Wednesday 11 December 2013

பாரதி என்று ஒரு கோழைக் கவிஞன்

இரசியப் புரட்சியை காளியின்
கடைக்கண் பார்வை எனவும்
யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால்
புரட்சிக் கவிஞன் ஆனவன்

ஒவ்வொரு கவிக்கும்
இசையோடு தாளமும் கொடுத்து
ஓசையோடு நயம் கொடுத்து
எழுதி வைத்ததால்
இசைக் கவிஞன் ஆனவன்

பெண்ணடிமையை எதிர்த்ததால்
பாஞ்சாலி சபதத்தில்
மனுதர்ம சாஸ்த்திரத்தை
திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால்
புதுமைக் கவிஞன் ஆனவன்

கோகுலத்துக் கண்ணனைத்
தன் காம வேட்கை தீர்க்கும்
காதலனாக்கிப் பாடியதால்
தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன்
இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால்

paedophile கவிஞன் ஆனவன்



தமிழர் ஆண்ட மண்ணை

மறவர் வீரம் படைத்த நிலத்தை
சிங்களத் தீவென்றழைத்து
அறியாமையை வெளிப்படுத்தியதால்
அறிவிலியான கவிஞன் ஆனவன்.

அச்சம் தவிர் என்று அடித்துக் கூறியவன்
அச்சமில்லல அச்சமில்லை எனப்பாடியவன்
பாரதம் என்ற பெயர் சொன்னால்
பயம் போகுமென்றவன்
காவற்துறைக்கு அஞ்சி
பாண்டிச் சேரிக்கு ஓடிப் போனதால்
கோழைக் கவிஞன் ஆனவன்

தமிழ்போல் வேறு மொழியில்லை
எனப்பாடிப் புகழ்ந்ததால்
செந்தமிழ் நாடென்றால் தேன் என்றதால்
பிராந்தியக் கவிஞன் ஆனவன்

ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே"
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"

என இந்தியாவை ஆரியர் தேசமெனப்பாடியதால்
சாதியக் கவிஞன் ஆனவன்

குரங்கின் அழகையும்
மாட்டின் அழகையும்
குயிலாகிப் போற்றிப் போற்றி
காதல் போயின் சாதல் எனப்பாடியதால்
கனவுலகக் கவிஞன் ஆனவன்

வெள்ளையனை வெளியேறு எனப்பாடினான்
விடுதலை வேண்டிப்பாடினான்
இன்று வெள்ளைச்சி தனி ஒருத்தியாக
பாரத்தத்தை கொள்ளையடிக்கிறாள்
ஆட்டிப் படைக்கிறாள் - அதனால்
எதிர்காலம் உணாராத கவிஞன் ஆனான்

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போகவில்லை
வெள்ளைக்காரப் பரங்கியை சைபர் கூலிகள்
துரையென்று பெங்களூரில் இன்றும் கைககட்டி
வாய் பொத்திச் சேவகம் புரிவதும் நிற்கவில்லை - அதனால்
நினைத்ததை நடக்கச் செய்யாத கவிஞன் ஆனான்

வெள்ளிப் பனிமலையில் இந்தியப்படைகள்
சீனனிடம் அடிவாங்குவதாலும்
வங்கக் கடலில் சிங்களவனால்
சுடுபட்டு இந்தியன் மாள்வதாலும்
தீர்கதரிசனம் இல்லாக் கவிஞன் ஆனவன்

பார்க்கும் கண்களுக்கெல்லா
பலதோற்றக் கொடுக்கும் கவிவடித்தவன்
தேசியம் என்னும்
ஒரு சொல்லிலும் அடங்காது
ஒரு வரியிலும் அடங்காது
ஒரு காவியத்திலும் அடங்காது
பன்முகக் கவிஞன்
பாரதியின் கவித்திறன்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...