Monday, 6 November 2017

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்

2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு தொற்று நோய் போலப் பல நாடுகளிற்குப் பரவியுள்ளது. குர்திஷ்த்தான், கட்டலோனியா அடுத்தது தமிழ் ஈழம் என்ற கூச்சலும் எழுந்துள்ளது. தமிழ் ஈழத்தில் ஒரு பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பது உணரப்பட வில்லை. பங்களாதேச விடுதலையில் இருந்து தொடங்கிய அடுத்தது ஈழம் என்ற கூச்சல் இன்றும் தொடர்கின்றது. 2009இல் மெர்சல் ஆகியவர்கள் இப்போதுமெண்டல்” ஆகி தமிழர்களின் பேரம் பேசும் வலு தற்போது அதிகரித்துள்ளது என பிதற்றுகின்றனர். மாறிவரும் உலக சூழ்நிலை ஒரு நாளில் தமிழர்களுக்கு என ஒரு தனிநாட்டை உருவாக்கும் என அமெரிக்க வால் பிடியான பேராசிரியர் வில்சன் சொன்னது ஒரு நாள் நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளின் உருவாக வாய்ப்பே இல்லை.

தாலிகழற்றாத இத்தாலி
2017ஒக்டோபர் மாதம் இத்தாலியில் மட்டும் இரண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடந்தன. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் கருத்துக் கணிப்புக்கள் வெவ்வேறு விதமாக நடக்கின்றன. ஸ்கொட்லாந்தில் நடுவண் அரசின் அனுமதியுடனும் ஸ்கொட்லாந்துப் பிராந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பிரிவினைக்கான ஆதரவு கிடைக்கவில்லை. பிரிவினைக்கான ஆதரவு கிடைத்திருந்தாலும் உடனடியாக நாடு பிளவு பட்டிருக்காது. நாட்டைப் பிரிப்பதற்கான சட்டம் இலண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் பாராளமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஐக்கிய இராச்சிய அரசுத் தலைவரான எலிசபெத் ராணியில் கையொப்பத்தின் பின்னரே ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்திருக்கும். ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரிவினைக்கான கருத்துக் கணிப்புச் சட்டத்தின் படி ஸ்கொட்லாந்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஸ்கொட்லாந்திற்கு வெளியே வாழும் ஸ்கொட்லாந்தியர்கள் வாக்களிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து ஸ்கொட்லாந்தில் புகலிடத் தஞ்சம் கோரி வாழ்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியம் உதட்டில் வேறு உள்ளத்தில் வேறு
ஸ்கொட்லாந்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் தமக்கே உரிய பாணியில் நயவஞ்சக முகத்திற்கு கனவான் முகமூடிதரித்துக் கையாண்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர். இதற்காக அப்போதைய ஐக்கிய இராச்சியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அப்போதைய ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்டுடன் ஒப்பந்தம் செய்து பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஸ்கொட்லாந்திற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரிவினைக்கு எதிரான நல்ல, கெட்ட, வஞ்சக பரப்புரைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதனால் பிரிவினைக் கோரிக்கைமக்களாட்சி முறைமைப்படிதோற்கடிக்கப் பட்டது.
அரபுக்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள் ஆகிய முப்பெரும் இனங்களால் சூழப்பட்ட குர்திஷ் மக்கள் பல நூற்றாண்டு காலமாக அரசுரிமை இன்றி அடக்கப்படும் இனமாக வாழ்ந்து வருகின்றனர். 1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் துருக்கியரின் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்த பின்னர். மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் நாடுகளின் எல்லைகளை வரையும் போதும் தமது குடியேற்ற ஆட்சிகளை உறுதிப் படுத்தும் போதும் பிரித்தாளும் கொள்கைகளை நேர்த்தியாகக் கையாண்டனர். இனி ஒரு இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது; அடிக்கடி அந்த நாடுகள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டும்; தேவை ஏற்படும் போது குர்திஷ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி துருக்கியர்களையும், ஈரானியர்களையும் அரபுக்களையும் அடக்க வேண்டும் என்பவை அவர்களது உபாயமாக இருந்தது. அதற்காக சைக்ஸ்பைக்கோ உடன்படிக்கை (Sykes–Picot Agreement) இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டது. இது குர்திஷ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு வழிவகுத்தது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழும் நிலையை உருவாக்கியது.

சிரியாவில் வேறுவிதமான பிரகடனம்.
சிரியாவில் குர்திஷ்களுக்கு குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. அரபு வசந்தப் புரட்சிக்குப் பின்னர் சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரில் குர்திஷ் மக்கள் தியாகம் மிகு போராட்டத்தை நடத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தைக் கைப்பற்றினர். எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் குர்திஷ் மக்கள் பல தரப்பினராலும் விரும்பப் பட்டவர்களாக இருந்தனர். துருக்கி மட்டும் அவர்களது போராட்டத்தை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அவர்களுக்கு உதவியும் செய்தது. குர்திஷ் மக்களின் கடின உழைப்பு சிரியாவின் வடபகுதியில் உள்ள Afrin Canton, Jazira Canton and Kobanî Canton ஆகிய பிராந்தியங்களை அவர்கள் வசமாக்கியது. சிரிய குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சியினர் பல்வேறு குர்திஷ் அமைப்புக்களுடன் இணைந்து 2016 மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தினர். அது தனி நாட்டுக்கான வாக்கெடுப்பல்ல. அது ஓர் இணைப்பாட்சி (Federal) அரசை அமைக்கும் வாக்கெடுப்பு. அந்த வாக்கெடுப்பில் அவர்கள் வெற்றியடைந்து Democratic Federation of Northern Syria என்ற இணைப்பாட்சி அரசை உருவாக்கினர். அவர்களது பிரதேசத்தை ரொஜாவா என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். இணைப்பாட்சி அரசு என்பது சிரிய நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடிய நிலையில் சிரிய அரசும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் துருக்கியின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு சிரியக் குர்திஷ் மக்கள் சார்பாக யாரும் அழைக்கப்படவில்லை. தாம் போரில் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டதாக குர்திஷ் மக்கள் உணர்ந்து கொண்டனர். சிரியாவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பஷார் அல் அசாத் உறுதியான ஆட்சி அமைக்கும் போது ரொஜாவா இணைப்பாட்சி அரசு இல்லாமல் செய்யப்படலாம். முன்பு சிரியாவில் உள்ள குர்திஷ் மக்களைப் பாதுகாக்கும் உறுதி மொழியை இரசியா வழங்கியிருந்தது. அப்போது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமடைந்து வரும் நிலையில் அந்த உறுதிமொழிப்படி இரசியா நடக்குமா? நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படைவலு மட்டும் சுதந்திரம் கொண்டு வராது.


இத்தாலியில் தன்னாட்சி கோரும் வடக்கு
இத்தாலியில் வடக்குப் பிராந்தியம் செல்வம் மிக்கதாகவும் தெற்குப் பிராந்தியம் செல்வமற்றதாகவும் இருக்கின்றது. அதனால் வடக்குப் பிராந்தியத்தில் அறவிடப்படும் வரி தெற்குப் பிராந்தியத்தில் செலவிடப்படுகின்றது. இந்த முறைமையை மாற்றினால் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ளவர்கள் செலுத்தும் வரி குறைக்கப்படலாம். வடக்குப் பிராந்திய நகரங்களான லொம்பார்டி மற்றும் வெனிற்றா ஆகிய நகரங்கள் தமக்கு சுயாட்சி வேண்டி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைத் தனித்தனியே 2017 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி நடத்தின. இவையும் நடுவண் அரசின் அனுமதியுடனேயே நடந்தது. வடக்குச் செல்வந்தர்கள் தெற்கில் உள்ள பிராந்திய அரசுகள் ஊழல் மிகுந்தனவும் திறனற்றவையும் என ஆத்திரமடைந்ததன் விளைவாகவே இத்தாலியில் இரண்டு அதிக அதிகாரம் கோரும் கடப்பாடற்ற (non-binding)கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. ரோமில் உள்ள இத்தாலிய நடுவண் அரசு அசையவில்லை. பொருளாதார சுதந்திரம் மட்டும் அரசியல் சுதந்திரத்தைக் கொண்டு வராது.

ஈராக்கில் தனிநாடு வேண்டிய குர்திஷ்கள்
தமக்கென ஒரு நிலப்பரப்பு, தமக்கென ஒரு படை, தமக்கு என ஓர் அர்ப்பணிப்புள்ள மக்களைக் கொண்ட ஈராக்கிய குர்திஷ்தான் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை 2017 ஒக்டோபர் 25-ம் திகதி நடத்தினர். இது ஸ்கொட்லாந்தைப் போல் நடுவண் அரசின் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கருத்துக் கணிப்புக்கு ஈராக், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா ஆகியவை உட்படப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் வந்தன. அதனால் அவர்கள் தமது கருத்துக் கணிப்பை ஒரு கடப்பாடற்ற (non-binding) கருத்துக் கணிப்பாக நடத்தினர். அவர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்திய போது ஈரானும் துருக்கியும் தம் படைகளை ஈராக்கின் எல்லையை நோக்கி நகர்த்தின. அதனால் தனிநாட்டுப் பிரடனம் செய்யாமல் ஈராக்கிய நடுவண் அரசுடன் தனியரசு அமைப்பதற்கான பேச்சு வார்த்தையை குர்திஷ்கள் நடத்த முயன்றனர்.

ஈராக்கிய குர்த்திஷ்தானின் பொருளாதாரத்தின் இதயபூமியாக இருந்தது கேர்க்குக் பிரதேசமாகும். அதில் உள்ள எரிபொருள் மட்டுமே குர்திஷ்தானின் ஒரே பொருளாதார மூலமாகும். அந்தப் பிரதேசம் முன்பு குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதை சதாம் ஹுசேய்னின் அரபுமயமாக்கல் திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் நிகழ்த்தி அரபுக்கள் பெரும் பான்மையாக்கப்பட்டனர். அதனால் ஈராக்கிய நடுவண் அரசு அங்கு படையினரை அனுப்பி இலகுவாக அதை ஆக்கிரமித்தனர். அதனால் பொருளாதார ரீதியில் குர்திஷ்த்தான் தனிநாடு சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. ஈராக்கிய குர்திஷ்த்தான் நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டதாகும். குர்திஷ்த்தானுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நட்பு நாடுகள் இன்றி அவர்களால் தனிநாடு அமைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதே,

கட்டறுக்க முயன்ற கட்டலோனியா.
ஸ்பெயினின் வட கிழக்குப் பிராந்தியமான கட்டலோனியாவும் இத்தாலியின் வட பிராந்தியம் போல் செல்வம் மிக்க பிரதேசம். அதுவும் அதிக வரி செலுத்தும் பிரதேசமாகும்.  1714-ம் ஆண்டு கட்டலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கட்டலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கட்டலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். பொது இடங்களில் கட்டலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கட்டலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கட்டலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்களின் பெயர்கள் உட்பட எல்லாக் கட்டலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கட்டலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. இத்தனை மனித உரிமை மீறல்களுக்கு நடுவிலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது. கட்டலோனியப் பிராந்திய அரசு தனிநாட்டுக்கான கருத்துக் கணிப்பின் போது ஸ்பானிய நடுவண் அரசின் காவற்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். சிரியாவின் ரொஜாவாவிலும் ஈராக்கின் குர்திஷ்த்தானிலும் அப்படிச் செய்ய முடியாதபடி குர்திஷ் மக்களின் படைவலு இருந்தது.

ஆறும் வேண்டும்.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களாலும் வெறும் பிரகடனங்களாலும் ஒரு தனி அரசையோ பிராந்தியத் தன்னாட்சியுள்ள அரசையோ உருவக்க முடியாது. ஒரு நாடு உருவாகுவதாயின் முதற் தேவையானது அந்த நாட்டைப் பாதுகாக்கக் கூடிய படையே. அடுத்துத் தேவையானது அந்த நாட்டை விரும்பக் கூடிய மக்கள், அந்த நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கட்டமப்பு, அந்த நாட்டுக்கு நட்பாக இருந்து அங்கீகரிக்கக் கூடிய நட்பு நாடுகள், அந்த நாட்டை வழிநடத்தக் கூடிய அறிஞர்கள், அந்த நாட்டுக்கென பாதுகாப்பான இடம் ஆகிய ஆறும் முக்கியமானவை இந்த ஆறும் குர்திஷ்த்தானுக்கோ, ஸ்கொட்லாந்துக்கோ, வெனிற்றாவிற்கோ அல்லது கட்டலோனியாவிற்கோ இல்லை. அன்று வள்ளுவர் சொன்னது இன்றும் உண்மைஈழத்திற்கு?????

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

Monday, 30 October 2017

ஆப்கானுக்காக பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அமெரிக்கா இந்திய இணைவு

அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் இந்தியாவிற்குப் போகும் வழியில் ஓர் அறிவிக்கப்படாத பயணத்தை ஆப்கானிஸ்த்தானிற்கு மேற் கொண்டது முதல் ஆச்சரியம். அதைத் தொடர்ந்து அவர் பாக்கிஸ்தானிற்குப் போய் அங்கு ஒரு நாள் முழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தியது அடுத்த ஆச்சரியம். மேலும் அவர் இந்தியாவிற்குப் போகையில் ஆப்கானிஸ்த்தான் அதிபர் மொஹம்மட் அஸ்ரப் கானியும் (Mohammad Ashraf Ghani)  இந்தியாவிற்குப் போனது ஆச்சரியத்தின் உச்சம் . இப்பயணங்களுக்கு முன்னர் இந்திய ஊடகங்கள் பாக்கிஸ்த்தானுக்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானையும் இந்தியாவையும் இணைந்து ஒரு சுருக்குக் கயிறு போடப் போகின்றது என செய்திகள் வெளியிட்டமையை வைத்துப் பார்க்கும் போது பாக்கிஸ்த்தானுக்கு எதிராக ஒரு பெரும் சதி அரங்கேறுகின்றது என்பதை உணர முடிகின்றது.

ரில்லர்சன் இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் இந்தியா சென்றிருந்தார் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதே. அது மட்டுமல்ல ரில்லர்சன இந்தியா செல்லும் முன்னர் ஒக்டோபர் 18-ம் திகதி கேந்திரோபாய மற்ர்றும் பன்னாட்டுறவிற்கான நிலையத்தில் உரையாற்றும் போது சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் கடுமையாகச் சாடியிருந்தார் என்பதும் இன்னும் ஓர் ஆச்சரியமாகும்.  

டிரம்பும் அவரது பரப்பியமும்
பரப்பியம் (populism) என்ற கயிற்றைப் பிடித்துக் கொண்டு பதவிப்பாறையில் ஏறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கு பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றார். அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலையில் ஆப்கானிஸ்த்தானில் தலிபான், அல் கெய்தா, ஐ எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவேன் என 2017 ஓகஸ்ட் மாதம் முழங்கினார். அதைச் செயற்படுத்தும் திட்டமாகவே வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனை ஆப்கான், பாக்கிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே அமெரிக்காவி|ற்கு பெருமளவு ஏற்றுமதி செய்யும் இந்தியா ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கருத்து வெளியிட்டிருந்தார். இந்திய தரப்பில் இருந்து அதற்கு பாதகமான பதில்கள் ஏதும் வெளிவரவில்லை. ஆனால் ஆப்கான் பிரச்சனையில் இந்தியா சம்பந்தப்பட்டால் அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும் என பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்த்தானின் 350,000 படையினரும் தலிபானுக்கு எதிராக எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்பது கேள்விக் குறியே. ஆப்கானிஸ்த்தானின் ஆளும் தரப்பினரிடையே உள்ளக முரண்பாடுகளும் ஊழல்களும் நிறைந்திருக்கின்றன. அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஒரு சில மாதங்களுக்குள் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நிலை அங்குள்ளது.

பாக்கிஸ்த்தானை சீனா விட்டுக் கொடுக்காது.
சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பாக்கிஸ்த்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதையில் இருந்து பாக்கிஸ்த்தானுக்கு ஒரு பொருளாதாரப் பாதை வகுக்கும் திட்டத்தை சீனா ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அத்திட்டத்திற்கு சீனா சீன-பாக் பொருளாதாரப்பாதை” (China-Pakistan Economic Corridor -CPEC) எனப் பெயரும் இட்டுள்ளது. சீனா பொருளாதார உதவியாகவும் முதலீடாகவும் பாக்கிஸ்த்தானில் 62 பில்லியன்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமும் ஆப்கானிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடமுமாகும். ஒரு புறம் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைக்களுக்கு பாதை வழிவிடுவது உட்படப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. மறு புறம் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாக்கிஸ்த்தான் உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிர்க்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீன-பாக் பொருளாதாரப்பாதை. 2017 ஒக்டோபர் 17-ம் திகதி முதல் 24-ம் திகதிவரை சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை கட்சியிலும், ஆட்சியிலும், படையிலும் முடிசூடா மன்னன் ஆக்கிக் கொண்டார். உலக அரங்கில் சீனாவின் நிலையையும் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தையும் விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய ஜின்பிங் தனது கிழக்கு வாசலான பாக்கிஸ்த்தானில் எதிரிகளின் கைகள் ஓங்குவதை அனுமதிக்க மாட்டார். 

புதிய ஜப்பான் சும்மா விடுமா?
ஆப்கானிஸ்த்தான் பிரச்சனையில் இந்தியாவை ஈடுபடுத்தி பாக்கிஸ்த்தானை மிரட்ட முயன்றால் அதில் சீனா தலையிடுவது தவிர்க்க முடியாதது போல் பாக்கிஸ்த்தானைச் சுற்றியுள்ள பிரச்சனையில் இருந்து ஜப்பான் விலகியிருக்க முடியாது. ஜப்பானை ஒரு தாக்குதிறன் மிகுந்த படைத்துறை நாடாக மாற்றவேண்டும் என்ற கொள்கையுடைய ஜப்பானியத் தலைமை அமைச்சர் திடீர்த் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அதில் ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளும் நான்கு முனைப் பேச்சு வார்த்தை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். அப்பேச்சு வார்த்தை வர்த்தகத்திலும் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது கருத்தாகவிருக்கின்றது.

ஆப்கானை நான் வச்சிருக்கிறன் பாக்கிஸ்த்தானை நீ வச்சுக்க
போரை விரும்பும் படைத்துறையைக் கொண்டதும் பெருவல்லரசாகும் கனவுடன் இருக்கும் சீனாவுடன் நட்பை விருத்தி செய்து கொண்டிருப்பதும் அணுக்குண்டுகளை கையிருப்பில் வைத்திருப்பதுமான பாக்கிஸ்த்தான் மீது ஒரு போரை இலகுவில் தொடுக்க முடியாது. ஆனால் ஒரு போருக்கான நகர்வுகளைச் செய்தும் பாக்கிஸ்த்தானில் உள்நாட்டுப் பிளவிகள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கியும் பாக்கிஸ்த்தானை வலிமை குன்றச் செய்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்தி அதை வழிக்குக் கொண்டு வரும் சாத்தியம் உண்டு. அதற்குத் தடையாக இருக்க முயலும் சீனாவுடன் “நீ பாக்கிஸ்த்தானை வைச்சுக் கொள் நான் ஆப்கானை வச்சிருக்கிறேன்” என்ற டீலை அமெரிக்கா செய்ய வேண்டும்.

இந்தியாவின் நீண்டகால ஆவலைத் தீர்க்க வேண்டும்.
சீனாவுடன் அமெரிக்கா பேக்கரி பாணி டீல் செய்தால் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு என்ன நன்மை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது. அதற்கு இரண்டு வகையான இனிப்புக்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கலாம்.  ஐக்கிய அமெரிக்கா புதிய  தரமான தொழில்நுட்பங்களைக் கொண்ட படைக்கலன்களை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட காலக் கோரிக்கையாகும். ரில்லர்சன் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள முன்னரே அமெரிக்கா இந்தியாவுடன் படைத்துறைத் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளும் என்ற அறிக்கை வாஷிங்டனில் இருந்து வெளிவந்தது. இந்தியாவிற்கு வழங்கும் இந்த இனிப்பு அமெரிக்காவிற்குப் பல நன்மைகளைக் கொடுக்கும். முதலாவது விற்பனை வருமானம். இரண்டாவது இரசியாவிடமிருந்து இந்தியா படைக்கலன்கள் வாங்குவதைத் தடுத்தல். மூன்றாவது சீனாவை இந்தியப்படைக்கலன்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குதல். அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கக் கூடிய அடுத்த இனிப்பு ஆப்கானிஸ்தானின் கனிம வளச் சுரண்டலை இந்தியாவுடன் பங்கு போட்டுக் கொள்ளுதல். சந்திரகுப்த மௌரியன் என்ற இந்திய அரசன் கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்த்தானை ஆண்டு வந்தான். அப்போது ஆப்கானில் இந்துக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அந்த நிலை பத்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பின்னர் பல்வேறு படையெடுப்புக்களில் ஆப்கானிஸ்த்தான் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாக கொண்ட நாடாக மாறியது. இந்துத்துவாக் கொள்கை கொண்ட தற்போதைய இந்திய ஆட்சியாளர்களுக்கு சகுந்தலையின் மகன் பரதன் ஆண்ட பிரதேசத்தை, பாண்டவர்கள் ஆண்ட பிரதேசத்தை மீண்டும் இந்துத்துவா ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பலாம். ஆப்கானிஸ்த்தானின் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகின்றார்கள். ஆப்கான் மக்கள் இந்திப் படங்களால் சொக்கிப் போனவர்கள். இந்தித் திரைப்படத் துறையில் இருக்கும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் மூதாதையர் ஆப்கானிஸ்த்தானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா ஒரு நீண்டகால அடிப்படையில் ஆப்கான் முழுவதையும் இந்தியாவிற்கு விட்டுக் கொடுப்பேன் எனச் சொல்லி இந்தியாவைச் சமாதானப்படுத்தலாம்.

வளம் நிறை ஆப்கான்
ஆப்கானிஸ்த்தான் ஒரு கனிம வளம் நிறைந்த நாடாகும். அமெரிக்காவிற்கு 600 ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வழங்கள் ஆப்கானிஸ்த்தானில் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்களில் முக்கியமானவை இரும்பும் செப்பும் ஆகும்.  இரும்பின் பெறுமதி 420பில்லியன் டொலர்கள், செப்பின் பெறுமதி 240பில்லியன்கள் என்றும் கருதப்படுகின்றது. மொத்தமாக ஒரு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிம வளங்கள் இருப்பதாக 2010-ம் ஆண்டு மதிப்பிடப்பட்டது. 2010இல் உலகெங்கும் பொருளாதார மந்த நிலையில் இருந்த போது உள்ள பெறுமதியிலும் பார்க்க இப்போது பெறுமதி ஒரு ரில்லியன்களிலும் அதிகமாக இருக்கும். அதன் வருங்கால பெறுமதி மேலும் அதிகமாகும். வளங்கள் மிகையாக உள்ள நாட்டில் தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்தால் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறைவடையும். அதனால் அந்த நாட்டு வளங்களை மலிவான் விலையில் வாங்க முடியும். அந்த நாட்டின் வேறு வேறு பகுதிகள் வேறு வேறு போர்ப்பிரபுக்களின் (warlords) கட்டுப்பாட்டில் இருப்பதும் அந்த நாட்டின் வளங்களைச் மலிவு விலையில் சுரண்டுவதற்கு வாய்ப்பாகும். அந்தப் போர்ப்பிரபுக்களிடமிருந்து சுங்க வரியின்றி பெறுமதி சேர் வரியின்றி மிகவும் மலிவாக வாங்க முடியும். இந்த உத்தி கொங்கோவில் நன்கு வேலை செய்தது. கொங்கோவில் கைப்பேசிகள், டிவிடி பிளேயர்கள், மடிக்கணினிகள்இலத்திரன் விளையாட்டுக்கருவிகள், கணினிகளின் வன் தட்டுக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் tantalum என்னும் கனிம வளத்தைச் சுரண்டுவதற்காக ருவண்டாவில் உள்ள போராளிக் குழுக்களைப் பாவித்து அந்த நாடு சீரழிக்கப்பட்டது. ருவண்டாவில் இருந்து அகதிகளாகக் கொங்கோவிற்குச் சென்றவர்களை வைத்து பல போர்ப்பிரபுக்களின் கட்டுப்பாட்டில் பல சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு அபகரிக்கப் பட்டு அங்குள்ள கனிம வளங்கள் மலிவு விலையில் சூறையாடபப்ட்டன. டண்டலம்  மட்டுமல்ல தங்கம், வைரம், கோபால்ற், டங்ஸ்ரன் போன்ற பல விலை உயர்ந்த கனிம வளங்கள் கொங்கோவில் நிறைய இருக்கின்றது. ஆபிரிக்காவிலேயே அதிக அளவு நீரைக் கொண்ட கொங்கோ நதியும் கொங்கோவில் இருக்கின்றது. ஆபிரிக்காவிலேயே ஒரு வல்லரசாகவும் முதன்மைப் பொருளாதார நாடாகவும் இருக்க வேண்டிய கொங்கோ கனிம வளச் சுரண்டலுக்காக சின்னா பின்னப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதே நிலைதான் ஆப்கானிஸ்த்தானுக்கும்.

அண்மைக் காலங்களாக டிரம்பும் ஆப்கானிஸ்த்தான் அதிபர் அஸ்ரப் கானியுடன் அமெரிக்க கனிம வள அகழ்வு நிறுவனங்களை ஆப்கானிஸ்த்தானில் அனுமதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையை இரகசியமாக நடத்தினார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்த்தானின் rare-earth minerals அதன் ஹெல்மண்ட் மாகாணத்திலேயே இருக்கின்றன. அந்த மாகாணம் தலிபான் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆப்கானிஸ்த்தானுடனான பாக்கிஸ்த்தானின் எல்லையில் இருக்கும் பாக்கிஸ்த்தானின் வர்ஜிஸ்த்தான் பிரதேசத்திலும் கனிம வளங்கள் நிறைய உண்டு. ஆப்கான் பிரச்சனை தொடங்கியதில் இருந்து பல ஆண்டுகள் அப்பிரதேசம் போர்ப்பிரபுக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.


புவிசார் அரசியல் போட்டியில் ஒரு பிரதேசத்தில் உள்ள வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அரபுநாடுகளில் உலகம் உணர்ந்து கொண்டது. அதை ஆப்கானிஸ்த்தானிலும் உணருமா. அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்க்கும் போது இரசியாவின் நட்புத்தெரிவாக பாக்கிஸ்த்தானும் சீனாவும் மாறும்.


Tuesday, 24 October 2017

ஈரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் உறுதிப்படுத்த மறுத்ததன் விளைவுகள்

ஈரானுடன் 2015-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் ஜேர்மனியும் இணைந்து ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்திருந்தன. ஈரானுடன் ஒப்பந்தம் செய்த அந்த ஆறு நாடுகளும் P-5+1 என அழைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தை 90 நாட்களுக்கு ஒரு தடவை அமெரிக்க அதிபர் மீளாய்வு செய்து உறுதிப்படுத்தும் கையொப்பம் இட வேண்டும். 2017-ம் ஆண்டு ஒக்டோபரில் அதை உறுதிப் படுத்தும் கையொப்பமிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.

P-5+1 நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் செய்த பின்னர் 2015-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் அணு மீளாய்வுச் சட்டம் (Iran Nuclear Agreement Review Act) ஒன்றை பல இழுபறிகளுக்குப் பின்னர் நிறைவேற்றியது. ஆரம்பத்தில் அச்சட்டம் ஈரானால் ஏற்றுக் கொள்ளாத வகையில் இருந்தது. அதனால் அதை தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து இரத்து செய்வேன் என அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா பாராளமன்றத்தை மிரட்டினார். அதனால் அச் சட்டத்தில் பல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனால் 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையில் 98 உறுப்பினர்களின் ஆதரவுடனும் 435 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 400 உறுப்பினர்களின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமையால் அதை அதிபர் இரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் இரண்டு தடவைகள் ஈரானுடனான ஒப்பந்தத்தை தனது கையொப்பத்தை இட்டு உறுதி செய்துள்ளார். 2017 ஒக்டோபர் 15-ம் திகதி அதை அவர் உறுதி செய்யவில்லை.

ஈரானின் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் 2010-ம் ஆண்டிலும் 2015-ம் ஆண்டிலும் நிறைவேற்றப்படிருந்தன. 2010-ம் ஆண்டு ஐநா பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-1929இல் சொல்லப்பட்ட வாசகங்களில் ஒன்று “Iran shall not undertake any activity” எனவும்; 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்-2231இல் உள்ள வாசகம் “Iran is called upon not to undertake any activity related to ballistic missiles” எனவும் இருக்கின்றன. இவற்றில் shall not என்பது உத்தரவு எனவும், called upon  என்பது அறிவுரை எனவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட முன்னர் ஈரான் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அது தீர்மானத்தை மீறியதாகும். 2010-ம் ஆண்டு செய்த தீர்மானத்தை 2015-ம் ஆண்டு செய்த தீர்மானம் பிரதியீடு செய்ததால் அது இப்போது நடைமுறையில் இல்லாததாகக் கருதப்படுகின்றது.

ஈரான் 2017 ஜனவரியில் செய்த எவுகணைப் பரிசோதனை ஐநா பாதுகாப்புச் சபையின் 2015 தீர்மானம்-2231 மீறவில்லை. காரணம் அது ஈரானின் ஏவுகணைப் பரிசோதனையைத் தடை செய்யவில்லை. செய்ய வேண்டாம் என அறிவுரை மட்டும் சொல்கின்றது. 2010-ம் ஆண்டின் தீர்மானத்தில் இருந்த ஏவுகணைப் பரிசோதனையைத் தடைசெய்யும் வாசகம் 2015-ம் ஆண்டுத் தீர்மானத்திலும் இருப்பதை அமெரிக்கா வலியுறுத்தியது ஆனால் தீர்மானம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திய இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பராக் ஒபாமா அமெரிக்காவில் உள்ள கடும் போக்குடைய வலதுசாரிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை ஐநா தீர்மானத்தின் ஆன்மாவை அழித்து விட்டது என்பது டொனால்ட் டிரம்ப்பினதும் மற்றும் பல அமெரிக்கக் கடும் போக்காளர்களினதும் நிலைப்பாடாகும். ஈரான் தான் பரிசோதித்த ஏவுகணைகள் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லவில்லை என்கின்றது. ஆனால் ஈரான் அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளைப் பரிசோதிக்கின்றது என்கின்றது டிரம்பின் நிர்வாகம்..

ஈரான் இலேசுப்பட்ட நாடல்ல
மேற்காசியாவையும் வட ஆபிரிக்காவையும் பொறுத்தவரை சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக ஈரான் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். அப்பிராந்தியத்தில் 2016-ம் ஆண்டு அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தி 412.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எகிப்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். ஈரானின் மக்கள் தொகை 78.8மில்லியனாகும். மிள் எழுச்சியுறக்கூடியதும் தாங்குதறன் கொண்டதுமான பொருளாதாரம், தொழில்நுட்ப விஞான வளர்ச்சி, கலாச்சார மேம்பாடு ஆகிய மூன்றும் முக்கிய தூண்களாகக் கொண்டு ஈரானை அதன் மதவாத ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றார்கள். ஈரானியப் பொருளாதாரம் ஈரான் மீதான மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை நீக்கிய பின்னர் பெரிதளவில் சீரடையவில்லை. தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானியின் பொருளாதாரச் சீர்திருத்தம் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என பழமைவாதிகள் வாதிடுகின்றனர். ஈரானில் தீவிரவாதிகளின் கை ஓங்குவதைத் தடுக்கவே ஈரானுக்குச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து 2015-ம் ஆண்டு P-5+1 நாடுகள் ஒப்பந்தம் செய்தன.

ஈரானை அமெரிக்கா எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்:
1. இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்ற ஈரானின் கொள்கை.
2. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவது.
3. ஈரான் தான் ஒரு வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் இருப்பது.
4. சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தையும் அதன் ஆட்சி முறைமையும் ஈரான் எதிர்க்கின்றது.
5. அமெரிக்கா இறக்கட்டும் என்ற வாசகத்தை ஈரான் அடிக்கடி சொல்வது.

ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்வதைத் தொடர்ந்து நடத்தினால் அதனால் தொலைதூரம் அதிக எடைகளைத் தாங்கிக் கொண்டு செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்க முடியும். ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் நிலை உருவானால் அது இஸ்ரேலின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும். காசா நிலப்பரப்பில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் மூலமாகவும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மூலமாகவும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை பெருமளவு ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசினால் அவற்றில் சில இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறமைகளையும் தாண்டிச் சென்று இஸ்ரேலைத் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்த முடியும்.

ஈரானை ஒட்டியுள்ள ஹோமஸ் நீரிணையிலும் மத்திய தரைக்கடலிலும் அமெரிக்கா பலது படை நிலைகளை நிறுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்தால் அமெரிக்கப் படை நிலகள் பல ஆபத்துக்கு உள்ளாகும்.

இஸ்ரேலும் சவுதி அரேபியா உட்பட அமெரிக்காவின் மற்ற நட்பு நாடுகள் கூட ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் கடுமையற்றது எனச் சொல்லி பலத்த எதிர்ப்பைக் காட்டியிருந்தன.

சிரியாவிலும் ஈராக்கிலும் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது
சிரியாவில் அதிபர் பஷார் அல அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் அமெரிக்கா தோல்வி கண்டு விட்டது. ஈராக்கில் ஈராக்கிய அரசும் குர்திஷ் பிராந்திய அரசும் மோதலைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வேண்டு கோள் விடுத்திருந்தது. ஆனால் குர்திஷ் போராளிகள் வசமிருந்து எரிபொருள் வளம் மிக்க கேர்க்குக் பிராந்தியத்தை குர்திஷ் போராளிகளிடமிருந்து ஈராக் கைப்பற்றியது. அந்தத் தாக்குதைல் ஈரானின் சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர்கள் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகின்றது. ஈரானின் இது போன்ற செயறாடுகள் அமெரிக்காவை விரக்தியடைய செய்கின்றது. அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் ஈரானுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இரத்து எனவும் சொல்ல முடியும்.

மோதாமல் மோதும் ஈரானும் அமெரிக்காவும்
1979-ம் ஆண்டில் இருந்தே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு மோசமான உறவு நிலவி வருகின்றது. 1979-ம் ஆண்டு ஈரானில் மதவாதப் புரட்சியால் மதவாதிகள் அரசைக் கைப்பற்றியவுடன் 60 அமெரிக்கர்களை 444 நாட்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். மதப் புரட்சிவாதிகள் கைது செய்ய முயன்ற மன்னர் ஷாவிற்கு அமெரிக்கா புகலிடம் கொடுத்துக் காப்பாற்றியது. பணயக் கைதிகளை விடுவிக்க ஈரான் மீது செய்த முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக மோதவில்லை. ஆனால் ஈரானுடன் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா போராளிகள் 1983இலும் 1984இலும் அமெரிக்கப் படையினர் மீது லெபனானில் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டு பல அமெரிக்கப் படையினரைக் கொன்றனர். ஈரானுக்கு எதிராக ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் போர் தொடுத்த போது அமெரிக்கா மறை முகமாக ஈராக்கிற்கு பெரும் உதவிகளைச் செய்தது. சவுதி அரேபியா, தன்சானியா, கென்யா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கருதுகின்றது. ஈரானில் உள்ள குர்திஷ் மக்களையும் கிளர்ச்சி செய்ய திரைமறைவு ஆதரவு வழங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பல இணையவெளித் தாக்குதல்களை ஈரானுக்கு எதிராக நடத்தின. ஈரானில் உல்ல பலுச் இனக்குழுமத்தினரின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானில் உள்ள பலுச் போராளிக் குழுக்களூடாக அமெரிக்கா உதவிகள் பல செய்தது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை எதிர்பார்த்த அளவிற்கு ஈரானைப் பணிய வைக்கவில்லை. ஈரானுக்கு எதிராக ஈராக் இருந்த போதே ஈரானை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தான் சம்பந்தப்பட விரும்பவில்லை என ஈராக் அறிவித்துள்ள நிலையில் ஈரானை அமெரிக்காவால் அடக்க முடியாது. 

ஒன்றின் மீது ஒன்று குரோதம் கொண்ட ஈரானினதும் அமெரிக்காவினதும் படைகள் தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் ஒன்றுடன் ஒன்று மோதக் கூடிய வகையில் நிலை கொண்டுள்ளன. ஈரானுடனான P-5+1 நாடுகள் செய்த ஒப்பந்தத்தை டிரம் உறுதி செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் உறுதி செய்ய மறுத்தாலும் அது உடனடியாக ஒப்பந்தத்தைப் பெருமளவில் பாதிக்காது. அமெரிக்கப் பாராளமன்றம் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை கொண்டு வரும் போது தான் பிரச்சனை உருவாகும். அதன் பின்னர் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தலைத் தீவிரமாகத் தொடர்ந்தால் முதலாவதாக இஸ்ரேல் இரகசியமாக ஈரானிய அணு உற்பத்தி நிலைகளைத் தாக்கி அழிக்க முயலலாம். இரண்டாவதாக ஈரானிய அணுக்குண்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க சவுதி அரேபிய பாக்கிஸ்த்தானின் உதவியை நாடலாம். ஒன்றில் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் சவதி அரேபிய அணுக்குண்டு தயாரிக்கலாம் அல்லது பாக்கிஸ்த்தானிடமிருந்து அணுக்குண்டுகளைக் கொள்வனவு செய்யலாம். இவை யாவும் மேற்காசியப் பிராந்தியத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கும்.


Wednesday, 18 October 2017

சிரியப் போர் இனி லெபனானில் மையம் கொள்ளுமா

மேற்கு கரையில் இயங்கும் ஃபட்டா அமைப்பு, காசா நிலப்பரப்பில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகிய மூன்றுமே இஸ்ரேலிற்கு எதிராக உடனடித் தாக்குதல் செய்யக் கூடிய எதிரிகளாகும். இதில் ஃபட்டா அமைப்பு இஸ்ரேலுடன் தற்போது சமாதான நிலையில் உள்ளது. ஈரான் தன்னுடன் ஈராக்கையும் சிரியாவையும் இணைக்கும் திட்டம் சியாப் பிறைத் (Shia Crescent) திட்டம் என அழைக்கப்படுகின்றது. இதை இஸ்ரேல் மிகவும் கரிசனையுடன் பார்க்கின்றது. இந்தப் பிறைத் திட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் செயற்பாடுகளுக்கு லெபனானிய ஹிஸ்புல்லா முக்கிய கருவியாகும்.

ஹமாஸும் ஃபட்டாவும்
நீண்ட காலமாக இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் காசாவில் செயற்படும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்புகளுக்கும் மேற்குக் கரையில் செயற்படும் அமைப்புக்களுக்கும் இடையில் ஒற்றுமை ஒருபோதும் வராது எனக் கருதுகின்றனர். இருதரப்பினருக்கும் இடையில் ஒற்றுமை வந்தால் அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதும் அவர்களது நிலைப்பாடு. ஹமாஸின் இறுதி இலக்கு முழுப் பலஸ்த்தீனியர்களுக்கும் தாமே தலைமை தாங்க வேண்டும் என்பதே. மேற்குக் கரையின் தலைநகரான ரமல்லாவில் இருந்து பலஸ்த்தீனியத் தூதுக்குழு ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காசா நிலப்பரப்பிற்குப் பயணத்தை மேற் கொண்டது. இது அரபு உலக ஊடகங்களால் பாராட்டப்பட்டது. காசா நிலப்பரப்பில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தற்போது ஹமாஸ் அமைப்பு காசா பிரதேசத்தின் முகாமையை ஃபட்டா அமைப்பிடம் கையளிக்க முன்வந்துள்ளது. இதை இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் ஆரம்பமாகக் கூடப் பார்க்க முடியுமா?

நித்திய கண்டமாக இருந்த அசாத்திற்கு தீர்க்க ஆயுள்
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி அசைக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. அவரது ஆட்சியை தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானில் இருந்து செயற்படும் சியா முசுலிம் அமைப்பான ஹிஸ்புல்லாவாகும். சிரியாவில் அவர்கள் சிறந்த கள அனுபவத்தையும் பலவிதப் படைக்கலன்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளனர். அவர்கள் லெபனானை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலவார்கள். லெபனானுடன் கேந்திரோபாய எல்லையைக் கொண்டுள்ள இஸ்ரேல் அதையிட்ட தனது கரிசனையைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

லெபனானின் முக்கியத்துவம்
மத்திய கிழக்கிலே கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடாக லெபனான் திட்டமிட்டு முதலாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்டது.   பிரான்சின் குடியேற்ற ஆட்சி நாடாக இருந்த லெபனான்1942-ம் ஆண்டு நவம்பர் 22-ம் திகதி சுதந்திர நாடாகியது. பின்னர் கிரிஸ்த்தவர்களும் இசுலாமியர்களும் தேசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி குடியரசுத் தலைவர் ஒரு மரோனைற் கிருத்தவராகவும் தலைமை அமைச்சர் ஒரு சுனி முசுலிமாகவும் பாராளமன்ற அவைத் தலைவர் சியா முசுலிமாகவும் இருப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. பாராளமன்ற உறுப்பினர்களாக கிருத்தவர்களுக்கு ஆறு முசுலிம்களுக்கு ஐந்து என்ற விகிதாசாரப்படி இருக்க வேண்டும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மத மோதல்கள் நிறைந்த லெபனான்
1943-ம் ஆண்டிலிருந்து 1956-ம் ஆண்டு வரை மக்களாட்சிப்படி லெபனான் ஆளப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு லெபனானில் வலதுசாரிக் கிரிஸ்த்தவர்கள் தொடர்ந்து ஆட்சி புரியக் கூடிய வகையில் லெபனானிய அரசமைப்பை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ இரகசியமாகத் தலையிட்டு மாற்றியது. அரசமைப்பை மாற்றுவதற்க்கு தேவையான பெரும்பான்மையை 1957 மே-ஜூன் மாதங்களில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெறச் செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டன. இதனால் அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிருத்தவ வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.  அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பொதுவுடமைவாதிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) என சி.ஐ.அமெரிக்க அதிபரிடமே பொய் சொன்னது. இந்த முறைகேடான தேர்தலைத் தொடந்து லெபனானில் பெரும்  உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மரோனைற் கிருத்தவர்களும் இசுலாமியர்களும் மோதிக் கொண்டனர். 1956-ம் ஆண்டு எகிப்து சூயஸ் கால்வாய்காக மேற்கு நாடுகள் முரண்பட்ட போது லெபனானிய கிருத்தவர்கள் எகிப்திய ஆட்சியாளர் கமால் நாசர் பக்கம் நிற்காமல் மேற்கு நாடுகளுக்கு சார்பாக நின்றது எகிப்த்திற்கும் லெபனானிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது. எகிப்த்தியர்களும் சிரியர்களும் தமது நாடுகளை இணைத்து 1958-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசை உருவாக்கினார்கள். லெபனானில் இருக்கும் இசுலாமியர்கள் லெபனானும் இந்த அரசில் இணைய வேண்டும் எனவும் கிருத்தவர்கள் லெபனான் தொடர்ந்து தனிநாடாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினர். புதிய ஐக்கிய அரபுக் குடியரசு லெபனானிய இசுலாமியர்களுக்கு உதவியது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. லெபனானில் அமெரிக்கா தலையிட்டால் தான் அணுக் குண்டைப் பாவிப்பேன் என சோவியத் அதிபர் குருசேவ் மிரட்டினார். 1958-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா 14000 படையினரைக் கொண்டு நீல வௌவால் என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை லெபனானில் மேற் கொண்டது.

வலிமை மிக்க ஹிஸ்புல்லா
2006-ம் ஆண்டு கடைசித் தடவையாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மோதிக்கொண்டன. இஸ்ரேலின் கவலை ஹிஸ்புல்லாவிலும் பார்க்க இரசியா இனி லெபனானில் என்ன செய்யப் போகின்றது என்பதே. சிரியாவில் இஸ்ரேல் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமையவில்லை. 9/11 தாக்குதலுகு முன்னர் அமெரிகவிற்கு பேரிழப்பைக் கொடுத்த தாக்குதல் ஹிஸ்புல்லாவின் தாக்குதலாகும். சிரியாவில் போர் நடக்கும் போது அவ்வப் போது ஹிஸ்புல்லா லெபனானிற்குள் பெருமளவில் படைக்கலன்களை நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவினுள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தின. ஆனால் இரசியாவுடன் எந்த வித மோதல்களோ முறுகல்களோ நடக்கவில்லை. மாறாக இஸ்ரேலும் இரசியாவும் தமது தொடர்பாடல்களை அதிகப்படுத்திக் கொண்டன. சிரியாவில் செயற்படும் இரசியப் போர் விமானங்கள் இஸ்ரேலுக்குள் தவறுதலாக பறப்பதை இஸ்ரேல் அனுமதித்திருந்தது. ஆனால் சிரியப் போர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் இரசியாவின் மேற்காசியா தொடர்பான கேந்திரோபாய நிலைப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இரசியாவின் ஓர் அவசியமான சொத்தாக உருவெடுத்துள்ளது. ஈரானின் அடுத்த இலக்கு லெபனானை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அது இஸ்ரேலைப் பொறுத்தவரை அனுமதிக்க முடியாததும் ஆபத்தானதுமாகும். ஈரான் இரசியாவிற்கு தற்போது அவசியம் தேவைப்படும் ஒரு நட்பு நாடாகும். அதேவேளை மேற்காசியாவில் ஈரானின் விரிவாக்கத்தை இரசியாவால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சிரியப் போர் முடியும் ஆனால் முடியாது!
சிரியாவில் போர் முடிவிற்கு வருமா இல்லையா என்பதைப் பற்றி உறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கின்றது. சிரியாவில் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு அங்கு மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது. இரசியா அசாத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் எனவும் அசாத்தின் அரச படைகள் தவிர மற்ற எல்லா படைக்குழுக்களும் அழிக்கவேண்டும் எனவும்  கருதுகின்றது. இதனால் எப்போது சிரியாவில் நடக்கும் போர் லெபனானை நோக்கி நகரும் என்பதும் சொல்ல முடியாமல் இருக்கின்றது. சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் இத்தனை மோதல்களின் பின்னர் எப்படி சியா முஸ்லிமான அசாத்தால் பதவியில் நீடிக்க முடியும்? சுனி முஸ்லிம்களின் படைப்பிரிவில் ஐஎஸ், அல் கெய்தா, சுதந்திர சிரியப் படை ஆகியவை முக்கியமான படைக்குழுக்களாகும். இவற்றில் ஐஎஸ் படையணியையும் அல் கெய்தா படையணியையும் இரசியாவும் அமெரிக்காவும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் ஒத்துப் போகின்றன. அமெரிக்க ஆதரவு பெற்ற சுதந்திர சிரியப் படைப் போராளிகள் சிறந்த போராளிகள் அல்லர். சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா ஐஎஸ் அமைப்பு போராளிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதில் குர்திஷ் போராளிகளே முக்கிய பங்கு வகித்தனர். ஈராக்கைப் போலவே சிரியாவிலும் குர்திஷ் போராளிகள் தமக்கென ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றி அங்கு ஒரு உண்மைசார் அரசு ஒன்றை நிறுவியுள்ளனர். ஆனால் துருக்கி ஈராக்கிலுள்ள குர்திஷ் போராளிகளுலும் பார்க்க சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளை கடுமையாக வெறுக்கின்றது. ஐஎஸ் அமைப்பினர் முற்றாக சிரியாவில் அழிக்கப்பட்ட பின்னரும் சிரியாவில் சியா, சுனி, குர்திஷ் ஆகிய தரப்பினரிடையே மோதல்களைத் தொடர்ப்பண்ணுவதால் தற்காலிகமாக லெபனானை நோக்கி போர் நகர்வதைத் தடுக்க முடியும். அதற்கு அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் ஒத்துழைக்கலாம்.

அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அந்தோனியோ குத்தரஸிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மஹ்மூட் அப்பாஸிலும் பார்க்க இஸ்ரேலிய அதிபர் பென்ஞமின் நெத்தன்யாஹூ பேச்சு வார்த்தை நடத்தக் கடினமானவராக இருக்கின்றார் எனச் சொல்லியுள்ளார். பலஸ்த்தீனிய விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒத்துப் போவதில்லை என வெளியில் காட்டிக் கொண்டாலும். இஸ்ரேலின் இருப்புக்கு ஆதரவு கொடுப்பது அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கையின் முதன்மை அம்சமாகும்.


ஹிஸ்புல்லாவின் நிதி மூலம்
ஹிஸ்புல்லா அமைப்பின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டொலர்கள் என அமெரிக்க உளவுத் துறை மதிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா தென் அமெரிக்க போதைப் பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. சிறந்த பணச்சலவை செய்யக் கூடிய பன்னாட்டுக் கட்டமைப்பையும் வைத்திருக்கின்றது, உலகின் எப்பாப் பாகங்களிலும் அது வியாபித்துள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் இருந்து நிதி திரட்டுகின்றார்கள். ஹிஸ்புல்லாவின் நிதி மூலத்தை அழிக்க அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் பாடுபடுகின்றது. 2015-ம் ஆண்டு ஹிஸ்புல்லா நிதித் தடைச் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியிருந்தது. லெபனானின் நடுவண் வங்கி ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பல நூற்றுக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் தொடர்பு உண்டு என்பதை முழுமையாக நம்ப முடியாது. ஹிஸ்புல்லாவின் வருமானத்தில் எழுபது முதல் எண்பது விழுக்காடு ஈரானில் இருந்து கிடைக்கின்றது. அவை வங்கிகளினூடாகப் போவதில்லை அமெரிக்கா தடுப்பதற்கு. அவை பணப் பெட்டிகளில் போகின்றன. அவை நேரடியாகவோ அல்லது சிரியாவினூடாகவோ விமானத்தில் அனுப்பப்படும். ஈரானை அடக்காமல் ஹிஸ்புல்லாவை அடக்க அமெரிக்காவால் முடியாது.

முன்கூட்டிய தாக்குதலுக்கு பின்னிற்காது இஸ்ரேல்

2017 செப்டம்பரில் இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளில் செய்திராத பெரும் போர் ஒத்திகை ஒன்றை தனது முப்படைகளையும் உளவுத் துறையையும் இணையவெளிப் படைப் பிரிவையும் கொண்டு செய்திருந்தது. பத்து நாட்கள் தொடர்ந்த இந்த ஒத்திகை லெபனான் எல்லையிலேயே நடந்தது. இதற்கான காரணம் ஹிஸ்புல்லா முற்றாக லெபனானைக் கைப்பற்றும் என இஸ்ரேல் கரிசனை கொண்டுள்ளமையே. அப்படிக் கைப்பற்றும் போது இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்து பல ஹிஸ்புல்லாப் போராளிகளைக் கொல்ல முயற்ச்சிக்கலாம். அதற்கு எதிராக சிரியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் உதவிகள் ஹிஸ்புல்லாவிற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் கிடைக்கலாம். அதைத் தடுக்க சிரியப் போர் தொடர்வது இஸ்ரேலின் விருப்பமாக இருக்கும். அதற்காக திரைமறைவில் சிரியப் போர் தொடர இஸ்ரேல் எல்லாச் சதிகளையும் செய்து கொண்டிருக்கும். முன் கூட்டிய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் என்றும் பின்னிற்பதில்லை. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...