Tuesday 4 December 2012

கொதிக்கும் தென் சீனக் கடலில் கால் பதிக்கும் இந்தியா.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

இந்தியக் கடற்படைத் தளபதியின் அறிவிப்பு
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் உருவாகும் சூழல்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாகியுள்ளன. கிழக்கத்திய உலகில் ஒரு போர் மூளும் அபாயம் தென் சீனக் கடலில் இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியக் கடற்படைத் தளபதி (Navy Chief Admiral) டி கே ஜோஷி இந்தியாவின் பொருளாதார மற்றும் கடற் போக்கு வரத்து நலன்களை தென் சீனக் கடலில் காப்பாற்றுவதற்காக இந்தியா தயாராக உள்ளதாக அறிவித்தமை பெரும் அதிரடியாக அமைந்துள்ளது. தேவை ஏற்படின் நாம் தென் சீனக் கடலுக்குச் செல்வோம் என்று ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த அறிவிப்பு சீனா தென் சீனக் கடலிற்கு வரும் கப்பல்களைத் தனது கடற்படை சோதனையிடும் என்று அறிவிப்பைத் தொடர்ந்து வந்ததால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தென்சீனக் கடல் தொடர்பான முந்தைய பதிவுகள்:
1. சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்கா
2. கொதிக்கும் தென் சீனக் கடல்


அமெரிக்காவின் பெரும் திட்டத்தில் ஒரு பகுதியா?
அமெரிக்கா சீனாவிற்குக் கிழக்கேயும் மேற்கேயும் நியூசிலாந்து, ஒஸ்ரேலியா போன்ற பசுபிக் நாடுகள் முதல் பல இந்து சமுத்திர நாடுகளையும் இணைத்து சீனாவிற்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை அமைப்பதற்கு முயல்கிறது. அமெரிக்கா தனது எதிர்கால பொருளாதார மற்றும் வர்த்தக நலனகளுக்கு இந்து சமுத்திர மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் இணைய இந்தியா தயக்கம் காட்டுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியக் கடற்படைத் தளபதியின் அறிவிப்பு அமெரிக்காவின் திட்டத்தில் இந்தியாவும் ஒரு பகுதியாக இணைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகிறது.

வியட்னாம் இந்திய ஒத்துழைப்பு
இந்திய அரச நிறுவனமான Oil and Natural Gas Corp (ONGC) தென் சீனக் கடலில் உள்ள வியட்னாம் கரையோரத்தில் உள்ள Nam Con Son என்னும் இடத்தில் எண்ணெய் வள ஆய்வு உரிமங்களை வாங்கியுள்ளது. இதை சீனா விரும்பவில்லை. 2011 செப்டம்பர் மாதம் வியட்னாம் சென்று திரும்பிய இந்திய கடற் படைக் கப்பல் வியட்னாமின் ஹைப்பொங் துறை முகத்தில் இருந்து திரும்பும் போது சீனக் கப்பல் ஒன்று அந்தக் கப்பல் தனது ஆதிக்கக் கடற்பரப்பில் நுழைவதாக எச்சரித்தது. இந்தியக் கப்பல் அதைப் பொருட்படுத்தாமல் தனது பாதையில் நகர்ந்தது. பின்னர் ஒன்றும் நடக்கவில்லை. 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் கொண்ட தென் சீனக் கடல் உண்மையில் முக்கியத்துவம் பெறுகிறது. வியட்னாம் தனது எண்ணெய் வள ஆய்வை இந்தியாவிடம் ஒப்படைத்தது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல. பிராந்திய படைபல கேந்திர முக்கியத்துவமும் அதில் கலந்திருக்கிறது.

அனுபவமற்ற சீனக் கடற்படை
உலக வல்லரசு நாடுகள் ஐந்தில் சீனா மட்டுமே குறிப்பிடத்தக்க எந்த ஒரு போரிலும் ஒருபோதும் ஈடுபடாத கடற்படையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியக் கடற்படை பங்களாதேசப் போரில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டது. சிட்டகொங் துறைமுகத்தை லாவகமாகக் கைப்பற்றியது.  அப்போதில் இருந்தே இந்தியாவிடம் விமானம் தாங்கிக் கப்பல் இருக்கிறது. ஆனால் சீன் சென்ற ஆண்டே தனது கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலை இணைத்துக் கொண்டது. தனது தென் சீனக் கடலாதிக்கக் கனவை நிலை நாட்ட சீனா பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...