Thursday, 4 July 2013

மோர்சிக்குப் பின் மோசமாகுமா எகிப்து?

அரபு வசந்தத்தின் ஓர் அம்சமான 2011இல் நடந்த எகிப்தியப் புரட்சி மத சார்பற்ற ஒரு குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்களிடை வலிமை மிக்க தலைமையின்மையாலும் பிளவு பட்ட பல அமைப்புக்கள் இருந்தமையினாலும் எகிப்தியப் புரட்சிக்குப்பின்னர் நடந்த தேர்தலில் மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு வெற்றி பெற்றது.

உண்மையில் அரபு வசந்தம் ஒரு மத்தியதர வர்க்கத்தின் புரட்சியாகும். அதில் பங்கு பற்றியவர்கள் சராசரி மக்களிலும் அதிகமாகக் கல்வி கற்றவர்கள். பலர் நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். இவர்களால் பாட்டாளி வர்க்கத்தினரிடை தமது கொள்கைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு அரசியல் கட்டமைப்பை அமைத்துக் கொள்ளும் அனுபவமோ திறமையோ இருக்கவில்லை. இவர்களது இந்த பலவீனத்தை மதவாதக் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. படிக்காத பாமர மக்களிடை மதவாதிகளுக்கு மதிப்பு இருக்கிறது. இதனால் துனிசியாவில் புரட்சிக்குப் பின்னர் வந்த தேர்தலில் மதவாதக் கட்சியான என்னக்தாவும் எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் வெற்றி பெற்றன.

ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகள் போன்றவை எதுவுமின்றி படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபாரக்கை சமூகவலைத்தளங்கள், கைபேசித் தகவல்கள், செய்மதித் தொலைக்காட்சிகள் போன்றவற்றால் பதவியில் இருந்து விரட்டினர் ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 86 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள் என்பதே இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் கொள்கையாகும்.

அமெரிக்காவின் புதுப்புது குடியேற்றவாதம்.
2011இல் நடந்த எகிப்தியப் புரட்சியில் இரத்தக் களரியின்றி மிகக் குறுகிய காலமான 18 நாட்களில் ஹஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டமைக்கு எகிப்தியப் படைத்துறையினரும் முக்கிய பங்கு வகித்தனர். புரட்சியின் போது அவர்கள் நடுநிலைமை வகித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கிளர்ச்சி செய்பவர்களைக் காவற்துறையால் அடக்காத போது அவர்கள் மேல் படைத்துறையினரை ஏவிவிடுவது எகிப்தில் நடக்கவில்லை. எகிப்தியப் படைத்துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். எகிப்தும் இஸ்ரேலும் அமெரிக்காவில் 1979இல் செய்து கொண்ட காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் அமெரிக்கா எகிப்திற்கு ஆண்டு ஒன்றிற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு அதிமான உதவிகளைச் செய்து வருகிறது. அமெரிக்க உதவியைப் பெறும் இரண்டாவது பெரிய நாடாக எகிப்து இருக்கிறது. இதில் பெரும்பகுதியான 1.3பில்லியன்கள் எகிப்தியப் படைத்துறைக்கே செல்கிறது. இது எகிப்தை தனக்குச் சார்பாக வைத்திருக்க அமெரிக்கா செய்யும் உத்தியாகும். ஹஸ்னி முபராக்கிற்குப் பின்னர் எகிப்தியப் படைத்துறையின் படையினரின் உச்ச சபைக்கு{Supreme Council of the Armed Forces (SCAF)}அதிக அதிகாரங்கள் இருக்கின்றது. எகிப்திய தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி படைத்துறைக்கே செலவிடப்படுகிறது.

அமெரிக்க மக்களாட்சித் தத்துவம்
மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட மோர்சி தலைமையிலான அரசை அமெரிக்க சார்புடைய படைத்துறையினர் எப்படி பதவியில் இருந்து அகற்றலாம் என்பதே இன்று பெரும் கேள்வியாக இருக்கிறது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பை எகிப்தில் வளர விடுவதை அமெரிக்கா விரும்பவில்லையா? சிரியக் கிளர்ச்சியிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கில் அதன் பரம்பலும் அமெரிக்காவிற்கு உகந்ததில்லையா?

பிழையாகிப் போன மதவாத அரசியல்
மத்திய கிழக்கில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றில் முதலாளித்து நாடுகளின் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் அல்லது மதவாதிகளாக இருக்க வேண்டும். இதனால் அங்கு ஒரு நல்லாட்சி நடைபெறுவது காணக் கிடைக்காத ஒன்றாக இருக்கிறது. மோர்சியின் வீழ்ச்சி அரசியலுக்குள் மதம் இருப்பது பிழையானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 

மோசமான மோர்சி
எகிப்தியப் புரட்சிக்கு வழிவகுத்தவர்களின் எதிர்பார்ப்பான சிறந்த பொருளாதார நிர்வாகம், சமூக நீதி போன்றவற்றை வழங்க மோர்சி தவறிவிட்டார். அதே போல் எகிப்தியப் படைத்துறையினரின் வேண்டுதலான எதிர்க்கட்சிகளையும் அணைத்துக் கொண்டு அவர்களையும் ஆட்சியில் இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்பதையும் மோர்சி நிறைவேற்றவில்லை.ஆட்சிக்கு வந்த மோசியிடமோ அவரது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிடமோ இசுலாமிய மதச் சட்டங்களை அமூல் படுத்துவதைத் தவிர நாட்டின் பொருளாதரத்தையோ மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான குப்பை அகற்றுதலில் இருந்து வேலை வாய்ப்புவரை எந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்திட்டமும் இருக்கவில்லை. "எல்லாப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாமே தீர்வு" என்ற மதவாதச் சுலோகம் எகிப்திய மக்களைப் பொறுத்தவரை புளித்துப் போன ஒன்றாகி விட்டது. மோர்சி ஆட்சியை நடத்துவதிலும் பார்க்க தனது கட்சியை மக்கள் மத்தியில் பலப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். 40%இற்கு அதிகமான மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் கொண்ட நாட்டிற்கு சிறந்த ஆட்சியும் சிறந்த பொருளாதார நிர்வாகமும் தேவைப்பட்டது. இது மோர்சியிடம் இருக்கவில்லை. மோர்சியின் ஆட்சியில் அதிருப்தி கொண்டவர்கள் தமரவுட் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தனர். தமரவுட் என்ப்து பெரும் கிளர்ச்சி எனப் பொருள்படும். இதன் முன்னோடி அமைப்பு மாற்றத்திற்கான மக்கள் இயக்கமாகும். மோர்சி பதவியேற்ற ஓராண்டு நிறைவு நாளில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. கெய்ரோவில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைமைச் செயலகம் தீக்கிரையாககப்பட்டது.

தமரவுட் அமைப்பும் தஜரவுட் அமைப்பும்
எகிப்ப்தின் மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு முபாரக் ஆட்சியின் போது அவரைப் பதவியில் இருந்து அகற்ற ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு 2013 ஏப்ரல் மாதம் மோர்சிக்கு எதிராக தமரவுட் இயக்கத்தை ஆரம்பித்தது. தமரவுட் இயக்கம் மோர்சி பதவியில் இருந்து விலக வேண்டும் என 22 மில்லியன் கையோப்பங்களைத் திரட்டியது. மோர்சியின் ஆதரவாளர்கள் தஜரவுட் என்னும் இயக்கத்தை ஆரம்பித்து மோர்சிக்கு ஆதரவு தெரிவித்து 10 மில்லியன் கையொப்பங்களைத் திரட்டினர். தமரவுட் இயக்கத்தினர் கெய்ரோ நகரவீதிகளில் யாரும் தஜரவுட் இயக்கத்தினரின் கையொப்பப்பத்திரத்தை கண்டதில்லை என்கின்றனர்.

மொஹமட் எல் பராடி
முபராக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் முன்னாள் உலக அணுசக்தி முகவரக அதிபராக இருத மொஹமட் எல் பராடியை ஆட்சிக்கு கொண்டுவர எகிப்தியத் தாராண்மைவாதிகள் விரும்பினர். ஆனால் அவர்களது விருப்பம் நிறைவேறவில்லை. தேச விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் படைத்துறையினருடன் மொஹமட் எல் பராடியை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மோர்சிக்குப் பின்னால்
மோர்சியை பதவியில் இருந்து தூக்கிய எகிபதியப் படைத்துறையினர் எகிப்திய அரசமைப்புச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய எகிப்திய அதிபராக உச்ச நீதிமன்ற நீதியாளர் அட்லி மன்சூரை நியமித்தனர். நிபுணர்களைக் கொண்ட ஒரு அவை இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உரிய நேரத்தில் தேர்தல் நடக்கும் என்றும் படைத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இதற்கான கால வரையறை எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தமரவுட் இயக்கத்தினர் எகிப்தியப் படைத்துறையினர் மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற உறுதி மொழியை எகிப்தியர்களுக்கு வழங்கியுள்ளனர். மோர்சியும் அவரது முக்கிய ஆதரவாளர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். படைத்துறையினர் 300இற்கு மேற்பட்ட இசுலாமைய சகோதரத்துவ அமைப்பினருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளனர். மக்களின் விருப்பத்தை ஒட்டி ஓர் ஆட்சியாளரை அகற்றிவிட்டு மக்களுக்கு நனமை செய்யக் கூடிய் ஒருவரைப் பதவியில் அமர்த்திய படியால் இது படைத்துறைப் புரட்சி அல்ல என்கிறது எகிப்தியப் படைத்துறை. ஆட்சியில் இருப்பவரை அகற்றி நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் மட்டுமே அது படைத்துறைப் புரட்சி ஆகும் என வாதாடுகிரது எகிப்தியப் படைத் துறை. அல் நூர் என்ற மததீவிரவாத அமைப்பும் எகிப்தில் பலமானதாக இருக்கிறது. இது எகிப்தில் இசுலாமிய சட்டங்களைக் கடுமையாக அமூல் படுத்த வேண்டும் என்ற கொள்கையுடையது. சுனி இசுலாமியர்களின் உயர் மத பீட அமைப்பும் எகிப்தில் இருக்கிறது. மோர்சியை ஆட்சியில் இருந்து விரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய விடுதலை முன்னணியாகும். இது பல கட்சிகளை ஒன்றிணைத்த அமைப்பாகும். ஆனால் ஒன்றுபட்ட அமைப்பா என்பது கேள்விக்குறி. இந்த பல வேறுபட்ட அமைப்புக்கள் மத்தியில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் ஒரு பலமிக்க அமைப்பாகும். இவர்களுக்கிடையிலான மோதல் இனி வலுத்து மோர்சிக்குப் பின்னர் ஒரு மேலும் மோசமான நிலைஎகிப்தில் உருவாகுமா  அல்லது நாட்டின் முன்னேற்றதைக் கருத்தில் கொண்டு எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவார்களா? மத்திய கிழக்கிற்கும் மக்களாட்சித் தத்துவத்திற்கும் வெகுதூரம் என்ற கூற்றை பொய்யாக்குவார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...