2011இல் மதசார்பற்ற இளைஞர்கள் அப்போதைய எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்த போது மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பி ஓடினார். இப்போது அதிபர் பதவியில் இருந்து படையினரால் தூக்கி எறியப்பட்ட மேர்சியின் ஆதரவாளர்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் போது ஹஸ்னி முபராக் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பல முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமது பிராந்திய நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க அடக்கப்பட வேண்டியது எனவும், தமது பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பில்லாமல் அடக்கப்படக் கூடியது என்றும் நம்புகின்றன. இந்த நாடுகளுக்கு சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்ற பெயரைப் பாவிப்பதைக் குறைத்து இசுலாமியவாதிகள் என்ற பதத்தை அதிகம் பாவிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாம் எகிப்தியப் படைத்துறையின் நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் போல் வெற்றீகரமாகப் பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.
2011இல் நடந்த இளைஞர் புரட்சியைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் புரட்சி செய்த இளைஞர்களால் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்றாலே எல்லோரும் சொல்வது அது ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு என்றே. புரட்சி செய்த இளைஞர்கள் அல் பாரடியை தமது வேட்பாளராக நிறுத்த விரும்பினர். பல தாராண்மைவாதிகளும் அதையே விரும்பினர். ஆனால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்து அமைப்பு நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட எல் பராடி போட்டியிட மறுத்தார். இதனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு நிறுத்திய வேட்பாளர் மொஹமட் மேர்சி எளிதாக வெற்றி பெற்றார். ஆனால் அவர் கொண்டு வந்த அரசமைப்பு யாப்பும் அதை ஒட்டி நடந்த ஊழல் நிறைந்த வாக்கெடுப்பும் பலரை மேர்சிக்கு எதிராகத் திருப்பின. அது மட்டுமல்ல மேர்சி எகிப்தியப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் ஆட்சியில் தனது பிடியை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை எகிப்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அமெரிக்காவை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதற்காக ஈரான் நீட்டிய நட்புக்கரத்தைப் பற்ற மறுத்தார். அமெரிக்காவைத் திருப்திப் படுத்துவதற்காக இஸ்ரேலுடன் 1979இல் செய்யப் பட்ட காம்ப் டேவிட் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாமல் விட்டார். இவருடன் வியாபாரம் செய்யலாம் என நம்பி இருந்த அமெரிக்காவிற்கு மொஹமட் மேர்சி பல உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தியது பலத்தை ஐயத்தை அவர் மீது ஏற்படுத்தியது. இறுதிக் வைக்கோலாக அவர் 1997இல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 62பேரைக் கொன்ற ஒரு இசுலாமியத் தீவிரவாதியை லக்சர் மாகாண ஆளுநராக்கியது அமைந்தது.
2012இல் மொஹமட் மேர்சி பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தன்னை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்களை அடக்கினார். மேர்சிக்கு எதிராக அவரது பணிமனைமுன் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் படி மேர்சிக்கு எகிப்தின் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவர் அதற்குச் செவி சாய்க்க வில்லை. 2011 புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் தாராண்மைவாத அரசியல்வாதிகளையும் அவர் தனது எதிரிகளாகவே கருதினார். இதனால் அவர்கள் மேர்சிக்கு எதிராகத் திரும்பினர். மேர்சிக்கு எதிரானவர்கள் தமரவுட் என்னும் குடை அமைப்பின்கீழ் ஒன்றாகினார்கள். மேர்சி பதவி விலக வேண்டும் என 22 மில்லியன் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மேர்சி பதைவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி இருபது இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 1-ம் திகதி எகிப்தியப் படைத்துறையினர் மொஹமட் மேர்சிக்கு நாட்டில் அமைதியை நிலை நாட்டுமாறு 48 மணித்தியால அவகாசம் கொடுத்தனர். தான் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர் என்று சொல்லி படைத்துறையினரின் எச்சரிக்கையை மேர்சி உதாசீனம் செய்தார். மேரிசியும் தனது ஆதரவாளர்களைத் தெருவில் இறக்கினார். ஜூலை 3-ம் திகதி படைத்துறையினர் மேர்சியைப் பதவியில் இருந்து விலக்கினர். இ.ச.அமைப்பு ஒரு நாட்டை ஆள தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பைப் போட்டடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சில தீவிரவாத இசுலாமிய அமைப்புக்கள் கூட இ.ச.அ இற்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. ஈரான் உட்பட எந்த ஒரு நாடும் பகிரங்க ஆதரவை இ.ச.அ இற்கு வழங்கவில்லை.
மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்ததும் ஹஸ்னி முபாரக்கின் கைப்பாவைகளான எகிப்தியக் காவற்துறையினர் வீதிகளில் ரோந்துகள் செய்வதில் இருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டனர். இதனால் மேர்சியின் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போய்விட்டது என மக்கள் கருதினார்கள்.
1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன.
2012 ஜூனில் ஆட்சிக்கு வந்த மொஹமட் மேர்சி எகிப்த்தின் எல்லாத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தாமல் விட்டதால் அவருக்கு எதிரான மதசார்பற்றவர்களைத் தனது பக்கம் இழுத்து பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர்கள் மீண்டும் எகிப்தின் அதிகாரத்தைத் தமது வசமாக்கி விட்டனர். இப்போது அவர்கள் இ.ச.அமைப்பைத் தடைசெய்ய ஆலோசித்து வருகின்றனர்.
எல்லோரும் எகிப்தைக் கெடுத்த குற்றவாளிகள்.
2011 பெப்ரவரி மாதம் நடந்த புரட்சியில் தனிமனித சுதந்திரம் வெற்றியடைந்தது போல் இருந்தது. 2013 ஜூனில் நடந்த புரட்ச்சியில் எல்லாமே தோற்று விட்டது. இப்போது எல்லாத் தரப்பினரும் எகிப்தின் அமைதியைக் கெடுத்த குற்றவாளிகலாக நிற்கின்றனர். 2012 ஜூனில் நடந்த தேர்தல் வெற்றியின் பின்னர் இ.ச.அ தன்னை ஒரு குடியரசுவாதியாகக் காட்டிக் கொண்டு தாராண்மைவாதத்தை எதிர்த்தது. தாராண்மைவாதம் பேசிவந்தவர்கள் 2013 ஜூன் 30இன் பின்னர் குடியரசை எதிர்த்து படைத்துறையினரை ஆதரித்து நிற்கின்றனர். இதனால் சிந்திக்கத் தெரிந்தவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது எந்தத் திசையில் பயணிப்பது என்று தெரியாமல் எல்லோரும் தவிக்கின்றனர். உல்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கி இருக்கும் ஒரு நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது. வீதியேங்கும் இரத்தக்களரி, ஊரடங்கு உத்தரவு, காவற்துறையினர் காவல் நிலையத்தில் உயிரோடு கொழுத்தப்படுகின்றனர், கிருத்தவ தேவாலையங்கள் எரிக்கப்படுகின்றன. இ.ச.அ ஐச் சேர்ந்தவர்களே தமக்கு ஆதரவானவர்களைச் சுட்டுக் கொல்லும் காணொளிகளை படைத்துறையினர் ஒளிபர்ப்புகின்றனர். தமது தரப்பில் இழப்பு அதிகம் என்பதைக் காட்ட அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன. படைக்கலன்களில் நம்பிக்கை இல்லாத இ.ச.அமைப்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் துப்பாக்கி ஏந்தியவர்கள் எப்படி இணைந்து கொண்டார்கள் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஜூன் 30 புரட்சிக்குப் பின்னர் எல்லா ஊடகங்களும் தவறான் செய்திகளையே தருகின்றன. ஜுன் 30 எழுச்சியில் எத்தனை பேர் பங்கு பற்றினர் என்பது பற்றியே சரியான தகவல் இல்லை. ஜூலை -3-ம் திகதியின் பின்னர் பல இடங்களில் இ.ச.அமைப்பினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் செய்திகள் வந்தன. ஜூலை 9-ம் திகதி தம்து படப்பிடிப்பாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய ஒன்று கூடிய இ.ச.அமைப்பினரை பொதுமக்கள் ஒன்று கூடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். தமது நாளாந்த நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இ.ச.அமைப்பினர் கட்டுப்படுத்துவதையோ ஆலோசனை கூறுவதையோ பல எகிப்தியர்கள் விரும்பவில்லை. இ.ச.அமைப்பினர் எகிப்தை விரும்பவில்லை அவர்கள் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதற்கு எகிப்திய அதிகாரத்தின் மீதான பிடியைத்தான் விரும்புகிறார்கள் என பல எகிப்தியர்கள் கருதுகிறார்கள். பலர் இ.ச.அமைப்பின் கொள்கைகள் காலாவதியாகிவிட்டது என்றும் கருதுகிறார்கள். இதனால் நாட்டையே செயற்படாமல் செய்யக் கூடிய அல்லது படைத்துறையினரைப் பணிய வைக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய மக்கள் எழுச்சியை படைத்துறையினருக்கு எதிராக இ.ச.அமைப்பால் செய்ய முடியவில்லை. இதனால் இ.ச.அமைப்பு அடக்கப்படக் கூடியது என்றும் அடக்கப்பட வேண்டியது என்றும் படைத்துறையினர் நம்புகின்றனர்.
தாராண்மைவாதிகளும் வேறு பல அமைப்பினரும் இ.ச.அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கலைக்கபட வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துக்களுக்கும் மாற்றானின் கருத்துக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்காத இ.ச.அமைப்பினரின் கட்சியால் நாட்டில் எந்த ஒரு நல்லிணக்கமோ அல்லது பொருளாதார மேம்பாடோ கொண்டுவர முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். மிதவாத மத அமைப்பான இ.ச. அமைப்பை அடக்கி ஒடுக்கினால் அது அரபு நாடுகளில் தீவிரவாத மத அமைப்புக்கள் வளர வழிவகுக்கும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்|றனர்.
தற்போது படைத்துறைத் அதிபராக இருப்பவர் மொஹமட் மேர்சியால் நியமிக்கப்பட்ட அப்துல் ஃப்ட்டா அல் சிசி. இவர் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். இசுலாமிய கலாச்சாரத்தை மதிப்பவர். இவரது மனைவி இசுலாமிய மதக் கோட்பாட்டின் படியே ஆடைகளை அணிவார். எகிப்தில் 2013 ஜூலை 3-ம் திகதிக்குப் பின்னர் நடந்த அனைத்து வன்முறைகளையும் இவரது தலையில் போட்டு இவரை இனிப் பதவியில் இருந்து விலக்க எகிப்தியப் படைத்துறை முயலாலாம். அமெரிக்க ரைம் சஞ்சிகை மேர்சியை சிறையிலடைத்ததும் முபராக்கை வெளியில் விடுவதும் இவர் செய்த இரு பெரும் தவறு என்கிறது.
அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி எகிப்தியப் படைத்துறையினர் எகிப்தில் மக்களாட்சியை நிலைநிறுத்துகின்றனர் எனக் கூறியது பலரையும் ஆத்திரத்திற்கும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது அமெரிக்கா இசுலாமியவாதிகளின் கைகளில் எந்த ஒரு நாடும் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேர்சிக்குப் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற படையினர் பல பதவிகளில் முன்னால் படைதுறையில் பணிபுரிந்தவர்களையே அமர்த்துகின்றன. சில அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இ.ச. அமைப்பும் அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் போன்றதே அவர்கள் தீவிரவாதத்தால் செய்ய நினைப்பதை இ.ச. அமைப்பு வேறுவிதமாகச் செய்கிறது என்கின்றனர். பல அமெரிக்க சார்பு ஊடகங்கள் எகிப்திற்கு இப்போது அவசியம் தேவைப்படுவது தேர்தல் அல்ல திடமான ஆட்சியே என்ற கருத்தை பரவலாக முன் வைப்பது இனி எகிப்தில் படைத் துறையினரின் ஆட்சியே நடக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment