ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபையை விரைவில் அமைக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.
சென்ற ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க
வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
- போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
- சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
- இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
- இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
- இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இதனால் பான் கீ மூன் ஊடகங்களின் கண்டனத்து உள்ளானார். குறிப்பாக இன்னர் சிற்றி பிரெஸ் என்னும் ஐநா ஊடகம் பான் கீமூனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அது மட்டுமல்ல ஐநா மனித உரிமைக் கழகத்தின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையில் நட்ந்த போர் குற்றம் தொடர்பாக விசாரணை தேவை என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து பான் கீ மூன் இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபையை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இதை ஐநா சபையின் அணிசேரா நாடுகள் எதிர்ப்பதாகத் தெரிவித்தவுடன் சபை இப்போது அமைக்கப் படமாட்டாது என்று பான் கீ மூன் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நவநீதம் பிள்ளைக்கும் பான் கீ மூனிற்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்தது. இப்போது இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விற்பன்னர்கள் சபை விரைவில் அமைக்கப் படவிருப்பதாக பான் கீ மூன் "பல்டி" அடித்துள்ளார்.
பான் கீ மூன் தனது பதவி நீடிப்பைக் கருத்தில் கொண்டு செய்ற்படுவதால் இப்படித் தடுமாறுகிறாரா?
அது மட்டுமல்ல ஆலோசனை சபை தொடர்பாக ஐநா தரப்பில் இருந்து ஒன்றுக் ஒன்று முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன. அதில் ஒன்று ஆலோசனைச் சபை இலங்கை அரசுடன் கலந்தாலோசித்த பின்பே வெளி விடப் படும் என்றும் கூறுகிறது. இன்னொன்று ஆலோசனைச் சபையில் ஒருவரை நவநீதம் பிள்ளை சிபாரிசு செய்துள்ளதாகக் கூறுகிறது.
ஆலோசனை சபை பான் கீ மூனுக்கு மட்டுமே!
பான் கீ மூன் தான் அமைக்க விருக்கும் சபை தனக்கு மட்டுமே ஆலோசனை வழங்கும் என்றும் கூறியுள்ளார். இது சபையின் அறிக்கையை மூடி மறைக்க அல்லது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்க வாய்ப்பாக் அமையும். மீண்டும் பான் கீ மூன் கபட நாடகம் ஆடுகிறாரா?
No comments:
Post a Comment