இண்டியன் எக்ஸ்பிரஸ் வரிசைப்படுத்தியது:
1. பாக்கிஸ்த்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை இந்திய எதிர்கொள்ளவேண்டும்.
2. பாக்கிஸ்த்தானுடன் எல்லாக்காலமும் நண்பனாக இருக்கு சீனா இந்தியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்தியப் படைகள் மீது தாக்குதல் செய்யும்.

வளரும் இந்தியாவால் தேயும் பாக்கிஸ்த்தான்
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான படைவலிமை இடைவெளி மட்டுமல்ல பொருளாதார வலு இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உலகிலேயே அதிக அளவு செலவில் படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா இருந்து வருகின்றது.

பாஜகவின் பெரிய கஷ்மீர் கனவு
நேருவின் தலையில் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்ற மகுடமும் இந்திரா கந்தியின் தலையில் பங்களாதேச விடுதலை என்ற மகுடமும் இருப்பது போல் நரேந்திர மோடியின் தலையில் கஷ்மீரை முழுமையாக மீட்ட வீரர் என்ற மகுடம் சூட்ட பாரதிய ஜனதாக் கட்சி விரும்பலாம். அவர்களின் திட்டம் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் அதனுடன் இணைந்த கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசமும் இந்தியாவிற்கு சொந்தமாக வேண்டும் என்பதே. பாக்கிஸ்த்தானிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க 2020 மே 16-ம் திகதி பாக்கிஸ்த்தானிய அதிபர் கில்ஜிட் பலிஸ்டானில் தேர்தல் நடத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி 24-06-2020 அங்கு தேர்தல் நடத்தப்படும். அது இந்தியாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் எனச் சொல்லி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசத்தில் சீனாவின் உதவியுடன் ஐந்து அணைக்கட்டுக்கள் கட்டப்படுவதையும் இந்தியா ஆட்சேபித்துள்ளது. மோடியின் அரசு இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவிற்கான கால நிலை அறிக்கை ஒளிபரப்பும் போது பாக்கிஸ்த்தான் கைப்பற்றியுள்ள கஷ்மீரையும் உள்ளடக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அதில் காட்டப்படும் வரைபடத்தில் இந்தியாவுடன் முழுக் கஷ்மீரும் இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கஷ்மீரின் வரலாறு: ஆக்கிரமிப்பும் விலை போதலும்
கி.மு. 3ம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியால் ஸ்ரீநகர் உருவாக்கப்பட்டது. அசோகருக்கு பின்னர் ஜலோகா எனும் மன்னன் ஆண்டான். இக்காலத்தில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்பட்டது. கி.பி.210 வரை இருந்த குஷாணர்கள் ஆட்சி காலத்தில் புத்த மதம் மேலும் வேரூன்றியது. 6வது நூற்றாண்டில் ஹீனர்கள் காஷ்மீரை தமது பிடிக்குள் கொண்டுவந்தனர். கி.பி. 627ல் துர்பலா வர்தனா எனும் மன்னன் இப்பகுதியை தனது திருமண சீதனமாக பெற்றான். இந்த மன்னன் காலத்தில் பல இந்து கோவில்கள் கட்டப்பட்டன. 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காஷ்மீருக்கு இந்து மதத்தை பரவலாக்கிட வருகை புரிந்தார்.கி.பி. 1546ல் அக்பர் பேரரசர் காஷ்மீரை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆட்சியின் பொழுது இசுலாம் வலுவாக காஷ்மீரில் காலூன்றியது. 1751ல் ஆஃப்கன் அரசர்களின் பிடியில் காஷ்மீர் சென்றது. பின்னர் 1789ல் சீக்கியர்கள் காஷ்மீரை கைப்பற்றினர். 1846 போரில் சீக்கியர்களை பிரிட்டஷ் படை வென்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் பொழுது பிரிட்டஷார் 75 இலட்சம் ரூபாயை கோரினர். இந்த பெரும் தொகையை தர இயலாத சீக்கிய மன்னன் காஷ்மீரை பிரிட்டஷாருக்கு கொடுத்தான். காஷ்மீரை நிர்வகிப்பதில் பல இன்னல்கள் ஏற்பட்டதால் பிரிட்டஷார் இப்பகுதியை டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் எனும் மன்னனிடம் 100 இலட்சம் ரூபாய்க்கு விற்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி குலாப்சிங் பிரிட்டஷாருக்கு வரிகளை கட்டிவிட்டு காஷ்மீருக்கு மன்னனாக தொடர்ந்தான். குலாப்சிங் வழியில் இரண்பீர்சிங் (1857-85) , பிரதாப்சிங் (1885-1925) மற்றும் ஹரிசிங் (1925-47) ஆகியோர் காஷ்மீரை ஆண்டனர்.

கஷ்மீர் பிரிவும் ஆக்கிரமிப்பும்
இந்திய உபகண்டத்தை பிரித்தானியர் ஆண்டபோது இருவகையாக அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஒன்று நேரடி ஆட்சி மற்றது சிற்றரசர்கள் மூலமான ஆட்சி. சிற்றரசர்கள் மூலம் ஆளப்பட்ட பிரதேசங்கள் Princley States (சமஸ்த்தானங்கள்) என அழைக்கப்பட்டன. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் சுதந்திரமடைந்த போது 565 சிற்றரசுகள் இருந்தன. பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பிரிந்த போது இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாக்கிஸ்த்தானுடன் இணைவதா என்பதை அந்த சிற்றரசர்கள் முடிவு செய்யலாம் என பிரித்தானியா அறிவித்தது. பிரித்தானியாவின் நேரடி ஆட்சியில் உள்ள பிரதேசங்களில் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்கள் இந்தியாவுடனும் இஸ்லாமியர்களைப் பெரும்பானமையினராகக் கொண்ட பிரதேசங்கள் பாக்கிஸ்த்தானுடனும் இணைவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்களைப் பெரும்பன்மையினராகக் கொண்ட ஜம்மு-கஷ்மீரை அப்போது ஹரி சிங் என்னும் இந்து சிற்றரசர் ஆண்டு கொண்டிருந்தார். மற்ற இந்தியர்களிலும் பாக்கிஸ்த்தானியர்களிலும் வேறுபட்ட தனித்துவமான கலச்சாரத்தையும் மொழியையும் கஷ்மீரியர்கள் கொண்டிருந்தனர். பிரித்தானியா இந்திய உபகண்டத்தில் இருந்து வெளியேறியபோது கஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த ஹரி சிங் அதை ஒரு தனிநாடாக வைத்திருக்க முடிவு செய்தார். அதை பிரித்தானியா விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டது. பின்னர் பாக்கிஸ்த்தான் கஷ்மீர் மீது படையெடுக்க பிரித்தானியா தூண்டியது. பாக்கிஸ்த்தானியப் படையெடுப்பை சமாளிக்க முடியாத ஹரி சிங் இந்திய தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவிடம் உதவி கோரினார். கஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என நேரு சொல்ல ஹரி சிங் அதை ஒத்துக் கொண்டார். மற்ற இந்திய மாநிலங்களிலும் பார்க்க அதிக அதிகாரம் கொண்ட மாநிலமாக கஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கஷ்மீரைக் கைப்பற்ற போர் புரிந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டது. ஐகிய நாடுகளின் பொதுச்சபை கஷ்மீர் தொடர்பாக 1948 ஏப்ரலில் நிறைவேற்றிய தீர்மானம் 47இன் படி பாக்கிஸ்த்தானையப் படையினர் கஷ்மீரில் இருந்து வெளியேவேண்டும், இந்தியா மட்டுப்படுத்தப் பட்டபடையினரை மட்டும் வைத்திருக்கலாம், இந்தியா கஷ்மீரில் அதன் எதிர்காலம் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டில் கஷ்மீர்
கஷ்மீரின் ஜில்ஜிட்-பலிஸ்த்தான், அஜாத் கஷ்மீர் ஆகிய பிரதேசங்கள் பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ளன. ஜம்மு, லதக், கஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய பிரதேசங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அக்சாய் சின், ரான்ஸ்-கரக்கொரம் ஆகிய பிரதேசங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதில் அக்சாய் சிங் இந்திய-சீனப் போரின்போது சீனாவால் கைப்பற்றப்பட்டது. ரான்ஸ்-கரகொரம் பாக்கிஸ்த்தானால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

சூழலை இந்தியா சாதமாக நினைக்கின்றதா?
2020 ஏப்ரில் மாதம் ஏசியா ரைம்ஸில் சீனா தைவானை ஆக்கிரமிக்க காலம் கனிந்துள்ளது என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அமெரிக்கா கோவிட்-19 தொற்றுநோயால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்ற வேண்டும் என சீனாவில் சிலர் கருதுகின்றனர். முதன்மை நாடு ஒன்று சிக்கலில் இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி இன்னொரு முதன்மை நாடு மூன்றாம் நாடு ஒன்றை ஆக்கிரமிக்க முடியுமா என்பதற்கு 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்ததை உதாரணமாகப் பார்க்கலாம். 1962-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி முதல் 28-ம் திகதிகவரி கியூப ஏவுகணை நெருக்கடி உருவானது. 1962 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி சீனா இந்தியா மீது படையெடுத்தது. அமெரிக்கா கியூபாவில் இரசியா நிறுத்தி வைத்துள்ள அணுக்குண்டுகளை காவிச்செலும் ஏவுகணை அகற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் அமெரிக்க இரசிய அணுப்படைக்களப் போர் உருவாகும் என்ற சூழலில் இந்தியாவைப் பாதுகாக்க யாரும் வரமாட்டாரகள் என்ற எண்ணத்துடன் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கெனடி இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைத் தான் செய்வதாக வாக்குறுதியளித்தார். பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இருந்து இந்தியப் படைகளுக்கு தேவையான படைக்கலன்களும் குளிர்கால ஆடைகளும் அவசரமாக இந்தியாவில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. நேரு 350 அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சீனர்களுக்கு எதிராக தாக்குதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அமெரிக்கா இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பின் ஊடாக சீனாவிற்கு தொடர்ச்சியாக பல அழுத்தங்களைப் பிரயோகித்த போது சீனா ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து கஷ்மீரில் ஒரு சிறு உயர் மலைப்பிரதேசத்தை தவிர தான் கைப்பற்றிய ஏனைய இடங்களில் இருந்து வெளியேறியது. 1962இல் இந்தியாவைக் காப்பாற்றியது போல் அமெரிக்கா தைவானைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலம். அதிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தைவான் மீது அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். சீனா தைவான் மீது போர் தொடுத்தால் அந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியா கஷ்மீரைக் கைப்பற்ற முயற்ச்சிக்கலாம். தைவானில் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கும் சீனாவால் பாக்கிஸ்த்தானைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.

இந்தியாவிற்கான காலம் கனிகின்றதா?
இந்தியாவிலும் பார்க்க அதிகஅளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானிடமிருந்து இந்தியா தன்னை இரசியாவிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் எஸ்-400-ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் பாதுகாக்கலாம். அத்துடன் பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு வீசினால் தானும் பாக்கிஸ்த்தான் மீது அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டலாம். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமெரிக்கா செய்யும் சமாதான முயற்ச்சி வெற்றியளித்தால் அமெரிக்காவிற்கு பாக்கித்தான் அவசியமற்ற ஒரு நாடாக மாற வாய்ப்புண்டு. பாக்கிஸ்த்தான் மீது இந்தியா போர் தொடுப்பது என்பது செய்தியாக அடிபட முன்னரே சீனா தனது படையை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தியிருந்தது.

இந்தியா குவாட் என்ற நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒன்றகாச் செயற்படவேண்டும் என்பதே குவாட் அமைப்பின் நோக்கம். குவாட்டில் இப்போது தென் கொரியா, வியட்னாம், நியூசீலாந்து என்பவையும் இணையும் முயற்ச்சிக்கப்படுவதால் குவாட்+ என அது பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளிடையே ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டால் அது இந்தியாவிற்கு சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். இந்தியா தனித்து பாக்கிஸ்த்தானிற்கும் சீனாவிற்கும் எதிராகப் போர் புரிந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகலாந்து ஆகியவற்றை சீனா கைப்பற்றலாம். இந்தியா கஷ்மீரை ஆட்சி செய்வதிலும் பார்க்க இலகுவாக சீனாவால் அந்த மாநிலங்களை ஆள முடியும். அவர்கள் சீனர்களைப் போல் தோற்றமுடையவர்கள். அங்கு வாழும் பல இனக்குழுமங்கள் ஒலிம்பிக் போட்டியின் போது சீனா வெற்றி பெறுவதை பெரிதும் விரும்பி ஆராவரிப்பார்கள். அதனால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்க முன்னர் ஒரு வலுவான பன்னாட்டு படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்திருப்ப்பது அவசியம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...