Monday 6 February 2012

ஆளில்லாப் போர்விமானங்கள்: அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

இனிவரும் காலங்களில் போர் முனையில் ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் பங்குகள் வகிக்கவிருக்கின்றன. பல நாடுகளும் ஆளில்லாப் போர்விமானங்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற் கொள்கின்றன. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன.

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.

பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.
 அப்பாவிகள் கொலை
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.

ஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை
வாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற  அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அரச திணைக்களத்திடம் ஆளில்லாப் போர் விமானங்கள்
அண்மையில் அமெரிக்க அரச திணைக்களம் தனக்கென்று சில ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான் சிஐஏ தனக்கென்று ஒரு படையணியை உருவாக்கி தனது நடவடிக்கைகளை அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக செய்துவருகிறது. அமெரிக்கப் படைகள் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இந்த சிஐஏயின் படைநடவடிக்கைகள் எந்த ஒரு சட்ட வரையறைக்கும் அப்பால் பட்டவையாகவே இருக்கின்றன. அமெரிக்க அரச திணைக்களம் எப்படி தனது ஆளில்லாப் போர்விமானங்களைப் பாவிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பன்னாட்டு மன்னிப்புச் சபை
பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய-பசுபிக் பிராந்திய இயக்குனர் சாம் ஜவாரி அவர்கள் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தைப் பற்றி விளக்க வேண்டும் என்றும் அவற்றின் தாக்குதல்களின் போது பொது மக்கள் கொல்லப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபெப்ரவரி முதலாம திகதியன்று தெரிவித்தார்.  இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக ஒபாமா சிஐஏயின் ஆளில்லாவிமானங்கள் இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்தார். இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் கொல்ல முடியுமா? கடந்த 4 ஆண்டுகளாக பன்னாட்டு மன்னிப்புச் சபை மௌனமாக இருந்தது ஆச்சரியமே!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்
உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமாங்கள் ஊடுருவி வேவு பார்க்கின்றன. ஒளிப்பதிவு செய்கின்றன. இவை அந்த நாடுகளின் இறைமையை மீறும் செயலாகும். பராக் ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் அறுபது பிள்ளைகள் உட்பட ஐநூறிற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்த்தான் எல்லைப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தனது படையினரஈராக்கில் இருந்து விலக்கிக் கொண்டபின்னர் ஐக்கிய அமெரிக்கா அங்கு பெரும் ஆளில்லாப் போர்விமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பது தெரிய வந்தமை ஈராக்கிய ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டியுள்ளது. அமெரிக்கப்படைகள் மற்ற நாட்டுக்குள் புகுந்து வேவு பார்ப்பதும் போராளிகளைக் கொல்வது ஓர் எல்லை தாண்டிய பயங்கரவாதமே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...