Tuesday, 25 July 2017

தனியர் படை நிறுவனங்கள் எனும் முகமூடியுடன் கூலிப்படைகள்

அமெரிக்கா பல நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கா பெருமளவில் தனியார் படைகளைகளைப் பாவிப்பது பலருக்கும் தெரியாது. தனியார் படையினரின் துணை இன்றி அமெரிக்கா எந்த நாட்டுக்கும் தனது படைகளை அனுப்ப முடியாது என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவின் படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பணிபுரிந்தவர்கள் இந்தத் தனியார் படையில் செயற்படுகின்றனர். இவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் செயற்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்த தனியார் படையில் இணைந்துள்ளனர். தீவிரவாத இயக்கக்ங்களில் முன்பு பணிபுரிந்தவர்கள் முன்னாள் போர்ப்பிரபுக்களும் அவர்களின் படையினரும் கூட அமெரிக்காவின் தனியார் படையில் இணைக்கப்படுகின்றனர். இந்த தனியார் படையின் சொந்தக்காரர்கள் பெருமளவு பணத்தை இலாபமாகப் பெறுகின்றனர்.

கூலிப்படையினரின் செயற்பாடுகள்
படையினருக்கான பின்புல வழங்கல் ஆதரவு, படையினருக்கன ஆபத்துப் பகுப்பாய்வு செய்தல், உளவுபார்த்தல் போன்றவற்றில் தனியார் துறையினரி ஈடுபடுத்தல் ஆட்சேபனைக்கு உரியதல்ல. இரண்டாம் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போதே அமெரிக்கா படைத்துறையில் தனியார் துறையினரைப் பெருமளவில் அனுமதித்தது. ஆனால் 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா தனது படைத்துறைச் செலவைக் குறைப்பதற்காக படைத்துறையில் தனியாரையும் அதிக அளவில் ஈடுபடுத்தத் தொடங்கியது. தனியார் படைத்துறையை ஆரம்பித்து வைத்தவர் ஜெரால்ட் போர்ட்டின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகும். மனித உரிமைகளை மீறும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிற்கு அமெரிக்கா தனது படைகளைப் பகிரங்கமாக அனுப்பி அந்த ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதில்லை. அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் படை நிறுவனங்கள் “சேவை” செய்ய இரகசியமாக அனுமதியும் உதவியும் செய்கின்றது. பனிபோரின் பின்னர் இது பெருமளவில் அதிகரித்தது. உலகெங்கும் உள்ள தனியார் படை நிறுவனங்களில் 70 விழுக்காடு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள்ன.

பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள்
ஒஸ்ரேலியாவில் இரண்டு தனியார் படை நிறுவனங்களும், கிப்ரால்டரில் ஒன்றும், பெருவில் ஒன்றும், தென் ஆபிரிக்காவில் ஒன்றும், பிரித்தானியாவில் ஆறும், ஐக்கிய அமெரிக்காவில் பதின்நான்கும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல சீனா உட்படப் பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள் உண்டு. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியப் பத்திரிகையான கார்டியன் உலக கூலிப்படைத் தொழிலில் பிரித்தானியா நடுநாயகமாக இருக்கின்றது என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளிவிட்டது. G4S என்பது உலகிலேயே மிகப்பெரிய தனியார் படை நிறுவனமாகும். பிரித்தானியாவில் பல தனியார் படை நிறுவங்னகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. கடாபி லிபியாவில் கொல்லப்பட்ட பின்னர் அங்கு உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் G4S இன் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தனியார் படை நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டவையாகும். பாதுகாப்பு நிறுவனங்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அவை தமது ஒப்பந்தக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தேர்ச்சி பெற்ற படையணியாகும். பிரித்தானியாவில் இரு வகை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 46 என்கின்றது கார்டியன். ஈராக்கில் சதாமிற்கு எதிரான போரின் போது பிரித்தானியாவின் 80 தனியார் படைக் கம்பனிகள் இயங்கியதாகவும் கார்டியன்  அம்பலப்படுத்தியது. இதுபோல உலங்கெங்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தனியார் படை நிறுவனங்களும் பாதுகாப்பு நிறுவனங்களும் செயற்படுகின்றன.

ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்ப யோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வர முன்னரே ஆப்கானிஸ்த்தானுக்கு அதிக படையினரை அனுப்பப்போவதாக முழங்கியிருந்தார். எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதினாறு ஆண்டு காலமாக நடக்கும் ஆப்கானிஸ்த்தான் போரையும் வித்தியாசமாக அணுகவிருக்கின்றார்.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் இரு பெரும் தனியார் படைகளைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதே அதிபர் டிரம்பின் புதிய அணுகு முறையாகும். எரிக் டி பிரின்ஸ் என்னும் பெரும் செல்வந்தரின் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட்(Blackwater Worldwide) என்னும் படைகளையும் ஸ்றீவன் ஃபெயின்பேர்க் என்னும் செல்வந்தரின் டைய்ன் கோர்ப் இண்டர்நசனல்(DynCorp International) என்னும் படைகளையும் பாவிக்கும் திட்டத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேந்திரோபாய வகுப்பாளர் எஸ் கே பனன் முன்வைத்துள்ளார். தனியார் துறைப் படை என்பது கூலிப் படையினருக்கு வைத்த கௌரவப் பெயராகும்.

அமெரிக்காவின் இரு பெரும் கூலிப்படை நிறுவனங்கள்
வெள்ளை மாளிகையின் 2017 ஜூலை ஆரம்பத்தில் நடந்த ஆப்கானிஸ்த்தான் தொடர்பான கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் மற்றும் டைய்ன் கோர்ப் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள டிரம்ப்பின் தலைமைக் கேந்திரோபாய வகுப்பாளரான எஸ் கே பனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் டிரம்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் ஆப்கான் தொடர்பான கொள்கை மீளாய்வில் வெளியார் கலந்து கொள்வதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி வெளியேறிவிட்டார். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் எச் ஆர் மக்மஸ்டரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் டிரம்ம்பின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு தனியார் படை நிறுவனங்களில் அமெரிக்காவிற்காகப் போர் புரிந்து பெரும் தொகைப்பணத்தை இலாபமாக ஈட்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோன் மக்பேட் அதிகரித்துவரும் தனியார் படைகளின் செயற்பாடுகள் குறிந்து ஆய்வு செய்து “புதிய கூலிப்படைகள்” என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் அவர் இந்தக் தனியார் படைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களல்லர் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன் அதில் உள்ள தார்மீகப் பிரச்சனைகள் பற்றியும் விளக்கியுள்ளார். அந்நூலில் அவர் 21-ம் நூற்றாண்டில் உலகம் 20-ம் நூற்றாண்டைப் போல் இல்லாமல் 12-ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்படுகின்றது எனச் சொல்லுகின்றார். 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த பல போர்களில் பெரும்பாலும் கூலிப்படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். 21-ம் நூற்றண்டில் அதிகரிக்கும் தனியார் படையணிகளும் அவற்றினது போர் நடவடிக்கைகளும் பெரும் பணம் படைத்தவர்களும் கூட்டாண்மைகளும்தான் இனி உலகப் பெருவல்லரசுகளாகுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது என்கின்றார் பேராசிரியர் சோன் மக்பேட். தனியார் படை ஒன்றில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் கடல்சார் படைவீரர் தனியார் படையில் போதைப் பொருள் பாவனை அதிகம் என்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளர்களாகப் பாவிப்பதும் உண்டு என அம்பலப்படுத்தினார். பன்னாட்டு அரசுறவியலாளர்களைப் போல் ஈராக்கில் செயற்படும் அமெரிக்கத் தனியார் படையினர் மீது ஈராக்கிய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு முன்பு இருந்தது. ஈராக்கியப் பொது மக்களால் இந்தத் தனியார் படையினர் கடுமையாக வெறுக்கப்பட்டனர். அமெரிக்க அரசு வேண்டுமென்றே தனியார் படைகளை அழுக்கான வகையில் செயற்பட அனுமதிக்கின்றது என ஈராக்கிய மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் உயர் நிலைப் படை அதிகாரிகள் ஈராக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் படையினர் ஈராக்கிய மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

இடத்தையும் பெயரையும் மாற்றிய பிளக்வோட்டர் நிறுவனம்
அமெரிக்கத் தனியார் படை நிறுவனமான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் அமெரிக்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக தனது பெயரை Frontier Services Group (FSG) என மாற்றி வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது போல் பதிவும் செய்துள்ளது. அது இப்போது அபுதாபியில் பதிவு செய்யப்பட்டு எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாகியுள்ளது. எரிக் பிரின்ஸ் அமெரிக்காவின் கடல்சார் படையின் சிறப்புப் படையணியான சீல் குழுவில் பணிபுரிந்தவராவர். சீல் பிரிவினருக்கு உலகிலேயே தொழில்நுட்ப ரீதியிலும் தாக்குதிறன் ரீதியிலும் சிறந்த பயிற்ச்சி வழங்க்கப்படுவது எல்லோரும் அறிந்த உண்மை.
ஈராக்கில் கூலிப்படையினரின் அட்டூழியம்
ஈராக்கில் அமெரிக்காவின் தனியார் படைப்பிரிவான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி அவர்களது வாகனத் தொடரணி ஒரு நாள் வாகன நெருக்கடியில் சிக்குப் பட்டிருந்தது. தீவிரவாதிகள் தம்மைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பத்து நிமிடம் வரை தெருவில் நின்ற வாகனங்கள் மீது கண்டபடி சுட்டுத்தள்ளி வகன நெருக்கடியை இல்லாமல் செய்தனர். இதனால் பல அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தம்மீது தீவிரவாதிகள் தாக்க்குதல் செய்த படியால் தாம் தாக்குதல் செய்ததாக “வழமையான கதையை” அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் சம்பவத்தை ஒரு ஈராக்கிய அரச அதிகாரி நேரில் கண்டபடியால் இப்போது அவர்கள் மீது ஈராக்கில் வழக்கு நடக்கின்றது. ஈராக்கியப் படையினரின் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனைக்காக நிறுத்தியதால்தான் வாகன நெருக்கடி தோன்றியிருந்தது.

சீனாவிற்குப் பணி புரியும் அமெரிக்கத் தனியார் படை
சீனாவின் One Belt, One Road (OBOR) என அழைக்கப்படும் புதிய பட்டுப்பதைத் திட்டம் ஆபத்து நிறைந்த பல பிரதேசங்களை உள்ளடக்கியது. அதற்கான பாதுகாப்புக்கு சீனா அபுதாபியில் உள்ள எரிக் பிரின்ஸுக்கு சொந்தமான தனியார் படை நிறுவனத்தின் சேவையைப் பெறுகின்றதுஎரிக் பிரின்ஸ் அமெரிக்க சீல் பிரிவில் பணி புரிந்தவர் என்பதால் அமெரிக்கா மிக இரகசியமாக வைத்திருக்கும் சீல் பிரிவின் பயிற்ச்சி நுட்பங்களை சீனா பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யலாம். ஈராக்கில் பிளக்வோட்டர் பணி செய்ய இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ஏற்பட்டு செய்தவரே தற்போது Frontier Services Group (FSG) இற்கு புதியபட்டுப்பாதைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளார். எரிக் பிரின்ஸ் தனது நிறுவனம் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவில்லை அதன் வர்த்தகத்திற்கான பாதுகாப்பை மட்டுமே செய்கின்றோம் என இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கரான பிரின்ஸ் அமெரிக்காவின் போட்டி நாடான சீனாவிற்கு பணி செய்வதன் மூலம் ஒரு தேசத் துரோகியாவும் உண்மையான கூலிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல எரிக் பிரிஸ் இரசியர்களுடனும் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்கின்றார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

சீனா மட்டும் விட்டு வைக்குமா
உலகின் பல்வேறு நாடுகளில் சீனா கட்டுமானங்களில் முதலீடு செய்கின்றது. அந்த கட்டுமானப் பணிகளில் சீனர்களே பெருமளவு வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க சீனா பல தனியார் பாதுகாப்பு நிறுவங்களை உருவாக்கியுள்ளது. இவை அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன. உலகெங்கு வியாபிக்கும் சீனாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படையினரை அனுப்பவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தனியார் பாதுகப்புப் படை அவசியமான ஒன்றாகிவிட்டது.

செயற்கை விவேகமும் தனியார் படையும்
செயற்கை விவேகம் (artificial intelligence) என்பது ஒரு தனித்துவமான துறையாக உருவெடுத்து மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வில் கணினிகள் செலுத்தும் ஆதிக்கத்திலும் அதிகமாக இனி வரும் காலங்களில் செயற்கை விவேகம் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. படைத்துறையிலும் செயற்கை விவேகம் பரவலாகப் பாவிக்கப் படப் போகின்றது. ரொபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களும் செயற்கை விவேகமும் போர் முனைகளில் பெரும் ஆபத்தாகக் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. இது தனியார் படை நிறுவனங்கள் பெருவளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமையவிருக்கின்றது.


ஒரு காலத்தில் மருத்துவமனைகள் என்பது அரச நிறுவனமாக மட்டும் இருக்க முடியும் என பல நாடுகளில் கருதப்பட்டது. தற்போது உலகெங்கும் தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அது போலவே தனியார் படைகளும் விரைவில் தவிர்க்க முடியாதவையாகிவிடும்

Wednesday, 19 July 2017

கடற்படைகளின் ஆதார (logistic) அல்லது இருப்பியக கப்பல்கள்



கடற்படைகளில் பெரிய கப்பல்களாக இருப்பவை ஆதாரக் (இருப்பியக்கக்) கப்பல்களே. கடற்படைக்குத் தேவையானவற்றை வழங்குவதும் அவை ஆபத்தில் சிக்கியிருக்கும்போது மீட்பு நடவடிக்கைகளில் முன்னிற்பதும் ஆதாரக் கப்பல்களின் முக்கிய பணிகளாகும். இது கடலில் மிதக்கும் களஞ்சியசாலை போன்றது. மனிதன் செய்த கட்டுமானங்களில் கப்பல்களே பெரியவை. அவற்றில் பெரியவை ஆதாரக்கப்பல்களாகும். உலகின் எந்தப் பகுதிக்கும் அவை செல்லக்கூடியவை. அவற்றை இயக்குவதற்கான செலவு இயலக் கூடிய அளவிற்கு குறைக்கப்படும். பல நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது ஆதாரக் கப்பல்கள் உதவிகளும் மீட்புப் பணிகளும் அவசர உணவு விநியோகங்களும் செய்வதுண்டு. குண்டூசியில் இருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை ஆதாரக் கப்பல்கள் விநியோகம் செய்ய வேண்டும். போருக்கும் படையினருக்கு தேவையானவற்றின் இருப்பு (Stock) தொடர்ச்சியாக மீள்நிரப்பு செய்யும் இயக்கம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தமிழில் logistics ஐ தமிழில் இருப்பியக்கம் என அழைப்போமாக.

ஆதார (இருப்பியக்க) அதிகாரி (logistics officer)
ஆதார அதிகாரி என்பது கடற்படையில் முக்கிய பதவியாகும். ஆதாரக் கப்பல்களின் செயற்பாடுதிறனுக்கு இவர் பொறுப்பாவார். இந்த அதிகாரி நன்கு திட்டமிடக் கூடியவராக இருப்பர். களஞ்சிய முகாமைத்துவம், பாதீட்டுக்கு ஏற்பச் செயற்படுதல், எதிர்பாராத சூழல்களைச் சமாளித்தல் போன்றவற்றில் சிறப்பாகச் செயற்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

சட்டம் முக்கியம்
ஒரு நாட்டின் கடலாதிக்கம் அதன் கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரைக்குமே செல்லுபடியாகும். அதைத் தாண்டிப் போகும் கப்பல்களை நெறிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் மரபொழுங்குச் சட்டம் (UN Convention on the Law of the Sea) இருக்கின்றது. அவற்றுக்கு ஏற்பவே கடற்படைகளின் ஆதாரக் கப்பல்களும் செயற்பட வேண்டும். அதன் படி எல்லா கப்பல்களுக்கும் ஏதாவது ஒரு நாட்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த நாட்டின் தேசியக் கொடி அதில் பறக்கவிடப்பட வேண்டும்.

கடற்படை மற்றும் கடல்சார் படைக் கப்பல்களின் வகைகள்
Frigates என்னும் கப்பல்கள் மூவாயிரம் தொன் வரையிலான எடையுடையவை அவை எதிரியின் கலன்களில் இருந்து அதில் முக்கியமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து கடற்படைக் கூட்டத்தை பாதுகாப்பதை பணியாகக் கொண்டவை. corvette கப்பல்கள் சிறியவையும் இலகுவானவையுமாகும். இலகுவில் செலுத்தக் கூடிய இந்த வகைக் கப்பல்கள் ஆழம் குறைந்த கடல்களில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. பரவலாகப் பாவிக்கப்படுபவையும் பல பணிகளைச் செய்யக் கூடியவையும் Destroyers எனப்படும் நாசகாரிக் கப்பல்களே இவை தாக்குதலுக்கும் மற்றக் கடற்படைக் கலன்களைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. Cruisers எனப்படும் கப்பல்கள் அபரிமிதமான சுடுவலுக் கொண்டவை. அதிக அளவிலான ஏவுகணைகளை இவை தாங்கிச் செல்லும். Amphibious Assault Ships
என்னும் ஈரூடகக் கப்பல்கள் பெயருக்கு ஏற்ப நீரிலும் நிலத்திலும் செயற்படக் கூடியவை. எல்லாவற்றிலும் சிறிய வகைக் கப்பல்கள் Littoral combat ship எனப்படும் கரையோரத் தாக்குதல் கப்பல்கள். இவை ஆழம் குறைந்த கடற்கரையோரத்தில் செயற்படும் தாக்குதல் கப்பல்கள். கடைசியாக விமானம் தாங்கிக் கப்பல்கள் நடமாடும் விமானத் தளங்களாகும். தற்போது அமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லாமல் இயங்கக் கூடிய படகுகளை உருவாக்கி வருகின்றது. இவை பெரும்பாலும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கக் கூடிய இந்தப் படகுகள் அமெரிக்காவின் கடலாதிக்கத்தை நிலை நிறுத்தும் என நம்பப்படுகின்றது. இந்த எல்லா வகைக் கப்பல்களுக்கும் தேவையானவற்றை வழங்குவதே ஆதாரக் கப்பல்களாகும்.

இரசிய ஆதார (இருப்பியக்க) கப்பல்
இரசியா தனது கடற்படைக்கு வலுச் சேர்க்கும் வகையில் புதிய மூன்று ஆதாரக் (logistic) கப்பல்களை களத்தில் இறக்கவுள்ளது. இவை பனிப்பிரதேசத்திலும் செயற்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரசியாவின் JSC Spetssudoproekt Design Bureau of St Petersburg நிறுவனம் இப்புதிய கப்பல்களை வடிவமைக்க இரசியாவின் Severnaya Verf Shipyard என்னும் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனம் அவற்றை உருவாக்கியுள்ளது. இரசியாவில் இருந்து மிகத் தொலை தூரம் சென்று செயற்படக்கூடியவையாக அவை இருக்கும். இந்தக் புதிய ஆதரக்கப்பல்களை இரசியா The Elbrus-class கப்பல்கள் என வகைப்படுத்தியுள்ளது. ஆழ்கடல்களிலும் தொலைவில் உள்ள துறை முகங்களிலும் உள்ள இரசியக் கடற் படையினருக்குத் தேவையான படைக்கலன்கள், குடிநீர், போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அவற்றைக் கொண்ட பெரும் களஞ்சியம் போல் கடலில் செயற்படவும் இரசியாவின் புதிய ஆதாரக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் வழங்கவும் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்கலன்களையும் படையினரையும் மீட்கும் பணியிலும் இந்த ஆதாரக் கப்பல்கள் சிறப்பாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது.

அமெரிக்க ஆதாரக் (இருப்பியக்க) கப்பல்கள்
உலகெங்கும் பல கடற்படைத் தளங்களையும் கடல்சார் படைத் தளங்களையும் வைத்திருக்கும் அமெரிக்கா பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள படையினரின் தேவைகளின் 90 விழுக்காடு ஆதாரக் கப்பல்கள் மூலமே விநியோகிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் ஆதாரக்கப்பல்கள் Logistic Support Vessels (LSVs) என அழைக்கப்படுகின்றன. அமெரிக்காவிடம் இருக்கும் ஆதாரக் கப்பல்கள் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு நிர்மானிக்கப்பட்டன. பனிப்போர் உச்சத்தில் இருக்கும் போது ஐக்கிய அமெரிக்கா இவற்றில் ஆறு  கப்பல்களை உருவாக்கியது. இவை 273 அடி நீளமும் 60 அடி அகலமும் உடையவை. இவை அமெரிக்கத் தரைப்படையின் எந்தப் பெரிய படைக்கலன்களையோ வாகனங்களையோ காவிச் செல்லக் கூடியவை. அவற்றைத் தூக்கவும் இறக்கும் தேவையான தூக்கிகள் அந்த ஆதாரக் கப்பல்களிலேயே இருக்கின்றன. வசதிகளற்ற இறங்கு துறைகளிலும் அவற்றால் படைகலன்களையும் வாகனங்களையும் இறக்கவும் ஏற்றவும் முடியும். இரட்டை அடுக்குகளைக் கொண்ட 20 அடி நீளமான 82 கொள்கலன்களை (containers) அவை தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் ஒரு Boeing C-17 fuselage விமானத்தையும் தாங்கிச் செல்லும். இந்த ஆதாரக் கப்பல்களின் தளப்பரப்பு (deck area) 10,500 சதுர அடிகளாகும். 2000-ம் ஆண்டளவில் General Frank S. Besson என வகைப்படுத்தப்பட்ட ஆதாரக் கப்பல்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியது. USAV SSGT Robert T. Kuroda (LSV-7), USAV Major General Robert Smalls (LSV-8) என்ற இரு கப்பல்கள் அவையாகும். General Frank S. Besson கப்பல்களிலும் பார்க்க 43 அடிகள் நீளமானவை இவையாகும். புதிய கப்பல்களின் நீரியக்கமும் (hydrodynamic) மேம்படுத்தப்பட்டன. செலுத்தும் வலுவும் இரண்டு மடங்காக்கப்பட்டது. கடுமையான கடல் சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாகவும் புதிய ஆதாரக்கப்பல்களை அமெரிக்கா வடிவமைத்தது. அவை தொடர்ந்து 6,500 மைல்கள் பயணிக்கக் கூடியவை. ஒவ்வொன்றும் 26மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை. 2014-ம் ஆண்டு தனது ஆதாரக் கப்பல்களுடன் இணைந்து செயற்படக் கூடிய பயணிக்கும் கடற்படைத் தளங்கள் (Expeditionary Mobile Base) என்னும் பெரியவகைக் கப்பல்களையும் அமெரிக்கா உருவாக்கியது. பழைய எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயணிக்கும் கடற்படைத் தளங்களை உருவாக்கியது.

பிரித்தானியாவின் ஆதாரப் படைப்பிரிவு
மற்ற நாடுகள் ஆதாரக் கப்பல்கள் எந்த அளவு பெரியதாக இருக்க வேண்டும் என் பதில் கவனம் செலுத்த பிரித்தானியக் கடற்படையினர் செயற் திறனில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆதரக் கப்பல்கள் போர்ச் சூழலில் துரிதமாக விநியோகங்களை மேற்கொள்வது முக்கியமானதாகும். இதற்காக பிரித்தானியக் கடற்படையில் Commando Logistics Regiment என்ற சிறப்பு ஆதாரப் படையணி இருக்கின்றது. மூன்று பிரிவுகளில் மொத்தம் 780 ஆளணியைக் கொண்ட இந்தப் படையணி பச்சை யாளி (Green Dragon) என்னும் குறியீட்டுப் பெயருடன் சிறப்புப் பயிற்ச்சிகளை மேற்கொள்ளும். கடற்படைக்குத் தேவையான வாகனங்கள், படைக்கலன்கள், சுடுகலன்கள், படையினருக்கான உணவு மருத்துவ உதவி போன்றவற்றை மிகத் துரிதமாக மேற்கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகச் செய்யக் கூடிய வகையில் பச்சை யாளி என்னும் பயிற்ச்சி வழங்கப்படுகின்றது. நூறு படை வாகனங்கள் இதில் ஈடுபடுத்தப்படும். சத்திர சிகிச்சை நிபுணர்கள் காயப்பட்ட படையினருக்கு அவசர சிகிச்சைகளை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். தேவை ஏற்படின் போர் முனையின் முன்னணி நிலைகளுக்கும் சென்று தேவையானவற்றை வழங்குவதும் இப்பயிற்ச்சியில் அடங்கும். பிரித்தானியாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பலான HMS Queen Elizabeth இல்3010 சிறிய அறைகள்(compartments) ஆதாரத் தேவைகளுக்கா உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன ஆதாரக் கப்பல்கள்
சீனாவின் ஆதாரக் கப்பலான குவாங் குவா கௌ உலகின் மிகப்பெரியக் கப்பல்களில் ஒன்றாகும். இது 693 அடி நீளமும் 223 அடி அகலமும் கொண்டது. 98,000 தொன் எடையுள்ளது. கப்பல் நிர்மானத் துறையில் சீனாவின் பாரிய முன்னேற்றத்திற்கு குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் சான்று சொல்கின்றது சீனாவின் ஆதாரக் கப்பல் ஆழ்கடல் துளையிடல், ஆழ்கடலில் கடற்படுக்கையில் அகழ்வு வேலைகள் செய்தல், தற்காலிக கடற்படைத் தளங்களை நிர்மணித்தல் போன்றவற்றைச் செய்யக் கூடியது. அத்துடன் பலவித அனர்த்த நிவாரண நடவடிக்கைகளையும் செய்யக் கூடியது. இது வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலையே தன்னுள் வைத்துத் தாங்கிச் செல்லக் கூடியது. சீனாவின் பொருளாதார வலிமையும் தொழில்நுட்ப மேம்பாடும் குவாங் குவா கௌ போன்ற பாரிய ஆதராக கப்பல்களை உருவாக்கும் திறனை வழங்கின. அதன் மூலம் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் சீனக் கடற்படை எதிர்காலத்தில் செயற்படவும் ஆதிக்கம் செலுத்தவும் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பல் வழிசமைக்கும். உலகின் மிகப்பெரிய கப்பல்களில் குவாங் குவா கௌ ஆதாரக் கப்பலும் ஒன்றாக இருப்பதால் அதன் அசையும் வேகம் குறைவாக உள்ளது. இதனால் ஒரு போரின் போது அவசரத் தேவைகளை இவற்றால் உரிய நேரத்தில் வழங்க முடியாமல் போகலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அத்துடன் இது பத்தாண்டுகளுக்கு மேல் நின்று பிடிக்காது எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. 

கடல்சார் படைகள்
ஆதாரக்கப்பல்களின் சேவை கடற்படை மற்றும் கடல்சார் படைகளுக்கு (Marines) மட்டுமல்ல தரைப்படைக்கும் விமானப் படைக்கும் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். ஆனால் அவற்றின் சேவைகள் மிக அவசியாமகத் தேவைப்படுவது கடல்சார் படைகளுக்கே. போர்க்கப்பல்கள், விமானங்கள், நிலத்தில் பயணிக்கும் தாங்கிகள் பார ஊர்திகள் எனப் பலதரப்பட்ட படைக்கலன்களுடன் கடல்சார் படைகள் செயற்படும். முன்னணி வல்லரசு நாடுகளின் கடல்சார் படைகள் தமது நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நாடுகளில் தமது படை நடவடிக்கையில் ஈடுபடும் போது அவற்றிற்கு ஆதாரக் கப்பல்களின் சேவை மிக அவசியமானதாகும்.

உலக கடலாதிக்கப் போட்டியில் ஆதாரக் கப்பல்களின் சேவை இன்றியமையாதவையாகும் எனத் துணிந்து சொல்லலாம்.

Thursday, 13 July 2017

ஏற்றுமதிசார் பொருளாதரங்களும் அவற்றின் பிரச்சனைகளும்

உலகின் முதல் மூன்று ஏற்றுமதி நாடுகளாக சீனா, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் ஏற்றுமதியில் இந்த மூன்று நாடுகளும் வேறு வேறு விதமாகத் தங்கியிருக்கின்றன. ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்படும் போது அதைச் சமாளிக்க இந்த மூன்று நாடுகளும் வேறு வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அமெரிக்காவின் பிரச்சனை சீனாவிலிருந்த வரும் இறக்குமதியே
ஐக்கிய அமெரிக்கா அதிகக் கவலை கொள்வது அதன் ஏற்றுமதியிலும் பார்க்க சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி பற்றியே. உற்பத்தித் துறையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு இழப்பின் காற்பங்கிற்கு சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அதிகரிப்பே காரணமாகும். சீனா தனது நாணத்தின் மதிப்பைத் திட்டமிட்டு குறைந்த நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்கர்களின் குற்றச்சாட்டாகும். அதுவே டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரையில் முக்கிய பங்கு வகித்தது. தான் வெற்றி பெற்றால் சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு 35விழுக்காடு தீர்வை வரி விதிப்பேன் என அவர் சூளுரைத்திருந்தார்.

ஜேர்மனி
ஜேர்மனியின் அரச செலவீனம் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 40 விழுக்காடாகும். உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த ஜேர்மனி இப்போது சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பின்னால் போய் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும் அதன் ஏற்றுமதி அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 12.5 விழுக்காடேயாகும். அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவைப் போலவோ ஜெர்மனியைப் போலவோ ஏற்றுமதியில் தங்கியிருக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஜேர்மனியின் பொருளாதாரம் 5.6 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருப்பதால் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சி அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. அதன் ஏற்றுமதி 23 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியில் வேலையற்றோர் தொகையும் 2008-ம் ஆண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஜேர்மனி அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக பிரான்ஸ் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவிற்கே ஜேர்மனி அதிக ஏற்றுமதியைச் செய்கின்றது. ஏற்றுமதி அதிகரிப்புக் குறைந்ததால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய ஜேர்மனி தனது அரச செலவீனத்தை மொத்த தேசிய உற்பத்தியின் 44 விழுக்காடாக அதிகரித்தது. அந்த மட்டத்தை தொடர்ந்து பேணி வருகின்றது. உள்நாட்டில் மக்களின் கொள்வனவையும் முதலீட்டையும் அதிகரிக்கவும் ஜேர்மனி பல நடவடிக்கைகளை எடுத்தது.

2015-ம் ஆண்டு ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 1.24ரில்லியன் டொலர்களாகவும் இறக்குமதி 989பில்லியன் டொலர்கள்.  ஜேர்மனியின் ஏற்றுமதியில் கார்கள் 153பில்லியன் டொலர்கள், வாகன உதிர்ப்பாகங்கள் 56.2 பில்லியன் டொலர்கள், மருந்துகள் 50பில்லியன் டொலர்கள், வான்கலங்கள் 32.8 பில்லியன் டொலர்கள்,


2017-ம் ஆண்டு ஜேர்மனியின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும் என சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் ஜேர்மனிய அரசு 2017-ம் ஆண்டு எற்றுமதி அதிகரிக்கும் என நம்புகின்றது. அத்துடன் உள்நாட்டு மக்களின் கொள்வனவு அதிகரிப்பு ஜேர்மனியப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை காப்பாற்றும் எனவும் ஜேர்மனிய அரசு நம்புகின்றது.

தஞ்சம் கோரி ஜேர்மன் வந்த வெளிநாட்டவர்களை வைத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஜேர்மனி முயற்ச்சி செய்கின்றது. ஜேர்மனியின் இளையோர் தொகைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் குறைவாக உள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஜேர்மனி குடிவரவாளர்கள் மூலம் சமாளிக்க முயல்கின்றது. 2016-ம் ஆண்டு ஜேர்மனி குடிவரவாளர்களுக்கு 23பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது இது அரசின் மொத்த செலவீனத்தில் 7 விழுக்காடாகும். ஆனால் இந்தச் செல்வுகள் குடிவரவாளர்களை திறன் மிக்க தொழிலாளர்களாக்க சில ஆண்டுகள் எடுக்கலாம்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 15 விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் அது 14 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 26 விழுக்காட்டாலும், சீனாவிற்கான ஏற்றுமதி 22 விழுக்காட்டாலும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 18 விழுக்காட்டாலும்  வீழ்ச்சியடைந்தன.

ஜேர்மனியின் கார் உற்பத்தி நிறுவனங்கள் 2009-ம் ஆண்டின் பின்னர் ஜேர்மனியில் அவை செய்யும் கார் உற்பத்தி அதிகரிப்பிலும் பார்க்க பார்க்க வெளிநாடுகளில் உள்ள தமது தொழிற்சாலைகளில் செய்யும்  உற்பத்தி அதிகரிப்பு அதிகமாக இருக்கின்றது.  அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தமது ஏற்றுமதி வருமானத்தை அந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் முதலீடு செய்வதுண்டு. அந்த வகையில் ஜேர்மனி அதிக அளவு முதலீட்டை அமெரிக்காவில் செய்கின்றது. அமெரிக்காவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டில் 10 விழுக்காடு ஜேர்மனியில் இருந்து செய்யப்படுகின்றது. ஜேர்மனி அமெரிக்காவில் செய்த முதலீட்டில் 670,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
.
அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜேர்மனி அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா இருக்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2019-ம் ஆண்டு வெளியேறிய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தால் அது ஜேர்மனியின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதிக்கும்.

2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. அதனால் 10 விழுக்காடாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் தற்போது ஏழு விழுக்காட்டிலும் குறைவான அளவில் வளருகின்றது. இந்த பொருளாதார வளர்ச்சி வேகக் குறைப்பைச் சமாளிக்க சீனா பலவழிகளில் முயற்ச்சி செய்தது கொண்டிருக்கின்றது. அந்நிய முதலீடுகளைக் கவருவதில் சீனா முதலாம் இடத்தில் இருந்தது. 2015-ம் ஆண்டு இந்தியா அந்த முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது. 2016-ம் ஆண்டு உற்பத்தித் துறையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் சீனத் தொழிலாளர்களின் ஊதியம் ஐந்து மடங்காக  இருந்தது.
1. மிகையான உற்பத்தி சாதனங்கள்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உச்ச நிலையில் இருந்த சீனாவின் ஏற்றுமதிக்காக உருவாக்கப் பட்ட உற்பத்தி சாதனங்கள் பல இப்போது பயன்பாடற்று இருக்கின்றன. இவற்றில் அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபத்திறனற்றுக் கிடக்கின்றன.
2. உயர் தொழில்நுட்பத்துக்கு மாற முடியாத நிலைமை
சீனா தனது உற்பத்தியை உயர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே முன் தங்கியுள்ள மேற்கு நாடுகள் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் போது தாமும் மேம்படுத்தி தொழில்நுட்ப இடைவெளியை சீனாவால் குறைக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன.
3. உள்ளூராட்சிச் சபைகளின் நிதி நிலைமை
சீனாவின் பல உள்ளுராட்ச்சிச் சபைகள் கடன் பளுவால் தவிக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த சீன அரச வங்கிகள் அறவிட முடியாக் கடன்களால் தவிக்கின்றன.

2012- ம் ஆண்டு ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த போது 2008-ம் ஆண்டில் உலகில் உருவான பொருளாதாரப் பிரச்சனை சீனாவின் ஏற்றுமதியை பெரிதும் பாதித்துக் கொண்டிருந்தது. அதனால் ஷியின் தலைமையில் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஷியின் தவறான கொள்கையோ அல்லது வழிநடத்தலோ சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்தமைக்குக் காரணம் அல்ல. சீனாவில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கையில் சீனப் படைத்துறையில் மூன்று இலட்சம் பேர்களைக் குறைப்பது பல பொருளாதாரச் சவால்களையும் ஏற்படுத்தும். அதிபர் ஷி ஜின்பிங் படைத்துறைச் செலவைக் குறைக்கும் நோக்கத்துடனும் படைத்துறையின் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனுமே ஆட்குறைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றார்.  சீனாவின் பொருளாதாரம் 2008இன் பின்னர் ஏற்றுமதி குறைவதால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்ற போதிலும். சீனாவால் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். சீனக் கூட்டாண்மைகள் (corporations) ஆண்டு தோறும் மூன்று ரில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டுகின்றன. அதிலும் பல மடங்கு தொகையை சீன மக்கள் ஆண்டு தோறும் சேமிப்பதுடன் அவர்களது சேமிப்பு வளர்ச்சி ஆண்டுக்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டு போகின்றது. சீன அரசு சமுகப் பாதுகாபு நிதியம், அரசி நிதியம் (sovereign wealth) வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு ஆகியவற்றில் பல ரில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த அரச நிதியங்களின் முதலீகள் இலாபகரமானதாகவே இருக்கின்றன. இதனால் சீன அரசு தனது பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேண்டிய எந்த நிர்பந்தத்திற்கும் முகம் கொடுக்கவில்லை. சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பார்க்க நான்கு மடங்கு கதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு அமெரிக்காவினதிலும் பார்க்க அதிகமானதாக வளரும். தற்போதைய படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி Commanders win battles. Economies win wars. தளபதிகள் சண்டைகளில் வெல்வார்கள் பொருதாரங்கள் போரில் வெல்லும். சீனப் பொருளாதாரம் உலகில் மிகப் பெரியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமுண்டோ?

1980களின் ஆரம்பத்தில் இருந்து முழு அரச உதவியுடன் மலிவான ஊதியத் தொழிலாளர்களுடன் உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்ததால் சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. பொருளாதாரத்தில் அதிகமான அரச முதலீடும் அளவிற்கு மிஞ்சிய அரசியல் தலையீடும் ஒரு திறனற்ற உற்பத்தித் துறையை சீனாவில் உருவாக்கியது . இதனால் 2008-ம் 2009-ம் ஆண்டுகளின் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால். சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. எப்போதும் வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றது.  இதனால் ஏற்படும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க சீன ஆட்சியாளர்கள் பெரும் சிரமப் படுகின்றார்கள். சீன மக்களின் கொள்வனவு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 34 விழுக்காடு மட்டுமே.  இந்த விழுக்காடு அமெரிக்காவில் 70 ஆகவும் ஜப்பானில் 61 ஆகவும் தென் கொரியாவில் 50 ஆகவும் இந்தியாவில் 59 ஆகவும் இருக்கின்றது. இதனால்தான் உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீனாவின் வர்த்தக வங்கித் துறை சீன நிதித்துறையின் மோசமான வலுவின்மைப் புள்ளியாக இருக்கின்றது. Liuzhou Bank என்னும் வர்த்தக வங்கியில் 4.9பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஊழல் நடந்துள்ளது. இது அதன் மொத்த சொத்துப் பெறுமதியின் மூன்றில் ஒரு பங்காகும். சீனாவின் வங்கித் துறையில் நிலவும் ஊழல் வங்கிகளின் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதற்கு Liuzhou Bank உதாரணமாகக் காட்டப்படுகின்றது.

மூடிமறைக்கும் திட்டம் - debt-for-equity swap
கூட்டாண்மைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை அந்தக் கூட்டாண்மைகளில் வங்கிகளின் பங்குகளாக மாற்றும் முயற்ச்சியை சினா 2016-ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் வங்கிகளின் நிதி நிலை இருப்பில் அறவிட முடியாக் கடன்களை முதலீடுகளாக மாற்றுவது பிரச்சனையை மூடி மறைக்கும் செயல் மட்டுமே. அது பிரச்சனையைத் தீர்க்காது. வங்கிகள் தாம் கடன் கொடுத்த கூட்டாண்மைகளின் பங்குகளை உலகச் சந்தையில் விற்பது சீனாவின் உபாயமாகும். இதன் மூலம் தனது உள்நாட்டுக் கடன் பிரச்சனையை 7.6பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளாக உலகச் சந்தைக்குத் தள்ள சீனா முயற்ச்சிக்கின்றது. உலக முதலீட்டு முகாமையாளர்கள் சீனாவின் பங்குகளாக மாற்றப்பட்ட செயற்படாக் கடன்களில் (non-performing loans) அதிக அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது நிச்சயம். அதனால் அடிமாட்டு விலைக்கு அப் பங்குகள் விற்கப்படலாம். முதலீடுகளைத் தரவரிசைப் படுத்தும் நிறுவனங்கள் சீனாவின் இப் புதிய பங்குகளைத் தரவரிசைப் படுத்த மறுத்துள்ளன. அதுவும் இப்பங்குகளின் விலையை குறைக்கும். இதனால் சீனாவின் இப் புதிய பங்கு விற்பனைத் திட்டத்தை பன்றிக்கு உதட்டுச் சாயம் பூசும் செயல் என ஒரு நிதித் துறை விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது கடன் கொடுத்த வங்கிகளின் இருப்பு நிலைக்குறிப்பை (balance sheet) மாற்றியமைக்கலாம் ஆனால் அவற்றின் அடிப்படைக் கடன் பிரச்சனையை மாற்றாது.


சீன மக்கள் பட்ட கடனும் படும் தொல்லைகளும்
சீனாவின் மக்கள் பலர் தாம் பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்க மேலும் கடன் பட்டு தமது கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் பெண்களுக்கு வழங்கும் கடனிற்கான உறுதிப் பத்திரமாக அவர்களது நிர்வாணப் படங்களை கேட்டு வாங்குகின்றார்கள். பின்னாளில் அவர்களை மிரட்டிப் பணம் வாங்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் தம்மிடம் கடன் பட்டவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அவர்களது வீடுகளை உடைத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களைச் செய்கின்றார்கள். சில மாணவிகள் படிப்பதற்கு வாங்கிய கடனுக்கு மீளளிப்பாக தமது உடலையே கொடுக்க வேண்டியும் இருக்கின்றது. நிழல் வங்கிகள் எனப்படும் பதிவு செய்யப் படாத வங்கிகளின் அடாவடித்தனத்தை அடக்க சீன அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகின்றது.
சீனாவும் உலக வர்த்தகமும்
1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.

சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது.  2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான்.

நாடுகளிடையேயான ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசமும் அந்த நாடுகள் அந்த வித்தியாசத்தை தவிர்க்க எடுக்கும் ஒன்றை ஒன்று கழுத்தறுக்கும் நடவடிக்கைகளும் அவற்றிடையேயான வர்த்தகத்தைப் பாதிப்பதுடன் உற்பத்தித் திறனையும் பலியிடுகின்றது.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...