தீவிரவாத(அமெரிக்கவின் அகராதியில் பயங்கரவாத) பிரச்சனையானது நுளம்புப் பிரச்சனை போன்றது. நாம் ஒருவித கிருமி நாசினியைப் பாவித்து அதை ஒழித்து விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கிருமி நாசினிக்கு தப்பிப்பிழைக்க கூடிய இன்னொரு தலைமுறை நுளம்புகள் உருவாகும். நுளம்பில் இருந்து தப்ப ஒரு வழி எமது காணிகளைத் துப்பரவாக வைத்திருத்தலே. தீவிரவாதம் தலைதூக்காத வகையில் உலக சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புக்கள் மாற்றப்படும் வரை தீவிரவாதப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.
கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவிற்கு அதிக தலையிடி கொடுக்கும் பிராந்தியம் ஆப்கானிஸ்த்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் எல்லைப் பகுதியே. அமெரிக்க வெள்யுறவுக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்று ஒன்று வகுக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமைச் செயலகம் பெண்டகனிலும் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயிலும் ஆப்-பாக் பிரிவு என்று ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆப்-பாக் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாம் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் படைத்துறை வல்லுனர்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். 09-07-2011இலன்று தனது சிஐஏ இயக்குனர் பதவியில் இருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி ஏற்ற லியோன் பனெற்றா அல் கெய்தாவை தாம் கேந்திர முக்கியத்துவ ரீதியில் தோற்கடிக்கும் நிலையை எட்டி விட்டதாகத் தெரிவித்தார். அவர் அப்படிச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்கள் பல தீவிரவாதிகளைக் கொல்வதுடன் அவர்களது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. 2011 மே மாதம் பின் லாடனைக் கொன்றது. அவரது மாளிகையில் இருந்த அல் கெய்தாவின் கணனிப் பதிவேடுகளை அமெரிக்கப் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டனர்.
அல் கெய்தா பற்றிய முந்திய பதிவைக்காண கீழே சொடுக்கவும்:
ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?
முக்கியத்துவம் வாய்ந்த 2011 செப்டம்பர்
2011 அமெரிக்கா தனது நாட்டு இரட்டைக் கோபுரத்தில் இரு விமானங்கள் மூலம் தாக்குதல் நடாத்திய பின் லாடனைக் கொன்ற ஆண்டு. அந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நிறைவு 2011 செப்டம்பர் இல் இடம் பெற்றது. பின் லாடனைக் கொன்ற பெருமிதத்துடன் அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தாக்குதலை நினைவு கூர்ந்தது. இப்படிப் பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 2011 செப்டம்பரில் இசுலாமியத் தீவிரவாதிகள் அமெரிக்காவிலோ ஐரோப்பியாவிலோ ஒரு பெரும் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்கவின் மூக்குடைக்க வேண்டிய அவசியம்
பின் லாடனின் கொலைக்குப் பின்னரும் முன்னரும் பல இசுலாமியத் தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்களை அமெரிக்கா கொன்றுள்ளது. ஜூன் மாதத்தில் இலியாஸ் கஷ்மிரீயும் ஆகஸ்ட் மாதம் அதியா அப் அல் ரஹ்மானும் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர். இதனால் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு அமெரிகாவிற்கு ஒரு மூக்குடைப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காபுலில் தாக்குதல் நடத்த கச்சிதமான ஒரு திட்டம்
பின் லாடனின் கொலைக்கு இரு வாரங்களின் பின்னர் பாக்கிஸ்த்தானின் மெஹான் கடற்படைத் தளத்துக்குள் ஆறு தலிபான் போரளிகள் நுழைந்து அங்கு இருந்த அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களைத் தாக்கி அழித்ததுடன் பெரும் சேதத்தை அங்கு விளைவித்து 18 மணித்தியாலங்கள் தளத்தை தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இரட்டைக் கோபுர நினைவாக ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் புகுந்து அமெரிக்க தூதுவரகத்தையும் நேட்டோ கூட்டமைபின் அலுவலகத்தையும் தாக்கும் திட்டத்தை தலிபான் வகுத்துக் கொண்டது. செப்டம்பர் 11-ம் திகதி உலகெங்கும் கண்காணிப்பாக இருந்த படியால் அந்த நாளை விட்டு செப்டம்பர் 13-ம் திகதியை அது தாக்குதலுக்கு உரிய நாளாக தெரிந்தெடுத்தது. 13-ம் திகதி நேரம் அதி காலை இசுலாமியப் பெண்கள் போல் பர்தா அணிந்து தலிபான் போராளிகள் வாகனம் நிறைந்த வெடி பொருள்களுடன் ஆப்கான் தலை நகர் காபுலுக்குள் நுழைகின்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவற்துறையினர் மீது துப்பாகிப் பிரயோகம் செய்து விட்டுப் போகும் போது வழியில் வந்த ஒரு பேருந்து மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். காபுலில் புதிதாகக் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் 13 மாடிக்கட்டிடத்துக்குள் அவர்கள் நுழைகின்றனர். முன் கூட்டியே அக் கட்டிடத்துக்குள் போராளிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்து விட்டனர். போராளிகள் ஏற்கனவே அக்கட்டிட வேலையில் தொழிலாளர்களாக இணைந்துள்ளனர். அக்கட்டிடம் அமெரிக்க தூதுவரகத்திற்கும் நேட்டோ அலுவலகத்திற்கும் மிக அண்மையில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டு அமெரிக்க தூதுவரகத்தின்மீதும் நேட்டோ அலுவலகத்தின்மீதும் ஆர்பிஜீ, ஏகே-47 போன்றவை மூலம் தாக்குதல் தொடுக்கின்றனர். தமது தாக்குதல் பற்றிய விபரங்களை உடனுக்குடன் ஊடகங்களுக்கு குறுந்தகவல்(எஸ் எம் எஸ்) மூலம் அறிவிக்கின்றனர். வேறு ஒரு பிரிவினர் ஷினோஜாடா மருத்த மனைக்கு அண்மையாக தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஆப்கானிஸ்த்தான் தகவல் துறை அமைச்சர் இருக்கிறார். அமெரிக்க வான்படையின் UH 60 Black Hawk உலங்கு வானூர்தி திவிரவாதிகள் இருக்கும் கட்டிடத்தில் தாக்குதல் நடத்தச் செல்கிறது. இதை முன் கூட்டியே எதிர்பார்த்திருந்த போராளிகள் கட்டிடத்தின் Lift Tube - உயர்த்திக் குழாய்க்குள் நிலை எடுத்து தாக்குதலில் இருந்து தப்பி தொடர்ந்து தமது தாக்குதல்களை மேற் கொள்கின்றனர். இப்போது அமெரிக்கக் கடற்படையினர் கட்டிடத்திற்கு அண்மையாக தமது நிலைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்போது மேலும் ஒரு போராளிகளின் பிரிவு ஆப்கானிஸ்தானின் பாராளமன்றத்துக்கு அண்மையில் தாக்குதல் நடாத்துகிறது. மதியம் 12 மணிக்கு போராளிகள் இருவரைப் பிடித்ததாக ஆப்கனிஸ்தான் காவல் துறை தெரிவிக்கிறது. 12-30 இற்கு காபுலில் உள்ள Abdul Haq roundabout இற்கு அண்மையாக பெரும் சண்டை நடக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானின் Mi35 உலங்கு வானூர்திகள் 13 மாடிக்கட்டிடத்தில் தாக்குதல் நடாத்துகின்றன. 1-30 பி.ப ஒரு ஆப் படை விரனும் இரு போராளிகளும் கொல்லப்படுகின்றன்ர். 1-40 பி. ப காபுல் காவற்துறை நிலையம் மீது தற்கொலைத்தாக்குதல். பி.ப 2 மணி: 13 மாடிக்கட்டிடத்துக்குள் இருந்து 4 போராளிகள் தொடர்ந்தும் தாக்குகின்றனர். 14-40 பாடாசாலைப் பிள்ளைகளுடன் வந்த பேருந்து மீது போராளிகள் தாக்குதல் நடாத்துகின்றனர். பி.ப 3-40 மேலும் இரு போராளிகள் கொல்லப்படுகின்றனர். இப்போது இருவர் மட்டும் கட்டிடத்துக்குள் இருந்து தாக்குதல் நடாத்துகின்றனர். பி.ப 5-00 போராளிகள் இருக்கும் கட்டிடத்துக்குள் படையினர் நுழைகின்றனர். தற்கொலைத் தாக்குதலுக்குப் பயந்து அவர்களின் நகர்வு நத்தை வேகத்திலேயே நடக்கிறது. இரவு பத்து மணி பத்தாம் மாடியில் இரு போராளிகள் மட்டுமே இருந்து சண்டையைத் தொடர்ந்து நடாத்துகின்றனர். நள்ளிரவு வரை சண்டை தொடர்கிறது.
அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு இது ஒரு மானக்கேடு
அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் அரசுகள் இரு முனையில் தோற்றுவிட்டன. ஒன்று காபுலின் முக்கிய இடத்தில் பாதுகாப்புக் குறைபாடு. அங்கு தீவிரவாதிகள் நுழந்து 20 மணித்தியாலங்கள் சண்டையிடக் கூடிய ஆயுதங்களை எப்படிப் பெற்றனர் என்ற கேள்விக்கு என்ன பதில்? அடுத்தது இப்படி ஒருதாக்குதல் நடக்க்ப்போகிறது என்பதை அவர்களின் உளவுத் துறையால் கண்டு பிடிக்காமல் போனது எப்படி?
தலிபானால் அமெரிக்கவிற்கு சேதம் ஏற்படுத்த முடியவில்லை
காபுல் தாக்குதல் ஒரு புதிய இயக்கத்தினரால் நடாத்தப் பட்டது என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இத்தாக்குதலுக்கு தலிபான் உரிமை கோருகிறது. தலிபான் போராளிகளால் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பவிலோ தாக்குதல்களைச் செய்ய முடியவில்லை. நன்கு திட்டமிட்ட காபுல் தாக்குதலில் ஒரு அமெரிக்கரைக் கூடக் காயப் படுத்த முடியவில்லை. அமெரிக்காவிற்கு மூக்குடைக்க வேண்டிய தலிபானால் அமெரிக்காவின் முகத்தில் கரியைப் பூச மட்டுமே முடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
நண்பரே அந்த தாக்குதல் நடந்த அன்று நான் காபூலில்தான் இருந்தேன்.. இங்கே நடப்பது வேண்டுமென்றே நடத்தப்படும் சண்டைதான்.. இன்னும் அதிக தாக்குதல் வரும் காலத்தில் நடக்கும்.. அமெரிக்க படைகள் இங்குதான் இருக்கும்..
Post a Comment