Thursday, 13 July 2017

ஏற்றுமதிசார் பொருளாதரங்களும் அவற்றின் பிரச்சனைகளும்

உலகின் முதல் மூன்று ஏற்றுமதி நாடுகளாக சீனா, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் ஏற்றுமதியில் இந்த மூன்று நாடுகளும் வேறு வேறு விதமாகத் தங்கியிருக்கின்றன. ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்படும் போது அதைச் சமாளிக்க இந்த மூன்று நாடுகளும் வேறு வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அமெரிக்காவின் பிரச்சனை சீனாவிலிருந்த வரும் இறக்குமதியே
ஐக்கிய அமெரிக்கா அதிகக் கவலை கொள்வது அதன் ஏற்றுமதியிலும் பார்க்க சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி பற்றியே. உற்பத்தித் துறையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு இழப்பின் காற்பங்கிற்கு சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அதிகரிப்பே காரணமாகும். சீனா தனது நாணத்தின் மதிப்பைத் திட்டமிட்டு குறைந்த நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்கர்களின் குற்றச்சாட்டாகும். அதுவே டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பரப்புரையில் முக்கிய பங்கு வகித்தது. தான் வெற்றி பெற்றால் சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு 35விழுக்காடு தீர்வை வரி விதிப்பேன் என அவர் சூளுரைத்திருந்தார்.

ஜேர்மனி
ஜேர்மனியின் அரச செலவீனம் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 40 விழுக்காடாகும். உலகிலேயே அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த ஜேர்மனி இப்போது சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பின்னால் போய் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா உலகில் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும் அதன் ஏற்றுமதி அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 12.5 விழுக்காடேயாகும். அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவைப் போலவோ ஜெர்மனியைப் போலவோ ஏற்றுமதியில் தங்கியிருக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஜேர்மனியின் பொருளாதாரம் 5.6 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருப்பதால் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார வீழ்ச்சி அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. அதன் ஏற்றுமதி 23 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஜேர்மனியில் வேலையற்றோர் தொகையும் 2008-ம் ஆண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஜேர்மனி அதிக ஏற்றுமதி செய்யும் நாடாக பிரான்ஸ் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவிற்கே ஜேர்மனி அதிக ஏற்றுமதியைச் செய்கின்றது. ஏற்றுமதி அதிகரிப்புக் குறைந்ததால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய ஜேர்மனி தனது அரச செலவீனத்தை மொத்த தேசிய உற்பத்தியின் 44 விழுக்காடாக அதிகரித்தது. அந்த மட்டத்தை தொடர்ந்து பேணி வருகின்றது. உள்நாட்டில் மக்களின் கொள்வனவையும் முதலீட்டையும் அதிகரிக்கவும் ஜேர்மனி பல நடவடிக்கைகளை எடுத்தது.

2015-ம் ஆண்டு ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 1.24ரில்லியன் டொலர்களாகவும் இறக்குமதி 989பில்லியன் டொலர்கள்.  ஜேர்மனியின் ஏற்றுமதியில் கார்கள் 153பில்லியன் டொலர்கள், வாகன உதிர்ப்பாகங்கள் 56.2 பில்லியன் டொலர்கள், மருந்துகள் 50பில்லியன் டொலர்கள், வான்கலங்கள் 32.8 பில்லியன் டொலர்கள்,


2017-ம் ஆண்டு ஜேர்மனியின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும் என சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் ஜேர்மனிய அரசு 2017-ம் ஆண்டு எற்றுமதி அதிகரிக்கும் என நம்புகின்றது. அத்துடன் உள்நாட்டு மக்களின் கொள்வனவு அதிகரிப்பு ஜேர்மனியப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை காப்பாற்றும் எனவும் ஜேர்மனிய அரசு நம்புகின்றது.

தஞ்சம் கோரி ஜேர்மன் வந்த வெளிநாட்டவர்களை வைத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஜேர்மனி முயற்ச்சி செய்கின்றது. ஜேர்மனியின் இளையோர் தொகைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் குறைவாக உள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஜேர்மனி குடிவரவாளர்கள் மூலம் சமாளிக்க முயல்கின்றது. 2016-ம் ஆண்டு ஜேர்மனி குடிவரவாளர்களுக்கு 23பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது இது அரசின் மொத்த செலவீனத்தில் 7 விழுக்காடாகும். ஆனால் இந்தச் செல்வுகள் குடிவரவாளர்களை திறன் மிக்க தொழிலாளர்களாக்க சில ஆண்டுகள் எடுக்கலாம்.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மனியின் மொத்த ஏற்றுமதி 15 விழுக்காட்டால் வளர்ச்சியடைந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் அது 14 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்தது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 26 விழுக்காட்டாலும், சீனாவிற்கான ஏற்றுமதி 22 விழுக்காட்டாலும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 18 விழுக்காட்டாலும்  வீழ்ச்சியடைந்தன.

ஜேர்மனியின் கார் உற்பத்தி நிறுவனங்கள் 2009-ம் ஆண்டின் பின்னர் ஜேர்மனியில் அவை செய்யும் கார் உற்பத்தி அதிகரிப்பிலும் பார்க்க பார்க்க வெளிநாடுகளில் உள்ள தமது தொழிற்சாலைகளில் செய்யும்  உற்பத்தி அதிகரிப்பு அதிகமாக இருக்கின்றது.  அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தமது ஏற்றுமதி வருமானத்தை அந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் முதலீடு செய்வதுண்டு. அந்த வகையில் ஜேர்மனி அதிக அளவு முதலீட்டை அமெரிக்காவில் செய்கின்றது. அமெரிக்காவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டில் 10 விழுக்காடு ஜேர்மனியில் இருந்து செய்யப்படுகின்றது. ஜேர்மனி அமெரிக்காவில் செய்த முதலீட்டில் 670,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
.
அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜேர்மனி அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா இருக்கின்றது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2019-ம் ஆண்டு வெளியேறிய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தால் அது ஜேர்மனியின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதிக்கும்.

2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. அதனால் 10 விழுக்காடாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் தற்போது ஏழு விழுக்காட்டிலும் குறைவான அளவில் வளருகின்றது. இந்த பொருளாதார வளர்ச்சி வேகக் குறைப்பைச் சமாளிக்க சீனா பலவழிகளில் முயற்ச்சி செய்தது கொண்டிருக்கின்றது. அந்நிய முதலீடுகளைக் கவருவதில் சீனா முதலாம் இடத்தில் இருந்தது. 2015-ம் ஆண்டு இந்தியா அந்த முதலாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது. 2016-ம் ஆண்டு உற்பத்தித் துறையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் சீனத் தொழிலாளர்களின் ஊதியம் ஐந்து மடங்காக  இருந்தது.
1. மிகையான உற்பத்தி சாதனங்கள்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உச்ச நிலையில் இருந்த சீனாவின் ஏற்றுமதிக்காக உருவாக்கப் பட்ட உற்பத்தி சாதனங்கள் பல இப்போது பயன்பாடற்று இருக்கின்றன. இவற்றில் அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் இலாபத்திறனற்றுக் கிடக்கின்றன.
2. உயர் தொழில்நுட்பத்துக்கு மாற முடியாத நிலைமை
சீனா தனது உற்பத்தியை உயர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற எடுக்கும் முயற்ச்சி வெற்றியளிக்கவில்லை. ஏற்கனவே முன் தங்கியுள்ள மேற்கு நாடுகள் சீனா தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் போது தாமும் மேம்படுத்தி தொழில்நுட்ப இடைவெளியை சீனாவால் குறைக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன.
3. உள்ளூராட்சிச் சபைகளின் நிதி நிலைமை
சீனாவின் பல உள்ளுராட்ச்சிச் சபைகள் கடன் பளுவால் தவிக்கின்றன. அவற்றுக்கு கடன் கொடுத்த சீன அரச வங்கிகள் அறவிட முடியாக் கடன்களால் தவிக்கின்றன.

2012- ம் ஆண்டு ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த போது 2008-ம் ஆண்டில் உலகில் உருவான பொருளாதாரப் பிரச்சனை சீனாவின் ஏற்றுமதியை பெரிதும் பாதித்துக் கொண்டிருந்தது. அதனால் ஷியின் தலைமையில் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஷியின் தவறான கொள்கையோ அல்லது வழிநடத்தலோ சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்தமைக்குக் காரணம் அல்ல. சீனாவில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கையில் சீனப் படைத்துறையில் மூன்று இலட்சம் பேர்களைக் குறைப்பது பல பொருளாதாரச் சவால்களையும் ஏற்படுத்தும். அதிபர் ஷி ஜின்பிங் படைத்துறைச் செலவைக் குறைக்கும் நோக்கத்துடனும் படைத்துறையின் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனுமே ஆட்குறைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றார்.  சீனாவின் பொருளாதாரம் 2008இன் பின்னர் ஏற்றுமதி குறைவதால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்ற போதிலும். சீனாவால் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். சீனக் கூட்டாண்மைகள் (corporations) ஆண்டு தோறும் மூன்று ரில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டுகின்றன. அதிலும் பல மடங்கு தொகையை சீன மக்கள் ஆண்டு தோறும் சேமிப்பதுடன் அவர்களது சேமிப்பு வளர்ச்சி ஆண்டுக்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டு போகின்றது. சீன அரசு சமுகப் பாதுகாபு நிதியம், அரசி நிதியம் (sovereign wealth) வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு ஆகியவற்றில் பல ரில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த அரச நிதியங்களின் முதலீகள் இலாபகரமானதாகவே இருக்கின்றன. இதனால் சீன அரசு தனது பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேண்டிய எந்த நிர்பந்தத்திற்கும் முகம் கொடுக்கவில்லை. சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பார்க்க நான்கு மடங்கு கதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு அமெரிக்காவினதிலும் பார்க்க அதிகமானதாக வளரும். தற்போதைய படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி Commanders win battles. Economies win wars. தளபதிகள் சண்டைகளில் வெல்வார்கள் பொருதாரங்கள் போரில் வெல்லும். சீனப் பொருளாதாரம் உலகில் மிகப் பெரியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமுண்டோ?

1980களின் ஆரம்பத்தில் இருந்து முழு அரச உதவியுடன் மலிவான ஊதியத் தொழிலாளர்களுடன் உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகள் மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்ததால் சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. பொருளாதாரத்தில் அதிகமான அரச முதலீடும் அளவிற்கு மிஞ்சிய அரசியல் தலையீடும் ஒரு திறனற்ற உற்பத்தித் துறையை சீனாவில் உருவாக்கியது . இதனால் 2008-ம் 2009-ம் ஆண்டுகளின் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால். சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது. எப்போதும் வளர்ச்சிப் பாதையில் வீறு நடை போடும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருந்த சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்து கொண்டிருக்கின்றது.  இதனால் ஏற்படும் சமூக பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க சீன ஆட்சியாளர்கள் பெரும் சிரமப் படுகின்றார்கள். சீன மக்களின் கொள்வனவு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 34 விழுக்காடு மட்டுமே.  இந்த விழுக்காடு அமெரிக்காவில் 70 ஆகவும் ஜப்பானில் 61 ஆகவும் தென் கொரியாவில் 50 ஆகவும் இந்தியாவில் 59 ஆகவும் இருக்கின்றது. இதனால்தான் உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீனாவின் வர்த்தக வங்கித் துறை சீன நிதித்துறையின் மோசமான வலுவின்மைப் புள்ளியாக இருக்கின்றது. Liuzhou Bank என்னும் வர்த்தக வங்கியில் 4.9பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஊழல் நடந்துள்ளது. இது அதன் மொத்த சொத்துப் பெறுமதியின் மூன்றில் ஒரு பங்காகும். சீனாவின் வங்கித் துறையில் நிலவும் ஊழல் வங்கிகளின் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதற்கு Liuzhou Bank உதாரணமாகக் காட்டப்படுகின்றது.

மூடிமறைக்கும் திட்டம் - debt-for-equity swap
கூட்டாண்மைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை அந்தக் கூட்டாண்மைகளில் வங்கிகளின் பங்குகளாக மாற்றும் முயற்ச்சியை சினா 2016-ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆனால் வங்கிகளின் நிதி நிலை இருப்பில் அறவிட முடியாக் கடன்களை முதலீடுகளாக மாற்றுவது பிரச்சனையை மூடி மறைக்கும் செயல் மட்டுமே. அது பிரச்சனையைத் தீர்க்காது. வங்கிகள் தாம் கடன் கொடுத்த கூட்டாண்மைகளின் பங்குகளை உலகச் சந்தையில் விற்பது சீனாவின் உபாயமாகும். இதன் மூலம் தனது உள்நாட்டுக் கடன் பிரச்சனையை 7.6பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளாக உலகச் சந்தைக்குத் தள்ள சீனா முயற்ச்சிக்கின்றது. உலக முதலீட்டு முகாமையாளர்கள் சீனாவின் பங்குகளாக மாற்றப்பட்ட செயற்படாக் கடன்களில் (non-performing loans) அதிக அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது நிச்சயம். அதனால் அடிமாட்டு விலைக்கு அப் பங்குகள் விற்கப்படலாம். முதலீடுகளைத் தரவரிசைப் படுத்தும் நிறுவனங்கள் சீனாவின் இப் புதிய பங்குகளைத் தரவரிசைப் படுத்த மறுத்துள்ளன. அதுவும் இப்பங்குகளின் விலையை குறைக்கும். இதனால் சீனாவின் இப் புதிய பங்கு விற்பனைத் திட்டத்தை பன்றிக்கு உதட்டுச் சாயம் பூசும் செயல் என ஒரு நிதித் துறை விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இது கடன் கொடுத்த வங்கிகளின் இருப்பு நிலைக்குறிப்பை (balance sheet) மாற்றியமைக்கலாம் ஆனால் அவற்றின் அடிப்படைக் கடன் பிரச்சனையை மாற்றாது.


சீன மக்கள் பட்ட கடனும் படும் தொல்லைகளும்
சீனாவின் மக்கள் பலர் தாம் பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவர்க மேலும் கடன் பட்டு தமது கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் பெண்களுக்கு வழங்கும் கடனிற்கான உறுதிப் பத்திரமாக அவர்களது நிர்வாணப் படங்களை கேட்டு வாங்குகின்றார்கள். பின்னாளில் அவர்களை மிரட்டிப் பணம் வாங்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். கறுப்புச் சந்தையில் கடன் வழங்குவோர் தம்மிடம் கடன் பட்டவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் அவர்களது வீடுகளை உடைத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களைச் செய்கின்றார்கள். சில மாணவிகள் படிப்பதற்கு வாங்கிய கடனுக்கு மீளளிப்பாக தமது உடலையே கொடுக்க வேண்டியும் இருக்கின்றது. நிழல் வங்கிகள் எனப்படும் பதிவு செய்யப் படாத வங்கிகளின் அடாவடித்தனத்தை அடக்க சீன அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகின்றது.
சீனாவும் உலக வர்த்தகமும்
1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.

சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது.  2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான்.

நாடுகளிடையேயான ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசமும் அந்த நாடுகள் அந்த வித்தியாசத்தை தவிர்க்க எடுக்கும் ஒன்றை ஒன்று கழுத்தறுக்கும் நடவடிக்கைகளும் அவற்றிடையேயான வர்த்தகத்தைப் பாதிப்பதுடன் உற்பத்தித் திறனையும் பலியிடுகின்றது.


Monday, 3 July 2017

இந்தியாவின் மோடியும் அமெரிக்காவின் டிரம்பும்

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டபோது அமெரிக்கா வேறு டிரம்ப் வேறு மோடி வேறு இந்தியா வேறு என்பது உறுதியானது. இருவருக்கும் தத்தம் நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் வேறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வேறு என்பது வெளிப்படையானது. இருவரும் சீர்திருத்தம் எனச் சொல்லிக் கொண்டு செய்யும் சீர்கேடுகள் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கான தேவை இரு நாடுகளின் கேந்திரோபாய நோக்கங்களுக்கு அவசியமானதாகவும். அந்தத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலகில் அதிக படைக்கலன்களை விற்பனை செய்யும் அமெரிக்காவும் உலகில் அதிக அளவு படைக்கலன்களை கொள்வனவு செய்யும் இந்தியாவும் கைகோர்த்துக் கொள்வதில் பெரிய பிரச்சனைகள் இருக்காது. தனது விற்பனைகள் தொடர்ந்தும் வளர்ச்சியடையுமிடத்து அற்ப மனித உரிமை மீறல்களை எல்லாம் அமெரிக்கா கண்டுகொள்ளாமல் இருப்பதில் கில்லாடி.

இந்தியா போன மோடி
இந்தியாவில் ஒரு நகைச்சுவை பிரபல்யம். அதன் படி சீன அதிபர் புது டில்லி சென்று மோடியிடம் உங்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். மோடியும் சொன்னாராம் நானும் உங்களைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் இந்தியா வந்துள்ளேன் என்றாராம். அந்த அளவிற்கு மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வார். ஆனால் அமெரிக்காவில் மோடி அதிக நாட்கள் செலவு செய்யவில்லை. 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என அமெரிக்க வெளியுறவுத் துறை நம்புகின்றது. இதனால் மோடிக்கான வரவேற்பும் சிறந்த்தாக இருந்தது. ஜோர்ஜ் டபிளியூ புஷும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவின் ஆசியா நோக்கிய நகர்வுக்கு சீனாவிலும் பார்க்க இந்தியாவே சிறந்த நட்பு நாடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். டிரம்பும் அந்தக் கொள்கையையே தொடர்கின்றார்.

இஸ்லாமியப் பூச்சாண்டி
மோடி இந்தியாவில் இருக்கும் 189 மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்தார். டிரம்ப் உலகெங்கும் இருக்கும் 1800மில்லியன் இசுலாமியர்களை வெறுப்பதாகக் காட்டிக் கொண்டு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேரும் சமூக வலைத் தளங்களில் சீன் போடுவதிலும் ஃபில்ம். காட்டுவதிலும் சூரர்கள். மோடி பங்களா தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கள்ளமாக வருபவர்களைத் தடுக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டியவர். டிரம்ப் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு இரகசியமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க வேண்டும் என முழங்கியவர். இருவரும் பரப்பியத்தைக் (populism) கையில் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.

அமெரிக்கா முதல் என்பதும் இந்தியாவில் உற்பத்தி என்பதும்
டிரம்ப் அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என்ற கொள்கையுடையவர். இது பல இந்தியர்களின் அமெரிக்கப் பச்சை அட்டைக் கனவை சிதைத்தது. மோடி இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தவர். இருவரது கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் புதிய அத்தியாயத்தின் முன்னுரையை எழுதியவர் பராக் ஒபாமாவின் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஹிலரி கிளிண்டன். இவர்களின் பல வெளியுறவுக் கொள்கைகளை  தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் டிரம்ப் இந்தியாவுடனான உறவைப் பொறுத்தவரை அவர்களின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகின்றார்.

பயங்கரவாத ஒழிப்பு
அமெரிக்காவும் இந்தியாவும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என உள்நாட்டிலும் உலக அரங்கிலும் முழங்குபவை. இரு நாடுகளினதும் பயங்கரவாத எதிர்ப்பு பாக்கிஸ்த்தானில் சந்திக்கும் போது அது எப்போதும் சந்திப்பாக இருந்திருக்கவில்லை. பல கட்டங்களில் அது மோதலாகவே இருக்கின்றது. இந்தியாவுடனான உறவை வளர்க்க இந்த மோதல் தவிர்ப்பு அவசியம் என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா தனது படை நடவடிக்கைகளைத் தொடரும் வரை பாக்கிஸ்த்தானை அதிருப்திப் படுத்த அமெரிக்காவால் முடியாது. மோடியை மகிழ்ச்சிப்படுத்த கஷ்மீரில் செயற்படும் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாஹுதீனை ஒரு பயங்கரவாதியாக அமெரிக்கா மோடி அமெரிக்கா செல்வதற்கு முதல் நாள் அறிவித்தது. அதை மறுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துரை அவரை ஒரு விடுதலைப் போராளி என்றது. லக்ஷர் இ தொய்பா, ஹக்கானி அமைப்பு போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானில் இருந்து செயற்படுகின்றன. ஆனால் ஹிஸ்புல் முஜாஹிடீன் அமைப்பு முழுக்க முழுக்க கஷ்மீரில் இருந்து செயற்படும் ஓர் அமைப்பாகும். அதன் தலைவர் கஷ்மீரில் மிகவும் பிரபலமான ஒருவராகும். இவர் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரின் சட்டசபைத் தேர்தலில் 1987-ம் ஆண்டு போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். அந்தத் தேர்தலில் வாக்குப் பெட்டிகள் சட்ட விரோதமாக நிரப்பப்பட்டன என அவர் குற்றம் சாட்டி தன்னைத் தீவிரவாதியாக மாற்றிக் கொண்டார்.


டிரம்பிற்கு முக்கியத்துவம்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு பரிஸ் சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இந்தியாவைக் கடுமையாக விமர்சித்ததால் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தை உருவாக்கியது. அந்த அச்சம் டிரம்ப் மோடிக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது தவிடு பொடியானது. டிரம்ப் மோடிக்கு தனது வதிவிடமான வெள்ளை மாளிகைச் மோடிக்குச் சுற்றிக் காட்டிய டிரம்ப் பின்னர் நடந்த விருந்தின் போது துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மத்தீஸ், டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகர் ஜெராட் குஷ்னர் உடபட 13 உச்ச மட்டத்தினரையும் அழைத்திருந்தார். இது டிரம்பிற்கு வழங்கப்பட்ட உச்சக் கௌரவமாகப் பார்க்கப்படுகின்றது. டிரம்பின் நிர்வாகத்தில் அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் ஒன்றான தெற்காசியாவிற்கும் நடுவண் ஆசியாவிற்குமான துணை அரசுத்துறைச் செயலர் பதவி இப்போதும் காலியாகவே உள்ளது. இதனால் உருவான நிர்வாகத்தின் கேந்திரோபாய இடைவெளி இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை இதுவரை பெரிதாகப் பாதிக்கவில்லை.

இந்தியா பழையனவற்றின் புகலிடமா?
உலகின் இரண்டாவது பெரிய சூட்டிகைக் கைப்பேசிச் சந்தை இந்தியாவாகும். அத்துடன் அந்தச் சந்தை மிக வேகமாக வளர்கின்றது. ஆனால் அமெரிக்க நிறுவனமான அப்பிளின் மிகப் புதிய கைப்பேசிகள் பல இந்தியர்களால் வாங்க முடியாமல் இருக்கின்றது. இதனால் அப்பிள் தனது பழைய ஐ-போன்-5-எஸ் கைப்பேசிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. அத்துடன் நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தைத் திருப்திப்படுத்த புதிய ஐபோன்களை அப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளது. இந்த பழையனவற்றை இந்தியாவிற்கு அமெரிக்காவிற்பனை செய்வது வெறுமனவே கைப்பேசிகளில் மட்டுமல்ல படைத்துறை உபகரணங்களிலும் செய்யப்படுகின்றது. அமெரிக்காவிற்கு இனித் தேவையற்றுதாகிவிட்ட F-16 போர் விமானங்களை அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் காலாவதியாகிப் போன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் கொட்டி அமெரிக்க நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன என F-16 உற்பத்தி பற்றிச்சிலர் கருத்து வெளியிட்டனர். பாக்கிஸ்த்தானிடம் ஏற்கனவே F-16 போர் விமானங்கள் இருக்கின்றன. சீனாவின் J-20 போர் விமானங்களுக்கு லொக்ஹீட் மார்ட்டினின் F-16 ஈடாக மாட்டாது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யும் F-16இல் புதியரக படைக்கலன்களும் உணரிகளும் பொருத்தப்படும் என இந்தியாவில் உள்ள F-16இன் இரசிகர்கள் வாதாடுகின்றனர்.

விமான இயந்திர உற்பத்திப் புள்ளி
இந்தியா இரசியாவிடமிருந்து வாங்கிய போர் விமானங்கள் பல அதிக அளவில் விபத்துக்களைச் சந்தித்தன. அவற்றின் தரம் சரியில்லை என இந்தியாவில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் விமானங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதமையால் அவை விபத்துக்களைச் சந்திக்கின்றன. ஆனால் விமான இயந்திர உற்பத்தித் துறையில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தையும் அனுபவத்தையும் பெறுவது இந்தியாவிற்கு அவசியமானதாகும். இதற்கான ஆரம்பப் புள்ளியாக F-16 உற்பத்தியை பார்க்கின்றது.

விமானந்தாங்கிகளுக்கான EMALS
EMALS என சுருக்கமாக அழைக்கப்படும் விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்களை பறக்க வைக்கவும் தரையிறங்கவும் செய்யும் Electromagnetic Aircraft Launch System என்னும் முறைமையை இந்தியாவிற்கு விற்பனை செய்ய 2015-ம் ஆண்டு அமெரிக்கா முடிவு செய்தது. இந்தியா தொடர்ச்சியான விநயம் மிக்க பல வேண்டுதல்களுக்குப் பின்னரே அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. ஆனால் அமெரிக்காவின் F-35-C போர் விமானங்கள் மிகக் குறுகிய தூரம் பறந்து விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து மேலெழுந்து செல்லுவதுடன் உலங்கு வானூர்தி போல் ஓடு பாதையில் ஓடாமல் தரையிறங்கவல்லது. F-35 போர் விமானங்கள் EMALS தொழில்நுட்பத்தைக் காலாவதியாக்கிய பின்னரே EMALS இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் EMALSஇற்கு ஈடான தொழில்நுட்பம் இரசியாவிடமோ சீனாவிடமோ இல்லை.

கவனமாக இருக்க வேண்டும்
மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு தொழில்நுட்பமும் வெளிநாட்டு முதலீடும் அவசியம். ஆனால் வெளிநாட்டு வியாபாரிகள் எப்போதும் தமது முதலீடுகளுக்கு அதுவும் இந்தியா போன்ற வெளிநாட்டினரை ஐயத்துடன் பார்க்கும் மக்கள் நிறைந்த நாடுகளில் குறுகிய காலத்தில் தமது முதலீட்டுக்கு விரைவாக இலாபம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். உலகில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் இந்தியா சரியான முறையில் பேச்சு வார்த்தைகளை நடத்தி சரியான ஒப்பந்தங்களைச் செய்தால் மட்டுமே காலாவதியானவற்றை இந்தியாவில் தள்ளுவதைத் தடுக்க முடியும்.

முக்கியமானவை மூன்று
படைத்துறை ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாடு, சீனாவின் கடல்சார் விரிவாக்கத்தைத் தடுத்தல் ஆகிய மூன்றும் அமெரிக்காவும் இந்தியாவும் கவனம் செலுத்த வேண்டியவையாகும். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். இரு நாடுகளினதும் அண்மைக்கால நகர்வுகளில் முக்கியமானவை. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கை செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் வழங்கல் வசதி மாற்றிகளை மாற்றிக்கொள்ளும் இந்த உடன்படிக்கை 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பத்து ஆண்டுகளாக இழுபறிப்பட்ட இந்த உடன்படிக்கை இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எவ்வளவு கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக் காட்டுகின்றது.

பாதுகாப்புத் தொழில்நுட்பமும் வர்த்தகமும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட Defence Technology and Trade Initiative (DTTI) என்ற முன்னெடுப்பு உடன்பாடும் ஓர் உதாரணமாகும். 2012-ம் ஆண்டு அப்போது துணைப் பாதுகாப்புச் செயலராக இருந்த அஸ்டன் கார்ட்டர் இதை உருவாக்கினார். இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பில் உள்ள சிவப்பு நாடாக்களை அகற்றுவதே DTTIஇன் முக்கியமாகும். இதன் கீழ் ஆறு முக்கிய திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன. மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்கா தனது predator guradian drones என்னும் ஆளில்லாப் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இது காலாவதியான தொழில்நுட்பம் என்ற வகைக்குள் அடங்கவில்லை.


இரு நாடுகளிடையே உள்ள எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சீனாவின் கடல்சார் விரிவாக்கத்திற்கு எதிராக இரண்டும் ஒத்துழைத்தே ஆகவேண்டும். 

Wednesday, 28 June 2017

டிரம்பின் பல போர் முனைகள்



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் அடிக்கடி பாவித்த வார்த்தைகள் போலிச் செய்திகள். அவற்றை அவர் தனக்கு எதிராகச் செயற்படும் சி.என்.என், வாஷிங்டன் போஸ்ற், நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்களுக்கு எதிராகப் பாவித்தார். போலிச் செய்திகள் என்ற சொற்றொடர் உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் கூட தாம் எழுதும் கட்டுரைகளில் அந்தச் சொற்றொடரைப் பாவிக்கின்றார்கள். தற்போது டிரம்ப் அதிகம் பாவிக்கும் வார்த்தைபழிவாங்கல்கள்”. அவருக்கு எதிராக தற்போது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படும் புலனாய்வுத் துறை செய்யும் விசாரணைகளை பழிவாங்கல்கள் என்ற வார்த்தை மூலம் சாடுகின்றார்.

சிரியாவில் மோதல்
2011-ம் ஆண்டு அரபு வசந்தம் என்னும் பெயரில் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரில் முதற்தடவையாக சிரிய அரச படைகளின் போர்விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க ஆதரவுடன் பல போராளி அமைப்புக்கள் சிரிய மாகாணமான ரக்காவில் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக போர் செய்து கொண்டிருக்கையிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. சிரிய மக்களாட்சிப்படை என்னும் பெயரில் இயங்கு அந்த போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பின் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக சிரிய அரசுக்குச் சொந்தமான இரசியத் தயாரிப்பு விமானமான எஸ்.யூ-22 தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கக் கடற்படையின் F/A-18E Super Hornet . அந்த எஸ்.யூ-22 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இது குர்திஷ் போராளிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். ஆனால் இரசியா இதனால் கடும் விசனம் அடைந்துள்ளது. சிரியப் போர் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தும் போது இருவகைகளில் இரசியா பாதிக்கப்படுகின்றது. இரசியப் போர்விமானங்களின் மீது உலக படைக்கலச் சந்தையில் நம்பிக்கை வீழ்ச்சியடைகின்றது. இரசியாவின் நட்பு நாடுகள் தமது இறைமையை இரசியாவால் எந்த அளவு பாதுகாக்க முடியும் எனச் சிந்திக்கின்றன. அமெரிக்கா தலைமையில் இயங்கும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஒஸ்ரேலியா, டென்மார்க், இத்தானி ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டுப்படையினரின் விமானங்களுக்கு எதிராக தான் தாக்குதல் செய்யப்போவதாக இரசியா அறிவித்துள்ளது. இது ஏற்கனவே கொதிநிலையில் இருக்கும் சிரியப் போர் முனையை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. பராக் ஒபாமாவிலும் பார்க்க டொனால்ட் டிரம்ப் ஐ எஸ் அமைப்பினரை ஒழிப்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார் போல் இருக்கின்றது. ரக்கா மாகாணம் எரிபொருள் வளமும் பல முக்கிய தெருக்களையும் கொண்டது. தெருக்களைப் பாவிப்பதற்கான வரி மூலமும் எரிபொருள் விற்பனை மூலமும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தமது தலைநகர் ரக்காவில் பெரும் தொகைப் பணத்தைப் பெறுகின்றனர். அங்கு வாழும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் பாதுகாப்பு வரியையும் வசூலிக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான சுனி அரபுக்களும் குர்திஷ் போராளிகளும் கைப்பற்றுவது ஐ எஸ் அமைப்புக்கு மட்டுமல்ல அசாத்திற்கும் பெரும் இழப்பாகும் என்பதோடு போருக்குப் பின்னரான சிரியாவில் அமெரிக்காவிற்கு ஒரு பிடியுமாகும். 

ஹோமஸ் நீரிணையில் ஈரானும் சீனாவும்
ஈரானின் ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை ஜூன் ஆறாம் திகதி அமெரிக்கப் போர்விமானங்கள் சிரியாவில் வைத்துச் சுட்டு வீழ்த்தின. பின்னர் ஜூன் 20-ம் திகதி மீண்டும் ஒரு படைக்கலன்கள் தாங்கிய ஈரானில் தயாரிக்கப் பட்ட ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை அமெரிக்காவின் F-15 போர்விமானம் சுட்டு வீழ்த்தியது. அது மட்டுமல்ல உலக எரிபொருள் விநியோகத்தின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகுப் புள்ளியான ஹோமஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையும் கட்டார் கடற்படையும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதே பிராந்தியத்தில் ஈரானும் சீனாவும் இணைந்து கடற்படைப் போர்ப் பயிற்ச்சியில் ஈடுபட்ட்ன. சீனா ஹோமஸ் நீரிணையில் அமெரிக்க ஆதிக்கத்தை இட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது. அங்கு வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை அமெரிக்காவால் தடுக்க முடியும் என்பதை சீனா அறியும். சீனாவும் ஈரானும் ஒரு புறமும் மற்ற வளைகுடா நாடுகள் மறுபுறமுகாக ஒரு போட்டிக்களம் ஹோமஸ் நீரிணையில் உருவாகுகின்றது.
சிரியாவிலோ ஈராக்கிலோ அமெரிக்கப் படையினர் கால் பதிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் பராக் ஒபாமா செயற்பட்டார். ஆனால் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கப்படையினரின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது. தரைப்படையைச் செயலில் இறங்க்குவது டிரம்பைப் பொறுத்தவரை பெரும் பிரச்சனை இல்லை ஆனால் படையினர் அப்படி ஒன்றை விரும்பவில்லை. சிரியப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு எதுவுமே இல்லை என்பதை அமெரிக்கப் படைத்துறையினர் அறிவர். ஈராக்கில் 50 விழுக்காடு சியா இஸ்லாமியரும் 48 விழுக்காடு சுனி இஸ்லாமியரும் வாழ்கின்றனர். இஸ்லாமிய அரசு அமைப்பை ஈராக்கில் ஒழித்துக் கட்டிய பின்னர் சியா இஸ்லாமியர்கள் தமக்கு எதிராக சதாம் ஹுசேயினின் ஆட்சிக்காலத்தில் இருந்தே செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு தம்மேல் பழிவாங்கலாம் என ஈராக்கில் உள்ள சுனி இஸ்லாமியர்கள் அஞ்சுகின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது ஈரானிய மதவாத ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இது நடக்கக் கூடாது என்பது வளைகுடா நாடுகளில் ஆட்சியில் உள்ள மன்னர்களினது நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அமெரிக்காவின் கடப்பாடாகும். ஈரானை மனதில் வைத்துக் கொண்டே டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்டார். ஈரானும் இரசியாவும் நாளுக்கு நாள் ஒன்றிணைது செயற்படுகின்றன. துருக்கியும் இரசியாவிற்கும் இடையிலான உறவு சீரடைந்து கொண்டு வருகின்றது. சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகளால ஆத்திரமடைந்த ஐ எஸ் அமைப்பினர் தமது போராளிகளை இரசியாவிற்கு அனுப்பாமல் தடுப்பதற்கு துருக்கியினதும் ஈரானினதும் ஒத்துழைப்பு இரசியாவிற்கு அவசியமாகும். இதனால் சிரியாவையும் ஈராக்கையும் மையப்படுத்தி இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலை வளர்ந்து வருகின்றது. 

வட கொரியா ஓராண்டுகாலப் பேச்சு வார்த்தையின் பின்?
வட கொரியாவுடன் ஐக்கிய அமெரிக்கா 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மிகவும் இரகசியமாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னணியில் சீனா இருக்கின்றது. அது அமெரிக்காவை ஓராண்டு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதன் அணுக்குண்டு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தையும் நிறுத்த முயற்ச்சிக்கும் படி வேண்டியுள்ளது. அப்பேச்சு வார்த்தை பயனளிக்காவிடில் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சீனா தடை போடாது என்ற உறுதி மொழி வழங்கியுள்ளது. ஆனால் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து விட்டு அமெரிக்கா வரை பாயக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றது. வட கொரியாவுடன் ஓராண்டின் பின்னர் அமெரிக்கா போர் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகலாம். ஆனால் வல்லரசு நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அதனால் ஓராண்டு கழித்து அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் நடக்கும் போது சீனா சும்மா இருக்க மாட்டாது.   2017 ஜூன் நான்காம் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வட கொரியாவை வழிப்படுத்த சீனா எல்லா முயற்ச்சியும் செய்தது ஆனால் முடியவில்லை எனப்பதிவிட்டார். இந்தப் பதிவு சீன உயர் அதிகாரிகள் வட கொரியா தொடர்பான பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க செல்லத் தாயாரான வேளை வெளிவந்தது. அத்துடன் அப்பதிவு வெளிவந்த சில மணித்தியாலங்களில் அமெரிக்காவின் B-1 போர் விமானங்கள் இரு கொரியாக்களையும் பிரிக்கும்  38th parallel என்னும் எல்லைக் கோட்டை ஒட்டிப் பறந்து சென்றது. 

புதிதாக ஒரு பெரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன. அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர் நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் அவர் மனதில் வைக்காமல் ஸ்பார்ட்டா மற்றும் எதென்ஸ் ஆகிய இரு நகர அரசுகளுக்கும் இடையிலான முப்பதாண்டுப் போரை அனுபவமாகக் கொண்டே அவர் துசிடைட் பொறி என்னும் கோட்ப்பாட்டை முன்வைத்தார். ஏற்கனவே வளர்ந்திருந்த ஸ்பார்ட்டா தீடீரென வளர்ந்த எதென்ஸை பார்த்து உருவான பயத்தால் போர் தவிர்க்க முடியாத ஒன்றானது என்றார் துசிடைட். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து புதிதாக உருவான 15 வல்லரசுகளில் 11 பெரும் போரைச் சந்தித்தன. கடந்த பத்து ஆண்டுகளாக பல உலக அரசியல் ஆய்வாளர்கள் சீனாவும் அமெரிக்காவும் Thucydides’s trap அகப்படுமா என்பதைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் நடக்கக் கூடிய களங்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பது தென் சீனக் கடல் என்றாலும் அந்தப் பிராந்திய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக சீனா தனது பக்கம் இழுக்கும் வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு ஒரு போ முனையைத் திறக்க அமெரிக்கா விரும்பாது. தென் கொரியா தனது மண்ணில் போர் நடப்பதை விரும்பவில்லை. ஆனால் சண்டப் பிரசண்டனாக இருப்பது ஜப்பான் மட்டுமே. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடக்கலாம் அதில் அமெரிக்கா உடனடியாக களத்தில் இறங்கும். இதனால்தான் சீனா தென் சீனக் கடலில் செய்யும் தீவு நிர்மாணங்களைப் போல் கிழக்குச் சீனக் கடலில் செய்யவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் António Guterres அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவது ஆபத்து எனச் சொல்கின்றார். அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவதை தடுக்கும் பொருட்டு தான் அமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதை தடுப்பேன் என்றும் சொல்கின்றார். உலகம் உருப்படுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...